Saturday, May 6, 2023

எச்சத்தற்பாகம்படும்

 

 

 

 

எச்சத்தாற்பாகம்படும்.                        

                                                                                                                                        

அப்பா என்னை கம்மாபுரம்  கழக உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார்.   அப்பாவும் நானும்  நடந்துதான் கம்மாபுரம் போனோம். கம்மாபுரம்  ஒரு பேரூர்.  அது  என் சொந்த ஊர் தருமங்குடியிலிருந்து மேற்கே  ஒரு   நான்கு மைல் தூரமிருக்கும்.   அந்தக் கம்மாபுரத்தில்தான் நான் படித்த  கழக உயர் நிலைப்பள்ளி இருந்தது.  போர்டு ஹைஸ்கூலை  அன்று அப்படித்தான்    அழைத்தார்கள்.போர்டு என்றால் கழகமா  இந்தக்  குதர்க்கம் எல்லாம் இங்கே எதற்கு? 

பள்ளிகள்  அன்று எங்கோ  மூலைக்கொன்றாய்த்தான் தென்படும்.  கோவிலும் அது ஒட்டிய சத்திரத்திண்ணைகளும்  பள்ளி நடைபெறும்  இடங்களாயின. அந்தக்காலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் தூரம் தூரமாய் அமைந்து  இருக்கும். மாணவர்கள்  பள்ளிக்கூடத்திற்குக் காலை எட்டுமணிக்குக் கிளம்பிவிட வேண்டும். அப்போதுதான் பத்து மணிக்கு எல்லாம் பள்ளிக்கூடம் போய்ச்சேரமுடியும்.  தோளில் தொங்கும் துணிப்பையில் புத்தகங்கள் நோட்டுக்கள் இருக்கும். ஒரு கையில் மதிய சாப்பாட்டுத்தூக்கு பிடித்துக்கொள்ள வேண்டும். பித்தளைத்தூக்கு ஒன்றிற்கு  உள்ளே ஈயம் பூசியிருப்பார்கள். பாதி ஈயம் காலாவதியாகியிருக்கும். பித்தளைத்தூக்கு  இல்லை என்றால் காத்தாடி ஏனம் என்கிற அலுமினிய தூக்கு  இருக்கும். எவர் சில்வர் பாத்திரமா அதனை   யார் பார்த்தார்கள். பள்ளிக்கூட  சாப்பாட்டு தூக்கிற்கு  உள்ளாக அனேகமாகப் பழைய சோறு.  காயவைத்த  மோர் மிளகாயும்  ஊறி நீச்சலடிக்கும்.

எங்கள் கிராமத்துக்கு மேற்குத்திக்கில் அந்தக் கம்மாபுரம் இருந்ததால் ஒரு சவுகரியம். காலையில் போகும்போது சூரியன் கிழக்கில் இருப்பான். மாலை திரும்பும் சமயம் மேற்கில் இருப்பான். சூரியனும் சந்திரனும் ஆண்பாலா இருப்பான்  என்பது  சரியா.  நீங்களும் யோசியுங்கள்.   

எங்கள் ஊர் பக்கமிருந்து கம்மாபுரம்  செல்லும்  மாணவர்களுக்கு எதிர் வெயில் கிடையாது. அது ஒரு வசதி. எங்கள் ஊருக்கு கிழக்கே இருப்பது சேத்தியாதோப்பு சிறு நகரம். பள்ளிக்குப்போகும்  போதும் சரி பள்ளி முடிந்து திரும்பும்போதும் சரி  கண்ணுக்கு நேராக எதிர் வெயில்தான்.

