Sunday, April 25, 2021

சி.மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’

 சி.மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தேன்’ இலங்கை பேரினவாதத்தின் முடிச்சவிழ்ப்பு.


தீக்குள் விரலை வைத்தேன் படித்து ஆராயலாம். ஏன் பதறிபோகலாம்.கண்கள் நிறைத்துக்கொண்டு சினம் கொப்பளிக்கலாம்.மனித நேயம் போற்றும் மானிட இலக்கணங்களைக்கண்டு தெம்பு கூட்டலாம்.காக்கைகள் பங்கு போட்டுத்தின்னும் தமிழனின் தெரு ரணக்களத்தை தரிசித்துவிடலாம். மனமே இல்லாத மனித உருக்களால் திட்டமிட்டு இனச்சிக்கல் வளர்க்கப்படுவதை கண்டு நோக்கலாம். சி. மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தால்’ அற்புதமாய் வந்திருக்கிறது.பக்குவப்பட்ட அரசியல்வாதி என்பதால் படைப்பிலே முதிர்ச்சியை அனுபவிக்க முடிகிறது.பொதுவுடமைவாதியின் கண்களுக்கு முன்னாலேயே இத்தனை அட்டகாசங்களும் தென்படுகிறபோது உலக சகோதரத்துவம் என்பது ஆடிப்போகிறது.

மஎந்திரனின் நூலுக்கு செ.கணேசலிங்கன் அறிமுகம் தந்துள்ளார் ‘’இந்நூல்  நான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த நாட்டை மேலும் சிறப்பாக எனக்கே அறிமுகப்படுத்துகிறது.’ இது முற்றிலும் மெய் என்பதனை வாசகனும் அங்கீகரித்து விடுகிறான்.இலங்கையின்இனச்சிக்கலை,பேரினவாதத்தை நன்கு விளங்கிக்கொள்ள இந்நூல் துணைபுரியும். நேர்மையாக எழுதப்பட்ட படைப்பு என்பதனை ப்படிக்கிறபோது உணர்ந்து பிரமிக்கச்செய்கிறது. மகேந்திரனின் மாணவப்பருவத்து அமைப்புப்பயிற்சியும்,தாமரையின் இலக்கிய அனுபவமும் பொதுவுடமை அரசியல் பாத்திரப்பணியும் நிகரற்றவை என்றாலும்’’தீக்குள் விரலை வைத்தேன் ’ அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.ஆம் என்றுமே நிற்கும் என்பதனை உறுதியாகச்சொல்லமுடியும். இலங்கயின் இனச்சிக்கல் இத்தனை எளிமையாய், பன்முகத்தன்மையோடு வெளிப்படுத்துதல் என்பது அவரின் அடிமன ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.இலங்கையைப்பற்றிய ஓர் இனப்புரிதல் இனி மகேந்திரனின் இந்நூலை விடுத்து சாத்தியப்படாது என்பதனை உணர்த்தி நிற்கிறது.

நடப்பில் ஜன நாயகம் என்கிற எந்திரம் தன் வடிவத்தை எப்படி எளிதாய் மாற்றிக்கொண்டு ஒரு சிறுபான்மை இனத்தின் அடையாளங்களை அழித்துவிட முடிகிறது என்பதனை இலங்கையில் காண நேரிடுகிறது.இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள தமிழின முரண்பாடு,தமிழர்களிடையே மலையகத்தமிழர்களின் கையறு நிலை, இசுலாமியத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என முக்கியமாய் மூன்று கூறுகளைக்காணலாம்.இவை ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணி வேறாக அறிவதற்கு மகேந்திரன் உதவி இருக்கிறார் என்றும் குறிப்பிடலாம். பதிப்புரையில் சொல்லப்பட்டபடி’ இலங்கை பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல்களில் இது தனிப்பட்டதாகும் என்பது சரியான விளக்கமே. உணர்ச்சிப்பிரவாகத்தின் மீது  கொப்பளித்து எழுகின்ற சினக்குன்றின் மீது, துயரக்குகையில் குப்புறப்படுத்து க்குமுறுதலில் ஆழ்ந்து, மானுடத்தை வக்கிரமாக புரிந்துகொண்டு வியூகம் அமைப்பதில் தவறிவிட்டு,குழம்பிக்கொண்டும் குழப்பிக்கொண்டும்.கூக்குரல்  எழுப்பி அலையொலியில் ஒளிந்துகொண்டும், நெளிந்துகொண்டும் படைப்பு என்கிற ஒன்றை  வெளிக்கொணரும் அசாதாரணச் சூழலில் மட்டுமே அனுபவமாகிப்போன வாசகனுக்கு இந்த நூல் நல்ல புரிதலை கொடையாக்கி உதவுகிறது.

சி.மகேந்திரனின் வார்த்தைகளில் கச்சிதமானது அனேகம்.எடுத்துக்காட்டாய் சிலதுகளைச்சொல்லமுடியும். முதல் அத்தியாயத்து இறுதியில் இப்படிச்சொல்கிறார் ஆசிரியர்.’ஜன நாயகம் என்னும் மிக உயர்ந்த அரசியல் வடிவத்தை சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கும் கருவியாகப்பயன்படுத்தும் போது மோசமான விளைவுகளில் நாடு சிக்கிகொள்கிறது. இது எந்த ஒரு ஜன நாயக  நாட்டுக்கும் ஆகப்பொருத்தமானதே..1972 ல் இலங்கை பெளத்த நாடாக அறிவிக்கப்பட்டதே எல்லாப்பிரச்சனைகளுக்கும் ஊற்றுக்கன்ணாய்ப்போனதை மகேந்திரன் அற்புதமாய்க்கூறிவிடுகிறார். இரத்தம் சிந்துதல் உள்ளிட்ட எந்த கொலைக்கள கூச்சலையும் எழுப்பும் உரிமை பெற்றவர்கள் புத்த பிக்குகள் என்கிற விஷயம் அம்மலப்படுகிறது.

iஇலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்சங்க இலக்கியப்பேரரங்கின் ஜன நாயகத்தன்மையை புகழ்ந்து சொல்கிறார் ஆசிரியர்.அது மிகச்சரியானதே.உலக அரசியல், சித்தாந்த நெருக்கடியில் சிக்கித்தவித்த பொதுடமை அமைப்புக்கள் நீளவாட்டில் தம்மை கூறுபோட்டு மகிழ்ந்துபோயின. இன்றளவும் இதன் மீது விமரிசனம் எழும்போது பார்த்துக்கொள்கிற ‘சாக்கிரதை மனோபாவம்’ புரட்சி மேகங்களால் அடைகாக்கப்படுகிறது என்பது நிதர்சனம். ப்ரேம்ஜியின் விடையாய் மகேந்திரன் இப்படிச்சொல்கிறார்.

ஜன நாயகமும் இலக்கிய நோக்கம் குறித்த பொறுப்புணர்வும்தான் எதனையும் சாத்தியப்படுத்துகிறது. இப்படிப்பேசும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம். தோழர் பிரேம்ஜி ஒரு பொதுஉடமைவாதி.

சிங்கள இன அரசு இயந்திரத்தால் யாழ்ப்பானத்திலிருந்து விரட்டப்பட்ட இசுலாமியத்தமிழர்கள் கேட்கும் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் அது  நமக்கே எனப்பாவிக்கலாம். கேள்வி இது

துப்பாக்கி முனையில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது தமிழகத்தில் ஏன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை ? அந்த அப்பாவி மக்களுக்கு ஏன் ஆறுதல் வார்த்தைகூட எங்கிருந்தும் வரவில்லை. மெய்யாகவே நமக்குத்தலை தாழ்ந்துபோகிறது. இந்திரா பார்த்தசாரதி ‘பனியும் பறையும்’ என்ற படைப்பில் குறிப்பிட்டுள்ளதனை மகேந்திரனே இங்கே பேசுவதைச்சொல்லி ஆறுதல் தேடலாம். ஒரு ஆஸ்திரேலிய வெள்ளையர் விமானப்பயணத்தின் போது கேள்வி கேட்டாராம்.’இந்தியாவிலுமா தமிழர்கள் வசிக்கிறார்கள் ? என்று. வேதனையின் உச்சம்தானே இது.

