9 பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்.
எஸ் எல்
பைரப்பா கன்னடத்தில்'பருவம்' என்கிற
நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர்
மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு
பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன்
மொழிபெயர்ப்பாளன்
.மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய்
அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை அவர் கன்னடத்திலிருந்து
தமிழுக்குக்கொண்டு தந்தவர்.
ஊரும் சேரியும்,கவர்மென்ட்
பிராம்ணன்,பலிபீடம்,நாகமண்டலம், பசித்தவர்கள்,அக்னியும் மழையும்,ஓம்நமோ,பருவம்
இன்னும் இப்படி எத்தனையோ.
பைரப்பாவின் 'பருவம்' பாவண்ணனின் மொழிபெயர்ப்பில்
சிலிர்த்துக்கொண்டு வெளிப்பட்டு வாசகனை ச்சிந்தனைச்சாகரத்தில்
அமிழ்த்திப்பார்க்கிறது.அறிவினை விரிவு செய்,அகண்டமாக்கு,விசாலப்பார்வையால்
விழுங்கு மக்களை, இவை இவை பருவத்தில் வாசகனுக்கு ஒருங்கே
அனுபவமாகிறது.
பைரப்பாவின் பருவம் மகாபாரதப்பெரும்போரை
மையமாகவைத்துக்கற்பனையாகப்புனையப்பட்டது..
பைரப்பா மகாபாரததின் அரிய நிகழ்வுகளை
தனக்கே உரிய கண்ணோட்டத்துடன் தொட்டுப்பேசுகிறார்.மகாபாரத்தின் நிகழ்விடங்களுக்கு
எல்லாம் தானே நேராகச்சென்று பார்வையிட்டு,அங்கு வாழ்கின்ற மக்களோடு பேசி
உறவாடி,அங்கு நிலவும் பூகோள அமைப்போடு ஒன்றிப்பயணித்து த்தன் அனுபவ சாகசங்களைப்
'பருவம்' வழி நம்மோடு பைரப்பா பகிர்ந்துகொள்கிறார்.மாபாரதத்தின் கால
விதானத்திற்கே வாசகனை அழைத்துச்சென்று அந்தப்பாத்திரங்களிடையே அமர வைத்து அலாதி
பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.
சாகித்ய அக்காதெமி இதன் தமிழ் வடிவத்தை பாவண்ணன்
என்னும் மொழித்திறனாளியின் கடுமையான உழைப்பில்
நேர்த்தியாகக்கொண்டுவந்திருக்கிறது. இந்நூல் 'பருவம்' குறித்து
இப்படிப்பேசித்தொடங்கி வைக்கிறது.
'மகாபாரதக்கதையில் காணப்படும்
போர்-அமைதி,அன்பு-இறப்பு,மனிதன்-கடவுள் ஆகியவற்றை மையமாகக்கொண்ட புகழ்பெற்ற கன்னட
நாவல்'.
பைரப்பா இப்படைப்பை இளம் வயதிலேயே மறைந்துபோன தன் தாயுக்கு
சமர்ப்பித்துப்பெருமை சேர்க்கிறார்.ஜைமினியின் காவியத்தை, குமார வியாசத்தை ஆழ்ந்து
கற்ற அந்தத்தாய் 'கௌரம்மா'கேழ்வரகுக்களியோடு குழந்தை பைரப்பாவுக்கு இலக்கிய
ரசனையையும் சேர்த்து ஊட்டி வளர்த்திருப்பதை சமர்ப்பணம் என்னும் பகுதியில்
குறிப்பிட்டு அந்த ஞானப்பெண்மைக்கு ப்பெருமை கூட்டுகிறார்.வீர சிவாஜியின் தாயொடு
வைத்து எண்ணத்தக்கவர் பைரப்பாவின் அன்னை கௌரம்மா.
'மூல நூலான வியாசபாரதத்தை
ஒருமுறை முழுக்கவும் படித்தபிறகு வேதகாலத்தின் இறுதிபகுதியில் நிலவிய
பொருளாதார,சமூக,அரசியல் நிளைகளைப்பற்றியும் சமய நிலைகளைப்பற்றியும் தீவிரமாக
ஆய்வுசெய்தேன்'
'மகாபாரததோடு தொடர்புடைய இமயமலைப்பகுதியில் சில காலம் தங்கி
இருந்தேன்'
'துவாரகை,ஆரவல்லி மலைத்தொடர்கள்,விராட
நகரம்,மதுரா,தில்லி,குருக்ஷேத்ரம்,அஸ்தினாவதி,பர்நாவம்,சக்கர நகரம்,ராஜகிரி ஆகிய
இடங்களில் மேலும் பயணம் மேற்கொண்டேன்.ஆய்வுகள் நிகழ்த்தினேன்.'
இப்படிப்
பாரதக்கதை நிகழ்ந்த மண்ணோடும் மக்களோடும் நேராகச்சென்றுப்பழகி அனேகவிஷயங்கள்
கற்றுக்கொண்டதாக பைரப்பா தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஒரு முக்கியமான
செய்தி. பைரப்பா அவர் ஒன்றும் மகாபாரதக்கதையை மீண்டும் எழுதிட 'பர்வம்' என்னும்
புதினத்தைத்தொடங்கவில்லை.பைரப்பாவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால்
இப்படிச்சொல்லலாம்.
'மகாபாரதப்பாத்திரங்களின் கதையை நான் எழுதவில்லை.மனித
சமுதாயத்தின் பல்வேறு முகங்கள்,உணர்வுகள்,உறவுகள்,முரண்கள் பற்றிய பிரக்ஞை,இந்த
நாவலை எழுதி முடிக்கும்வரை இருந்தது.
சிற்சில இடங்களில் ஒன்றிரெண்டு புதிய
பாத்திரங்களைச்சேர்க்கும்போதும்,சிற்சில சம்பவங்களைச்சேர்க்கும்போதும் நாவலின்
பரிமாணம் பெருகியது.....'