எங்களுக்காவது நடந்து செல்ல  முதுகுன்றம் செல்லும்  கருங்கல் ஜல்லி சாலை என்ற ஒன்று இருந்தது. சாலை வசதி எதுவும் இல்லாமல் வயல் வரப்பில் நடந்து பின் மணிமுத்தாறு வெள்ளாறு என இரண்டு ஆறுகளைக்கடந்து என் பள்ளிக்கு வந்தார்கள் பவழங்குடி கிராமத்து  மாணவர்கள்.  அவர்களும் கம்மாபுரம் பள்ளிக்கூடத்தில் என்னோடு படித்தார்கள். புத்தகப்பையை நனைந்துவிடாமல் மேலே தூக்கிப்பிடித்து  ஆற்றை  நீந்திக் கடக்கும் சாகச வித்தை தெரிந்தவர்கள்.  போட்டிருக்கும் மேல் சட்டையை அரை டிராயரைக்கழட்டி தூக்கிப்பிடித்துக்கொண்டு அம்மணமாய் ஆற்றைக்கடந்து அல்லது நீந்திவருபவர்கள் அந்த  மாணவர்கள்.

மழைக்காலங்களில் குடைகிடை எல்லாம்  ஏது. சவ்வுத்தாள் என்னும் உரத்தாள் பையில் புத்தகங்களை நிரப்பி பின் புத்தக துணிப் பையில் வைத்துக்கொள்ளவேண்டும்.  புத்தகப்பையிக்குக் காதுகள் பழுதாகியிருக்கும். பையின் பிடிதான் காதுகள்.  பிளாஸ்டிக்   ஆட்சிவராத ஒரு காலம். அந்த சவ்வுதாள்களில் வீட்டில்  கருவாடு வைத்திருப்பதாகவும் அதனைப்பானையில் எடுத்து வைத்துவிட்டுப்புத்தகம் நோட்டை அள்ளிப்போட்டுக்கொண்டு பள்ளிக்கு வந்ததாகவும் பவழங்குடி மாணவர்கள் என்னிடம் சொல்வார்கள்.

அவர்களிடம் நோட்டு புத்தகம் வாங்கினால் கருவாடு  வாடை அடிக்கும். நான் முகம் சுளிக்க அவர்கள் சிரித்துக்கொள்வார்கள். கருவாடு  நாற்றம் என்று மட்டும் சொல்லிவிடக்கூடாது. கோபம் வந்துவிடும்.

‘ நெத்திலி  கருவாடு வறத்து வச்சா  ஒரு சட்டி திங்குலாம் மொத்தமும் அப்பிடியே மணம் மணம்’  அவர்கள் விளக்கம் சொல்வார்கள்.

என்னைப்பள்ளியில்  ஒன்பதாவது சேர்த்த அன்று மதிய உணவு இடைவேளை வரை பள்ளிக்கூட வாசலில்   பச்சைப்பசேல் என்றிருந்த நாவல் மரத்தின் கீழாக  நிழலில் அமர்ந்திருந்தார் என் அப்பா.

பதினொன்றரை மணிக்கு இண்ட்ரோல் பெல் அடித்தார்கள்.  அப்போது  என் அப்பாவை நான் பார்க்கவில்லை.  பள்ளிக்கூட  ஆசிரியரோ மாணவரோ ஆண்கள்  யாருக்கும் கக்கூஸ் கிடையாது. ஹெட்மாஸ்டருக்கும் இல்லைதான்.  பேருந்து செல்லும் சாலையோரம் தான் எல்லோருக்குமே எதற்குமே. பெண்பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டிடத்திற்குப்பின்புறம்  சிமெண்ட் ஷீட் போட்டு  ஒரு மறைப்பு கட்டி வைத்திருந்தார்கள். அதனுள்ளாக என்ன வசதியிருக்குமோ யார் அறிவார்.

மதியம் ஒருமணிக்குச் சாப்பாட்டிற்கு பெல் அடித்தார்கள். மணி அடித்தார்கள் என்று  மாணவர்களாகிய நாங்கள்  அன்று சொன்னதில்லை. மணி  அடிப்பது என்றால்  அது  சாமிக்கு  கோவிலில் அடிப்பது, பெல் என்றால்தான் அது பள்ளிக்கூடத்தில் அடிக்கும் மணி.

