நெய்வேலி
பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்
’நட்சத்திரங்களைத்துணைக்கு
அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது. கதை சொல்லும் நேர்த்தியில் பாரதிக்குமாரின் சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன. பாரதிக்குமார் தமிழகத்தின் பல்வேறு
இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர்.
வெற்றியாளர்.
பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’
23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர்
சென்னை11 வெளியிட்டுள்ளது.
இந்நூலை தனது சகோதரர்
குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும் பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில்
அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர்,
வாசகர்க்கு அறிவிக்கிறார். பின்புலமாகி நிற்கும் அந்த ‘ வேர்களை’ அவர் பெருமையோடு
சுட்டுகிறார்.
இந்நூலில் பாரதிக்குமாரின் முன்னுரை படைப்பாளியின் தனிமை குறித்து இப்படிப்பேசுகிறது.’
ஒரு சிறுமியின் பூ தொடுத்தல் போல ’தனிமை’ எண்ணங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு சலியாமல்
கோர்த்துக்கொண்டே இருக்கிறது. அவரவர் கைகளில் அவரவர் மாலை’.
ஒவ்வொரு படைப்பும்
அப்படியே.
’மழ’ என்னும் சிறுகதை முதல் சிறுகதை. செளந்தர சுகனில்
வெளிவந்த படைப்பு. துணிக்கு இஸ்திரி போட்டுத்தன்
வாழ்க்கையை ஓட்டும் ஒரு தோபியின்
குடும்பம். மழையால் அவர்கள் படும் அவத்தையை ஓவியமாக்கிக்காட்டுகிறது. சமூக அடுக்கில் எளிய தொழிளாளர்கள் படும் வேதனைக்கு விடிவுதான் ஏது. மழை
வந்துவிடுமா வந்துவிட்டால் இஸ்திரி
போடும் அவர்களின் அன்றாடப்பிழைப்பு என்னவாகும்?.
‘ நல்லவங்க
இருக்கறதுனாலதான் ஊருக்குள்ள மழப்பேயுமாமே. எல்லா நல்லவங்களையும் எல்லை தாண்டி உட்டுடு
மாரியாத்தா’ சொல்லி கன்னத்தில் போட்டுக்கொள்கிறாள்
தேவானை. அவ்வையார் வாக்குப்படி நல்லார் ஒருவர்
உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பதறிவோம். தேவானைக்கோ மழை வருதல்
அவள் கண்களை அல்லவா குளமாக்குகிறது.
இலங்கைத்தமிழச்சமூகம்
பட்ட துயரங்கள் சொல்லில் அடங்காது. அது குறித்து ’ நடு கல்’ என்னும் சிறுகதை பேசுகிறது. இலங்கைத்தமிழர்கள் பேசும் சொல்வழக்கை பாரதிக்குமார் சிறுகதையில் அனாயசமாகக்கையாள்கிறார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் யாழ்ப்பாணத்தமிழ் நூலகம் எரிந்துபோன சோக வரலாறு
நெஞ்சைவிட்டு அகலும் விஷயம் இல்லையே.
யாழ் நூலகச்செல்வத்தை எரித்தவர்கள் நம் சோதர
மனிதர்களையும் எரித்தார்கள். தீவுத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் குரல் பேசுகிறது.
‘இந்த மண்ணுல
என்ன மிச்சமிருக்கு? மரம் செடியை கூட ஆமிக்காரன் வெட்டிட்டுப்போறானுவ. பெடியன்க ஒளிஞ்சிப்பானுகளாம்…மொக்கையா
நிண்ட மரங்களைப்பார்த்து கும்பி எரிஞ்சது செல்லம்மாளுக்கு. ‘ மரம் என்ன பண்ணிச்சு வெளங்குவீங்களாடா’
எண்டு சபித்தாள் மனசுக்குள்… ஷெல் அடிச்சு இருந்த மரங்களும் கருகி, மிச்சம் சில பூச்சிகளும், மண்ணும்தான்….
மாதவி என்னும் தமிழ்ச்சிறுமி இந்த களேபரங்களுக்கிடையே சமைந்து நிற்கிறாள். அவளுக்குத்தலைக்கு
ஊற்றத் தண்ணீர் ஏது. அச்சிறுமியின் தாய் பேசுகிறாள். ‘ தலைக்கு தண்ணியூத்தாம போனாலும்…
கறையைக்கழுவக்கூட ஏலலையே ஐயோ’ என்று.
