’தஞ்சை ப்ரகாஷ்
கட்டுரைகள் நேர்காணல்கள்’
இப்புத்தகம்
பற்றி ஆய்வுகள் சில.
நந்தி பதிப்பகம் தஞ்சாவூர் இந்நூலை
வெளியிட்டிருக்கிறது. (2020) தொகுப்பாசிரியர்
ப்ரகாஷின் துணைவியார் மங்கையர்க்கரசி ப்ரகாஷ். மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ப்ரகாஷைப்பற்றி எழுதிய
கட்டுரையைத் துவக்கமாகவைத்து இக்கட்டுரை நூல்
தொடங்குகின்றது.. இதுவரை வெளிவராத கட்டுரைகள் இதனுள்ளே இருப்பதை புத்தகத்தின் அட்டை
நமக்குச்சொல்கிறது.
’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை
ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி
மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும்
முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு
எலக்ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம்
அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில்
அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.
அதம்பை வை.
இராமமூர்த்தி தனது முன்னுரையில்’ பல மொழிகளை ஒருவரே கற்று அந்த மொழிகளிலுள்ள படைப்புகள்
பலவற்றை வாசித்து,அதனை நேரடியாகவே மொழிபெயர்த்த சாதனையைப் படைத்திருப்பவர் தஞ்சை ப்ரகாஷ்
என்பதை அறியும் போது அவரின் மொழியறிவை வியக்காமல் இருக்கமுடியவில்லை என்று குறிப்பிடுகிறார்.
பதிப்புரையை
மனநிறைவுடன் வழங்கியுள்ள நந்தி ஆ. செல்லதுரை’
கலைடாஸ்கோப்பிற்குள் மலரும் கண்ணாடித்துண்டுகளைப்போல பரவசமூட்டக்கூடியது ப்ரகாஷின்
ரசனை உலகம்’ என்று வரையறை தருகிறார்.
முதல் கட்டுரை
‘ருக்வேதக்காதல்’ புராதன வேத காலத்துக் காதலைப்பற்றிப்பேசுகிறது. மகாகவி காளிதாஸ் எழுதிய
புகழ்பெற்ற நாடகம் ‘விக்கிரமோர்வசீயம்’ ருக் வேதத்தை ஆதாரமாகக்கொண்டது என்கிறார் ப்ரகாஷ்.
புரூரவஸ்,
தேவ மாது ஊர்வசியிடம் காதலுக்கு தொடர்ந்து மன்றாடுகிறான்.
ஊர்வசி ‘வேண்டாம் போய்விடு’ என்கிறாள். புரூவரஸ்
‘பாறையில் மோதுவேன். இறப்பேன். என் உடல் ஓநாய்கள் தின்னட்டும்’ என்று பேசுகிறான். ஊர்வசியோ
‘ ‘காதல் தோல்விக்கு மரணம் பரிகாரமாகாது. அது மூடத்தனம். யாசித்துப்பெறுவதல்ல
காதல்’ என்று அறிவுறுத்துகிறாள்.
ருக்வேதத்தில்
வரும் எமன் எமி காதல் பற்றியும் செய்தி தொடர்கிறது. உஷஸ்ஸின் காதல், அஸ்வினி தேவர்கள்
மீது எழும் ஒரு பெண்ணின் காதல் என ருக் வேதம்
காதல் விஷயங்களை விட்டுவைக்கவில்லை. விட்டுவைக்க
முடியாதுதான் என்கிறார் ப்ரகாஷ்.
