Saturday, May 6, 2023

கோட்டைகள் ஆய்ந்த விட்டல்ராவ்

 

 

 

கோட்டைகள் ஆய்ந்த விட்டல் ராவ்.                    

 

விட்டல் ராவின் தமிழகக்கோட்டைகள் படித்தேன்.பாரதி புத்தகாலயம் இதனைக் கொண்டுவந்திருக்கிறது. 232 பக்கங்கள்.  இத்தனை சுவாரசியமாய்த் தமிழகக் கோட்டைகள் பற்றிய வரலாறை  வேறு  யாரும் எழுதியிருக்க முடியாது. விறு விறுப்பான  எழுத்து நடை.

 விட்டல்ராவின் புத்தகம்  தமிழகக்கோட்டைகள் பற்றிய வரலாறு  அவைகளின் அமைப்பு வடிவம் கட்டிடக்கலை பற்றிப்பேசுகிறது. கோட்டையை எழுப்பி  அமைத்தவர் வரலாறு சொல்கிறது. அவ்வமைப்பின் இன்றைய  இழிநிலையை விவரிக்கிறது.  அந்தக்கோட்டைகளோடு தொடர்புடைய  வேறு சில வரலாறுப்பற்றிக்குறிப்பிடுகிறது. அக்கோட்டையைச்சுற்றி வாழும் இன்றைய மனிதர்கள் அக்கோட்டை குறித்து  என்ன செய்தியைச்சொல்கிறார்கள் என்பதனை  வாசகர்க்குக்கொண்டு தருவதில் கூடுதல் கவனத்தோடு இருந்திருக்கிறார் விட்டல் ராவ்.

பூங்குன்றன் ஒய்வுபெற்ற இயக்குனர் தொல்லியல் துறை’ சுடர்மணிச் சொற்கோட்டைகளும் நம் வரலாறும்’ என்னும் நூலறிமுகக் கட்டுரையைத் தந்துள்ளார். ‘எதிர் காலத்தில் கோட்டைகளைப்பற்றிய ஆய்வு செய்பவர்கள் தேடிப்பிடித்துப்படிக்கும் நூல்களில் இது முதல் நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று பேசுகிறது அக்கட்டுரை.

இந்நூலுக்கு மேலும் ஒரு  நீண்ட முன்னுரை வழங்கியுள்ள எழுத்தாளர் பாவண்ணன் இப்படிக்குறிப்பிடுகிறார்.’பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச்சென்றார்கள். அங்கே எல்லாபடங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி  ஆக்வாடிண்ட்( நீர்வண்ண) பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக அவை வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் ( ஓரியண்டல் சீனரி) என்னும் தலைப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப்பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல் ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தைத் தனக்குள் வகுத்துக்கொண்டார்.’

பாரதி புத்தகாலயம் தந்துள்ள பதிப்புரையில்’ விட்டல் ராவ்  சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் என்பதாலும், நல்லதொரு விமர்சகரும் ஓவியம் சிற்பங்களில் ஞானமுள்ளவர் என்பதாலும் கோட்டைகளை அவற்றின் பழைய ஐரோப்பிய ஓவியங்களினூடே பார்த்து ஒப்பிட்டு விமர்சித்து அவர் எழுதியிருப்பது அரியது சிறப்புமானது’ என்று கச்சிதமாகக்குறிப்பிடுகிறது.

தோற்றுவாய் என்னும் கட்டுரையில் ஒரு புராதனக் கோயில் கட்டிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசர்களால் அவர்தம் தனிப்பெரும்  கட்டிடக்கலை மரபில்  அமைந்து  வளர்ந்து மெருகேற்றிக்கொள்வது வரலாறு என்று விட்டல் குறிப்பிடுகிறார். பல்லவ அரச மரபில்  சிற்பம் அமைந்த சிறிய கோயில், சோழ அரச மரபில் கற்றளி, அல்லது சுதைப்பணியாக கோபுரங்கள், விஜயநகர ஆட்சியில் உயர்ந்த மதில், கொடிக்கம்பம், ஒன்றுக்குமேற்பட்ட நுழைவாயில்கள் அந்த நுழைவாயிலில் சுதை உருவங்களென அவைகள் தொடரப்பட்டன என்பதறிகிறோம்.