இலங்கை மலத்தோட்டங்களில் தம் குருதியைக்கொட்டி தமிழ் இனம் லட்சக்கணக்கில் கேட்பார் அற்றுக்கிடக்கிறது. இலங்கை குடியுரிமை இல்லை. இந்தியாவுக்கு ச்செல்லவும் வழி இல்லை. தலைமுறைகள் ஏழு கடந்தன.வயிற்றுப்பசிக்கு படகில் ஏறிப்போனவர்கள் விலாசம் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மனிதப்புழுக்களாய்க்காட்சி தரும் தமிழர்கள். லால்பஹதூர் சாஸ்திரியையும் ராஜிவ் காந்தியையும் சபித்துக்கொண்டு. தமிழ் ச்சகோதரர்கள் விதியின் சதியில்.

இலங்கை மலையகத்தமிழர்களின் வாழ்வுக்குப்போராடிய உத்தமத்தோழர் நடேச அய்யரைப்பற்றிய குறிப்புகள் மகேந்திரன் எழுத்து நேர்மைக்கு ச்சான்று பகர்கின்றன. தமிழ் மண்ணில் இப்படி  எல்லாம் எழுதிவிட்டு குப்பை கொட்டிவிடமுடியாதபடிக்கு. எதோ ஒரு அறிவு திரையிட்டு நிற்கிறது. என்பது வேறு. நடேச அய்யரின் துணைவியார் மீனாட்சி அம்மையின் பேச்சாற்றல், கவிதா வலிமை,தொழிற்சங்க ஆளுமை குறித்தும் மகேந்திரன் பேசுகிறார்.. கண்டி நகரில் கைலி கட்டிக்கொள்வது தமிழனுக்கு பாதுகாப்பு. கண்டித்தமிழன் காது குத்திக்கொள்ள அஞ்சுகிறான். வேட்டிகட்டுதலும் காது குத்துதலும் அவனைக்காட்டிக்கொடுத்துவிடும் அடையாளங்களாக ஈனப்பட்டு நிற்கின்றன. மாத்தளை சோமு தனது எல்லைதாண்டா அகதிகள் என்னும் புதினத்தில் குறிப்பிடும் உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மகேந்திரன்.’தமிழர்கள் சிங்கள மண்ணைக்கவர்ந்த பகைவர்கள் என்கிற விஷத்தை ஊட்டியே காடையர்கள் என்கிற ரவுடிக்கும்பலை திட்டமிட்டு அரசாங்கம் ஆசிர்வதித்து நடத்துகிறது. நரபலிகள் இலங்கையில் தொடர்கதையாகிறது.

யாழ்ப்பாணம் பற்றிய ஆய்வு நீண்டதொரு கட்டுரையாய் மலர்ந்திருக்கிறது. யாழ்ப்பாண கல்வி நிலையங்கள்,சமுதாய அமைப்பு,சாதீய விஷயங்கள்,சாப்பாட்டு விஷயங்கள், வழிபாடுகள்,இலக்கிய ப்பங்களிப்புகள் அனைத்துமே விரிவாகப்பேசப்பட்டுள்ளன.மறக்காமல் எஸ்.பொ.வையும் அவரின் எழுத்து கம்பீரத்தையும் தொட்டுப்பேசுகிறார் மகேந்திரன்.பொருத்தமாய்ச்சேரனின் கவிதை ஒன்றை யாழ்ப்பாண நிலமைகளுக்குச்சான்றாய் வைக்கிறார் ஆசிரியர்.

 

‘இரு புறமும் துப்பாக்கி

நடுவில் நான்

எரிகின்ர்ற நெருப்புக்கு

நடுவில் நான்

அவன் ‘இரு’ என்றால்

இவன் ‘ எழும்பு’ என்பான்

அவன் ’’வா  என்றால்

இவன் ’போ’ என்பான்

அவன் ‘இற’ என்றால்

இவன் ‘இரு’ என்பான்

அவன் உடலைக்கொன்றான்

இவன் ஆத்மாவைக்கொன்றான்

இப்போ நான் பிசாசானேன்.

யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்னும் மீளமுடியாத சோகம் துக்க சாகரமாய் உணரப்படுவதைத்தவறாமல் மகேந்திரன் குறிப்பிடுகிறார். வரலாற்று ரீதியாக த்தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வந்திருக்கிறது என்பதை அப்பட்டமாய் ஒத்துக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர் டி.யூ. குணசேகராவை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார். சிங்கள மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக க்காடையர்கள் ரவுடிகள் என்று முடிவுகட்டுதல் நியாயமாகாது என்கிற நல்ல செய்தியையும் சொல்கிறார். தமிழர்களை மணந்துகொண்ட சிங்களவர்களும் சிங்களவர்களோடு வாழ்க்கையைத்தொடங்கிய தமிழர்களின் முன்னுதாரணங்கள் எத்தனையோ இருப்பதை மறக்காமல் சுட்டிக்காடுகிறார் மகேந்திரன்.

இலங்கையின் வெளிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் தப்பி டேவிட் அய்யா பற்றிய மகேந்திரனின் எழுத்தாக்கம் வாசகனை நெஞ்சத்தால் வணங்க வைக்கிறது. மகேந்திரனின் சித்திர எழுத்தினை இப்படிக்காணலாம்.

‘அர்த்தமற்று வாழும் வாழ்க்கை என்ற மதிப்பீட்டுக்குள்ளிருக்கும் அர்த்தங்கள் நம்மை அதிர்ச்சியுறச்செய்யும்’- எத்தனை ப்பொருள் பொதிந்த வாசகம் இது.ஒவ்வொரு வாசகனும் படித்து சிந்தித்து சொக்கிபோய் பிரமிக்க வேண்டியிருக்கிறது. எந்த கர்வத்தினையோ யாருமே செய்யத்தயங்கும் தியாகத்தையோ தான் செய்துவிட்டதற்கான ஆணவத்தையோ கிஞ்சித்தும்  வெளிக்காட்டாத மாமனிதன் டேவிட் அய்யாவை தரிசிக்கத்தந்த ஆசிரியரின் மானுடப்பிடிப்பை ப்போற்றிப்பெருமிதம் அடைகிறோம்.

மகேந்திரனின் எழுத்தாற்றல் வெளிப்பாடு இந்த நூல். இது அவரின் எழுத்து நேர்மையை உரக்கப்பேசுகிறது. நெஞ்சுக்கு நேர்மையாய் அவர் வெளிப்படுத்திய விஷயங்கள் மனசாட்சி உள்ளோரை ரணப்படுத்தியே முடிக்கும்.அதுவே மானுட இருப்பின் நியாயமும் கூட..

(மே 2004 தாமரை)

 .

 

 

 

 


வெள்ளையனே வெளியேறு இயக்கம் -

 

வெள்ளையனே வெளியேறு இயக்கம் -

 

வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியத்திருநாட்டு விடுதலைப்போராட்ட வரலாற்றில் சிகரமாய் விளங்குகிறது.1942 ஜூலை 14 அன்று வார்தாவில் நடைபெற்ற காங்கிரசின் மத்ய செயற்குழு ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் புரட்சித் தீர்மானத்தை வடித்தெடுத்தது

.1942 ஆகஸ்ட் 8 ஆம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் அத்தீர்மானத்தை நிறைவேற்றிப்பெருமை கொண்டது.

உலக அரங்கில் ஜப்பான் கிழக்கிந்திய நாடுகளை ஒவ்வொன்றாகவென்று தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது.அது இந்தியாவை நோக்கிய தன் பயணத்தை செயல்படுத்திக்கொண்டிருந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது படைகளை ‘டெல்லி சலோ’ என்னும்வீர கோஷம் கொடுத்து இந்திய தேசியப்படையை வழி நடத்திக்கொண்டிருந்தார்.

இத்தருணத்தில் பிரிட்டனின் நிலமை கூடுதல் சங்கடமாகியது.இந்திய விடுதலைப்போராட்டம் கொழுந்துவிட்டெரிய ஜப்பானியப்படைகளோ பர்மாவைக்கடந்து இந்தியா நோக்கி வந்தவண்ணம் இருந்தன வாய்த்த .இத்தருணத்தைத்தனதாக்கிக்கொள்ளத்திட்டமிட்டார் மகாத்மா.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மூன்று பிரதான அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.அகிம்சையுடன் கூடிய ஒத்துழையாமை இயக்கத்தைத்தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். எத்தருணத்திலும் அந்நிய நாட்டுப்படைகள் இந்திய மண்ணில் அடி எடுத்து வைக்க அனுமதிக்கவேகூடாது.பிரிட்டீஷார்  நமது மண்ணை விட்டு வெளியேறுதல் என்பது உறுதிசெய்யப்படுதல் ஆகியன அவை.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பின்புலமாய் சர் ஸ்டா போர்டு கிரிப்சின் திட்டத்தைச்சற்று ஆராயலாம்.கிரிப்ஸ் பிரிட்டனிலுள்ள லேபர் கட்சியின் பிரதி நிதி. அவர் மார்ச்சு 2 1942 ல் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.அவர் தெரிவித்த ஆலோசனையின் படி இரண்டாம் உலப்போர் முடிவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும்.தற்காலிக நிர்வாக அசெம்பிளி அமைக்கப்பட்டு அதனில் பிரிட்டீஷ் இந்திய பிரதி நிதிகளும் பிராந்திய அரசர்களின் பிரதி நிதிகளும் இருப்பார்கள்.பிராந்திய அரசர்கள் விரும்பினால் இந்திய ஆளுகையின் கீழ் பங்கு பெறலாம்.அல்லது தனித்துச்செயல்படவிரும்பினால் அதனையும் அனுமதிக்கலாம்.