சிங்கள ஆமிக்காரன் தமிழ்ச்சிறுமியின் பிறப்புறப்பில் இரத்தம் வழிந்தது
பார்த்துத் தன் இனத்து சிங்களவன் குறி பார்த்து அவ்விடத்தே கச்சிதமாய்ச்சுட்டு இருப்பதாய்ப் பெருமைபேசுகிறான். வாசகன் இவண்அதிர்ந்து போகிறான். எழுத்து என்பது சுற்றி நிகழும் சமூக அவலங்களப்
ஆவணமாக்கித்தரவேண்டும் இங்கே அது சாத்தியமாகி
இருக்கிறது.
’பனியில்
நனையும் கவிதைகள்’ என்னும் சிறுகதை சமூகத்தில் கவிதைக்குச் சரியான வரவேற்பு இல்லாமல்
ஒரு கவிஞன் படும் பாட்டை பட்டியல் இடுகிறது. பாரதிக்குமார் எழுதுகிறார். கவிதைப்புத்தகம் ஒன்று தன்னைப்படைத்த அக்கவிஞனைப்பார்த்து இப்படிப்பேசுகிறது. ‘ இப்பல்லாம்
கவிதை எழுதறது கள்ளத்தொடர்பு வச்சிக்கிற மாதிரி. சொல்லவும் முடியாது. ரிஜிஸ்ட்டர் மேரேஜ்
பண்ணவும் முடியாது.ரகசியமா உனக்குள்ளேயே முணங்கிக்க. கொஞ்சம் கவிதை சத்தம் கேட்டாக்கூட
போதும். தெறிச்சி ஒடிடுவானுங்க.இந்த லட்சணத்துல புத்தகம் விக்க தூக்கிட்டு அலையிற நீ’ . கதை ‘ படித்திட்ட வாசக மனம் வலிக்கத்தான் செய்கிறது.
மூல பவுத்திர
நோய்க்கு சஸ்திரமில்லாத சிகிச்சை. ’வாருங்கள்
வாருங்கள்’ என்று கூவி அழைக்கும் ரோஸ் கலர்
நோட்டிசை வாங்கிய அடுத்த கணம் கை வியர்வையைத் துடைத்து வீதியில் வீசுவது போல் கவிதைப்புத்தகங்கள் அவமதிக்கப்பட்யுகின்றன.
கூர்மையான விமரிசனம் ஒன்றை கவிதாமண்டலத்தார்க்குப்பாரதிக்குமார் பதிவு செய்து விடுகிறார்.
அமரர் கல்கி
நினைவுச்சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதையாக ‘பிடிபட்டவன் ‘ என்னும் சிறுகதை வருகிறது. போலீசுகாரர்கள் அப்பாவி மக்கள் மீது நடத்தும் அடாவடித்தனத்தை
அப்பட்டமாய்த் தோலுறிக்கிறது. வாசகர்க்கு மனதில்
‘ஜெய்பீம்’ திரைப்படம் நினைவுக்கு வரக்கூடும்.
மருதப்பன்
ஆடு மேய்த்து வாழ்க்கை நடத்துபவன். ஏதும் அறியா
அவனை தீவிரவாதியாய்ச் சோடிக்கும் போலீசு. தலைகுனிந்து
அவனை நீதிபதி கேட்கும் வினா.
‘போலீசாரால்
தேடப்படும் தலைமறைவுக்குற்றவாளிகளுடன் சேர்ந்து தேசவிரோதச்செயல், பிளவுபடுத்துதல்,கூட்டுச்சதிசெய்து
அரசுக்கு எதிராக நடத்தல் ஆகிய ஜாமினில் விடமுடியாத குற்றங்கள் உன் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
நீ இவற்றை ஒப்புக்கொள்கிறாயா…?’
ஆடுமேய்க்கும்
மருதப்பனின் ’ புரிலிங்க எசமானே’ என்னும்
பதில் நம்மைச்சோகம் கொள்ள வைக்கிறது.
வாக்கு என்னும்
சிறுகதை இலக்கியப்பீடம் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றகதை.
‘ஓட்டு போட
வராதவங்களை ஜெயில்ல போடணும், ரேஷன் கார்டை புடுங்கணும்னு உங்காளுவ பெருசா செத்த மின்னாடி
சத்தம் குடுத்தாங்க,… அது மாதிரி வோட்டர் லிஸ்டில என் பேர் இல்ல நான் வரிகட்ட மாட்டேன்னு கேசு போடு சாரு… படிச்சவங்க
பேசாம வந்தா நாங்க இன்னா பண்றது
… கத்தத்தான் முடியும்…?’ என்று தான் போட வேண்டிய வோட்டை வேறு ஒரு ஆள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதற்குச்
சண்டைபோடுகிறாள். மருதாயி படித்துவிட்டு அக்கிரமத்தை சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்து நிற்கும் மனிதர்களைப்பார்த்து
நியாயத்தைப்பேசுகிறாள். படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான்
என்பார் மாகவி. நெய்வேலி பாரதிக்குமார் இச்சிறுகதையும்
அதே செய்தியைத்தான் இங்கே பேசுகிறது.