 இந்நூலில்   நாம்   பார்க்கும் கோட்டைகளின்  அற்புத வண்ணப்புகைப்படங்கள் ஆசிரியராலேயே எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சிறந்த புகைப்படக் கலைஞர்.  கட்டுரைகளுக்கு வலு  கூட்டுவதாய்  அவை அமைந்துள்ளன.  புகைப்படங்களில் செஞ்சிக்கோட்டையும் ஆற்காடு மஸ்ஜித்தும் வாசகனோடு பேசிப்பார்க்கின்றன.

நாமக்கல்கோட்டையைப்பற்றிய அடுத்தகட்டுரை இப்படி  விரிவாகப்பேசுகிறது. ’கீழேயிருந்து அண்ணாந்து பார்த்தால் விக்டோரியா மகாராணியின்  குண்டு தலையின்மேல் வைத்த சின்ன கிரீடம் போல மலைக்கோட்டைத் தோன்றுவதாக’ விட்டல் குறிப்பிடுகிறார். சிறிய செங்கற்களும் சுண்ணாம்பு சாந்தும் பயன்படுத்தப்பட்டுக் கோட்டைச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதை அறிகிறோம். கோட்டை ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன்மீது பெருமாள் கோவில் ஒன்று இருந்தமை தெரிய வருகிறது என்கிறார் விட்டல்.

நாமக்கல் மலை அடிவாரத்தின் சற்று உயரத்தில் குடைவரைக்கோயில் உள்ளது. திருமால் நரசிம்மர் கோயில் அது. அதனில் உக்கிர நரசிம்மர் யோக நரசிம்மர் இருவரையும் தரிசிக்கலம். ’இரண்யனை வதம் செய்ததனால் நரசிம்மருக்கு கையில் ரத்தக்கறை’  என்று  சொல்லி அரச்சகர் சந்நிதியில் தீபாராதனை காட்டுவாராம்  விட்டல் குறிப்பிடுகிறார்.  சிலையின் கை சற்று சிவந்து காணப்படும் என்றும் எழுதுகிறார். கோயில் அர்ச்சகர் ‘ இது இரண்டாயிரம் வருஷத்து கோயில் மகேந்திர பல்லவன் காலத்தது’ என்பாராம். விட்டல் நேர் செய்கிறார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதியமான்களால் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில்கள்தாம் இவை’

நாமக்கல் புகழ்பெற்ற அனுமனின் சிலை  நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். அந்த அனுமனின் உச்சந்தலையிலிருந்து கற்றைக் குடுமி முடிந்து கட்டின நிலையில் இருப்பதை அதிகம் பேர் கவனித்து இருக்க மாட்டார்கள் என்கிற சுவாரசியமான செய்தியொன்றையும் வாசகனோடு பகிர்ந்துகொள்கிறார். அந்த அனுமன் கோயிலின் முன் மண்டபத்து தூண் ஒன்றில் உடலுறவு கொள்ளும் குரங்கின் காட்சி புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. பாலுறவு சிற்பங்கள் பல்லவர் காலத்திலோ சோழர் காலத்திலோ கிடையாது. இவை விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டவை என்றும் சொல்கிறார் விட்டல்.

ஓமலூர் கோட்டை இருந்ததற்கான எவ்விதச் சுவடுமில்லை. அது அழிந்து போனது என்று சொல்வதற்குக் கூட மனிதர்கள் இல்லை. இன்றைய கல்விமுறைக்கு ஒரு விமரிசனம் தரும் ஆசிரியர் யதார்த்தம் ஒன்றை விடுவிக்கிறார்.’ ’வேறெந்தப்பிரிவும் கிடைக்காத படசத்தில் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சியடைந்தவர்கள் இறுதி முயற்சியாக எடுத்துப்படிப்பதே வரலாற்றுப்பிரிவு என்பது கண்கூடு.’

