Monday, May 29, 2023

சகோதரி நிவேதிதை

 

கோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா.                     

ஆதாரம் -The Complete Works of Sister Nivedita-  அத்வைத ஆஸ்ரமம்  கொல்கத்தா வெளியீடு.

இந்தப் புத்தகத்தை வாசித்துச் சில அரிய செய்திகளை  வாசகர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நிறைவு ஏற்படலாம். அயர்லாந்து தேசத்து நிவேதிதை நாம் அறிவோம் மாகவி பாரதியார் தன் குருவாக ஏற்றுக்கொண்டு போற்றியப் பெருந்தகை.

வாழ்வில்லம் மிக எளிமையானது  குடும்ப மகிழ்ச்சியோ  பெரிதாய்க்கிடைப்பது,   கண்விழித்து  உலகில் நடமாடித்  தாம் கண்கள் மூடி முடியும் வரை, சுயநலமேயில்லாமல் தன்னைத் துருத்திக்கொள்ளாமல் பொறாமைப்படாமல், அன்போடு நேசித்துச்சேவை மட்டுமே செய்வதென்பது, இந்தியப்பெண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இந்திய மாதர் குறித்து நிவேதிதையின்  இலக்கணம் இப்படிச்சொல்கிறது.

இந்துமதத்தின் உன்னதச்சிகரமென்பது உபநிடதம்.  இன்றைய உலகில் நாம் பார்க்கும் அனைத்து இறைதொடர்பான பிரபலமான கருத்தாக்கங்களும் பாரதத்தின் உபநிடதங்களோடு பந்தப்பட்டவை ஏன் அவற்றின் தொடர்ச்சியே எனவும் கூறமுடியும்.

புத்தர் மடாலயம் நிறுவவில்லை. சமூக சடங்குகளை அங்கீகரிக்கவில்லை. பிறந்த சிசுவை அங்கீகரித்து ஏற்று நிற்கவில்லை.திருமணத்தை புனிதப்படுத்தவில்லை. விடைபெற்ற உயிர்களுக்கு  இளைப்பாறுதல் தரவில்லை.

பவுத்த நியதியை மட்டுமே நிறுவினார். பவுத்தக் கருத்துக்களைத்தொடர்ந்துபேசினார். நிர்வாணத்தைப்பற்றியசெய்திகளைப்பகிர்ந்தார். திருமணத்திற்கும் பிற குடும்ப சடங்கிற்கும்  அதனில் ஆசிபெறவும் எளியமனிதர்கள் பிராமணர்களைத்தேடவேண்டியிருந்தது.  சடங்கு பற்றிய விசாரணைகளை மக்களால் துறந்துவிடமுடியவில்லை.  அப்பிணைப்பு அத்தனை எளிய விஷயமாய்  இல்லை. சத்தியத்தைக்கொண்டு மாயையினின்று விடுதலை பெறுதல் போன்ற கனமான விஷயங்கள் சமூக அரசியலில் போணியாகவில்லை. பிராமணர்களில் சடங்கு செய்வோர் மக்கள் மத்தியில் கலகலப்பாய்   வாழ்ந்திட பவுத்தத்துறவிகளோ மடலாயங்களில் தனித்து  வாழ்ந்தனர்.

கடினமான சட்டவிதிகள் எதுவும் கொண்டு இந்துமதம் தோன்றவில்லை.  மானிட   இறைஎண்ணங்களின் ஓடுபாதை அது. முற்போக்கான விஷயங்களை காலக்கதியில் சந்திக்கின்றநேரும்போது அவைகளையும் அது அங்கீகரித்து எடுத்துக்கொள்கிறது. உயிர்ப்பலிகள் கொடுக்கப்படுவதை வழக்கமாய்க்கொண்ட ஒரு மதம் புத்தரின் வருகையால் அதனை மாற்றிக்கொண்டது.

தொடக்க கால வைணவத்தில் இலக்குமி என்னும் கடவுள் ஏது? வரலாறு கொண்டு சேர்த்ததே அப்பெண்கடவுள். வாசகச் சிந்தனையைக் கிளறிவிடுகிறார் நிவேதிதா. ராஜபுதனத்தப்பெண்  கிருஷ்ணப்ரேமி  மீராபாய்க்கும் வங்காளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களின்  வசமிருந்த கயாவை மீட்க ராஜபுதனத்து இளவரசர்கள் விரும்பினார்கள்.சைதன்யரைப்போல் கிருஷ்ணனை பிரேமித்த மீரா வங்களாத்து கிருஷ்ண வழிபாட்டை கையிலெடுத்தார்.வைணவ வரலாறு  வங்கத்து மகான் சைதன்யரோடு பிணைந்ததே. சுடலைக்கு உறவான  சிவபெருமான் அர்த்தநாரி ஆனார். சிவனே மஹாதேவர் ஆனார்.ஆதிசங்கரருக்கு இதனில் பங்கில்லாமல் இல்லை.

மாபாரதக்கதையில் திரவுபதியை மணம் முடிக்க நடக்கும் போட்டியில் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் அந்தணர்களாய் வேடமிட்டுச்சென்றதை நிவேதிதா குறிப்பிடுகிறார். பிராம்ண கஷ்த்ரிய கலப்புத்திருமணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நமக்குச்சொல்கிறார்.

பிராமணர்களுக்கும் க்‌ஷத்ரியர்களுக்குமாய் மட்டுமே  இருந்த அறிவுசார் விஷயங்களை சமூகதளம் முழுமைக்கும் விஸ்தரித்த பெருமை புத்தத்திற்கே உண்டு. சமூக ஒருமைப்பாட்டை புத்தமே தோற்றுவித்தது. ஜனநாயகப்படுத்துதல் என்பது அப்போதிலிந்துதுதான் துவங்கியது. அதுவே இந்துமதம் என்கிற  கட்டமைப்பு உருவாகவும் அடித்தளமிட்டது. இன்றுவரை இந்துமதம் என்கிற  பிணைப்புப் பாரம்பரியத்தை வரலாற்றில் பவுத்தமே சாத்தியமாக்கியது. எந்தகுடியில் பிறந்தாலென்ன சாதாரணர்களுக்கும் அன்பின் வழி விடுதலை என்பதை பவுத்தம் உறுதிப்படுத்தியது. மக்களின் அரசராய் விளங்கிய அசோகரின் மனத்தை பவுத்தமதக் கருத்துக்கள் ஈர்த்தன.

இந்துமதம் பற்றி நிவேதிதாவின்  வார்த்தைகள் அன்று நிலவிய யதார்த்தத்தைப் படம்பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பிராமணர்களின் தனித்துவமான அணுகுமுறை இந்துமதத்தை தேசியக்கண்ணோட்டம் கொள்ள அனுமதிக்காது. பிராமணர்களுக்கு எதிரான ஓர் மையம் நிறுவப்பட்டு அது  இந்துமதத்தை கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே  இந்து மதம் தேசியப்பார்வையைத் தனதாக்கும். நிவேதிதாவின் வார்த்தைகளில் பார்த்தால் இது  இன்னும் சிறப்பாக இருக்கலாம்.

‘Hinduism alone in its completeness can never create a nationality for it then tends to be dominated by exclusiveness of Brahmin caste,whose ideal is naturally and rightfully its central type .Learning and austerity are the characteristic virtues of the ideal.  Exclusiveness is its characteristic weakness and vice. It is only therefore when there is within Hinduism itself a counter-centre to the Brahmin, ‘that Hinduism can suffice to create a nationality. This counter-centre was found during the Ashokan period in the personality of Buddha who was a kshatriya by birth.’ (Ibid page 262)

வாசகர்க்கு இவண்  விவேகானந்தரும், பசும்பொன் முத்துராமலிங்கதேவரும் மனதில் வந்துபோவதைதவிர்க்கமுடியாது. புதிய பாராளுமன்றத்திறப்பு நிகழ்வுக்கு  பிரதமர் மோடி  சைவ ஆதினங்களை அழைத்தார். பார்ப்பனச் சங்கரமடங்கள் தவிர்க்கப்பட்டன.

பேரரசர்கள்  பவுத்த  அசோகரும்  மொகலாய அக்பரும் இந்தியாவில் தேசிய உணர்வு அரும்ப அடித்தளமிட்டார்கள் என்கிற ஒரு கனமான செய்தியை நிவேதிதா இந்த நூலில் பதிவுசெய்துள்ளார்.

 இந்துக்களும் இசுலாமியர்களும் எப்படி ஒற்றுமையோடு இருக்கிறார்கள் என்பதை நிவேதிதா குறிப்பிடுகிறார். இந்துக்களுக்கு இசுலாமியர்கள் வேண்டும். இசுலாமியர்களுக்கு இந்துக்கள் வேண்டும். இந்திய தேசம் அப்படித்தான் உருவாகவேண்டும் என்று சமூக பொறுப்போடு எழுதுகிறார்.

‘The Hindu needs the Mohammedan,the Mohameddan needs the Hindu, if there is to be an Indian nation.’  ( Ibid page 291)

 1947ல் நாம் இந்தியாவை உடைத்துப் பெற்ற விடுதலையை நிவேதிதா எதிர்பார்க்கவில்லை.  அவர் 13-10-1911ல் மறைந்துவிட்டார். இந்த மண்ணில் நடைபெற்ற மதக்கலவரங்கள் படுகொலைகள்  தேசபிதா கொலையுண்டது தொடர்ந்து பாகிஸ்தானோடு மோதல்கள் இவை எல்லாம் அவர் அறியாத வரலாற்றுச் சோகங்கள். ஒன்றுபட்ட இந்தியா எப்படி அமையவேண்டும் என நிவேதிதா ஆசைப்பட்டார். இந்திய மக்கள் மீது மாற்றுக்குறையாத நம்பிக்கையை  அவர் எப்படி எப்படியெல்லாம் வைத்திருந்தார் என்பதை அறிய நாம் நெகிழ்ந்துபோகிறோம்.

‘Do they Indian people doubt that they are a nation, with a national character of their own? Can they doubt when they look back on their literature, on their epics, on their heroes, on their history? Could they compare the corresponding possessions of any other people with their own? Does the Indo –Mohameddan doubt his own power, his own part in a consolidated Indian nationality? (Ibid page 307)

வரலாறு வேறுவிதமாக அமைந்துவிட்டது. யாருக்கும் நிறைவில்லை என்பதுவே மிச்சம்.

புத்தர் சூத்திரர்களின் இறையாண்மைக்கு விஷயதானம் செய்தவர். உலகில் வரலாற்றில் வேறு எங்குமே கண்டிராத அதிசயத்தை இம்மண்ணில் நிகழ்த்தியவர். பேரரசர் அக்பருக்குப்பிறகு நான்கு மொகலாய மன்னர்கள் அவர் போன்றே வரலாற்றில் அமைந்தது குறிப்பிடப்படவேண்டும். இரு பெரும்  மதப்பிரிவுகள் சரியான விஷய ஞானம் பெறுமானால் தேசப்பிரிவினை என்பது  அர்த்தமற்றுப்போய்விடும்.

சாதிகளை உச்சிமீதுவைத்துப்புகழ்வதோ, சாதிக்கு மிருகபலம் ஊட்டுவதோ விடுத்து  சாதிகள் எப்படி முளத்தன என்பதை விளங்கிக்கொள்வது உசிதமானது என்கிறார் நிவேதிதா. அவர் ஒரு அய்ரீஷ்காரர்.  ஓர் பெண். அவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக  இந்திய சமூகத்தை எப்படிப்பார்த்திருக்கிறார் என்பதை அறிந்து இன்றைய படித்த இந்தியர்கள் நாம் வெட்கப்படவேண்டும்.

