Tuesday, October 14, 2025

அமெரிக்கக் கவிதைகள்

 

 

 

 

 

 

அமெரிக்க அனுபவம்

 

 

1.       அமெரிக்க  வாழ்க்கை

2.       கலிபோர்னியாவில் கடைக்குப்போனேன்

3.       அமெரிக்க அழகு

4.       மால் அனுபவம்

5.       அமெரிக்க வீடுகள்

6.       அமெரிக்க தேர்தல் 2024

7.       அமேசானில் தமிழ்

8.       சக்கர வாழ்க்கை

9.       கிரகண விசேஷம்

10.   அங்கங்கும்

11.   திருப்புதல் அனுபவம்

12.   அன்பே சிவம்

13.   ஜனநாயகம்

14.   அனுபவம் 1

15.    அனுபவம் 2

16.   அனுபவம் 3

17.   பெட்டைமண்

18.   விடுதலை தேவி சிலை

19.   அமெரிக்க உத்யோகம்

20.   கோணல் நடப்பு

21.   லாசேஞ்சலிசில் தீ

22.   டிரம்பின் பதவி

23.   கிராண்ட் கேன்யென்

24.   பழைய புத்தகக்கடை

25.   தெய்வம் ஒன்று

26.   காலிகோ நகரம்

27.   ராடசச தெர்மாமீட்டர்

28.   சாண்ட மொனிகா

 

 

1.        அமெரிக்க வாழ்க்கை

 

சிகரெட் பிடிப்பதும்
சாராயம் அடிப்பதும்
சகஜமாகிய பெண்கள் நடப்பு
பளிச்சென்ற சாலையில்
வலதுபுறமாய்
வாகனங்கள் வரிசை
வாகனங்களில் இடது புறம்
ஓட்டுனர் அமர்ந்து மட்டுமே பயணம்
நாம் மறந்துபோன பவுண்டும்
அவுன்சும் காலனும்
அடியும் இஞ்ச்சும்
அங்கங்கும் அளவைகளாய்
நாய்கள் முன்னே போக
பின் தொடரும் மனிதர்கள்
நாயுக்கும் பூனைக்கும்
டே  கேர் உண்டு
எமர்ஜென்சி ஐசியு
எல்லாமும்
பள்ளிப் பிள்ளைகள்
தரம் பார்த்துப்பார்த்து
ஒரே வகுப்பில்.
பள்ளிப் பிரிவினைகளோ ஏராளமாய்
கேனில் பாலை வாங்கி
மாதமொன்றுக்கு
வைத்துக் கொள்கிறார்கள்
அவரவர் சமையல் கட்டில்
மாடுகள் கறந்த பாலில்லை நிச்சயமாய்
கனக்காசு வைத்துக்கொண்டு
கடவுளைப் நேரம் பேசும்
மக்கள் ஊர் முச்சூடும்.

 

2.கலிபோர்னியாவில்ஒரு கடைக்குப் போனேன்

 

 

கிரெடிட் கார்டின் ஆட்சி
அமெரிக்கக் கடைகள்
ராட்சசத் தனமாய்ப் பெரியவை
வால்மார்ட் அமேசான் என்றபடி
அசைவ உணவே பிரதானம் அதிலும் மாட்டுக்கறி
டப்பாக்களில் அடைத்துக் கொண்டு.
கறி காய்களை
நறுக்கி நறுக்கி விற்கிறார்கள்
இடுக்கில் இந்தியப் பொருள் விற்கும் கடைகள்
மளிகைக்கடை ஆனாலும்
அங்கே சாராயம் விற்பனை
வண்ண வண்ண பாட்டில்கள் பெண்களின்
படங்களோடு.
மூலைக்கு மூலை அலெக்சா வசதி
என்ன பொருள் தேவை
கிடைக்குமா அது ? கேட்டறியலாம்
நான்கு இணாக்கு கறிவேப்பிலைஒண்ணரை டாலர்

விலைவாசியைக் கணக்குப் போடலாம் ரூபாயாய்.
கடைக்கு வரும்
குழந்தைகட்கு
ஆரஞ்சு ஆப்பிள் வாழைப்பழம்
இலவசமாய்த் தருகிறார்கள் அவ்வளவுதான்.

 

 

3.அமெரிக்க அழகு

 

 

லாஸ் ஏஞ்சலிசில்
இன்று கெட்டிஸ் பூங்காவும்
கெட்டிஸ் மியூசியமும்
பார்க்க வாய்த்தது
மலைச்சரிவில்
டிராமில்
பயணித்துப் பார்க்க
இயற்கை அழகு
கொட்டிக் கிடக்கிறது
அபரிமிதமாய்.
மலையும் வனமும்
கொள்ளை கொள்கிறது
கண்களை.
இத்தாலிய ஓவியங்களின்
அழகோ அழகு
எகிப்திய ஐரோப்பிய
சிலைகளின் மறு உருக்கள்
தத்ரூபமாய் நின்று நின்று
பேசுகின்றன பார்வையாளர்களோடு.
காலைமுதல் மாலைவரை
சுற்றி சுற்றிப் பார்த்தோம் குடும்பத்தோடு
எண்ணிக்கையில் சிலைகள்  ஆயிரம்
இருக்கலாம் ஆனாலும்
தமிழ் நிலத்துக் கோவில்
சிலைகளில் ஒன்றை நினைக்க
அத்தனையும்
நீர்த்துத் தான் போயின.

 

 

4.மால் அனுபவம்

 

 

லாஸ் ஏஞ்சல்ஸில்
வெஸ்டேர்ன் டோபங்கா
ஷாப்பிங் மாலுக்குப்போனேன்
நீளமும் அகலமும்
மைல் ஒன்றுக்கு இருக்கலாம்
பெருங்கட்டிடம்
எத்தனையோ அடுக்குகள்
எல்லாமே கடைகள் கடைகள்
மாதர் அணிகலன்கள்
மணிகள் மாலைகள்
செருப்பொடு
ஷூ க்கடைகள்
பை பையாய் சாக்லைட் விற்கும் கடைகள்
கைப்பைகள் விற்கும் கடையோடு கண்ணுக்குக்
கண்ணாடி விற்கும் கடைகள்
ஆயத்தத்துணிமணிகள்
இசையொடு கலை உருக்கள்
உணவுகள் அனைத்துமே
இத்தாலி நாட்டுப் பெருமிதம்
சொல்லிக்கொண்டு.
உண்பது நாழி உடுப்பை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
புறநானூற்று வரியை
கொட்டை எழுத்துக்களில்
மால் வாயிலில்
எழுதி வைத்தால் தேவலை
சாத்தியமா என்ன?

 

 

5.அமெரிக்க வீடுகள்

 

 

எல்லார் வீடுகளிலும்
எந்தக் குழாயிலும்
தண்ணீரும் வெந்நீரும்
இப்படி அப்படித்
திருகினால் மாறி மாறி வரும்
கண்ணாடிச்சுவர்களோ
அனாயாசமாய்
தரையோ மரப்பலகை
மின்சாரம் பொய்க்காது
இருபத்து நான்கு மணிநேரமும்.
அனைத்து வீடுகளிலும்
ஹீட்டரும் உண்டு
ஏர்கண்டிஷனும்தான்.
ஆண்டுக்கு மூன்றுமுறை
கடிகாரத்தைத் திருத்தி வைக்கிறார்கள்
பள்ளிப் பிள்ளைகளுக்குப்
புத்தகச் சுமையில்லை
எல்லாமே பள்ளியில்
வீட்டுப்பாடம் இல்லை
விடுப்பு மிகையாய்
மொழி ஒன்று ஆங்கிலம் மட்டுமே
பஞ்சாங்கம் இல்லை
ராசிபலனும் இல்லை
வார சூலை இல்லை
குடைச்சல் ஏதுமிலா நிம்மதி.