க.நா.சு என்னும்
தலைப்பிட்ட கட்டுரை க.நா.சு வை உச்சிமேல் வைத்துப்போற்றுகிறது. அனேகமாக க.நா.சு வோடு
முரண்படுவதே எழுத்தாளர்களின் வழமையாயிருக்க ப்ரகாஷ் க.நா.சுவின் விமர்சன நேர்மையை பாராட்டி
எழுதுகிறார். க.நா.சு பற்றி,
’ ஓர் இலக்கிய
விமர்சகர் என்ற நிலையில், தமிழில் தரமான விமர்சனம் யாருக்கும் அஞ்சாது, கோல் சாயாமல்,
தனக்குப்பிடித்தக் கருத்துக்களைச்சொன்ன, தெளிவான
எழுத்தாளர் க.நா.சு மட்டும்தான். அவரது பட்டியலில் இடம்பெற ஆவல் கொண்ட எழுத்தாளர்கள்
அணி அணியாய் இருந்தார்களே அது ஏன்?’ என்று கேள்வி கேட்கிறார் ப்ரகாஷ். க.நா.சுவின்
அபிப்ராயம் ஒன்று எழுத்தாளர்களுக்கு ஏன் அவசியமாகிறது என்று சிந்திக்க வைக்கிறார் க.நா.சு.
வண்ணநிலவன்
பிரபஞ்சன் வண்ணதாசன் பூமணி ஆ.மாதவன் நீல.பத்மநாபன் கி.ராஜநாராயணன் ஜி.நாகராஜன் நாஞ்சில்நாடன்
என்று க. நா.சு பாராட்டிய எழுத்தாளர்களைப் பட்டியலிடுகிறார் ப்ரகாஷ்.
க.நா.சுவின்
தர நிர்ணயத்தராசு தாழும் உயரும் உண்மைதான்! தர நிர்ணயம் செய்வதில் இந்த அறுபது ஆண்டுகளாய்
வேறு யாராவது தமிழ் நவீன இலக்கியத்தில் அவரைப்போல துணிச்சலுடன் தனது கருத்தையே அழுந்தச்சொல்லி
பட்டியலை உறுதி செய்தவர் யார் இருக்கிறார்கள்
என்று க.நா.சுவைத் தலைமேல்வைத்துக்கொண்டாடுகிறார் ப்ரகாஷ்.
தி.ஜானகிராமனைப்பற்றிய
கட்டுரையில் ப்ரகாஷ் எவ்வளவு ஆத்மார்த்த உறவாய் ஜானகிராமனோடு இருந்திருக்கிறார் என்பதை
அனுபவிக்க முடிகிறது. ‘ மழை வலுத்து வந்தபோது ஜானகிராமனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
நனைந்தபடியே பாபநாசம் வழியே கீழ்விடையலுக்கு மிதித்தேன்.சாலையில் தண்ணீர் ஆறாக ஓடி
குறுக்குப் பாய்ச்சியது.மதாரம் ஐயர்கள் வெற்றுடம்போடு போனார்கள். வழி இருட்டு மிதிப்பது
சற்று சிரமமாய் இருந்தது. கர்ப்பகாம்பிகா கோவிலில் ப்ரசாதம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு
புறப்பட்டோம்’ படிக்கப்படிக்க வாசகன் பரவசமடையும் எழுத்துத் தோரணை காட்சியாகிறது.
’ஜானகிராமனை
விட்டுவிட்டுத்திரும்பும்போது மீண்டும் பேய்மழை! இரவோடு இரவாக சாலியமங்கலம் வந்தேன்.
மேலே செல்வது சுலபமாய் இல்லை. ஊளை காற்றும் குளிரும்’ - தஞ்சை ப்ரகாஷின் அனுபவக்குறிப்பு இது.
‘ஜானகிராமனின்
எழுத்து சத்யமான எழுத்து அதன் யதார்த்தத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும் அவருக்கு அழகு என்பது பூஜைக்குறிய விஷயம்.
நமக்கு
ஆங்கிலக்கவி கீட்சின் கவிதை
அழகும் உண்மையும் உண்மையும் அழகும்
நினைவுக்கு வரலாம்.
‘Beauty
is truth,truth beauty’ – that is all Ye know on earth, and all ye need to know’.
Keats
ஜானகிராமனைப் பூஜித்த பெண்கள் பலரை நான் அறிவேன்’ வாக்குமூலம் தருகிறார் ப்ரகாஷ்.
