Wednesday, May 13, 2026

ஆனந்தம் - மதிப்புரை

 

ஆனந்தம்

இது சாகித்திய அகாதெமியின்  பால சாகித்திய புரஸ்கார்  விருதுபெற்றது. தாசரி வெங்கட்ரமணா தெலுங்கில் எழுதிய சிறார் இலக்கிய நூல். இதனை பாரனந்தி நிர்மலா இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.  அதனைத் தமிழாக்கம் செய்தவர். வி. பத்மாவதி.  சாகித்திய அகாதெமியின் வெளியீடாக  இந்நூல் வந்துள்ளது. குழந்தைகளுக்கு மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்பிக்கின்ற படைப்பு. பாரனந்தி நிர்மலா பிரபலமான தெலுங்கு மொழி எழுத்தாளர். இவரே இந்நூலை தெலுங்கிலிருந்து இந்திக்கு மொழி பெயர்த்துள்ளார்.  நல்லி திசை எட்டும் விருது பெற்ற வி. பத்மாவதி இதனைத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்.  மூல ஆசிரியர் தாசரி வெங்கட்ரமணா தனது முன்னுரையில்,’  நன்மை மற்றும் தீமை ஆகியற்றுக்கிடையே மோதல் ஏற்படும் பொழுது வாசகர்களின் மனம் நல்லவற்றையே நாடும். ஒவ்வொரு மனமும் கதையின் இறுதியில் தீயவற்றை தோற்கடித்து நல்லவற்றை வெற்றியடையச்செய்து அதை நிலை நிறுத்தவே  விரும்புகின்றது எனக் குறிப்பிடுகிறார்.

ஆனந்தம் என்கிற முதல் கதை எடுத்த எடுப்பிலேயே இப்படி சொல்லி ஆரம்பிக்கிறது.’ பிறர் நல்லது என நினைக்கும் பொருட்களைவிட நமக்கு நல்லதெனத் தோன்றும் பொருட்களில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது’ சுலஷன் நல்ல வாழ்க்கையைத் தனக்குப்பிடித்த மாதிரி எளிமையாய் வாழ்கிறான். அவனுடைய மாமனார் தனஞ்சயனுக்கு  மாப்பிள்ளை ஆகா ஓகோ என்று வாழவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. செல்வநிலையில் உச்சத்தில் இருந்த மாமனார் போன்றே  சுலஷனும் ஒரு நாள் ஆகிப்போனான். ஆனால்  மாமனார்   தனஞ்சயனுடைய வியாபாரம் படுத்துவிட்டது. சுலஷன் அவனுக்கு உதவுகிறான். நகரத்தில் இருந்த கடையில் மாமனாரை அமர்த்திவிட்டு தான் கிராமம் நோக்கி மீண்டும் சென்று  தொழில் செய்கிறான். பணம் சம்பாதிக்கவும் முடியும் எளிமையாக வாழவும் முடியும் என்பதை நிரூபிக்கிறான்.

இரண்டாவது கதை  ‘புத்திசாலி மனிதன்’. இதனில்  வரும் சாரங்கன் என்னும் பாத்திரம் இப்படிப்பேசுகிறது.’ பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டைபோட்டால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி அவரிடம் கூறினேன்.இது மட்டுமல்லாமல், நாம் பிறரைவிட புத்திசாலி என்பதைக்காட்ட பகையை நட்பாக மாற்றுவதுதான் உலக வழக்கம் என்றேன்’.தனது புத்திசாலித்தனத்தால்  பிறருக்கிடையில் அன்பை வளர்க்கின்ற சாரங்கன் நம் மனதைத் தொட்டுவிடுகிறான். மூன்றாவது ’கதை சுப்ரதீக்கின் கேள்வி’. இக்கதையில்  இரத்தினகிரி அரசவையில்  பல பண்டிதர்களை வென்ற கங்கணம் என்பவருடைய ஆணவத்தைத் தனது மூன்று கேள்விகளால் சுப்ரதீக் என்னும் ஆடு மேய்ப்பவன் வென்று விடுகிறான்.

ஐந்தாவதாக வரும் கதை’பணத்தால் பிரச்ச்னை’. இக்கதையில் வரும் சேஷாசலம் என்னும் வியாபாரி யதார்த்தமாகப்  பேசுகிறார்.’ நண்பராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் கணக்கு வழக்கு  சரியாக இருந்தால் நட்பு எப்பொழுதும் நிலைத்து இருக்கும்’. ஆறவதாக வரும் கதை’ பொறாமை’. இக்கதையில் வரும் விட்டல் சிவபெருமானை நோக்கித் தவமிருக்கிறான். சிவபெருமான் அவன் முன்னே தோன்றியபோது’ ’ பரதன்  என்பவன்  முட்டாளக வேண்டும். அவன் எப்பொழுதும் கல்வியில் எங்கள் பின்னாலேயே இருக்க வேண்டும்’ என்று வரம் கேட்கிறான். விட்டலின் மனதில் இருந்த பொறாமைத் தீ அவனுடைய மனதில் இருந்த விவேகத்தை அழித்து விட்டது. சிவபெருமானே அவன் முன்னர் பிரத்யட்சமான போது  அற்பமான வரத்தையே கேட்கிறான்.

,பதிநான்காவது கதை,’ அதீத பணிவு’.  எல்லாக் கதைகளிலும் வருவது போல் அதன் தலைப்புக்குக் கீழ்  மூன்று வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வாசகனுக்குக் கனமான செய்தியொன்றைச் சொல்கிறது.’ பணிவானவர்கள் நம்மிடம் முறையாக நடந்து கொள்வார்கள். அதிகமாகப் பணிவைக்காட்டுபவர்கள் சமயம் கிடைக்கும் பொழுது நமக்குத் தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி மனிதர்களிடமிருந்து  தப்பித்து விடவேண்டும்.’ செளஷீல்ய நகர அரசன் நரோத்தமன் அந்தப்புரத்தில் இருந்து ரகசியங்கள் கசிந்து  அண்டை நாட்டு அரசருக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அப்படிச் செய்பவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.  பணியாட்கள் அனைவரும் அரசனை பத்துமுறைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று அறிவித்த  போது அவசர அவசரமாக  அரசரை சுற்றிவர விரைந்த  இருவரை  அவர்களே   அந்த ஒற்றர்கள் என்று கண்டு பிடித்து நாடு கடத்துகின்றனர்.

பதினெட்டாவது கதையாக வருவது’ சந்தேக நிவர்த்தி என்னும் கதை. மனிதன் உயிரோடு இருக்க உணவு வேண்டும். ஆனால் சாப்பிடுவதற்காகவே  வாழக்கூடாது என்னும் நியதியைச் சொல்கிறது. ஒரு முறை செளஷீல்ய அரசர் சர்வோத்தமனுக்கும் அரசி  நிர்மலாதேவிக்கும்  ஒரு வாக்கு வாதம் வருகிறது. மகாராணி’ மனிதனுக்கு காற்று தண்ணீர் ஆகாரம் இவை மட்டுமே அவசியம் என்கிறார். அரசரோ ‘ மனிதன் வாழ்வதற்கு உனவுதான் முக்கியம் என்பது உண்மைதான்! ஆனால் உணவால் மட்டுமே அவன் திருப்தி அடைவதில்லை’ என்கிறார். இதைக்  விதூஷகர் கேள்வியுறுகிறார்’ இதில் எது சரி எது தவறு என்பதைக்கண்டு சொல்லப் பணிக்கப்படுகிறார்.   ஒரு காவலாளியை ஒரு வாரம் சிறையிலடைத்து  அவனுக்கு உணவு  மட்டும் அளிக்கவே  ஏற்பாடு செய்கிறார். காவலாளியோ ஒரு வாரத்தில் எப்போது விடுதலையாவோம் என்று நொந்து போய்விடுகிறார். தற்கொலை செய்துகொள்ளவும் துணிந்து விடுகிறார்.  ஆக மனிதனுக்கு,   ஆனந்தம் மகிழ்ச்சி யோசனை ஆவேசம்  ஆகியவையும் வேண்டும் என்கிற நியதியைச் சொல்லுகிற கதையாக இது மலர்கிறது.