 

 

6.அமெரிக்கத் தேர்தல் 2024

 

இந்தியாவில் மட்டுமா
அமெரிக்காவிலும் நாடாளுமன்றத் தேர்தல்
ஜோபைடனனா
டிரம்ப்பா
ஜனநாயகக்கட்சி
குடியரசுக் கட்சி
இரண்டுக்கும் இடையே போட்டி
ஜோபைடன் தலைவராய்ப்
பதவியேற்கும் சமயம்
பதவி விலகும் டிரம்பால்
வன்முறை
துப்பாக்கிச்சூடு உயிர்ப்பலி எல்லாமும்.
மக்கள் தீர்ப்பை
மதிக்காத டிரம்ப் மீண்டும்
ஜனாதிபதிக்குப் போட்டியாம்
உக்ரைன் ருசியப் போரிலும்
பாலஸ்தீன இஸ்ரேல் போரிலும்
பொறுப்பற்று நடந்துகொண்டார் ஜோபைடன்
மக்கள் வருத்தத்தில் மொத்தமாய்.
ஜோபைடன் செய்தது தவறு
டிரம்ப் செய்ததும் தவறு
எது தேவலாம் என்பதே
இன்றைக்கிங்கு  தேர்தல்  பகடை
மக்களுக்கு இலவசங்கள்
வழங்குவதில் போட்டியில்லை.

 

 

7.அமேசானில் தமிழ்

 

அமெரிக்காவில்
அமேசான் ஃப்ரெஷ்
கடைக்குப் போனேன்
மனைவி புடவையில்
நான் வேட்டிச் சட்டையோடு
தானாகத் திறந்துகொண்ட
வாயிலைத் தாண்டினோம்
வாங்க வணக்கம்
வெள்ளைக்காரி எங்களை
வரவேற்றாள்
வணக்கம் இது என்ன அதிசயம் தமிழ்என்றேன்
வேண்டிய சாமான்கள்
சிலது கிடைத்தது
சிலது இல்லை
இந்தியன் ஸ்டோருக்குப்
போங்கள் என்றாள்
சென்னைப் போரூரில் ஏழு ஆண்டுகள்
குடியிருந்தேன்
உஸ்மான் சாலையில்
திரிந்தவள் நான் என்றாள்
அசீஜா என்று பெயர்
சட்டைப் பாட்சில் படித்துப்  பார்த்தேன்
வாசல் வரை வந்து  வழியனுப்பினாள்
சென்னை வாசம் கொள்ளை கொண்ட தாய்க்
கூறிப் போனாள் செந்தமிழில்.

 

 

8.சக்கரவாழ்க்கை

 

 

என் அப்பாவின் அப்பா
பெலாக்குறிச்சி
ராயம்பரம் வனங்களிடை
வாழ்ந்து முடித்தார்
அம்மாவை மணம் முடித்து
தருமங்குடிச் சமவெளிக்கு
வந்தார் அப்பா
நானோ தருமங்குடியைத்
தொலைத்தேன்
முதுகுன்றம்
கடலூர் சென்னை எனச் சுற்றி வந்தேன்
என் மகனோ கலிபோர்னியாவில்
உத்யோகமென அமெரிக்கா போனான்
என் பேரனோ அமெரிக்கப் பிரஜையானான்
அமெரிக்க
பாஸ்போர்ட் டோடு.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்றேன்
வசு தெய்வகுடும்பகம்
என்கிறானே பெற்ற பிள்ளை.

 

 

 

 

9.கிரகண விசேஷம்

 

 

அமெரிக்காவில் சூரிய கிரகணம்
இங்குமே அது அமாவாசையன்று தான்
தர்பைப்புல் இல்லா தர்ப்பணம் நடந்தது
எத்தனை மணிக்குப்பிடித்து
எத்தனைக்கு விடுகிறது
பெங்களூர் சின்ன மருமகள் நாசா அறிக்கையை
அனுப்பி வைத்தார்
வாட்ஸ்ஆப்பில்.
கண்ணுக்குக் கிரகணக் கண்ணாடி
போட்டவர்கள்
அமெரிக்க சாலையில்
உலா வந்தார்கள்
சன்னலுக்குத் திரையிட்டு
அமெரிக்க வீட்டில்
கிரகண சவுகரியம்
செய்து கொண்டோம்
சேரன் மாதேவி சம்பந்தி
தன் மகள் நட்சத்திரத்திற்கு
ஆகாது
நவக்கிரகப்ரீதி செய் சேதி சொல்ல
பையன் குடும்பம்
மல்லிபு சிவன்கோவில்
நவக்கிரகம் சுற்றிவர
இம்பாலா காரில் புறப்பட்டது.

 

 

10.அங்கங்கும்

 

 

இந்தியப் பொருள்கள்
கிடைக்குமென
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியாவில்
பயோனியர் என்னும்
கிராசரிக்கடை ஒன்றிர்க்குப்
போனேன்
நம்மூர் உருண்டை
பன்
பத்தும் ஆறரை டாலர்
போட்டிருந்தார்கள்
இந்திய
மதிப்பில் பத்து பன்னும் ரூபாய் ஐநூறு.
வாங்க மனம் யோசித்தது
கடையின் ரெஸ்ட் ரூம்
அருகே
டூ டாலர் டூ டாலர் என
பிச்சை கேட்கும் வெள்ளைக்காரனின் குரல்
அதுவும் சரிதான்
அவர் அமெரிக்க
பிச்சைக்காரர்.

 

 

11.  திருப்புதல் அனுபவம்

பச்சைக் கொத்துமல்லி
ரசம் வைக்க
வேண்டுமென்றாள் மனைவி
வுட்லேண்ட் ஹில்ஸில்
அமேசான் கடைக்குப் போனேன்
சிறு கத்தை
டாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்
பார்த்த மருமகள்
இது பார்ஸ்லே என்றாள்
வாயில் போட்டுப் பார்த்தேன்
சுவையில் ஏதோ ஓர் நெடி
திரும்பக் கொண்டு கொடு
கடையில் என்றாள் மனைவி
உரிய பில்லோடு
கடைக்குப் போனேன்
அமேசானில் அதே உபசரிப்பு
அதே மரியாதை
கொத்துமல்லிக் காசோடு
அதற்கு எத்தனை வரி
போட்டிருந்ததோ இரண்டையும் கூட்டி
திருப்பிக்கொடுத்தாள்
புன்னகைத்தாள் கடைக்காரி
நன்றி பல சொன்னாள்
திரும்பக்கொடுத்த டாலருக்கும் பில் தந்தாள்
நம்மூரில் தங்கமே வாங்கினாலும் இதுவெல்லாம்
இப்படிச் சாத்தியமேயில்லை.


12.அன்பே சிவம்

 

 

லாஸ் ஏஞ்சலிஸில்
கிரிபித்
விண் ஆய்வகத்தில்
எழுதியிருந்தது
டெலஸ்கோப் வழி
விண் வெளியைப் பார்த்துவிட்ட
எந்த மனிதனும் அடுத்தவனோடு
சண்டைக்கு நிற்பதை
ஆதரிக்கவே மாட்டான்
ஆண்டொன்றுக்கு முந்நநூறு
டிரில்லியன் டாலர்
உலக ராணுவச் செலவென்பது
ஆணவத்தின் விசுவரூபம்.
டிரில்லியன் என்றால்
கேட்கக் கூச்சமாயிருக்கும்
சொல்லிவிடுகிறேன்
மில்லியன் மில்லியன்
ஒன்று போட்டு பன்னிரெண்டு
பூச்சியங்கள்
புத்தனைக் கும்பிடுவோம்
ஏசுவை காந்தியைத்
தெய்வ மென்பதில்
எமக்கு
எத்தனையோ சவுகரியம்
விட்டுவிடுவோம் அத்தோடு.

 

 

 

13.ஜனநாயகம்

 

 

அமெரிக்க பூர்வீகக் குடிகள்
அரைக் கோடிபேர்
அமெரிக்க மொத்த ஜனத்தொகையில்
ரெண்டு சதவிதம் இது
98
சதவிதம் வந்தேறிகள்
சமூகம்தான் இது
அமெரிக்காவில்
326
நிலத்திட்டுகளில்
வாழட்டும் அவர்கள்
ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்
ரிசர்வேஷன் நிலம்.
சட்டம் ஒழுங்கு
நிதி ஆளுகையென
பூர்வீக குடிகளின்
அத்தனைப் பிரச்சனைக்கும்
மொத்தமாய் அரசாங்கமே
பொறுப்பு
மக்களால் மக்களுக்காக
மக்களுடைய
என்ன விளக்கம்
தருவார்களோ.

 

 

 

14 .அனுபவம்  1

கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியா நகரில்
உடுப்பி ஹோட்டலும்
நல்லி சில்க்ஸ் ம்
சென்று பார்க்கலாம்
காசு கனமாக வேண்டும்
உடுப்பி ஹோட்டலில்
சைவம் மட்டுமே மாற்றமில்லை
வண்ணப் பாட்டிலில்
சாராயம்
வயது வந்தோர்க்கு மட்டுமே
தின்பதில் மீதமா
டப்பா தருவார்கள்
சின்னதும் பெரிசுமாய்
எடுத்துப் போகலாம் வீட்டிற்கு.
அஞ்சப்பர் உண்டு
அசைவம் உண்டு
அச்சம் வேண்டாம்
கைரேகை சோசியர்
யுவராஜ் ரூம் போட்டு விஜயம்
கூட்டம் அதிகம்தான்
சீனா அமெரிக்கா எதிரியாம்
தோற்ற மாயை
பிரதானமாய் அவர்களே
அனைத்திலும்
இரண்டாவதாய் இந்தியர்கள்
தமிழர்கள் காவடி எடுப்பதும்
தேர் இழுப்பதும்
கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் எல்லா முண்டு
எழுத்தாணி கொண்டெழுதிய திருக்குறளைத் தூக்கிப்பிடித்து
தமிழ் அமைப்புகள்
தலை நிமிர்ந்து
உலாவருகின்றன.

 

15.அனுபவம்  2

இந்தியப் பொருட்கள்
அமெரிக்க கடைகள்
புளி வாங்கப்போனால்
கொட்டைகள் சகிதம் விற்பனை
உப்புக் கடலைக்கு ஆசைப்பட்டால் தொலும்பு
முக்காலுக்கு இருக்கும்
பலாப்பழம் விற்கிறார்கள்
ஆனை விலையில்
வாசனையே இல்லை
கர்டு கிடையாது கடையில் யோகர்ட்தான்
யோகர்ட் பிளெயின்
சொல்லி வாங்கவேண்டும்
தவறவிட்டால் ஏதேனும்
ஒரு நெடியொடு
தயிர் போன்றது கிடைக்கும்
பாலில் பலரகமுண்டு
குழம்பித்தான் போகணும்
புதிதாய்ப்போனவர்கள்
ஆனால் எங்கேயும் மனிதர்கள்.

16 அனுபவம் 3

பூர்வீகமாய்
இருந்த இந்தியரை
ஒழித்தாயிற்று

கொசுறு மட்டுமே பாக்கி
எல்லோரும் வந்தேறிகள்
அமெரிக்காவில்
ஐநூறு ஆண்டுகள்
முன்னம் வந்தவர்கள்
ஆட்சி செய்கிறார்கள்
உலகத்தையும் சேர்த்து
உழைத்துக்கொடுக்க
ஆசிய இந்தியர்கள்
லட்சம் லட்சமாய் வரிசையில் நின்றுகொண்டு.
இந்தியத்திருநாட்டைக் கொள்ளை அடித்தவர்கள்
ஏராளமுண்டு வரலாற்றில்
இந்தியர்கள் வயிற்றுப்பசிக்கு வந்திறங்கி
இருபத்து நாலு மணிநேரமும்
உழைத்துத்தர உறுதியேற்கிறார்கள் நாளும்.

 

 

 

17   பெட்டை மண்

 

லாஸ் ஏஞ்சலிசில் பையன்

வீட்டைச்சுற்றி

பெயர் தெரியாத மரங்கள்

வானம் தொட்டு

பச்சைப்பசேல் என்ற புல்வெளி

வரிசை வரிசையாய்

வாசமில்லா அழகுமலர்கள்

வெகுளியாய்ச் சிரித்துக்கொண்டு

வீட்டுக்கு வீடு

சட்டை போட்ட

குள்ள ஜாதி சடை நாய்

ஆங்காங்கே நீச்சல் குளங்கள்

ஜிம் கூடங்கள்

டென்னிஸ் கோர்ட்டுகள்

வாலிபால் மைதானங்கள்

தென்னை வாழை மல்லி முல்லை

முருங்கை  கறிவேப்பிலை

துளசி தக்காளி வெண்டை கொய்யா

கத்திரி எதுவுமே  முளைக்காத மண்

நம்மூர்  பெட்டை மண்ணை

நினைத்துக்கொண்டேன்

மா பலா வாழை என முக்கனி கொடுக்குமே

கொடுத்து வைத்தவர்கள் நாம்.

 

18.  விடுதலை தேவி சிலை

 

துப்பாக்கியால் சுட்டனர்

ஜோபைடனின் காதருகே

அமெரிக்க அதிபர் கோலாகலத் தேர்தல் பணி

அமெரிக்க மக்கள் தொகையோ

முப்பது கோடி

இங்கிருக்கும் துப்பாக்கிகள்  எண்ணினால்

நான்கு மடங்குக்கு  இருக்கும்

கத்தரிக்காய் கம்மர்கட் மாதிரி

துப்பாக்கி வாங்கலாம்

துப்பாக்கிக்கலாசாரம் ஒழிக்க முடியாதாம்

துப்பாக்கி கொண்டுதான் விடுதலை வாங்கினார்களாம்

காந்தியின் ராட்டை நினைவுக்கு வரலாம் நமக்கு.

மன்ஹாட்டனில்  விடுதலை தேவிக்குச்

சிலை வானாளவ வைத்திருக்கிறார்கள்

ஜபர்தஸ்துக்கும் ஜம்பத்துக்கும்

குறைவேயில்லை.

 

19.அமெரிக்க உத்யோகம்

 

படிப்பு முடித்தோமா

அய் டியில் வேலை வாங்கி

அமெரிக்கா போகவேண்டும்

அமெரிக்கா வந்த பின்னே

க்ரீன் கார்டு வாங்க வேண்டும்

ஆண் என்ன பெண் என்ன

இந்தியாவுக்குத் திரும்பிப்போகாமல்

பிழைப்பைக் காத்துக்கொள்

அப்படியே போய் விட்டால்

பார்க்கின்ற உத்யோகம் நீடிக்குமா

விடை பெற்றுக்கொள்ளும்

சந்திக்கு வந்து விடுவாய் நீ

நித்ய கண்டம் பூர்ண ஆயுசு

அய். டி.  உத்யோகம்

ஆயிரம் தடவை ஜாக்கிரதை ஜாக்கிரதை.

 

 

20. கோணல் நடப்பு

 

 சென்ற முறை அமெரிக்க தேர்தலில்

 வென்றது ஜோ பைடன்

அவர் பதவி யேற்புக்குமுன்

எத்தனைக் கலகம்

எத்தனை உயிர்ப்பலி

அமெரிக்க காங்கிரசில்

அவர்கள் நிழ்த்திய அத்தனை அக்கிரமத்திற்கு

சிறையில் இருந்தார்கள்

பதவிக்கு வந்த மறுநாளே

அத்தனை பேரையும்

மன்னித்து விடுதலை செய்கிறார்

டொனால்ட் டிரம்ப்

என்ன அமெரிக்க மக்களோ

யாரைத்தேர்ந்தெடுத்து

அரியணைக்கு அனுப்பியிருக்கிறார்கள்

மக்களாட்சியின்

மகத்துவத்தில்.