‘It is better to understand caste, than either praise or vilify it.’  ( Ibid page 308)

இந்துமதம் பரந்து விரிந்த பேருண்மைகளை தன்னகத்தே கொண்டது.இசுலாமும் கிறித்துவமும் தனித்தவை ஆயினும் அவைகளின் பிரதிபலிப்பையும்  கூட இந்துமதத்தில் நாம் கண்டடையமுடியும். ஆக இந்தியா என்பது ஒன்றுபட்ட சமூகமே.  அவ்வொற்றுமை  நிலவுவது இன்றும் என்றும்.

கல்வியைப்பற்றிப்பேசும் நிவேதிதா  வருமானம் அல்லது  சம்பாதிப்பு என்பதற்காக மட்டுமே கற்றல் என்பது மானிட ஆன்மாவைக் கேவலப்படுத்துவது என்கிறார். மனிதன் தன் வயிற்றுப் பசியைப்போக்கிக்கொள்ளத் தனது மன ஆற்றலைச் செலவழிப்பது என்பது  தான் வாழும் நாட்டினை ச் சிறுமைப்படுத்துவதாகும். நாம் உண்மையை நேசித்து அதற்காக உழைத்து  அதனில் வாழ்ந்து  அதனையே அனுபவிப்பவர்களாக இல்லாவிடில் நமது  இதயத்திற்கு இயைந்த பெருவிஷயங்களும் புத்திசாலித்தானமும் தமது கதவுகளை தாழிட்டுக்கொண்டுவிடும். பொது உணர்வு என்பது மனிதனுக்கு அரும்பி   ஒரு தரத்தை எட்டும் போது அதற்குச்சிறகுகள் தானாகவே தோன்றிவிடும்.

இமாலயத்திலிருந்து கன்னியாகுமரிவரை  கல்வியை விநியோகித்த மெஷினரிகளை இந்திய மக்கள் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறார்கள். ப்ராடெஸ்டண்ட் அல்லது ரோமன் கத்தோலிக் அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இன்றும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்து  மாணவர்கள் பாரம்பரியமாக, ஸ்காட்லாந்து நாட்டுக்காரரான டேவிட் ஹேர்  அவர்களின் கல்லறைக்குப்புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். ஒரு நூறு ஆண்டுகள் முன்பு  கல்கத்தாவில் ஒரு பள்ளியைத்தொடங்கியவர் டேவிட் ஹேர்.அப்பள்ளி பின்னர்  கல்லூரி யாகிப் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. காலரா நோயினால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தவர் டேவிட் ஹேர். அவருக்கும் காலரா நோய் தொற்றியது. அவர் மரணமானார். அவர்  சவத்தை எந்த கிறுத்துவ அமைப்பும் அடக்கம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. அவர் புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம். அவரது பூதஉடலைச்  சுமந்து வந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அதனை ப்புதைத்து கல்லறை  எழுப்பி  மரியாதை செய்தார்கள். அந்த மரியாதை செய்தல் இன்றளவும் தொடர்கிறது என்கிறார் நிவேதிதா.

அரைத்தம்பிடியில்( Half a Penny) தபால் சேவையும், மிக மலிவான ரயில் கட்டணமும்,  சமூகத்தில் மெச்சப்பட்ட  ஆங்கிலக்கல்வியும்  முப்பது கோடி மக்கள் வாழும் இந்தியாவை அய்க்கியப்படுத்திய விஷயங்களில் அடங்கும் என்று  சர் நில்லியம் ஹண்டர் குறிப்பிட்டதை நிவேதிதாவும் குறிப்பிடுகிறார்.

மேலய நாட்டில்  அவரிடம்  கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்  பகுதியொன்று வருவதை  இந்தப் புத்தகத்தில் வாசகர்கள் காணலாம். சில வினாக்களும் விடைகளும்.

உங்கள் சொந்த நாட்டையும் தேசியத்தையும் துறந்துவிட்டீர்களா?

நிச்சயமாக இல்லை. ஏன் நான் துறக்கவேண்டும்.

நீங்கள் கிறித்துவ மதத்தைத் துறந்துவிட்டீர்களா?

இல்லை. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  ராமகிருஷ்ண மெஷின் கெளவுரமாய் அங்கீகரித்த மூன்று கிறித்துவர்களில் நானும் ஒருத்தி. இந்தியாவில் தங்கியுள்ளேன்.

நீங்கள் நடத்தும் பள்ளிகள், பள்ளிகள் மட்டுந்தானா?

என்ன கேள்வி இது. நான் யாரையும் கிறுத்தவமதத்திற்கு மாற்ற முயல மாட்டேன்.  ஒரு கிறித்துவரை வேறு மதத்திற்கோ, ஒரு முகமதியரை இந்து அல்லது கிறித்துவ மதத்திற்கோ மாற்றிவிட  எதுவும் நான் செய்யவே மாட்டேன். இந்தப்பதில் போதுமா? நான் ஒவ்வொரு மதத்தாரும் அவரவர் மதத்தை உச்சபட்சமாய் மதித்தலைக் கற்பிக்க விரும்புகிறேன் இப்படி முடிக்கும் நிவேதிதாவை நாம் இப்புத்தகத்தில் காணமுடிகிறது.

’In India, my friends love me, for my love of Christianity and talk with me about it for hours together’.  என்கிறார் அவர்.    மனம் விசாலித்த  ஒரு நிவேதிதாவை இனி நாம் என்று காண்போமோ.  

ராய் வில்லா டார்ஜிலிங்கில் 13-10-1911 அன்று மார்கரெட் எலிசபெத் நோபல்  என்னும்  இயற்பெயர் கொண்ட சகோதரி நிவேதிதா   இயற்கை எய்தினார்.  அவர் 44 ஆண்டுகள் மட்டுமே பூவுலகில் வாழ்ந்தவர்.

அய்ரிஷ் நாட்டில் பிறந்து  இந்தியப்பெண்களை  ஆழமாய் நேசித்த அற்புதமும்  அதிசயமும் அவரே.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

-----------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, May 6, 2023

பாவண்ணனின் நயனக்கொள்ளை

 

பாவண்ணன் என்னும் கதையாளர்         

பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின் சிறுகதை குறித்து பதிப்பகத்தார் தரும் சில செய்திகள்.’கைவிடப்பட்ட எளிய மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இணைக்கப்பட்டவர்களே. அந்த இணைப்பின் கண்ணிகளைத்தேடித்தேடி காட்சிப்படுத்துவதில் பாவண்ணனின் சிறுகதைகள் முன்னிலைபெறுகின்றன.’

‘கடுமையான துயரங்கள் மிகுந்த சூழல்களிலும்கூட ஒரு துளி நம்பிக்கைக்கும் வெளிச்சத்துக்கும் இடமிருக்கும் தருணத்தைப் பாவண்ணனின் சிறுகதைகள் உணர்த்தியபடியே இருக்கின்றன’

மிகத்துல்லியமான அளவீடு என்று இதனைக்கூறமுடியும். பாவண்ணன் சுபாவமாய் அப்படிப்பட்ட மனிதர் என்பதனை நெருங்கிப்பழகியவர்கள் தெரிந்திருப்பார்கள்.  எளிய மனிதர்களின் மீது அபார நம்பிக்கையுள்ள படைப்பாளி. பழசை மறவாத எழுத்தாளர் என்றால் பாவண்ணனைத்தான் முதலில் குறிப்பிடவேண்டும். நல்லமனிதராயும் நல்ல எழுத்தாளராயும் அமைவது இறைவன் கொடுத்தவரம். பாவண்ணன் அப்படித்தான்.  கவிஞர்பழமலய் சொல்லுவார்’ஈரநெஞ்சுக்காரர் பாவண்ணன்’ என்று.  மெய்தான்.

நயனக்கொள்ளை புத்தகத்தின் அட்டைப்படம் மிகப்பொருத்தமாக தேர்வாகியுள்ளது. அனேக தருணங்களில் அட்டைப்படங்கள் சரியாக அமையாது போவதுண்டு.’அடடா’ இன்னும் சிறப்பாக அட்டைப்படம் வந்திருக்கலாமே என்று வாசகர்கள் நாம் யோசிப்பதுண்டு. ‘நயனக்கொள்ளை’ நூலிற்கு அட்டைப்படம் தேர்ந்த பதிப்பாளரைப்பாராட்டியாகவேண்டும்.

இத்தொகுப்பை ‘ஊட்டிமணி ‘ என்கிற நிர்மால்யாவுக்கு பாவண்ணன் சமர்ப்பணம் செய்துள்ளார். மலையாளப்படைப்பளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்துவைக்கும் மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டுவருபவர் ஊட்டிமணி. அவரின் தமிழாக்கத்தை ஆவலோடு படித்து மகிழும் பாவண்ணன் இப்புத்தகத்தை அவருக்குச் சமர்ப்பித்து இருப்பது சாலப்பொருத்தமே.

திருவாசகத்தில் திளைக்கும் சந்தியாநடராஜன் ‘நயனக்கொள்ளை’ என்கிற மாணிக்கவாசகப்பெருமானின் சொல்லாடலைப் பாவண்ணனிடம்  நினைவுபடுத்தி  ஒரு கதை எழுதுங்களேன் என்று சொல்ல அதுவே ஒரு கருவாகிக்  கதையாகி  இந்த நூலின் பெயருமாகி நம்முன்னே நிற்கிறது.

ஆக முதற்கதை’நயனக்கொள்ளை’. இதனில் இரு  நெருங்கிய நண்பர்கள். அவர்களில் ஒருவருக்குப்பையன். அடுத்தவருக்குப்பெண். இரு குழந்தைகளும் ஒரு சாலை மாணாக்கர்கள். எது படித்தாலும் இருவரும் சேர்ந்தே படிக்கிறார்கள் . திருவாசக வகுப்புக்குக்கூட  ஒன்றாகச்செல்கிறார்கள் இக்கூட்டு கல்லூரி வரை தொடர்கிறது. பையனுக்குத் தாய் இல்லை. அப்பாவே  தாயும் தந்தையும்.  அந்த அப்பா  நோய்வாய்ப்படுகிறார்.  அதிக நடமாட்டம் என்பதிலை. மகன்தான் தந்தையை கூட இருந்து கவனித்துக்கொள்கிறார்.

 பெண் குழந்தை வளர்ந்து படித்து லண்டன் செல்கிறாள்.  கேம்பிரிட்ஜில் மேல் படிப்பதற்குச்சென்றவள் அங்கேயே தங்கி விடுகிறாள்.  வேறு தகவல்கள் வருவதில்லை.

நோய்வாய்ப்பட்டு முடியாமல் இருக்கும் பெரியவரை அவர் நண்பர் அடிக்கடி வந்து வந்து பார்க்கிறார். இருவரும் திருவாசகப்பிரியர்கள்.  பரஸ்பரம் திருவாசகம் வியாக்யானம் செய்துகொள்வார்கள். லண்டன் மகள் என்ன படித்தாள் எங்கு வேலைக்குப்போனாள் ,கல்யாணம்ஏதும்  ஆனதா எதுவும் அவள் தன்தந்தைக்குத் தெரிவிக்கவில்லை. ஏனோ அவள் சொல்லவில்லையே.   அவள் தந்தைக்கு அதற்கான கன வருத்தமுண்டு.

 லண்டன் பெண் ஒரு நாள் தாயகம் வருகிறாள். இச்சேதியை பெரியவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.  ஆறு வருஷங்களாக   அவளோ இன்னும் அவன் இனிய  நினைவுகளில்.  அவர்கள் பேசுவதை அந்தப்பையனும் கேட்டுக்கொள்கிறான். அவளோடு பழகிப்பேசிய அந்த நாள் ஞாபகம்  அவன் நெஞ்சில் வந்து வந்து போகிறது. அந்தப்பெண் நேராகத்தன் தந்தைவீட்டுக்குச்செல்லாமல் காரில்  அவன் வீடு வருகிறாள்.  அவளின் கால் ஒன்று  இறங்க ஏற மறுக்கிறது. அவன் ஒத்தாசையோடு காரிலிருந்து  இறங்கி நடக்கிறாள். கண் ஒன்று அசையாமல் செயற்கையாய் இருக்கிறது. விபத்தில் தான் உயிர் பிழைத்த அதிசயத்தைச்சொல்கிறாள். அவன் தந்தை படுத்திருக்கும் இடம் அருகே வந்து   அவரிடம் எல்லாவற்றையும் விசாரிக்கிறாள். திருவாசகம்  இன்னும் அருகில் இருப்பதைக்கவனிக்கிறாள்.