தூதனாக வந்த கிருஷ்ணனிடம் துரியோதனன்
பேசியவார்த்தைகள் விதைகளாக வெடித்துச்சிதறி குந்தியின் மனக்கனலை வளர்த்து
நிற்கின்றது.குந்தியும் பாண்டுவின் இன்னொரு மனைவி மாதுரியும் பெற்ற பிள்ளைகள்
யார்?துர்யோதனன் சொல்கிறான்.'பாண்டவர்களில் யாருமேஅவர்களுடைய
அப்பாவுக்குப்பிறந்தவர்கள் அல்லர்.அவர்களைப்பாண்டவர்கள் என்று கூப்பிடக்கூட என்
மனம் ஒப்புக்கொள்ளவில்லை.இந்த வம்சத்தையே சேராதாவர்களுக்கு அநியாயமாக இந்த
ராஜ்யத்தில் பங்கு கொடுத்தீர்கள்.அந்த அநியாயத்தை,அவர்களைச்சூதில் வென்று
சரிசெய்தேன்.'
பாண்டவர்கள் ஐவருமே நியோக முறையில் பிறந்தவர்கள்.நியோக முறையில்
பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை அங்கீகாரம் செய்த சமுதாயம் அன்றிருந்தது.அதனை பைரப்பா
அழகாகச்சொல்லிப்போகிறார்.'கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது
அல்லது குழந்தைகள் இல்லாமலேயே அவன் இறந்துபோகும்போது அவனுடையவம்சம்
வளர்வதற்காக,அவன் மனைவிக்கு இன்னொரு ஆண்மகனுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள
அனுமதிக்கப்படும். அவள் தான் கருவுற்றது உறுதிப்படும் வரை அந்த ஆடவனோடு சேர்ந்து
இருக்கவேண்டும்.பிறகு அந்த ஆண்மகனைத் தன் தந்தையாக பாவித்துக்கொள்ளவேண்டும்.
அவனோடு சம்போகிக்கின்ற தருணம் அவள் தன் உண்மையான கணவணைப்பற்றிய நினைவோடு மட்டுமே
இருக்கவேண்டும்.இச்சம்போகம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே என்கிற.இந்த
எண்ணமே அவள் மனதில் நிறைவாக இருத்தல் வேண்டும்.இதுவே நியோக முறை
மா.பாரதத்து
குந்தியும் மாதுரியும் இப்படித்தான்
குழந்தைகளைப்பெற்றுக்கொள்கிறார்கள்.
குந்திதேவி தேவர்(ஒரு இனம்)களின்
தர்மராஜனோடு புணர்ந்து ஒரு குழந்தைக்குத்தாயாகிறாள். குந்தியின் கணவன் பாண்டு
இதற்கான சகல ஏற்பாடுகளையும் சிரத்தையோடு செய்து நிற்கிறான்.விதைத்துவிட்டு
ச்செல்பவன் விடைபெற்றுக்கொள்கிறான்.பாண்டு தன் மனைவி குந்தியை அழைத்து அந்த
தர்மராஜனுக்கு வணங்கச்சொல்கிறான்.குந்தி தான் ஒரு மகள் என இப்போது அதே
விருந்தாளியிடம் ஆசி பெறுகிறாள். அப்படி குந்திக்குப்பிறந்தஅந்தக்குழந்தையே
பாண்டவர்களில் தருமனாக பின்னாளில் உலாவருபவன்.
வீரமுள்ள ஒரு குழந்தைக்கு
ஆசைபட்டான் அந்தப் பாண்டு.பிறகு அந்த தேவர்களின் பராக்கிரம சேனைத்தலைவன்
வந்தான்.அவனோடு குந்தி பாயைப்பகிர்ந்து கொண்டாள்.பாண்டு வெறும் ஆசி மட்டுமே
வ்ழங்க பீமன் பிறக்கிறான்.
பைரப்பா குந்தியின் உடல் அமைப்பு பற்றி
அழகாகப்பேசுகிறார்.
'ஒரு புலியையே கொன்று தோளில் சுமந்துவரும் ஒரு மாவீரனுக்கு
சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் ஆற்றல் என்னிடம் இருக்கிறது. என் தோளா? என்
மார்பா?என் உடற்கட்டா?' குந்தியின் வார்த்தைகள் இவை.பைரப்பா குந்திதேவியின்
பாத்திரப்படைப்பில் உச்சத்தை எட்டுகிறார். ஒவ்வொரு ஆண்மகனும் குந்தியின் முன்னால்
சிறுத்துப்போகவே படைக்கப்பட்டிருபதாக வாசகனுமிங்கே எண்ணிப்பார்க்கிறான்.
தேவர்
இன இந்திரன் வருகிறான். அவனுக்கு பாண்டுவும் சம்மதம் சொல் கிறான். குந்தி தேவி
நியோகமுறையில் மீண்டும் ஒரு ஆண்மகவைப்பெறுகிறாள்.அவனே அர்ஜுனன்.அர்ஜுனனுக்கு
இந்திரனின் தேக உரு அமைப்பு.கூர்மையான கண்கள்.நீல நிறத்தன.. கூர்மையான மூக்கு.அழகான
கன்னம்.வடிவான முக அமைப்பு.அவன் சுபாவமும் அப்படியே.வேகம்,சுறு
சுறுப்பு,உல்லாசம்,அன்பு செய்தல் எல்லாவற்றிலும் கூட அப்படியே.பைரப்பா
அடுக்கிக்கொண்டே போகிறார்.
தேவரின மருத்துவ இரட்டையர்கள் பாண்டுவின் வேறொரு
மனைவி மாதுரியைப்புணர்ந்தார்கள் அந்தப்.பாண்டுவின் நியோக ஏற்பாடு.நகுலனும்
சகாதேவனும் மாதுரிக்குப் பிறந்தார்கள். அந்த நியோக முறை குந்தியின் மாதுரியின்
வாழ்வில் நல்ல விளைச்சல் தந்தது.