இதனைக்கேள்வியுற்ற காந்திஜி கிரிப்சிடம்,’இது தான் உங்கள் திட்டம் என்றால் நீங்கள் அடுத்த விமானத்தைப் பிடிக்கலாம்.உங்கள் தாய் நாடு திரும்பலாம்’என்று மறுத்துரைத்தார்.

கிரிப்ஸ் தனது திட்டத்தை’பின் தேதியிடப்பட்ட காசோலை’ என்று வர்ணித்தார்..மகாத்மாவோ,’இந்தியாவை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுங்கள்.இந்தியா தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.

இந்திய விடுதலையின் இறுதிப்போரைத்துவக்கிய அகில இந்திய காங்கிரஸ் ஆகஸ்ட் 8 ல் பம்பாய் ஆசாத் மைதானத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை முன் மொழிந்தது. காந்திஜி ஆற்றிய அனல் தெறிக்கும்அவ்வுரையில்’செய் அல்லது செத்துமடி’ என ஆணையிட்டார்.’இப்போது விடுதலை இல்லையேல் இனி அது எப்போதும் இல்லை’ உறுதிபடச்சொன்னார்..

‘உங்களை இனி சகித்துக்கொள்ள முடியாது.உங்களை எதிர்த்து நடத்தும் இந்தப்போரில் நாங்கள் வீழவேண்டும் இல்லையேல் வாழவேண்டும்.இதுதான் எங்கள் இறுதி யுத்தம்’ அகிம்சை நெறியாளர் காந்தியே இப்படிக்கொக்கரித்தார்.

காங்கிரசின் பிரதி நிதியாய்ப்போன மீராபென் பிரிட்டீஷ் அரசால் திருப்பி அனுப்பப்படுகிறார்.’புரட்சி வழியை தனதாக்கிக்கொண்டுவிட்டது காங்கிரஸ்’ என வைசிராய்  இழித்துப்பேசுகிறார். காங்கிரஸ் பிரிட்டீஷ் அரசுக்கு 24 தினங்கள் அவகாசம் அளித்தது.

இந்திய நிலமை இப்படியே தொடருமானால் ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பும் இலக்கணமும்கேள்விக்குறியாகிவிடும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு எச்சரிக்கை தந்தார் அமெரிக்காவின் அதிபர் ரூஸ்வெல்ட்.

ஆகஸ்ட் 9 அன்று காலை ஜவஹர்லால் நேருவை அமெரிக்கா அனுப்பத்தீர்மானமாக்கிறது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால் ஆகஸ்ட் 9 அன்று கதிரவன் எழுவதற்கு முன்பாக மகாத்மா காந்தி,ஜவஹர் லால் நேரு,ஆசாத்,சர்தார் வல்லபாய் படேல்,பாபு ராஜேந்திர பிரசாத்,ஆச்சார்ய கிருபாளனி,அசப் அலி,சரோஜினி நாயுடு ஆகியோரை சிறைக்கு அனுப்பிவிடுகிறது பிரிட்டீஷ் அரசாங்கம்..

புரட்சியொத்த புதிய சாஹசத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டதாக மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் அரசு.ஆனால் இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்தது.விடுதலை ப்போராட்டத்தளபதிகள் மொத்தமாய் சிறையில் மக்களே போராட்டவடிவத்தை ஆங்காங்கு முடிவு செய்துகொண்டனர்.1857 க்குப்பிறகு வரலாறு சந்தித்த இந்திய மக்களின் தன்னெழுச்சி என இதனை நேரு வர்ணித்தார்.

செய்திப்போக்குவரத்து நாடெங்கும் சீர்குலைந்தது.மின்சாரம் முற்றாய் இல்லை.தொலைபேசிகள் ஒய்ந்துபோயின.ரயில் அசைய மறுத்தது.காவல் நிலையங்கள் பற்றி எரிந்தன.ராணுவ வண்டிகள் சின்னா பின்னமாகின.தொழிற்சாலை ஊழியர்கள் தெருவுக்கு வந்தார்கள்.’வெள்ளையனே வெளியேறு’ என்கிற முழக்கம் எங்கு நோக்கினும் கேட்டுக்கொண்டே இருந்தது.

 நான்கே மாதங்களில்538 இடங்களில் துப்பாக்கிச்சூடு,ஆயிரக்கணக்கானோர் பலியயினர் பல்லாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.26 ஆயிரம் குற்றப்பத்திரிகைகள் கொடுக்கப்பட்டன.2.5 கோடி ரூபாய் அபராதத்தொகையாக வசூலித்தது பிரிட்டீஷ் அரசு.விடுதலை வீரர்களின் இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன

.பிப்ரவரி 10,1943 அன்று உண்ணா நோன்பு துவக்குகிறார் மகாத்மா.தேசபிதாவின் வாழ்வு முடிந்துவிடும் என்று தப்புக்கணக்குப்போட்டது பிரிட்டீஷ் அரசு.

காந்திஜியின் ஆன்மபலம் அளவிடற்கரியது.தன்னம்பிக்கையின் இமயம் அல்லவா அவர்.21 நாட்கள் உண்ணா நோன்பு முடித்து எழுகிறார் மகாத்மா. நாடே அவரைக்கண்டு மகிழ்ச்சி கொள்கிறது.

அமெரிக்க பிரதிநிதி வில்லியம் பிலிப்சுக்கு காந்திஜியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சர்ச்சில் இந்தியப்பிரச்சனை குறித்துப்பேசவே அனுமதி மறுக்கிறார்.இத்தருணத்தில் இந்திய வைசிராயாக சர் அர்ச்பால்ட் வேவல் பொறுப்பேற்கிறார்.காங்கிரஸ் கட்சி எந்த கூட்டத்தையும் நடத்த வேவல் அனுமதி மறுக்கிறார்.

1943 வாக்கில் இந்தியா ஒன்றுபட்ட தேசமாக விடுதலை பெறுவது இனி சாத்தியமில்லை என்பது நிதர்சனமாயிற்று.இந்திய தேசிய காங்கிரசின் ஒற்றுமை முயற்சி படு படுதோல்விகண்டது.பிரிட்டீஷார் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் உதயமாகவேண்டும் என்றார் முகமதலி ஜின்னா.

உலக அரங்கில் இரண்டாம் உலகப்போர்முடிவுக்குவரும் தருணம் சமீபமானது.1945 மே 7 அன்று பாசிச ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு மடிகிறான்.

அமெரிக்க ரூஸ்வெல்ட் விலகி அங்கே ட்ரூமன் பதவிக்கு வருகிறார்.உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றி புதிய சூழலை உருவாக்குகிறது.உலக அறிஞர்கள் பெர்னாட் ஷா பெர்ட்ரண்ட் ரசல் முதலியோர் காலனிய நாடுகளின் விடுதலையை முன்னிலைப்படுத்துகின்றனர். இந்திய கப்பற்படையும்,இந்திய ராணுவமும்,பிரிட்டீஷாருக்கு எதிராக தன்னை நிலை நிறுத்தியது.1945 ஜூலை 5 அன்று தொழிற்கட்சியின் பிரதமர் அட்லி பொறுப்பேற்கிறார்.பிப்ரவரி 20 1947 அன்று இங்கிலாந்து பாராளுமன்றம் இந்திய விடுதலைத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.1947 மார்ச்சு 22 அன்று லார்டு மவுண்ட் பேட்டன் இந்தியாவுக்குப்பொறுப்பு ஏற்கிறார். ஜூலை 18 அன்று பிரிட்டீஷ் அரசர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் விடுதலையை அங்கீகரிக்கிறார்.

பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 அன்றும் இந்தியா ஆகஸ்ட் 15 அன்றும் முழு விடுதலை பெற்ற நாடுகளாயின. வல்லபாய் பட்டேல் இந்திய பிராந்திய அரசர்களை ஒன்றிணைத்து சரித்திரம் படைக்கிறார்.