’கொள்ளைன்னு’ ஒரு பாட்டுல வருமே நினைவு இருக்கிறதா என்கிறாள். அவனோ தெரியாது என்கிறான். அவனின் தந்தை  அது ‘நயனக்கொள்ளை’ என்று தொடங்கி அந்த போற்றித் திருஅகவல் முழுவதும் சொல்கிறார். நாமும் அறிய அது நலம் பயக்கலாம்தான்.

‘ஒருங்கிய சாயல்

நெருங்கி உள் மதர்த்து

கச்சு அற நிமிர்ந்து கதிர்த்துமுன்

பணைத்து

எய்த்து இடை வருந்த எழுந்து புடைபரந்து

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்

கூர்த்த நயனக்கொள்ளையில் பிழைத்தும்

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்

செல்வம் என்னுமல்லலில் பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்

புல்வரம்பு ஆகிய பலதுறை பிழைத்தும்’

மாணிக்கவாசகர்  வரிசையாய்ச் சொல்லிப்போவார். நம்முடைய  சாண்டில்யன் உரைநடையில் சொல்லுவதை மணிவாசகர் தெய்வப் பாட்டில் சொல்லியிருக்கிறார். இருவர் நோக்கமும் வேறு வேறு அறிவோம்.

எங்கிருந்து  ஓர் அரிய விஷயத்தை எடுத்து அதை யாரிடம்  கொடுக்கவேண்டுமோ கொடுத்து  ’ஒரு கதையாகத் தா நீ’  என்று சொல்லிய அற்புத மனிதருக்கு பாராட்டு சொல்லுவோம்.  கதையை  அழகு ஓவியமாக்கிக்கொடுத்திருக்கிறார். பாவண்ணன்  இவண்  படைப்பால் வென்று விட்டார்.

அடுத்து எனக்குப்பிடித்தகதை’ கங்கைக்கரைத்தோட்டம்’. இரு சிறுவர்களை வைத்துப் பாவண்ணன் புனைந்தது. கீரைவளர்த்து அதனைக் கட்டுகளாக்கி  தெரு வியாபாரத்துக்கு  தன் பையன்கள் மூலமாய் அனுப்பும் ஒரு  தாய்.  இருவரும் ஒரு பெரிய மனிதரின் வீட்டில் கீரை விற்கிறார்கள். அங்கு வீணை ஒலி கேட்கிறது. அதனில் இருவரும்  சொக்கிப்போகிறார்கள். அங்கு ஒரு அக்கா வீணை கையில் இருக்க’ கங்கைக்கரைத்தோட்டம்’ என்னும் பாடலைப்படுகிறாள். கீரை விற்றக் காசை எண்ணிக்கூட பார்க்காமல் அந்தப்பாட்டையே இருவரும் கேட்கிறார்கள். பாவண்ணனின் சொல்லாட்சியைப்பார்ப்போம்.

‘சீராகத் தரைதொடும் மழைத்தாரைகளென இசையும் பாடலும் பொழிந்தன.நிறைந்து வழிந்தோடும் நீரில் மிதந்து சுழன்றபடி செல்லும் இலைகளென எங்கள் மனங்கள் மிதந்து சென்றன.கைவீசி தாவி நீந்துவதுபோல அலைந்தன. வட்டமிட்டுச்சுருண்ட சுழல்களால் எடுத்துச்செல்லப்பட்டு ஆழத்தை நோக்கி இறங்கின’

மனங்களின் ரீங்காரம் பற்றி  கதாசிரியர்  இப்படிச்சொல்கிறார். அண்ணனும் தம்பியும் வீணை வீணை என்று பித்தாய்  அலைகிறார்கள். அதன் விலை அதன் மதிப்பு அறியாத இளம்பிஞ்சுகள்.  விளையாட்டாய் எதை எதையோ வீணை போல் செய்து  அவைகளை மீட்டி பார்த்து ஏமாறுகிறார்கள். அவர்களின் அம்மா ’கெடக்கறதுலாம் கெடக்கட்டும் மொதல்ல  கெழவன தூக்கி மணையில வைன்னு சொல்றமாதிரி இருக்குதுடா உங்கக்கதை என்று திட்டுகிறாள். அவர்களின் தந்தையோ ‘ செருப்பு பிஞ்சிடும்’  என்று விரட்டுகிறார்.’ பிள்ளை வளர்த்த லட்சணம் இதுவா’ எனத்தாயைப்பேசுகிறார் அப்பா.

ஒரு உறவுக்காரத்திருமணத்துக்குப்போன அம்மா வீணை போன்ற ஒரு கருவியை வாங்கி வந்தாள். அது வீணை இல்லை. வீணை போன்ற ஒன்றை வைத்து இந்தச்சிறுவர்கள் மல்லுக்கட்டிப்பார்க்கிறார்கள். இந்த ஒன்றை வாங்கிய  அந்தத்தாய் கணவனிடம் திட்டு வாங்குகிறாள்.

தாய் ஒரு சாவு என்று சொல்லி  அண்டையூர் செல்கிறாள். அந்த நேரம் பார்த்து அவர்களின் அத்தை வருகிறாள். அவளுக்குப்பசி. அவள் கணவனில்லாதவள். குடிகாரக்கணவன் குடித்தே இறந்துபோனான்.   உள்ளூரில் பன்னிரெண்டு நாள்  தொடர்ந்து கூத்துப்பார்க்கப்போன அத்தை  கூத்தாடி ஒருவனோடு ஓடிப்போகிறாள். அங்கேயும் மூத்த மனைவி அத்தையைத்துறத்த   அத்தை ஊருக்கே திரும்பி வருகிறாள். சிறுவர்களின் அப்பாதான் தன் சகோதரிக்கு ஒரு கூரைவீட்டை கிராமத்தில்   அதுவும் கோவில் மண்ணில் கட்டிக்கொடுத்துப்  பார்த்துக்கொண்டு இருக்கிறார். அத்தை வீட்டில் சோறு இல்லை.  உடம்பு முடியாதவள் ஆகிப்போனாள் அந்த அத்தை. தான் சேர்த்துவைத்த  சிறுவாட்டுச் சில்லறைக்காசில்  அவித்த கிழங்கு வாங்கி வந்து அத்தைக்குத்தருகிறான் சின்னவன்.கிழங்கத்தின்ற அத்தை ’போன உசிரை புடிச்சி நிறுத்திட்டடா மருமவனே’ என்று மகிழ்கிறாள்.

அந்த வீணைக்கருவி போன்ற ஒன்றை  அவர்கள் கையிலிருந்து வாங்கிய அத்தை  வாசிக்க ஆரம்பித்தாள். தம்பியைப்பாடச்சொன்னாள். அவன் பாடினான். அத்தை அதனை வீணையில் வாசித்துக்காட்டினாள். இசையைக்கேட்டனர் சகோதரர்கள். ’கங்கைகரைத்தோட்டம்’ பாடல்தான். படைப்பாளி பாவண்ணன் சிறுவர்கள் சொல்வதாய்ச் சொல்கிறார்,’  எங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை. எங்கள் உடல் புல்லரித்தது. நானும் தம்பியும் கைகளைத்தட்டியபடி எகிறி எகிறிக்குதித்தோம்’

தம்பி அத்தையைக்கேட்கிறான் இதை எல்லாம் எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று. அத்தை சொல்கிறாள்’ அந்தக் கூத்தாடி கமுனாட்டியோட சுத்துனதுல இத கத்துக்கனதுதான் மிச்சம்’ என்று.

குழந்தைகள் இருவர் கைகளையும் ஒரு சேரப்பற்றி தன் நெஞ்சோடு ஒரு கணம் அழுத்திக்கொண்ட அத்தை’வரட்டுமா’ என்று படலைத்திறந்துகொண்டு வெளியே போகிறார். அத்தை  வாசகன்  கண்களில் நீர் நிறைக்கக்காரணியாகிறாள். நம் சொந்த பந்தத்தில் நட்புகளில் எத்தனை  அத்தைமார்கள் குடியால் வாழ்விழந்து கைம்பெண்களாகி வாழ்வைத்தொலைத்துவிட்டு சகோதரர்களோடு வாழ்ந்து மறைகின்றனர் என்பது நம் நெஞ்சைச்சுடுகிறது.  அந்தச்சகோதரர்களின்  உள்ளக்குமுறல்களை  யார் அறிவார்.  அவை மெய்யாகவே தாரத்தோடு பகிரமுடியாத  துயரசங்கிலிகள்.

 சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் அதை காசாக்கிப்பார்ப்பவர்களுக்கும்  மன்னிப்பு என்றுமே  கிடையாதுதான். இந்த ப்படைப்பில் அத்தை எனும் ஒரு சகோதரியை உயிர்ப்போடு உலவவிட்ட பாவண்ணன் வாசகர்களின் வணக்கத்திற்குறியவராகிறார். நிறைவாய்ப் பாராட்டுவோம்.

வள்ளல் என்னும் பெயரில் ஒருகதை.  வள்ளல் என்பது பாரிவள்ளலையோ வடலூர் ராமலிங்க வள்ளலையோ குறிக்காது. அது  எம் ஜி ஆர் ஐ மட்டுமே குறிக்கும். எம்ஜிஆரை கண்ணால் பார்த்துவிடவேண்டும் என்பதற்காக  கட்டை வண்டி கட்டிக்கொண்டு வந்து விடியவிடிய  ஆற்று மணலில் விழித்துக்கொண்டு படுத்துக்கிடந்தவர்கள் ஏராளமுண்டு.  எம் ஜி ஆர் குடித்த சோடா பாக்கியை அண்டா தண்ணீரில் கொட்டி ஆளுக்கொரு வாய் குடித்துவிட்டுப்போனவர்கள் ஆயிரம் ஆயிரம்  உண்டு.  என் கிராமத்தில் எம் ஜி ஆர்  பேர் சொன்னால் அழுதபிள்ளை வாய் மூடும் என்பார்கள். இந்த வள்ளல் கதையில் தங்கமணியும் பன்னீரும் அப்படித்தான். படப்பிடிப்புக்கு வரும் எம் ஜிஆரைப்பார்க்கத்தவம் கிடக்கின்றனர். வேலமரத்தடியில் பலகாரக்கூடை வைத்து விற்கும் மீனாட்சி ஆயா நடிகர் பாலையாவைப்பார்த்தவள். அவள் பாலையாவைப்பார்த்ததாகக்  கதைவிடுவதாகச்சொல்லி  பையன்கள் நம்ப மறுக்கின்றனர். ‘ அந்த காலத்துல நடராஜ மொதலியாரு கொட்டாய கட்டி இந்த ஊருக்கு சினிமாவ கொண்டாந்த  நாள்லியே சினிமா பாத்தவ நானு தெரிமா?’ என்று சவால் விடுகிறாள் அந்த மீனாட்சி ஆயா. ரயில்வேகேட்டின் சங்கிலியை எடுத்து படப்பிடிக்கு வந்த கார்களை வழிகாட்டி அனுப்பிய அந்த ஆயாவுக்கு பாலையா அன்று ரூபாய் நூறு அளித்திருக்கிறார்.

‘எம்ஜியாரு பெரிய கொடைவள்ளல் ஆயா. ஏழைங்களுக்கெல்லாம் வாரி வாரி குடுக்கறதுல மன்னன். அவரமாரி அள்ளிக்குடுக்கற ஆளு இந்த ஒலகத்துலயே இல்ல’ என்கிறான் தங்கமணி.

