Wednesday, January 22, 2020

recent issue- actor rajini regarding


சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்

This entry is part of 40 in the series 20080103_Issue
எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும்
தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார்
வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை
பெரியார் திடல் ,வெப்பெரி சென்னை 600007. முதற்பதிப்பு 1939. நன்கொடை ரூ.65. பக்கங்கள் 272.
—————-
சீரார் ஈ.வெ.ரா அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு. யார் என்ன சொன்னபோதிலும் என்றும் குறையாது.
-சி.. இராஜகோபாலாச்சாரியர். கவர்னர் ஜெனரல். தில்லி -22-11-48 – பக்கம்-199
——————————————————————–
தமக்கென வாழாது பிறர்க்கே வாழ வேண்டுமென்பது,பண்டைத்தமிழரின் உயரிய கருத்தாகும். இச்ச்£ரிய கருத்தை தம் வாழ்நாட்களில்
கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி மக்கள் அனைவரும் மாயவலையில் சிக்காவண்ணம் அறிவு கொளுத்தி
பிறப்பொக்கும் என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள் நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால் ,வேறு கூறவேண்டுமோ?
-காஞ்சி.. பரவசுத்து இராஜகோபாலாச்சாரியார் பி.. ஏ. – பக்கம்-235
தேர்இல்லை,திருவிழாஇல்லை தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்.சுவாமியை குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்றார். இவரைக்காட்டிலும் பழுத்த நாச்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. ,,,,,,,, மனசாட்சிக்கும்,தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை நாச்திகன் என்று அழைக்கும் அன்பர்கள் நாச்திகம் யாது என்றே தெரிந்துகொள்ளவில்லை என்றே சொல்வேன். அநீதியை எதிர்க்கத்திறமையும்,தைரியமும் அற்ற ஏழைகளாய்ச்சொரணையற்றுக்கிடந்த தமிழர்களினுள்ளத்தைக்கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாயக்கரைப்பெரிதும் சேர்ந்ததாகும் அவர் இயற்கையின் புதல்வர்.! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம்,,,, தமிழ்நாட்டின் வருங்கால பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்; வருங்கால வாழ்வின் அமைப்பு.
–வ.ரா-( காந்தி-இதழில்-1933) பக்கம்-238
தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.,,,,, அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை.
– கல்கி- ( ஆனந்தவிகடன்-1931) பக்கம்-240
இன்னமும் சொல்லுகிறேன். நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக்குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப்பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
– பக்கம்- 14
———————————————————————————————————————-
ஆனால் எப்போது உங்கள் மனசாட்சியும் பகுத்தறிவும் இடங்கொடுத்து நீங்கள் கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து
உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் ஒரு புறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு கழக்கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றவேன்டியதுதான் முறை..
-பக்கம்-16
——————————————————————————————————————
செத்துப்போன ஜெனரல் டயர் துரையை விடக்கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்துகொண்டு பிள்ளைக்குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.,,,,,,,தெருக்களிலே போகக்கூடாது கிட்டத்திலே வரக்கூடாது என்கிறார்களே? இதைப்பற்றி
யாருக்கும் உறைக்கிறதா? இதனால் நமக்கு அவமானமாய் இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப்பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகளைப்படுபாவி ‘டயர்த்தன்மை’ என்று எழுதுகிறதா?
-பக்கம்-171
பெண்கள் விடுதலைக்குப்பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் ஏமாற்றுவதற்குச்செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
,,,எங்காவது பார்ப்பனரால் பார்ப்பனரல்லாதார்க்குச்சமத்துவம் கிடைக்குமா?,,,,,,,,பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு விடுதளை இல்லை.
-பக்கம்-172
தமிழர்களைத்தட்டி எழுப்பித்தமிழர்களுக்காகப்போராடும் ஈ, வெ.ரா. ஔர் தமிழர் அல்லர். அவர் ஒரு கன்னடியர்.
-பக்கம்-188
பார்ப்பன நஞ்சு எவ்வளவு கொடிது, எத்தகைய கொல்லும் சக்தியை த்தன்னகத்தேகொண்டது என்பதை விளக்குவதுதான் அவரது.,,,,,,,,
——————————————————————————————————————— பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்,,,,,,,,,பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத்தின்னாது. அதுபோலவாக்கும் நம் பார்ப்பனத்தன்மை.
-பக்கம்-197.
———————————————————————————————————————-
10/04/065 ல் கம்ப ராமாயணத்திற்குத் தீ 1 நாடெங்கும் பெரியார் அவர்களின் அறிக்கைப்படி திராவிடர் கழககத்தினரால் கம்பராமாயனத்திற்கு தீ இடப்பட்டு ’விடுதலை.’ அலுவலகத்துக்குச் சாம்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
-பக்கம்-264
23,24-1-71 ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு 24/01/71 ல் ஞாலம் புகழ் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்.
அய்யா ஊர்வலம் வந்தார். ஊர்வலத்தில் இந்துமதக்கடவுளின் யோக்கியதைகளை அம்பலப்படுத்தும் சித்திரங்கள் டிரக்குகளில் இடம் பெற்றன. இராமனுக்கு ச் செருப்படி வீழ்ந்த்தும் இறுதியில் இராமனுக்குத்தீ மூட்டப்பட்டதும் இந்த மாநாட்டில்தான். ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது’ என்ற சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இந்தமாநாட்டில்தான். இவைகளை வைத்துக்கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது பாதம் தாங்கிகளும் தி மு க வுக்கு எதிராகத்தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.
-பக்கம்-268
————————————————————————————————————

ezu latasam varikal 4








4 விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)