மவுண்பேட்டன் பிரிட்டீஷாரின் யூனியன் ஜாக் கொடியை 1947 ஆகஸ்ட் 14 அன்று இறக்குகிறார்.

மூவர்ண தேசியக்கொடி பட்டொளி வீசி 1947 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி பட்டொளி வீசி பறக்கத்தொடங்கியது.

இந்திய விடுதலைப்போரில் வீழ்ந்த மலர்களை வணங்கிப்பாடுவோம்.

’ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’

-------------------------------------------------

 


கொரானா

 


 

 

கொரானா வைரசுக்கு

சாதியில்லை மதமில்லை

ஏழை இல்லை

பணக்காரனும் இல்லை

கிழக்குமில்லை மேற்கும்இல்லை

தெற்குமில்லை வடக்கு இல்லை

ஐ நா சபையின் நாட்டாண்மை இல்லை

அமெரிக்கா என்ன

சீனா என்ன

யாராயிருந்தால் யாருக்கென்ன

கொத்துக்கொத்தாய்

மடிகிறது மக்களிளினம்

வீட்டுக்குள் அடங்கி

உலகம் சுறுங்கி

விழி பிதுங்கி

பெரு மூச்சு விடுகிறது

ஏப்ரல் ஐந்து இருபது இருபது

ஒன்பதுமணி இரவு

ஒன்பது நிமிடம் விளக்கேற்றக்

கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.

அவருக்குத்தெரிந்தது சொல்கிறார்

நான் நினைக்க அது அரசியல் என்கிறார்கள்

சிந்திக்கத்தெரிந்தவர்கள்

இருக்கலாம்

இல்லாமலும் இருக்கலாம்

மக்களினம் காக்கப்பட

யாதும் செய்யலாம்

மக்களின் அனைவரின்  நல்வாழ்வு மட்டுமே

பிரதானம்

பிறவெல்லாம் பின்.

 

 

கண்ணுக்குத்தெரியாத

வைரஸ் ஒன்றினால்

இத்தனை ப்பெரிய உலகம்

கதறிக்கதறி அழுகிறது

இருக்கும் இடத்திலேயே

மனிதர்கள் முடங்கிக்கிடக்கிறார்கள்

ஓயாது சென்ற பயணம்

ஓய்ந்து போனது

சாலைகளில் சுடுகாட்டு அமைதி

பெரிய மனிதன் சிறிய மனிதன்

வித்தியாசம் ஏது இங்கு

பணக்காரன் ஏழை

வித்தியாசம்தான் ஏது

வைரசுக்கு உயிர் உண்டா

அது உயிரற்ற பொருளா

கொரானா வைரஸ்  கோவிட்19

மனித உயிர்களைக்குறிவைத்து

க்கபளிகரம் செய்கிறது

ஆயிரம் ஆயிரமாய்

இலட்சம் இலடசமாய் தொடர்கிறது மரணம்

இரண்டாம் உலகப்போர் பார்த்தவர்கள்

இன்றுதான் பார்க்கிறார்கள்

மொத்தமாய் மரணம்

தகவல் சாதனங்கள்

பணி செய்து பணி செய்து

சோர்ந்து கிடக்கின்றன

அம்மை காலரா மலேரியா

பிளேக் அந்த வரிசையில் கொரானா

சுனாமி எல்லாம் ஜுஜுபி

இப்படி இக்கதை

எத்தனை நாள் தொடருமோ

மனிதகுலம் பிழைத்து எழப்

பிரார்த்தனை செய்கிறேன்

சம்பவாமி யுகே யுகே

என்கிறார்களே

எந்தக்கடவுளுக்கும்

மக்கள் ஓலமிட்டு அழும் சேதி

கேட்கவே இல்லையா

தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும்

திறக்கப்படவும் இல்லை

கொடுக்கப்படவுமில்லை

மனித உயிர்கள்

பலி இங்கு தொடர்ந்துகொண்டே

உலகின்பக்கேணி

என்பது பொய்யாய்ப்போனது

செத்துப்போனார்கள்

போனார்கள் எப்படியோ

இருப்பவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்

சிறு பிள்ளைகளின்

எதிர்காலம் குறித்து

மனங்குமுறி அழலாம் அவ்வளவே

போட்டியும் பொறாமையும்

சுய நலமும் ஆணவமும்

கொடி கட்டிப்பறந்தன

மதங்கள் சாதி இனப்பூசல்கள்

கொட்டம் சொல்லிமாளாது

மனிதகுலம் வெட்கப்படவேண்டும்

இத்தனை விலை கொடுத்தும்

நல்லது கற்போமா நாம்

யாரும் கற்பனையே செய்திராத

மனித அவலம்

கண்முன்னே காட்சியாகிறது

கடவுள்கள் எங்கே

கேட்கக்கூட யாருமில்லை

மருத்துவர்களும் செவிலியர்களும்

தூய்மைப்பணியாளர்களும்

தெய்வமாய்த்தெரிகிறார்கள்

அவர்கள் சேவையின்றி

மனித உயிர்கள்

எப்படித்தான் வாழும்

மருத்துவப்படிப்பும் மனித நேயமும்

குழைத்து வாழ்பவர்கள்

நடமாடும் தெய்வங்கள்

யுத்தத்திற்கென உலகம்

கொட்டிய காசு

ரானுவம் நிர்வகிக்க

உலகம் செய்துவரும் செலவு

கோடான கோடி கோடி

அத்தனையும் கேலிக்கூத்தானது

கண்ணுக்குத்தெரியாத

கொரோனா முன்னே

நீதி மன்றங்கள்

அங்கங்கே திண்டுக்கல் பூட்டோடு

நீதிமான்கள்

படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறார்கள்

சட்டங்கள் சவமாகிக்கிடக்கின்றன

கருப்பு அங்கிக்கும்

மனித இருப்புக்குமான பந்தம் நொறுங்கிப்போனது

சிறைவாசிகளில்

தவறேதும் செய்யாத நிரபராதிகள்

ஆயிரமாயிரம்

அப்பாவிகள் தண்டிக்கப்படகூடாது

குற்றவாளிகள் தப்பினால் தவறில்லை

எழுதிய எழுத்துக்கள்

செத்துப்போய் காலங்கள் பலவானது

கொரோனா எங்கிருந்து தொடங்கியது

தெரிவது அது மட்டுமே

ஏன் தொடங்கிற்று

வினாவுக்கு விடை காணோம்

மருந்து காண்டுபிடிக்க ஆய்வுக்கூடங்கள்

ராப்பகலாய் கண்விழிக்கின்றன

விடை என்று வருமோ

இயற்கை மனிதனைத்தண்டிக்க

விட்ட சாபம் இதுவோ

பேராசைக்கார மனிதன்

அறிவின் துணைகொண்டு

எழுதிய அசிங்கமோ இது

என்றேனும் ஒரு நாள்

விடைதெரியலாம் உலகிற்கு

தவறு செய்தவன்

தான் செய்தது ஒப்புக்கொண்டு

வெளிவர வா காத்திருக்கிறான்

தேசபிதா காந்தியைச்சுட்டவன்கூட

செய்தது சரி என்று

சொல்லித்தான் போய்ச்சேர்ந்தான்

வேறெங்கு போய் விடை

காண ஆராயவேண்டும்

யாரால் என்ன செய்ய இயலும்

நாட்டின் பிரதமர்

மருத்துவர் செவிலியர் நோயிலிருந்துவிடை கண்டோர்

எல்லாரிடமும் உரையாடி முடிக்கிறார்

வணக்கமும் வாழ்த்தும் நன்றியும்

தெரிவித்தார் கச்சிதமாக

தகவல் சாதனம்

வளர்ந்திருக்கிறது இமயமாக

நல்லது நிகழ

மனம் அவாவுகிறது

இயற்கையின் திருவுளம் எப்படியோ

யாரையும் சட்டை செய்யாது

கும்மாளமடித்தபடி

மக்கள் இனம் கண்ணீர் சிந்துகிறது

அமெரிக்கா சென்று காசு அள்ள

மொட்டை போட்டு பழனிக்குப்

பால் காவடி எடுத்தவர்கள்

பழனிமுருகன் அடைத்துக்கிடக்க

நியுயார்க் நகரில்

ஈரல் குலை நடுங்க

போது கழிக்கிறார்கள்

யாரும் அறிந்திலர்

எப்போது என்ன வருமன்று

வள்ளுவரின் திருமொழி

நெடுநல் உளன் ஒருவன்

இன்றிலை எனும்

பெருமைபடைத்திவ்வுலகு

கச்சிதமாக விளங்குகிறது

கருத்து மனிதனுக்கு.