சிறுநீர்கழிப்பதற்காகச்சென்ற தங்கமணி மட்டும்  திரும்பி வருகிறான்.  அப்போது மூன்று கார்கள் வரிசையாக  வந்தன. ரயில்வே கேட் சங்கிலி போட்டு மூடிருந்தது. தங்கமணி இணைப்புச்சங்கிலியை எடுத்து கார்களுக்கு வழி ஏற்படுத்துகிறான். ஒரு காரின் பின் இருக்கையில் எம் ஜி ஆர் அமர்ந்திருக்கிறார். தினம் தினமும் தன் வீட்டுக்காலண்டரில் அவன் பார்க்கும் செக்கச்செவேலெனத் தாமரை இதழ் போன்ற முகம். எம் ஜி ஆர் மன்றத்தின் வாசலைப்பெருக்கி குளத்திலிருந்து பத்து பதினைந்து குடங்கள் தண்ணீர் எடுத்துச்சென்று தெளித்துச்சுத்தமாக  இடத்தைச் வைத்திருந்ததற்காகத் தங்கமணிக்கு எம் ஜி ஆர் படம் போட்ட  காலண்டர் ஊரார் வழங்கியிருந்தார்கள்.  அவன் பெயரையும் படிக்கும் வகுப்பையும் கேட்ட எம்ஜிஆர் தங்கமணிக்கு ஒரு பையை  இந்தா எனக் கொடுத்தார். பை நிறைய ஆப்பிள் பழங்கள்.  ஆப்பிள் பழங்களை அங்கிருந்த  எல்லோரும் பங்கிட்டுக்கொண்டார்கள்.

‘ நீ  ஆப்பிள் பையை வாங்கிக்கின. நாங்களும் பார்த்திருந்தா எங்களுக்கும் எதனாச்சிம் குடுத்திருப்பாரு, இல்ல’  சொல்லிய ரங்கசாமியின் முகத்தில் ஏக்கம் தெரிந்தது என்கிறார் பாவண்ணன். அன்றைய சமூகத்தை  அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் பாவண்ணன்.

ஒரு கூத்துக்கலைஞனின் கதை ‘கலைமாமணி’. தமுக்கு அடிப்பவன்  எழுப்பும் ஒலி அவன்  சொல்லும் அறிவிப்பு என்பதோடு தொடங்குகிறது கதை. திரெளபதி அம்மன் கோவில் திடலில் இரவு பத்துமணிக்கு கூத்து.

’அக்கம் பக்கத்து பதினெட்டு பாளையத்திலும் பேர் பெற்ற அமுத சிகாமணி, கூத்துச்சக்கரவர்த்தி சிருவந்தாடு ராமலிங்க வாத்தியாருடைய குழு அபிமன்யு வதம் என்கிற கூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்காங்க. தெரு ஜனங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்து கண்டு களிக்கணும்’ தமுக்குத்தாத்தா அறிவிக்கிறார். இந்த ஆரிவிப்பை  சகோதரர்கள் சிறுவர்கள் கேட்டு மகிழ்ந்துபோகிறார்கள். கூத்துக் கலைஞர் ராமலிங்கத்திற்கு எதாவது ஒரு பெரிய கெளரவம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார் பலராமன்.  அந்தச் சிறுவர்களின் தந்தை.  அந்தக்கூத்துக்கலைஞர் சிறுந்தாடு ராமலிங்கத்துக்கு  தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைக்கவேண்டும் என ஆசைப்படுகிறார் பலராமன்.  அவர் குறித்துக்கட்டுரை எழுதுகிறார். பத்திரிகைக்காரர்களை அழைத்துப் பேட்டி கொடுக்கிறார். என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். சட்டமன்ற உறுப்பினரை எல்லாம் பார்த்து வேண்டுகிறார்.  பலராமனின் மனவி செல்விக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. மிக யதார்த்தமாக அவர்  கணவருக்குப்பதில் சொல்கிறாள்.

‘ இங்க பாருங்க.கோழி முட்டைங்கள அவையத்துக்கு வைக்கிறமாதிரிதான் இந்த விருதுக்கு ஆள எடுக்கிற விவகாரம். ஒன்னு ரெண்டுதான் குஞ்சு பொரிக்கும். மத்ததுலாம் கூழைமுட்டைதான். மொதல்ல அதெ புரிஞ்சிக்குங்க’

ஈசன் பரமசிவன் கூட  கைலாயத்தில் அந்த பராசக்தியிடம் பாட்டு வாங்குபவன்தான்.  கதையில் வரும் பலராமன் ஒன்றும் அதிசயமில்லை. பாவண்ணனின்  ஊடுருவும் பார்வையின் வெளிப்பாடுதானே இவை அத்தனையும்.  ஆண்டுகள் உருண்டன. கலைமாமணி விருது சிறுவந்தாடு கலைஞனுக்கு வரவில்லை.

 அவரே சொல்கிறார்.’’இங்க பாரு பலராமா ஒரு கூத்தாடிக்கு அவனுடைய ஆட்டத்த பாத்து ரசிச்சி கைதட்டி பேசக்கூடிய ரசிகர்களுடைய பாராட்டுதான் ரொம்ப பெரிய விருது. அரசாங்க விருதுலாம்  ஒரு கணக்கே இல்ல’

பிறகு அந்த சிறுவந்தாடு ராமலிங்கருக்கு கலைமாமணி என அறிவிப்பு வருகிறது.  பலராமன் நெகிழ்ந்து போகிறார். மறுநாள் அவர் சென்னையில் இருக்கவேண்டும் என்கிறார்கள்.  அவரோ கூத்து நடத்தறேன்னு கை நீட்டி பணம்வாங்கிட்டேன். அது முடிக்காம நா எங்கயும் போமாட்டேன். இது கலை இது தான்  எனக்குப்பெரியது என சென்னைப்போக மறுக்கிறார். ‘ என் சார்பாக நீயே  சென்னை சென்று விருதை வாங்கி வரலாம்’ என்கிறார் ராமலிங்கர். பலராமன் அதனை ஏற்காது நகர்ந்துவிடுகிறார்.

மெச்சத்தக்க  விஷயம்  உண்டெனில்  அது ஒரு கலைஞன் கலையை,  அதனை வளர்க்கும்  மக்களை நேசிப்பதே. இந்தக்கதை வாசகனுக்குச்  சொல்லும் செய்தியும் அதுவே.

’ பங்கு’ என்ற தலைப்பில் ஒரு கதை. ‘ அப்பா அம்மா அண்னனுங்க எல்லாரையுமே  அவ கால்தூசுக்கு சமம்னு நெனச்சி உதறிட்டு போனா. மாப்பிள்ளைய தானா தேடிகிட்டு வீட்டவிட்டு வீராப்பா போனவ பின்னால இப்ப நாம தேடிகிட்டு போவறம். கலிகாலம்டா சாமி’ என்கிறார் கதையில் வரும் ரேவதி. தனலட்சுமியிடம்  அதாவது காதல் மணம் செய்துகொண்ட சகோதரியிடம் தந்தை  பெயரிலிருக்கும் சொத்தை விற்க கையெழுத்துக்கேட்கச்செல்கிறார்கள். எல்லோரும்  அந்தக்குடும்பத்து உறுப்பினர்கள். தந்தை இறந்த செய்தியை ஒரு பேருந்துக்குபின்னர் ஒட்டியிருந்த அஞ்சலி போஸ்டரைப்பார்த்து அறிந்துக் கதறியவள் தனலட்சுமி. அவளைத்தான் ஒதுக்கி வைத்துவிட்டார்களே. அப்பா பெயரை இரண்டாகப்பிரித்து  தன் இரண்டு குழந்தைகளுக்கும் வைத்திருக்கும் பெண்ணைக் கொடுரமாய்ப்பார்க்கிறது அவள்  பிறந்த குடும்பம். தனலட்சுமியின் கணவன்’அவள் வருவாள் எங்கு கையெழுத்துப்போட வேண்டுமோ அங்கே போடுவாள்: காசு  எதனையும்’ எதிர்பார்ப்பவள்: அவள் இல்லை’ என்கிறார்.

‘பங்குக்கு வந்து நிக்குமோன்னு  நெனச்சி தடுமாறாதிங்க’ என்கிறார் செல்வகுமார்  தனலட்சுமியின் கணவன்

சமூகத்தில் யதார்த்தமாய் நிகழும் சம்பவம். அதனை அழகிய கதையாய் உருவாக்கி அளிக்கிறார் பாவண்ணன்.

புற்று என்னும் பெயரில் ஒரு சிறுகதை.

கணவனை புற்று நோயில் இழந்த அஞ்சலை ஒரு கனவு காண்கிறாள். கனவில் அவளின் மீன் பானை உடைகிறது. மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன. அஞ்சலை அவைகளை பிடித்து பிடித்து அருகில் இருந்த கால்வாயில் வீசினாள்.  அது ஒரு கெட்ட கனவென அச்சப்படுகிறாள். அவள் தன் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கவேண்டுமே என புலம்புகிறாள். ‘வர ஆடி மாசம்  மொத வெள்ளியில கூழு ஊத்தி ஒரு படையலை வச்சிடு’ என்று பார்வதி யோசனை சொல்கிறாள். மாரியாத்தாள்தான் காக்கவேண்டும் தன் குழந்தைகளை என்று அஞ்சலை பிரார்த்திக்கிறாள்.

அஞ்சலை தன் கணவன் முத்துசாமியை  இழந்த கதையை ஃப்ளாஷ் பேக் யுத்தியில் சொல்கிறார் பாவண்ணன். அஞ்சலையின் அண்ணன் பொன்னையன்  சகோதரிக்குப் பண ஒத்தாசை செய்கிறான் விழுப்புரத்தில் ஒரு பாயிடம் நல்ல வேலைக்குசேர்த்துவிடுகிறான். நூர்றுக்கணக்கில் துணிகளை தைத்து பாயிடம் கொடுத்துக் கூலி வாங்கி குடும்பம் நடக்கிறது. வயிற்று வலி என்று ஆரம்பித்து படுத்த முத்துசாமியை ஜிப்மர் மருத்துவமனைக்குப்போகச்சொல்லி ஆற்றுப்படுத்துகிறான் பொன்னையன். அஞ்சலையின் ஒரு பிள்ளையை தன் பிசினஸ் ஒத்தாசைக்கு அழைத்துச்செல்கிறான் பொன்னையன். முத்துசாமி புற்று நோயால் இறந்துபோகிறான். பொன்னையனின் மனைவி சும்மா இல்லை அவனைத் தூண்டிவிடுகிறாள். அஞ்சலைக்குச்சொந்தமான துண்டு நிலத்தையும் எழுதி வாங்கிக்கொள்கிறான் அண்ணன் பொன்னையன். அஞ்சலை மற்ற இரண்டு குழந்தைகளைப்படிக்கவைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறாள். நேசமணி தன் மாமன் வீட்டில் மாடாய் உழைத்துத் தம்பிகளைப்படிக்கவைக்க அம்மாவுக்கு  ஒத்தாசை செய்கிறான்.

எளியகுடும்பத்தில் வாக்குப்பட்டு வந்த  ஒரு பெண் கணவனை இழந்து ஒரு தையல் வேலையை ஒப்புக்கொண்டு தன் இரு குழந்தைகளைப்படிக்கவைப்பதில் காட்டும் அக்கறையும் ஒரு பையனை தன் அண்ணன் வீட்டு பிசினஸ் ஒத்தாசைக்கு  மனமே இல்லாமல் அனுப்பி வைத்துவிட்டு அவனுக்காக  ஏங்கித்தவிப்பதும்  என்பதை  தத்ரூபமாக கொண்டுவந்து நிறுத்துகிறார் பாவண்ணன்.