‘ டேய்  டேய் இங்கதான் நா இருக்கன்’

அப்பாவின் குரல்.

‘ ஏம்பா  நீ வீட்டுக்கு போவுல’

‘ போவுணும் உனக்கு  மதிய சாப்பாடு வச்சிகிட்டு திங்க ஒரு இடம் காட்டுணும். அதுக்குத்தான் வெயிட் பண்றேன்’

‘பள்ளிக்கூடத்துல இடம் இருக்காதா”

‘பசங்க  கிளாஸ்ல ஒக்காரவே எடம் பத்துல.  இதுல மதியம் சாப்புடுறத்துக்கு  உங்களுக்கு ஒரு  எடம்  தண்ணி வசதி எல்லாம் வேணும்னா எங்க போவாங்க’

‘இங்க எங்கனா ஒரு பொது எடம் பாக்குணும்’

‘ நா ஒன்ன இங்க வெங்கடராம ஐயர் வீட்டுக்கு அழச்சிட்டு போறன். அவுருகிட்ட சொல்லிவுடறேன். அங்க மத்தியானம் சாப்பாட்ட வச்சிகிட்டு சாப்பிடு. இந்த பள்ளிக்கூடத்துக்கு பின்னால ரெண்டு தெரு தள்ளி அவுரு வீடு. வா போகலாம். அவுரு எனக்கு அடி நாள்  சினேஹிதம். ஒறவு இல்லே. நல்ல மனுஷன். அவுரு வீட்டுல ஒரு அம்மா இருக்குறாங்க மோஹனம்பான்னு பேரு. அது அவுரு அண்ணி. வா வா போயிகிட்டே பேசலாம்’

நான் அப்பா சொல்வதைக்கேட்டுக்கொண்டே சென்றேன்.

‘அண்ணியா’

‘ஆமாம் அண்ணிதான்’

  ‘அது எப்பிடி’

‘அவுரு வீட்டுக்கு போறதுகுள்ள இந்தக்கதையை உனக்கு சொல்லமுடியுமான்னு தெரியல.’

‘ நீ சொல்லுப்பா  தெரிஞ்சிகிட்டே போவுலாம்’

கம்மாபுரம் வெங்கட்ராம அய்யருக்கு ஒரு அண்ணன். அவருக்கு  கும்பகோணம் அருகில் அரித்துவாரமங்கலம் என்னும் ஊரில்     ஒரு கிராமத்துப்பெண் பார்த்துக்கல்யாணம்  நிச்சயம் ஆகியிருந்தது.  கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை அதான் வெங்கட்ராம ஐயரின் அண்ணனுக்குப்  பெரிய அம்மை நோய் கண்டது. காலராவும் பெரிய அம்மையும் ருத்ர தாண்டவம் ஆடிய  மோசமான காலம்  அம்மை நோய்க்கு மாரியாத்தாளையும் காலராவுக்குக் காளியையும்  நேர்ந்து கொண்டுது அன்னைக்கு சமுதாயம். அப்படியேதான்  எத்தனையோ அம்மன் கோவில்களில் வேண்டிப்பார்த்தும்  மாப்பிள்ளை அவர் உயிர் பிழைக்கவில்லை முடிந்தும் போனார். கல்யாணத்துக்கு இருந்த பெண்ணுக்கு இன்னும் தங்கைகள் இருவர் இருந்தனர். கல்யாணம்  நின்றுபோய்விட்ட அந்த பெண்ணை மணம் முடிக்கத்தான் யாருமே  முன்வரவில்லை.  கால ஓட்டத்தில்  மனுஷ முயற்சி விஞ்ஞான அறிவு ஆராய்ச்சி  இந்த ரெண்டும் கொடிய நோயையும்  துரத்தி அடித்தது..