 

 

21. லாஸேஞ்சலிசில் தீ

 

அங்கங்கே  எரிகிறது தீ

காட்டுத்தீ

கலிஃபோர்னியாவில்  பூகம்பம் வரும்

அது மனித உயிர்களை விழுங்குமென்று

மரத்தாலான வீடுகளை

பெரும்பாலும் அமைத்திருக்கிறார்கள்

காட்டுத்தீ  பற்றி எரிகிறது

காற்றும் அடிக்கிறது செமையாய்

ஆயிரம் தீயணைப்பு வண்டிகளை

வானூர்தியை  தீயணைக்க அனுப்பியிருக்கிறார்கள்

லட்சம் லட்சமாய்   

            மக்கள் தங்க வைக்கும் கூடாரம்  நோக்கிப்

பயணிக்கிறார்கள்

கனடாவை இணைக்கலாம் மெக்சிகோவை பணிய வைக்கலாம்

பனாமாவைக் கைப்பற்றலாம்

ஓயாமல் கொக்கரிக்கிறார்

டொனால்ட் டிரம்ப்.

 

 

 

 

 

22. டிரம்பின் பதவி.

 

 

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும்

போர் ஒயாத போர்

காசாவில் ஹமாஸ்

பாலஸ்தீனத்துக்கு

மற்றுமொரு  தலைவலி

இசுரேலியர்கள் நூற்றுவரைக்

கடத்தி காசாவில் சிறையடைப்பு

இசுரேலுக்கு அடங்காத கோபம்

ஆயிரம் ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்

மருத்துவமனைக் கட்டிடங்கள்

காசாவில் நாசமாயின

கொன்றுபோட்ட குழந்தைகள்

எத்தனை எத்தனை

டொனால்ட்  டிரம்ப் கூவுகிறார்

அரியணையில் யான் ஏற

இசுரேல் சண்டை

தானாக நிற்கும் பாரென்று

அக்கிரமங்கள் அனைத்திற்கும் சாவி

அமெரிக்காவின் கரங்களில் எப்போதும்.

 

 

23.   கிராண்ட் கேன்யென்

 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம்

கிராண்ட் கேன்யென்

என்னும் உலக அதிசயம்

பல லட்சம் ஆண்டுகள் முன்னர்

புவியின் பாறைகள் எப்படி எல்லாம்

விளங்கின என்பதற்குச்

சாட்சியாகி  நிற்கின்றன

வண்ண வண்ணப் பாறைகளின் அணிவகுப்பு

பாறைகளின் இடையே

மைல் கணக்காய்ப் பள்ளத்தாக்கு

அதன் அதல  பாதாளத்தில்

வெள்ளை வெளேர்  என்றொடும்

கொலரேடோ ஆறு

பாலைவனத்தின்  நடுவே

புரியாத புதிராய்ச்

சுழித்துக்கொண்டு ஓடும் பாதாள நந்நீர் பிரவாகம்

பல லட்சம் ஆண்டுகள்

முன்னே நிகழ்ந்துபோன

பூகோள வரலாறு

சொக்கி நிற்கலாம் சுற்றுலாப்பயணிகள்

 ஈகல் பாயிண்ட்

ஸ்கை வாக்  கண்ணாடி மேடையில்

உலா வரும்போது.

உலக அதிசயங்களில் ஒன்றினைக்

காணலாம்  கட்டாயமாய்.

 

 

 

24.  பழைய புத்தக வியாபாரம்

 

லாஸேஞ்சலிசில் பிரதான

கடைத்தெருவில்

பழைய புத்தகக்கடைகள்

          ‘தெ  லாஸ்ட்  புக்  ஸ்டோர்’ ( The last book store)

என விலாசமிட்டு

புத்தகங்களை

மொழி வாரியாய்ப்

பிரித்துப்  பிரித்து

அடுக்கி வைத்திருக்கிறார்கள்

விலை நிலவரப்படி அவைகளை

செங்குத்தாய்

நிற்க வைத்திருக்கிறார்கள்

எல்லா புத்தகங்களும்

உங்களுக்குக் கிடைக்கும்

கவலையே வேண்டாம்

ஒத்தாசைக்கு ஆட்கள்

வளைய வளைய வருகிறார்கள்

கார் இல்லாமல்

அன்றாட வாழ்க்கையே

அமெரிக்காவில் சாத்தியப்படாது.

வாங்கும்  புத்தகங்கள்

விலைபோல் பன்மடங்கு

புத்தகக்கடை பார்க்கிங்கில்

உங்கள் கார் நிறுத்தக்கட்டணமாய்

வசூலிக்கப்படும்.

எமிலி டிக்கின்சன் ஆர். எல். ஸ்டீவன்சன் எமர்சன்

புத்தகங்கள் வாங்கியது மறந்துபோய்

கார் பார்க்கிங் கட்டணமே   மனதில்

உறுத்திக்கொண்டு நிற்கும்.

 

 

25.   தெய்வம் ஒன்று

 

தெய்வம் ஒன்றெனக் கண்டவர்கள்

நம்மவர்கள்

வேறு வேறு பெயர்கள் இருக்கலாம்

சக்தி விநாயகர்  வீர ஆஞ்சனேயர்

மஹாவிஷ்ணு  ஸ்ரீ கிருஷ்ணர்

வெங்கடாசலபதி பார்வதி பரமேஸ்வரன் நவக்கிரகங்கள்

எந்தக் கோயில்தான் இல்லை

எந்தப் பிரசாதம்தான்  கிடைக்கவில்லை

கலிஃபோர்னியாவில்

கோவிலைச் சுற்றி வாருங்கள்

இது நம்மூரில்லை

யாரேனும் சொன்னால்தான்

அமெரிக்கா  வந்திருப்பதே

நினைவுக்கு வரும் நமக்கு.

 

26. காலிகோ நகரம்.

 

காலிகோ பைண்டிங்

இங்கே நாம்  கேள்விப்பட்டிருப்போம்

காலிகோ பேய் நகரம்

கலிஃபோர்னியாவில் உள்ளது

கோடை வெயில் கொன்றுவிடும் 

வெப்பக்காற்று உலர்த்திவிடும் மனிதர்களை

வெள்ளிச் சுரங்கங்கள்

இருந்ததாம் இங்கு

சுரங்கப்பணியாளர்கள்  மட்டுமே

ஆக்கிரமித்த ஊரிது

இப்போது யாருமில்லை

பொருட்காட்சியாய் மாறிக்கிடக்கிறது ஊர்

புராதனப் பொருட்கள் பலவுடன்

சுரங்கத்தொழிலாளர்கள் இங்கு  பட்ட பாட்டினை

கல்வெட்டில் எழுதி  வைத்திருக்கிறார்கள்

மதியுங்கள்  இவைகளை

மனிதாபிகள்  நமக்குத்தரும் செய்தி.

 

 

 

27.    ராட்சச தெர்மா மீட்டர்

 

 

லாஏஞ்சலிசிலிருந்து

லாஸ்வெகாஸ்   செல்லும் வழியில்

பேகர் என்னும் ஊரில்

தனியாருக்குச்சொந்தமான

உலகின் மிகப்பெரிய

தெர்மா மீட்டரைத் தரிசிக்கலாம்

முப்பத்தைந்து டன் எடை

நூற்று முப்பத்து நான்கு  அடி உயரம்

ஜுலை 10, 1913ல் பதிவான

அதிகபட்ச வெப்ப நிலை 57 டிகிரி C

உலகின் உச்சபட்ச வெப்பநிலை

அனுபவிக்கணுமா  போய் வாருங்கள்

டெத் வேலி  என்னும் பாலைவனம் அருகிலுள்ளது.