ஜெர்மானிய தேசத்து அமைச்சர்

தூக்கிட்டு தற்கொலையாம்

பொருளாதாரச்சரிவை சரிக்கட்டுவது

சாத்தியமில்லை தெரிந்துபோனதன்

விளைவு தந்த வலி.

ஸ்பெயின் இளவரசி மரணம்

கொரோனா யாரையும் விட்டு வைக்கவில்லை

இங்கிலாந்து பிரதமர்

ஐசியுவில் மூச்சு விடுகிறார்

வெள்ளைமாளிகை டிரம்ப்

இந்தியாவில்மருந்து

 மாத்திரை கேட்டுப்பெறுகிறார்

பொருளாதாரச்சரிவுகள்

எதிர்கொள்வதெப்படி

புலப்படாத குழப்பத்தில்

அந்தகாரம் கண்ணெதிரே

உலகம் பெருமூச்சு விடுகிறது.

எளிய மனிதனை

எக்காளமிட்டு எள்ளி நகையாடிய

சமூக அடுக்குக்கு

போதமிந்த தண்டனை

நல்லவர்களும்

அன்புடை மனிதர்களும்

படுகிறார்கள் கூடவே

விடையும் பெறுகிறார்கள்

உலகை விட்டு

வேறென்ன செய்ய

எல்லா வினாக்களுக்கும்

விடை நமக்கே தெரிந்திருந்தால்

பிறகென்ன பாக்கி இங்கே

தெரியாத விடைகள்

எப்போதுமிருக்கும்

தெரியப்போராடலாம்

தெரியாமல் போகலாம்

தெரியலாம் சிறிது

எதுவும் தெரிந்த எல்லாம் அறிந்த

ஏகாம்பரங்கள் அல்லர் நாம்.

------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 


பம்பாய்க்கதைகளில் அன்பாதவன்

 

பம்பாய்க்கதைகளில் அன்பாதவன்                             

 

அன்பாதவனின் ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இது பம்பாய்க்கதைகள் என்ற பெயரில் உதயக்கண்னன் பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ளது.ஒரு கவிஞராகவே அன்பாதவனின் மனம் போட்டுக்கொண்ட கணக்கு அவரை சிறுகதையாளராக அனுபவம் ஆகும்போது வேறு ஒரு படைப்புத்தளத்திற்கு வாசகனை இட்டுச்செல்கிறது. வெடிக்கும் புரட்சியைக்கொண்டுவரச்செம்பழுப்பும் நெருப்பும் எனக்கொப்பளிக்கும் கவிஞர் சிறுகதைகளில் எதார்த்த உலகை அனுபவித்து  தமக்கு முன்னே படமாக்கிக்காட்டுகிறார். செருப்பு மாலை என்னும் சிறுகதை யுகமாயினியில் வெளிவந்த கதை. இது சாதியும் மதமும் விடம் கக்கும் பம்பாய் நகரத்தை அம்மணமாக்கும் கதை. இங்கே அண்ணல் அம்பேட்கருக்கு திருப்பள்ளி எழுச்சி கூறும் அன்பாதவன் இயல்பாய்க்கவிஞன் ஆகி உயர்ந்து நிற்கிறார். இந்தக் கவிதையை வாசகன் படித்த பிறகு தெரிந்துகொள்ள வேறென்ன வேண்டிக்கிடக்கிரது என்கிற அறச்சீற்றம் நெஞ்சுக்குள் முந்திக்கொள்கிறது.

’இலவச உதவிகளில் எமதுரிமை மறந்திட்டோம்

சலுகைகளாம் துண்டெலும்பில் எமை நாங்கள் இழந்திட்டோம்’

எழுத்தாளர் பொன்னீலன் ஒரு சமயம் இப்படிக்குறிப்பிட்டதாக நினைவு.கடலூர் இலக்கியப்பெருமன்ற நிகழ்வொன்றிற்கு வந்து  சங்கு வளவதுரையனோடு ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டியின் போது ‘’உதவிகள் மட்டுமே செய்து அவர்கள் உறங்கிவிட்டால் போதும் என்கிற நிலை ஒரு நாள் மாறும்.அவர்களே தூக்கி எறிவார்கள்  சுய மரியாதை தவிர்த்து எதையும்’

இதுவே செருப்புமாலை கதைவாசிக்கும் போது எனக்கு சட்டென்று மனதிற்குள் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

‘உலகமயம் வளர்ந்தாலும் உன் சேரி மாறவில்லை’ என்று சொல்லும் அன்பாதவனின் அடிமனத்து உணர்வுகள் நம் மனதைத்தொட்டு நியாயம் கேட்கின்றன. நீதி நேர்மை நியாயம் உண்மை என்பதெல்லாம் பேசிய மகாத்மாக்கள் இன்று எல்லோரும் மொத்தமாய் நம் நாட்டைக்காலி செய்துவிட்டு போனதாலே இமயமலை நிகர்த்த ஊழல்கள் இங்கே அரங்கேறினாலும் வெட்கப்படக்கூட ஒரு ஜீவன் இல்லை மாகீழ்மை. ஊழல் என்னும் சகதியில் நிற்போர் பின்வெட்கம் தொலைத்துவிட்டு வெற்றுடம்பாய் நின்றாலும் யாருக்கும் உரைப்பதில்லை.இப்படி சமரசம் உலாவும் திரு நாடாக மாறிப்போய் இருக்கிறோம். உயன் நினைவிற்கு வருகிறது சத்யமேவ ஜயதே. ஆமாம் இதற்கு  இன்னும் ஒரு புதுவிளக்கம் விரைவில் வரலாம். மராத்திய தலித் கவிதையொன்றோடு நிறைவு செய்கிறார்.

இது என் ஊமியா ? கேள்வி வருகிறது.தாகம் தீர உள்ளங்கை தண்ணீர் அள்ளிக்குடித்தால் சாதிக்கத்தி எடுத்து சம்காரம் செய்யத்துடிக்கும் சூழலில் வாழும் தலித்துக்கு இது எப்படி அன்னை பூமியாகும்

அழகு என்னும் புதியகோடாங்கியில் வெளியான கதை அலிகளின் வாழ்வு பேசும் சித்திரம்.அன்பாதவனுக்கு இங்கே கூவாகம் கதைக்களமாக வருகிறது.ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பிறந்துவிட்ட திரு நங்கை இனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் சொல்லில் அடங்குமா சொல்லி முடியுமா.அருகன்புல்லை சாணிமேல் வைத்துச்சாமியாக்கிக்கும்பிடுவோர்க்கு அரவாணிகள் சோகம் எட்டுவதே இல்லை.அற்புதமாக அலசுகிறார் அன்பாதவன்.

எவரோ வெற்றிபெற வாக்களிக்கும் ஏமாளிகளைப்போல எந்தமன்னனோ வெற்றிபெற நான் முதல் பலி என்று பேசுகிறது.அரவாணியின் குரல் வல்லினமும் மெல்லினமும் இல்லா இடையினங்களைக்கேலிபேசும் பேசுகின்ற கடையினங்கள் படைப்பாளிக்கு எப்படி பீறிட்டு வறுகிறது தார்மீகக்கோபம்.

’மனிதரென உணருங்கள் அரவாணிகளும்

மனிதரென உணருங்கள்.

அழகென்பது முகமா உடலா ஒப்பனையா

இவை எதுவுமில்லை

மனசு மனசுதான் அழகு’

இலக்கணம் தருகிறார் அன்பாதவன். சாபவரம் என்னும் சிறுகதை ராமாயணத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது.ஊர்மிளையின் வினா நம்மைச்சிந்திக்க வைக்கிறது.

‘உயிரற்ற கல்லைத்தீண்டி உயிர் கொடுத்தீர்கள்.உயிரோடு இருந்த பெண்ணின் மூக்கறுத்து மூளியாக்கினீர்கள்.எல்லாமே உங்கள் இஷ்டம்.உங்கள் விருப்பம்.மனைவியாய் வாய்த்தவளுக்கு மனமுண்டு இரசனையும் உண்டென்பதை உணரவேண்டும். பெண் என்பவளை சக்ரவர்த்தி தொடங்கி சாமான்யர்கள் வரைக்கும் அடிமையாக முட்டாளாக உங்கள் அபிலாஷைகளை தீர்த்துக்கொள்ளும் வடிகாலாகத்தான் பார்க்கிறீர்கள்.இப்படிப்பேசிக்கல்லாய் மாறுகிறாள் ஊர்மிளைபெண்ணியம் பேசி இங்கே மிளிர்கிறது இப்படைப்பு.