1932ல் கட்டப்பட்ட ஸ்டான்லி அணை என்னும் மேட்டுர் அணை நீர்த் தேக்கத்தில் வழக்கமாய் மூழ்கிடும்  திப்புசுல்தான் கோட்டை, ஜலகண்டேசுரர் கோயில் நந்தி மண்டபம், கிறித்துவ தேவாலயம் பற்றியும் நாம் அறிகிறோம். பவானி நீர்தேக்கத்தில் மூழ்கிய விஜயநகர மன்னர்களால் எழுப்பப்பட்ட   டணாய்க்கன் கோட்டை அதாவது தர்ம நாய்க்கன் கோட்டை பற்றியும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணத்து ஆட்சியாளர் திப்புசுல்தான் கொண்டாடிய இந்து மக்களின் நல்லுறவையும் அவர் கடைபிடித்த தீவிர மதுவிலக்குக் கொள்கையையும் வாசகர்க்குச்சொல்லிச்செல்கிறார் விட்டல்.

மூன்றாவது கட்டுரை ஹொசூர் பாரமஹால் பற்றியது.

சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஹொசூர் பகுதிகள் பாரமஹால் என்றழைக்கப்படுகின்றன. இந்தப்பகுதியின் வரலாற்றில் ஹைதர் அலியும் திப்புசுல்தானும் மிக முக்கியமானவர்கள். ஹொசூர் கோட்டையில் இரண்டு சமாதிகள் உள்ளன. ஒன்று பிரெட்  என்கிற வெள்ளைக்கார கலக்டர் சமாதி மற்றது அவரின் நாய் சமாதி. முதலில் நாயைச்சுட்டுக்கொன்றுவிட்டு பிறகு தன்னையே அவர் சுட்டுக்கொண்டராம்.

பிரெட் இங்கிலாந்தில் ஒரு பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு விடலாம் எனப் ப்பார்த்திருக்கிறார். அப்பெண்  ’முதலில் கெனில்வர்த் மாளிகையைப்போல ஒரு மாளிகையை ஹொசூரில் கட்டுங்கள்’ என்றாராம்.  பிரட்டும் அப்படியே கட்டினாராம். ஆனால் அவள்தான் இந்தியா வரவில்லை. அவள் வேறு ஒருவனோடு ஓடிப்போய்விட்டாள். அன்று அந்தக்கோட்டையைக்கட்ட பிரெட்டுக்கு ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய் செலவானது என்பது செய்தி. அரசுப்பணத்தையும் சொந்தப்பணத்தையும் அந்த கலெக்டர் செலவு செய்து கட்டினாராம். அவள்  ஓடிப்போய்விட்ட அவமானம் தாங்க முடியாமல் பிரெட் அங்கெயே தற்கொலை செய்துகொண்டாராம். அவரின் நாய் சுடப்பட்டிருக்கவேண்டாம்.

வீட்டுவசதிவாரிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஹொசூரின் வரலாற்றுச்சின்னங்களான கெனில்வர்த் கேசில், திப்புசுல்தான் கோட்டை,  அகழி முதலியன தகர்த்தெறியப்பட்டது என்பது இன்றைய செய்தியாகும்.

நான்காவது கட்டுரை தென்கரைக்கோட்டை பற்றி விளக்குகிறது. இது ஹரூரிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் உள்ளது. பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பள்ளி ஆசிரியர் அழைத்துச்சென்றுள்ளார்.  எல்லோரும் நடந்தே சென்று திரும்பியிருக்கிறார்கள் என்பது இன்று ஆச்சரியமாக இருக்கிறது. ஜல்கண்டேசுவர நதி அங்கே சல சலத்து ஓடுவதை ஒவியமாக எழுத்தில் கொணர்ந்துள்ளார் இந்நூல் ஆசிரியர். பல்வேறு  செவிவழிக்கதைகளை கோட்டைப் பற்றி இவர்களிடம் அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். சிவன்கோயிலும் பெருமாள் கோயிலும் சிதிலமடைந்து துகள்களாய்க் காணப்படுகின்றன.