இருபத்தியோராவது கதை’ உண்மையான வெற்றி’. சுருட்டு பிடிக்கும் தந்தையை மகன் தன்னுடைய  போராட்டத்தால் திருத்தி  வெற்றிகொள்கிறான். தந்தை இந்தப்பிறவிக்கு  இனி  சுருட்டு பிடிக்க மாட்டேன் என்கிற உறுதியைத் தருகிறார். தந்தை மகனிடம்’ நீ ஜெயித்து விட்டய்’ என்கிறார். மகனோ தந்தையிடம் ‘ சுருட்டுப்பிடிக்கும்  பழக்கத்தை  நீங்கள்தான் வென்று விட்டீர்கள்’ என்கிறான்.

இப்படி  முத்து முத்தான சிறார்க்கதைகள் இருபத்தியிரண்டைக் கொண்ட அற்புதமான தொகுப்பு இது. சிறுவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

-எஸ்ஸார்சி

---------------------------

 

 

அதவைத அம்ருத உபநிஷத்

 

அத்வைத அம்ரித உபநிஷத்

சாந்தி மந்திரம்

ஓம் சாந்தி: சாந்தி : சாந்தி:

பிரம்மன் நம் இருவரையும் காக்கட்டும்

பிரம்மன் நம் இருவரால்  நிறைவுறட்டும்

உற்சாகத்தோடு நம் பணி சிறக்கட்டும்

நமது வாசிப்பு ஒளிரட்டும்

நாம் ஒருவரை ஒருவர்  வெறுக்காதிருப்போம்.

 

மந்திரம்  1

பிரம்மன்  ஒருவன் இரண்டல்லாதவன்

அவன் அழிவுறா சக்தி

அவனுக்கு அடுத்து யாருமில்லை.

அறிவின் ஆனந்தத்தின் ஒத்த கலவை

தந்நிறைவானவன்

அவன் பூரணன்

 

மந்திரம்  2

பிரம்மன் உள் நிறைந்தும் நிறையாமலும்

மேலும் கீழுமாய்

முன்னும் பின்னுமாய்

வலப்புறமும் இடப்புறமும்

எங்கும் உறை  எங்கும் நிறை வெளி

அவன் சிதாகாஸன்.

 

மந்திரம் 3

எப்போதுமிருக்கும் முழு நிறைவு

சத் சித் ஆனந்தம்

அதன் ஐங்குணங்கள் அறிவாய்

பிரம்மன் பற்றி இயன்றவரை சிறப்பாய்ச் சொல்

தியானம் செய் நின்  மனதில்

உணர் பிரம்மத்தை.

 

மந்திரம் 4

அழிவிலாதது

இரண்டற்றது

பிரிக்க முடியாதது

உருவமிலா ஆத்மா

மூன்று உடல் ஐந்து உறைகளினின்றும் வேறானது

மூன்று நிலைகளின் சாட்சி

அதை ஒருவன் தானே உணரவேண்டும்

இடைவிடாத நெடிய  ஆழ்ந்த தியானத்தால்

சித்தியாவது அது.

 

 

 

 

 

 

நாய்வால் - short story

 

நாய்வால்                                                                                                          

 

என்  வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை  விலைக்கு வாங்க முடியுமா என்ன,  அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை.  நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை  விடுங்கள் அந்த மனையை விலைக்கு  வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும்   அந்த யாரோ ஒரு நபராவது  நல்ல மனிதராக வந்தால் அதுவே  நிம்மதி என்றிருந்தேன். ஆடை வாய்க்கறதும் ஆம்படையான் வாய்க்கறதும் நம்ம கையில இல்லேன்னு  என் தாயார் அடிக்கொருதரம் சொல்வது  ஏனோ  ஞாபகத்திற்கு  வந்துபோனது.

பழைய மகாபலிபுரம் சாலையில் தகவல் தொழில் நுட்பத்தில் பணி  செய்யும் ஒரு தம்பதியர் அந்த காலி இடத்தை வாங்கினார்கள். அம்மாதிரி ஆட்கள் மட்டுமே இப்படி கொட்டிக்கொடுத்து  மனை வாங்கவும் முடியும்.’ வா ராஜா வா’ என்று வங்கிகளும் அவர்களைத்தானே வரவேற்கும். வீட்டுக் கடன் கொடுத்து விட்டு ஒன்றுக்கு ரெண்டாய் திரும்பவும் வசூலித்துக்கொள்ளவும் சாத்தியப்படும்.  அப்படி மனை வாங்கியவர்கள் வீடு கட்டும்  வேலையைக் காண்ட்ராக்ட்டுக்கு விட்டார்கள். பூமி பூஜை முடிந்தது.அய்ந்து செங்கற்கள் மஞ்சள் பூசி குங்குமம் வைத்துக்கொண்டு குழிக்குள்ளே சயனித்தன.கடைக்கால் தோண்டுவதற்கு ஜே சிபி இயந்திரங்கள் உறுமிக்கொண்டு வீதிக்கு வந்தன. தெருச்சாக்கடை சிமெண்ட்  கால்வாயை உடைத்துக் கொண்டு அந்த இயந்திரங்கள் காலி மனைக்குள்  நுழந்தன. மண் வெட்டும் பணியில் மும்முரமாயின. நான் நேராக ஜேசிபி ஓட்டுனரிடம் போனேன்.

‘தெருச்சாக்கடை போகும்  சிமெண்ட் கால்வாயை  இடிச்சிட்டியே இது சரியா.இப்ப என்ன செய்றது. இந்த  சாக்கடை காவா கட்ட  இதே தாம்பரம் முனிசிபாலிட்டிக்கு எத்தினி நட  நாங்க நடந்திருப்பம் உனக்கு தெரியுமா’ என்றேன்.

‘வூடு கட்டறவருகிட்ட பேசுங்க. இல்லன்னா அந்த பில்டிங்  காண்ட்ராக்டர் கிட்ட பேசுங்க.  நா சும்மா  கூலிக்காரன்’

‘காசு குடுத்தா மனுசாளு மேலயும் ஒன்  வண்டிய ஏத்திடுவயா’

‘சாரு ஓவரா பேசாதிங்க. நா  அவங்ககிட்ட  பிரச்சன  வரும்னு  மொத சொல்லிட்டேன்.   ஒனக்கு  கொடுத்த வேலய மட்டும்  நீ பாரு.  அப்பிடி  மீறி வர்ர  பிரச்சனை எதுவானாலும்  நாங்க பாத்துக்குவோம்னு சொன்னாங்க’

மனைவாங்கி வீடு கட்டும் அந்த ஐ டி பொறியாளர் வேக வேகமாக என்னை நோக்கி வந்தார்.

‘இப்ப என்னன்றே நீ’  என்னை விரட்டினார். என்னை ஒருமையில்தான் விளித்தார். அந்தப்படிக்குத்தானே நானும் இருக்கிறேன்.

‘தெருச்சாக்கடை  காங்கிரீட் செவுத்த  ஒடச்சிட்டியேன்னுதான் நா  ஜே சி பி டிரைவரை கேக்குறேன்’

‘அதுக்கென்ன இப்ப. ஒன்னால  என்ன செய்ய முடியுமோ அத செஞ்சிக. போ’

‘படிச்சவங்க  நீங்க உத்யோகத்துல இருக்குறவரு  இப்பிடி பேசுறீங்க. நா முனிசிபல் ஆபிசுக்கு  போயி அந்த      ஈ ஓ கிட்ட இப்பவே  கம்ப்ளெயின் பண்ணப்போறன்’

‘ஆரு கிட்ட வேணாலும் சொல்லிக்க. அவாள்  ஆரும்  இங்க வந்து என் மசுரை  ஒன்னும்  புடுங்க முடியாது’  குரலை உயர்த்திக்கொண்டார். அதன் பிறகு அவரிடம்   நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை. தெருச்சாக்கடைச்சுவர்  இடிந்து போனது இடிந்து போனதுதான். கால்வாயில்  சுவரின் இடி பட்ட பொக்கை அப்படியே இளித்தது. பில்டர் வாஸ்து பார்த்து  அமோகமாய்  வீட்டைக் கட்டினார். நாள் நட்சத்திரம் பார்த்து அந்த  ஐ. டி க்காரர்  குடி புகுந்தார். கிரகப்பிரவேசத்திற்கு எல்லாம் என்னை அவர் அழைக்கவுமில்லை. எப்படி அய்யா அழைப்பார்.

அவர் வீட்டுத்தோட்டத்திற்கும் என் வீட்டுத் தோட்டத்திற்கும் இடையே  ஹாலோ பிளாக் வைத்த ஒரு கட்டைச்சுவர்.அது என் மனையின்  எல்லையில் நான் எழுப்பியது. நான் தானே  இந்தப்பகுதியில்  அவருக்கு முன்னம் குடியேறியவன். ஆகத்தான். அந்தக்கட்டைச்சுவர் ஏன் சும்மா கிடக்கிறது. அதன் மீது  புது வீடு கட்டிக்கொண்டு குடி வந்த  ஐ. டிக்காரர் வரிசையாய் பூந்தொட்டிகளை வாங்கி வந்து  நீட்டாக  அடுக்கினார். நர்சரியிலிருந்து பூஞ்செடிகள்  வாங்கி வந்து    ஒவ்வொன்றிலும் நட்டு வைத்தார். நான் எழுப்பியது  அந்த  காம்பவுண்ட்  கட்டைச்சுவர். அது எனது சக்குபந்தி எல்லைக்குள் இருப்பது. அவர்  மீது எனக்குச்சரி கடுப்பாகத்தான் இருந்தது.

’ஒரு வார்த்த என்னண்ட சொல்லுணும்னு தோணலயா ஒங்களுக்கு’ நான் அவரைப்பார்த்துக் கேட்டுவிட்டேன்.

‘இப்ப என்ன நடந்து போச்சின்னு பேசுற நீ.  பூக்குற செடிவ வாங்கியாந்தேன்.  ஒன் கட்ட செவுத்து மேல  சிமெண்ட் தொட்டி வச்சன்.  அதுவுள அதுல  நட்டும் வச்சிட்டேன்’

‘அதான் ஏன்னேன்’

‘என் இஷ்டம் அது செஞ்சேன்’

‘ என் கட்ட  செவுறுல்ல’

‘அது பொது செவுறு’

‘நா வச்சது’

‘யாரு எடம் அது’

‘என் எடம்தான்’

’இப்ப நீ இடிச்சிக  அதே எடத்துல நா சிமெண்ட்  செவுத்த வச்சிக்கறேன்’

‘என் எடத்துலதான்  அந்த செவுத்த  நா வச்சிருக்கேன்’

‘எல்லக் கோட்ட  கோணலா போட்டு  கிட்ட அது மேல செவுறு வச்சிருக்கே.  நீ  வச்ச செவுறு என் எடத்துல இருக்கு. ஆனா செவுத்து கல்லும் சிமெண்டும் ஒன்னுது’ அடாவடியாய்ப் பேசினார்.

இனி பேசினால் விபரீதம் ஆகி அடி தடியில் முடிந்துவிடுமோ என்கிற அச்சம் எனக்குள் முளைத்துக்கொண்டது.

 அடுத்தவரிடம் எப்படி  பேச வேண்டும்  எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற  அடிப்படை நாகரீகம் தெரியாதவர் என்று முடிவு கட்டினேன்.  அவர் வீட்டு வாழை மரம் என் வீட்டுத் தோட்டத்தில் அதன் இலைகளை நீட்டி ஆக்கிரமித்தது. அவர் வீட்டு எலுமிச்சை மரம் அதன் கிளைகளை என் வீட்டுத்தோட்டத்தில் பரப்பியது.குண்டு குண்டாய் எலுமிச்சைக் காய்கள் காய்த்துத்தொங்கின . சில காய்கள் பளிச்சென்று  மஞ்சள் நிறத்தில் பழுத்தும் இருந்தன. நான் அவைகளைக் கண்களால் பார்த்துக்கொண்டேன் அவ்வளவே.

 என் வீட்டு வாழை மரம் அதன் இலைகளை  தப்பித்தவறி அவர் வீட்டுப்பக்கமாய் வெடித்து  நீட்டி விட்டால் அதன் நீண்ட இலைகளை ஒடிப்பார். என் வீட்டுத் தோட்டத்திற்குள்ளாக அவைகளை  மடக்கித் தொங்க விடுவார். என் வீட்டு கருவேப்பிலை மரம் அவர் வீட்டுப் பக்கம் தனது கிளைகளை  துருத்தினால்  அதனை வளைத்து மடக்கி  என் வீட்டுத் தோட்டம் பக்கமே  திருப்பி அனுப்பிவிடுவார். சப்பித் தின்று விட்டு மீந்தபோன   நீலம் மாம்பழக்கொட்டைகளை என் வீட்டுத்தோட்டத்தில் வீசுவார்.  சமையலுக்கு வாங்கிய கோழி முட்டை ஓடுகளை  என் வீட்டுத்தோட்டத்தில்  அவர் இஷ்டத்துக்குக் கெடாசுவார். அவ்வப்போது சமையலறைக் குப்பைகளை என் தோட்டத்தில் கொட்டி  முடிப்பார். நான் பதிலுக்குப் பதில் ஏதேனும் செய்யலாமா என்று சில சமயம் யோசித்ததுண்டு. ஆனால்  அப்படிச் செய்வதற்குத்தான்  என் மனம்  இசையவில்லை.  அது அவர் குணம். மனம் திருந்துவாரா பார்க்கலாம் என்று இருந்தேன்.அவர் திருந்துபவராகவேயில்லை. இவர் மனம் திருந்தினார் அவர் மனம் திருந்தினார் என்கிற வரலாறு எல்லாம்  சினிமா வசனத்தில் இருக்கலாம். ஏதேனும்  கற்பனைக் கதைகளில் மட்டுமே  இதுகள் சாத்தியப்படும் என்பது  யதார்த்தம்.

கணவனுக்கும் மனைவிக்கும் லட்சங்களில் மாத சம்பளம். கார் சொந்தமாய் வாங்கி வைத்துக்கொண்டு அலுவலகம் போவார் வருவார். வாழ்கின்ற பேரூரை சுற்றி வருவார்.

இரண்டு தோட்டத்திற்கும் குறுக்கே நிற்கும் கட்டைச்சுவரில் அவர் வீட்டுப்பக்கமாய்  பத்து செங்கல்    வடிவத்தில் வைத்து  ஒரு வெந்நீர் அடுப்பு  ஏற்பாடு செய்தார். அதனில் தினம் தேங்காய் மட்டை காய்ந்த  சோலை  குச்சி வைத்து எரியவிட்டார். எந்த பச்சைச்  செடியும் அவர் வீட்டு பக்கம் எட்டிப்பார்த்தால் அவை அனலில் வாடும் கருகும்  காய்ந்து சருகாய்ப் போய்விடும். என்ன படிப்போ என்ன  உத்யோகமோ, அவர் மீது என் கோபம் கூடிக்கொண்டே போனது.  மனித மதிப்பும்  இற்றுக்கொண்டது.

திடீரென்று  ஒருநாள் நானே  பார்த்தேன் அவன் வீடு பூட்டியிருந்தது.  அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் நின்று தனது வீட்டு கொய்யாமரத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.

‘சார் இந்த பக்கத்துவீட்டு  தம்பி  ஊர்ல இருக்காரா’ மரியாதையாய்த்தான்  விசாரித்தேன்.

‘இல்லையே. அந்த தம்பி  அந்த அம்மா ரெண்டு பேரும் வெளிநாடு போயாச்சி’

‘இண்டர்னேஷ்னல் டூர்  எதாவது போயிருக்காங்களா’

‘டூர் இல்ல சார். ரெண்டுபேருக்குமே  இப்ப லண்டன்ல  ஹெட்குவார்ட்டர்ஸ்   டியூட்டி. ஊர்  திரும்பி  வர மூனு வருசம் ஆகும். என் கிட்ட சொல்லிட்டுதான் போனாரு’

‘அதான் அவுரு  வீடு பூட்டிகிடக்குதா’

‘அவர் வீட்டு சாவிய  என்னண்ட குடுத்துருக்காரு.’

‘அது எதுக்கு’

‘இது என்னா கேள்வி சாரு. கட்டுன வீட்ட யாருனா அப்டியே சும்மா  போட்டு வச்சிருப்பாங்களா  அத வாடகைக்கு  விடணும்ல. அதுக்கான விளம்பரம்  வீடு வாடகைக்கு விடறம்னுட்டு நெட்ல போட்டுருக்காரு. யாராவது வாடகைக்கு நிச்சயம்  வருவாங்க. அந்த வீட்டு  சாவிய நா  அவாளண்ட  ஒப்படைக்கணும்’

‘அதுவும் சரித்தான்’ சொல்லிய நான்  அவர் வீட்டு  வாயிலில் நிற்கும் அந்தக் கொய்யாமரத்தை அது   பூக்களும் பிஞ்சுகளுமாய் பளு  நிறைத்துக்கொண்டு  இருப்பதை பார்த்தேன்.

‘என்னா  ஒரு  ஜாடையா  பாக்குறீங்க’

‘ஒன்னும் இல்ல’

‘என்னா சாரு ஒன்னும் இல்லன்னு முழுசா ஒரு பொய்ய சொல்றீங்க.. நம்ம  தெருவுல கொரங்குவ ஒன்னு ரெண்டு சுத்தி சுத்தி வருது.  என் கொய்யாமரம் போச்சி மொட்டதான். கொய்யாக்காயாவது பழமாவது’

‘நமக்கு பொறுப்பு இருக்கு நாமளும் காய்த்த மரத்த  பாத்துகணும்ல’

கொய்யாமரத்துக்காரர் மனைவி  மண் சட்டி ஒன்றின்  முதுகுப் பக்கத்தில் வெள்ளையும் கருப்புமாய் புள்ளி வைத்தாள்.  தெருவில் வருவோர் போவோர் கண்ணில் படுமாறு  அந்தச்சட்டியைக் கொய்யாமரக் கிளையில் மாட்டி வைத்தாள். அவளும் தன் வாயால்  நம்மை  எதாவது  ஏடாகூடமாய்ச் சொல்லிவிடப்போகிறாளே என்று என் வீட்டுகுத் திரும்பி வந்தேன்.

 ஒரு பத்து நாள் சென்றது. பூட்டிக்கிடந்த பின் வீட்டிற்கு முடிச்சூர்  மெயின் பஜாரில்  கசாப்புக்கடை வைத்திருக்கும் பாய் ஒருவர் குடி வந்தார் தோட்டத்துப் பக்கமாய் இரண்டு முறை அவரைப் போய் பார்த்து வந்தேன். அந்த பாய் ஒன்றும் பேசுவதாய்த் தெரியவில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டுதான் இருந்தார். இவரிடம்போய்   அப்படி நமக்கென்ன பேச்சு என்று இருந்துவிட்டேன்.

ஒருநாள் அகஸ்மாத்தாக வீட்டுப் பின்பக்கம் போனேன்.  என்  வீட்டுத்தோட்டத்தில் நின்று கொண்டு மண் தரையைப் பார்த்தேன்.  தின்றுத்துப்பிய கரும்புச் சக்கைகள் முட்டு முட்டாய்க் கிடந்தன. அத்தனையையும்  கூடையில் அள்ளினேன்.  என் தோட்டத்தை சுத்தம் செய்தேன். வேறு ஒரு நாள் நுங்கு சாப்பிட்டு விட்டு  மீதமாகிப்போன அனேக பனங்காய் மட்டைகள் கிடந்தன. வேறு ஒருநாள் கோழி இறக்கைகள் கன்னா பின்னாவென்று வீசப்பட்டிருந்தன .தோட்டத்தைப் பார்ப்பதற்கே மனம் சங்கடப் பட்டது. அது சமயம் அந்த வீட்டில் குடி வந்திருக்கும் பாய்  வீட்டுத் தோட்டத்துப் பக்கமாயும் வந்தார்.

‘இப்பிடி  என் தோட்டத்துல குப்பையை அள்ளி அள்ளி வீசலாமா பாயி’ என்றேன்.

‘நாங்க ஒரு பிட் பேப்பரயும் அடுத்தவங்க  மண்ணுல  போடுறது இல்ல’

‘பின்ன எப்பிடி இந்த குப்பையெல்லாம்’

‘என்கிட்ட  ஏன் சார் கேக்குறீங்க இதெல்லாம்’

‘உங்க வீட்லேந்துதான் இந்த குப்பைங்க வந்துருக்கு’

‘உங்க கண்ணால பாத்திங்களா’

நான் அமைதியாக நின்றேன். இவரிடம் பேசுவதில் பயனில்லை என்று முடிவு செய்தேன். இந்த வீட்டைக் கட்டி முடித்தவருக்கு சளைக்காமல்  வாடகைக்கு வந்த  முடிச்சூர் பாயும்  பேசுகிறார் என்கிற முடிவோடு  திரும்பி விட்டேன். மற்றொரு நாள் வெற்றிலை பாக்கு போட்டு மென்ற எச்சிலை என் வீட்டுத்தோட்டத்திலும் அந்தக் கட்டைச் சுவர் மீதும் துப்பி துப்பி  அசிங்கப் படுத்தியிருந்தார். இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்கிற கவலையோடு சற்று நேரம் நின்று பார்த்தேன். எனக்குத்தான் பி. பி ஏறிக்கொண்டு போயிற்று. இனி இதற்கு என்ன தீர்வு என்கிற கவலை என்னைப் பற்றிக்கொண்டது.  அதன் பிறகு என் தோட்டத்துப் பக்கமே போகாமல் இருந்து விட்டேன்.

ஒரு நாள் என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தேன். என்  பின் பக்கத்து வீட்டில் குடியிருந்த முடிச்சூர் பாய்  ஒரு  வாழை மரக்குலையை வெட்டி எடுத்துக்கொண்டு போனார். அவை வெறும் கருக்காய்ப் பிஞ்சுகள். ஒன்றுக்கும் உதவாது. அதனை வெட்டிக்கொண்டு போகிறாறே என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். மறுநாள் அந்த முடிச்சூர் கறிக்கடை பாய் வீட்டைக் காலி செய்து டிராக்டரில் சாமான்களை லோடு செய்துகொண்டிருந்தார். இனி பிரச்சனை இல்லை என்று சற்று நிம்மதியாய் இருந்தேன். நாட்கள் சில போனது. தோட்டத்துப் பக்கமாய்ச் சென்று எட்டிப் பார்த்தேன். பழையபடி  என் வீட்டு வாழை மரத்தின் இலைகள்  பின்  பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தவை  எல்லாம்  ஒடிக்கப்பட்டு  தொங்க விடப்பட்டிருந்தன.அந்தப்படிக்குக்  கறிவேப்பிலைக் கிளைகளும் மொட்டை  மொட்டையாய் ஒடிக்கப்பட்டிருந்தன.

இது எப்படி நிகழ்ந்தது என்று குழப்பிக்கொண்டேன். மொட்டை மாடியில் யாரேனும் இருக்கிறார்களா அண்ணாந்து பார்த்தேன். என் குழப்பம் தீர்ந்தது.அந்த லண்டன் சென்ற ஐ. டி மனிதர் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார். தாய் நாடு திரும்பிய அந்தக் கணிப்பொறியாளர் தன்  மாற்று குறையாமல் அப்படியே மொத்தமாய்த்தான் தான் திரும்பி வந்திருக்கிறார். மேகத்தை விஞ்சிய  விமானப் பறப்பும்,  தேம்ஸ் நதிக்கரை  இருப்பும், பெற்றிட்ட செயற்கை நுண்ணறிவும் மானிட வக்கிரங்களின் முன்பாக மண்டியிடவே செய்கின்றன.

 

 

 

 

Sunday, March 8, 2026

 

 

க. நா. சு நினைவு கவிதைப்போட்டி

 எஸ்ஸார்சி

 

எழுத்து நிஜம்

 

கவிதைக்கனலோ  கைவசம்

சொல்லிமாளாது நெஞ்சுரம்

ஆகப்பெரியவர்கள்

ஆரையும் தன் இலக்கியத்தராசிலிட்டு

இது   உம்  இடம்  உரைப்பார்

பார்ப்பதில்லை  அவர் முகம்.

விழைவு ஏதுமிலி

இலக்கணம்  ஆயுதமாய்ப்

பிடித்த நக்கீரர் வழி

இலக்கியச்செங்கோல்

கைப்பிடித்த செம்மல்

கந்தாடை  நா சு.

நாடாளும் இறை

புலவர் முகம் பார்த்துத்

கொடாப்பரிசு   தொடோம்  யாம்

மறுத்திட்டப்  புறநானூற்றுப்

பெருஞ்சித்திரனார்

வழித்தோன்றல்

வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்

மெய் கூறுவல்

உரைத்திட்ட மருதன்

இளநாகனார்  வார்த்தைக்கு

வலு சேர்த்து

வாழ்ந்திட்ட  எழுத்து  நிஜம்.

 

 


நல்லகண்ணு மறைந்தார் அஞ்சலி

 


 

 

 

பொதுவுடமைப் பெரு-ஒளி

விடை பெற்றுக்கொண்டது.                                   நம் தோழர் நல்லகண்னு மறைந்தார்.