‘’பெய்யெனப்பெய்யும் பெருமழை’ என்னும் சிறுகதை மா நகரில் நிகழும் கிரிக்கெட் விளையாட்டு பற்றிப்பேசுகிறது. விளையாட்டு நிகழ்போது ஆணும் பெண்னும் அரைகுறை ஆடையில் உடல் குலுக்கும் நடனம். ஆடு களத்தில் பவுண்டரி சிக்சர் இல்லை.அவுட் என்கிற போது இடுப்பை அசைப்பதும் உடல் குலுக்குவதும் சிய்யர் லீடர்கள் காசுக்கு ஏலம் எடுக்கப்படுவது அண்மைக்கால சோகங்கள். இப்படைப்பில் விமரிசனம்  கூர்மையாக வருகிறது அன்பாதவனுக்கு..

இராஜவிதூஷகன் என்னும் சிறுகதை குடிப்பழக்கம் பற்றி அங்கதம் பேசி நாட்டு நடப்பினை விமர்சனம் செய்கிறது.இனிமேல் கள் வகைகளையோ பத நீர் போன்ற பானங்களையோ கண்டிப்பாகப்பருகக்கூடாது. நுங்கு இள நீர் போன்றவற்றை நுகர்வது ராஜதுரோக குற்றம்.உள் நாட்டில் தயாரான வெளி நாட்டு மதுவகைகளைத்தான் அருந்த வேண்டும்.அன்பாதவனின் நீதி காத்த நெடுஞ்செழியனைக்கண்டு வாசகர்கள்  அதிர்ச்சிக்குள்ளாக வாய்ப்பு உண்டாகிறது.

கணியன் பூங்குன்றனின் மரணம் என்னும் கதை தொழிலாளர் அரங்கு குறித்து ஒரு வினா வைக்கிறது.தத்துவம் தொலைத்துவிட்டு ஓட்டுக்குப்பின்னே ஓடும் தலைமை பற்றி விமரிசனம் வைக்கிறது.

‘பதவி நாற்காலியில்  ஒக்காந்து கிட்டாச்சு. கொள்கையாவது மசுராவது த்தூ’ வார்த்தைகள் கடினமானவைதான். ஆனால் மெய்யானவை.

கூடு என்கிறகதை பதவி உயர்வு பற்றிப்பேசுகிறது.பேய்க்கு வாழ்க்கைப்பட்டமாதிரி பதவி உயர்வை ஒத்துகிட்டாச்சு. டிரான்ஸ்பர் என்கிற புளியமரம் ஏறுவதைத்தடுக்க இயலாது. அன்பாதவன் மும்பையில் பட்ட அவஸ்தைகள்  அவிழ்படுகின்றன. அன்பாதவனுக்கு உற்ற துணையாய் இருந்த அந்த புதிய மாதவிக்கும் மதியழகன் சுப்பையாவுக்கும் இந்த விமர்சகனின் இனிய நன்றிகள் உரியதாகும்.

அன்பாதவன் பம்பாய்க்கதைகளில் வாசகனை நிறைவாகவே  அசத்திவிடுகிறார்.வாழ்த்துவோம் நல்லதொரு மனத்தை.

வெளியீடு  உதயக்கண்ணன், 10 கல்யாணசுந்தரம் தெரு,பெரம்பூர்,சென்னை பக்கம் 160,விலை ரூபாய் 80.

(சங்கு-139 ஜூன் 2011)   

 


-------------------ஒத்துழையாமை இயக்கமும் தேசபிதா காந்திஜியும்----------------------------------

 

ஒத்துழையாமை இயக்கமும் தேசபிதா காந்திஜியும்.-          -

 

தேசம் என்கிற உணர்வினை ஊட்டிய மகத்தான மாமருந்து ஒத்துழையாமை இயக்கம்.இவ்வியக்கமே பரந்த இந்தியத்திரு நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விடுதலைப்போராட்டம் பற்றிய செய்தியைக்கொண்டு சென்றது.இந்திய விடுதலைப்போரின் இயங்கு தளத்தில் அது புதிய குருதியைப்பாய்ச்சியது இந்திய .விடுதலை இயக்கம் மக்கள் இயக்கமாகவே மாறிப்போனது.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் சட்டத்திலும் மனித நேயத்திலும் நம்பிக்கை இழந்த தேசபிதா ஒத்துழையாமை இயக்கம் அன்றி வேறு எதுவுமே இனி நன்மைபயக்காது என முடிவு செய்தார்.

1920 மார்ச்சு 20 அன்று மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிப்பு செய்கிறார்.ஆங்கிலேயர்கள்  நமக்கு அளித்த கெளரவப்பட்டங்களைத்துறந்து திருப்பி அளித்தல்,உள்ளூர் ஆட்சி அமைப்பிலிருந்து விலகுதல்,பிரிட்டீஷாரின் அனைத்து விழாக்களையும் புறக்கணித்தல்,தேசிய கல்வி நிலையங்களை நிறுவி அதனில் நமது பிள்ளைகளை படிக்கவைத்தல்,வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைவிட்டு விலகுதல்,அந்நிய இடங்களில் நமது வீரர்கள் போர்ப்பணி மறுத்தல்,அந்நிய பொருட்களை பகிஷ்கரித்தல் என தேசபிதா கட்டளை தந்தார்.

துருக்கிஅரசர் சுல்தானுக்கு எதிராக பிரிட்டீஷ் அரசின் நடவடிக்கையும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும் ஒத்துழையமை இயக்கம் என்னும் அறப்போர் தொடுக்கக்களம் அமைத்துத்தந்தன.

ஜெர்மனியோடு சேர்ந்து நின்ற துருக்கி அரசர் சுlல்தானுக்கு ஊறுவிளைவிக்க பிரிட்டீஷ் அரசாங்கம் திட்டம் தீட்டியது.இஸ்லாமிய சமுதாயம் அதனைத்தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாய்க்கருதி வெகுண்டது.இசுலாமியர்களின் புனித இடங்களைகையகப்படுத்தும்கேவலமான யுக்தியைக்கண்டு முஸ்லிம் மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.அவ்வெழுச்சியே கிலாபாத் இயக்கமாக வரலாற்றில்பெயர் பெற்றது

1919 ஏப்ரல் 9 பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் ராம் நவமி விழாக்கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.அதனில் இசுலாமியர்களும் இந்துக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள்.இரு வேறு மதத்தினர் ஒற்றுமையாய் இணைந்து நிற்பது கண்டு ஆத்திரம் கொண்ட பிரிட்டீஷ் அரசு பஞ்சாப் ஆளுநரின் ஆணையின் பேரில் இருபெரும் மதப் பெரியவர்களையும் நகரத்தைவிட்டே அப்புறப்படுத்தி அற்பமகிழ்ச்சி கொண்டது

.1919 ஏப்ரல் பத்தாம் நாள் ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் துணைக்கமிஷ்னர் வீட்டுமுன்பாக முற்றுகை நடத்தியதுஅக்.கூட்டத்தைக்கலைக்க துப்பாக்கிச்சூடு நடந்தது.எண்ணற்றோர் பலியாயினர்.மறைந்த அச்சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தவே ஜாலியன்வாலாபாக்கில் இரங்கல் கூட்டம் ஏற்பாடாகியது.பிரிகேடியர் ஜெனரல் டயர் கூட்டத்தைத்தடுக்க 144 தடை விதித்து மிரட்டல் செய்தார்.

ஏப்ரல் 13 மாலை4.30 மணி.இருபதனாயிரம்மக்கள் பங்கேற்றஅந்த இரங்கல் கூட்டம்  நடைபெற்றுக்கொண்டிருந்தது அன்று .ஜாலியன்வாலாபாக் என்னும் மைதானம் விடுதலை உணர்வுகொண்ட மக்களின் எழுச்சிக்கூடாரமாய் மாறிப்போயிற்று.ஆத்திரம் கொண்ட ஜெனரல் டயர் 45 வீரர்கள் உடன்வர இந்து முசுலிம் மக்கள் இணைந்த மாபெரும் கூட்டத்தினை தனது ஆயுதத்தால் சின்னாபின்னாமாக்குகிறான். தோட்டாக்கள் தீரும்வரை சுட்டு சுட்டு ஓய்கிறான் கொடூரன்ஜெனெரல் டயர் நிகழ்த்திய.ஒரு மணி நேர துப்பாக்கிச்சூட்டில் 380 மனித உயிர்கள் பலியாயின.குதிரைகளின் கால் குளம்புகளின் அடியில் சிக்குண்டு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குருதிகொட்டினர்.தோட்டாக்கள் தீர்ந்தது ஆகவே கலைந்துசெல்கிறோம்கூவிச்சென்றான்.மிருகமாகிப்போன ஜெனரல் டயர்.பிரிட்டீஷ் அரசு 30000 பவுண்டு பரிசளித்து ஜெனரல்டயரை பாராட்டி தன் கெடுமதியை அமபலப்படுத்திக்கொண்டது.இந்திய விடுதலை வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் பிரிட்டீஷாரின் கொடுரத்தை வெளிச்சமிட்டது.

