கவிஞர் பெரியசாமியின் கவின்மிகு கவிதைப்பயணம்
’வாழ்வை வெற்றிகொள்’
என் இனிய நண்பர் கவிஞர் பி.கே. பெரியசாமியின்
இரண்டாவது கவிதைத்தொகுப்பு. நூற்றுக்கு
மேற்பட்ட முத்தான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைப்பேழை இது .மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள்
இரண்டிலும் அவருடைய கவித்திறன் மிளிர்வதை நெருங்கிய வாசக நண்பர்கள் அறிந்திருக்க முடியும்.
’வாழ்வை வெற்றிகொள்’ கவிஞர்
இத்தொகுப்பில் படைப்பு முழுவதினையும் புதுக்கவிதையாகத் தந்திருக்கிறார். வாழும் சமுதாயத்தின் மீது கவிஞருக்கு இருக்கும் ஆரோக்கியமான விமர்சனப் பார்வையை வாசகன்
இங்கே அனேக தருணங்களில் தரிசிக்க வாய்க்கிறது.
தமிழ் மொழி
மீது ஈடில்லாப் பற்று, சாதிக்கொடுமைகளால் மக்கள் படும் அவதி குறித்த தர்மாவேசம், பெண்டிரை மேல் நிலைக்குக் கொண்டுவருதலில்
காட்டும் கூடுதல் அக்கறை, ஒரு சமூக ஞானியை அப்பழுக்கற்ற ஒரு நேர்மையாளரை, மனித நேயம் மிக்க ஒரு சான்றோரைத்தேடிக்கண்டுவிடத்துடிக்கும் இலக்கோடு
கவிதைப்பயணத்தைத்தொடருகிறார் கவிஞர்.
’அட என்ன
நடக்குது நாட்டுல’- என்னும் முதல் கவிதை ஓசை நயம் மிக்கது. இது சமுதாயத்தில் அன்றாடம்
காட்சியாகும் நடப்புக்களை பட்டியலிடுகிறது.
‘தட்டிப்பறிச்சவன்
மேட்டுல அத
விட்டுக்கொடுத்தவன்
ரோட்டுல’
சாலையில்
பறிதவிப்பவனுக்காகக்குரல் கொடுக்கிறார் கவிஞர். அரசாங்கத்தின் எந்த சேவையையும் ஒரு எளியோன் பெற்றுவிடுதல் சாத்தியமே இல்லை. ஆயிரம்
பிரச்சனைகள் தொடரும் குறுக்கீடுகள். இது பற்றிப்பேசுகிறது ‘அருகதை’ என்னும் கவிதை.
‘கோப்பிலே
போட்ட பாதிக்கையெழுத்திற்கும்
போடப்போகும்
மீதி கையெழுத்திற்கும்
பேரம் பேசும்
அதிகாரிகள்’
அறிவியலின்
ஆட்சி இன்று இணையதளத்தை பாரெங்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.ஆனால்
மனித உறவுகளோ நொறுங்கிப்போய்விட்டன.
கவிஞரின்
மனம் கனமாகிறது இப்படி.
’உனது இந்தக்கண்டுபிடிப்பால்
உலகம் மட்டுமா
சுருங்கிவிட்டது.
உள்ளமும்தான்.’
நாட்டுவிடுதலைக்காகத்
தம் இன்னுயிர் ஈந்த தியாகிகள் அந்தமான் சிறையிலே
செங்குருதி சிந்தினர். செக்கிழுத்தினர். கவிஞர் அந்தமான் பகுதியில் கணிசமான
காலம் தொலைபேசித்துறையில் கணக்குஅதிகாரியாய் பணிசெய்துள்ளார் என்பது ஒரு சிறப்புச்செய்தி.
கவிதை இப்படி வருகிறது.
’செக்கிலே
எண்ணெய் பிழிய நீ ஏவப்பட்டாயா?
இல்லை!
நீயே
எண்ணெயாய் பிழியப்பட்டாய்’.
குழந்தையாய்
வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராதா என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருப்பதுதான். கூட்டாஞ்சோறு
கூடி உண்டு களித்த நாட்கள் திரும்பவும் வராதுதான்.
கவிஞர் இதனை ஆழ்மனதில் எண்ணிப்பார்க்கிறார்.
‘அந்த நாள்
வருமென்று
ஆவலாய் எதிர்பார்க்கிறேன்
பிள்ளைப்பிராயத்திலே
பெற்றதொரு
பெருமகிழ்ச்சி’
என்கிறார்
கவிஞர். கவிஞரின் தாய் அண்மையில் மறைந்துபோகிறார். நிறை வயது வாழ்ந்து
விடைபெற்றவர். ‘தாயே’ என்கிற ஓர் கவிதை எழுதுகிறார்.
எதிர் நிற்கும் பெற்ற மகனின் உரு அன்னையின் கண்ணுக்குத்தெரியாது போகிறது.
‘என் உருவம்
தெரியாதபோதும் என்னை
உண்மையாய்
நேசித்த ஒரே ஜீவன்’ என்று பெற்ற தாயுக்குப்பெருமை
சேர்க்கிறார்.
கவிதைப்புத்தகத்துக்குத்
தலைப்பாக வரும் கவிதை ‘வாழ்வை வெற்றிகொள்’.
வாசகர் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்கும்
படைப்பாக மலர்ந்திருக்கிறது.நம்பிக்கைதான் வாழ்க்கை.நேர்மறையான எண்ணங்களே மனித வாழ்க்கையின்
அடித்தளம்.
‘இன்றைய நூற்றாண்டின்
இணையற்ற மனிதனே
நம்பிக்கை
கொண்டிரு
அதுதான்
பூமிப்பாறையைப்
புரட்டிடும்
நெம்புகோல்’.
கவிதை வாசகனுக்கு
வெளிச்சம் பாய்ச்சுகிறது. வாழ்க்கைச்சவால்களை
எதிர்கொள்ள அழைக்கிறது.படைப்பை படியுங்கள், தீர்க்கமாய் விமரிசியுங்கள் வாசகர்களே!
அழகான கவிதைகள்.
ஆழமான கருத்துக்கள். படிக்கப்படிக்க ஓர் நிறைவை அனுபவமாக்கும் பெரியசாமியின் கவிதைமலர்கள்.
தொடர்க கவிஞரே உமது வெற்றிப்பயணம். வாழ்த்துகள்பலவோடு.
----------------------
No comments:
Post a Comment