சிவப்புக்கல் மோதிரம் என்னும் கதை இரு அன்பு உள்ளங்கள் உடைந்துபோன சோகம் பேசுகிறது.  பெண்ணின் பையனின் பெற்றோர் ஒரு கட்சியில் இருக்கிறார்கள். திருமணம் நிச்சயமாகிறது. கட்சி உடந்துபோகிறது. இருவரும் பகைத்து நிற்கின்றனர். திருமணம் நின்று போகிறது. அவன் அளித்த சிவப்புக்கல் மோதிரம் அவள் கையில். அவன் பிறகு மணமே செய்துகொள்ளவில்லை. அவளோ வேறு ஒருவனை மணந்து வாழ்க்கையை நிறைவில்லாமல் வாழ்ந்து பின்  சட்டென முடிந்துபோகிறாள்.  மனித அன்பையும்  மன ஆழத்தையும் தரிசிக்கத்தெரியாத கட்சிப்பிரியங்களை என்ன சொல்வது நாம்?

‘மானம் கெட்ட ஒரு கட்சிக்காக நம்ம வாழ்க்கையை நாம ஏன் அழிச்சிக்கணும்?’   எண்ணிய மண வாழ்வு கொள்ளை போனதால் ஒருபெண்ணின் குமுறல் இப்படிப் பீறிட்டுவருகிறது. கட்சியின் விலாசம் எது?  நாம் தெரிந்ததுதான். பாவண்ணன் இத்தனைக்கோபமாய் எழுதி நான் பார்த்ததில்லை.

‘கட்சி, கூட்டம் கடலைப்புண்ணாக்கு’  பாருங்கள்!   எப்படி எல்லாம் அறச்சீற்றம்  கொப்பளிக்கிறது.

’குழந்தை’ என்னும் கதை  தாயும் தந்தையும் பெற்றகுழந்தைகளிடம் காட்டவேண்டிய  பரிவையும் பொறுப்பையும் பேசுகிறது.  பெண்ணுக்குப்பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஓடிப்போனவன் பொறுப்பில்லாக்கணவன், தாயோ பெற்ற  குழந்தையை கோவில் வாசலில் வைத்துவிட்டுப்போய்விடுகிறாள் அவளுக்கும் ஒரு வாழ்க்கை எப்படியாவது  வேண்டும்தான். அது நியாயமும்கூட.

  கடைசியாய் வெள்ளைக்காரன் என்னும் கதை.  கடலூர் துரைபங்களாவில் வேலைபார்த்த அம்மாவுக்கு வெள்ளைக்காரன் நிறத்தில் ஒரு குழந்தை.  அது பிறந்த கதை கம்ப சூத்திரமா என்ன ? நீங்கள் நினைப்பது மாதிரிதான் அது கிடைத்தது.  துரைமார்கள் சொந்த  நாட்டுக்குப்போனார்கள். ஓரங்கட்டப்பட்ட அம்மாவும் இந்த வெள்ளைக்காரப்பையனும் வீதிக்கு வருகிறார்கள். கூலி வேலை பார்க்கிறார்கள் அம்மா பாம்பு கடித்து  செத்துப்போனாள். அவன் ஒரு பெரிய மனிதரிடம் வண்டி ஓட்டுகிறான். அவனுக்குப்பெயரே வெள்ளைக்காரன். அவன் முதலாளி குடிகாரன் அவனிடம்  குப்பை கொட்டமுடியாத  அந்த வெள்ளைக்காரன் ஜபல்பூர் ரயில் ஏறி வட இந்தியக்காரர் ஒருவரைத் தஞ்சம் அடைந்து வாழ்க்கையைத்தொடர்கிறான். விதிவழி செல்லும் மனித வாழ்க்கையைக்காட்டுகிறார் பாவண்ணன். அதே நேரத்தில் மனித நேயத்திலும் உடல் உழைப்பிலும் மாற்றுக்குறைவதைப் பாவண்ணன் தன் எழுத்துக்களில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.

பாவண்ணனின் எழுத்துக்களில் நேர்மையும் கம்பீரமும் விரவியிருப்பதை ’நயனக்கொள்ளை’யில் மீண்டும்  வாசகன் தரிசிக்கலாம்.  இனிய வாழ்த்துக்கள் நட்பே.

------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தஞ்சை ப்ரகாஷின் கட்டுரைகள்

 

 

 

’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’

இப்புத்தகம் பற்றி ஆய்வுகள் சில.                                                                 

நந்தி பதிப்பகம்  தஞ்சாவூர்   இந்நூலை  வெளியிட்டிருக்கிறது. (2020)  தொகுப்பாசிரியர் ப்ரகாஷின் துணைவியார் மங்கையர்க்கரசி ப்ரகாஷ்.  மறைந்த  மூத்த  எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ப்ரகாஷைப்பற்றி எழுதிய கட்டுரையைத் துவக்கமாகவைத்து  இக்கட்டுரை நூல் தொடங்குகின்றது.. இதுவரை வெளிவராத கட்டுரைகள் இதனுள்ளே இருப்பதை புத்தகத்தின் அட்டை நமக்குச்சொல்கிறது.

 ’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்‌ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.

அதம்பை வை. இராமமூர்த்தி தனது முன்னுரையில்’ பல மொழிகளை ஒருவரே கற்று அந்த மொழிகளிலுள்ள படைப்புகள் பலவற்றை வாசித்து,அதனை நேரடியாகவே மொழிபெயர்த்த சாதனையைப் படைத்திருப்பவர் தஞ்சை ப்ரகாஷ் என்பதை அறியும் போது அவரின் மொழியறிவை வியக்காமல் இருக்கமுடியவில்லை என்று குறிப்பிடுகிறார்.

பதிப்புரையை மனநிறைவுடன் வழங்கியுள்ள நந்தி  ஆ. செல்லதுரை’ கலைடாஸ்கோப்பிற்குள் மலரும் கண்ணாடித்துண்டுகளைப்போல பரவசமூட்டக்கூடியது ப்ரகாஷின் ரசனை உலகம்’ என்று வரையறை தருகிறார்.

முதல் கட்டுரை ‘ருக்வேதக்காதல்’ புராதன வேத காலத்துக் காதலைப்பற்றிப்பேசுகிறது. மகாகவி காளிதாஸ் எழுதிய புகழ்பெற்ற நாடகம் ‘விக்கிரமோர்வசீயம்’ ருக் வேதத்தை ஆதாரமாகக்கொண்டது என்கிறார் ப்ரகாஷ்.

  புரூரவஸ்,  தேவ மாது  ஊர்வசியிடம் காதலுக்கு தொடர்ந்து மன்றாடுகிறான். ஊர்வசி ‘வேண்டாம் போய்விடு’ என்கிறாள்.  புரூவரஸ் ‘பாறையில் மோதுவேன். இறப்பேன். என் உடல் ஓநாய்கள் தின்னட்டும்’ என்று பேசுகிறான்.  ஊர்வசியோ  ‘ ‘காதல் தோல்விக்கு மரணம் பரிகாரமாகாது. அது மூடத்தனம். யாசித்துப்பெறுவதல்ல காதல்’ என்று அறிவுறுத்துகிறாள்.

ருக்வேதத்தில் வரும் எமன் எமி காதல் பற்றியும் செய்தி தொடர்கிறது. உஷஸ்ஸின் காதல், அஸ்வினி தேவர்கள் மீது  எழும் ஒரு பெண்ணின் காதல் என ருக் வேதம்  காதல் விஷயங்களை விட்டுவைக்கவில்லை. விட்டுவைக்க முடியாதுதான் என்கிறார் ப்ரகாஷ்.

க.நா.சு என்னும் தலைப்பிட்ட கட்டுரை க.நா.சு வை உச்சிமேல் வைத்துப்போற்றுகிறது. அனேகமாக க.நா.சு வோடு முரண்படுவதே எழுத்தாளர்களின் வழமையாயிருக்க ப்ரகாஷ் க.நா.சுவின் விமர்சன நேர்மையை பாராட்டி எழுதுகிறார்.   க.நா.சு பற்றி,

’ ஓர் இலக்கிய விமர்சகர் என்ற நிலையில், தமிழில் தரமான விமர்சனம் யாருக்கும் அஞ்சாது, கோல் சாயாமல், தனக்குப்பிடித்தக்  கருத்துக்களைச்சொன்ன, தெளிவான எழுத்தாளர் க.நா.சு மட்டும்தான். அவரது பட்டியலில் இடம்பெற ஆவல் கொண்ட எழுத்தாளர்கள் அணி அணியாய் இருந்தார்களே அது ஏன்?’ என்று கேள்வி கேட்கிறார் ப்ரகாஷ். க.நா.சுவின் அபிப்ராயம் ஒன்று எழுத்தாளர்களுக்கு ஏன் அவசியமாகிறது என்று சிந்திக்க வைக்கிறார் க.நா.சு.

வண்ணநிலவன் பிரபஞ்சன் வண்ணதாசன் பூமணி ஆ.மாதவன் நீல.பத்மநாபன் கி.ராஜநாராயணன் ஜி.நாகராஜன் நாஞ்சில்நாடன் என்று க. நா.சு பாராட்டிய எழுத்தாளர்களைப் பட்டியலிடுகிறார் ப்ரகாஷ்.

க.நா.சுவின் தர நிர்ணயத்தராசு தாழும் உயரும் உண்மைதான்! தர நிர்ணயம் செய்வதில் இந்த அறுபது ஆண்டுகளாய் வேறு யாராவது தமிழ் நவீன இலக்கியத்தில் அவரைப்போல துணிச்சலுடன் தனது கருத்தையே அழுந்தச்சொல்லி பட்டியலை உறுதி செய்தவர்  யார் இருக்கிறார்கள் என்று க.நா.சுவைத் தலைமேல்வைத்துக்கொண்டாடுகிறார் ப்ரகாஷ்.

தி.ஜானகிராமனைப்பற்றிய கட்டுரையில் ப்ரகாஷ் எவ்வளவு ஆத்மார்த்த உறவாய் ஜானகிராமனோடு இருந்திருக்கிறார் என்பதை அனுபவிக்க முடிகிறது. ‘ மழை வலுத்து வந்தபோது ஜானகிராமனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நனைந்தபடியே பாபநாசம் வழியே கீழ்விடையலுக்கு மிதித்தேன்.சாலையில் தண்ணீர் ஆறாக ஓடி குறுக்குப் பாய்ச்சியது.மதாரம் ஐயர்கள் வெற்றுடம்போடு போனார்கள். வழி இருட்டு மிதிப்பது சற்று சிரமமாய் இருந்தது. கர்ப்பகாம்பிகா கோவிலில் ப்ரசாதம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம்’ படிக்கப்படிக்க வாசகன் பரவசமடையும்  எழுத்துத் தோரணை காட்சியாகிறது.

’ஜானகிராமனை விட்டுவிட்டுத்திரும்பும்போது மீண்டும் பேய்மழை! இரவோடு இரவாக சாலியமங்கலம் வந்தேன். மேலே செல்வது சுலபமாய் இல்லை. ஊளை காற்றும் குளிரும்’ - தஞ்சை  ப்ரகாஷின் அனுபவக்குறிப்பு இது.

‘ஜானகிராமனின் எழுத்து சத்யமான எழுத்து அதன் யதார்த்தத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் அது  தெரியும் அவருக்கு அழகு என்பது பூஜைக்குறிய விஷயம்.  நமக்கு  ஆங்கிலக்கவி   கீட்சின்   கவிதை  அழகும் உண்மையும் உண்மையும் அழகும்   நினைவுக்கு வரலாம்.

‘Beauty is truth,truth beauty’ – that is all Ye know on earth, and all ye need to know’. Keats

 ஜானகிராமனைப் பூஜித்த பெண்கள் பலரை நான் அறிவேன்’  வாக்குமூலம் தருகிறார் ப்ரகாஷ்.