தஞ்சாவூர்
இன்றும் ஜானகிராமனின் பெயர் சொல்கிறது. என்றும் சொல்லும் என்பதில் அய்யமில்லை.
என் நண்பர்
கே.சி .எஸ் என்னும் கட்டுரைக்கு வருவோம். தாமரையின்
ஆசிரியராய் விளங்கிய கேசிஎஸ் அருணாசலம்’ கவிதை என் கைவாள்’ படைத்தவர். அவர் ஒரு சமயம்
ப்ரகாஷுக்கு எழுதிய கடிதம் வாய்மையை இப்படிப் பறைசாற்றி நிற்கிறது.
‘இடரிலும்
துன்பத்திலும் பழமையிலும் நம்மை அழுத்தி, முடிவை
நோக்கி நம்மை இழுத்துச்செல்லும் சாரமற்ற வாழ்க்கையை விட்டு நம்மை நாமே பிரித்து தூர
எறிய வேண்டும். சாவு நம் இழப்பாகக்கூடாது.சாவின் முடிவு மனிதனின் முடிவல்ல. அழுத்திக்கொல்கிற
சாரமற்ற வாழ்வை மாற்ற வேண்டும்.சாரமற்ற வாழ்வின் சாரத்தை எழுத்தின் மூலம் உறிஞ்சி எடுக்க
வேண்டும்.நாம் புதிய வானம் புதிய பூமியை உண்டாக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் புதுப்பொருள்
காட்டவேண்டும். இப்படிப்பட்ட நம் எழுத்துதான்
நம்மை ஒன்றாக்கி மேலெழும்பும் ப்ரகாஷ்’
கடிதம் நம்மை
மெய்சிலிர்க்க வைக்கிறது. கேசிஎஸ் உடன் ப்ரகாஷின் உறவு ஆத்மார்த்தமானது. அதி உயர்வானது.
ஜீவாவைப்பற்றிப்
ப்ரகாஷ் இந்தக்கட்டுரையில் குறிப்பிடத்தவறவில்லை.
தாமரையின் அலுவலகம் சென்ற புழங்கிய மேதை அல்லவா
ப்ரகாஷும்
.’ பேசுகின்ற கலை ஜீவாவுக்கு அபாரம். கருணை வழியும் அவரது கண்கள். பிசிறாகச்சிதரும்
அவரது பிளிரல் மேடைகளில் அந்தக்காலங்களில் கண்டு கேட்டவர்கள் பாக்யசாலிகள்’
ப்ரகாஷின்
எழுத்துச் சித்திரங்கள் தாமரை அலுவலகத்தில் குவிந்து கிடக்கிறது. அத்தனையும் பயன்படுத்திக்கொள்ள
இயலாமற்போகிறது. அவைகளைப் ப்ரகாஷின் வீடு சென்று தருகிறார் கேசிஎஸ். ’ என்னையும்
ஒரு பொருட்டாகக்கருதி என் குப்பை எழுத்தைச் சுற்றி எடுத்துக்கொண்டு என்னைத்தேடி இரவோடு
இரவாகச்சந்தித்த கேசிஎஸ் அருனாசலத்தின் மனிதாபிமான
எளிமை,நேயம் அன்பு ஊக்குவிக்கும் உற்சாக மனித ஸ்வபாவம் என்னால் மறக்கவியலாது. இவ்விரு
மனிதர்களின் மாசிலாத்தோழமையை வாசகர்கள்
இவண் ஆழமாய்க் காண்கிறோம்.