வெளிச்சத்துக்கு ஏங்குகிற பிரக்ஞையின் அனுபவத்தை வாசகனுக்குத் தெரிவிக்கின்ற உத்தியைப் பாவண்ணனின் சிறுகதைப் படைப்புகளில் எளிதாகக் காணலாம். புராணப் பின்னணியில் அமைந்த கதைகள் பாவண்ணனுக்குக் கூடுதல் சிந்தனைத் தளத்தைத் தந்து உதவியிருக்கின்றன. தன் கவனத்தின் ஆழத்தை அனாயசமாய்த் தொட்டுப் பார்த்துவிட புராணப் பாத்திரங்கள் அவருக்குத் துணைக்கு வருகின்றன. வாழ்க்கை என்னும் புதிர் அவிழாதா என்கிற சிறுபிள்ளையின் பெருவிண்ணப்பம் அவரைக் குடைந்து குடைந்து, திக்குமுக்காட வைத்து, திணற வைத்து, உறைய வைத்து, கிறங்க வைத்துக் கருத்துக் கதிர்வீச்சாய்ப் படைப்பாக்கங்களில் கொப்பளிக்கிறது. ஞானவாரியில் ஜலக்கிரீடை செய்து விடுகிற பேரவா சாத்தியப்பாடில்லை என்பது சத்தியமாய்த் தெரிந்தாலும் சாதிக்க முனையும் மனித உந்துதல்களின் அரிய வெளிப்பாடு. கருத்து மூலங்களில் எதிராய்ச் சென்று கன்னத்தில் அறைவது என்பது எளிதாய் இருக்க கருத்தோடு கைகோர்த்துக் கொண்டே கருத்துக்குள் விளங்காது பூடகமாய்க் கிடக்கிற முடிச்சுகள் சிலவற்றை அவிழ்த்து விடுதல் பாவண்ணனுக்குச் சாத்தியமாகி இருக்கிறது.
சிறுகதை வடிவத்தின் சூட்சுமத்தைத் தளமுயர்த்திக் காட்டியிருக்கிறார் பாவண்ணன். ‘ஏழு லட்சம் வரிகள் ‘ என்னும் சிறுகதை மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கதைகளில் ஒன்று. சிறுகதை ஓடிப்பறந்து மறைந்து விடுகிற செய்தி சொல்லும் சிட்டுக் குருவியாக இல்லாமல் பசுமரத்தில் அமர்ந்து பலபேசும் புதிர்ப்பறவை என்பதை எதார்த்தமாகக் காண்பிக்கிறார் பாவண்ணன். ஆகப்பெரிய செவ்வியல் படைப்புகளில் ஆன்மாவுடன் வாதப் பிரதிவாதம் செய்கின்ற நசிகேதன் நம் கண்முன் தோன்றிப் பிரமிப்பூட்டுகின்றான். ஞானப்புயல் சுழல வைக்கிறது வாசகனை.
அரசருடன் அமர்ந்து அரசுக்காகச் சிந்திக்கிற பொறுப்பினைத் தமதாக்கிக் கொண்ட பண்டிதக் கூட்டங்களைத் தோலுரித்துக் காட்டுகின்ற ஏழு லட்சம் வரிகள் என்னும் சிறுகதை கூரான சமூக விமர்சனமாக வெளிப்பட்டுள்ளது. பைசாச மொழி இழிக்கப்பட்டதன் ஆதி வரலாற்றைத் தளமாகக் கொண்ட கதையில் ஒவ்வொரு வரியிலும் விமர்சனம் மறைந்திருக்கிறது. ‘பூவின் மணத்தை நரிகள் எப்படி உணரும் நந்திதேவா ? ‘ குணாட்யர் மூலமாய் வினாவை வைக்கின்றார் பாவண்ணன். சமூக நீதி இங்கே திரைவிலக்கி மெல்ல எட்டிப் பார்க்கிறது. ‘வெகுவேகமாக இந்தக் காவியம் மக்களிடையே பரவ வேண்டும் என்கிற அவசரத்தில் அரசரை அணுகி விட்டேன். அது பெரிய பிசகு ‘ இது கதையில் வரும் சாரமான வரி. மக்களுக்கும் அரசருக்கும் இடையேயுள்ள வெளி சிரஞ்சீவியாக நிலைத்திட நிரந்தரமாய்ச் சுழலும் ஒரு அசட்டுக் கூட்டம். படைப்புத் தளத்தில் லாவகமாகத் தோலுரிக்கிறார் பாவண்ணன்.
பெண்மையின் மனப்பறவை பறந்து பறந்து செல்லும் உச்சங்களையும் அதல பாதாளங்களையும் அழகு மெருகிட வடித்துக் காட்டும் படைப்பு ‘அல்லி ‘. சிறுகதையின் வெற்றி இது. உன்னதம், செய்நேர்த்தி, எழுத்துப் பெருமிதம் ஆகியவை அனைத்தும் ஒருங்கே கொப்பளிக்கும் படைப்பு. தன் தந்தையை ஒத்த ஆண்மகனுக்காக ஏங்கித் தவிக்கும் அல்லி. ‘அவரைப் போல ஓர் ஆண் உலகத்தில் மறுபடியும் பிறக்காமலேயே போனானா ? ‘ கேள்வி ஒரு உதிர்ந்த இறகு போல மிதந்து இறங்கி அவள் நெஞ்சை அடைந்தது. கச்சிதமான சொல்லாடல். பாவண்ணனுக்கு வருத்திக் கொள்ளாமல் வசப்படுகிறது. வாசகனை உலுக்கிப் பார்க்கிற இக்கதை உலகத் தரத்துக்கு இணையானது.
‘ரணம் ‘ சிறுகதையில் அற்புதமான விவாதமொன்று முன்வைக்கப் படுகின்றது. கர்ணன் தன் தாயையே ஒரு பாவி, அரக்கி, இரக்கமில்லாதவள் என்று அடுக்கடுக்காயத் திட்டுகிறான். ‘பரசுராமனிடம் நீ உன்னைப் பிராமணன் என்று பொய்யுரைத்து விற்பயிற்சி அடைய உனக்கு உருவான நெருக்கடி போல மற்றவர்களுக்கு நெருக்கடி வரக் கூடாதா கர்ணா ‘ என்கிற கேள்வி அவனைச் சுக்கு நுாறாக உடைத்துப் போடுகிறது. வண்டு துளைத்து ரணப்படுத்தியது சிறுத்துப் போய் இவ்வினாவின் ரணம் விசுவருபம் எடுக்கிறது.
துரியோதனனின் இறுதிக்கணம் குறித்து உணர்வுக் குமிழ்களை வரிசைப்படுத்தும் சிறுகதைப் படைப்பு திரை. முக்கியமான தருணத்தைச் சித்திரக் காட்சியாக முன்வைக்கிற கதை. குற்ற உணர்வைத் துரியோதனனைப் பிடறியைப் பிடித்து உலுக்க வானம் பார்க்கிறான் அவன். பாவண்ணனின் பார்வையில் விரிந்த நீலப்பரப்பில் சுற்றிச் சுற்றி வட்டமடித்த அந்தப் பறவையை அவன் கண்கள் தேடின. வாழ்வின் அந்திப்பொழுதைப் பறவையோடு பார்க்கிறான் துரியோதனன். பாவண்ணன் பறவைகளை அடிக்கடி தொட்டுப் பேசுகிறார். தத்துவப் பார்வை செறிவு பெற்றதன் வெளிப் பாடாய் இது இருக்க சாத்தியப் பாடுகள் அதிகம். ராமானுசரின் பறவை குறித்த வியாக்கியானங்கள் துணைக்கு வரலாம். ஷெல்லியின் வானம்பாடியின் அடைமொழி மனக்கண்களிலே தெரிகிறது. வால்மீகியின் பறவை தரிசனம் இதிகாசமாய் உரு எடுத்து வெளிப்பட்டதும் எதார்த்தம் . தமிழ்மறை திருக்குறளும்  உயிர்ப்பறவையைப் பற்றிப் பேசுகிறது.
சுழல் என்னும் சிறுகதை லட்சுமணன் சீதையை முனிவரிடம் ஆற்றுப் படுத்திய விஷயம் பேசுகிறது. பொருள் பொதிந்த ஒன்று பொருளற்றதாகப் போகிற தருணத்தைத் தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். மகளே, மானிடத்தைப் பொசுக்குகின்ற நெருப்புப் புள்ளி அது என்று சீதையிடம் பேசும் வால்மீகியின் ஊடாக வாழ்வு கோடி கோடித் தற்செயல்களாின் தொகுப்பு சீதை. மணிகளைக் கோர்க்கின்ற கயிறு போல எல்லாவற்றையும் கோர்த்தபடி ஒரு சரடு கண்ணுக்குத் தெரியாமலே நீள்கிறது. என்று உபநிடத சாரத்தைச் சொல்லிச் செல்கிறார் பாவண்ணன்.
புள்ளொடு விருட்சத்தையும் அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பேசும் பாவண்ணன் சுழல் கதையில் பெண்களை மரத்தோடு ஒப்புமைப் படுத்தி அழகாயப் பேசுகிறார். உலக உயிர்ப்புக்கு நீரைத் தருவிக்கும் மரங்கள் , உயிர்கள் மூச்சுவிட உயிர்க்காற்றுக் கொடை தருபவை. பசி நெருப்பு ஆற்றும் கற்பகத் தருக்கள் மரங்கள். மரங்களின் ஒவ்வொரு இலை நுனியிலும் கண்ணீர்த் துளி போல நீர்நின்று வழிந்தபடி இருந்தது என்று குறிப்பிடுகிறார் பாவண்ணன். சீதையின் துயரத்தைக் காட்டில் நிற்கும் நெடுமரங்கள் உணர்கின்றன. பெண்கள் உயிர்த் தருக்கள். பெரும்பாலும் மனிதர்கள் அதை உணர்வதில்லை. கேவலமாகக் குறுக்கிக் கொள்கிறார்கள் என்ற விமர்சனம் சொல்லாமலேயே வெளிப்படுகிறது.
‘போர்க்களம் ‘ சிறுகதையில் ராகுவின் தீட்சண்யம் துல்லியமான சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டப்படுகிறது. ராகுவின் கேள்விக் கணைகள் ஒரு நல்ல வழக்கறிஞரின் ஆளுமை வயப்பட்டதாய் வெளிப்படுகின்றன. மார்க்சிய விஷயங்களை மாயக் கண்ணன் ஒப்ப ராகுவின் வாக்கு மூலமாக நமக்குத் தருகிறது இக்கதை. ‘நன்றாக யோசித்துப் பாருங்கள். பாற்கடலைக் கடையநாமும் அவர்களும் ஒரே அணியில் நின்ற அக்கணத்தை எண்ணிப் பாருங்கள் ‘ என்று சொல்லும் ராகு ‘தந்திரப் பின்னணியில் ஒற்றுமையை வளர்ப்பதை விட வெளிப்படையாகவே மோதிச் செத்துப் போகலாம் ‘ என்று பேசுகிறான். ‘உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதானே காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு ‘ என்று ராகுவின் பேச்சில் வெளிப்படும் விஷயம் கதையைச் சமகாலத் தன்மை கொண்டதாக மாற்றி விடுகிறது. தேவர்களின் கொப்பரையில் அமுதத்தை ஊற்றும் மோகினி வெற்று அகப்பையை அசுரர்களின் கொப்பரைகளில் விட்டுவிட்டு எடுக்கிறாள். அமுதம் தமக்குக் கிடைத்ததாக எண்ணி வெற்றுக் கொப்பரையைத் தம் வாயில் கவிழ்த்துக் கொண்டு மோகினியின் சுண்டி ஈர்க்கும் சிங்காரத்தில் சிறைபடுகிறார்கள் அசுரர்கள். யார்யாருக்கோ இதில் செய்தி அடங்கியிருப்பதுதான் இக்கதையின் வெற்றி. கஞ்சி குடிக்க வழியும் அதற்கான காரணங்கள் என்ன என்கிற தெளிவும் இல்லாதவர்கள், வீட்டில் பூச்சிகள் போல மக்கள் வாழ்வதையும் மடிவதையும் கலைநயத்துடன் வெளிப்படுத்துகிறார் பாவண்ணன். சிறிதும் கலைநயம் குறையாத வகையிலும் ச்முக விமர்சனத்தைப் படைப்பில் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்படைப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஆண்டாள், பெரியாழ்வார், மகள், தந்தை, அரங்கன், அரங்கநாயகி, ஜீவாத்மா,பரமாத்மா, அன்பு பேரன்பு என்கிற அருமையான உணர்வுத் தளங்களை அலசுகிறது புதிர் என்னும் சிறுகதை. ‘அவரும் நீயா ? நானும் நீயா ? எல்லாமே நீயா ? எல்லாமே நீயா ? எனக்கு ஏன் புரியவில்லை ? ‘ இது என்கிற பெரியாழ்வாரின் கேள்வி, அண்ணாமலை ரமணரின் நிலைத்த கேள்வியாகும். காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணில் படுவன அவை என்ன ஆரிதற்கு எல்லாம் அதிகாரி என்னும் உள்ளம் துருவும் வினா. பாவண்ணனின் படைப்புகளில் நிழலாய்த் தென்படுகிற அடித்தள நாதமிது.
வியாசர் சொல்வதாகப் பாவண்ணன் குறிப்பிடுகிறார் . '‘ஒரு பிம்பமாய் ஒரு கணம் எழுச்சி கொண்டது மட்டுமே உண்மை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் என் மனத்தை நானே முறுக்கேற்றிக் கொண்டு கவிதையின் உச்சத்துக்குச் சென்றேன். எழுதி முடித்ததும் எனக்குள் மறுபடியும் உருவான வெறுமைக்கு அளவேயில்லை. மிகப் பெரும் வெறுமை' ‘ என்கிற வரிகள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் எல்லாருமே மனத்துக்குள் சொல்லிக்கொள்ளக் கூடிய வரிகள் . மனத்தின் மறுபக்கம் இது. வியாசர் எவ்வளவு பெரிய கவிஞர். அவர் கெஞ்சிக் கரைவதைக் காட்டும் இம்மறுபக்கம் வாழ்வில் ஒவ்வொரு தந்தைக்கும் நேரக் கூடியதே. காலந்தோறும் ஒவ்வொரு ஆணுக்கும் உருவாகும் மனநெருக்கடியை வியாசர்-சுகர் பின்னணியில் வைத்துப் பேசுகிறது இக்கதை.
ஆழ்ந்த இந்தியத் தத்துவ ஞானச் சுரங்கமாய் விளங்கும் தொன்ம விஷயங்களைச் செரித்துக் கொண்டு சமகாலத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் சில தருணங்களை மறு ஆக்கம் செய்வது இத்தொகுதியின் முக்கியத் தன்மையாகும். படைப்புத் தளத்தை விரிவாக்கும் பாவண்ணனின் முயற்சிகள் வெற்றி அடைந்திருக்கின்றன. எந்த இடத்திலும் கதையின் சரடு சமகாலப் பிரதிபலிப்பைக் கைவிடாமல் இருப்பது கவனிப்புக்குரிய விஷயம். சமூக அக்கறையோடு ஒவ்வொரு கதையும் ஒடுக்கப்பட்டோர்களின் பக்கம் நிற்பது கூடுதல் சிறப்பாகும். தமிழ்ப் படைப்புலகில் பாவண்ணனின் எழுத்து முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களாகின்றன . நல்லது பெரிதாகும்.

akniyum mazaiyum grish karnad -paavannan 5




5 அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)





இந்தியப் பண்பாட்டுப் பெட்டகமாய் இன்றளவும் இயங்குவது இதிகாசங்கள். மகாபாரதத்தையோ இராமாயணத்தையோ புரட்டிப் போட்டு அதன் மீது நிமிர்ந்து பேசுகின்ற ஒரு படைப்பினை நம்மால் கடந்த ஆயிரம் ஆயிரமாண்டுகளாய்க் கொடுத்து விட முடியவில்லை. அப்படி ஒரு தேவை எழாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் எங்கே சென்றாலும் ஐந்து பேர்களில் ஒருவன் ராமன் அல்லது கிருட்டிணனாகப் பெயர் தாங்கி உலா வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த இதிாகசங்களில் ஏதேனும் ஒரு சிறு நிகழ்ச்சியை நினைவு படுத்திக் கொள்ளாது அவனுக்கு ஒருநாள் முடிவதில்லை. அப்படைப்பாளியின் ஒப்புமை இல்லாத பெருவெற்றியை இது பறைசாற்றி நிற்கிறது.
‘அக்னியும் மழையும் ‘ நாடகம் கருக்கொள்ள கிரீஷ் கார்னாடுக்கு மகாபாரதம் ஏதுவாகிறது. வனபர்வத்தில் இடம்பெறும் யவக்கிரிதனைப் பற்றிய சிறுவிளக்கம்- தருமனால் பெறப்படுகிற விளக்கம் – இந்த நாடகம் உருக்கொள்ளத் துாண்டுதலாகியிருக்கிறது. தொன்மங்களைச் செரித்து வெளிச்சம் பெறுதல் ஓர் அருதிறன். அதனைப் படைப்பாக்கங்களில் மீட்டுருவாக்குதல் தான் தெரிந்து கொண்டவைக்குத் தன்னை நிலைநிறுத்துதல் என்பதாகக் கொள்ளலாம்.
மொழிபெயர்ப்புத்தளத்தில் தொடர்ந்து சாதித்து வருபவர் பாவண்ணன். பலிபீடம், நாகமண்டலம் இப்படி  கிரீஷ் கார்னாடின் நாடகங்களை ஏற்கனவே தமிழில் மொழிபெயர்த்தவர். தொடர்ந்து  கன்னடத்தின் பெருஞ்சிந்தனையைத் தமிழுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெருவெற்றியை ஈட்டிவரும் பாவண்ணனுக்குத் தமிழ் உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருடைய மொழிபெயர்ப்புகளின் வரிசையில் சமீபத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வரவு ‘அக்னியும் மழையும் ‘.
‘அக்னியும் மழையும் ‘ நாடகப் படைப்பில் இந்திரனை வேண்டி யாகம் நடக்கிறது. மழை கொணர்வான் இந்திரன் என்று வேத கோஷங்கள் ஒலிக்கின்றன. இடையே ஒரு நாடகக் குழு நுழைகிறது. நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுத் தாள்பணிந்து நிற்கிறது. நடிப்பு முதலான கலைகளைத் தொன்மைக்கால அரசனும் புரோகிதர்களும் எப்படி கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி நாடகம் தொடங்குகிறது.பரத முனிவரின் பிள்ளைகள் கூட நாடகத்தில் பங்கேற்று நடித்ததால் சாதியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள் என்றும் இதே சாதியில் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால் ஆட்ட பாட்டங்களையெல்லாம் விட்டுவிடு என்ற வரிகள் பராவசுவின் தம்பியின் விண்ணப்பமாய் நாடகக் குழுத் தலைவன் சொல்கின்ற வசனத்தில் இடம்பெறுகின்றன. அசுரர்களுக்கும் வேதம் ஓதும் கும்பலுக்கும் ஓயாத பிணக்கு இருந்து வந்திருப்பதை நாடகம் தொட்டுப் பேசுகிறது.
பராவசு சொல்கிறான்
‘யாகத்திலிருந்து ராட்சசர்களை முழுக்கத் தள்ளி வைக்க முடியறதில்லை. அது கூட ஒரு பந்தம்தான் ‘
இப்படிச் சொல்லும்போது பாற்கடலைக் கடையும் நிகழ்வில் அசுரபலம் தேவையாகி நிற்பதையும் அதனைப் புறந்தள்ளி ஒன்றும் நடைபெற்று இருக்காது என்பதையும் நினைவுபடுத்திக் கூடுதலாகச் சிந்திக்க வழிவகுக்கிறது.
நித்திலை வேட்டுவப்பெண். அரவசு பார்ப்பனன். இந்த இருவரிடையே நிகழும் உரையாடல் மிகவும் ஆழமாக அர்த்தம் செறிந்ததாகக் காட்சி அளிக்கிறது. நித்திலை சொல்கிறாள் ‘ டேய் சாதிக்காரங்களை பொறுத்தவரையில் அவுங்க ஆசைப்பட்டு வஞ்சிக்கறதுக்குத்தான் கீழ்ச்ாதிப் பொண்ணுங்க வேணும். கட்டிக்கும் போது மேல்சாதிப் பொண்ணுங்களத்தான் கட்டிக்குவாங்களாம் ‘ என்று சாதாரண தளத்தில் இருந்து பேசுகிறாள். சமூகப் பார்வை நல்ல விமர்சனமாய் வந்து விழுகிறது. அதே பெண், யவக்கிரிதன்போன்ற ஞானிகளிடம் கேட்பதற்கு தன் தளத்தை உயர்த்திக் கொண்டு விடுகிறாள். மற்றொரு இடத்தில் ‘மழை ஏன் பெய்யலங்கறது ஒரு கேள்வி. உன்னுடைய சாவு எப்பன்னு உனக்குத் தெரியுமாங்கறது ரெண்டாவது கேள்வி. ரெண்டுக்கும் அவர் தெரியாதுன்னே பதில் சொல்லிட்டா அவர் ஞானம் அடைஞ்சி எந்தப் பிரயோஜனமும் இல்லன்னு அர்த்தம் ‘ என்கிறாள் நித்திலை. கிரிஷ் கார்னாட் இவ்விடத்தில் நித்திலை வாயிலாக ஞானம் என்பது என்ன என்கிற விளக்கத்தை அளிக்கிறார்.
‘தவத்தால் ஞானம் அடைய முடியாது. அது வாழ்க்கையிலிருந்து கனிந்து பெருகி வரணும் என்கிற வரியும்ஆனா எதுவுமே கிடைக்காதுங்கற உண்மையாவது புரிஞ்சிது. அதுவும் ஒருவகையில ஞானம்தானே ‘ என்று யவக்கிரிதனே சொல்லும் வரியும் வாசகனைக் கிறங்க வைக்கின்றன. விசாகை தனக்கு இஷ்டமில்லாதவனை மணந்து காதலைத் துய்க்கிறாள். கணவன் அரசனின் அழைப்பை ஏற்றுப் பஞ்சத்தைப் போக்க நிகழ்த்தப் படுகிற யாகத்தை நடத்தச் சொல்கிறான். விசாகைக்குத் தன் கணவன் வேண்டும். அவனோ அரசனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். விசாகை தன் அவஸ்தையை யவக்கிரிதனுடன் பகிர்ந்து கொள்கிறாள்.
நாடகத்தில் யவக்கிரிதன் தன் தந்தைக்கு நேர்ந்த சோகத்தை எண்ணிப் பேசுகிறான். ரைப்ய மகரிஷிதான் தன் தந்தையை எப்படி எல்லாம் அவமதித்தார் என்று பேசுகிறாள். யாகம் நடைபெற்ற போது தன் தந்தைக்கு வரவேண்டிய தலைமைப் பொறுப்பு இடம்மாறிப் போனதைப் பற்றியும் பேசுகிறான். தான் காட்டுக்குச் சென்று தவம் இயற்றியற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறான் யவக்கிரிதன். ஒரு கட்டத்தில் ‘ஞானம் எனக்கு வேணாம். கோபம், குரோதம், மோகம் எல்லாவற்றையும் சுட்டுச் சாம்பலாக்குகிற ஞானம் தனக்கு வேணாம் என்று பேசுகிறான். இந்த மன விசாரங்கள்தாம் நான். என் துஷ்டத்தனங்களையும் ஒத்துக் கொண்டு இடம் தருகிற ஞானம்ான் எனக்கு வேணும்ன்னு சொன்னேன் ‘ என்று சொல்லும் வார்த்தைகள் நம் சிந்தனையைத் துாண்டுகின்றன.
‘பூத்து வாடிக் கீழே விழத்தான் போறோம்ன்னு முதலிலேயே பூவுக்கு தெரியாம இருந்தா என்னைக்காவது பூ பூத்திருக்குமோன்னு அடிக்கடி தோணும் ‘ என்ற நித்திலையின் வார்த்தைகள் அற்புதமான தத்துவச் சொடுக்கு. சாவு என்பது எவனுக்கு நேருமோ அவனே விஷயங்களைச் செரித்துக் கொள்ள முடியும். சாவு ஒரு வாய்ப்பு, சாவு ஒரு கொடுப்பினை என்கிற எண்ணங்களுக்கு இட்டுச் செல்வதாக இவ்வரிகள் அமைகின்றன. ‘முகமூடிய ஒரு முறை போட்டுகிட்டா அதை உறுதியா பிடிச்சிக்கணும். இல்லன்னா அது உன்னை ஆட வச்சிடும். முகமூடியிலிருந்து சக்திய நீ உறிஞ்சி எடுத்துக்கணுமே தவிர நீ அதுக்கு அடிமையாக கூடாது ‘ என்கிற உரையாடல் மிக முக்கியமான ஒன்று. இவ்வரிகள் நாடகத்தை விட்டு வெளியேயும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குகின்றன.
பொய்யான வேத ஆகமவரைவுக் கோட்டினை புறந்தள்ளி மனித மனங்கள் பொதுவாக மேல் எழ விழைகின்றன. சமூகம் தனக்குக் கற்பித்தக் கொண்ட நியாயம் என்னும் தளைகள் இடையறாது துளிர்விட்டுக் கொண் டே நிற்கின்றன. உடலின் பசி அறிவியல் விஷயமாகிக் கற்பனை எல்லைகளைத் தவிடுபொடி ஆக்குகிறது. ஆதிக்க வர்க்கம் தனது கொடு விஷத்தை விளைவிப்பதைத் தடுத்து நிறுத்த முடியாமல் கைகட்டிச் சேவகம் பண்ணுகிறது அறிவு முதலாளிகளின் மந்தை. அக்னியும் மழையும் நாடகத்தில் கிரிஷ் கார்னாட் அற்புதமான பெண் பாத்திரங்களை உலவ விட்டு நிம்மதி பெற்றிருக்கிறார். கம்பன் சானகியின் துயர் பற்றிக் குறிப்பிடும் போது பெருங்கடவுள்கள் மூவராலும் கூட பெண்களின் அடிமனம் படும் துயரைக் காண முடியாது என்று குறிப்பிடுவதை நோக்கலாம். தீயைத் தீய்த்துத்தான் தன் கற்பு களவு போகாததைப் புருடோத்தமனுக்குமே அவள் அறிவிக்க வேண்டிய சிறுமை ஏற்கிறாள்.
பாவண்ணன் தொடும் பல மொழிபெயர்ப்புகள் நல்ல வாசிப்பு அனுபவங்கள் கொண்டவையாக உள்ளன. நல்ல நாடக தரிசன அனுபவங்களையும் கொண்டுள்ளன. மொழிபெயர்ப்புகள் வழியாக் ஊக்கம் பெற்று நல்ல படைப்புகள் தமிழில் தோன்றக் கூடும் என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அது உருவம் காண தமிழ் எழுத்துலகம் புதிய ஒளிக்கீற்றைத் தனதாக்கலாம். கனியட்டும் கருவும் காலமும் என்பதே இன்றைய விழைவாகிறது. நிறைவும் அதுவே.
***

an australian friend -letter



எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”

This entry is part of 42 in the series 20090115_Issue
எஸ். கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
அன்பர் எஸ்ஸார்சி தொடர்ந்து எழுதிவரும் “வேதவனம்” அற்புதமாக இருக்கிறது.
குறுகத்தரித்த உபநிஷதம் என்று சொல்லலாம். தமிழ்ப் பதிவுகளுக்கு நடுவே குந்துமணி போலத் திகழும் “திண்ணை”க்கு வேதவனம் ஒரு மகுடம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ். கிருஷ்ணமூர்த்தி

ve.sabanayagam - in -yugamaayini



எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி

This entry is part of 31 in the series 20100312_Issue
வே.சபாநாயகம்

மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் எழுதிய பாரதியின் அணுக்க சீடரான வ.ரா என்கிற
வ.ராமசாமி ஒரு விசித்திர மனிதர். அவர் பிறப்பில் பிராமணராக இருந்தும் பிராமணர்க்கான ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்காதவர். பூணூலைக் கழற்றி எறிந்தவர். பிராமணர்களின் – பால்ய விவாகம், விதவைக்
கொடுமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றைக் கடுமையாய்ச் சாடி, கட்டுரைகளும் நாவல்களும் எழுதியவர்.
அதோடு சமூகத்தின் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகள், அறியாமை ஆகியவற்றையும் சாடிய பகுத்தறிவாளர்.
திராவிடக் கழகத்தார் மட்டுமே பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்த அன்றைய நிலையில் சனாதனக் கும்பலி லிருந்து எழுந்த இந்த பகுத்தறிவாளரை வியந்து ‘அக்கிரஹாரத்தில் ஒரு அதிசயப் பிறவி’ என்று பாராட்டினார் அறிஞர் அண்ணாத்துரை. வ.ராவின் குருவான பாரதியும், தான் பிறந்த சமூகத்தின் பிற்போக்குத்தனங்களைத் தனது கவிதைகளில் சாடியவர்தான். அதே போல புதுமைப்பித்தனும், தான் பிறந்த சைவவேளாளர் இனத்தவரைத் தன் கதைகளில் மிகவும் கடுமையாய்க் கேலியும் கண்டனமும் செய்தவர். ஆனால் அவரைப் பாராட்ட, அண்ணாத் துரையின் பெருந்தன்மை பெற்றிராத இன்றைய நவீன(!)ச் சிந்தனையாளர் சிலருக்கு மனமில்லை. சாதிக் கண்ணோட்டத்துடனேயே எதையும் பார்க்கிற ஆன்மரோகிகளான அவர்கள் அவரை சைவவேளாளச் சார்பினர் என்று, சாதிச் சிமிழுக்குள் அடைக்கிற வக்கிர புத்தியைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான இலக்கிய
ரசிகர்கள் அவர்களது பிதற்றலைப் புறக்கணித்து வ.ராவைப் போல அவரும் ஒரு புரட்சிவாதி என்றே
போற்றுகின்றனர்.
இன்றைய இளம் படைப்பாளிகளிடையேயும் வ.ரா போன்ற அதிசயப்பிறவிகளைப் பார்க்க முடிகிறது.
இந்த ஆண்டின் ‘தமிழ் வளர்ச்சிக் கழக’ப் பரிசினைப் பெற்றுள்ள ‘நெருப்புக்கு ஏது உறக்கம்’ என்கிற நாவலை எழுதியுள்ள ‘எஸ்ஸார்ஸி’ என்கிற திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களை அக்கிரஹாரத்தின் இன்னொரு அதிசயப்
பிறவி என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. அவரது இந்த நாவல் அந்த அபிப்பிராயத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.
திரு.எஸ்ஸார்ஸி அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதி. இவரது முதலிரண்டு நாவல்களான – ‘மண்ணுக்குள் உயிர்ப்பு’, ‘கனவு மெய்ப்படும்’, என்பவை முறையே – வடலூர் பீங்கான் தொழிற்சாலைத்
தொழிலாளர் பிரச்சினையைப் பேசுவதாகவும், அவரது சொந்த ஊரான தருமநல்லூரின் சில பிற்போக்குத் தனங்களைச் சாடுவதாகவும் அமைந்தவை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலாரைப்போல, இவரும் தன் ஊரிலும், தன் பணி இடங்களிலும் ஒடுக்கப்பட்ட ஆதரவற்றோரின் துயர் கண்டு மனம் வாடி அவற்றைத் தன் படைப்புகளில் பதிவு செய்பவர். இவரும் வ.ரா போலவே சனாதனக் கருத்துடைய அக்கிரஹாரத்தில் பிறந்தவர் தான். அவரது குடும்பத்தார் இன்னமும் ஆசார அனுஷ்டானங்களை விடாது பின்பற்றுகிறவர் கள்தான். அந்தப் பின்னணியில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால் கல்லூரிப் படிப்பினாலும், பணியிட அனுபவங்
களாலும் மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டதால் சமூக நீதிக்காகப் போராடும் மனஉரம் பெற்றவர். சாதி மத சழக்குகளை முற்றாக வெறுப்பவர். அதனால், இவர் தன் ஊராரும், தன் இனத்தாரும் முகம் சுளிக்கிற கற்பனையை இந்நாவலில் துணிந்து பதிவு செய்துள்ளார்.
ஆர்.கே.நாராயணினின் ‘மால்குடி’போல, இவர் தனது ஊரான தருமநல்லூரை – ‘தருமங்குடி’ என்ற
பெயரில் தனது கதைகளிலும், நாவல்களிலும் களமாகக் கொண்டு எழுதுகிறார். அந்த தருமங்குடியில் பிறந்த அக்கிரஹாரத்து தருமு என்கிற பெண்ணும், ஊர்ச் சேரியைச் சேர்ந்த பழமலய் என்கிற பையனும் அண்ணாமலைப் பல்கலையில் படித்து, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்று, அங்கே காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே தங்கி விடுகிறார்கள். ஊர்ப்பக்கம் திரும்பவே இல்லை. தருமுவின் பெற்றோர் – உள்ளூர் கோவில் அர்ச்சகரும், அவரது மனைவியும் – மகளைத் தலைமுழுகி விடுகிறார்கள். பழமலையின் தகப்பனார் – கோபால் என்கிற சுதந்திரப் போராட்டத் தியாகி மட்டும் ஊரில் தங்கி இருக்கிறார்.
பிறந்த ஊரையும் தன் மண்ணின் கலாச்சாரத்தையும் மறவாமல், பழமலய் தன் மகனுக்கு தன் பிராந்தியத்துப் பழக்கத்தின்படி – கொளஞ்சி என்று பெயர் வைத்து, தமிழும் தமிழ்க்கலாச்சாரமும், தமிழ் இலக்கியங்களும்
கற்பித்து வளர்த்திருக்கிறார். ஒரு நாள் கொளஞ்சி தாத்தாவையும், தன் பெற்றோரது ஊரையும் பார்க்கக் கிளம்பி வந்தவன், தன் ஊர் மக்களின் அவல வாழ்க்கையையும், தலித்துகள் நந்தன் காலத்திலிருந்து வஞ்சிக்கப் பட்டிருப்பதையும் அந்த இடங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்து அறிந்து, அமெரிக்கா திரும்பாமல் இங்கேயே தங்கி தன் ஊர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முனைகிறான். இதுதான் கதை.
பிராமணப் பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் திருமணம் செய்து வைத்தது ஒன்றும் புதிய புரட்சி அல்லதான். ஆனால் சொந்த கிராமத்தில், இன்னும் அறியாமையும் சாதிக் கட்டுப்பாடும், சனாதனப் பழம்
பஞ்சாங்கங்களும் இருக்கிற நிலையில், தன் குடும்பமே ஏற்காத தன் இனத்தவரின் எதிர்ப்புக்குரிய புரட்சிகரமான கற்பனையைத் துணிந்து – அதனால் வரும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் – எழுத்தில் வடித்திருப்பது அவரைப் பொறுத்தவரை, அவரது ஊராரைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான். இந்நாவலில் வரும், சதா வண்டையாய்ப் பேசும் ஒரு பாத்திரமான சபாபதிப் பிள்ளை (தற்போதும் ஜீவியவந்தராய் தருமநல்லூரில் வாழ்பவர்) இந்நாவலைப் படிக்க நேர்ந்தால், அவர் கோயில் அர்ச்சகரை அடிக்கடி ‘இழித்துப்பேசுகிற ‘பாப்பாரக் குசும்பு’ என்ற வசையைச் சொல்லி திட்டக்கூடும். அது மட்டுமல்ல – அமெரிக்கவின் நவீன சுக வாழ்வை கொளஞ்சி துறப்பதும், தன்
பணிக்குத் துணையாய் சென்னையில் நல்ல பதவியில் உள்ள, அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்த சந்துரு என்கிற பிராமண இளைஞனையும் தன் வளமான எதிர்காலத்தைத் துறந்து தன்னுடன் தங்க வைத்ததும், உள்ளூர்ப் பெரிய மனிதர் சேதுராமன் பிள்ளை என்பவர் தன் 60 ஏக்கர் நிலத்தையும், தனது நிர்வாகத்தில் இருந்த மேனிலைப் பள்ளியையும் கொளஞ்சி பேரில் உயில் எழுதி விட்டு இறந்ததும், அந்த நிலங்களைக்
கொளஞ்சி ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதும், வேலை வாய்ப்புக்காக ஊருக்கு சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுவதும் ஆனவை – அந்த ஊருக்கு கற்பனையில் கூடக் கண்டிராத புரட்சிகள் ஆகும். இப்படியெல்லாம்
நடக்குமா நடப்பது சாத்தியமா என்ற யதார்த்தத்தை ஒட்டிய கேள்வி எழலாம். ஆனால் இப்படி நடக்குமா என்பதல்ல ஆசிரியரின் நோக்கம்! இப்படி நடக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை! இலட்சியம் என்றும் சொல்லலாம்.
எங்கும் எப்பொழுதும் நல்ல முயற்சிகளுக்குத் தடங்கல் ஏற்படுவது போலவே கொளஞ்சியின் கனவும்
நிறை வேறுவதாயில்லை. உள்ளூரின் ஆதிக்க சக்தியினரின் சதியால், ஊருக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும்
நெய்வேலி சுரங்கப் பணிக்கு அவனது இட்சிய கிராமத்தையும் கையகப்படுத்தி விடுவதால் அவனுள் எரியும்
நெருப்பு அணைக்கப்படுகிறது. ஆனால் நெருப்பை அணைக்கலாம்; அழிக்கமுடியுமா? நெருப்புக்கு ஏது உறக்கம்? அது இங்கில்லை என்றாலும் வேறு எங்காவது புதிய உத்வேகத்துடன் மீண்டும் உயிர் பெற்று எரியும் என்னும்
சிந்தனையோடு கதை முடிகிறது.
‘எஸ்ஸார்சி’ யின் பாத்திரப் படைப்பும் தத்ரூபமானவை. ஒவ்வொரு ஊரிலும் மேலே சொன்ன – ஊருக்கு எந்த நல்லதும் நடந்து விடுவதைச் சகிக்காத சபாபதிப் பிள்ளைகள் இருப்பது கண்கூடு. இந்த நாவலில்
அவர்தான் ‘வில்லன்’. கொளஞ்சியின் கனவைப் பாழடிப்பவர் அவர்தான். அவரது பாத்திரப் படைப்பு அசலானது – நம்மில் பலருக்கும் பரிச்சயமானது என்பதால் வாசிப்பு நெருக்கமாகிறது. அதே போல அஞ்சாம்புலி, அவனது மனைவி சாரதம் இருவரும் நாம் கிராமங்களில் அபூர்வமாய்க் காண்கிற எளிய, எப்போதும் நல்லதையே எண்ணுகிற வெள்ளந்தி பாத்திரங்கள். அவர்கள் இருவரது உரையாடல்கள் எப்போதும் எடக்கு மடக்காகவே இருப்பதும் அதனால் அவர்களுக்கிடையேயான பந்தத்தில் நெருக்கம் ஏற்படுவதும் ரசிக்கத்தக்கவை. இன்னும்
தியாகி கோபால், பேராசிரியர் சீனுவாசன், நாட்டாண்மை முத்தையா சேதுவராயர் என்று நிறைய நினைவில்
நிலைத்து விடுகிற பாத்திரங்கள் மிகையில்லாமல் இயல்பாய்ப் படைக்கப்பட்டு இருக்கின்றனர். நாவல் நெடுக கடலூர் மாவட்டத்தின் வட்டார வழக்கு மொழி சரளமாய்ப் பிரயோகமாகி வாசிப்புக்கு இதம் சேர்க்கிறது. இடையிடயே விரவியுள்ள சமஸ்கிருத மற்று தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளும், மார்க்சிய சிந்தனைச்
சிதறல்களும் ஆசிரியரின் பரந்துபட்ட அனுபவ மற்றும் அறிவுஜீவித்தனத்தைக் காட்டுவதாக உள்ளன.
குறை என்று சொல்வதானால் எல்லாப் புத்தகங்களுக்கும் சொல்கிற அச்சுப்பிழை அனர்த்தம், தவிர்த்திருக்கக் கூடிய – வாசிப்பில் உறுத்துகிற சில சொல்லாக்கங்களைச் சொல்லலாம். கைக்கும் கனமான
இந்நாவலை கவனமாய் எடிட் செய்து இன்னும் இறுக்கமாகச் செய்திருக்கலாம். ஆனால் நாவலின் விறுவிறுப்
பான கதையோட்டம் காரணமாக அவை வாசகர் கவனத்தைச் சிதற விடவில்லை என்பது சாதகமான அம்சம்.
மொத்தத்தில் கவிஞர் பழமலய் சொல்கிறபடி இது ஒரு சமுதாய சீர்திருத்த நாவலல்ல – இது ஒரு இலட்சிய நாவல்! 0
நூல்: நெருப்புக்கு ஏது உறக்கம்.
ஆசிரியர்: எஸ்ஸார்சி.
வெளியீடு: அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
விலை: ரூ.160/-
Series Navigation

Monday, January 20, 2020

paaymarakkappal -paavannan.6





6 பாவண்ணனின் பாய்மரக்கப்பல் ஓர் மீள்வாசிப்பு. 



எளிமையும் நேர்மையும் அணிகலனாய்க்கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பாவண்ணனைவிட அழகாகச்சொல்ல யார் இருக்கிறார்கள்.கண்ணியமான  எழுத்துச் சித்தரிப்பின் வழி ஒரு பாத்திரத்தின் மெருகு கூட்டுதல் பாவண்ணனுக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது
.விவரம் பெரிதாக ஏதும் அறியாத ஒரு உழைப்பாளியின் வாழ்க்கை எத்தனை அழகானது ஆழமானது அர்த்தமானது என்பதனை பாவண்ணனின் கண்கள் யதார்த்தமாய் நோக்குகின்றன. அதனை வாசகனுக்கு தன்பாணியில் கொண்டு தருகிறார் பாவண்ணன்.. வாசகன் ஒரு புன்னகையோடு படைப்பாளிக்கு சபாஷ் சொல்லிவிட்டு வாசித்தலைத் தொடர்கிறான்.ஓவ்வொரு படைப்புமே ஒரு செய்தியை வாசகனோடு பகிர்ந்துகொள்ள  மட்டுமே என்பதுவாய் தனது எழுத்தின் நேர்மையை நிறுவுகிறார் பாவண்ணன்.
காவ்யா தனது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளபடி’ பாவண்ணன் தமிழ் நாவலாசிரியர்கள் வரிசையில் தனிரகம்தான். இவர் தனக்கென ஒரு பாதையைத்  தேர்ந்து  அதனில் பயணம் செய்வதை வேள்வியாகச்செய்து வருபவர்.
பாய்மரக்கப்பல் என்னும் புதினம் பாவண்ணனின் எழுத்து லட்சியத்தை  வாசகர்களோடு மிகச்சரியாய் பகிர்ந்து கொள்கிறது. எத்தனை இடர்கள் அடுக்கி வரினும்  மனித வாழ்க்கையில் சோரம் போகா எளிய மனிதர்களின் பெரு மனக்கார்ர்களின் வாழ்க்கைச்சித்திரத்தை எழுதிக்காட்டுகிறது.
‘பெரிய பாட்டாளி. முத்துசாமிக்கவுண்டர்னா ஊருக்கே தெரியும்.இந்த சொத்தெல்லாம் அந்த ஆளு சம்பாதிச்சதுதான்.தாத்தா சம்பாதிச்சதை பேரன் அழிக்கிறான்.எல்லாம் தலை எழுத்து’   நாவலில் மேஸ்திரி சித்தாளுக்கு சொல்கிற செய்தி இது. நம் எல்லோருக்கும் படைப்பாளி சொல்கிற தொடக்கச்செய்தியாகவும் இதனைப் பார்க்கலாம்  நமது .தாத்தா தலைமுறையினர். வாழ்ந்த வாழ்க்கை நமது பேர்க்குழந்தைகளுக்கு பிடிபடவில்லை.
தொண்ணூறு வயதைக்கடந்து விட்டவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிட்டதை உணரமுடிகிறது. அந்தப்பெரியவரைப்பற்றி ப்படைப்பாளி இப்படிச்சொல்கிறார்.
‘மண்ணின் சூட்சுமங்களை அவர் மனசு அறியும். காற்று மழையின் வரவுகளைத்துல்லியமாய் அவர் மூக்கு உணர்ந்துவிடும். இயற்கையைப்பற்றி கொண்டிருந்த ஞானம் எந்த விஞ்ஞானப்புத்தகத்திலும் சேகரிக்க முடியாத சொத்து..தெருவில் யார் நிறுத்திப் பேசினாலும் அவர் நாலு நிமிடம் பேசத்தயங்குவதில்லை. எல்லாக்குழந்தைகளையும் தலைத்தொட்டு ஆசிகள் வழங்குவார்.திருமண ஜோடிக்கு த்தாலியை முதலில் தொட்டு ஆசீர்வாதம் செய்து அவர்தான் கொடுப்பார்.விரோதம் கொள்ளும் புருஷன் மனைவியைக்கூப்பிட்டுப்பேசி ராசியாக்கி அனுப்புவார். இப்படிப்பட்ட ஒரு பெரிய மனசுக்காரரைத்தான் ஊராட்சித்தலைவராக்கிப்பார்க்க அந்த மக்கள் முயற்சிக்கிறார்கள் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு தேசியக்கட்சி அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிவிடலாம் எனத்தீர்மானிக்கிறது. ஆனால் தோல்வியே கண்டது. எந்தச்சபலமும் இல்லாத அவரது மன உறுதி பலரையும் வெட்கிக்கூசவைத்தது இப்படிக்கூறும் பாவண்ணன்  தாய் நாட்டுவிடுதலைக்கு ப்போராடிய கள்ளமில்லாத ஒரு தலைமுறையை நம் கண்முன்னே  காட்சிடாக்குகிறார்..
 இன்று இறைவழிபாட்டையும் அதன் வழி எழும் பூசலையும் வாக்கு வாங்கியாக மாற்றி அரியணையில் அமர்ந்திருக்க வாய்த்திருக்கிறது. வாழ்ந்துமுடித்த பெரியவர்களை நோக்கக் காலம் நம்மை எங்கேயோ கொண்டு சேர்த்து க்கேலியாய்ச்சிரிப்பதைக்காண வாய்த்திருக்கிறது.கண்கள் செய்துவிட்ட பாவம்தான் அத்தனையும்.
 பாவண்ணன் படைப்பு என்றால் ஏரி பற்றி நிச்சயமாய் சித்தரிப்பு இருக்கும்.வர்ட்ஸ்ஒர்த் என்னும் ஆங்கிலக்கவி எப்படி இயற்கையை ஆராதித்தானோ அப்படி ஏரிக்கரைகளை கண்மாய்களை நீற்றொழுக்கை ஆறுகளை மலை முகடுகளைச் சிலாகித்துச் சிலாகித்து எழுத்தில் கொண்டு வருபவர் பாவண்ணனுக்கு அவர்  பிறந்து வளர்ந்த  வளவனூரின்  ஏரி அவருக்குக் குலதெய்வமோ என்கிறபடிக்கு வாசகன் உணர்கிறான்.
’மாடுகள் மேயத்தொடங்கியதும் முத்துசாமி மரத்திலேறி ஆடுகளுக்குத்தழை பறித்துப்போடுவான்.ஆடுகளின் சிவந்த நுனி நாக்கு பார்க்க அழகாக இருக்கும்.ஓவென்று கூவியபடி ஏரியை நோக்கி ஓடும் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்துகொள்வான்.’  இப்படி அடுக்கிச்சொல்கிறார் பாவண்ணன். ஆடுகளின் சிவந்த நுனி நாக்கைத்தவறாமல் குறிப்பிடும் பாவண்ணன் இயற்கையை நன்றாகவே ஆராய்கிறார்.
விவசாயக்குடும்பத்தோடு நெருங்கிய படைப்பாளி என்பதை அவரின் எழுத்து வாசகனுக்கு அறிவித்துச்செல்கிறது.’ வயலில் உழவின் போது மாடுகளின் பின்னால்  ஓர் ஏரோட்டி கால்களை அகட்டி அழுந்திச்செல்லும் நடையை பாவண்ணன் சரியாக குறிப்பிடுகிறார். வளைவுகளில் கலப்பையை ஊன்றி அழுத்திக்கொண்டு மாடுகளை லாவகமாய் வளைக்கிற வித்தை பாவண்ணனுக்கு பரிச்சயமாகி இருக்கிறது. அழுத்திப்பிடித்த உள்ளங்கைகள் ரத்தம் கட்டிப்போவதும் அதற்கு மஞ்சள் அரைத்து பத்து போடுதல் வரை உள்வாங்கியிருப்பது படைப்பாளியின் சொந்த பந்தங்கள் பட்ட பாட்டை நேரில் கண்டதன் விளைவாகவும் இருத்தல் சாத்தியமே.
விவசாயிக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் இருக்கிற ஆனந்தத்தைப்பற்றி ச்சொல்கிறார் பாவண்ணன். இவ்வானந்தத்தை வைத்துத்தான் அரசியல் சொக்கட்டான் ஆடுகிறது இன்றைய அரசியல்.
‘மண்ணில் தூவிய விதைமணிகள் கண்முன்னாலேயே பயிராய்மாறி நிற்கிற அழகு கண்கொள்ளாத காட்சி.அந்தப்பயிரில் இருந்து எழும் பச்சை மணம் நெஞ்சை அள்ளும்.அதன் நிறம் தெளிவு குளுமை எல்லாமே நிகரற்றவை.காற்றுடன் அது உறவு கொண்டாடிக்குழைந்து சாய்வதும் சரிவதும் நிமிர்வதும் இனிமையான நாடகம். ஒரு நடனக்காரிபோல நாலு புறமும் திரும்பிச்சுழன்று குலுங்கும் அதன் குதியாட்டத்தில் அடிமையாகும் மனம்’                     
சொல்லிக்கொண்டே போகிறார் பாவண்ணன். வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்பார் வடலூர் அருட்பிரகாச வள்ளலார்.விவசாயி ஒருவனுக்கும் இந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு பந்தம் இல்லாமலா இப்படிப் ‘பயிர்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தி இருக்கமுடியும்.
பாகப்பிரிவினை சமாச்சாரம்  குறித்து பாவண்ணன் நன்கு அலசி எழுதுகிறார். ஒரு தாயின் மூன்று மக்களில்  ஒருவன் ஒரு ஆட்டுக்குட்டி தனக்கு வேண்டும் என எத்தனை ஆவேசம் கொள்கிறான். அதனை மூன்றாக ப்பிய்த்து தரமுடியாது ஆக அது  பெற்ற அம்மாவிடம் இருக்கட்டுமே என்ர்று பஞ்சாயத்தார் முடித்து வைத்தால் அதனை ஏற்க மனம் வரவில்லயே.. நானும் காசாம்புக்கவுண்டனுக்குப்பொறந்தவந்தான் அத ஞாபகத்தில் வச்சிக்கோ’ என்கிறான்.ஆட்டை காலாலே எட்டி உதைக்கிறான். அந்த ஆட்டுக்குட்டி சின்னா பின்னப்பட்டு நிற்கிறது. அண்னன்கள் மேல் பக்தியும் பாசமும் பிள்ளைகள் மேல் அன்பும் நெருக்கமும் கொண்டிருந்த ஒருவர் அனைத்தையும் ஒரே இரவில் துறந்துவிட்டு எப்படி மாறமுடிந்தது. என்பது புரியாத புதிராக அமைகிறது.. கண்ணாறு மட்டும்தான்  எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று ஆயா புலம்பி அழுவதை அழகாகக்குறிப்பிடுகிறார் பாவண்ணன்.
நமது பழம்பெரும் காப்பியங்கள் நமக்கு மனத்திரையில் வந்து போகின்றன. சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமாயணத்தையும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மகாபாரதத்தையும் அசைபோட்டவர்கள் தானே நாம்.  நம் நாடு விடுதலை பெறும்போது இனக்கலவரம் வந்து லட்சக்கணக்கில் சோதரர்கள் மாய்ந்து மடிந்த சோக வரலாறு நமக்கு இருக்கத்தானே செய்கிறது. எங்கோ  ஒட்டமன் நாட்டில்  ஒரு சுல்தானுக்கு  நடந்த ஒரு விஷயத்துக்கு  இந்த மண்ணில்  ஒற்றுமையாக   கிலாஃபாத்  இயக்கம் கண்ட நமக்கு இந்தியப்பிரிவினை நிகழ்வு சாபந்தானே. கிலாஃபாத் இயக்கம்  என்னும் ஒற்றுமை விருட்சம் காப்பாற்றப்பட்டிருந்தால் இந்தியா பாகிஸ்தான் பங்ளாதேஷ் என்கிற கூறு போடுதல் நிகழ்ந்திருக்காது.  ஆயிரம் சோகங்களை மக்கள் சுமந்து கொண்டு அங்கங்கு சொந்தங்கள் வாழ்கிறார்கள். இன்று  இந்தியக்குடியுரிமைச் சட்டத்திருத்தம் வரைக்கும் வந்து அது விளங்க மறுக்கும் அவஸ்தையில் அல்லவா நாட்கள் நகர்கின்றன.

ஒரு கிழவனும் ஒரு கிழவியும் எப்படி எல்லாம் வாழ்க்கை வாழ்ந்திருந்தார்கள்.ஒருவரை ஒருவர் எப்படி புரிந்துகொண்டு காலம் சென்றது. தாம்பத்தியத்தின் கம்பீரம் எப்படி ஒரு ஆலமரம் போல் தழைத்துக்குளிர்ச்சி தந்தது என்பதைத்துல்லியமாக  குறிப்பிடுகிறார் பாவண்ணன்.
’கிழவர் பழசை எல்லாம் நினைத்து நினைத்து உருகுவதைக்கண்டு பரிதாபப்பட்டாள் நாவாம்பாள். அவர் நினைத்த திசையில் குடும்பம் செல்லவில்லை என்பது ஒரு மர்ம அடிபோல அவர் நெஞ்சில் விழுந்துவிட்டது. அத்தோல்வி தந்த நுணுக்கமான  அவமானத்தில் அவர் நெளியத்தொடங்கிவிட்டார் என்பதும் அந்த வேதனையிலிருந்து அவராகவே மீண்டுவந்தாலொழிய வேறு மீட்சி எதுவுமில்லை என்பதும் அவளுக்குத்தெரிந்தே இருந்தது..தனக்கென்று அந்த பிரத்யேகமான உலகமும் இல்லாதவள் அவள்.’ ஒரு கணவனும் மனைவியும் ஒரு உயிர் இரு உடலாக வாழ்ந்திருந்ததை நமக்கு சொல்லிச்செல்கிறார் பாவண்ணன். தன்னைக்காத்துக்கொண்டு தன்னை மணந்தானை க்காத்து இல்லறத்துக்கு பெருமைதரும் சொற்களையே பேசி சோம்பல் இல்லாதவளாக நாவாம்பாள் பாத்திரத்தைக்கொண்டு நிறுவுகிறார்   வாழ்வியல் அறம் சொன்ன திருவள்ளுவர் இப்படித்தானே இல்லறம் பேணும்  மனையாளுக்கும் வரையறை தருகிறார்.
 வளர்க்கப்படும் விலங்குகள் மனிதரோடு இணக்கமாய் வாழ்வன. அவற்றில் பசு எல்லாவற்றையும் விஞ்சியது.  வளமான ஏரியுடைய ஒரு கிராமத்து.ப்பசுக்கள் அவ்வூரின் செல்வ ஆதாரம்.. ஒரு பசுவை வைத்து ஒரு குடும்பமே தன் பசி ஆற்றிக்கொண்டு வாழ்ந்துவிடும்.அப்படிப் பசுக்கள்  காலம் காலமாய் வள்ளல்களாய் வாழ்ந்து வருபவை. பாவண்ணன் பசுவைப்பற்றி எழுதிக்கொண்டே போகிறார்.
‘’அப்பசுக்கள் வேண்டுவதெல்லாம் நிற்க ஒரு நிழலும் புல் நீட்ட ஒரு ஆதரவானகையும்தான். பசுவோ தன்னை அந்தக்கையிடமே ஒப்படைத்து விடுகிறது. அந்தக்கைக்காகத்தாய்மை அடைகிறது.அந்தக்கைகளிடமேயே தன் கன்றுகளைத்தருகிறது.அதற்காகவே சலிக்காமல் சுரந்து ஊட்டுகிறது’
உண்மையில் மனிதர்களைவிட விலங்குகள் மேலானவையாகவும் அன்பை எதிர்கொள்ளவும் அன்புக்கு வணங்கவும் தமக்குத்தெரிந்தவிதத்தில் அன்பைக்காட்டவும் தெரிந்து வைத்திருக்கின்றன. இப்படி  அவை குறித்து விளக்கம் கொடுக்கிறார் பாவண்ணன்.
பிரெஞ்சுக்காரத்துரையை நத்தி வாழும் சீத்தாராம ரெட்டியார் குறித்து அறிய விவரணைகள் தொடர்கின்றன.பிர்ஞ்சுக்காரர்கள் இந்த ப்புதுச்சேரிப்பகுதியை கைப்பற்றி ஆண்டதினால் மட்டுமே இந்த ஊரின் வளர்ச்சி விரிவு செல்வாதாரம் அத்தனையும் என்கிற கருத்தில் ரெட்டியாருக்கு அய்யமே இல்லை. இந்த ஊருக்கு நாகரீகம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை சொல்லவேண்டுமானால் அது பிரஞ்சுக்காரர்கள் வழியேதான் வந்தது என்று சொல்லவேண்டும். இப்படி இப்படியாய்  சீத்தாராம ரெட்டியார் குண நலன் பற்றி  வாசகன் அறிய வாய்க்கிறது..அந்த ரெட்டியாரின் மகன் உள்ளூர் கவுண்டர் ஒருவரின் மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறான். அந்தபெண்ணைக் கொன்று மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். மண் வாய் திறக்கப்போவதுமில்லை.பெண்களின் சோகம் தீரப்போவதுமில்லை.
சனங்களின் கதை கவிதை நூல் எழுதிய கவிஞர் பழமலய்  தான் வசித்த உள்ளூரில் ரெட்டியார் ஒருவர் பண்ணையாராக இருந்தார். அவருக்கு கீழான சாதிக்காரர்கள் கல்லூரிக்கு ச்சென்று மேற்படிப்பு படித்தால் பிடிக்கவே பிடிக்காது என்கிற செய்தியை ’‘இவர்கள் வாழ்ந்தது’’ தொகுப்பில் கவனமாய்க் குறிப்பிடுவார்.
சமூக சாதிய அமைப்புக்கள் எப்படி எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொண்டு நகர்கின்றன என்பதைப்படம் பிடித்துக்காட்டுகிறார் பாவண்னன். மேல் தட்டு சாதியினர் பணக்காரர்களாக பண்ணையார்களாக தங்களை எப்படியாக தொடர்ந்து நடத்திக்கொள்கிறார்கள் என்பதை ச்சித்திரமாக தீட்டுகிறார். நாவலில் வரும் பார்த்தசாரதி அய்யர் வாசகனுக்கு எத்தனை கம்பீரமாகக்காட்சியாகிறார். அவரிடம் ஒரு யோசனையோ உதவியோ கேட்க வருகின்ற கீழ்த்தட்டு மக்கள் ‘கும்புடறன் சாமி கும்புடறன் சாமி’ என்று தொழுது நிற்கின்றனர். முத்துசாமியும்  அய்யரிடமிருந்து ஒரு துண்டு நிலம் வாங்கிவிட கைகளைக்கட்டிக்கொண்டு நிற்கிறான்.
‘ம்ம் என்னடா என்ன விஷயம்’
‘எந்த ஊருடா நீ’
‘என்னடா பேரு’
‘தோப்பனார் பேரு’
‘கவுண்டனா?’
‘அந்த ஊர்ல என்ன செஞ்சிண்டு இருந்தே’
’ அப்பறம் எதுக்குடா இங்க வந்த?’
‘இந்த ஊரு புடிக்கலைன்னா இன்னொரு ஊருக்குப்போவே,அப்படித்தானே?’
வினாக்கள் அடுக்காக கச்சிதமாக மேட்டுக்குடித்தனம் விரவி அய்யரிடமிருந்து வருவதை எண்ணிப்பார்க்கிறோம்..
கோர்க்காட்டிலிருந்து கட்டை வண்டி புறப்படுகிறது. வண்டியில் ரங்கசாமி.அவன் அப்பா.அம்மா .அமாசி வண்டியை ஓட்டிவருகிறான். வண்டி வளவனூர் நோக்கி பயணமாகிறது.
பிரஞ்சுக்கொடி பறக்கும் ஒரு குடிசை இடை வருகிறது. நான்கைந்து போலிசுகாரர்கள் அங்கே நிற்கிறார்கள்.அவர்கள்  அந்தக்கால கம்யூனிஸ்ட்காரர்களை தேடுகிறார்கள்..
‘யாருடா நீங்க? எங்க போறிங்க இந்த நேரத்துல’ என்கிற அவர்களின் வினாவுக்கு ரங்கசாமி பதில் சொல்கிறார்.வளவனூருக்குச் சென்று பிழைப்பு  ஏதும் தேடவிருப்பதாகச்சொல்கிறார்.
‘எவந்தான் நா காங்கிரஸ் காரன் இல்ல. கம்யுனிஸ்ட் காரன்னு சொல்லிட்டுப்போறான்.’என்று ஆரம்பிக்கிறார் போலிசுகாரர்.
சரி சரி பாஸ்போர்ட் வச்சிருக்கயா புதுச்சேரி பார்டரைத்தாண்டறதுக்கு பர்மிஷன் வச்சிருக்கயா’
புதுச்சேரி பார்டர்லேந்து இந்தியா பார்டருக்குள்ள போவனுமின்னா பாஸ்போர்ட் வேணுமின்னு தெரியாதா ஒனக்கு’
‘ஒழுங்கா உண்மையைச்சொல்லு. இல்ல முட்டிக்கு முட்டி பேத்துருவேன்.காங்கிரஸ் காரந்தானா நீ?’
‘அப்ப கம்யூனிஸ்டா?’
‘சுப்பையாவ தெரியுமா உனக்கு?’
‘தெரிஞ்சா சொல்லு சர்க்கார்ல பணம்கொடுப்பாங்க’
‘ஒழுங்கா ஒத்துக்கோ வீணா ஒதப்பட்டுச்சாவாத’
அன்றைய ந,மது மக்களின் யதார்த்த வாழ்க்கை விஷயத்தை அழகாக எடுத்துச்சொல்கிறார் பாவண்ணன். புதுச்சேரி விடுதலைக்குப்போராடிய வ.சுப்பையாவை நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் மறக்கத்தான் முடியுமா? அவர் பட்ட சிறைவாசமும் கொடுமையும் சொல்லிலடங்குமா?.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை புச்சேரி மக்களுக்காகத்தந்த பெரிய மனதுக்காரர் .பாண்டிச்சேரியின் நேருபிர்ரன் என்றழைக்கப்பட்டவர். அவர் மனைவி சரசுவதி சுப்பையா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனோடு தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருக்கு நின்று தோற்றுப்போனார்.. இந்த மண்ணில் பொது உடமை ச்சிந்தனை சிறுத்துப்போனதில் திராவிடக்கட்சிகளுக்கும் பேராயக்கட்சியின் பிரதமர் நேருக்கும் பங்கில்லாமல் என்ன?.
அந்த காலத்திலேயே காவல் துறை ஒரு ஆட்டுக்குட்டியை லஞ்சமாகப்பெற்றுக்கொண்டு சாலைக்குக்குறுக்கே நின்ற கம்பை விலக்கிக்கொண்டு வண்டிக்கு வழி விடுகிறது. இவ்விஷயத்தை அற்புதமாகச்சொல்கிறார் படைப்பாளி.இந்த விவரணையில் படைப்பின் யதார்த்தம் வாசகனுக்கு அனுபவமாகிறது.
‘எல்லாம் ஒன்னிதா’
‘ஆமாங்க’
‘சரி சரி அத அவுத்து தூண்ல கட்டு’
என்று ஒரு ஆட்டைச்சுட்டிக்காட்டுகிறான் போலிஸ்காரன் .மனசில்லாமல் ஓர் ஆட்டைக்கும்பலிலிருந்து பிரித்துக்குடிசையின் தூணில் கட்டிவிட்டு போலிஸ்காரர்களைப்பார்த்துக்கும்பிடுகிறார் அந்த க்குறுக்குக்கம்பம் உயர்ந்து வண்டிக்கு வழிவிட்டது. அதிகாரக் கம்பம்  வழிவிட  (உயர)  மனிதன் மனிதன் தாழவேண்டிய நிலமை அன்று இன்று நாளைக்கும்தான். இங்கே .கூர்மையான அரசியல் பார்வை  படைப்பில் பீறிட்டுக்கொண்டு  நமக்குக் காட்சியாகிறது.
நதிகளைப்பற்றி விளக்கிப்பேசும்போது பாவண்னன் எழுத்தின் உச்சத்தைத்தொட்டு விடுகிறார். செடியில் விரிகின்ற   மலரின் இதழ்களென வார்த்தைகள் பிறப்பெடுக்கின்றன. அந்த ரசானுபவம் நம்மை உலுக்கிப்பார்க்கின்றது.எல்லா படைப்பாளிக்கும் இப்படி எழுத்து நளினம் வசப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது.