மக்கள் வயல்காட்டில் விவசாயத்தைச் செய்து
வாழ்வதைவிட போரில் வீரனாக வாழ்வதைப்பெரிதெனக்கருதியதாக பைரப்பா
சொல்கிறார்.'விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தால் நம்மால் எப்படி வீரர்களாக
முடியும்?அதனால்தான் யுத்தம் வரும்படி செய்யவேண்டும்.இல்லையென்றால் நமக்கு எந்தவித
சுகமும் இல்லை.இன்னொரு முக்கிய விஷயம் இதில் இருக்கிறது.எந்த யுத்தமும் இல்லாமல்
வெகுகாலம் கழித்துவிட்டால் அரசர்கள் எப்படி நம்மை
வைத்துக்கொண்டிருப்பார்கள்?நீங்களும் சென்று விவசாயம் பாருங்கள் என்று
அனுப்பிவிடுவார்கள்.அப்புறம் சேற்றில் இறங்கித்தான் நாம் வேலை செய்யவேண்டும்.அது
மட்டுமல்ல வீரன் என்கிற கௌரவமும் போய்விடும்'. இப்படிபோகிறது விஷயம்.
உழுவார்
உலகத்தார்க்கு அச்சாணி என் கிற செய்தி அங்கு பேசப்படவில்லை.ஜெய் ஜவான் ஜெய் கிசான்
சமாசாரம் கிடையாது. விவசாயம் தாழ்ந்த நிலையிலேயே வைத்து பேசப்படுவதாக பைரப்பா
வாசகனுக்கு ச்சொல்லிவிடுகிறார்.
க்ஷத்திரிய குணம் பற்றி ஒருவிளக்கம்
ருக்மரதனால் கொடுக்கப்படுகிறது.அழகான விளக்கம் அது.'நண்பனாகவும் இல்லாமல்
பகைவனாகவும் இல்லாமல் உறவுவைத்துக்கொள்வது ஒரு க்ஷத்ரியனால் முடியாத
காரியம்'.
குந்தி பாண்டுவின் ஆண்மையற்ற நிலையால் பாதிக்கப்பட்டவள்.பாண்டு
குந்தியோடு இல்லாமல் மாதுரியையும் மணந்து குழந்தை பிறக்குமா என்று தப்புக்கணக்கு
போடுகிறான். மாதுரியும் மாதவிலக்காகி நிற்கிறாள்.குழந்தைக்கனவு சிதைந்து
போகிறது.பாண்டு தன்னை ஏமாற்றி விட்டான் என்பது குந்திக்கு மனதில் ரணத்தை
உண்டாக்குகிறது.பாண்டு குந்தியிடம் பொய் சொல்லி நாட்களைக்கடத்திக்கொண்டே
போகிறான்.அவனிடம் ஆண்மை இல்லை. இருப்பதாய் ப்பொய் பேசுகிறான். அவனைக்குந்தி தன்
கூர்ந்த கண்களால் நோக்குகிறாள்.பாண்டு இப்போது சுருங்கிப்போகிறான்.'உண்மை
அறிந்தவன் பொய்சொல்பவனை வெறும் பார்வையாலேயே தாக்கி இல்லாமல் ஆக்கமுடியும்' என்று
குந்தி விளக்கம் தருகிறாள்.பொய் பேசுபவன் எத்தனை பலவானாக இருந்தாலும் ஒன்றும்
செய்துவிடமுடியாது என்பது நமக்கு சொல்லப்படுகிறது.சத்யமேவ ஜெயதே என்பது
தூக்கிப்பிடிக்கப்படுகிறது.
தர்மபத்தினி என்பவள் யார் என்பதை பைரப்பா வாசகனுக்கு
வேறு ஒரு இடத்தில் வரையறை செய்து சொல்கிறார்.'முதல் மனைவிதான் தர்ம பத்தினி'
அவள்தான் அதிகாரம் பெற்றவள் என்று குந்திதேவியை வைத்து வாசகனுக்குச் செய்தி
சொல்கிறார்.
பைரப்பா இமயமலை ப்பகுதிகளில் வாழும் மலையக மனிதர்களின்
வாழ்க்கைமுறைகள அவைகளில் கிடைக்கும் சில புதிய அனுபவங்கள் பற்றி புதினத்தில்
சொல்லிப்போகிறார்.குடும்பத்தில் எல்லாச்சகோதரர்களுக்குமாக ஒரு பெண்ணை அல்லது
ஒன்றிரெண்டு பெண்களை த்திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் அவர்களிடையே
நிலவிவந்தது.பெற்ற குழந்தைகள் எல்லோருமே மூத்தவனின் பெயராலே அழைக்கப்படுவர்.ஒருவன்
தனக்கு நான்கு மனைவி என்பான் இன்னொருத்தி தனக்கு ஆறு கணவன்கள்
என்பாள்.இப்படிப்போகிறது குடும்ப விஷயம். இந்தப்பிறவிக்கு இன்னொரு பெண்ணை
சிந்தையாலும் தொடேன் என்னும் ராமகாவிய விஷயத்தை இங்கே
நினைத்துப்பார்க்கிறோம்.
தமிழ்க்கலாசாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை
மட்டுமே சங்ககாலந்தொட்டுப்பார்க்கமுடிகிறது.பரத்தையர்மீது காதல்கொண்டு ஆண்மகன்
செல்வது நடைமுறையில் இருந்து இருக்கிறது.கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தான
விஷயமாகப்பேசப்படுகிறது.மாதவியோடு புழங்கி வந்த தன் மனாளன் கோவலனை கண்ணகி தூக்கி
எறிந்துவிடவில்லை.அது அக்கால நடைமுறையாக அனுபவமாயிற்று.