தஞ்சாவூர் இன்றும் ஜானகிராமனின் பெயர் சொல்கிறது. என்றும் சொல்லும் என்பதில் அய்யமில்லை.

என் நண்பர் கே.சி .எஸ்  என்னும் கட்டுரைக்கு வருவோம். தாமரையின் ஆசிரியராய் விளங்கிய கேசிஎஸ் அருணாசலம்’ கவிதை என் கைவாள்’ படைத்தவர். அவர் ஒரு சமயம் ப்ரகாஷுக்கு எழுதிய கடிதம் வாய்மையை இப்படிப் பறைசாற்றி நிற்கிறது.

‘இடரிலும் துன்பத்திலும் பழமையிலும் நம்மை அழுத்தி,  முடிவை நோக்கி நம்மை இழுத்துச்செல்லும் சாரமற்ற வாழ்க்கையை விட்டு நம்மை நாமே பிரித்து தூர எறிய வேண்டும். சாவு நம் இழப்பாகக்கூடாது.சாவின் முடிவு மனிதனின் முடிவல்ல. அழுத்திக்கொல்கிற சாரமற்ற வாழ்வை மாற்ற வேண்டும்.சாரமற்ற வாழ்வின் சாரத்தை எழுத்தின் மூலம் உறிஞ்சி எடுக்க வேண்டும்.நாம் புதிய வானம் புதிய பூமியை உண்டாக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் புதுப்பொருள் காட்டவேண்டும். இப்படிப்பட்ட  நம் எழுத்துதான் நம்மை ஒன்றாக்கி மேலெழும்பும் ப்ரகாஷ்’

கடிதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. கேசிஎஸ் உடன் ப்ரகாஷின் உறவு ஆத்மார்த்தமானது. அதி உயர்வானது.

ஜீவாவைப்பற்றிப் ப்ரகாஷ் இந்தக்கட்டுரையில்  குறிப்பிடத்தவறவில்லை. தாமரையின் அலுவலகம் சென்ற புழங்கிய  மேதை அல்லவா ப்ரகாஷும்                                      .’ பேசுகின்ற கலை ஜீவாவுக்கு அபாரம். கருணை வழியும் அவரது கண்கள். பிசிறாகச்சிதரும் அவரது பிளிரல் மேடைகளில் அந்தக்காலங்களில் கண்டு கேட்டவர்கள் பாக்யசாலிகள்’

ப்ரகாஷின் எழுத்துச் சித்திரங்கள் தாமரை அலுவலகத்தில் குவிந்து கிடக்கிறது. அத்தனையும் பயன்படுத்திக்கொள்ள இயலாமற்போகிறது. அவைகளைப்   ப்ரகாஷின் வீடு சென்று தருகிறார் கேசிஎஸ். ’ என்னையும் ஒரு பொருட்டாகக்கருதி என் குப்பை எழுத்தைச் சுற்றி எடுத்துக்கொண்டு என்னைத்தேடி இரவோடு இரவாகச்சந்தித்த கேசிஎஸ்   அருனாசலத்தின் மனிதாபிமான எளிமை,நேயம் அன்பு ஊக்குவிக்கும் உற்சாக மனித ஸ்வபாவம் என்னால் மறக்கவியலாது.  இவ்விரு  மனிதர்களின் மாசிலாத்தோழமையை  வாசகர்கள் இவண்   ஆழமாய்க் காண்கிறோம்.

’தேநுகாவின் சொற்சிற்பம் வித்யாசங்கர் ஸ்தபதியின்சிற்பமொழி’ என்னும் கட்டுரையை ப்ரகாஷ் மிக சிரத்தையோடு வாசகர்களுக்குத் தருகிறார். தலைப்பே நம்மை சிந்திக்கவைக்கிறது. கலைகள் எப்படி ஒன்றோடு ஒன்று பந்தமுடையவை என்பதனை தெளிவாக எடுத்துவைக்கிறார். ஓவிய விமர்சகர் தேநுகாவை நமக்கு அணுஅணுவாய்க்காட்டுகிறார் ப்ரகாஷ். தமிழ் நிலத்தில் கலைகளிடை உறவு பேணுவதை தூக்கிப்பிடிக்கும் யுக்தியின் தொடக்கமே தேநுகாவிலிருந்து ஆரம்பிக்கிறது என்கிறார் ப்ரகாஷ்.

வித்யாசங்கர் ஸ்தபதி கும்பகோணம் ஓவியக்கலைக்கல்லூரியில்  சிற்பக்கலைப்பேராசிரியராகப்பணியாற்றியவர். நூற்றுக்கணக்கான சிற்பிகளை உருவாக்கிய பேராசான்.

தேநுகா பற்றி ப்ரகாஷ் சொல்லும்போது,’இதோ தமிழுக்கு ஒரு தகவு. ஓவியர்-சிற்பி-இலக்கியவாதி-சங்கீதஞானி என்ற பதங்களை ஒன்றிணைத்து (Inter Disciplinary Fusion) என்ற அற்புதமான ஒரு  தற்கலப்புப்பரிமாண ரஸவாதம் மூலம் தமிழில் முதல் முறையாகவும் ஒரே வெற்றியாகவும் தேநுகாதான் தமது கலைக்கட்டுரைகளின் மூலம் இதை அனுபவமாக்கி வருகிறார்’ என்று எழுதுகிறார்.

’இந்தியாவிற்கென்று இனி வரப்போகும் புது மரபை புது எழிலை, புது தரிசனத்தை ஒரு கோடி காட்டும் வேலையை நான் வித்யாஷங்கர்  ஸ்தபதியிடம் காண்கிறேன்’ என்று மகிழ்ந்துபோகிகிறார் ப்ரகாஷ்.

ஒரு கலையோடு பிறகலைகள் இணைவதை இசைவதை  எவ்வளவு தூரம் உள் வாங்கி செயல்பட்டிருக்கிறோம் என்பதை ஆய்வுக்குட்படுத்தவேண்டிய ஒரு தேவை எழுகிறது என்கிறார் ப்ரகாஷ்.

 ’எம்.வி. வெங்கட்ராம் எனும் நண்பருடன் க.நா.சு’ என்னும் ப்ரகாஷின் கட்டுரை இரண்டு ஜாம்பவான்களைச் சரியாக எடை போடுகிறது.

’எம்.வி.வியின் வீட்டுத்திண்ணையில் பல பெரிய மனுஷ்யர்களையும் இலக்கிய சாம்ராட்டுகளையும் சந்தித்த போதுகள் ஆச்சர்யமாய் நினைவுக்கு வருகின்றன….. வீடு முழுவதும் வறுமை சூழ்ந்திருக்க பத்து குழந்தைகளுடனும் மனைவியுடனும் இலக்கிய நண்பர்களுடனும் சமமாக தீக்‌ஷண்யத்தோடு அமைதியாகவாழ்வது லேசானகாரியமல்ல. இன்று எவனாலும் இந்த சாதனை முடியாது.’

க.நா.சுவின் நெஞ்சுரம், இலக்கியத்திண்மை யாராலும் தொட முடியாத அருமை கொண்டது.

எம் வி வி, சென்னையிலும் தஞ்சையிலும் குடந்தையிலும் ,  க.நா.சு வைச்சந்திக்கும் நேரங்களையெல்லாம்  தாம் பெற்ற பேறாகக்கருதியவர்.

இப்படி எழுதிச்செல்லும் ப்ரகாஷ்  தி.ஜானகிராமனை சந்திக்கச்செல்லும்போதெல்லாம்  க. நா. சு   எம் .வி.வி  இந்த  இருவரோடும்  அனேக முறை  மகிழ்ச்சியோடு சென்றதைக்குறிப்பிடுகிறார்.

எண்பது வயதிலும் க.நா.சு பற்றிப்பேசினால் எம் வி  வி யின் கண்கள் பளிச்சிடும் என்று எழுதிச்செல்கிறார் ப்ரகாஷ்.

’எம்.வி வெங்ட்ராம் நேர்காணல்’ என்பது ஓர் கட்டுரை. நேர்காணல் காதுகளுக்கு  அவர் சாஹித்ய அகாதெமி பரிசு பெற்றபின்னர்  எடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரகாஷின் கேள்விகளும் பளிச்சென்று இருக்கின்றன வெங்கட்ராமின் விடைகளும் கச்சிதமாய் இருக்கின்றன. ஜஸ்டிஸ் மஹாதேவன் 25 ஆண்டுகளுக்கு முன்னரே அரும்பு நாவலுக்காக வெங்கடராம் பெயர்  சாகித்ய அகாதெமியால் தேர்வு செய்யப்பட்டதாக அவருக்குச்செய்தி அனுப்பியுள்ளார்.  வெங்கட்ராமே இதனைச்சொல்கிறார். இது சாத்தியமாகுமா என்பது  தெரியவில்லை. அவர் ஜஸ்டிஸ் வேறு. நம்பகமான மனிதர்.  வெங்கட்ராம்  தாமே சான்று தருகிறார்.. ஆனால் அது நடக்கவில்லை. வேறு யாருக்கோ  சாகித்ய அகாதெமி விருது கொடுத்துவிட்டார்கள். சரியான நடை முறை எனக்குத்தெரியாது என வாக்குமூலம் தருகிறார் எம் .வி.வி.

 ‘ இப்போது கூட எனக்கு விருது கொடுக்கவேண்டும் என்கிற தேவையில்லையே! எப்போதுமே அவர்கள் இன்னாருக்குக்கொடுக்கவேண்டும் இன்னாருக்குக்கொடுக்கக்கூடாது என்கிற பாகுபாடு வைத்துக்கொண்டு செயல்படுவதாகச் சொல்லமுடியாது- தெரியாது.’ நற்சான்றிதழ் ஒன்று இலக்கியப் பெரியவரால்  சாகித்ய அகாதெமிக்கு இங்கே வழங்கப்படுவதைக் காண்கிறோம்.

புதுமைப்பித்தனைப்பற்றியதொரு விமர்சனமும் இந்த நேர்காணலில் தரிசிக்க முடிகிறது. ‘ அவருடைய  மிகப்பிரபலமான துன்பக்கேணியில் செத்துப்போனமாதிரி முதலில் எழுதிவிட்டு , பிறகு உயிரோடு நடமாடுவது போல தப்பாக எழுதிவிட்டார். இதெல்லாம் நடக்கக்கூடியதுதான்’

’மற்றவர்களைப்போல, நான் பிறந்த ஜாதியைப்பற்றியே –நெசவாளர்கள் பிரச்சனை பற்றியே எழுதிக்கொண்டிருக்கலாம். அதில் எனக்கு விருப்பம் கிடையாது’ என்று பளிச்சிடும் பதிலைத்தருகிறார்.  எம் வி வி யும் ஒரு நெசவாளர்தான் என்பதை  நாம் அறிவோம்.

’1952-53 ல் ஒரு கவுன்சில் தேர்தல் நடந்தது.நான் காங்கிரஸ்காரனாய்ப் போட்டியிட்டுத் தோற்றேன்.’எனக்குப்போட்ட ஓட்டுக்களையெல்லாம் அள்ளி அவர்கள் பெட்டியில் போட்டுக்கொண்டார்கள். நான் சொல்வது பொய்யில்லை. இதற்கு எல்லோரும் உடந்தை……..  இனி எந்தக்கட்சியிலும் சேருவதில்லை என்ற முடிவோடு இன்றுவரை ஒதுங்கி இருந்துவிட்டேன்.’ ப்ரகாஷ்  தனது பேட்டியில் எம் வி வியின் மனப்பத்தாயத்தைத் திறந்து தரிசிக்க வைக்கிறார்.

