Tuesday, October 31, 2023

கவிதை -தேவர்மகான்

 


 கவிதை- தேவர் மகான்


சாதிமதம் கடந்த மகான்

தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்

தெய்வீகத்தையும் தேசத்தையும்

தன்னிருகண்களாகக் கொண்டாடிய

ஆழம் கூடிய  அற்புதம்

உணவால் சைவத்துக்கு மாறிய

அகவினத்தார்

வள்ளல் இராமலிங்கரை

ஆராதித்த  பெருமகன்

நேதாஜிக்குத் தமிழ் மண்ணில்

வீரர்களைத்திரட்டிய

தேசபக்தர்

மதுரை மீனாட்சி ஆலயத்தில்

அரிசனங்கள் பிரவேசிக்க 

முன்  கை எடுத்த

வைத்யநாதாய்யருக்கு  அரண்

தேசப்பிரிவினையின் போது

தமிழக இசுலாமியர்

நம்மோடு இருப்பர்

உரக்கக்குரல் கொடுத்த  நேர்மையாளர்

மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட

இந்தியப்பாராளுமன்ற உறுப்பினர்

நம்ப முடிகிறதா  உங்களால்.

தேவருக்குச்சரியானதொரு

அரசியல் வாரிசுக்கு

எத்தனைக் காலமாய்த்

தவம் கிடக்கிறது தமிழகம்.

-----------------------------------------------------------------------------------------------



Monday, October 30, 2023

கவிதை -எதிர் வீடு

 


 கவிதை -எதிர் வீடு  


எதிர் வீடு 

பூட்டிக்கிடந்தது

வாடகைக்கு யாரும் வரவில்லை

நாய்களும் பூனைகளும்

இணங்கிப்பிணங்கி உறங்கின

நேற்று எதுவோ ஒரு குடும்பம்

லாரிச்சாமான்களோடு

அந்த வீட்டிற்குள் புகுந்தது

வீட்டு ஓனருக்கும் நிம்மதி

மழைச்சற்றுக்கூடுதல் ஆனால்

வீதித்தண்ணீர் உள்ளே வரும்

நமக்கேன் பொல்லாப்பு

நான் ஒன்றும் சொல்லவில்லை

வாடகைக்கு வீடென்று

ஊரெல்லாம் சுற்றி

கடைசியாய்க்கிடைத்த வீடு

போதுமென அவர்கள் வருகை

நாய்களும் பூனைகளும்

நடுத்தெருவில் சீற்றத்துடன்

அழவும் செய்தன

அறிவுஜீவிப் பாம்பொன்று

அழைத்தது அவைகளை

அமைதியாய்ச்சொன்னது

‘சும்மா கிடக்காது

கட்டிய வீடு

மனிதர்கள் குடி புக வேண்டும்

மனிதர் வர மாடு வரும் ஆடு வரும்

அரிசி வரும் பருப்பு வரும்

எலிகள் வரும் பூனைக்காகும்

கழிவு நீர் தேங்கும் தவளை வரும்

பாம்புக்காகும்

சோறு மீதப்படும் உணவாகும் நாயிக்கே

சூழல் நின்னை ஆள்வதா

சூழலை நீ ஆள்வதா

உபதேசித்த பாம்பு நழுவிப்போயிற்று புற்றுக்குள்

நாய்களும் பூனைகளும்

பிரமித்துப்போய்.

ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன

                                                                   

Saturday, October 28, 2023

கவிதை- இணையக்கால கவிதை

 

இணையக்காலகவிதை                               28/10/2023


எத்தனை சவுகரியம்

இணையக்கால கவியரங்கம்

சீவி சிங்காரித்துக்

கொள்ளவேண்டாம்

அழுக்குச்சட்டையை மாற்ற வேண்டாம்

சுவாமிக்கு உண்டியலில்

போடுகிற மாதிரி

விருட்சம் உண்டியலில்

போட்டுவிட்டுப்போகலாம

எல்லார்  கவிதையையும்

கேட்க வாய்ப்பு

கவிதை விமரிசனங்கள்

ஏனோ தானோ என்றில்லை

நச்சென்றுதான்

காற்றோடு போய்விடுமோ

நாம் வாசித்த கவிதை

என்ற கவலை மட்டுமேயுண்டு.



Friday, October 27, 2023

 

கவிதை- துப்பாக்கி                           இணையக்கால கவியரங்கு  28/10/23


வெள்ளையோ கருப்போ மாநிறமோ

அமெரிக்காவில் அன்றாடம்

நூற்றி இருபது பேருக்குமேல்

துப்பாக்கியால் சுடப்பட்டு

செத்துப்போகிறார்கள்

அவர்கள் அரசாங்கம் தரும் கணக்கு

உப்பு புளி மிளகாய்போல்

துப்பாக்கியை வாங்கலாம் அமெரிக்காவில்

துப்பாக்கிக்குத்தடை விதித்தாலென்ன

கேட்கிறாய் நீ

அதெப்படி சாத்தியம்

துப்பாகித்தயாரிக்கும் முதலாளிதானே

அமெரிக்க நாடாளுமன்றத்தின்

தூணும் அஸ்திவாரமும்.

 


Thursday, October 26, 2023

கவிதை- அறம்செயவிரும்பு

 


கவிதை- அறம் செய விரும்பு     ( இணையக்கால கவியரங்கு  26/10/23)


அனாதை இல்லம்

நிச்சயம் உதவி 

செய்யவேண்டும்

என்று போனால்

அப்படி ஒன்றும் உங்களை

வா வா என்றழைத்து

நாற்காலி போடமாட்டார்கள்

கொடுங்கள் வாங்கிக்கொள்கிறோம்

என்கிறார்கள் வேண்டா வெறுப்பாய்

அதற்குமேல் ஒன்றுமில்லை

கொடுத்த தொகைக்குச்

சரியான ரசீது பெறுவதற்குள்

போதும் போதும் என்றாகிறது

தருமம் செய்வது ஒன்றும் எளிதன்று

நாம் நினைப்பது போல்

இல்லாத பத்து பேருக்கு

சோறு பிசைந்து போட்டாலும்

அரசாங்கத்துக்குப்

பதில் சொல்லியாகணும்

ஏன் எதற்கு எப்படி எங்கே என்று

அடுக்கடுக்காய் வினா வுண்டு

அவ்வைப்பாட்டி  சொன்னது முற்றிலும் சரி

அறம் செய விரும்பு.





Wednesday, October 25, 2023

இணையக்கால கவியரங்கக் கவிதைகள் சில

 


 கவிதை -சிறைக்கைதிகள் 18/10/2023 இணையகாலக்கவியரங்கில் வாசித்தது.


சிறையில் இருப்பவர்கள் 

எல்லோருமா குற்றவாளிகள்

இல்லவே இல்லை

சிறைவாசிகளில் பாதிக்குமேல்

விசாரணைக்கைதிகள்

விசாரணை முடிவதற்குள்

பாதிவாழ்க்கைப் பைசலாகிவிடும்

கருப்புத்துணியால் கண்களைக்கட்டியபடியே

நீதிக்கடவுள்

கொலையே செய்யாதவனைக்

கொலையாளி ஆக்கலாம்

ஆயுள் கைதியாகி

வாலும் தோலுமாய் அவன்  வெளிவரலாம் ஓர்நாள்

ராக்கெட் விஞ்ஞானி

நம்பி நாராயணனை

பாகிஸ்தானுக்கு உளவாளியென

கேவலப்படுத்தியக் கீழ்மைக்கு

கங்கையில் மூழ்கிட்டாலும்

பாவம் தொலையுமா?

----------------------------


பொது நியாயம்                                19/10/23  இணையக்கால கவியரங்கு.