மாதுரியின் வயிற்றில்
பிறந்தாலும் நகுலனும் சகாதேவனும் குந்தியிடமே கூடுதலாக அன்பு
பாராட்டினர்கள்.குந்தியை பைரப்பா அப்படி உச்சத்தில் வைத்து புதினத்தை
கொண்டுபோகிறார்.பாண்டுவைப்புணர்ந்து தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மாதுரி
விழைகிறாள்.பாண்டுவும் தான் ஆண்தன்மை பெற்றுவிட்டதாக மலட்டுதன்மையிலிருந்து
விடுபட்டுவிட்டதாக நினைக்கிறான்.ஆனந்தத்தின் முதல்படியில் மாதுரி கால்
வைக்கிறாள்.ஆனால் பாண்டுவின் முகம் திடீரென சுருங்குகிறது.இதயம்
நின்றுபோகிறது.பாண்டுவோடு உடன் கட்டை ஏறித்தன் உயிரை மாதுரி
மாய்த்துக்கொள்கிறாள்.குந்தி இப்படியாக ஐந்து ஆண்பிள்ளைகளோடு
தனிமரமாகிறாள்.உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்த மண்ணில் இருந்ததை நாம்
அறிவோம்.இன்றைக்கும் அது எங்கேனும் ஒரு மூலையில் இந்திய மண்ணில்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.சட்டங்களும் தண்டனைகளும் மனித மனங்களை முற்றாக
பக்குவபடுத்திவிடுமா என்ன?என்பதே எஞ்சுகிறது.
மதஸ்ய தேசத்தில் பயணிக்கும்
பாண்டவரின் குதிரைகளுக்கு தண்ணீர் தாகம். ஆக ஒரு நீர் நிலையில்
குதிரைகளுக்குத்தண்ணீர் காட்டுகிறார்கள்.பாவண்ணன் இங்கே 'குதிரைகளுக்கு நீர்
குடிப்பாட்டித்தாமும் குடித்தார்கள்' என்று மொழி பெயர்க்கிறார்.குடிப்பாட்டுதல்
என்பது புதிய சொல்லாக அனுபவமாகிறது.குளிப்பாட்டுதல் அறிவோம்.ஆனால்
குடிப்பாட்டுதல் என்பதை புதியதாக க்கேள்வியுறுகிறோம்.பாவண்ணன் இந்த ப்புதிய
வினைசொல் ஆக்கத்தை த்தமிழுக்குக்கொண்டு தந்தாலும் பாராட்டுதலுக்குரியதே. மீண்டும்
பிறிதொரு இடத்தில் கூட பீமனே குதிரைக்கு த்தண்ணீர் குடிப்பாட்டினான் என்று
பாவண்ணன் எழுதிப்போகிறார்.
சதாகாலமும் காட்டில் இருக்கும் ராட்சதர்களுக்கு
மிருகங்களின் குணங்கள் வந்துவிடும் என்கிறார் பைரப்பா.சாதாரணமாக நீ யாரை
எதிர்த்துச்சண்டை இடுகிறாயோ அவர்களின் குணம் உனக்கும் வருவதில்லையா? அதுபோலத்தான்
புலியின் குணமும் கரடியின் குணமும் ராட்சதர்களுக்குண்டு.இங்கே நமக்கு ஒரு விஷயம்
மனத்திரையில் எட்டிப்பார்க்கிறது.சுரண்டும் முதலாளித்துவ அமைப்பை
எதிர்த்துப்போராடும் சில தொழிலாளர் அமைப்புக்கள் தாமே காலப்போக்கில் சுரண்டும்
முதலாளித்துவ குணத்தைப்பெற்றுவிடுதலில் முடிந்துபோவதை நாம்
பார்த்திருப்போம்.
பெண்களை முன்னிலைப்படுத்தும் படைப்புதானே பைரப்பாவின்
'பருவம்'. பீமன் சொல்கிறான்.''அண்ணனின் ரத்தம் ஒழுகும் தலையை எடுத்து மடியில்
வைத்துக்கொண்டு காட்டில் இருக்கிற மரம் செடி கொடிகள் கூட கலங்கும்படி உருக்கமாய்
அழுதவள் தன் அண்ணனைக்கொன்றவனையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய
அந்தப்பெண்ணின்அன்பு'.
குந்தி தன் மகன் பீமனிடம் பேசுகிறாள்,'பெண்களின் மனசையும்
அன்பையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும்.நீ இன்னும்
விளையாட்டுப்பிள்ளையாய் இருக்கிறாய்.உன் புரிதல் போதாது.பெண் தன் மனத்தை உனக்கு
அர்ப்பணிக்க வரும்போது வேண்டாம் என்று சொல்வது பெரிய பாவம்.இவர்கள்
ராட்சதர்கள்,இவர்கள் நாகர்கள்,இவர்கள் நிஷாதர்கள்,இவர்கள் கிராதர்கள்,இவர்கள்
ஆரியர்கள்,இவர்கள் தேவர்கள் என்கிற வேறுபாடு அன்புக்கு இல்லை.அவள் உன்னை
நேசிக்கிறாள் கூடுதலாக அவள் உன்னை நேசிக்கிறாள்.அவள் விருப்பத்தை நிறைவேற்றுவது
உனது கடமை.எழுந்திரு.'.
பீமன் சொல்கிறான்.'சாலகடங்கடியின் அன்பை நான்
புரிந்துகொள்ளுமுன்பு அம்மா புரிந்து கொண்டாள்'. மலரினும் மெல்லிது காமம் சிலர்
அதன் செவ்விதலைப்படுவார் என்பார் திருவள்ளுவர்.பெண்களின் அன்பை விளங்கிக்கொள்ள ஒரு
பக்குவம் வேண்டியிருக்கிறது.ஷேக்ஸ்பியர்' frailty thy name is woman' என்று
வித்தியாசமாகச்சொல்வதை இந்த இடத்தில் வாசகன் ஒரு முறை அசை
போட்டுப்பார்க்கலாம்.லேடி மாக்பெத்தையும் அந்த ஷேக்ஸ்பியர் தான்
நமக்குக்கொடுத்தவர்.
பாவண்ணன், தனது மொழிபெயர்ப்பில் பீமனின் சின்னம்மா அந்த
மாதுரி தன் கணவன் பாண்டுவோடு உடன் கட்டை ஏறுதலை உடன்படுக்கை ஏறுதல் என்று
குறிப்பிடுகிறார்.அது அந்த அவ்வளவுக்குப்பொறுந்திவருமா என்று நம்மால்
சொல்லமுடியவில்லை.
கிராமப்புறங்களில் நாம் பார்த்து இருப்போம்.நம்மூருக்கு
வாக்குப்பட்டு வந்த பெண்களை அவர்களின் பிறந்த ஊர் பெயர்கொண்டே
அழைப்போம்.நம்மூருக்கு மாப்பிள்ளையாய் வந்தவர்கள் இங்கேயே வசிக்க
நேர்ந்துவிட்டாலும் அந்த ஆண்மக்களை அவர்களின் பிறந்த ஊர்பெயர் கொண்டுமே
அழைப்போம்.அதுபோலவே பாஞ்சால தேசம் சேர்ந்தவளை கதையில் பாஞ்சாலி என்று
குறிப்பிடுகின்றனர்.அவளுக்கு க்கிருஷ்ணை என்ற பெயர் உண்டு. அதைவைத்துத்தான் பீமன்
அவளை அழைக்கிறான்.வேறு ஊர்க்காரி என்றபெயரிலழைத்தால் அவள் தன்னிடமிருந்து
அன்னியப்பட்டுப்போய்விடுவாள் என்று பீமன் விளக்கம் சொல்கிறான்.
ராமாயணமும்
பாரதமும் க்ஷத்ரியனின் பெருமை பேசுவன.பெண்ணைக் 'கன்னிகாதானம்' என்று
சொல்லிப்பெறுவது அந்த ராமனுக்கும் இல்லை அர்ஜுனனுக்கும்
இல்லை.பராக்கிரமத்தைக்காட்டியே அதற்குப்பரிசாக பெண்கள் வந்து சேருகின்றனர்.பைரப்பா
அழகாகச்சொல்கிறார்.எதிரியே ஆனாலும் வீரமிக்க ஒரு புருஷனுக்கு மரியாதை செய்பவன்
க்ஷத்ரியன்.'க்ஷத்ரியன் ஒரு பெண்ணை வெற்றி கொள்கிறான்.எப்போதும்
தானமாகப்பெறுவதில்லை'.
ஒரு நாளுக்கு ஒருவன் என்பதுபோய் ஒரு ஆண்டுக்கு ஒருவன்
என்று மாமியார் குந்தி தன் மருமகளுக்கு ஆணை தருகிறாள்.தருமன் முறையிலே ஒரு நாள்
அர்ஜுனன் கிருஷ்ணையிடம் வருகிறான்.அவள் சொல்லிப்பார்க்கிறாள்.அவன் எல்லை
மீறிவிடுகிறான். கிருஷ்ணை அர்ஜுனனிடம் பேசுகிறாள்.'நீ வில் முறித்து இருக்கலாம்.
உன் அன்னைக்குக்கொடுத்த வாக்கு காப்பாற்றப்படவேண்டும்' என்கிறாள்
கிருஷ்ணை
பேசுகிறாள்.'அர்ஜுனா,நீ புத்திசாலி அழகன்.உன் வார்த்தைகளால் எந்தப்பெண்ணையும்
வசப்படுத்திவிடுவாய். அர்ஜுனா, நீ என்னை மயக்கமுற வைத்துவிட்டாய்.இதற்குப்பிறகு
மேலும் மூன்று பேரைமயக்கி மணந்துகொண்டுவிட்டாய்.இது போதாதென்று எத்தனை பெண்களை
மய்க்கினாய்? அர்ஜுனா,நீ அகங்காரம் நிறைந்தவன்.பெண்களை உன்
அகங்காரத்துக்குப்பலியாக்கினாய்.இந்தப்பாஞ்சாலி மட்டுமுன் அகங்காரத்துக்குப்பலியாக
விரும்பவில்லை.அர்ஜுனா, நீ சமீபத்தில் தோற்றாய்.குருட்டுத்தனமான உனது
மிருகப்பசிக்கு இந்தப்பாஞ்சாலி இடம் தரவில்லை என்கிற ஒரே காரணத்தால் அவளை உன் இடது
காலால் உதைத்துச்சென்றுவிட்டாய்.' கொட்டித்தீர்க்கிறாள் பாஞ்சாலி.பாரில்
யார்க்கும் அஞ்சாத வில்லாளி அவள் முன்
அற்பமாய்ச்சிறுத்துப்போகிறான்.
திரௌபதியை என் மடியில் வந்து உட்காரடி என்று
ஒங்கி அழைத்தான் துரியோதனன்.பீஷ்மனோ விதுரனோ சகோதரன் மனைவியை இப்படிப்பேசலாமா
இது தருமமில்லை என்கிறார்கள்.துரியோதனன் சொல்கிறான்.பாண்டவர்கள் ஐவருக்கும் இவள்
மனைவி. நானும் அவர்களுடைய சகோதரன் தானே.ஆக எனக்கும் இவள் மனைவி ஆகிறாள் என்று
குருட்டு நியாயம் பேசுகிறான். ஆங்கிலக்கவி மில்டனின் இழந்த சொர்க்கத்தில் சாத்தா
ன்கள் இந்தப்படிக்கு நியாயம்பேசுவதை நாம் இவ்விடத்தே எண்ணிப்பார்க்கலாம்.
சபிக்கப்பட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட்டு, ஒரு சர்ப்பம் ஆகிய என்னால் உன்னோடு
பேசவும்முடிகிறது. மனிதர்கள் ஆயிற்றே நீங்கள். இந்த பழத்தை சாப்பிட்டால் எவ்வளவு
நன்மை உங்களுக்கு வரும் அது வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இறைவன் அந்த
சபிக்கப்பட்ட மரத்தின் பழத்தை த்தொடாதே, என்று ஒரு தீய எண்ணத்தோடு உங்களுக்கு
கட்டளை தந்திருக்கிறார். வழக்குரைஞரைப்போல நன்றாக எடுத்து வைப்பார் கவி
மில்டன்.
பந்தயமோ இல்லை விளையாட்டோ அதனில் தோற்றுப்போன ஒருவனின் மனைவி
போட்டிருக்கும் ஆடை அணிகலன்களை மற்ற சூதாடிகள் பிடித்து இழுப்பார்கள் எனற செய்தி
புனிதமான வேதவரிகளில் காணப்படுவதாக பைரப்பா குறிப்பிடுகிறார்.துச்சாதனன் செய்த அந்த
இழிச்செயல் சரியே என்கிறான் துரியோதனன்.சூதாட்டத்தில் தோற்றவனை விட்டு
பெற்றோர்களும் சகோதரர்களும் விலகிப்போய்விடுவார்கள். இதுவும் வேதம் சொல்லும்
விஷயமே.
சூதாட்டத்தில் வெற்றி பெறும்போது பித்தேறும் என்றும் தோற்கும்போது
வெறிபிடிக்கும் என்றும் சொல்லும் கிருஷ்ணனின் வார்த்தைகள் உண்மையானவை என்று
நகர்ந்துபோகிறது கதை.
ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்டவனைக்காதலிக்கவேண்டும் என்று
தெரிவதில்லை.மனம் பக்குவம் அடைகிறவரைக்கும் அவளுக்கு இந்த அறியாமை
தொடர்கிறது.அதற்குள்ளாகவே எங்கேனும் காதல் எனும் சிக்கலில்
மாட்டிக்கொண்டுவிட்டால் அவ்வளவே.பைரப்பா நன்றாக எடுத்து வைக்கிறார்.நாமும் நிறைய
வாழும் உதாரணங்களை பார்த்து இருப்போம்.எத்தனையோ காதல் கோணல்கள் கண்
முன்னேபளிச்சிடும்.
பாஞ்சாலியின் மானம் பங்கப்பட நேர்ந்துவிட்ட அந்த சோகம்
பீமனைப்போல் அந்த அளவுக்கு வேறுயாரயும் பாதிக்கவில்லை. ஜயத்ரதனும் கீசகனும்
பாஞ்சாலியை அனுபவிக்க க்கெஞ்சி நிற்கிறார்கள்.பீமனுக்குத்தான் ஆத்திரம் பீறி
எழுந்தது.எம். டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல்
எழுதியிருப்பார்.அது பாண்டவர்களில் அந்த பீமனின் பெருமை பேசும்.அந்த நாவலை
குறிஞ்சிவேலன் அழ்குதமிழில் தந்து இருக்கிறார்.
கிருஷ்ணனைத்தவிர எந்த
ஆண்மகன்தான் என்னைப்பார்த்ததுமே சஞ்சலப்படவில்லை? என்கிறாள் பாஞ்சாலி. துர்யோதனன்,
துச்சாதனன்,ஜயத்ரதன்,கர்ணன்,கீசகன்,எல்லோரும்தான் மயங்கிப்போனார்கள்.ஆனால்
கிருஷ்ணன் மட்டுமே கட்டுப்பாடு உள்ளவன்.பாஞ்சாலியை மணக்க வேண்டும் என்கிற எண்ணம்
இல்லாத க்ஷத்ரியன்.வில்லை எடுத்து அர்ஜுனனனுக்கு இணையாக அல்லது விஞ்சி கிருஷ்ணனால்
சாகசம் செய்ய முடியாதா என்ன? என்று கதை சொல்லிக்கொண்டு நகர்ந்து
போகிறது.
சூதாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும்,விபச்சாரிகளுக்கும் தேச எல்லைகள்
எல்லாம் கிடையாது.தம்மையொத்தவர்களை அடையாளம் காண்பதில் நட்பு கொள்வதில்
அவர்களுக்கு நிகர் அவர்களே.பருவம் இந்த யதார்த்தத்தை அழகாக எடுத்து
இயம்புகிறது.
இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையே எத்தனை தேசங்கள்.பைரப்பா
தேசங்களின் பெயர்களை
அடுக்குகிறார்.சிந்து,பாலிகம்,வாததானம்,காந்தாரம்,கேகயம்,திரிகர்த்தம்,உத்தரகுரு,ஹேமகூடம்,குரு,பாஞ்சாலம்,கோஜம்,கோசலம்,குந்தலம்,புளிந்திரம்,கலிங்கம்,சேதி,
அவந்தி,விதர்பம்,ஒவ்வொன்றிற்குள்ளுமெத்தனையோ துணைதேசங்கள்.கிருஷ்ணன் யாவும்
அறிந்தவன் என்கிறார் பைரப்பா.
இது மொழியாக்க நூலா என்று வாசகனுக்கு இடையில் ஒரு
எண்ணமே வராதபடிக்கு பாவண்ணன் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பைக்கொண்டு
செல்கிரார்.
'வர வர க்ஷத்திரியர்கள் வேதம் படிப்பதே குறைந்து
கொண்டுவருகிறது.பீஷ்மா,நீ பிரம்மசரிய விரதம் பூண்டிருப்பவன்தானே .பேசாமல் நீ
பிராம்ணனாக மாறிவிடு' என்கிற வாசகம் பராசரர் சொன்னதாக பைரப்பா எடுத்து
வைக்கிறார்.க்ஷத்திரியர்கள் வேதம் படிப்பது வழக்கத்தில்
இருந்திருக்கிறது.க்ஷத்திரியர்கள் பிராம்ணர்களாக மாறுவதும் நிகழ்ந்து இருக்கிறது
என்பதை பைரப்பா சொல்லிப்போகிறார்.வேதம் பிராம்ணர்கள் மட்டுமே பயில்வது என்கிற
விஷயம் பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டும்.பிறகு காலம் செல்லச்செல்லக்
கல்வி என்பது பிராம்ணர்களுக்கு மட்டுமே என்கிற சமாச்சரமாகி இருக்கக்கூடும்.வேற்றுமை
தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே
என்கிற தமிழ் இலக்கியச்சான்று ஒரு ஆரோக்கியமான செய்தியைச் சொல்கிறது.
சொந்த
பந்தங்களைக்கொன்று நமக்கு என்ன இந்த மண்ணாசை என்று அர்ஜுனன்
குழம்பிப்போகிறான்.ஆசிரமம் கட்டிக்கொள்வோம் அது போதும். வேதம் ஓதி சொச்ச
வாழ்க்கை முடிக்கலாம் என அர்ஜுனன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான். 'நான் யுத்தம்
செய்ய மாட்டேன்.யுத்தம் வேண்டாம்'என்று புலம்புகிறான். தருமனும் அவனோடு இணைந்து
கொள்கிறான்.
'யார் என்னதான் சொன்னாலும் அர்ஜுனன் ஓரளவுக்கு நல்லவன்தான்
இல்லையா விதுரா? என்கிறான் திருதராஷ்டிரன் என்று சுவாரசியமாகக் கதையை பைரப்பா
எழுதிக்கொண்டு போகிறார். விதுரன் எந்த ப்பதிலையும் திருதராஷ்டிரனுக்குச்
சொல்லவில்லை. அமைதி காக்கிறான்.அற்புதமான இடம் இது.அந்த விதுரனின் அமைதிக்குத்தான்
எத்தனை கனமான பொருள். விதுரனின் அந்த அமைதிக்கு என்ன பொருள் என்பதை
திருத்ராஷ்டிரன் உணர்ந்துகொள்கிறான். பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் இங்கே அழகாக
நகர்கிறது பருவம்.
'நான் சொல்வது தரும நெறி பற்றி.இது கோழைத்தனமோ பயமோ அல்ல'
என்கிறான் அர்ஜுனன்.பீமனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது.கோழையின் மனம்
எப்போதும் தருமத்தின் உருவத்தை தனதாக்கிக்கொண்டு பேச ஆரம்பித்துவிடும் என்கிறான்
பீமன்.சோர்ந்துவிட்ட அர்ஜுனனை தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன்.உபதேசம் சொல்கிறான்
கிருஷ்ணன்.தருமம் வெல்ல வேண்டும் என்கிறான்.அறம் நிலை பெற வேண்டும் எத்தனை
இழப்புக்கள் வந்தாலும் அதனை நீ எதிர்கொள்.அறம் வென்றாக மட்டுமே உழைக்கவேண்டும்
என்கிறான் கிருஷ்ணன்.அதுவே கீதா உபதேசம்.உங்களுக்கும் எனக்குமெல்லோருக்கும் இனி
வருகின்ற அத்தனை பிரஜைகளுக்கும் உபதேசம் என்றாகிறது. இங்கே பருவம் சொல்லும்
செய்தி' முயற்சித்திருவினையாக்கும்' என்பதாக நாம் கொள்ளலாம்.
குந்திக்கு
இந்தப்போரில் மகிழ்ச்சி உண்டா என்றால் இல்லை.அவள் சுமக்கும் சோகம் அவள் மட்டுமே
அறிவாள்.கிருஷ்ணனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எந்த ஒரு செய்தியும்
இருக்கமுடியாது.எல்லாம் அறிந்தவன். சிறுபிள்ளை போல் விளையாடுவான்.பார்த்தனுக்கு
த்தேரோட்டி.கோபியர்களோடு கொஞ்சி மகிழும் கோபாலன். நட்புபோற்றத்தெரிந்த
பண்பாளன்.கீதை உபதேசிப்பான். மன்னரிடம் தூது போவான்.செய்யாத வேலை என்று எதுவும்
இல்லை.பாரதி கண்ணனை இப்படி எல்லாமாகப்பார்த்து பாடிய மாகவியல்லவா.
'என்
பிள்ளைகள் வெல்லப்போவது நிச்சயம்.அவர்கள் வெல்லவேண்டும் என்பதுதான் என்
விருப்பமும் கூட.ஆனால் என்னைப்பொருத்தவரை நான் தோற்றுவிட்டேன் என்றே
எண்னுகிறேன்.சரியாகத்தெரியவில்லை. அவர்கள் வெற்றியில் என்னால் பங்கெடுத்துக்கொள்ள
இயலாது' இது குந்தி சொல்வது.குந்தி நினைத்து இருந்தால் இந்த்ப்போரே நிகழ்ந்து
இருக்காதுதான்.பெற்ற ஐவரும் தாய்ச்சொல்லை மீறப்போகிறார்களா என்ன? எப்போது
மீறினார்கள்.பாஞ்சாலியும் ஐவருக்கும் மனைவி என்றுதானே வாழ்ந்து முடித்தாள்.கர்ணனை
வலுவிழக்கச்செய்ததில் குந்திக்கும் கிருஷ்ணனுக்கும் பெரும்பங்குண்டு.பிறகு வெற்றி
என்ன வெற்றி.எல்லாம் இவை போர்த்தந்திரங்கள் என்று நிம்மதி பெறலாம்.ஆனால் நேர்மையான
நியாயமான மனசாட்சி உறங்கிவிடுமா என்ன?.
காந்தார தேசத்து காந்தாரி
திருதுராஷ்டிரனை மணக்கிறாள்.திருதுராஷ்டிரன் குருடன்.பொன்னையும் பொருளையும்
கொண்டுவந்து வரண்டுபோன காந்தாரதேசத்தில் குருடன்
கொட்டுகிறான்.அந்தக்குருடனைப்பார்க்கச்சகிக்காத காந்தாரி அவனை வேறு வழியின்றி
மணம்முடிக்கிறாள்.அழகின் உச்சம் காந்தாரி.அவள் கண்களைக்கட்டிக்கொண்டு
வாழ்ந்தாள்.ஊர்ரர் காந்தாரி கண்ணைக்கட்டிக்கொன்டு வாழ்ந்ததற்கு நல்லதொரு
கதைகட்டிவிட்டார்கள்.கணவன் குருடன் தானும் அப்படியே வாழவேண்டும் என்கிற பதிவிரதா
அறம் என்றார்கள்.காந்தாரி புகழ்ச்சிக்கு இரையானாள்.அப்படியே வாழ்ந்து
முடித்தாள்.பெற்ற மக்களை அவள் எங்கே கண்களால் பார்த்தாள்.எல்லோரும் போரில்
இறந்துபோனார்கள்.கிருஷ்ணன் அவளை கண்கட்டை அவிழ்க்க வேண்டுகிறான்.எல்லாம்
அழிந்துபோன சமயம் அவள் கண் திறந்து பார்க்கிறாள்.கண்கள்
கூசுகின்றன.குருட்டுக்கணவனை மிச்சமிருந்த மனிதர்களைப்பார்க்கிறாள்.வெறுப்பு
மேலிடுகிறது.மீண்டும் தன் கண்களை க்கட்டிக்கொண்டு வாழவே
ஆசைப்படுகிறாள்.
கிருஷ்ணனிடம் வினா வைக்கிறாள் காந்தாரி.'நான் ஒரு புண்யவதி
என்றால் என்னைச்சுற்றி ஏன் இத்தனை இறப்புக்கள் நிகழ்கின்றன. குந்தி நியோக முறையில்
உயர்ந்த குழந்தைகளை ப்பெற்றுக்கொண்டதை மிக ச்சரி என்கிறது அவள் மனம்.
திருதுராஷ்டிரனை மணந்து அவன் மூலம் திறமையற்ற குழந்தைகளை ஏன் பெற்றுக்கொண்டு
வாழ்க்கையில் தோல்வியுற வேண்டும்.இப்படி எண்ணிப்பார்க்கிறாள் காந்தாரி.அவளின் வினா
நியாயமானதே.பைரப்பா இப்படி ஒரு புதிய விஷயத்தை வாசகனுக்கு எட்டவைக்கிறார்.
'என்
பிள்ளைகளின் பிணங்களையாவது குறைந்த பட்சம் பார்க்க விரும்பிகிறேன்' கிருஷ்ணனிடம்
மீண்டும் கெஞ்சி நிற்கிறாள் காந்தாரி.
காந்தாரி பக்கத்தில் ஒரு ஆடவர் கூட பாக்கி
இல்லை. எல்லோரும் மடிந்துபோயினர்.குந்தியின் மைந்தர்களிடம் இது விஷயம் கேடக மனம்
இடம்தரவில்லை. ஆக கிருஷ்ணனிடம் கேட்கிறாள் அவள்.
'கழுகுகளும் நாய் நரிகளும்
அரசன் சாமான்யன் என்கிற வித்தியாசம் இன்றி எல்லாப்பிணங்களையும்கொத்திச்சிதைத்து
அடையாளத்தை அழித்திருக்கும்' கிருஷ்ணன் காந்தாரிக்குப்பதில்
சொல்கிறான்.
போர்முனைக்கு ச்சென்ற சாமான்யப்பெண்கள் அங்கே யுத்தத்தின்போது
காமம் தேவைப்படும் வீரர்களுக்கு அது வழங்கி பின்கருவுற்று நிற்கிறார்கள். விதை தந்த
வீரர்களோ களத்தில் மடிந்துபோகிறார்கள்.. ' எங்கள் வயிற்றில் இருக்கும்
இந்தக்குழந்தைகளுக்கு 'அப்பா' என்று யாரைக்காட்டுவது? அந்த கர்ப்பிணிப்பெண்கள்
புலம்பித்தீர்க்கிறார்கள் அவர்கள் முன்னே. ஐவரில் மூத்த தருமன் நிர்க்கதியாகி
நிற்கிறான்.அய்யோ பாவம் அந்த தருமன்.
அரண்மனைக்கு முன்பாக எங்கு பெருமழை.
வெள்ளம் எங்கும் ஒரே வெள்ளம். எங்கும் அழிவின் முற்றுகை.கோர முற்றுகை.
பைரப்பா
ஆழ்ந்த வினாவைத்து பெருங்கதையை முடித்து வைக்கிறார்.
பெண்களைச்சுற்றியே 'பர்வம்'
கதை கொடியெனப்பின்னிக்கொண்டுபோகிறது.பெண்களே சாதிக்கிறார்கள்.வினா
வைக்கிறார்கள்.விடை சொல்கிறார்கள்.சமூகச்சிக்கலில் சிக்குண்டு
வதைபடுகிறார்கள்.வாழ்வை மீட்டும்எடுக்கிறார்கள்.பெண்களின் பிபஞ்சம் அல்லவா
இது.
கன்னடக்காரர் பைரப்பாவின் இலக்கிய ஆளுமையைத் தமிழ் இலக்கிய தளத்திற்கு
பர்வம் என்னும் புதினம் வழி அற்புதமாக கொண்டு தருகிறார் பாவண்ணன்.
பாவண்ணனின்
ஈடில்லா மொழியாக்க உழைப்பு போற்றுதலுக்குரியது.தமிழுக்குத்தொண்டு செய்வோன்
என்றும் வணக்கத்திற்கு
உரியவன்.
--------------------------------------------------------------------
.