கலியுகன் கோபியின் ’மனக்கண்ணாடி’ ஒரு பார்வை -எஸ்ஸார்சி
’மனக்கண்ணாடி’
கவிஞர் கலியுகன் கோபியின் எட்டாவது கவிதைத்தொகுப்பு.கவிதைகள் வரிசையாய் எண்களிடப்படவில்லை.அவைகள்
தலைப்புப்பெயர் இல்லாமலும் வந்திருக்கின்றன.எப்படியும் அவை எண்பதுக்கு மிகும்.எல்லாமே
குறுங்கவிதைகள்.பளிச்சென்று செய்தி சொல்லும் புதுக்கவிதைகள். நேராக விஷயத்தை வாசகனுக்கு
வெடித்துச்சொல்லும் கவிதைகள்தாம் அத்தனையும்.
முதல் கவிதையே
இரு வேறு முரண்கள் பற்றிப்பேசுகிறது. அம்மா வறுமையில் அகப்பட்டு வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டாள்.
இன்மைதான் அனைத்திலும் கொடியது என்பார் திருவள்ளுவர். மனைவி பெருமையோடு வாழ்க்கையை
அனுபவிக்கிறாள். நுகர்வில் நல்லதும் தீயதும் ஒரு கூரையின் கீழ். தாயின் உழைப்புத்தான்
மருமகளை வளம்பட வாழவைத்துவிட்டுப்பின் இற்றுக்கொண்டது. கவிஞர் நல்ல தொடக்கத்தை கன சிந்தனையோடு
தொடங்குகிறார்.
குழந்தையும் கவிதையும்
ஒன்று என்று சொல்கிறது அடுத்தகவிதை .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதறிவோம்.கவிதையை
அதனோடு மூன்றாவதாகச்சேர்த்துக்கொள்ளச்சொல்கிறார் கவிஞர்.
குருடர் பள்ளி
முன் ஒரு மேடை.அதனில்கோரிக்கை முழக்கங்கள் எழுப்புகிறார்கள்.’ஒளி படைத்த கண்ணினாய்
வா வா’ என்று.கவிஞர் ஒரு சோகமான அனுபவத்தைக்கவிதையாக்கியிருக்கிறார்.
காலம் தந்த தோல்விகள்
என்கிற அற்புதமான சொல்லாடலை முயற்சியின் முதல் படி என்று தொடங்கும் கவிதையில் சந்திக்கிறோம்.தோல்விகள்
வெற்றிக்கான காத்திருப்பு அன்றி வேறென்ன என்கிற வரி மந்திரம்போல் வேண்டுமடா சொல் இன்பம் என்பார்களே அப்படி வாசகனுக்கு
அனுபவமாகிகிறங்க வைக்கிறது.மனிதன் தானே தன் சமுதாய அமைப்பைக்கெடுத்துக்கொள்ளச் சாதியை
வளர்த்து விட்டிருக்கிறான். பாரதி வேதம் நிறைந்த நாடென்பார் கோபியோ சாதிகள் நிறைந்த
நாடென மனம் கொப்பளிக்கிறார்.
ஜன நாயக நாட்டில்
தேர்தல் வருகின்றது.வேட்பாளர்கள் எறும்பாக உழைக்கின்றனர். நெல் மணியென வாக்கு சேகரிக்கப்படுகிறது.தேர்தல்
முடிந்து அவர் வெற்றியாளர் ஆகிறார். இப்போது
பாருங்கள் அவர் செயல்பாடுகளை. கொள்கைகள் நீர்த்துப்போன அவரின் நடவடிக்கைகளை .சுய நலமே
இன்று அவரின் பிரக்ஞை அழகாகச்சொல்கிறார் கவிஞர்.
உப்பு நீராம்
வியர்வையில் குளித்தோம்
உழைப்பைச்சிலுவையாய்
சுமந்தோம்’ என்று தொழிலாளியின் துயர் பற்றி யதார்த்தமாக ச்சொல்லிச்செல்கிறார். பெறுகின்ற
ஊதியம் காற்றினிலே கரைந்த கற்பூரம் என்கிறார், இருக்கும் அது இல்லாமலே போய்விடும் ஒரு
நாள் என்பதனை அற்புதமாகக்கூறுகிறார்.
பறவைகளே தரை இறங்காதீர்.
இந்த மண் மனிதனின் காலடி பட்டு தூய்மைகெட்டுக்கிடக்கிறது என உள்ளம் உழல்கிறார் கவிஞர்.
‘மனக்கண்ணாடியில்’ கலியுகன் கோபி மெய்யாக சாதனையாளராகிறார்..
’கொத்திச்சென்றுவிடும்
கழுகுகள்
கோழிகளுக்குத்தெரிவதில்லை’
என்று பேசும் கவிஞர் அமெரிக்கக்கெடுமதியின் சூழ்ச்சியை சூசகமாக சொல்லித் தான் யார்
பக்கம் என்பதை வாசகனுக்கு இயம்பிவிடுகிறார்.
அத்தனைக்கவிதைகளையும்
நூலகர் சியாமளா மொழிபெயர்த்துக்கொடுக்க அவை
இதே புத்தகத்தில் கம்பீரமாகக்காட்சி தருகின்றன. மொழிச்சிக்கல் இல்லாத எளிய நடை மொழிபெயர்ப்புக்கு
மெருகு கூட்டுகிறது.மொழிபெயர்ப்பாளர் பாராட்டுக்கு உரியவர்.
‘poverty is
the only
Case of hut’ என்பது நச்சென்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Blossoming and
withering natures’ rule ?’ என்பது வாசகனைச்சிந்திக்க வைக்கிறது.
------------------------
No comments:
Post a Comment