 

 தோன்றின் புகழொடு  தோன்றுக அஃதிலார்

தோன்றலிற் தோன்றாமை நன்று

என்கிற வள்ளுவர் வாக்கிற்கு மிகப்பொருத்தமாய்  நிறை வாழ்க்கை வாழ்ந்து முடித்த  ஒரு மாமனிதர் இன்று  (25/02/2026)  விடைபெற்றுக்கொண்டார். ஏழைப்பங்காளனாய்த் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த தகை சால் தமிழர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர்.

ஸ்ரீவைகுண்டத்தில் தோன்றி தனது வீரஞ்செறிந்த போராட்டாத்தால் தமிழகம் முழுதும் தடம் பதித்த தோழர். இந்தியப் பொதுவுடமை இயக்கத்தேரின் அச்சாணியாய் விளங்கிய செந்துண்டுக்காரர்.

தாய்நாட்டு விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுஞ்சிறையில் தனது பல்லாண்டு  இளமைக்காலத்தைக் கழித்தவர். தனது முறுக்கு மீசை வெள்ளையக் காவலர்களின் தீயால் சுடப்பட்டுச்  சாம்பலாகியது. மீசை இழந்த  மாவீரனாய் இத்தேசத்தை வலம் வந்தவர் நல்லகண்ணு.

விவசாயத்தொழிலாளர்களோடும் உழைக்கும் தொழிலாளர்களோடும்  வாழ்க்கை முழுதும் உழன்ற உத்தமர். எளிமையான தோற்றத்தை எப்போதும்  மேற்கொள்ளும் பெருமனதுக்காரர்.

பி எஸ் என் எல் தொழிலாளர்களின்  நலனிலும் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டிய பொதுவுடமையாளர். நமது கடலூர் தொலைத்தொடர்புப் பகுதியில் தனது தொண்டால் பொழுதளந்த உத்தமர் தோழர். டி. ரகுநாதன் அவர்களின் பணி ஓய்வுப்பெருவிழா தோழமைப்பெருவொளி. அரங்கில்   01.06.2002  அன்று  நடைபெற்றது.  ஈடு இணையற்ற அவ்விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்திய தோழமைக்கு இலக்கணம்  தோழர். நல்லகண்ணு.

சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் தோழர் . நல்லகண்ணு அவர்களுக்கு  எண்பது அகவை நிறைவு விழா நிகழ்விற்கு  கடலூர் தொலைத்தொடர்புப் பகுதியிலிருந்து பெருவாரியான  தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினோம். சீர்மிகு செவ்வரங்கில்  தோழர்களால்   தனக்கு வழங்கப்பட்ட ரூபாய் ஒரு கோடி நிதியை இந்தியப் பொதுவுடமைக்கட்சிக்குக் காணிக்கையாக்கிய பொதுவுடமைக்காரர்.

தமிழகத்தின் தென்பகுதியில் நடைபெற்ற மதக்கலவரங்களை  அடக்கி அமைதிப்படுத்தி மக்களின் மத நல்லிணக்கத்திற்கு ஒயாது சிந்தித்து ஈடு இணையற்ற தியாகங்களுக்குச் சொந்தக்காரர் தோழர் நல்லகண்னு.

தாமிரபரணி ஆற்று மணல் செல்வம்  கொள்ளைபோய் அப்பகுதி வளம்  குன்றும் நிலையைத் தடுக்க போராட்டக் களம் கண்ட மக்கள் தலைவர் நல்லகண்ணு.

தனது நூற்றாண்டு விழாவின் போது பொதுவுடமைக் கட்சிக்கும் நூறாண்டு விழாப் பெரு நிகழ்வு. ஸ்ரீவைகுண்டத்துப் பிறந்த மண்ணின் அரசு மருத்துவ மனையைத் தரம் உயர்த்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து அதனைப்பெற்றுத்தந்த ஏழைப்பங்காளர் நல்லகண்ணு.

இந்தியப் புராண இதிகாசங்களை தமிழ் நிலத்து இலக்கியச்செழுமைகளை தன் உள்ளத்தில் ஊற்றாய்க்காண்பவர். இந்தியப் பொதுவுடமை இயக்கத்துப் பொக்கிஷம் ஜீவா  பாலதண்டாயுதம் ஆகியோர் மீது பெருமதிப்பு கொண்டவர் நல்லகண்ணு.

தேசபிதா மகாத்மாவை புரட்சிக்கவி சுப்ரமணிய பாரதியை நெஞ்சில் வைத்துப்போற்றிய உத்தமர் தோழமைக்கு இலக்கணமாய்  வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்றப் பொதுவுடமையாளர் நல்லகண்ணு.

அவரோடு நாமும் இயக்கத்தில் இருந்தோம் அது நமக்கு வாழ்வில் பெருமை.

 அவர் காட்டிய பாதையில் என்றும் வீறு கொண்டு நடப்போம் என்பது நாம் அவருக்குச் செய்யும்  மெய்யான அஞ்சலி.

தோழர். நல்லகண்ணு  பெரும்புகழ்  நீடு  நிலவட்டும்.

 

 


Monday, February 23, 2026

பொய் -சிறுகதை

 

 

பொய்        

 

எனக்கு இன்று  சம்பள தினம் . அதுவும்  இது முதல்  சம்பளம். இந்த விஷயம் தருமங்குடி  கடகத்துப்பிள்ளைக்கு எப்படியோ தெரிந்துதான் இருக்கிறது.  பிள்ளை பிறந்த  ஊரின் பெயர் கடகம். அந்த ஊரிலிருந்து  தருமங்குடிக்கு அவர் மாப்பிள்ளையாய் வந்திருக்கிறார். வீட்டோடு மாப்பிள்ளை..  அவர்  பெண்  எடுத்த வீட்டில் ஆண் வாரிசு  யாரும் இல்லை. அப்படியும்  பிள்ளைக்கு  ஒரு  சவுகரியம்.

கடகத்துப்பிள்ளைக்கு அப்பா அம்மா வைத்த  ஒரு பெயர் இல்லாமலா, ராஜகோபால்தான் அந்தப் பெயர்.  ராஜகோபால்  என்று பெயரை வைத்து யாரும் அவரைக் கூப்பிடுவதில்லை.  அதனில்  மரியாதை சமாச்சாரமும்  இருக்கலாம்.  தருமங்குடியில் தபால் கொடுப்பவன் குள்ள வடிவேலு.  என் அண்ணனுக்கு வகுப்புத்தோழன். அவன் தான் பிள்ளையின் பெயரைச் சரியாய்   அறிந்து சொல்பவன்.  தருமங்குடிக்கு அருகில்  இருப்பது சேத்தியாத்தோப்பு  நகரம்.  அங்கிருக்கும் இந்தியன் வங்கியிலிருந்து   அவ்வப்போது  பிள்ளைக்குத் தபால் வரும். குறுவையோ  சம்பாவோ   சாகுபடி நெல் விற்று  வரும் பணத்தைக் கணிசமாய் எடுத்துப்போய்   பிள்ளை அந்த வங்கியில் வைப்புத்தொகை எனப் போட்டிருந்தார். பிள்ளையின் பெயரும் விலாசமும் அந்த வங்கி அனுப்பும் தபாலில்  பளிச்சென்று எழுதியிருப்பார்கள்.

 எனக்கு முதுகுன்றத்தில்  தொலைபேசி அலுவலகத்தில் வேலை.  இந்திய  அஞ்சல் இலாகாவில் டெலிகிராஃப் என்பது ஓர் அங்கம். அதனில் டெலிபோன் ஆப்ரேட்டராக நான்  வேலையில் சேர்ந்தேன்.  ஒரு மாதம் முடிந்தது எனக்குச்  சம்பளம் வந்திருக்கிறது. அது பெரிய தொகை. முந்நூறு ரூபாய்.  அப்போது ஒரு பவுன் தங்கமும் முதுகுன்றம்  பஜார் வீதி பழனிசாமிக்கவுண்டர் கடையில்  அதே விலைதான். சாக் பீசால் பவுன் விலையைக்  கடை வாசலில்  சிலேட்டுப்பலகையில் அன்றன்று கவுண்டர்  எழுதிப்போட்டுவிடுவார். நான் அதனை அடிக்கடிப் பார்த்துக்கொள்வேன்.