 

 

28.   சாண்ட  மொனிகா

 

லாஸேஞ்சலிசில் உள்ள கடற்கரை

நகரம் சாண்டாமோனிகா

குப்பை ஏதுமில்லா

சுத்தக் கடற்கரை

ஆடவர் பெண்டிர் அனேகமாய் அம்மணம்

ஏசு புகழ் பாடும் சிறு சிறு கூட்டங்கள்

இடையே

ஸ்ரீகிருஷ்ணருக்கும்  பாட்டும் நடனமும்

ஆடித்திரியும் இளசுகள்

குழந்தைகள்  மகிழ ஆயிரம் ஜையிண்ட் வீல் அமைப்பு

சிற்றுண்டிக்கடைகள் மூலைக்கு மூலை

இலவசமாய்த் தருவோரும் அனேகருண்டு

பசிஃபிக்  பெருங்கடலில் நடக்கும் மேடை

வெகுதூரம் நீண்டு

கீழிறங்கிக்  கடற்கரை மணலில் நடக்கலாம்

சூடு தெரியாது

மணல்பாய் வசதியாய் விரித்திருக்கிறார்கள்

சோழியும் கிளிஞ்சலும் முட்டு முட்டாய் விற்பனை

சோழி மாலை  ஆயிரம் வகை

காலும் கையும் நனைத்து மகிழலாம்

பசிஃபிக் கடல் நீரை

சுவைப்பது கூடாது

கடலோசை  மட்டும்  யாருக்கும் கேட்கவே கேட்காது.

 

-----------------------------------

 

 

 

 

 

 

 

Monday, October 13, 2025

சுழல் -கதை

 

 

 

சுழல்                                                               

 

மஞ்சகுப்பத்தில்  என்  அலுவலகத்துக்கு அடுத்தக் கட்டிடம்   மாவட்டத் தலைமை அஞ்சலகம்   தபால் ஒன்றை எழுதி முடித்து   அன்றைய அஞ்சலில் சேர்க்க  அந்த அஞ்சலகம் நோக்கி நடக்கிறேன்.  சிவப்பு   நிறத்   தபால் பெட்டி   அலுவலக வாயிலில் படிக்கட்டுகளுக்குப் பக்கமாய்  சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது.  நான்  கொண்டு வந்த  தபாலை அஞ்சல் பெட்டியின்  வாயினுள் நுழைத்துப் போட்டேன். பெட்டித்திறப்பில்  சிறிய மூடி ஒன்று இப்படியும் அப்படியும்  நடனம்  ஆடிக்கொண்டிருந்தது.  நான் போஸ்ட்  செய்த  கடிதம்  உள்ளாகச்சென்று விட்டதா என்று கைவிட்டுப் பார்த்தேன்.   என்   கையில் அது  தட்டுப்படவில்லை.  எப்படி எப்படியெல்லாம்  செய்துவிட்ட   ஒரு செயலைச் சரிபார்க்க வேண்டியிருக்கிறது.  தபால் ஒன்றை எழுதி முடித்து,  அதனைக் கையோடு கொண்டுபோய்  போஸ்ட் டும் செய்துவிட்டால்  மனதிற்குள் ஏதோ ஒரு நிம்மதி.      எனக்கு  எப்போதும்கிடைக்கும் அனுபவம்  இது..  எல்லோருக்கும்  அப்படித்தான் இருக்குமோ.

 தபால்பெட்டிக்கு முன்னால் ஒரு டூ வீலர் நிறுத்தப்பட்டிருக்கிறது.. அந்த டூ வீலர் என்னோடு பேச முயல்கிறது. நான் ஏதும் உளறுகிறேனா.  இல்லை நிச்சயம் இல்லை.

 இதோ  என் டூவீலர்   கிடைத்துவிட்டது  என் டூ வீலர்     வேகமாய்ச் சொல்லிக்கொண்டே  அதன் அருகே பதறிக்கொண்டு ஓடுகிறேன்.. ஆமாம்  அது  களவு போய்விட்ட என்  வண்டியேதான்.  TN.01 -9390    அந்த வண்டி எண்ணும்   சரிதான். திருடிக்கொண்டு போகிறவர்கள் வண்டியின் நெம்பரை  கட்டாயம் மாற்றி  அதனை வேறு ஊரில்  கொண்டுபோய்தான் விற்று விடுவார்களாம் கொஞ்சம்  விஷயம் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். வக்கீலின்  கழுத்துப்பட்டைக் குறிபோட்ட ஸ்டிக்கர் வண்டியின்  நெம்பர் பிளேட் அருகே கச்சிதமாய் ஒட்டப்பட்டிருந்தது.  அதே .சிமெண்ட் கலர்.  வண்ணத்தில்  ஒன்றும் மாற்றமில்லை. வண்டியை அங்கங்கு தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டேன். வண்டி தொலைந்து போய் ஆறு மாதம் கூட ஆகியிருக்கலாம்.

   என் வண்டியைத்தான்   இங்கே  நிறுத்திவைத்துவிட்டு  யாரோ  அஞ்சலத்தின் உள்ளே  சென்றிருக்கிறார்கள். அவர்கள்   வந்த  வேலையை முடித்து விட்டுத் திரும்பவும் இந்த வண்டியை எடுத்துக்கொண்டு மட்டுமே கிளம்புவார்கள். அப்போது அவரை வழிமறித்து   இந்த வண்டி பற்றிய விபரம் கேட்டுவிடலாம்  என்கிற  தீவிர யோசனையில் இருந்தேன்.  அஞ்சலத்தினுள் ஒரே கூட்டம். தலைமை அலுவலகமாயிற்றே.

மஞ்சகுப்பம் டெலிபோன் இலாகா  அரசு  கோர்ட்டர்சுதான் நான் குடியிருப்பது,    நான் பணியாற்றும்  அலுவலகத்திலிருந்து  அரை கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது.  நாலு தப்படி வேகமாய்  நடந்தால் அலுவலகத்துக்கே வந்துவிடலாம். சில சந்தர்ப்பங்களில்  வேறு எங்காவது செல்லவேண்டிய படிக்கு  ஆகிவிடுகிறது. பக்கமாய் திருப்பாதிரிப்புலியூர் இங்கிருந்து  மூன்று கிலோ மீட்டர்.  சின்ன வண்டி இருந்தால்  சவுகரியமாய் போகலாம் வரலாம்.

 சிக்கரிக் கலக்காது  காபித்தூள் வேண்டுமென்றால்  அவ்வப்போது அரைத்துக்கொடுக்கும் சந்தனப்பொட்டு வைத்த காபிக்கடைக்காரர்.  அந்தப்பொட்டைப்  பார்க்கும் போது   வெண்டைக்காயை  அவர்  நெற்றியில்  நிற்கவைத்தமாதிரி எனக்குத்தோன்றும்  அவரிடம்  வெண்ணெய் நெய்  அரிசிஅப்பளம், கெட்டிப்பெருங்காயம்   எல்லாமும் விற்பனைக்குண்டு.  நாட்டு மருந்து  விற்கும் கடை பூஜைசாமான் கடை. இன்னும்  ஏதும்  இப்படியாய்  வேண்டும் என்றாலும் அந்த திருப்பாதிரிப்புலியூர் போனால்தான் நமக்கு   காரியம் ஆகும்..

ராமாபுரம் கொய்யா  கடலூர் கேப்பர்மலை  ஜைலுக்குப் பின்னாடி  நாலு கிலோமீட்டர்  நேராகப்போனால்  வருவது ராமாபுரம் அது  குக்கிராமம். அங்கு விளையும்  கொய்யாவை நீங்கள் கேள்விப்பட்டதுண்டோ. மேல் தோல் பார்க்கப் பச்சையாக இருக்கும். ஆனால்   அதன் உள்ளோ சதைப்பற்று  கனிந்தேயிருக்கும். குங்குமச் சிவப்பு நிறம். கொய்யாவை  வாயில் போடுங்களேன்   அப்படி ஒரு தித்திப்பு நொந்த. மனம் டபக்கென்று   நிறைந்து போய்விடும். கொய்யாவின் விதைகள் உன்னைப்பார் என்னைப்பார் என்று விறைத்துக்கொண்டு தின்பவர்   நாக்கில்  நர்த்தனம்  ஆடும் தின்பவரை  இம்சிக்கவே  செய்யாது  . சமத்தாய்த் தொண்டைக்குள் இறங்கி விடும்.

வடலூர் வெள்ளரிப்பிஞ்சுகள் எப்போதாவது   சாப்பிட்டு இருக்கிறீர்களா. குட்டி குட்டியாய்  அரைச்சாண் நீளம்தான். மடக் மடக் என்று ஒடியும். அத்தனைப் பச்சை மணம்  ருசி. வடலூர் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டோருக்குத் தண்ணீர் தாகமே எடுக்காது.  இவை அனைத்தும் கிடைக்கும் அதே திருப்பாதிரிப்புலியூரில்தான் சொல்லுக்குத்துணை நிற்கும் வேதியன்  பாடலீசன் திருக்கோவில் இருக்கிறது. இன்னும் போங்களேன் கெடிலக்கரை மீதமர்ந்த  வகிந்தமலை, அருள்பாலிக்கும்  தேவநாதன்  திருப்பதி வெங்கடாசலபதிக்கு  மூத்தவர். ஆக  டூ வீலர் இல்லாமல்   இவை  எதுவும் சரிப்பட்டு வராது  ஆகத்தான்  செகண்ட் ஹேண்டில்   வண்டி ஒன்று வாங்கினேன். கெட்டிக்காரத்தனமாய் நான்  அதனைப்  போற்றி    போற்றித்தான்  வைத்துமிருந்தேன்.நம் கெட்டிக்காரத்தனத்தில் எதுவுமில்லை.

கோர்ட்டர்சில் என் வீட்டுக்கு எதிரே டூ வீலர் நிறுத்தும் ஷெட்..  நான் வசிப்பது தரை தளம்.  தரை தள வாசிகளுக்குக் கஷ்டங்கள் அதிகம்  கொசு இம்சை ஏகத்துக்கு இருக்கும். சாக்கடை அடைத்துக்கொண்டால் வீடு நாறிப்போகும். மழைக்காலத்தில் தவளையும் பாம்பும் உறவு கொண்டாடும்.. வயதாகிப்போனவர்கள் முட்டிக்காலில் வலிவந்த  பேர் வழிகளுக்குக் கொஞ்சம் சவுகரியம் தெரியலாம். படிகள் ஏற வேண்டாம்.

 என் டூ வீலரை எதிரே இருந்த ஷெட்டில் நிறுத்தியிருந்தேன். சைட் லாக்கோடு இரண்டு பூட்டூம் பூட்டித்தான் வைத்திருந்தேன். மறு நாள் காலை ரேஷன் கடைக்குப்போய் கோதுமை வாங்கலாம் என்பதாய் என் திட்டம்.  வண்டி சாவியைக்  கையில் எடுத்துக்கொண்டு  சுழற்றியபடி  ஷெட்டுக்குள் நுழைந்தேன். என் வண்டியைக்காண வில்லை.  செட் ஒன்றும் பெரிய கட்டிட,ம் இல்லை. இப்படியும் அப்படியும் வளைத்து வளைத்துப் பார்த்தேன். மொத்த ஷெட்டும்   பார்த்தாயிற்று.  நான் பூட்டி வைத்துவிட்டுப்போன  அந்த வண்டி அங்கிருந்தால்தானே.  என் வண்டியை மட்டும் காணவில்லை.  வண்டி சாவியைக் கையில்  வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது. எனக்கு  மிகவும் வருத்தமாய் இருந்தது. வருத்தம் மட்டுமா   கூடவே கொஞ்சம் சிரிப்பும் வந்தது. வரக்கூடாது  தப்புதான்.

உடனே   போலீசில் புகார் கொடுத்தாக வேண்டும்  வண்டியை யாரேனும்  திருடிக்கொண்டு கள்ளச்சாராயம்   விற்பதற்கு ஊர் ஊராய்ப் போய்விட்டால்,  குரங்கு மனம் என்னவெல்லாமோ யோசிக்கிறது.. போலிசில் உடன்  புகார் செய்வது  கட்டாயம் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மட்டும் தெரியாத செய்தியா அது.  வண்டியின் ஆர் சி புக்கையும் இன்சூரன்சையும் தேடி எடுத்தேன். போலிஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டேன். அதற்கான பிரத்யேக  காவல் நிலையம் எங்கே இருக்கிறது என்று நண்பர்களிடம்  கேட்டுக்கொண்டேன். நேதாஜி சாலையில்  அந்த  போலிஸ்  ஸ்டேஷன் இருந்தது. நடந்தேதான் போனேன்.  அங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரும் ஒரு ஏட்டும்  இருந்தார்கள். அந்த ஸ்டேஷன்  வாயிலில் போய்  தருவுத்தருவி நின்றேன்.

‘என்ன சேதி’

‘டூ வீலர் களவு போயிடுச்சி சார்’

‘உங்களுக்கு  எடம் எங்க’

‘பெரிய ஆசுபத்திரி எதுத்தாப்புல டெலிபோன் கோர்ட்டர்ஸ்’

‘அங்க ஒரு பெரிய டெலிபோன்  டவர் ஒண்ணு இருக்குமே’

‘அதே இடம் தான் சார். எங்க வீட்டுக்கு முன்னாலேதான் அந்த டவர்  பாட்டமே இருக்கு;

‘எப்ப நடந்தது  இந்த சமாச்சாரம்’

‘நேத்து ராத்திரி. நான் சாயந்திரம் வண்டிய பூட்டி ஷெட்டில வுட்டிருந்தன்.  எல்லாரும் டூ வீலரை அப்படித்தான் விடுவோம். காலையில ரேஷன் கடைக்குப்போலாம்னு கெளம்பினேன். சாவி எடுத்துகிட்டு  ஷெட்டுள்ள  போயி வண்டிய பாக்குறன்  என் வண்டிய காணுல. இதுதான்  அந்த வண்டி  சாவி’

‘சாவிய  வச்சிகிட்டு நாக்க வழிக்கிறதா, சாவி  என்னாத்துக்கு இப்ப.  வண்டிக்கு  கரெக்டா  இன்சூர் பண்ணியிருக்குதா. வண்டிக்கு  ஆர்சி புக் இருக்குதா. ரெண்டையும் ஜெராக்ஸ் போட்டுக்குங்க.  அதுங்கள  கூட  வச்சி வெவராமா   ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக்குடுங்க.. பாப்பம். எங்க பாத்தாலும் களவு களவு.  இதுகதான் இப்ப  நடக்குது  நா என்னத்த சொல்ல’

‘ரெண்டு கொயர்  டிம்மி பேப்பர் வாங்கிட்டு  வந்துடுங்க. அதுவும் வேணும்’

நான் சற்றுத் தயங்கி நின்றேன்.

‘இங்க ஆபிசு வேலைக்குதான். நா ஒண்ணும் பேப்பர  பொறியல் வச்சி சாப்பிடப் போறதில்ல’ வேகமாய்ச்சொன்னார்.

ஆர் சி புக்கையும் இன்சூரன்சு பத்திர நகலையும்  பக்கத்துக்கடையில்

செராக்ஸ் போட்டேன்.  அதே கடையில் இரண்டு கொயர் வெள்ளை பேப்பர் வாங்கிக்கொண்டேன்.

 ‘ வண்டி சின்ன வண்டி போல. அதான் ரெண்டு கொயர் பேப்பரோட முடிச்சிகினாரு’ கடைக்காரர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். செய்யும் தொழில் தெய்வம்தான்.

 வண்டி தொலைந்து போன விபரம் சொல்லி ஒரு மனு எழுதினேன். மனு எழுதுவதெல்லாம் எனக்குத்தெரிந்து இருக்கிறதே  அதிலே ஒரு அல்ப சந்தோஷம்.  போலிஸ் ஸ்டேஷனுக்குப்போய்   மொத்தத்தையும் கொடுத்தேன்.  உதவி ஆய்வாளர் பெற்றுக்கொண்டார். ‘போயிட்டு வாங்க’ என்றார். நான் அங்கேயே நின்றேன்.

‘தகவல் ஏதும் தெரிஞ்சா சொல்றம். இப்ப நீங்க  போவுலாம்’

நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.

எ ஃபை ஆர் காபிக்காக இரண்டு முறை போயிருப்பேன்.. அதனையும் ஒரு வழியாய்  வாங்கிக்கொண்டேன்.

‘ஒரு நா  ஒங்க  கோர்ட்டர்ஸ்  வீட்டுக்கு போலிசு  வருவம். சின்ன  ஸ்கெட்ச் போட்டு பாக்குணும். எப்பிடி களவு போனதுன்னு தெரியணும். அக்கம் பக்கம் விசாரிக்கணும். ஆரு மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தா அத கட்டாயம்  இப்பவே  சொல்லுணும். களவு போன  வண்டி எதனா ஆப்டா உங்கள  கூப்பிடுவம். நீங்க வந்து  அதுவுள பாக்குணும்.  இன்னும்  சேதிவ  கனமா இருக்கு. வண்டிய கொண்டுகுனு போனவன் அத சட்டமா  வுட்டுகினு இருப்பான் நாம இங்க சின்னப்பட்டுதான் ஆவுணும் எத்தினி வண்டி களவு போச்சி எத்தினி வண்டிய புடிச்சி கொண்டாந்திங்கன்னு எங்கள  மேல இருக்குற ஆ சாமிவ தொலச்சி எடுத்துடும்.’ சப் இன்ஸ்பெக்டர் சொல்லி முடித்தார். அவரைப்பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.

களவு போன வண்டியை சரியாய்  இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று  அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும்.  அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ்   இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.

‘போலிசுக்கு நீங்க  குடுத்த  கம்ப்ளெயிண்ட் காபி எஃப் ஐ ஆர் காபி  அப்புறம் போலிசுல  குடுக்குற ‘  நான் ட்ரேசப்ல் சர்டுபிகேட்’  இதுக மூனும் அவசியம்.  போலிசுகாரங்க    அந்த  வண்டிய  நாங்க தேடிப்பாத்தம் அது  அகப்படலன்னு  ஒரு சர்டிபிகேட்டு தரணும் அது முக்கியம்’

‘அது குடுத்துடுவாங்களா’

‘அத அங்க கேக்குணும்’ என்றாள் அந்த அம்மா.

போலிஸ் ஸ்டேஷனுக்கு அலையாய் அலைந்தேன். எத்தனையோ முறை போயிருப்பேன். லேசில் அந்த நான் ட்ரேசபல்  சர்டிபிகேட்டை வாங்க முடியவில்லை. அது எப்படி வாங்குவது என்கிற யோசனையில் இருந்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பக்கிரி என்கிற நண்பர் எழுத்தராக இருந்தார். அவரிடம் யோசனை கேட்டேன். அவருக்கு என்னைக்காட்டிலும் பல நண்பர்கள் அதிகம்  இருந்தார்கள். அவரின் சுபாவமோ இல்லை அவருக்கு முக ராசியோ  அப்படி.  எனக்குத்தான் எந்த  ராசியுமில்லை. இது விஷயம்  எனக்கு எப்பவோ அனுபவமாயிற்று.’ உப்பு விக்கப்போனா மழை பேயும் , மாவு  விக்கப்போனா புயலடிக்கும்’ இப்படி ஒரு பழமொழிக்கும்  எனக்கும்  ஏகப்பொருத்தம் . நண்பர்  பக்கிரிக்கு அங்கங்கேயும் ஒரு ஆள் இருந்தது. அவரைப்பிடித்து இவரைப்பிடித்து   போலிசிலிருந்து எனக்கு ஒரு நான் டிரேசபல் சர்டிபிகேட் வாங்கி வந்து விட்டார். ஆயிரம் ரூபாய் செலவானது என்றார். அதனைக் கையோடு அவரிடம் கொடுத்துவிட்டேன்.  அதுவாவது   நிச்சயம் ஆகித்தான் இருக்கும். காசு பணம்  வாங்கிக்கொண்டால் என்ன  நமக்குக் காரியம் முடித்துக்கொடுப்பவர்கள் தெய்வம்.. காசும் கொடுத்துவிட்டு  காரியமும் ஆகாமல் முகத்தில் கரிபூசிக்கொண்டு  எனக்குத்தான்  எத்தனையோ அனுபவமாகியிருக்கிறது.

‘உங்களுக்கு எவ்வளவு ரூவா இன்சூரன்சுல வண்டிக்கு குடுப்பாங்க’

‘ஆறாயிரம்’ என்றேன்.

‘அந்த ஆபிசுல ஏதும் தரணுமா’

‘இல்லை.’

‘இன்னும் ஒன்னு ரெண்டு  ஆபிசுவ கெட்டுப்போவாமதான்  இருக்கு’ என்றார் அந்த பக்கிரி. அவர் இல்லாவிட்டால் இந்த சர்டிபிகேட் எங்கே நான் வாங்குவது. அந்த சான்றிதழைக் கொண்டு போய்  எஃப் ஐ ஆர் காபியோடு இன்சூரன்சு அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார்கள். போனேன். ஆறாயிரத்துக்கான காசோலை தந்தார்கள். அதனைச் சேமிப்பு வங்கியில்  டிபாசிட் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் தொலைந்து போன வண்டி   ரூபாய்  பன்னிரெண்டாயிரத்துக்கு செகண்ஹேண்டில் வாங்கியது. படிக்குப் பாதி தேறியது. ஆயிம் பேர் இன்சூரன்சில் பணம் கட்டினால் ஒருவன் செத்துப்போவான். அவன் குடும்பத்திற்கு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு  சாதித்ததாய்ப்  போஸ்டரில் போட்டுக்கொள்வார்கள். தொளாயிரத்து  தொண்ணூற்று ஒன்பது  பேரிடம் வாங்கிய அந்தத் தொகையோ  கொள்ளையோ கொள்ளை இன்சூரன்சு நிறுவனத்தாருக்கு. மனிதன் செத்துப்போய்விட்டால் அவன்  பிள்ளை பெண்சாதி தெருவில் நின்றுவிடுமே என்கிற அச்சத்தை வியாபாரமாக்கிப் பிழைக்கிற  நிறுவனம் தான் இன்சூரன்சு கம்பெனி. சாவு எப்போதும் யாருக்கும்  நிகழலாம் என்கிற  புரியாத விஷயம் அவர்களுக்கு தொழிலின் அடிப்படை.

இப்படியே காலம் போய் கொண்டிருந்தது. வேறு ஒரு வண்டி வாங்கினால் தேவலை. அதுவும் திருடு போகாது என்று சொல்ல முடியுமா. மஞ்சகுப்பத்தில் லட்சம் வண்டிகள் இருக்க்லாம். நம் வண்டிதானா திருடு போக வேண்டும். கடலூர் வருவதற்கு முன்னே  நான் விருத்தாசலம் பெரியார் நகரில் குடியிருந்தேன். அங்கு அப்போது  ஐயாயிரம் வீடுகள் இருந்தன. என் வீட்டுக்குத்தான் திருடன் வந்தான்.

போஸ்டாபிசுக்குள் வேலையை முடித்துக்கொண்டு அந்த வக்கீல் வெளியே வந்தார். டூவீலரின் சாவியை எடுத்து வண்டியைத்திறந்தார். என் வண்டியைத்தான் திறந்தார். சட்டமாய் அமர்ந்து கொண்டார். நான் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன். போய் அவரை  இடை மறித்து ‘அய்யா  இது என் வண்டி சொல்லலாமா’ என ஒரு மனசு சொல்ல இன்னொரு மனசோ வண்டி தொலைந்து போலிசு ஸ்டேஷனுக்கு அலைந்த கதை,  இன்சூரன்சு கம்பெனிக்கு அலைந்தகதை, . வண்டியின் ஆர்  சியின் அசல் நகலை ஒப்படைத்துப் பின்  ஆராயிரம் ரூபாயுக்கு   செக் வாங்கி வங்கியில் போட்ட கதையைச்  சொல்லியது. ’ வாயை மூடு எதுவுமே நடக்காதது போல் உடன்  நட  உன்  அலுவலகத்துக்கு’ என்று யாரோ சொல்வது போல் இருந்தது. அது யாரென்று தேடிப் பார்த்தேன் எனக்குக் கண்ணில் படவேயில்லை.