’விசும்பல்’
என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை , இறந்தோர் இல்லங்களில் ஒப்பாரிவைத்து பாட்டுப்பாடி வயிறு பிழைக்கும் பெண்கள் படும் சோகம்
குறித்துப்பேசுகிறது. பாரதிக்குமார் எழுத்தில் கொணரும் அங்கதச்சுவையை இங்கே வாசகன்
ரசித்துப்பார்க்க முடிகிறது. ஒப்பாரி வைக்கும் பெண் இறந்து போனவன் வாழ்ந்த வாழ்க்கையை
எட்டிய மட்டும் உயர்த்தி, நீட்டி நீட்டி ப்பாடி ஒப்பாரியாக்கி நிற்கிறாள்.
‘ நெசம்தான்
ஆத்தா!பெத்தவ கூட இத்தனை பதறல… அட! இவ ஒப்பாரிக்கே சாகலாம் போலிருக்குன்னா பாத்துக்கயேன்’
மகன் சிங்கப்பூரிலிருந்து
வரவேண்டும் என பிணத்தை வைத்துக்கொண்டு காத்து
இருக்கிறார்கள். பாரதிக்குமார் ஒப்பாரி பாடும்
கிழவி பற்றிச்சொல்கிறார்,
‘ இருக்காதா
பின்னே…. நம்ம வல்லக்கோட்டக்காரரோட மூத்தாரு செத்தப்ப, அவரு புள்ள சிங்கப்பூரிலேந்து
வரணும்னு ரெண்டு நாள் பொணம் கெடந்துது.. மவராசி ஓயலியே! ரெண்டு நாளும் இவ அசராம வெச்ச
பாட்டுலதான் பொணம் நாறாம தூங்குச்சுன்னு இப்பவும் ஊர் பேசுதே’
குடிகார மாசிலாமணி
அந்த ஒப்பாரிப்பாடிப் பிழைக்கும் மருதாயியை விரட்டும் விரட்டு வாசகனை கதிகலங்க வைக்கிறது.
மாசிலாமணி இது அந்தக் குடிகாரனின் பெயர். பாரதிக்குமாரின் எழுத்தின் நுண்மை இங்கே பளிச்சிடுகிறது.
உறவே இல்லாத
எத்தனையோ பிணத்துக்காக தொண்டை வறள ஒப்பாரி பாடிய மருதாயி பொழைப்புல மண்ணு விழுந்துடுமேன்னு
பயந்து வாயில் துணியைப்புதைத்துக்கொண்டு சப்தம் வராமல் அழுகிறாள். மருதாயியின் மகன் ராசு குடிகாரனாகித்தாயை நொந்துபோகவைக்கிறான். வதைபடுகிறது
மருதாயியின் வாழ்க்கை.
’கொடுங்கனவு’
என்னும் சிறுகதை அரசாங்க ஊழியனான போலீசுக்காரன்படும் இன்னல்களை அவமானங்களை விவரித்துப்பேசுகிறது. அத்யாவசியமான சொந்த அலுவல்கள் ஆயிரம் இருக்க அவற்றை ஓரங்கட்டி அலுவலகத்தையே இருபத்து நான்கு
மணி நேரமும் கட்டியழும் போலிசு உத்யோகத்தைப்பற்றி நல்ல விமரிசனமாகக்கதை வருகிறது,
ஒரு வண்டியோ
ஆம்புலன்ஸோ கிடைக்காமல் பிணத்தை சைக்கிளில்
வைத்து முள் காடெல்லாம் உருட்டிக்கொண்டு வரும் ஒரு போலீசுகாரர். பத்திரிகைக்காரன் ஒருவன்
‘ சைக்கிள் கேரியரில் பிணம் போலீசின் கையாலாகாத்தனம்
‘ என்று தலைப்பிட்டு போட்டோவோடு செய்தி போடுகிறான்.
விளைவு போலீசுக்காரர் அப்பாவி, தம்பா சஸ்பெண்டாகிறார்.
அப்பாவிகள் போலீசிலும் உண்டுதானே.