எங்களுக்குச் சம்பளம் போடும் அலுவலகம் கடலூரிலிருந்தது.  அங்கிருந்து மாவட்டம் முழுவதற்கும்  மாத  சம்பளத்தை மணி ஆர்டர் வழி  அனுப்பி வைப்பார்கள். வெளியூர் போகும் எந்தத் தபாலுக்கும்  எங்கள் அலுவலகத்தில் ஸ்டாம்பு ஒட்டமாட்டார்கள்.  உறைமீது  ஆன்  பி அண்ட்  டி  சர்வீஸ் என ரப்பர் ஸ்டாம்பு குத்திவிடுவார்கள். அஞ்சல் அலுவலகத்துக்காரர்களும் அவர்களின்   டெலிபோன்  பில்லுக்குப் பணம் ஏதும் கட்டமாட்டார்கள். இரண்டு  துறையும் ஒன்றாய்த்தானே குடும்பம் செய்தது. அத்யாவசிய சேவைகளில் தனியார்கள் நுழைவு என்பது  தடுக்கப்பட்டிருந்த  ஒரு  பொற்காலம்.

  விபூதிப்பட்டையை நெற்றியில் குழைத்துப்போட்டுக்கொண்டு வரும் தனபால்  போஸ்ட்மேனுக்கு   சம்பள தினத்தன்று பெரிய மரியாதை .டெலிபோன் ஊழியர்களுக்குக் கடன் கொடுத்த லேவாதேவிக்காரர்கள்  வீட்டுக்குப் பால் ஊற்றிய பால் வண்டிக்காரர்கள்,மாதாந்திர ஏலச் சீட்டுப்பிடிப்பவர்கள்,  குடிகார  டெலிபோன் ஊழியர்களின் மனைவி மார்கள்  அவர் பெற்ற பிள்ளைகள் அவர்களின் அம்மாக்காள் அக்கா தங்கைகள் எல்லோரும் ஆபிஸ் இரும்புக்கேட்டிலியே வரிசையாக நின்று தவம் கிடப்பார்கள். சமயத்தில்  சிறு  சண்டையும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் கன்னா பின்னாவென்று   அவர்களுக்குள் அரங்கேறும்.

 ஒரு காலத்தில் ஓகோ என்றிருந்த  ஏக போகத் தென்னாற்காடு ஜில்லாவைத்தான் இன்று  கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி என்று மூன்று மாவட்டங்களாக ஆக்கியிருக்கிறார்கள். நிறைவாகவே வளர்ச்சி.  தருமங்குடி கடகத்துப்பிள்ளையிடம்  ஒரு  முந்நூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். அது எதற்கு என்பதையும் சொல்லி விடுகிறேன். அப்பாவுக்கு  மணி விழா என்கிற அறுபது ஆண்டு நிறைவு  வந்தது. அதன் செலவுக்கு வேண்டித்தான் அந்தக் கடனும் முளைத்தது.

அப்பாவின்  மணி விழாவுக்கு  ஒரு மாதம்  முன்பாகத்தான் அம்மாவுக்கு நல்லப் பாம்பு  கடித்து விட்டது.   தருமங்குடி வீட்டில் இரவு நாங்கள் கூடத்திலும் தாழ்வாரத்திலும் கோரைப் பாய் போட்டு உறங்குவோம்.  ஒரு நாள் இரவு  ஓட்டின் கீழ் இருக்கும் பனை வாரையிலிருந்து அம்மா மீது அந்தப் பாம்பு விழுந்தது. அது  அம்மாவைக் கடித்தும் விட்டது. இரவு பதினோறு மணி இருக்கும்.   பாம்புக்கடிக்கு  பச்சிலை வைத்திம். சேத்தியாத்தோப்பு  அருகே இருக்கும் பாழும் வாய்க்கால் கிராமத்திற்கு  அம்மாவை முதல்முதலாய் சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப்போனோம். தருமங்குடியில்  ஒரு டெலிபோன் வசதியும் கிடையாது.  பாம்புக்கடி வைத்யரிடம் விஷ முறிவுக்குப்பச்சிலை வாங்கி வந்தோம். அம்மா வீட்டுக்கு வந்தாள். அம்மாவுக்கு  மயக்கம்  இன்னும் கூடித்தான் போயிற்று. விடியற்காலை முதல் பஸ்ஸில்   அம்மாவுடன்  சிதம்பரம்  நகருக்கு  விரைந்தோம். தனியார் மருத்துவ மனையில்  அம்மாவைச் சேர்த்து  இரண்டு நாள் ஆனது. வயிறு வீங்கிப்போனது. மூச்சு விடத்திணறினாள்.   பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக்  கார் வைத்து அழைத்துப்போனோம். மொத்தமும் கடன் வாங்கித்தான்.  ஜனங்கள் செலவுக்குக் கடன் கொடுத்தார்கள். அதனைச்சொல்லவேண்டும். கையில்  காசிருந்தாலும் பெரிய  மனம் வாய்க்க வேண்டுமே.  அது வாய்த்தது. அம்மா பிழைத்து  வீட்டுக்கு வந்தாள்.

எங்கள் பெரிய அக்காவின் கணவர்  எங்கள் அப்பாவுக்கு  மனிவிழாவை  சிம்பிளாகவாவது செய்தே ஆகஎண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். அவரிடமும் காசு பணம் அதிகமில்லை.  எப்பவும் கஷ்ட ஜீவனம். உன்னைப்பிடி என்னைப்பிடிதான்.  காவேரி பாயும் தஞ்சை ஜில்லாவில் ஒரு பண்ணையாரிடம் கார்வாரியாக உத்யோகம்.குடியிருக்க வீடு தோட்டம்  தென்னை மாவோடு பெரிதாக இருக்கும். கெட்டா கெட்டியான ஆட்களே   அவ்வீட்டைக் கூட்டிப் பெருக்கத் திணறிப்போவார்கள்.  பச்சை அரிசி எப்போதும்  கிடைத்து விடும்.யாரும்  பட்டினியாய்க் கிடக்க வேண்டாம். அவ்வளவுதான். அப்பாவின் அறுபது கல்யாணத்திற்கு  இந்தக் கடகத்துப் பிள்ளையிடம்தான் முந்நூறு ரூபாய் கடன் வாங்கினது.  கடன் கேட்க நானேதான்  பிள்ளை வீட்டுக்குப்போய் இருந்தேன்.

‘இப்ப  இந்த அறுவது கல்யாணம் அவசியமா. எனக்கும் தான் அறுவது வந்துது. நானும் ஆச்சியும் திருக்கடையூர் பஸ் பிடித்துப்  போனோம். காதும் காதும் வச்சமாதிரி சுப காரியத்த முடிச்சிகிட்டு வூட்டுக்கு  வந்தம்.ஒரு பாயசம் வச்சம்  வாழ எல போட்டு சாப்டம்.  பெரிய செலவு எதுவும் இல்ல. ஆனா கடன் வாங்கியாவது  இப்ப இந்த மணிவிழாவை செஞ்சிகிணுமா’

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. மூன்று வட்டிக்குத் தான் பிள்ளை எனக்குக் கடன் தந்தார். வாங்கிய  கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விடுவேன் உறுதியாகப் பதில் சொன்னேன். சம்பாத்தியம் வேண்டுமே.  அங்கு சுற்றி இங்கு சுற்றி  ஏன் இந்த  உலகமே சுற்றினேன். ஒரு நல்ல வேலை இப்போதுதான் கிடைத்தது. அதுவும்  எனக்கு இது முதல் மாத சம்பளம்.  இன்றுதான் கையில் வாங்கினேன். தருமங்குடியிலிருந்து தினம்  தினம் பேருந்து பிடித்து அலுவலகம் சென்று திரும்புவேன். சிதம்பரத்திலிருந்து முதுகுன்றம்  செல்லும் பேருந்துகள் எல்லாமே  தருமங்குடி வழியாகத்தான் செல்லும். அரை ரூபாயுக்கு முதுகுன்றமும் முக்கால் ரூபாயுக்கு சிதம்பரமும்  அன்று பேருந்துக்கட்டணம். சிதம்பரம் செல்லும் பேருந்தைப்பிடித்துத்  தருமங்குடியில் இறங்கினேன். பேருந்து நிறுத்தத்தில் ஒரு சிமெண்ட் கட்டை போட்டிருந்தார்கள். சாலைக்கு அடியே ஒரு கன்னி வாய்க்கால் சல சலத்துத் தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. அருகில் இருக்கும்  அகண்ட ஆராபுரி ஏரிக்கு எத்தனையோ செல்லப்பிள்ளைகள். அதனில் இந்தக் கன்னி வாய்க்காலும்தான்.