’தேநுகாவின்
சொற்சிற்பம் வித்யாசங்கர் ஸ்தபதியின்சிற்பமொழி’ என்னும் கட்டுரையை ப்ரகாஷ் மிக சிரத்தையோடு
வாசகர்களுக்குத் தருகிறார். தலைப்பே நம்மை சிந்திக்கவைக்கிறது. கலைகள் எப்படி ஒன்றோடு
ஒன்று பந்தமுடையவை என்பதனை தெளிவாக எடுத்துவைக்கிறார். ஓவிய விமர்சகர் தேநுகாவை நமக்கு
அணுஅணுவாய்க்காட்டுகிறார் ப்ரகாஷ். தமிழ் நிலத்தில் கலைகளிடை உறவு பேணுவதை தூக்கிப்பிடிக்கும்
யுக்தியின் தொடக்கமே தேநுகாவிலிருந்து ஆரம்பிக்கிறது என்கிறார் ப்ரகாஷ்.
வித்யாசங்கர்
ஸ்தபதி கும்பகோணம் ஓவியக்கலைக்கல்லூரியில்
சிற்பக்கலைப்பேராசிரியராகப்பணியாற்றியவர். நூற்றுக்கணக்கான சிற்பிகளை உருவாக்கிய
பேராசான்.
தேநுகா பற்றி
ப்ரகாஷ் சொல்லும்போது,’இதோ தமிழுக்கு ஒரு தகவு. ஓவியர்-சிற்பி-இலக்கியவாதி-சங்கீதஞானி
என்ற பதங்களை ஒன்றிணைத்து (Inter Disciplinary Fusion) என்ற அற்புதமான ஒரு தற்கலப்புப்பரிமாண ரஸவாதம் மூலம் தமிழில் முதல்
முறையாகவும் ஒரே வெற்றியாகவும் தேநுகாதான் தமது கலைக்கட்டுரைகளின் மூலம் இதை அனுபவமாக்கி
வருகிறார்’ என்று எழுதுகிறார்.
’இந்தியாவிற்கென்று
இனி வரப்போகும் புது மரபை புது எழிலை, புது தரிசனத்தை ஒரு கோடி காட்டும் வேலையை நான்
வித்யாஷங்கர் ஸ்தபதியிடம் காண்கிறேன்’ என்று
மகிழ்ந்துபோகிகிறார் ப்ரகாஷ்.
ஒரு கலையோடு
பிறகலைகள் இணைவதை இசைவதை எவ்வளவு தூரம் உள்
வாங்கி செயல்பட்டிருக்கிறோம் என்பதை ஆய்வுக்குட்படுத்தவேண்டிய ஒரு தேவை எழுகிறது என்கிறார்
ப்ரகாஷ்.
’எம்.வி. வெங்கட்ராம் எனும் நண்பருடன் க.நா.சு’ என்னும்
ப்ரகாஷின் கட்டுரை இரண்டு ஜாம்பவான்களைச் சரியாக எடை போடுகிறது.
’எம்.வி.வியின்
வீட்டுத்திண்ணையில் பல பெரிய மனுஷ்யர்களையும் இலக்கிய சாம்ராட்டுகளையும் சந்தித்த போதுகள்
ஆச்சர்யமாய் நினைவுக்கு வருகின்றன….. வீடு முழுவதும் வறுமை சூழ்ந்திருக்க பத்து குழந்தைகளுடனும்
மனைவியுடனும் இலக்கிய நண்பர்களுடனும் சமமாக தீக்ஷண்யத்தோடு அமைதியாகவாழ்வது லேசானகாரியமல்ல.
இன்று எவனாலும் இந்த சாதனை முடியாது.’
க.நா.சுவின்
நெஞ்சுரம், இலக்கியத்திண்மை யாராலும் தொட முடியாத அருமை கொண்டது.
எம் வி வி,
சென்னையிலும் தஞ்சையிலும் குடந்தையிலும் , க.நா.சு வைச்சந்திக்கும் நேரங்களையெல்லாம் தாம் பெற்ற பேறாகக்கருதியவர்.
இப்படி எழுதிச்செல்லும்
ப்ரகாஷ் தி.ஜானகிராமனை சந்திக்கச்செல்லும்போதெல்லாம் க. நா. சு எம் .வி.வி
இந்த
இருவரோடும் அனேக முறை மகிழ்ச்சியோடு சென்றதைக்குறிப்பிடுகிறார்.