புதுவையில் பாரதிதாசனோடு தேர்தலில் போட்டியிட்ட  பொதுவுடமையாளர் சரஸ்வதி சுப்பையாவின் நேர் அனுபவங்களை அவரே  ஒருமுறை குறிப்பிட்டது  எனக்கு மனதில் வந்து போயிற்று.புதியதோர் உலகம் செய்வோம் என்று எழுதிய புரட்சிக்கவிஞரைப் பொதுவுடமைக்கட்சிக்கு எதிராக நிறுத்திப்பார்த்த அரசியல்களம் வரலாற்றில்  நிகழ்ந்துதானே.

 கேரள மண்ணில் வயநாட்டில் இந்தியப்பொதுவுடமைக்கட்சியின்  வெற்றி வாய்ப்பான பாராளுமன்ற  சீட்டைத்தோற்கடித்துத்தானே பேராயக்கட்சியின் ராகுல் காந்தியும் எம். பி ஆனார். வரலாறு ரணங்களின் சேர்க்கைதான்.
                                                      தலைவாசல் என்று தலைப்பிட்டு’ தோப்பில் முஹம்மது மீரான் பற்றி ப்ரகாஷ் எழுதிய  கட்டுரை ஒன்றை இத்தொகுப்பில்  காண்கிறோம். ‘நான் ஒரு விமர்சகன் அல்ல.எனக்கு விமர்சனத்தைவிட இலக்கியம்தான் பிடிக்கும் .இன்னும் ஆழ்ந்து சொல்லப்போனால்  இலக்கியத்தைவிட வாழ்க்கைதான் ரொம்ப ரசிக்கும்! வாழ்க்கையைவிட மகத்தானது எதுவுமில்லை.’  இப்படி  கனகச்சிதமாக ஒரு இலக்கணம் தருகிறார் ப்ரகாஷ்.

’வாழ்க்கையைப்பற்றிச்  சிந்திக்கிற எழுத்தாளன் சொல்லுகிற முறையால் உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிற புதுமையான நோக்கால் வாழ்க்கையின் பொருளை  உடைத்துக்காட்டுகிற நவீன திண்மையால் ஜெயிக்கவேண்டுமே அல்லாது வாழ்க்கையின் உள்ளடக்கத்தை மறுபடி மறுபடி அதையே சொல்லும் மரபு வழியால் அல்ல’. எழுத்தாளர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவராக ப்ரகாஷ்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை இங்கே பார்க்கமுடிகிறது.

தோப்பில் முஹம்மது மீரான்  அவர்களின் கதாபாத்திரங்களில் சாதாரணமான சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளில் வருகிற சின்னஞ்சிறு நாஞ்சில் நாட்டு மக்கள் கிராமிய மக்களின் பாத்திரங்கள்தான் சிறப்பாகப்படைக்கப்பட்டிருக்கின்றன. இது ப்ரகாஷின் கணிப்பாக இருக்கிறது.

டம்மி ரைட்டர் என்ற கட்டுரையில் ,  கு.ப.ரா பற்றி ஒரு நூல் எழுதித்தருவதாய்க்  கை நீட்டி  வாங்கிய பணத்திற்குப்பதில் சொல்ல  இயலாத நிலையில் நொடித்துப்போயிருந்த  இருந்தார்  கரிச்சான்குஞ்சு. அவர்  கேட்டுக்கொண்டதற்காகக்காக கு.ப.ரா பற்றி ஒரு நூல் எழுதிக்கொடுக்கிறார் ப்ரகாஷ்.  அவருக்கு  தான் உதவிய விதம் குறித்து உணர்வு பூர்வமாக எழுதுகிறார். அதுவே தஞ்சை ப்ரகாஷின் முதல் நூல். ஆனால் கரிச்சான்குஞ்சு  அதை எழுதியதாகத்தான்   ஊரும் உலகும் அறிவித்துக்கொண்டது.

தஞ்சை ப்ரகாஷ் கொடுத்த பேட்டி ஒன்றும் இந்தக் கட்டுரைத்தொகுப்பில் இருக்கிறது. வேட்டைப்பெருமாள்,  ஹரணி  பேட்டியை எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள்.

அதனில் க நா சு வின் கண்ணியம் பேசும் வாசகம் வருகிறது. குங்குமத்தில் 64 இலக்கிய மேதைகளைப்பற்றிக் கட்டுரை எழுதியவர் க.நா.சு.. அப்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது 61. அவரது படைப்பில் ஒன்றைப்பற்றி  க. நா. சு  கட்டுரை எழுதவேண்டும். அது  குங்குமத்தில்  வரவேண்டும் என்று ப்ரகாஷ் வழியாகச் செய்தி  க.நா சு க்கு வருகிறது. க. நா. சு வுக்கு  ஏகப்பட்ட மரியாதைகள் செய்யப்படும் என்கிற விஷயம் சொல்லப்படுகிறது. ப்ரகாஷுக்கும்  மரியாதைகள் கிடைப்பது உறுதி என்கிறார்கள். ப்ரகாஷ் க.நா.சு வை அணுகி இந்தச் செய்தியை எடுத்துவைக்கிறார்.‘ ப்ரகாஷுக்கு  க.நா. சுவின் பதில் இதோ,

’lஎழுபது வயசுவரைக்கும் சத்தியத்தைத் தவிற எதையும் எழுதல. இனிப்போய் இந்தகாரியத்தைச்செய்யசொல்றியான்னாரு’.

தஞ்சை ப்ரகாஷ் க.நா சு வை வாசகருக்கு முன் சத்தியவானாக நிறுவுகிறார். ஒரு எழுத்தாளன் சக எழுத்தாளனுக்கு செய்யும் பெரிய மரியாதை இதைவிட வேறு என்ன இருக்கமுடியும்.

க.நா.சு வின் மனைவியிடம் பெற்ற  ஒரு நேர்காணலும் இத்தொகுப்பில் வாசகனுக்குக்காணக்கிடைக்கிறது. க.நா.சு வின் மனைவியின் வார்த்தைகள் இங்கே.

‘பணத்துக்கு பறக்குறது அவர்கிட்ட நடக்காது. எப்பேர்பட்ட கொம்பன் எல்லாம் கூப்பிட்டும் அப்படி ஒரு வாழ்க்கையை ஏத்துக்க தயாராயில்லெங்கறது நிஜம்’

ப்ரகாஷின் கடைசி நேர்காணல் கட்டுரை இறுதியாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ப்ரகாஷ் நமக்குச்சொல்கிறார்.

‘கனவு மெய்ப்படவேண்டுமென்றான் பாரதி. மெய்ப்படாத கனவுகளில் கவனத்தைச்செலுத்துவது அறிவீனம்’

ப்ரகாஷ் வாசகனுக்குச்சொல்லும் வயிர வரிகள் இவை.

’சத்தியம்!சத்தியத்தைவிட உயர்ந்த எழுத்து சத்தியத்தைவிட உயர்ந்த படைப்பு சத்தியத்தைவிட உயர்ந்தபாதை எதுவுமே கிடையாது.’

ந.பிச்சமூர்த்தியைத்துணைக்கு அழைக்கிறார் ப்ரகாஷ்.’ நாய் நாயாக இருக்கலாம்.  தவறில்லை. மனிதன்   வெற்று மனிதனாக மட்டும்  இருத்தலில் என்ன ? தர்மம்  இருக்கிறது. அதிமனிதனாக தேவனாக தன்னை உயர்த்திக்கொள்ள மனிதன்  இடையறாது முயலவேண்டும்’

நாமோ மனிதன் எங்கே  என்று அல்லவா   நித்தம்  தேடிக்கொண்டு நிற்கிறோம்.

------------------------------------------------

 

 

 

 

 

  

 

வளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள்

 

ளவதுரையனின் கண்ணாடிக்குமிழ்கள் கவிதை நூல் குறித்து…….       

வளவதுரையன் என்றும்  மரபுக்கவிதைகளின் உரைகல். அழகுப் புதுக்கவிதைகள்  சளைக்காமல் எழுதுபவர். புதினம் சிறுகதை கட்டுரை என இலக்கியப்பங்களிப்புச் செய்பவர். சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர். இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம் அமைப்பின் ஆணிவேர்.

கண்ணாடிக்குமிழ்கள் வளவதுரையனின் மற்றுமொரு புதுக்கவிதைத்தொகுப்பு. இதனை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 144 பக்கங்கள்.பதிப்பகத்தார் வளவதுரையன் பற்றித்தரும் குறிப்பு நிறைவாக வந்திருக்கிறது. கடலூர் கவிஞர் அன்பன் சிவா.  கவிஞர் அவருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பித்து இருக்கிறார். என்னுரையில்  வளவதுரையன் கம்பனின்  ‘ நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப்பின்னைப்போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்’ என்ற வரிகளை எடுத்தாளுகிறார். தொல்லிலக்கியங்களில் ஆழங்கால் பதித்தவர் வளவதுரையன்.

முதல் கவிதை’ அறுந்த செருப்பு’ துவக்கமே  பின்நவீனத்துவமாய் அனுபவமாகிறது. ‘தைக்க ஊசி நூலைவிட முதலில் மனம்தான் தேவை’ என்று முத்தாய்ப்பாகக்கவிதை முடிகிறது.

காத்திருப்பு என்பது அடுத்த கவிதை.

கவிஞருக்கு உள்ளத்தில் கவிதை ஒளிந்துகொண்டு வெளிவரத்தயங்குகிறது. குழந்தைக்குச்சோறு ஊட்டும் தாய்போல் கவிதையைக் கொஞ்சிக்கொஞ்சி அழைக்கிறார்.  வரவில்லையே கவிதை. பின் ஈக்களை விரட்டுவதுபோல் மிரட்டிக்கூடப்பார்க்கிறார்.  இப்படி உவமைகளைக்கையாள்வதில் வளவதுரையன் வித்தகராய் இருப்பதைக்கவிதைகளில்  அனேக  இடங்களில் காணமுடிகிறது.

அச்சமும் ஆசையும் என்னும் கவிதை  ஓர் இணையர்களின் ஊடல் பற்றிப்பேசுகிறது. திருக்குறளை அத்தனை லகுவாய்க்கையாள்கிறார் கவிஞர். அவன்  அவளைக்கட்டிப்பிடிக்கிறான். பீலிபெய்சாகாடும் அச்சிறும்’ என்று அவள் நழுவுகிறாள். ஓடிப்பிடித்து ஒய்யாரமாய்கைப்போட்டுப்பார்க்கிறான் அவன்.’நுனிக்கொம்பர் ஏறினால் அஃதிறந்தூக்கின்’ என  அவளோ பைய அடிக்கிறாள். ‘சரி நாளை வருகிறேன்’ என அவன் புறப்படுகிறான். அவளோ’ கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என குறுநகைபுரிகிறாள். ‘ ஏன் எப்போதும் சண்டைக்கு வருகிறாய்’ என்கிறான் அவன். ‘ஊடுதல் காமத்திற்கின்பம்’ அவள் விடை சொல்கிறாள். தமிழ் அதிகம் படித்தவளைக்காதலித்தது தவறு என்கிறான் அவன். ‘தமிழைப்பழித்தவரை என் தாய் தடுத்தாலும் விடேன்’ சிரித்து மிரட்டுகிறாள் அவள்.

அச்சமும் ஆசையும் மாறி மாறி இவண் அனுபவமாகிறது. ஊடல். வளவதுரையனோ ஆன்மீக இலக்கியங்களில் திளைத்தவர் என்பதையும் உலகறியும்.

பக்குவமாய்- என்கிற தலைப்பில் ஒரு கவிதை

.’ பெருந்தனக்காரர்களின் சொற்களாய்க்

காய்ந்து கொண்டிருந்த

 கதிரவனின் வெப்பம்’

மென்மையாக மாறத்

தொடங்கிய மாலை நேரம்’

பெருந்தனக்காரர்களின் சொற்கள்,  கவிஞர் அதனைச் சுடும் வெயிலுக்கு இணையாய்ச்சொல்கிறார். ஞாயிறு  யார்மாட்டும் பாரபட்சம் காட்டுவதில்லை. பெருந்தனக்காரர்கள் அனேகமாய் எளியவர்களிடம் அன்புகாட்டல் அரிது.

