Tuesday, September 10, 2019

sangu- interview
எஸ்ஸார்சி – நேர்காணல் கேள்விகள் சங்கு- வளவதுரையன்
கல்வி மற்றும் இளமைப்பருவம்
நான் கல்வி பயின்றது பற்றிச்சொல்லவேண்டுமென்றால் அது இப்படித்தான்.பள்ளிக்கல்வியை என் பிறந்த ஊர் தருமநல்லூர் அண்டையூர் வளயமாதேவி மற்றும் கம்மாபுரத்தில் என முடித்துக்கொண்டு கல்லூரிப்படிப்புக்கு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.
தருமநல்லூரில் அப்போது ஆரம்பப்பள்ளி தொடங்கியிருந்தார்கள்.என் தமக்கையர் மூவர் அண்ணன்மார்கள் இருவர்  இவர்கள் யாவரும் படித்தபோது உள்ளூரில் பள்ளிக்கூடம் இல்லை.இரண்டு மைல்கள் வயல் வரப்பு ஏரிக்கரை வாய்க்கால் காட்டு அய்யனார்கோவில் என நடந்து சென்று விளக்கப்பாடி என்னும் சிறிய ஊரில்தான் படித்தார்கள்.
தருமங்குடி என்று என் எழுத்துப்படைப்புக்களில் குறிப்பிடுவது என் பிறந்த ஊரான தருமநல்லூரைத்தான்.என் கிராமத்துப்பள்ளி மாரியம்மன் கோவில் வாகன மண்டபத்தில் நடந்தது. நாட்டு ஓட்டு போடப்பட்ட வால் போன்ற கட்டிடம் அது. சித்திரை முழு நிலா நாளன்று யாதுமாகிய அந்த மாரித்தாயைச்சுமந்து வரும் வர்ணம் பூசிக்கொண்ட கட்டைச்சிம்மம்  ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கும்.மழை பெய்தால் மண்டபத்தில் அங்கங்கு ஒழுகும்.கட்டாந்தரையை ஒவ்வொரு சனிக்கிழமை  மாலை தோறும் மாணவர்கள்  வீதியில் பொறுக்கி வந்த சாணங்கொண்டு மெழுகுவோம். ஐந்து வகுப்புக்கள் இரண்டு ஆசிரியர்கள். கள்ளங்கபடமற்ற நல்லாசிரியர்கள்.
வளையமாதேவி எனது அண்டையூர். அங்கிருந்த எனது பள்ளி ராசாங்கம் என்பவரைத்தமிழாசிரியராய்க்கொண்டிருந்தது.அழகு தமிழையும் நல்லொழுக்கத்தையும் மனதில் விதைத்தவர் அவர். கருப்பு  நிறத்தில் தலைமுடியைத்தூக்கி வாரிக்கொண்டு வாட்ட சாட்டமாய் இருந்த அவர் வெள்ளை வெளேர் என வேட்டியுடன் முழுக்கைசட்டை போட்டிருப்பார். வள்ளலாரின் பெயர் கொண்ட அப்பள்ளி இன்றளவும் என் மனத்தில் அந்த வாடிய பயிரைக்கண்டுவாடிய வள்ளலைத்தொழக்கற்றுத்தந்தது.
நான்கு மைல் நடந்து சென்றால் கம்மாபுரம். வகுப்பு பதினொன்று வரை அங்கு பயின்றேன்.இலக்கிய மன்றச்செயலாளன் நான். பள்ளியின் இலக்கிய மன்ற விழாவுக்கு வந்து போன பெரியவர் குன்றக்குடி தெய்வசிகாமணியார் அவர்களையும் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களையும் என்றும் நினைவில் கொள்கிறேன்.
எனது முதல் தமிழ்க்கட்டுரை ‘பாரதிதாசனின் பனுவலில் சில’ அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆண்டு மலரில் வெளிவந்தது. பல்கலைக்கழக பெரிய நூலகம் என்னை ஆட்கொண்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
சிதம்பரம் வடக்கு வீதியிலிருந்த காந்தி அமைதி நிலையம் எனக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது. பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆதரவு தந்த  சாந்தி சேனா என்னும் அமைப்பில் நான் உறுப்பினராகச்சேர்ந்தேன். அகில இந்திய மாணவர்கள் சாந்தி சேனா அமைப்பு நடத்திய ஒரு முகாமில் கலந்துகொண்டேன். அது கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே கடோலி என்னும் கிராமத்தில் நடந்தது.
  நான் கல்லூரியில் படித்தபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள்  ஒருமுறை சிதம்பரம் வந்திருந்தார். என்னை அருகிலுள்ள பறங்கிப்பேட்டை முகாமுக்கு வரச்சொன்னார். காஞ்சி மடத்து சுவாமிகள் என்னை சிதம்பரத்தில் இந்து சமய மன்றம் தொடங்கச்சொன்னார்கள். காந்திய சிந்தனைகளில் தோய்ந்து இருந்த நான்  எல்லா மதமும் ஒன்று எனப்பேசத்தொடங்கிய காலம் அது. அப்படிச்செய்ய முடியாது என  நான் விலகிப்போனேன்.
என் தந்தை குடுமி வைத்துக்கொண்ட புரோகிதர். ஆனால் தன் பிள்ளைகள் தருப்பைப்புல்லைத்தொடாது  தங்கள் பிழைப்பை வேறு எங்காவது மட்டுமே தேடிக்கொள்ளவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பா சுந்தரேசனுக்குத்தெரியாத உலகவிஷயங்கள் இருக்கமுடியாது.
தாய் மீனாட்சி பெரியதாகப்படித்தவரில்லை. என் தாய்க்கு மனிதாபிமானம் என்று ஒரு மறுபெயர் சூட்டலாம். அன்பின் திரு உரு அம்மா. என் அம்மா கையால் சாப்பிடாதவர்கள் தருமங்குடியில் யாரேனும் இருப்பார்களா என்ன?.
வேதியியல் பட்டம் பெற்று முதன் முதலில் வடலூர் சேஷசாயி  நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.பின்னர் தொலை பேசித்துறை.விருத்தாசலம் நகருக்கு வந்தேன். ஆங்கிலத்தில் எம் ஏ எம் ஃபில் இதழியல் பட்டயமும் பெற்றேன்.
நவீன இலக்கிய அறிமுகம் எப்படி?
பாரதியில் இருந்துதான் என் இலக்கிய நுகர்வு தொடங்கியது.ஆரம்பப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாரதி பற்றி ஒரு பேச்சுப்போட்டியில் பங்குகொண்டு பாராட்டப்பெற்றேன்.கம்மாபுரம் உயர் நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றச்செயலர்.பணி. கல்விமாவட்ட கலைக்கழப்போட்டியில் முதன்மை பெற்றமை.அண்ணாமலைப்பல்கலைக்கழக நூலகத்தொடர்பு.பாரதிதாசன் எழுத்துக்களில் ஆர்வம் கொள்ளுதல். தி.ஜானகிராமனின் மோகமுள்,ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு,மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்,சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை,தா.பாண்டியனின் பாரதியும் சாதிகளும்,பொன்னீலனின் ஜீவா என்றொரு மானிடன்.இவை ஒத்த படைப்புக்களே என்னை ஈர்த்தவை.
திருக்குறளும்,திருவாசகமும்,திருமூலரின் திருமந்திரமும் வினோபாஜியின் கீதைப்பேருரைகளும் எப்போதும் நான் நேசிக்கும் நூல்கள். தொலைபேசித்துறையில் செர்ந்தபிறகு அங்கிருந்த என் எஃப் பி டி இ தொழிற்சங்கத்தொடர்பால் பொது உடமை ச்சிந்தனைகள் என் சிந்தனையை வெகுவாக பாதித்தன.
 தொடக்கத்தில் ஆசிரியப்பாவும் வெண்பாவும் எழுதியதுண்டு. இவை என்னை வெகுவாக பாதிக்கவில்லை. நவீன இலக்கிய யுக்திகளே எனக்கு நிறைவு தந்தன.
விருத்தாசலம் இலக்கியச்சூழல்
விருத்தாசலம் பகுதியில் நான் பணியில் சேர்ந்தபோதுஅருணா ஜவுளிக்கடையில் நண்பர் சதாசிவம் இருப்பார்.அவர் திருப்பூர்க்காரர்.அங்கு கூடி இலக்கியம் பேசுவோம்.அருகில் பணிபூண்டார் வீதியில் கவிஞர் பல்லடம் மாணிக்கம் இருப்பார்.விருத்தாசலம் ரயில் நிலயத்திலிருந்து உதயசங்கர் வருவார்.இன்றளவும் நான் பெருமையோடு தொடர்பு கொண்டுள்ள வே.சபாநாயகம் நட்பும் எனக்குக்கிடைத்தது. கவிஞர் கரிகாலன் அவர் தம்பி புகழேந்தி. கண்மணி குணசேகரன்,இமையம் கவிஞர் வின்செண்ட், ,தெய்வசிகாமணி.பட்டி செங்குட்டுவன்,தபசி,வடலூர் ஊ.செ.துளசி ஆகியோர் எல்லா நிகழ்வுகளுக்கும் கூடுவோம்.ஆயிஷா நடராசன்,அன்று குரல் நடராசன் விருத்தாசலம் நிகழ்வுகளுக்கு வந்துபோவார்.