ஐந்தாவது கட்டுரை கிருஷ்ணகிரி தங்கணிக்கோட்டை பற்றி விவரிக்கிறது. தங்கணி என்கிற பெண் பூதம் மிகுந்த அட்டகாசம் புரிந்து தொல்லைகொடுத்து வந்ததாம். அதை சம்ஹாரம் செய்ய வேட்டைக்காரன் உருவில் விஷ்ணு வந்தாராம். ’பேட்ராய’  என்பது கன்னட பாஷையில் வேட்டையைக்குறிக்குமாம். டெங்கணிக்கோட்டையில் உள்ள பெருமாளுக்கும் பேட்ராயசுவாமி என்று பெயராய் இருக்கக் காண்கிறோம்.

ராயக்கோட்டை, ஜெகதேவி, வீரபத்ரதுர்கம்,மகாராஜகடை  என்கிற தலைப்பில் வந்துள்ளதுதான் ஆறாவது கட்டுரை. கிருஷ்ணகிரியிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜெகதேவி. மகாராஜாகடை கிருஷ்ணகிரியிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மகாராஜா என்பது  சத்ரபதி சிவாஜியைக்குறிக்கும். இங்குள்ள மலைக்கோட்டைக்கு மகாராஜா கடை என்பது பெயர். இங்கு வெங்கட்ரமணா கோயில் ஒன்றும் பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுகின்றது. பெண்ணை ஆற்றுச்சமவெளியை அடுத்து உயர்ந்து காணப்படும் வீரபத்ர துர்கம், திப்புசுலதானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

ஜெகதேவராயனின் தலைநகராய் விளங்கியது ராயக்கோட்டை.  இது பாலக்கோடு கணவாயை நோக்கி அமைந்திருக்கிறது. ஹைதர், திப்புசுல்தான் இவர்களிடையே போர்க் காலத்தில்  இக்கோட்டை முக்கியத்துவம் பெற்றதாகும். ராயக்கோட்டை மலை உச்சி ஏறி இயற்கை அழகை ரசிப்பது பெரும்பேறு.

ஏழாவது கட்டுரை சங்ககிரி ஆத்தூர் தியாகதுர்கம் செங்கல்பட்டு கோட்டைகள் பற்றி விஸ்தாரமாகப்பேசுகிறது. சங்ககிரிகோட்டை ஹைதர் அலியின் கஜானாவாக  விளங்கியது. பின்னர்  அந்த வரிப்பணம்  ஸ்ரீரெங்கபட்டணம் கோண்டுசெல்லப்பட்டதாம்.

சேலத்திலிருந்து ஒரு மணி நேர சாலைப்பயணம் ஆத்தூர் சென்றுவிடலாம். ஆத்தூரில் ஓடும் வசிஷ்ட நதிக்கு வடக்கே இருக்கிறது ஆத்தூர் கோட்டை.   கோட்டையின் உள்ளே கிழக்கிந்திய கம்பெனியின் லெஃப்டினெண்ட் கர்னல் ஜான் முர்ரேவுக்கு ஒரு நினைவுச்சின்னம், அவர் மனைவி ஆன் முர்ரேவால்  எழுப்பப்பட்டுள்ளதாக  கோட்டைப்பலகையில் எழுதப்பட்டுள்ளது.  இதனை ஊர் மக்கள் ராஜா சமாதி என்றழைக்கின்றனர்.

1790ல் திப்புசுல்தான் ஒரு படையுடன் தியாகதுர்க்கத்தைத் தாக்கியுள்ளார்.பிரிட்டீஷ் காப்டன் ஃப்லிண்ட் அவரை எதிர்த்து நின்றார். இன்று இக்கோட்டைப்பகுதிகள் வீடு கட்டும்  கருங்கல் ஜல்லிக்காக அழிக்கப்பட்டு வருவது  பெருஞ்சோகம்.

செங்கல்ப்பட்டுக்கோட்டையில் ஒரு ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. இவ்வளாகத்தில் தாலுகா கச்சேரி நீதிமன்றம் சீர்திருத்தப்பள்ளி இவை இயங்குகின்றன. அரண்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் ரயில்வே தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன.