யாரேனும் ஒரு கன்னத்தில் அறைந்தால்

நீ மறு கன்னத்தையும் காட்டு

சொல்லிவிட்டுச் சிலுவைக்குச்

சென்றார் இயேசு

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்

வருந்தினார் அருளாளர் இராமலிங்கர்

வள்ளலுக்குப்பின்னர்

வாடிய பயிருக்கு

யாரேனும் வாடினாரா என்ன

காவிரியில் தண்ணீர் விடாதே

அதற்கு ஒரு பந்த் கரந்நடகாவில்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடு

அதற்குக்கடை அடைப்பு தமிழ் மண்ணில்

உச்சநீதிமன்றம் உண்டு

காவிரி நீர் ஒழுங்காற்றுக்கமிட்டி உண்டு

எல்லாம்தான் உண்டு

யார் சொல்வதையும் யாரும் கேட்பதில்லை

பொதுவாய் நியாயம் சொல்ல ஆளும் இல்லை

கேட்க இங்கு மனிதர்களும் இல்லை..

----------------------


கல்விக்கூடம்                                                    இணைக்கவியரங்கு  20/10/23


எந்தக்கல்விகூடமும்

மாணவர்கள் பெற்றிட்ட

மதிப்பெண்ணையும் ராங்கையும்

பற்றித்தான் விளம்பரம் செய்கின்றன

நல்ல மாணாக்கர்களை

உயரிய சமூகத்தைப் படைப்பதில்

கல்விக்கூடங்கள் தம் பங்கு பற்றி

வாய் திறப்பதே இல்லை.

நோட்டுப்புத்தகம் ஆய்வகம் கணினி

யூனிஃபார்ம் கேண்டின் ஆஸ்டல் பேருந்து வசதியென

எல்லாவழியிலும் கொட்டுகிறது பணம்

பணிக்கு வரும் ஆசிரியர்களைச்சுரண்டி

பெற்றோர்களைக் கொள்ளையாய்ச் சுரண்டி

கொழுக்கின்றது கல்வி  வணிகம்

உயர்கல்வி நிறுவனங்களின்

எண்ணிக்கை அதிகம் தமிழ் மண்ணில்

அள்ளிக்கொள்ளலாம் பணம்

கல்வி ஒரு தொழில்

கலைமகளோ கார்ப்பரேட்கள்  முன்

கைகட்டி வாய் பொத்தி.

----------------------


மனிதன் அப்படித்தான்                                இணையக்கால கவியரங்கு   21/10/23


லஞ்சம் அழகு தமிழில் கையூட்டு

மறைவதே இல்லை அது

எத்தனை பேர் பிடிபட்டால் என்ன

வாழ்க்கையே மொத்தமாய்

பூச்சியமானால் என்ன

லஞ்சம் எங்கும் என்றும்

சிரஞ்சீவிதான்

அறிவீரோ லஞ்ச ஒழிப்புத்துறை

எது வந்தால் என்ன

நீதிமன்றங்கள் ஆயிரம் குட்டினால் என்ன

நீதிபதிகளே பதவி ஓய்வுக்குப்பின்னே

நியமன நாடாளுமன்ற உறுப்பினராம்

எத்தனை அவலம்

பிறப்பும் இறப்பும்

மனிதன் கையில் இல்லை

லஞ்சம் அங்கு மட்டுமே

கதவு தட்டுவதில்லை.

---------------------------------------------












 



 கவிதை- பட்டாசு வெடிக்காதீர்       (25/10/2023)  இணையக்கால கவியரங்கு


பட்டாசு வெடிக்காதீர்

சின்னச்சின்ன மத்தாப்புக்கள் போதும்

கேள்விப்படும்

பட்டாசு ஆலைச் சாவுகள்

எத்தனைக்கோரம்

இதயம் பிழியும் சோகமோ 

தொடர்கதையாய்.

வயிற்றுப்பசிக்குச்சோறு வேண்டுமென

ஆலைக்கு வந்த

சின்னஞ்சிறுசுகள்

சிதறுண்டு போகின்றன

வெடித்தல் கிளப்பும்

காற்று மாசு அறிவோமா

சர வெடியின் ஒலிக்கொடூரம்

உடல் நலிந்தோறும் சின்னஞ்சிறு குழவிகளும்

படும் துயரம் உணரோமா

இப்படியும் வேண்டுமா

நமக்குத்தப்பான மகிழ்ச்சி

மனசாட்சி உள்ளவர்கள்

மறுபடியும் யோசியுங்கள்

பட்டாசு வாங்காதீர்.