 எப்போதோ என் வசமிருந்த டூவிலர்.  அதனை  அந்த வக்கீல் ஓட்டிக்கொண்டு ஜம்பமாய்ப் புறப்பட்டார்.  நான் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருந்தேன். 

‘டெலிபோன் ஆபிசு சாருக்கு என்ன ஜோலி. போஸ்டாபீசுல   அதுவும்  இந்த நேரத்துல’ என்னை வக்கீலுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. எனக்குத்தான் அவரைத் தெரியவில்லை.

‘ இங்க  பி அண்ட்  டி கோவாப்ரேடிவ் ஸ்டோர் இருக்குதுல்ல . அதுல கொஞ்சம் மளிகை ஜாமான்  வாங்கணும் அதான்’

‘ட்யூடி  நேரமாச்சே இது’

‘ ஸ்டோர் மேனேஜர்  பாயிகிட்ட  நா  ஜாமான்  லிஸ்டு  குடுத்துட்டு போயிட்டா.  போட்டு வச்சிடுவாரு சாயந்திரம்வந்து எடுத்துக்குவேன்’’

எனக்குக் கூட  பேச  சரியாய்த்தான் வருகிறது நானே  எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

‘தப்பில்ல. பாத்துகுங்க. நா வரேன்’  சொல்லிய  அந்த வக்கீல் என் வண்டியில் தான் விர்ரென்று புறப்பட்டார்.

 

 

 

 

 

 

 

Thursday, September 18, 2025

என்னத் தவம் செய்தோம் ( கட்டுரை வளவ துரையன்)

 

என்னத் தவம் செய்தோம்.                                               

 

’இலக்கியச்சோலையின் ஆலமரம்’ இது நூலின் தலைப்பு.  38 கட்டுரைகளக் கொண்ட ஒரு தொகுப்பு  நூல். தொகுத்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் பாவண்ணன். எங்கே இருக்கிறது இலக்கியச்சோலை? யார் இந்த ஆலமரம்?   இக்கேள்விகளுக்கு விடை சொல்லித்துவங்கலாம்.

இலக்கியச்சோலை கடலூரில் இருக்கிறது. ஆலமரமாய் வாழ்பவர் வளவ. துரையன். எழுபத்தைந்து அகவை நிறைந்த இந்தத் தமிழ்ப்பணியாளர் கடலூரில் வாழ்கிறார். ஆசிரியராகப்பணி புரிந்து ஓய்வு பெற்ற வளவ.துரையன் வளவனூர்க்காரர். அண்ணாதுரையின் மீது தனக்கிருந்த  பற்றுதலால் துரையன் என்பதை ஊரோடு சேர்த்துக்கொண்டு வளவ. துரையன் ஆனார்.

 சங்கு இலக்கியக்காலாண்டிதழின் ஆசிரியர்.  கடலூர் இலக்கியச்சோலை என்னும்  பேரமைப்பின் மூல வேர்.  அன்னாருக்குச் சிறப்பு சேர்க்கத் தமிழ் அன்பர்களால் எழுதப்பட்டக் கட்டுரைகளின் தொகுப்பையே சந்தியா பதிப்பகம் அழகிய புத்தகமாக  வெளியிட்டுள்ளது.

முதல் கட்டுரை நாஞ்சில் நாடன் ’எம்முளும் ஒரு பொருநன்’  என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். அதன்  இறுதி வரிகளில் இப்படிப்பேசுகிறார்.

‘வாழ்த்தவும் பாராட்டவும் மதிப்புரை எழுதவும் முக நூலில் பதிவிடவும் சினிமா அரசியல் சாதி பின்புலங்கள் இன்றியமையாதனவாகக் கருதப்படும் சம கால இலக்கியச் சூழலில் வளவ. துரையன் போன்ற மூத்த தமிழ் எழுத்தாளருக்குச் சிறப்பிதழ் வருவது உவப்பானது.’  இதைவிடக்  கருத்துச்செறிவாய் வளவ. துரையன் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.

 மன்றவாணன் என்னும் எழுத்தாளர்’ தமிழ்தான் முதல், அப்புறம்தான் நீ’ என்னும் தலைப்பிட்டுத் தமிழாகவே வாழும் வளவதுரையனுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பிராமண குலத்தில் பிறந்த யாரும் தம் பிள்ளைகளுக்குத் தனித்தமிழில் பெயர்கள் சூட்டுவதில்லை. இறைவன் பெயரே ஆனாலும் முருகன் என்ற பெயரை வைப்பதில்லை. ஆனால் இவர் தம் பிள்ளைகளுக்கு எழிலன், முகிலன், அல்லி என அழகு தமிழ்பெயர்களைச்சூட்டித் தமிழுணர்வில் திளைத்தவர் என்று பெருமையோடு குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் அன்பாதவன்  வளவதுரையன் பற்றி,’ ஏரியின் சில்லிப்பு, ஏரிக்காற்றின் குளிர்மை, தாகம் தீர்க்கும் தாய்மை, கரைகளால் காவல் என வளவனூரின் படிமமாகவே இனியவர் வளவ. துரையனின் இலக்கியப்பயணத்தைக் காண்கிறேன்’ என்கிற பட்டயம் வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

முனைவர் பாஸ்கரன் தனது படைப்பில் ’ ஒரு பருந்துப்பார்வையில் முப்பது ஆண்டுகளாய் எழுதிவரும்  வளவ. துரையனின் படைப்புகளை ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் பார்க்கும் போதுவெவ்வேறு வண்ணங்களிலும் கோணங்களிலும்  எழுதப்பட்ட  தவிப்பின் சித்திரங்கள்  நிறைந்திருப்பதை உணரமுடியும்’ என்று முடிக்கிறார்.

எழுத்தாளர்  எஸ். ஜெயஸ்ரீ ,’ கால் நூற்றாண்டாக இவ்வளவு பெரிய ஆளுமை நம்மோடு  இருப்பதற்கு நாம் என்ன தவம்  செதிருக்கிறோம் என்று பல சமயங்களில் நான் வியந்து போயிருக்கிறேன் என்று உணர்ச்சி மேலிடக் குறிப்பிடுகிறார்.

கோவி. ஜெயராமன் என்னும் எழுத்தாளர் ‘நிழல் தரு’ என்னும் தனது கட்டுரையில் இப்படி எழுதிச்செல்கிறார்.

‘எந்த இலக்கிய இசங்களுக்குள்ளும் அடங்கிவிடாமல் அதே சமயம் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் கடல் போன்றது இவருடைய மனம். எதன் மீதும் இவருக்கு வெறுப்பு இல்லை’  எத்தனை கச்சிதமான வரையறை.  நூலை வாசிக்கும்  வாசகன் நெகிழ்ந்துதான் போகிறான்.

கடலூர் சீனு என்னும் சீரிய வாசகர், தனது ‘ அபூபுர்வ மனிதர் என்கிற கட்டுரையில், எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களின் பெயரை நான் கேள்விப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகன் வசமிருந்துதான். எழுத்துலக ஜாம்பவான் ஜெயமோகன் சொல்ல  அவரைத்தான்  அறிந்து கொண்டதாய்க் குறிப்பிடுகிறார்.

தாமே செம்மைப்படுத்திக்கொண்ட பாதையில் வளவதுரையனுடைய தேர்  சீரான வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது என்று  முத்தாய்ப்பாகப்  புத்தகத்தை முடிக்கிறார் பாவண்ணன்.

தமிழ் எழுத்துலகில் இப்படி ஒரு சிறப்பை  ஒரு எழுத்தாளன்  சக எழுத்தாளனுக்குச் செய்ததில்லை. இதுவே ஒரு வரலாறு. ஆலமரத்தை  அறிவோம்  வாருங்கள்.

 

 

தொகுப்பாசிரியர்        பாவண்ணன்

 சந்தியா பதிப்பகம்  பக்கங்கள்  286 விலை ரூ 350  பதிப்பு 2025.