வண்டிவாஷ், வேலூர், சட்றாஸ், சந்திரகிரி,செயிண்ட் ஜார்ஜ், செயிண்ட் டேவிட் பாலக்காடு கோட்டைகள் பற்றி எட்டாவது கட்டுரை பேசுகிறது. வந்தவாசி வரலாற்றில் ஒரு முக்கியமான இடம். இங்கு பிரிட்டீஷாருக்கும் ஃபிரெஞ்ச் படையினருக்கும்  கடும்போர் நிகழ்ந்திருக்கிறது. ஃப்ரெஞ்ச் ஆட்சியரின் அதிகாரம் பாண்டிச்சேரி காரைக்கால் ஏனாம் மாஹி என்பதோடு சுருங்கிப்போக  இந்த வந்தவாசி யுத்தமே காரணமாயிற்று. செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் சட்ராஸ் உள்ளது. சதுரங்கப்பட்டினமே சட்றாஸ் என்றானது. இது டச்சுக்காரர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாயிருந்தது. சட்றாஸ் ஒரு டச்சு வியாபாரக் குடியேற்றமாய் நிர்மாணிக்கப்பட்டது.

விஜயநகரப்பேரரசின் தலைநகராய் சந்திரகிரி விளங்கியது. அறுநூறு அடி உயரத்திலுள்ள சந்திரகிரிக்கோட்டை வேலூர் கோட்டையை ஒத்துள்ளது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கான காலியிடம் 1639ல் அசல் பத்திரம்  பூந்தமல்லி நாயக்கால் கிழக்கிந்தியக்கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுளளது. சந்திரகிரி அரசு கிழக்கிந்தியக்கம்பெனிக்கு நிலம்  வழங்கியதை அங்கீகரித்துள்ளது. விஜயநகர் அரசின் அசல் பத்திரம்( 639).   1645ல்  இதனையே  செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என உறுதிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது.

விஜயநகரமன்னர் ஸ்ரீரங்கராயர் எழுதிக்கொடுத்த வாசகம்.

‘எனது புதியநகரங்களில் ஒன்றை அளிக்கிறேன். அங்கு நீங்கள் ஒரு கோட்டையை எழுப்புகிறீர்கள். அதனைச்சுற்றிப்பாதுகாப்பு அரண்களையும் கட்டுகிறீர்கள். உங்கள் கடல் வாணிபத்தையும் இதர வியாபாரத்தையும் செய்வீர்களாக’

வியாபாரம் மட்டுமா நடந்தது. இருநூறு ஆண்டுகள் பிரிட்டீஷாருக்கு ’அடிமை ஆனோம்’ என்பது  நமது சோக வரலாறு.

 தேவனாம்பட்டினத்து செயிண்டேவிட் கோட்டை 1686ல் எலிஹ யேல் கவர்னரால் வாங்கப்பட்டது. செயிண்டேவிட் கோட்டையில் குமாஸ்தாவாக இருந்த  ராபர்ட் க்ளைவ்,  ஸ்டிஞ்சர் லாரன்ஸ்  என்பவருடன் சேர்ந்து சென்னை மீது ராணுவத்தாக்குதல் நிகழ்த்தி இந்தியாவில் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார்.

 சத்துவாச்சேரி கோட்டையின் இன்றைய இழிந்த நிலமை குறித்தும் விவரமாகக்குறிப்பிடுகிறார் விட்டல். வேலூர் கோட்டையின் அழகும் அமைப்பும் ஜலகண்டேசுரர் கோவிலின் அமைவிடமும் ஆசிரியரால் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது. 1806ல் நிகழ்ந்த சிப்பாய்க்கலகம் பற்றியும் அதோடு தொடர்புடைய வேலூர் கோட்டை பற்றிய விவரணையை இவண் காண்கிறோம். 1922 ல் வேலூர் கோட்டை தேசிய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாய் அறிவிக்கப்பட்டது. இன்று தொல்பொருள் ஆய்வுத்துறையின்  கீழ் உள்ளது.