எழுதுதல்- பற்றி ஒரு கவிதை. எழுதுவதை நிறுத்தினால் நீ காணாமற்போய்விடுவாய் என எழுத்தாளர்கட்கு எச்சரிக்கை தருகிறது.  எழுத்தாள நண்பர் அமரர் வே. சபாநாயகம்  எப்போதும் சொல்வார்.

‘நாம எழுதலன்னா  நாம இருக்கறதே தெரியாம போய்விடும்’ அப்படித்தான்  கவிஞர் வளவதுரையனும் எண்ணிப்பார்க்கிறார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லை என்றால்,

‘நீ இருந்த இடமே

தெரியாதபடிக்கு

சுவடுகளை எல்லாம்

சுனாமி வந்தது போல

அழித்துவிடுவார்கள்’

கவிஞர் கடலூக்காரர் சுனாமி பற்றிக்கூடுதலாய் அனுபவம் பெற்றுமிருப்பார். எப்படி சுவடுகள்  அழிந்து போகும் என்பதனைச்சொல்ல சுனாமியை அழைக்கிறார்.

‘ஆகவே

ஏதாவது எழுதிக்கொண்டே

இருக்கவேண்டும்

புரியவேண்டும் என்பதில்லை

புரிந்தது போல் எழுத வேண்டும்

புரியாதது போலவும்

எழுதவேண்டும்

எப்படியோ

எழுதிக்கொண்டே

இருக்கவேண்டும்’

எத்தனைக்கூர்மையான விமரிசனத்தை வாசகப்பரப்பிற்குக்கடத்தியிருக்கிறார் வளவதுரையன் பாருங்கள். வாழும் உலகம் என்ன எழுதுகிறோம் என்றா பார்க்கிறது எதாவது எழுது எழுது என்று நிர்பந்திக்கிறது இல்லாவிட்டால் தொலைந்தாய் நீ என்கிறது. ஒரே ஒரு கவிதை எழுதி ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும் வாழ்பவன் கவிஞன் என்பதைத்தெரிந்தே எழுதுகிறார்.  நீர்த்துபோதலினின்றும் எழுத்தாளர்கள் தம்மைக்காத்துக்கொள்ளவேண்டும் கட்டாயம்.   சக எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்தவே வளவதுரையன்  எழுதுதல் கவிதை படைத்துள்ளார்.

தவளைக்கூச்சல் தலைப்பில் ஒரு கவிதை.  கவிதையில் இறுதி வரிகளாய் வருவதைக்காண்போம்.

‘தம்மை விருந்துண்ணத்

தாமே அழைக்கும்

தவளைச்சத்தம்’

நுணலும் தன் வாயால் கெடும் நாம் அறிவோம், தவளையின் கூச்சலை தம்மை விருந்துண்ண அழைக்கும் தவளைச்சத்தம் என்கிறார் வளவதுரையன். வித்தியாசமான பார்வை. கவிப்பார்வை.

பூனையின் புலம்பல்- நகைச்சுவை ததும்பும் கவிதை.

சிங்கம் துர்க்கைக்கு வாகனம்,காளை சிவனுக்கு வாகனம், கழுதை மூதேவிக்கு வாகனம்,ஆடு செவ்வாய்க்கு வாகனம்,நாய் பைரவருக்கு வாகனம்,எருமை எமனுக்கு வாகனம், பன்றி திருமாலுக்கு வாகனம். இவை சரி. பூனைக்கு  மட்டும் குறை ’நான் என்ன பாவம் செய்தேன் எந்தக்கடவுளும் என்ன சீண்டவில்லை? வாசகன் தான்  இதனை ஆராய  வேண்டும்.

கனவில்தான் –என்னும் ஒரு கவிதை. கிளி பற்றிய சோகம் பேசுகிறது.

‘ஒரு நெல்லுக்காகக்

கழுத்து நோக

முப்பது சீட்டுகளைக்

கலைக்கவேண்டி உள்ளது’

கிளியின் புலம்பல் நம்மைச்சிந்திக்க வைக்கிறது. அந்தக்கிளிக்கு ஓர் இணை எதிர் மரக்கிளையில் வாழ்கிறது. ஆனால் என்ன?’ கலவி எல்லாம் எப்படிச் சாத்தியம்’  என்கிறது சோசியத்திற்கு சிறைப்பட்ட கிளி. கவிஞருக்குக் கிளியின் சோகம் புரிந்தே இருக்கிறது.

தொலைத்தல்- என்னும் கவிதை ஒரு சுவாரசியமான தகவல் சொல்கிறது. வாழை மரம் குலை போட்ட அடையாளம் வைத்து ஒரு வீட்டைக்கண்டுபிடிக்க முடியுமா என்ன? அடுத்தமுறை அந்த வீட்டைத்தேடினால் அந்த வாழைக்குலை இன்னும் தொங்கிக்கொண்டே இருக்குமா சொல்லுங்கள். தொலைத்தல் கவிதையில் எதனையும் தொலைக்காமல் வாசகனுக்குச்சொல்லிவிடுகிறார் கவிஞர்.

’கை ஒடிதல்- தலைப்பில் ஒரு கவிதை.

விருதும் பட்டமும்

விளக்கொளியும்

தலைக்கு  மேல் சுழலும்

ஒளிவட்டமும்

தாளாத துயரத்திற்கே

அடிகோலும்’

விருது பட்டம் ஒளிவட்டம் எல்லாம் சரி. மாணிக்கவாசகப்பெருமான்’ கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்’ என்பார்.  கவிதை விஷயம்   விளங்கிக்கொள்ள   நாம்  திருவாசகத்தைத்துணைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ‘ விளக்கொளியும்’ என்கிறாரே அதுவா அது  கலைஞன் தன்னைப் பிரஸ்தாபிக்க கிடைக்கும் மேடை.  Limelight   என்பார்கள் ஆங்கிலத்தில்.

பசுமாடு என்னும் தலைப்பில் ஒரு கவிதை.  வீதிக்குழாய் ஒன்று. அதனைச்சுற்றி முற்றுகையிடும் குடங்கள். அதனில் எத்தனை ரகங்கள். வண்ணங்கள். வெல்லத்தைச்சுற்றியிருக்கும் எறும்பு போல் குழாய் வாயைப்பார்த்துக்காத்துக்கிடக்கும் காலிக்குடங்கள். தமிழ்நாட்டின் இருப்பைப்போல்  குடங்களில் பல்வகைப்பிரிவுகள். தமிழ் நாட்டினிருப்பு. உங்களுக்கு மனதில் என்ன ஓடுகிறதோ அதுவேதான்.

வாசகனுக்கு வேலை கொடுப்பதில் சமர்த்தர் வளவதுரையன்.  அதனை சங்கு இதழிலும்  செய்வார், இலக்கியம் பேசுவோம்  இணைய இதழிலும் அதனைத்தொடர்வார்.  ஒரு வினா வைப்பார் விடை கேட்பார்.  சங்கு அட்டைப்பட ஓவியத்திற்கு ஒரு கவிதை எழுதென்பார். அனைவரையும்  பாராட்டுவார்.

குழாயில் தண்ணீர் வராதவரைக்கும்  ஒற்றுமையே பேச்சும் மூச்சும். குழாயில்  தண்ணீர் வரத்தொடங்கினால் இடக்கரடக்கல் இல்லாமலே  பல சொற்கள். கூர்த்த பார்வை வளவதுரையனுக்கு.

பாரதியோடு லேசாக ஒரு சீண்டல்.  ’பாம்பும் அத்தை மகளும்’ கவிதைக்கு வருவோம்

‘நிறத்தை எழுத முடியாததால்தான்

பாம்பின் நிறமொரு குட்டியெனப்

பாரதி பாடினாரோ?

பாம்பின்  அந்த நிறத்தைச்சொல்லமுடியாமல் ‘ பாம்பின் நிறம்’ என்றாராம் பாரதி. அத்தைமகளை பாம்போடு எண்ணிப்பார்க்க கவிஞருக்கு என்ன கஷ்டமோ, யார் அறிவார். பாம்பை  ஒரு பிடாரன் பிடித்துவிட்டானாம். அத்தை மகளை  இனிக்கட்டவேண்டுமாம் அவர்தானே சொல்கிறார்.

பிரிவு என்னும் ஒரு கவிதை. எத்தனைச்சட்டமாய் நியாயம் சொல்கிறது பார்ப்போம்.

‘பிரிவு என்பது

வருத்தம்தான் தரும்

ஆனால்

பீடுபெற வேண்டுமெனில்

நாற்றங்கால் விட்டு

நாற்றுகள் பிரியத்தான் வேண்டும்’

எழுதாத சொற்களை முதிர்கன்னிகள், கூட்டில் வாழும் பறக்காத குஞ்சுகள் என்கிறார் கவிஞர்.

நடக்கவே தெரியவில்லை என்னும் தலைப்பில் ஒரு கவிதை. மனிதனுக்கு ஒழுக்கமாய் இருக்கத்தெரியவில்லை. ராமாயணத்தை மேற்கோள் காட்டிப்பேசுகிறார் வளவதுரையன்

‘இராமனுக்குக்கம்பன் சூட்டிய பெயர்

நடையில் நின்றுயர் நாயகன்

இங்கு நடைக்கு ஒழுக்கம்

என்னும் பொருளும்

நடந்து வந்து சேர்கிறது.

ஆதலால் மனிதனுக்கு

நடக்கவே தெரியவில்லை’

மிருகங்கள் பறவைகள் நடக்கின்றன.  மனிதன் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடக்கத்தெரியாதவனாய் இருக்கிறான் என்கிறார் கவிஞர்.

எங்கே வாழ்கிறது- என்னும் தலைப்பில் இன்னுமொரு கவிதை. தேசபிதா மகாத்மாவோடு வாதாடிப்பார்க்கிறது.

’மக்களே இல்லாத கிராமங்களும்

கிராமங்களே இல்லாத மக்களும்

இந்தியா கிராமங்களில் வாழ்கிறதாம்

எங்கே வாழ்கிறது?’

திருமண மண்டபத்தில் ஒரே கூச்சல். ஏதேதோ வகை வகையாய். அறிவியலின் ஆதிக்கம் மந்திரம் ஓதும் அய்யரையும் விட்டுவைக்கவில்லை.

‘ஒரே கூட்டம்

அய்யரெல்லாம் இப்பொழுது

ஒலிபெருக்கியில் மந்திரம் சொல்ல

ஆரம்பித்து விட்டார்கள்’

ஒரு எள்ளல் கலந்த விமரிசனத்தை இங்கே காண்கிறோம்.  மந்திரங்கள் ஒலிபெருக்கியில் என்ன,  ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாஷிங்டன் திருமணத்திற்கு  மயிலாடுதுறை அய்யர்கள் மந்திரம் சொல்லி, ஜிபேயில்  தட்சணைக்காசு பெறுகிறார்கள்.

கோடுகள்- என்கிற கவிதையோடு முடிக்கலாம்.

‘எப்பொழுதும் சில இடங்களை

மட்டும்தான் நிரப்பமுடியும்

எதை எவரை இட்டு வேண்டுமானால்

நிரப்ப நினைக்கிறார்கள்.

சில நிரப்ப முடியாதவை’

தமிழ்க்கவிதைளில்  நேர்த்தியானதொரு ஒழுகலாற்றைத்தொடர்ந்து கைகொள்ளும் கவிஞர்களில் வளவதுரையன் முன் நிற்பவர்.  கவிஞரை நிறைவாக  வாழ்த்துவோம்.

------------------------------------------------------------------------------------