எண்பது வயதிலும்
க.நா.சு பற்றிப்பேசினால் எம் வி வி யின் கண்கள்
பளிச்சிடும் என்று எழுதிச்செல்கிறார் ப்ரகாஷ்.
’எம்.வி வெங்ட்ராம்
நேர்காணல்’ என்பது ஓர் கட்டுரை. நேர்காணல் காதுகளுக்கு அவர் சாஹித்ய அகாதெமி பரிசு பெற்றபின்னர் எடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரகாஷின் கேள்விகளும் பளிச்சென்று
இருக்கின்றன வெங்கட்ராமின் விடைகளும் கச்சிதமாய் இருக்கின்றன. ஜஸ்டிஸ் மஹாதேவன் 25
ஆண்டுகளுக்கு முன்னரே அரும்பு நாவலுக்காக வெங்கடராம் பெயர் சாகித்ய அகாதெமியால் தேர்வு செய்யப்பட்டதாக அவருக்குச்செய்தி
அனுப்பியுள்ளார். வெங்கட்ராமே இதனைச்சொல்கிறார்.
இது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அவர்
ஜஸ்டிஸ் வேறு. நம்பகமான மனிதர். வெங்கட்ராம்
தாமே சான்று தருகிறார்.. ஆனால் அது நடக்கவில்லை.
வேறு யாருக்கோ சாகித்ய அகாதெமி விருது கொடுத்துவிட்டார்கள்.
சரியான நடை முறை எனக்குத்தெரியாது என வாக்குமூலம் தருகிறார் எம் .வி.வி.
‘ இப்போது கூட எனக்கு விருது கொடுக்கவேண்டும் என்கிற
தேவையில்லையே! எப்போதுமே அவர்கள் இன்னாருக்குக்கொடுக்கவேண்டும் இன்னாருக்குக்கொடுக்கக்கூடாது
என்கிற பாகுபாடு வைத்துக்கொண்டு செயல்படுவதாகச் சொல்லமுடியாது- தெரியாது.’ நற்சான்றிதழ்
ஒன்று இலக்கியப் பெரியவரால் சாகித்ய அகாதெமிக்கு
இங்கே வழங்கப்படுவதைக் காண்கிறோம்.
புதுமைப்பித்தனைப்பற்றியதொரு
விமர்சனமும் இந்த நேர்காணலில் தரிசிக்க முடிகிறது. ‘ அவருடைய மிகப்பிரபலமான துன்பக்கேணியில் செத்துப்போனமாதிரி
முதலில் எழுதிவிட்டு , பிறகு உயிரோடு நடமாடுவது போல தப்பாக எழுதிவிட்டார். இதெல்லாம்
நடக்கக்கூடியதுதான்’
’மற்றவர்களைப்போல,
நான் பிறந்த ஜாதியைப்பற்றியே –நெசவாளர்கள் பிரச்சனை பற்றியே எழுதிக்கொண்டிருக்கலாம்.
அதில் எனக்கு விருப்பம் கிடையாது’ என்று பளிச்சிடும் பதிலைத்தருகிறார். எம் வி வி யும் ஒரு நெசவாளர்தான் என்பதை நாம் அறிவோம்.
’1952-53
ல் ஒரு கவுன்சில் தேர்தல் நடந்தது.நான் காங்கிரஸ்காரனாய்ப் போட்டியிட்டுத் தோற்றேன்.’எனக்குப்போட்ட
ஓட்டுக்களையெல்லாம் அள்ளி அவர்கள் பெட்டியில் போட்டுக்கொண்டார்கள். நான் சொல்வது பொய்யில்லை.
இதற்கு எல்லோரும் உடந்தை…….. இனி எந்தக்கட்சியிலும்
சேருவதில்லை என்ற முடிவோடு இன்றுவரை ஒதுங்கி இருந்துவிட்டேன்.’ ப்ரகாஷ் தனது பேட்டியில் எம் வி வியின் மனப்பத்தாயத்தைத்
திறந்து தரிசிக்க வைக்கிறார்.
புதுவையில்
பாரதிதாசனோடு தேர்தலில் போட்டியிட்ட பொதுவுடமையாளர்
சரஸ்வதி சுப்பையாவின் நேர் அனுபவங்களை அவரே
ஒருமுறை குறிப்பிட்டது எனக்கு மனதில்
வந்து போயிற்று.புதியதோர் உலகம் செய்வோம் என்று எழுதிய புரட்சிக்கவிஞரைப் பொதுவுடமைக்கட்சிக்கு
எதிராக நிறுத்திப்பார்த்த அரசியல்களம் வரலாற்றில்
நிகழ்ந்துதானே.
கேரள மண்ணில் வயநாட்டில் இந்தியப்பொதுவுடமைக்கட்சியின்
வெற்றி வாய்ப்பான பாராளுமன்ற சீட்டைத்தோற்கடித்துத்தானே பேராயக்கட்சியின் ராகுல்
காந்தியும் எம். பி ஆனார். வரலாறு ரணங்களின் சேர்க்கைதான்.
தலைவாசல் என்று தலைப்பிட்டு’ தோப்பில் முஹம்மது மீரான் பற்றி ப்ரகாஷ் எழுதிய கட்டுரை ஒன்றை இத்தொகுப்பில் காண்கிறோம். ‘நான் ஒரு விமர்சகன் அல்ல.எனக்கு விமர்சனத்தைவிட
இலக்கியம்தான் பிடிக்கும் .இன்னும் ஆழ்ந்து சொல்லப்போனால் இலக்கியத்தைவிட வாழ்க்கைதான் ரொம்ப ரசிக்கும்! வாழ்க்கையைவிட
மகத்தானது எதுவுமில்லை.’ இப்படி கனகச்சிதமாக ஒரு இலக்கணம் தருகிறார் ப்ரகாஷ்.
’வாழ்க்கையைப்பற்றிச்
சிந்திக்கிற எழுத்தாளன் சொல்லுகிற முறையால்
உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிற புதுமையான நோக்கால் வாழ்க்கையின் பொருளை உடைத்துக்காட்டுகிற நவீன திண்மையால் ஜெயிக்கவேண்டுமே
அல்லாது வாழ்க்கையின் உள்ளடக்கத்தை மறுபடி மறுபடி அதையே சொல்லும் மரபு வழியால் அல்ல’.
எழுத்தாளர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவராக ப்ரகாஷ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை இங்கே பார்க்கமுடிகிறது.
தோப்பில்
முஹம்மது மீரான் அவர்களின் கதாபாத்திரங்களில்
சாதாரணமான சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளில் வருகிற சின்னஞ்சிறு நாஞ்சில் நாட்டு மக்கள் கிராமிய
மக்களின் பாத்திரங்கள்தான் சிறப்பாகப்படைக்கப்பட்டிருக்கின்றன. இது ப்ரகாஷின் கணிப்பாக
இருக்கிறது.
டம்மி ரைட்டர்
என்ற கட்டுரையில் , கு.ப.ரா பற்றி ஒரு நூல்
எழுதித்தருவதாய்க் கை நீட்டி வாங்கிய பணத்திற்குப்பதில் சொல்ல இயலாத நிலையில் நொடித்துப்போயிருந்த இருந்தார்
கரிச்சான்குஞ்சு. அவர் கேட்டுக்கொண்டதற்காகக்காக
கு.ப.ரா பற்றி ஒரு நூல் எழுதிக்கொடுக்கிறார் ப்ரகாஷ். அவருக்கு தான் உதவிய விதம் குறித்து உணர்வு பூர்வமாக எழுதுகிறார்.
அதுவே தஞ்சை ப்ரகாஷின் முதல் நூல். ஆனால் கரிச்சான்குஞ்சு அதை எழுதியதாகத்தான் ஊரும் உலகும்
அறிவித்துக்கொண்டது.