ஹைதர் அலி 1766ல் கட்டிய பாலக்காடு கோட்டையின் அழகும் அமைப்பும் குறித்து விட்டல் கச்சிதமாகக்குறிப்பிடுகிறார். நகரின் மய்யமாயுள்ள இக்கோட்டையும் அகழியும்  இன்றளவும் உயிர்ப்போடு இருப்பதை மகிழ்ச்சியோடு  ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

செஞ்சி பற்றிய விபரம் கட்டுரை ஒன்பதில் கொடுக்கப்பட்டுள்ளது. செஞ்சியின் ஆதிபெயர் செங்கிரி அதாவது சிவப்பு மலை. இங்குள்ள மூன்று மலைகளில் ஒன்றில் செஞ்சியம்மன் கோயில் உள்ளது. ஆகவேதான் இது செஞ்சியானது என்கின்றனர். கிருஷ்ணபுரம் என்கிற பெயரும்  செஞ்சிக்குண்டு.  வெகுவாக இடையர்கள் வாழும் பகுதி அவர்களின் கடவுள் கிருஷ்ணன்.  செஞ்சிக்கோட்டைப்பகுதியில் கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, ராஜகிரி அல்லது ராஜாகோட்டை,மற்றும் சக்கிலியன் துர்க்கம் ஆகிய மூன்று  மலைகள்  இங்குள்ளன. செலுத்தவேண்டிய வரி நிலுவை காரணமாக சதாதுல்லாகானுக்கும்  ராஜா  தேசிங்குக்கும் யுத்தம் மூண்டது. 1714 அக்டோபர் 3 அன்று 22 வயதான தேசிங்க் யுத்தத்தில் கொல்லப்பட்டார். இந்த சுற்று வட்டாரத்தில் தேசிங் பற்றியும் அவனது குதிரை பற்றியும் கதைப்பாடல்களும் கூத்துகளும் நிறையவே காணப்படுகின்றன.வெங்கட்ரமணா கோயில் ஒன்று பிரம்மாண்டமாய் இங்கு அமைந்துள்ளது. ஏழு நிலைகொண்ட இக்கோபுரம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒன்றாகும்.

திருமெய்யம், திண்டுக்கல், டேன்ஸ்பர்க், பெங்களூர் கோட்டைகள் பற்றி  பத்தாவது கட்டுரை விவரிக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் திருமெய்யம் உள்ளது. மலையில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்குமானது. இந்த இரண்டு கோவில்களுக்குமிடையே இருந்த நீண்டகால தாவாவை  ஹொய்சாள தளபதி அப்பண்ண தண்ட நாயகா தீர்த்துவைத்ததாகக் கல்வெட்டுச்செய்தியால் அறியமுடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனும் அவன் தம்பி ஊமத்துரையும் திருமய்யம் கோட்டையில் தங்கியிருந்ததாகவும் தொண்டைமான்தான்  அவர்களை பிரிட்டீஷாருக்குக்காட்டிக்கொடுத்து விட்டார் என்ற செய்தியும் உண்டு. திண்டுக்கல் கோட்டைத் தரைமட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மேலே செல்ல  800 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மலைமீதுள்ள சிறைக்கூடங்கள் பயங்கரமானவை என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

டேன்ஸ்பார்க் கோட்டை எனும் தரங்கம்பாடிக்கோட்டை டென்மார்க் அரசுக்கு சொந்தமானது. அதனை 1845ல் பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி  இதனை விலைக்கு வாங்கியது. அண்மையில் வந்த சுனாமி அலைகள் கோட்டையை அழிக்கவில்லை.  கோட்டையைத் தடுப்புச்சுவர்கள் காப்பாற்றிவிட்டன

பெங்களூர் கற்கோட்டை கலாசிபாளையத்தில் உள்ளது. பெங்களூர் என்பது பெந்தக்காளூர் என்பதன் திரிபு. இவ்வூரை நிர்மாணித்த  மாகடி கேம்பகவுடா வேட்டை முடிந்து  களைப்பு மேலீட்டால் ஒரு குடிசையில் கிழவியிடம் உணவு கேட்டாராம். கிழவி வேகவைத்த  வெறும் பயரை அவருக்கு  கொடுத்தாராம். அரண்மனைக்கு வந்து தன்னைப் பார்க்குமாறு அந்தக்கிழவியிடம் பாளையக்காரர் சொல்லிச்சென்றாராம். மாகடி சென்ற கிழவிக்கு மன்னர்  ஒரு வீட்டையும் பொருளையும் பரிசாக வழங்கினாராம்.  அதன்பின் 1537ல்  கெம்ப கெளடா உருவாக்கிய நகருக்கு ‘பெந்தக்காளூர்’ என்று பெயரிட்டு சிறப்பு செய்துள்ளார். வெந்த பயறு என்பதுவே இதன் தமிழாக்கம். அது காலப்போக்கில் பெங்களூர் என்றாயிற்றாம். இன்று ஆஞ்சனேயர் கோவில், வெங்கட்ரமணா கோவில், விக்டோரியா அரசு மருத்துவமனை  பெரிய மசூதி என்பன கோட்டை வளாகப்பகுதியிலேயே அமைந்துள்ளன. பெங்களூரில் உள்ள திப்புவின் அரண்மனை ரஷ்க்-ஏ-ஜன்னத் என்ற பெயர் கொண்டது. சொர்க்கமே அதனைக்கண்டு பொறாமைப்படும் அழகு வாய்ந்தது என்பது அதற்குப்பொருளாகும்.