இசுலாமியர்களும் இந்துக்களும் ஒன்றுபடுவதைக்கண்டு திகைத்து நின்றது பிரிட்டீஷ் அரசு விடுதலை வீரர் சித்தரஞ்சன்தாஸ் ஒத்துழையாமை இயக்கம் பற்றிக்குறிப்பிடும்போது ,’புதிய இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாய் தொண்டர்களும் தலைவர்களும் அணிஅணியாய் முழு நேர உழைப்பாளர்களாய் மாறி, இந்திய விடுதலையே தம் லட்சியமெனத்தெளிந்து, அதற்காகவே தம்மை அற்பணித்துக்கொண்டனர்.ஒத்துழையாமை இயக்கம் இந்திய விடுதலை வரலாற்றில் ஓர் புதிய உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்து பெருமை கொண்டது’ என்கிறார்.

1920 செப்டெம்பர் 4 அன்று கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது.தீர்மானத்திற்கு ஆதரவாக 1886 வோட்டுக்களும் எதிராக 884 வோட்டுக்களும் பதிவாகின  அதன் .பின்னர் நாக்பூர் காங்கிரசில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை முன்மொழிய லாலாலஜபதிராய் வழிமொழியத் தீர்மானம் நிறவேறியது.காந்தி அடிகளுக்குக்கிடைத்த இந்த வெற்றி காந்திய சிந்தனைக்குக்கிடைத்த அங்கீகாரமாக நாடு கணக்கில் கொண்டது.1921ல் இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று ஒரு ஒற்றுமையைக்கண்டார்கள்.ஜாலியன்வாலாபாக் படுகொலையும் கிலாபாத் இயக்கமும் அவர்களை ஒற்றுமைப்படுத்தின.

மோதிலால்,சி ஆர் தாஸ் ஜெயகர்,ராஜேந்திர பிரசாத்,வல்லபாய் படேல் ஆகிய வழக்கறிஞர்கள் தம் தொழிலை விட்டனர்.இசுலாமிய சகோதரர்கள் மவுலானா  அபுல் கலாம் ஆசாத்,டாக்டர் அன்சாரி,அலி சகோதரர்கள்விடுதலை இயக்கத்தில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டனர்.

ஒத்துழையாமை இயக்கம் சரிவர கடைபிடிக்கப்படுமானால் ஒரே ஆண்டில் இந்திய விடுதலை சாத்தியமாகும் என காந்தி அறிவுறுத்தினார். 18 வயது இளைஞர்கள் நேஷ்னல் வாலண்டீர் கோர்’ என்ற அணிவரிசையில் விடுதலைப்படையின் இயங்கு சக்தி ஆயினர்.தேசிய உணர்வு பீறிட்டுக்கிளம்பியது.கதரின் முக்கியத்துவம் உணர்ந்து மக்கள் அதனைப்புனிதமாகக்கொண்டாடினர்.சுய சார்பு என்னும்ஆரோக்கியமான பிரக்ஞை தலை தூக்கி நிற்பதை அறியமுடிந்தது.

இருள் கவிழ்ந்த பிரிட்டீஷ் ஆளுகையின் கீழ் ஒத்துழையாமை இயக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டிய ஒன்றாகியது.கொடுமை செய்பவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பதும், நன்மை செய்பவர்களுடன் ஒத்துழைக்க முன்வருவதும் ஒரே தரத்தன என காந்தி உலகுக்கு அறிவித்தார்.இந்திய விடுதலைப்போராட்டம் அதன் இருப்பு அது பயணம் செய்யும் பாதை குறித்து உலகம் புரியத்தலைப்பட்டது.

தேசிய உண்ர்வு கூடிய இச்சூழலில் ஆங்காங்கே தேசிய கல்வி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.தேசிய கல்லூரிகள் பாட்னாவிலும் கல்கத்தாவிலும் திறக்கப்பட்டன.அலிகாரில் தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகமும்,குஜராத் காசி ஆகிய இடங்களில் வித்யா பீடங்களும் நிறுவப்பெற்றன.திலகர் மராட்டிய மண்ணில் மராத்தா வித்யா பீத்,என்னும் கல்விக்கூடத்தை நிறுவினார்.வங்காளத்தில் பெங்கால் நேஷ்னல் யுனிவர்சிடி துவக்கப்பட்டது.

1920 நவம்பரில் சீரமைப்புக்கமிட்டி நாடு முழுவதும் அறிமுகமாகியது இந்தியாவில் .தேர்தல் என்கிற விஷயம் அறிவிக்கப்பட்டது.80 சதவித மக்கள் சீரமைப்புக்கமிட்டியை எதிர்த்துப்புறக்கணித்தனர் தேர்தலுக்குப்போன வோட்டுப்பெட்டிகள் காலியாகத் திரும்பி வந்தன.1921 மார்ச்சு 31ல் விஜயவாடாவில் மத்ய செயற்குழுக்கூட்டம் கூடியது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒரு கோடி தொண்டர்களும் திரட்டப்படவேண்டும் எனத் தீர்மானம் செய்யப்பட்டது. நூல் நூற்பதற்கு என்று 20ஆயிரம் சர்காக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட துணிகள் இந்திய மண்ணில் வாங்குவார் இல்லாமையால் குவிந்துகிடந்தன. சுதேசித்துணிகள் இந்திய சந்தையை ஆக்கிரமித்தன.மது அருந்தக்கூடாதுஎன மக்கள் இயக்கம்கண்டனர்.

1921 ஜூலை 8 ல் நடைபெற்ற கராச்சி மாநாட்டில் முகமதுஅலி அவர்கள் மெய்யான முஸ்லிம்கள் பிரிட்டீஷ் படையைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.

கிரிமினல் சட்டங்கள் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்தன ராஜேந்திர பிரசாத்,லஜபதி ராய் போன்றோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.1921 செப்டம்பர் முதல் நாள் அலி சகோதரர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்.பிரதேச காங்கிரஸ் அமைப்புக்கள் ஆங்காங்கே சொந்தத்திட்டங்கள் தீட்டி செயல் படுத்தின.

1921 நவம்பர் மத்தியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். பிரிட்டீஷாருக்கு  யுத்தத்தில் ஆதரவு நல்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்க அவரின் வருகை என அறிவிக்கப்பட்டது.ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகள் மக்கள் மனதில் கனன்றுகொண்டிருக்க வேல்ஸ் இளவரசர் பம்பாய்  மண்ணில் வந்து இறங்குகிறார்.அன்றே பம்பாயில் துப்பாக்கி ச்சூடு.53 மனித உயிர்கள் பலியாகின.400 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.இளவரசருக்கு நாடு முழுவதும் கருப்புக்கொடி காட்டப்பட்டது தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தன.இளவரசர் அவமதிக்கப்பட்டதை பிரிட்டீஷ் அரசு சகித்துக்கொள்ளமுடியாமல் திணறியது.எங்கு நோக்கினும் ஹர்த்தால் மட்டுமே.

1921 இறுதியில் மோதிலால்,ஜவஹர்லால்,ஆசாத் முதலியோர் சிறைவைக்கப்பட்டனர்.மகாத்மா காந்திக்கும் வேல்ஸ் இளவரசருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை படுதோல்வி அடைந்தது.

ஜனவரி 22 1922 அன்று வரிகொடா இயக்கம் ஆந்திராவிலுள்ள குண்டூரிலிருந்து துவக்கப்பட்டது.

லார்டு ரீடிங் அவர்களுக்கு மகாத்மா மூன்று நிபந்தனைகளைக்கடிதமாக எழுதி அனுப்பினார். போராட்ட வீரர்களை விடுவித்தல்,பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளித்தல்,அகிம்சைவழி போராட்டத்தை அடக்குமுறையால் எதிர்கொள்வதைத் தவிர்த்தல், என்பன அவை.