இந்தப்பகுதியின் மகாகவிஞர் பழமலயின் நட்பு பற்றிப்பெருமிதத்தோடு குறிப்பிடவேண்டும். நானும் சபா சாரும் நெய்வேலி இலக்கிய நிகழ்வுகள் அனைத்திற்கும் சென்று வருவோம். நெய்வேலியில் சத்யமோகன், வேர்கள்: ராமலிங்கம்,ஜீவகாருண்யன்,பாரதிகுமார்,ஆகியோரிடம் இலக்கியம் பற்றி விவாதிப்போம்.பின்னர் வடலூர் ஜி .டி. போஸ்கோ இலக்கிய நண்பரானார்.அவர் தொடர்ந்து இலக்கியக்கூட்டங்கள் நடத்தினார். நானும் சபா சாரும் போகாத கூட்டமில்லை.தங்கர் பச்சான் முன்னிலையில் அவரின் ஒன்பது ரூபாய் நோட்டு பற்றி விமரிசித்தோம்.அப்படியே குறிஞ்சிப்பாடி குறிஞ்சிவேலனின் நட்பு கிடைத்தது.யான் வாழ்க்கையில் பெற்றஒரு பேறு என்று அதனைக்குறிப்பிடவேண்டும்.
கரிகாலன் ஒரு தொடர் இலக்கிய அரங்கு விருத்தாசலத்தில் நடத்தினார். நட்சத்திர எழுத்தாளர்கள் கலந்துகொண்ட பெரு நிகழ்வு அது. ஜெயமோகனும் மனுஷ்யபுத்திரனும் ரவிசுப்ரமணியனும் சுப்ரபாரதிமணியனும் கலந்துகொண்டார்கள்.பிரபஞ்சனும் அ.மார்க்சும் அனேக இலக்கிய நிகழ்வுகளில் இங்கு வந்து கலந்துகொண்டனர்.இமயம் நடத்திய ஒரு இலக்கிய நிகழ்வுக்கு சுந்தரராமசுவாமி மனைவியோடு வந்திருந்தார். எழுத்தாளர் அம்பை, இமயம்  ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கரிகாலனின் துணைவியார் தமிழ்ச்செல்வி மகளிர் எழுத்தாளர்களைக்கொண்டு பல்லடம் மாணிக்கம் நூலகத்தில் ஒரு இலக்கிய அரங்கு நடத்தினார்.
சபா சார் எழுதிய ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’ வெளியீட்டு நிகழ்ச்சி பல்லடம் மாணிக்கம் அவர்களால் அத்தனைச்சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.அப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை வேறு எங்கும் நான் இதுவரைகண்டதில்லை. நல்ல படைப்பாளிகள் இன்னும் பலரை தமிழ் இலக்கிய உலகிற்கு விருத்தாசலம் அளித்துப் பெருமைகொண்டது. ஒன்று மட்டும் சொல்லாமல் விட்டால் அது தவறு. அவ்வப்போது சாதியமும் தலைகாட்டி இப்பகுதியில் தன்னை நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்தான்.
தொழிற்சங்கம் அன்றும் இன்றும்.
பணியில் சேர்ந்தபோது நான் பார்த்த தொழிற்சங்கம் சமூகப்பள்ளியாக இருந்தது.இனம் மதம் மொழி தாண்டி எங்கள் சிந்தனையை வளமாக்கியது. மனித நேயற்றின் நாற்றங்கலாக அனுபவமானது.ஜீவாவின் சிந்தனைகள் எங்களைக்கட்டிப்போட்டன.சாதிய வெற்று விடயத்தை தொழிற்சங்கம் வெளிச்சமாக்கியது.பெண்களை மதிக்கக்கற்றுத்தந்தது.ஆரோக்கியமான விலாசப்பார்வை உறுப்பினர்களுக்குக்கிட்டியது. நல்ல எழுத்துக்கள் வாசிப்பு அனுபவமானது.புஷ்கினும் கார்க்கியும்,தாஸ்தாவாஸ்கியும்,டால்ஸ்டாயும் எங்களுக்கு நெருக்கமானார்கள்.