கடைசி கட்டுரை ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை பற்றியது.  இக்கோட்டையும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை போன்று சமவெளியில் அமைந்தது. வரலாற்றில் ஸ்ரீரங்கபட்டண வீழ்ச்சி பிரிட்டீஷ் ஆட்சி நிலைத்ததற்கான பிரதான காரணமாகும். திப்புவைக்கண்டு திகைத்தவர்கள் பிரிட்டீஷார்.

கர்னல் பெய்லி ,ஜெனரல் பேய்ர்டு,கர்னல் ப்ரெய்த் வெயிட், ரேசர் ,லின்ஸே, காப்டன் ருலே ஆகிய பிரிட்டீஷ் ராணுவ அதிகாரிகள் திப்புவின் பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர்.

சரித்திரம் மாறியது. 1792ல் பிரிட்டீஷார்  திப்புவோடு  மோதி வெற்றி பெற்றனர். தனது நாட்டில் பாதியும்  மூன்று கோடி ரூபாயும் பிரிட்டீஷாருக்கு கொடுத்துவிட்டு தான் பெற்ற இரு செல்வங்களை பணயக்கைதிகளாய் அனுப்பிவைத்தார் திப்பு.  1799 மே 4 அன்று ஸ்ரீரங்கப்பட்டணம் பிரிட்டீஷார் கைவசமானது.  போரில் தோற்ற திப்புசுல்தானின் போர்வாள் ஜெனரல் பேய்ர்டுக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1799 மே 5 அன்று திப்புவின் உடலை முழு ராணுவ மரியாதையோடு கும்பெஜ் கல்லறையில் அடக்கம் செய்தவிபரத்தை  தொல்லியல் துறை அறிவிப்பு பலகை குறிப்பிடுகிறது.   

திப்புவின் போர்வாள்  2003ல்  பேய்ர்டின்  சந்ததியினரால் ஏலம் விடப்பட்டது. விஜய மல்லய்யா  அதனை ஒண்ணரைகோடக்கு ஏலம் எடுத்தார் என்பதும் செய்தி.

 ஸ்ரீரங்கப்பட்டணம் பிரிட்டீஷாரால்  இடித்துத் தகர்க்கப்பட்டது. நகரின் அழகு முகம் கோரமுகமானது. திப்புவின் லால் மஹால் இடிக்கப்பட்டு அதன் விலை உயர்ந்த கற்களும் மரங்களும் உதகமண்டலம்  கொண்டுவரப்பட்டு ஸ்டீஃபென்ஸ் சர்ச் மற்றும் ஹோலி டிரினிடி சர்ச்கள் கட்டப்பட்டன.

அச்சம் தருவித்த பிரம்மாண்ட கோட்டைகள் இன்று அவைகளின் மகத்துவம் குன்றி பராமரிப்பு குறைந்து காசு கொடுத்து மக்கள் பார்க்கும் காட்சிப்பொருள்களாகி  பரிதாபமாகக் கிடப்பது  வரலாற்றுச்சோகம்.

தமிழகக்கோட்டைகள் எழுதிய விட்டல் சாதித்துத்தான் நிற்கிறார். சரித்திரப்பிரியர்கள் நிறைவாகப்பாராட்டுவோம்.

-------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

No comments:

Post a Comment