தஞ்சை ப்ரகாஷ்
கொடுத்த பேட்டி ஒன்றும் இந்தக் கட்டுரைத்தொகுப்பில் இருக்கிறது. வேட்டைப்பெருமாள், ஹரணி பேட்டியை
எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள்.
அதனில் க
நா சு வின் கண்ணியம் பேசும் வாசகம் வருகிறது. குங்குமத்தில் 64 இலக்கிய மேதைகளைப்பற்றிக்
கட்டுரை எழுதியவர் க.நா.சு.. அப்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது 61. அவரது படைப்பில்
ஒன்றைப்பற்றி க. நா. சு கட்டுரை எழுதவேண்டும். அது குங்குமத்தில் வரவேண்டும் என்று ப்ரகாஷ் வழியாகச் செய்தி க.நா சு க்கு வருகிறது. க. நா. சு வுக்கு ஏகப்பட்ட மரியாதைகள் செய்யப்படும் என்கிற விஷயம்
சொல்லப்படுகிறது. ப்ரகாஷுக்கும் மரியாதைகள்
கிடைப்பது உறுதி என்கிறார்கள். ப்ரகாஷ் க.நா.சு வை அணுகி இந்தச் செய்தியை எடுத்துவைக்கிறார்.‘
ப்ரகாஷுக்கு க.நா. சுவின் பதில் இதோ,
’lஎழுபது
வயசுவரைக்கும் சத்தியத்தைத் தவிற எதையும் எழுதல. இனிப்போய் இந்தகாரியத்தைச்செய்யசொல்றியான்னாரு’.
தஞ்சை ப்ரகாஷ்
க.நா சு வை வாசகருக்கு முன் சத்தியவானாக நிறுவுகிறார். ஒரு எழுத்தாளன் சக எழுத்தாளனுக்கு
செய்யும் பெரிய மரியாதை இதைவிட வேறு என்ன இருக்கமுடியும்.
க.நா.சு வின்
மனைவியிடம் பெற்ற ஒரு நேர்காணலும் இத்தொகுப்பில்
வாசகனுக்குக்காணக்கிடைக்கிறது. க.நா.சு வின் மனைவியின் வார்த்தைகள் இங்கே.
‘பணத்துக்கு
பறக்குறது அவர்கிட்ட நடக்காது. எப்பேர்பட்ட கொம்பன் எல்லாம் கூப்பிட்டும் அப்படி ஒரு
வாழ்க்கையை ஏத்துக்க தயாராயில்லெங்கறது நிஜம்’
ப்ரகாஷின்
கடைசி நேர்காணல் கட்டுரை இறுதியாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ப்ரகாஷ் நமக்குச்சொல்கிறார்.
‘கனவு மெய்ப்படவேண்டுமென்றான்
பாரதி. மெய்ப்படாத கனவுகளில் கவனத்தைச்செலுத்துவது அறிவீனம்’
ப்ரகாஷ் வாசகனுக்குச்சொல்லும்
வயிர வரிகள் இவை.
’சத்தியம்!சத்தியத்தைவிட
உயர்ந்த எழுத்து சத்தியத்தைவிட உயர்ந்த படைப்பு சத்தியத்தைவிட உயர்ந்தபாதை எதுவுமே
கிடையாது.’
ந.பிச்சமூர்த்தியைத்துணைக்கு
அழைக்கிறார் ப்ரகாஷ்.’ நாய் நாயாக இருக்கலாம். தவறில்லை. மனிதன் வெற்று
மனிதனாக மட்டும் இருத்தலில் என்ன ? தர்மம் இருக்கிறது. அதிமனிதனாக தேவனாக தன்னை உயர்த்திக்கொள்ள
மனிதன் இடையறாது முயலவேண்டும்’
நாமோ மனிதன்
எங்கே என்று அல்லவா நித்தம் தேடிக்கொண்டு நிற்கிறோம்.
------------------------------------------------
No comments:
Post a Comment