‘ நதிகள் பகல் இரவு பார்ப்பதில்லை.வெயில் மழையைப்பொருட்படுத்துவது இல்லை. தன் போக்கில் வந்து கலந்துவிடும் எந்த களங்கத்துக்கும் அது கலங்குவதுமில்லை.களங்கங்களே தன் ஆகிருதியை மறைத்துப்போலிதோற்றம் காட்டினாலும் அவற்றின் அடியில் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் அவை.. அவற்றின் எழுச்சியான தோற்றமோ பொங்குதலோ எந்த வசீகரத்தையும் புலப்படுத்துவதற்காக அல்ல.அதன் பாய்ச்சலும் ஓட்டமும் எதையும் யாருக்கும் நிரூபித்துக்காட்டுகிற துடிப்பில் உருவாகுபவையல்ல. நதிகளின் சுபாவமே அதுதான்.’ நதி என்ற சொல்லை எடுத்துவிட்டு  மேற்கண்ட வரிகளில் பாவண்ணன் என்று  நாம் மாற்றிப்போட்டுப்பார்க்கலாம். அது மிகச்சரியாகவே இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.
இப்புதினத்தில் காங்கிரஸ் காத்தவராயன் என்னும் ஒரு பாத்திரத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் பாவண்ணன்.மகாத்மா காந்தி கி ஜெய் .பாரத் மாதா கி ஜெய். இரண்டு கோஷங்களும் அவருக்கு இதயத்துடிப்பு மாதிரி என்கிறார் பாவண்ணன். தன்னுடைய மனைவிக்கு ஒரு புடவை வாங்க காத்தவராயன் விழுப்புரம் நகருக்கு  வருகிறார். புடவைக்குப்பணம் அவளே சம்பாதித்துக்கொடுத்தது.அவள் வயிற்றில் ஒரு குழந்தையும் உருவாகி இருக்கிறது. காத்தவராயனின் தாய் அந்த பிள்ளைத்தாய்ச்சியின்  புடவைஆசையை. பூர்த்தி செய்து வைக்க த்தன் மகனைப்பணிக்கிறார். விழுப்புரம் ரயில் நிலயத்திலோ பெருங்கூட்டம். மறு நாள் சென்னையில் மறியல் போராட்டம். வெள்ளையனே வெளியேறு என்பது மட்டுமே பிரதான கோஷம். அந்தக்கூட்டத்தைக்கண்ட காத்தவராயன் சென்னைக்கு ரயில் ஏறிவிடுகிறார். கைதாகிறார். ஜபல்பூருக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். மூன்றாண்டுகளுக்குமேலாக சிறைவாசம். திரும்பி ஒரு நாள் காச நோயாளியாக வளவனூர் திரும்புகிறார். அவரை மனைவிக்கே அடையாளம் தெரியாமல் இருக்கிறது. உருவமே சிதைந்து போய் காட்சி தருகிறார். அவரின் தாய் இறந்துபோய் வெகு காலமாகிவிட்டது. அவள் மனைவி சுமந்திருந்த வயிற்றுக்குழந்தைக்கு  இப்போது மூன்றரை வயதாகிறது.
காங்கிரஸ் கட்சி  ஜவுளிக்கடை நாயுடுவுக்கும், நகைக்கடை முதலியாருக்கும், மருந்துக்கடை சேட்டுக்கும் வருநாளில் சொந்தமாகிப்போனது. காங்கிரஸ் காத்தவராயன்கள் அவர்கள் தயவில் வாழப்பழகிக்கொண்டார்கள். சுதந்திரம் வந்த பிறகு  காத்தவராயனுக்கு தியாகி என்ற பட்டத்தைக்கொடுத்தார்கள்.  வாழும் ஊரைத்தாண்டி எங்கோ ஒரு ஏக்கர் நிலம் இனாமாகத்தந்தார்கள்.  அவ்வயலில் முதல் மகசூல்காணும்போதே மகாத்மா கொல்லப்படுகிறார். காத்தவராயன் மூன்று நாட்கள் உணவருந்தாமல் திக்கித்திணறிப்போகிறார். இரண்டாம் மகசூல் பார்த்த அவர் மூன்றாம் மகசூலுக்கு இறந்தே போகிறார். இப்படி  எழுதிச்செல்லும் பாவண்ணன் சமுதாயத்தின் மீது எத்தனை ஆழமான விமரிசனத்தை எழுத்தில் தந்திருக்கிறார். ஏழைப்பங்காளர்கள் காமராஜுக்கும் கக்கனுக்கும் இன்று எங்கே போவது நாம்.
காங்கிரஸ் காத்தவராயனுக்குப்பிறந்த குழந்தைக்குத்தாண்டவராயன் என்ற பெயரை அவன் மனைவி சூட்டியிருந்தாள். சிவகாமி அப்படி வைத்த பெயரைத்தான் காத்தவராயன் ‘சத்யசீலன் என்று மாற்றி வைத்தார்.அவருக்குத்தன் மகன் மகாத்மாகாந்தி போல் வரவேண்டும் என்கிற ஆசை.
விதி வேறுவிதமாக இருந்தது. அந்த சத்யசீலனோ சினிமாவில் சண்டை போடும் ஸ்டண்ட் மாஸ்டரானான். ஒரு சண்டைக்காட்சியை ப்படமாக்கும் சமயம்  அவன் கொடுத்த அடி எக்கு தப்பாகிப்போனது. ரஜினியின் மூக்கு கிழிந்து ரத்தம் வழிந்தது. அது ரஜினியின் தவறுதான் என்பதை சத்யசீலன் அழகாகப்பேசுகிறான் இன்றைய  பிடிபடாத அரசியல் சூழலில் அந்தப்பெயர் தாங்கிய நடிகரை எங்கோ உச்சியில் கொண்டு போய்வைத்துவிட்டு இந்தத் தமிழ்ச்சமூகம் காத்துக்கிடக்கிறது என்பது வேறுகதை.
துரைசாமியின் சாராய வியாபாரம் அதனில் குடுமியான்குப்பத்துக்காரனின் சரக்கு கலந்திருப்பது என்று புதினம் நகர்கிறது. சரக்கு கலந்த  அச்சாராயம் குடித்த நால்வரின் மரணம் துரைசாமியை உலுக்கி எடுக்கிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் இதனைச்சாக்காகவைத்து நிகழ்த்தும் போராட்டங்கள்.தொடர்கின்றன. கட்சி அரசியலில்  பெரிய புள்ளிக்கு இந்த விஷயம் எட்டினால் துரைசாமி நிலமை பூஜ்ஜியமாகிவிடும்.துரைசாமி திணறிப்போகிறான். தனது அப்பாவையும் தனது தாத்தாவையும்  துரைசாமி நினைத்துப்பார்க்கிறான். பாவண்ணன் இங்கே விவசாயிக்காக தன் எழுத்தை ப்பயன்படுத்துகிறார்.அற்புதமான ஓர் இடம் இது .இந்த பாவண்ணன் வேறு எங்கே தேடினும் கிடைக்கமாட்டார்தான். தன் குருதியோடு ஒன்றாகிப்போன ஒரு தொழில் பற்றி எழுதும் தருணம் அல்லவா இது.
‘வெறும் நிலத்துக்காகவே தம் வாழ் நாளை ஒப்படைத்துக்கொண்ட விவசாயிகள் அவர்கள்.பயிரிடுவதைத்தவிர எந்த ஞானமும் இல்லாதவர்கள்.தன் செல்வத்தைத்தானே அறியாத அஞ்ஞானிகள்.’ சமீபத்தில் புது டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் மனக்கண் முன் வந்து போகிறது.  அதனை த்தவிர்க்கமுடியவில்லை. உழைப்பாளியை ஒரு விவசாயியை அவமானப்படுத்திய பெரும்பதவிக்காரர்களை யாரேனும் மன்னிக்கத்தான் முடியுமா.சுழன்றும் ஏற்பின்னது உலகம் என்பதை ஒரு முறை சொல்லிப்பார்க்கிறோம். அவ்வளவே.
புதினத்தின் இறுதிப்பகுதியில் ஒரு முனிவரின் கதை வருகிறது. முனிவருக்கு ஐந்து பெண்மக்கள் ஐந்து ஆண் மக்கள். காடுகளில் திரிந்து பழங்கள்  விறகுகள் சேகரித்த ப்பெண்களை ராஜகுமாரன் கண்டு ஆசை கொள்கிறான். முனிவர் அவனிடம் இந்த ஆசை நிறைவேறாது என்று அடித்துச்சொல்கிறார். அவனை ஆண்மக்கள் ஐவரும் காட்டைவிட்டு அப்புறப்படுத்துகின்றனர். அர்சனுக்கு இந்த விஷயம் எட்ட அவர் முனிவரோடு பெண்கேட்டுப்பேசிப்பார்க்கிறார். முனிவர் முடியவே முடியாது என்று மறுத்துவிடுகிறார்.அரசன் முனிவரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். முனிவன் சிறைப்பட்டால் அவரின் பெண்கள் தன் வசம்தானே என அரசன் தப்புக்கணக்குப்போட்டான். முனிவரின் மந்திரத்தால் பெண்கள் ஐவரும் ஐந்து  பசுக்களானார்கள். ஆண்கள் ஐவரும் காளைகள் ஆனார்கள். ராஜா மனம் திருந்தவில்லை. முனிவரைச்சித்திரவதைப்படுத்தி மீண்டும் செபித்து அவர்களை ஆண்களும் பெண்களுமாக  மாற்ற  நிர்பந்தித்தான். முனிவர் மறுத்தார். மரணித்தார்.அதிலிருந்து அந்த பசுக்களையும் காளைகளையும் இன்னும் யாராலும் மீட்டு எடுத்து மனிதர்களாக்கமுடியவில்லை. அவை மிரள மிரள விழித்துக்கொண்டு நம்மைப்பார்ப்பதற்கு இதுவே காரண விஷயம்.  ஆக ஒவ்வொரு பசுவும் விமோசன மந்திரத்துக்குக்காத்திருக்கும் ஒரு பெண் என்பார்கள் என்று முடிக்கிறார் பாவண்ணன்.
ஆறுமுகம் நிலைகுலைந்து போய் நிற்கிறான். கிழவரோ அவனோடு கிடந்து போராடிப்பார்க்கிறார். அப்போது பசுக்களிடையே வரும் கிழவர் சொல்லும் அழகான கதை. தான் மேலே சொல்லப்பட்டது. ஒரு ஷேக்ஸ்பியரின் கிங்லியருக்கு இணையாக மன அசை போடும் ஒரு பாத்திரமாக அமையும்  இந்தக்கிழவரோ வாசக நெஞ்சங்களைத்தொட்டுவிடுகிறார்.
தென்னங்கன்றுகள் மனிதர்களை விட பண்பு நலன் கொண்டவை. அவைகளை நடுவதில் கிழவர் நிறைவு எய்துகிறார்.
’‘இனிமே இதுதான் புள்ள பேரன் பேத்தி’ என்று சொல்லும் கிழவரின் செய்தியே. சமுதாயத்தின் மீது வைக்கப்படும் விமரிசனமாக வாசகன் தெரிவு செய்யலாம். அமைந்து நிற்கும் இயற்கைச்சூழலை த்தேர்ந்த அறிவோடு பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்ட மனிதர்கள் பற்றிப்பேசுகின்றது பாய்மரக்கப்பல்.
பாவண்ணனின் வெற்றிப்படைப்பு இப்புதினம்..

















‘

.













Tuesday, January 14, 2020

two books -2020


இன்றைய புதுவரவு
எஸ்ஸார்சியின் சிறுகதைகள், கட்டுரைகள்.
அரங்கு எண், 367.
அம்ருதா பதிப்பகம்.