தலைவர்கள் ஜகனும்,ரகுவும்,ரெங்க நாதனும் இயக்கத்தில் எங்களுக்கு வழிகாட்டினார்கள்.இந்தப்பகுதியின் எழுத்தாளர் சிரில் அவரின் படைப்புக்களால் எங்களுக்கு அறிமுகமானார். நெய்வேலி கனேசன் மிக நெருங்கிய நண்பரானார்.அன்பே உருவான அந்தத்தோழர்தான் என்னை முதன் முதலில் கணையாழி இலக்கிய இதழைப்படிக்கச்சொன்னவர். விஎருத்தாசலத்தில் தோழர் மஜ்கர் எனக்கு நண்பரானார். இளமையிலே அவர் நோயுற்று இறந்துபோனது ஒரு சோகம்,
கவிஞர்கள் நீலகண்டனும்,கோவி ஜெயராமனும் இலக்கிய நண்பர்கள் ஆயினர். கடலூர் புகழ் சங்கு வளவதுரையனும், சிம்மக்குரல்
 சசியும் பேராசிரியர் பாசுகரனும், பட்டுக்கோட்டை இலக்கியச்சிறகு  மு.ராமலிங்கமும் நெருக்கம் ஆயினர்.
தொழிற்சங்க அரங்கில் எண்ணற்ற போராட்டங்கள் எத்தனையோ தண்டனைகள். ஆனால் நியாயத்திற்கு ப்போராடிய பெருமை மட்டும் கூடிக்கொண்டே போனது. எதிரிகளால் அடியும் உதையும் கிடைத்தது.பதவி உயர்வு தள்ளிப்போனது.தண்டனைகள் தொடர்ந்தன.மனம் மட்டும் எப்போதும் நிறைவாகவே உணர்ந்தது.
தன்னை மட்டுமே முன் நிறுத்துதலும்,சாதி அரசியலும் தம் கடையை திறந்துகொண்டு வியாபாரம் செய்யத்தொடங்கிவிட்டதன் பாதிப்பு எல்லா சமூக இயக்கங்களையும் இன்று பீடித்து நிற்கிறது.ஆகத்தான் பொதுவுடகமை இயக்கங்களும் இலக்கிய அரங்குகளும் கூட த்தம் கம்பீரம் இழக்கின்றன. தொழிற்சங்கங்களை மட்டும் அவை விட்டு வைக்குமா என்ன?
கவிதை சிறுகதை நாவல் பற்றி
கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆங்கில இலக்கியம் பயின்றதால் மில்டனும் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கீட்சும் என்னைப்பாதித்த கவிஞர்கள்.கோவை ஞானி என் கவிதைகளைப்பாராட்டி நிகழில் பிரசுரித்ததை நான் பெருமையாக எண்ணியவன்.
கவிதையை ப்போன்று ஆன்மாவைத்தொட்டுப்பெசும் வேறு ஒரு படைப்பு உண்டா என்ன? நான் மூன்று கவிதைத்தொகுப்புக்கள் வெளியிட்டேன். வல்லிக்கண்ணன் முன்னுரையோடு தேவகாந்தன் முயற்சியால் ‘ரணம் சுமந்து’ வெளிவந்தது. ஆங்கிலக்கவிதை நூல் ‘ரெயின் போ’ வெளியிட்டேன். பட்டுக்கோட்டை ராமலிங்கம் என்னுடைய ஆங்கிலக்கவிதைகளை த்தொடர்ந்து தன் ஷைன் இதழில் வெளியிட்டார்.
நான் இரு நூறு சிறுகதைகளுக்கு ப்பக்கமாக எழுதியவன் இன்னும் தொடர்கிறேன். ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன்.’ மண்ணுக்கள் உயிர்ப்பு புதினத்தை ராஜம் கிருஷ்னன் விமரிசனம் செய்து எழுதினார்.’கனவு மெய்ப்படும் நாவல் நான்கு பரிசுகளைப் பெற்றது. ‘ நெருப்புக்கு ஏது உறக்கம் நாவல் தமிழக அரசின் விருதினைப்பெற்றது. சேலம் தாரையார் விருதும் அதற்குக்கிடைத்தது.
நாவலில் மட்டுமே படைப்பாளிக்கு நிறைவு கிட்டும் என எண்ணுகிறேன். ஆக நாவலை  நான் அதிகம் விரும்புகிறேன்..
----------------------------ஏப் 2016 சங்கு

No comments:

Post a Comment