லார்டு ரீடிங் அடக்குமுறை மட்டுமே தொடரும் என்றகாட்டமான பதிலை தேசபிதாவுக்கு அனுப்பிவைத்தார் அத்தருணம் இந்திய.மக்களின் ஆத்திரம் எல்லை மீறுதலை அவதானிக்க முடிந்தது.

1922 பிப்ரவரி 2 அன்று சவுரி சவுராவில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. பேரணியாளர்களின் ஆத்திரம் உச்சத்தை எட்டியதால் பேரணிக்குப்போனவர்கள் காவல் நிலையத்தை தீ வைத்துக்கொளுத்தினர்.21 காவலர்கள் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தீயோடு எரிந்து சாம்பலானார்கள்.கோரக்பூர்,பம்பாய்,சென்னை ஆகிய இடங்களிலும் காவல் நிலையங்கள்  எரிந்து சாம்பலாயின..

தேச பிதா  விடுதலைக்குப்போராடும் இந்திய மக்கள் தடம் மாறிப்போவது கண்டு மனம் பதறினார்.’ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெறுவதாக அக்கணமே அறிவிப்பு செய்து அமைதி ஆனார்.

-----------------------------------------------------------------------------------

 

 


Saturday, April 24, 2021

இரண்டாவது அலை

 

 

இரண்டாவது அலை      

 

என்னத்தைச்சொல்ல

கொரானாக்காலமிது

வந்துவிட்டதப்பா இரண்டாவது அலை

அனுதினம் மூன்றரை லட்சம் மக்கள்

பெருந்தொற்றுக்கு ஆளாகிறார்கள்

பாரதம் புண்ணியபூமி

ஆயிரமாயிரமாய் இறப்புக்கள்

மயானம் மருத்துவமனைகள்

கூட்டமான கூட்டம்

ஒலமிடும் அவலத்தில் மானுடம்

நேசித்த அன்பின் எச்சம் இப்போது

வெள்ளை சாக்குப் பொட்டலத்தில்

பெற்றுக்கொள்கிறது விடை..

மருத்துவத்துறை விழிக்கிறது

விழுகள் பிதுங்கி.

உலகம் இந்தியாவை ஓரங்கட்டியாயிற்று

சர்வதேச விமானங்கள் வரவே மறுக்கின்றன

உயிர் வளி இல்லை

மூச்சு முட்டுகிறது

ரெம்டெசிவிர் மருந்து இல்லை

படுக்கை இல்லை

மகள் பேசுகிறாள்

நெல்லைவாழ் தந்தையோடு

டில்லித் தலை நகரில்

மருமகனுக்கு நான்கு நாளாய் க்காய்ச்சல்

மருத்துவமனை வாயிலில்

தவங்கிடக்கிறோம்  ஒரு படுக்கைக்காக

உலக அளவில் பாரதமே உச்சம்

பெருந்தொற்று ப்பீதியின்

கிடுக்கிப் பிடியில்

தேர்தலுக்கு ஏனோ இப்படி அவசரம்

வந்தன மாநிலத்தேர்தல்கள்

யாரும்  அழவில்லைத் தேர்தல்

அவசரமாய்த் தேவையென்று

தினம் தினம் மனித மரணங்கள்

காணும் காட்சி

வங்கத்தில் எட்டுத் தவணையாய்

மாநிலத்தேர்தல்

தேர்தல் கமிஷனில் மனிதர்கள் அருகினர் போலும்

விழி மூடா தேவர்களோ அவர்கள்

கும்பமேளா வந்தது அரித்துவாரில்

லட்சம் லட்சமாய் கோவணாண்டிகள்

கங்கைப்புனிதத்தில் விழுந்தும் எழுந்தும்

விவசாயிகள் தொடர் போராட்டம்.

டில்லியைச்சுற்றி

மாதங்கள் பல கண்டும்

மனம்தான் இல்லை யாருக்கும்

அச்சம் கக்கிய டிராக்டர்கள் பேரணி

குடியரசு நந்நாளில்

ஏங்குகிறது  ஏழைமனம்

மனித உயிர்களை மதிக்கும்

ஆட்சியாளர்களுக்குத்தான் எங்கேபோவது

-----------------------------------------------------------

 

 

 

 

 

 


Monday, April 19, 2021

நீலகண்டன் சென்னை செல்கிறார்

 

 

  


 

 

வாழ்த்தி அனுப்புவோம்

பாசமிகு நீலகண்டன் சென்னை செல்கிறார்

 

 .வெ நீலகண்டன் கவிஞர்,  சிறந்த மொழிபெயர்ப்பாளர் தொழிற்சங்கம் கட்டுவதில் அதன் வழி இயக்கம் கட்டுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

 முந்தைய தஞ்சை ஜில்லாவின் சீர்காழி இவரின் சொந்த ஊர்.  இந் நகரின் சீர்காழி பெருமைமிகு முதலியார் உயர் நிலைப்பள்ளியிலும் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் பயின்று தொலைத் பேசித்துறையில் கடலூர் நகரில் நாற்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

தமிழகம் அறிந்த  தொலைபேசி தொழிற்சங்க ஆசான் ஜகன் அவர்களுக்கு மிகநெருக்கமானவர் அண்மையில் மறைந்த  தொலைபேசி ஊழியர் தலைவர் கடலூர் ரகு நாதன்.அவர்களோடு மாவட்டச்ங்கத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு..

 தொழிற்சங்க இயக்கங்களில்  புதிய கோஷங்களை படைப்பதில் அதனை உணர்ச்சிப்பெருக்கோடு வெளிப்படுத்துவதிலும் தனித்திறம் பெற்றவர். மா நாட்டு அமர்வின்போது தீர்மானங்களை வடிவமைப்பதில் ஆண்டறிக்கையை செழுமைப்படுத்துவதில் முத்திரை பதித்தவர்.

கடலூர் மாவட்ட கலை இலக்கியப்பெருமன்றம் சிறப்பாக செயல்பட்ட ஒரு பத்தாண்டுகளில் பல முக்கிய பொறுப்புகளை எடுத்துச்செயலாற்றியவர். கடலூர் சிரில் நினைவு அறக்கட்டளை  ஆண்டுதோறும் நிகழ்த்தும்  தமிழ் விழாக்களில் முன்வரிசையில்  நின்று பணியாற்றுபவர்.

கடலூர் மாவட்ட தொலைபேசி ஊழியர் சங்க இதழான தொலைபேசித் தோழனின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தவர். கடலூர்  தொலைபேசி மாவட்ட சங்கத்து அனைத்து  எழுத்துப்பணிகளுக்கும்  தோழர் நீலகண்டனின் பங்களிப்பு மகத்தானது.

கடலூர் நகரில் இயங்குகின்ற பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புக்களிலும் நெருக்கமான தொடர்புடையவர்.  தினமணியிலும் ஜன சக்தியிலும் கருத்தாழமிக்க கட்டுரைகளை த்தமிழில் மொழிபெயர்த்து மொழிப்பணியும் ஆற்றிவருகிறார் என்பதனை ப்பெருமையோடு குறிப்பிடவேண்டும்

தோழர் நீலகண்டன். தோழரின் துணைவியார் பானுமதி தமிழாசிரியை. அரசுப்பள்ளியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றவர். இலக்கிய ஈடுபாட்டோடு தமிழ்ப்பற்றும் மிக்கவர்.

இத்தம்பதியினரின்  மகளார் பாரதி வாலண்டினா மருத்துவ முதுகலை MS சென்னையில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் பயில்கிறார். மகளாருக்கு துணையாக உதவும்பொருட்டுத் தோழர் நீலகண்டன் கடலூரிலிருந்து சென்னைக்கு த்தன் குடும்பத்தை மாற்றுகிறார்.

இதுகாரும் கடலூர் தொலைபேசி மாவட்டச்சங்கத்துக்குப் பணி ஓய்வுக்குப்பின்னரும் அவர் ஆற்றிய சேவைகள்  எத்தனை எத்தனையோ. அவற்றைப்பெருமையோடு எண்ணி எண்ணி மகிழ்கிறோம்.

அவருக்கு பாசத்தோடு  வாழ்த்துச் சொல்லி விடைகொடுத்து அனுப்பீ வைக்கிறோம்.

சென்னையிலிருந்துமே அவர் எங்கள்  தொழிற்சங்கப்பணி சிறக்க  என்றும் உதவுவார் என்பதில் நிறைவு.

தோழர் நீலகண்டன் என்றென்றும் கடலூர் மாவட்டத்தொலைபேசி ஊழியர்ச்சங்கத்தின் தோழமை உறவே.

வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் சிறக்கட்டும் உமது பணி.