 ஆனால்  அந்தக்காலம் அல்லவா அது. நிச்சயித்த மாப்பிள்ளை இறப்புக்கு அந்தப்பெண்ணின் பெற்றோர் மனம் நொந்துபோயினர். இத்தனை பிச்சனைகளையும் பார்த்த வெங்கட்ராம அய்யர் ஓர் முடிவு செய்தார். தனக்கு அண்ணியாக வந்திருக்க வேண்டிய பெண்ணைத் தன் வீட்டுக்குக் கூட்டி வந்தார். தன் வீட்டில் வைத்துக்கொண்டார். பின்னர்தான்  அரித்துவாரமங்கலத்து அந்தப்பெண்ணின் தங்கைகள் திருமணம் செய்துகொண்டு வேறு வேறு ஊர்களுக்குப்போனார்கள்.  கம்மாபுரம்  வெங்கட்ராம ஐயர் மட்டும்  இன்றுவரை  திருமணம் செய்துகொள்ளவில்லை. அண்ணியை அண்ணி என்ற மரியாதையோடுதான் வைத்துக்காப்பாற்றியும் வருகிறார். அவருக்கும் இன்று  அறுபது  தொட்டுக்கொண்ட வயதிருக்கும். கம்மாபுரம்  ஊரே அவரை  ஒழுக்கமுடையவராகத்தான்  பார்த்து வருகிறது’

’ இப்படியும் ஒருவற்கு பெரிய மனசா’  நான் அப்பாவிடம்  கேட்டேன்.

வெங்கட்ராம அய்யர் வீட்டு வாயிலில் அவரே நின்றுகொண்டிருந்தார்.

‘ வாய்யா வா’

’நமஸ்காரம். என் பையன ஸ்கூல்ல சேத்தேன். ஒன்பதாவது. தெனம்  தருமங்குலேந்து  வந்து  வந்து  போவான்.  அவுனுக்கு மதியம் சாப்பாடு வச்சிகிட்டு சாப்புட ஒரு எடம் வேணுமே, அதான் உங்ககிட்ட அவனை  அழைச்சிகிட்டு வந்தேன்’

‘ நல்ல சமாச்சாரம் ரைட்டா சாப்பிடட்டும்.’

‘மோஹனா’ என்று ஓங்கி அழைத்தார்.

அவரின் அண்ணி  மோஹனா வீட்டு வாயிலுக்கு வந்தார்.

‘யாரு வந்துருக்கா பாரு’

‘தருமங்குடி பெரியவரு, வாங்க வாங்க’

அந்த அம்மா  என் அப்பாவை நன்றாக நினைவில் வைத்திருந்தாள்.

‘ தம்பி வீட்டுக்குள்ளாற போய் கூடத்துல ஒக்காந்து சாப்பிடு.  குடிக்க தண்ணி எடுத்து வச்சிக. தோட்டத்துல ராட்டினக்கிணறு இருக்கு. கைகாலு  அலம்பு. சாப்பிட்ட ஏனம் கழுவிக. ஒண்ணும் கூச்சப்படாத தெரிதா’ என்றார் வெங்கட்ராம அய்யர்.

‘ தருமங்குடியாரே நீங்களும் வாங்க. கைகாலு அலம்பிகுங்க சாப்பிடலாம்’

‘ நா வீட்டுக்கு போயி சாப்டுகிறேன்’

‘மணி இப்பவே  ஒண்ணரை. இனிமே தருமங்குடி நடந்து போயி பெறகு சாப்புடறதா. இது  நியாயமா’

அந்த அம்மா என் அப்பாவைக்கேட்டார்.

‘தம்பி உனக்கு ஸ்கூலுக்கு  நேரமாயிடும் சாப்பிடுங்க.’

தோட்டத்தில் கிணற்றடிக்குப்போய் கை அலம்பிக்கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்தேன் நான்  சாப்பாட்டு தூக்கைத்திறந்து சாப்பிட ஆரம்பித்தேன்.