‘வாங்க சின்ன அய்யா’ யார் அது நோக்கினேன்.

கடகத்துப்பிள்ளைதான் ஆரம்பித்தார்.

‘நமஸ்காரம் பிள்ளை. எங்க இவ்வளவு தூரம். எங்கயாவது வெளியூர் பயணமா’

‘ஒன்னும் இல்லே. சின்ன அய்யாவ பாக்குலாம்னு வந்தேன்’

‘நாந்தான் வீட்டுக்கு வந்துடுவேன். பஸ் ஸ்டாப்பிங்குக்கே நீங்க  வந்துட்டிங்களே புள்ள’

‘வாங்க அய்யா  நடந்துகிட்டே பேசுலாம்’

இருவரும் செம்மண்சாலையில் பேசிக்கொண்டே  நடந்தோம்.

‘இன்னிக்கு அய்யாவுக்கு சம்பளம் போடுறாங்களா’

‘ஆமாங்க புள்ள’ இவருக்கு எப்படிஇவ்விஷயம் தெரிந்திருக்கிறது யோசித்துக் கோண்டேன்.

‘எனக்கு எப்பிடி தெரியும்னுதான  யோசன. அதான’ பவ்யமாய்க்கேட்டார்.

நான் சிரித்துக்கொண்டேன் சற்று  மழுப்பினேன்.

‘உங்க வூட்டுக்கு  அடுத்த வூடு  தருமைநாதன் கோவில்ல மணி அடிக்கிற    சாமா குருக்களையா வூடு. அந்த வூட்டுத்திண்ணையில  ஒரு பெரிய மனுசன் ஒக்காந்துகிட்டு இருந்தாரு. வீட்டு உள்ளேந்து குருக்களய்யாவும் வந்து அவரோட சகசமா பேசிகிட்டு இருந்தாரு. நா பக்கத்துல உங்க வூட்டு சிமிட்டுத் திண்ணையில கண்ண மூடிகிட்டு படுத்து கெடந்தன். அவுங்க பேசிகிட்டது  இதுதான். அந்த பெரிய மனுசன் ஊரு முதுகுன்றம்.  அங்க  பசார் வீதியில ஒரு ஹோட்டல் வச்சிருக்காரு. பேரு ராசேந்திரா ஓட்டலாம். உங்களுக்கும் தெரிஞ்சிமிருக்கலாம்’

‘ராசேந்திரா புலால் உணவு விடுதின்னு அதுக்கு  பேரு’ என்றேன்.

‘ மிலிட்டரி ஓட்டலா. அதேதான். அந்த ஓனருதான்  வந்தவரு. அவுருக்கு முந்நூறு ரூபா கடன் வேணும்னுட்டு குருக்களய்யிருகிட்ட சொல்ல. அந்த  குருக்களய்யரு உங்க பேர சொல்லி,  முதுகுன்றம் டெலிபோன்ல வேல பாக்குற சேதியவும் சொல்லியிருக்காரு  உங்களுக்கு இன்னிக்கி சம்பளம் வருதுன்னு அவுருக்கு சேதி ஆப்ட்ருக்கு. அவரு கெளம்பி குருக்களய்யாவ தேடி  அவரு வூட்டுக்கே வந்துட்டாரு. அவுருக்கு முந்நூறு ரூவா  கடனா வேணும். அதான் வெஷயம். உங்க கிட்டதான்  ஆ அவுங்க ரெண்டு பேரும்  கடன் கேக்கறதா  குந்திருக்காங்க. நீங்க எப்ப வருவீங்கன்னு காத்துகிட்டும்  இருக்காங்க’

‘இவ்வளவு சேதி இருக்கா புள்ள’

‘ஆமாம். அத சொல்லதான் நா வந்தன். எனக்கும் அய்யா அறுவது கல்யாண விசேஷத்துக்கு  கடனா வாங்குன மிந்நூறு  அசலும் வட்டியுமா  நிக்குது. அத  யாபகப் படுத்தறேன்’ சொல்லிமுடித்தார்.

‘ஆமாம் புள்ள .’  கடகத்துப்பிள்ளை பொய் புரட்டு சொல்லமாட்டார். கொஞ்சம் கறார் பேர் வழி அவ்வளவே.

‘ஏப்பிடியும் உங்க கடன குடுத்துடவேண்டியதுதான். மொத சம்பளமாச்சேன்னு பாக்குறன். அப்பா அம்மாகிட்ட காட்டி ஆசீர்வாதம் வாங்கிகிட்டு அப்பறமா  வேற  வேலய  பாக்குலம்னு யோசன’

தருமங்குடி சுடுகாடு தாண்டி பட்டினத்தான் வாய்க்கால் சிமெண்ட்  மதகு வந்தது. வாய்க்காலில் தண்ணீர் செம்பட்டையாய்  கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

‘வூட்டுக்குப் போனா அவுங்க கிட்ட   சரியா மாட்டிகுவிங்க அது நிச்சயம்’

‘அப்பிடியா சொல்றிங்க புள்ள’

‘நா சொல்லவேண்டியத சொல்லிபுட்டேன்.  அய்யா அப்பறம் ஒங்க ரோசனை’

நான் பேண்ட் பாக்கெட்டில் இருந்து முந்நூறு ரூபாயை எடுத்தேன்.  ஒரு முறை எண்ணினேன். பிள்ளையிடம் கொடுத்தேன்.

பிள்ளை அதை வாங்கி அவரும்  எண்ணிக்கொண்டார். பிள்ளையின் முகம் மலர்ந்த மாதிரிக்குத் தெரிந்தது. பணம் ஒரு போதைதான்.

‘நானும்  எதிர் பாக்குல’ என்றார்.

‘இருக்கட்டும் புள்ள. எங்க அவசரத்துக்கு  அன்னிக்கி பணம் குடுத்து  ஒதவினீங்க. அது பெரிசு’

ஒரு ஐம்பது ரூபாய் மட்டுமே இன்னும் சம்பளப் பணத்தில் பாக்கியிருந்தது. அதனை எடுத்து பார்த்துக்கொண்டேன்.

‘அது என்னா’

‘சம்பள பணத்துல  ஐம்பது பாக்கி இருக்கு. அம்மா அப்பா கிட்ட குடுத்துக் கும்பிட்டுக்குவன்’

‘ அய்யா அது கரெக்ட’ என்றார் பிள்ளை.

‘நா  பஸ் ஸ்டாப்பிங்குக்கு க்கு வந்தது. உங்க கிட்ட இந்த  சேதி சொன்னது யாருக்கும் தெரிய வேணாம். தெரிஞ்சா  வம்பு’ எச்சரிக்கை செய்தார் பிள்ளை. மேலத்தெரு  நாகமணிந்த விநாயகர் கோவிலுக்கு வந்து பிள்ளையாரைப் பார்த்தேன்.  வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக்கொண்டேன். கடகத்துப் பிள்ளை வெள்ளாழத்தெருவுக்குப் போய்விட்டார்.

நான் என்  வீடு நோக்கி  நடந்து கொண்டு இருந்தேன்.

‘ஏய் இவனே ஒங்கிட்ட ஒரு சேதி’ என்றார் குருக்கள் மாமா. வழக்கமாய் என்னை ‘இவனே’ என்றுதான் அழைப்பார்.

‘ஆத்துக்கு போய்ட்டு வந்துடறேனே மாமா’

‘அதுக்கு முந்திதாண்டா  உன் கிட்ட பேசணும்.’

‘சரி சொல்லுங்க மாமா’ அப்படியே  என் வீட்டு ஆளோடியில்  நின்றேன்.

‘தோ திண்ணையில உக்காந்துண்டு இருக்காறே அவர் முதுகுன்றத்துல பஜார்ல . ஓட்டல் வச்சிண்டு இருக்கார். பேரு ராஜந்திரன். எனக்கு  ரொம்ப நாளா சினேகம். அவருக்கு ரூவா முந்நூறு  கைமாத்தா வேணும் ரொம்பவும் அர்ஜெண்டுங்கறார். நான் தான் அவர வரச்சொல்லியிருந்தேன்.  அதுவும் உன்ன நம்பிதான். சம்பளம் உனக்கு இன்னிக்கின்னு  அவர்தான் சொன்னார்.  நா ஒனக்கு பக்கத்து ஆம்.  துரோகம் எதுவும் பண்ணிடமாட்டேன். ஒரு முந்நூறு ரூவா இப்பிடி குடு. டாண் அடுத்த மாசம் திருப்பி குடுத்துடுவார். நா ஒனக்கு  முழுசா கேரண்டி  சித்த நீதான் எனக்கு  தயவு பண்ணணும்  கொழந்தே’ சன்னக் குரலில் பேசினார்.

‘மாமா நா சொல்றத கேளுங்கோ. எனக்கு சம்பளம் இன்னிக்கி வரல.  இது மொத மாச சம்பளம். கடலூர் ஹெட் ஆபிசிலேந்து  சம்பள மணிஆர்டர் போடறவா. என் பேர  எழுதி , முதுகுன்றம்னு ஊர் பேர போடாம திருக்கோவிலூர்னு தப்பா போட்டுட்டா. அது திருக்கோவிலூர்க்கு போயிட்டுது. அது திரும்பி முதுகுன்றத்துக்கு வரணும். கடலூர்  ஆபிஸ் போயிட்டுதான்  வருமாம். வந்துடும்.  இப்ப  என் கைல காசு எதுவும் இல்ல  மாமா.’ எப்படியோ  நான் இதனைச் சொல்லிவிட்டேன்.’ எனக்குக்கூட இப்படி எல்லாம்  பொய்பேசத்தெரியுமா என்ன மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். 

‘என்னடா கல்ல தூக்கி தலையில போடற’

‘இதுதான் மாமா உண்மை.’‘ பொய்தான் சொன்னேன்.

முதுகுன்றம் ஓட்டல்காரர் திண்ணையிலிருந்து  வேகமாய் எழுந்து  நாங்கள் நிற்குமிடம் வந்தார். ‘ நீங்க பேசுனது எல்லாம்  என் காதுல கேட்டுது.’

குருக்கள் மாமா  அவரிடம் கையை விரித்தார். உதட்டைப்பிதுக்கினார்.  நான் என்ன  சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.

‘தனபாலு போஸ்ட்மேன் என் கஸ்டமரு. என் ஓட்டல்ல வாடிக்கையா சாப்ட  வர்ரவரு.  ஒங்களுக்கு சம்பளம் வந்துருக்குன்னு அவுரு சொன்னாரே. அப்பறம்தானே நானே கெளம்புனேன்.’ முணுமுணுதார்  ஆகாயம் பார்த்தார் ஓட்டல்காரர்.

‘அப்ப நா  பொய்யி சொல்லுறனா’   குரல் உயர்த்தினேன். குருக்கள் மாமா திரு திரு என்று விழித்தார். பதனமாக   நகர்ந்து கொண்டார்.

அந்த நேரம் பார்த்து  என் அப்பா சைக்கிளில் வந்திறங்கினார்.’ நா கத்தாழ கிராமம் ஒரு காரியமா  போயிட்டு வர்ரேன். வெள்ளாழத்தெருவழியா வந்தேன். கடகத்து புள்ள  என்ன நிப்பாட்டுனாரு.  நா எழுதிக்குடுத்த முந்நூறு ரூபா ப்ராமிசரி நோட்ட என்னண்ட  திருப்பிக்குடுத்து வீட்டுக்கு எடுத்துட்டு போங்க. எனக்கு பூரா  பணமும் வந்து போச்சி. சின்னய்யா குடுத்துட்டாரு.  வட்டி  கிட்டி எதுவும் வேண்டாம்னு சொன்னாரு.ரெவின்யூ ஸ்டாம்பு கிழிச்ச  அந்த  முந்நூறு ரூபாய் ப்ராமிசரி நோட்டு தோ பாருடா’.

 குருக்களய்யா ‘நாம ரெண்டுபேரும் பேசிகிட்டு இருந்தப்ப இந்த சிமெண்ட் கட்டத்திண்ணையில ஒரு ஆசாமி கால நீட்டிகிட்டு இருந்துதே அது யாரு’

‘கடகத்து புள்ள. அவுரே தான்’

’ நாம என்ன பேசிக்கறம்னு  கேட்டு இருக்காரு. உடனே கிளம்பி போயி  தம்பிய ரோட்டுலயே அச மடக்கி. இந்த நல்ல காரியத்த பாத்துருக்காரு’ என்றார் ஓட்டல்காரர்.

குருக்களும் ஓட்டல் உரிமையாளரும் என்னைத்திட்டிக்கொண்டே  போனார்கள். ‘  ஒரு மூணு காசி மொத மொத சம்பாரிக்கறான்.  ரவ பய.  அவனுக்கு  இம்மாம் கிருது ஆவாது’

‘ஆமாங்கறன்’ என்றார்  சாமா குருக்கள்.   என் அம்மா வீட்டின் உள்ளிருந்து  அங்கு வருவதைப்பார்த்து அந்த இருவரும்  இன்னும் வேக வேகமாய் நகர்ந்து போனார்கள்.

----------------------------------------------------------------------

 

Friday, January 9, 2026

எஸ்ஸார்சியின் படைப்புகள் - 2025 வரை

 

எழுத்தாளர்  எஸ்ஸார்சியின் படைப்புகள்         (  1995- 2025 வரையிலானது)

 

புதினம்

1 மண்ணுக்குள் உயிர்ப்பு   (   எழுத்தாளர்  ராஜம் கிருஷ்ணனால் கணையாழியில் பாராட்டப்பட்ட நூல்)

2  கனவு மெய்ப்படும் ( திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எட்டையபுரம் பாரதி விழா என் சி பி ஹெச்  கலை இலக்கியப்பெருமன்றம் இணைந்து நடத்தும் ஸ்டேட் வங்கி  விருது)

3 நெருப்புக்கு ஏது உறக்கம் ( தமிழக அரசின் சிறந்த நாவல் விருது, சேலம் தாரையார் விருது)

4 சென்னையில் வெள்ளம் ( 2015 சென்னை வெள்ளம் பற்றியது)

5 எதிர்வு  ( திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் முறையே பி லிட் இளங்கலை ப்பாடம்)

6 உளமுற்ற தீ

7 ஆயிரம் இடர் வரினும்      ( கம்பம் பாரதி இலக்கியப்பேரவை விருது)

8 சிகா                        ( கம்பம் பாரதி இலக்கிய பேரவை,  நல்லாசிரியர் கோதண்டராமன் நினைவு விருது)

 

சிறுகதைத்தொகுப்புகள்

1 மறுபக்கம்

2 செய்தவம்

3 உரைகல்

4 பட்டறிவு

5 பிரம்ம லிபி

6 சொல்லில் நிரம்பும் குளம்

7 யாதுமாகி (  ஏனாத்தூர் சந்திர்சேகரேந்திர சரசுவதி பல்கலைக்கழக இளங்கலை துணைப்பாட நூல்)

8 இன்னும் ஓர் அம்மா ( கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது,, சிகரம் விருது )

9 அம்மா எனும் மனுஷி

10  ஞானவாபி

11தேசம்

12  நாய்வால்

 

 கவிதைத் தொகுப்புகள்

1 ரணம் சுமந்து

2 ஞானத்தீ

3 வேதவனம்  

4 பெண்ணே நீ

5 இங்கும் அங்கும்

6 லேசுபட்டதில்லை மனசு

 

கட்டுரைகள்

1 சில ஆய்வுகள் மதிப்புரைகள் விமர்சனங்கள்

2 பாரதம் போற்றும் பைந்தமிழ்ப் புலவர்கள் ( கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது)

3  சொற்கூடல்

4 படித்தலும் படைத்தலும்

5 சிந்தனை விழுதுகள்    (  மைசூர் மத்திய பல்கலைக்கழகம் நூலகத்தேர்வு)

6 எழுத்துலகில் பாவண்ணன்

7  ஆளுமை  இடம் இலக்கியம்

 

மொழிபெயர்ப்புகள்

1 ஆன்ம தரிசனம்   ( தமிழக்ல அரசின் மொழி பெயர்ப்பு உதவி பெற்ற நூல்)

2 பட்நாகர் கவிதைகள்

3 உலகச்சிறுகதைகள்

 ஆங்கில நூல்கள்

1        ரெயின் போ  ( கவிதை)

2        பேகன் அன் திருவள்ளுவர் ( ஒப்பாய்வு) ( எம் ஃபில் ஆய்வேடு)