தம்பா ஒரு
உறவினர் சாவுக்குப்போகிறார். மனைவிக்குப்பதில் சொல்லியாகவேண்டுமே. ஊர் எழவுன்னா பெரிது, உன் வீடு
மட்டும் சிறிது என்று வசை பாடுபவள்
மனைவி. சாவு வீட்டுக்கு வருகிறார்.பிணம் முன்னே கோவென்று கதறி அழுகிறார். அந்தப் பெரிய மாமனாரின் சாவுக்கு வந்தவர்கள் இவர்
பாசத்தை எடைபோடுகிறார்கள். வியக்கிறார்கள்.அவர்
மனம், தனது இலாகா அவருக்கு
வழங்கிய தண்டனையை நினைத்து நினைத்து அல்லவா அழுகிறது. பாரதிக்குமார் மனித மனம் படும் அவத்தையை வாசகனுக்குக் காட்சியாக்கியிருக்கிறார்.
’நட்சத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’
என்னும் நூலின் தலைப்பாகிய சிறுகதை உலக அரசியல் பேசுகிறது. வட கொரிய தேசத்தில் ஜனநாயகம்
மிதிக்கப்படுவதை கதையாக்கி இருக்கிறார் பாரதிக்குமார்.
’சோங்பன்’
என்னும் ஒரு சமூகப்பிரிவு வட கொரியாவில் வாழ்கிறது. ஒரே ஒரு நாள் அரசாங்கத்திற்கு எதிராய் ஒருவன்
ஒரு துரும்பை அசைத்து விட்டால் போதும்
அவன் தேச விரோதி. அவன் பிள்ளைகள் மூன்று தலை
முறைக்குக் குற்றவாளிகள். மூன்று தலைமுறைக்கு கொத்தடிமைகளாய் வாழ்ந்து பின்னர் அவர்கள் நன்னடத்தை பரிசீலிக்கப்பட்டு மட்டுமே சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களாம். விஷயம்
கேட்கவே வாசகனுக்கு மனம் பதை பதைக்கிறது.
அவர்கள் வீட்டுப்பெண்கள்
தினம் தினம் வேட்டையாடப்படுவார்களாம். சீரழிக்கப்படுவார்களாம்.
எப்படியிருக்கிறது மனித வாழ்க்கை. செவ்வாய் கிரகத்துக்குச்சென்று மனித இனம் அங்கே வாழ்ந்துவிடலாமா என்கிற வினா இருக்கட்டும், வடகொரிய ‘சோங்பன்’ மக்களுக்கு விடிவு கிடைப்பது எப்போது?
வாசித்த மனம்
சோகத்தில் ஆழ்கிறது.
‘உண்மையில்
எல்லா யுத்தங்களும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுபவைதான். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை
நிகழ்த்துவதில்தான் வெற்றியின் வரலாறு எழுதப்படுகிறது.’ இப்படி எழுதிச்செல்லும் பாரதிக்குமார், இராமாயணச் சீதை பட்ட துயரத்தையும், மாபாரதப் பாஞ்சாலி பட்ட அவமானத்தையும் நினைபடுத்துகிறார்
என்பதாய்க்கொள்ளலாம்.
மாகவி பாரதி
ஜாவா சுமத்திரா மரீஷியஸ் கரும்புத்தோட்டத்தில் தமிழ் நிலத்து ஆண்களும் பெண்களும் பட்ட துயர்களை எண்ணிக் கண்ணீர் சிந்தியது கதை படிப்போர்க்கு மனத்திரையில் ஓடவே செய்யும். இலங்கத்தமிழர்
பட்ட சோகமும் மானிட வரலாற்றில் நீங்காத கறைதானே.
இப்படியாய்
சமூகத்தில் நிகழும் அவலங்களை எளியோர் படும் துயரங்களை பெண்கள் இழிக்கப்படுவதை, நல்ல
இலக்கியங்கள் மக்களால் கண்டுகொள்ளப்படாததை
அரசாங்கத்தின் ஒதுக்கப்பட்டோர் பால்
காட்டும் அக்கறையின்மையை கதைகளின் மய்யப்பொருளாய் வைத்து எழுதும் சிறுகதையாளர் நெய்வேலி பாரதிக்குமார். எழுதுவதொப்ப வாழ்ந்தும்
காட்டுபவராய் விளங்குகிறார். வெல்லட்டும் பாரதிக்குமாரின்நல்ல
எழுத்துக்கள்.
(
‘நட்சத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ – சிறுகதைகள்-நெய்வேலி
பாரதிக்குமார். வெளியீடு இருவாட்சி-இலக்கியத் துறைமுகம் பெரம்பூர் சென்னை
600011. பக்கம்176 விலை ரூ180.)
கட்டுரையாளர்:
எஸ்ஸார்சி
( எஸ். ராமச்சந்திரன்) 23 ஏ இரண்டாவது தெரு. நேதாஜி நகர், பழைய பெருங்களத்தூர்,
சென்னை 600063. அலை. 9443200455
------------------------------------------------------------------------------------------------------------
.
No comments:
Post a Comment