மோஹனா அம்மா அதற்குள்ளாக ஒரு சிறிய  வெங்கல பானையை எடுத்து அடுப்பில் வைத்தாள்.

அப்பாவுக்கும் இலை போட்டு உணவு பரிமாறினாள்.

‘ அய்யா சாப்புடலயா’

‘ நாங்க சாப்பிட்டாச்சு. இனி  இரவுக்குதான் சாப்பாடு.’

‘அந்த சாப்பாடு தான எனக்கு போட்டுட்டிங்க.  இப்ப ஒரு உலையும் அடுப்புல ஏத்திட்டங்க’ அப்பா அந்த அம்மாவிடம் சொன்னார்.

வெங்கட்ராம அய்யர் என்னிடம்  பேசினார்.

‘ நாளையிலேந்து நீ  ஸ்கூலுக்கு சாப்பாடு எடுத்துட்டு வராதே. இங்க என் வீட்டுல வந்து மதியம் சாப்பிட்டுகலாம்  மதியம் கிளாசுக்கு  போயிக்கலாம்’

நான் அமைதியாக அப்பாவைப்பார்த்தேன்’.

‘கண்டிப்பா சொல்றன். என் வீட்டுல மதிய சாப்பாடு உனக்கு’

அந்த அம்மாவும் மனம் நிறைந்து சொன்னாள்.

‘ உங்க பெரிய மனசு’ அப்பா ஆமோதித்தார்.

அப்பா என்னை இப்படி அறிமுகம் செய்துவைத்துவிட்டு தருமங்குடிக்கு புறப்பட்டார்.

‘ பதனமா வந்து சேர்’  எனக்குச் சொல்லிவிட்டு வெங்கட்ராம  நோக்கி  வணங்கி நன்றி சொல்லிவிட்டுப்புறப்பட்டார்.

  இதே  ஸ்கூல்ல என் அண்ணனோட கிளாஸ்மெட் உங்க அப்பா. என்  அண்ணந்தான் இப்ப  இல்லையே’

அந்த அம்மாவைப்பார்த்து அய்யர் சொல்லிமுடித்தார். எனக்கு அப்பா   சொன்ன  அந்தக்கதை நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் கிளாஸ்மெட் அப்பாவுக்கு என்பது மட்டும் எனக்குச் சொல்லவில்லை.

மூன்றாண்டுகள் நான் மதிய உணவு எடுத்துப்போகாமலே அந்த அய்யர் வீட்டில் அந்த அம்மா கையால்  சாப்பிட்டுப் படித்தேன்.

பள்ளிப்படிப்பு முடிந்தது. முதுகுன்றம் நகரக் கல்லூரியில் படித்து ஒரு வேலைக்குப்போய் திருமணமாகியது. என் மனைவியோடு கம்மாபுரம் சென்று அந்த அய்யரையும் அம்மாவையும் பார்த்து  வணங்கி விட்டு வரலாம்  என்று போனேன்.

இருவரும் காலமாகியிருந்தனர். அவர்கள் வாழ்ந்த வீடு ஒரு படிப்பகமாகியிருந்தது.

’மோஹனா படிப்பகம்’

 என்று  சாயம் போன ஒரு பெயர்ப் பலகை மட்டும் தொங்கியது.

படிப்பகத்துள் ஒரு சிறுமி நாளிதழ் ஒன்றை விரித்துப்படித்துக்கொண்டிருந்தாள்.

‘உன் பெயர் என்ன ‘

‘மோஹனா’ எனக்குத்தான் பதில் சொன்னாள்.

கம்மாபுரத்தில் யாருக்கும் அந்த  வெங்கட்ராம அய்யரை மோஹனாவை த்தெரியவில்லை. என் அப்பாவும்தான் இப்போது இல்லை.

-------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment