Tuesday, January 26, 2021

டிராக்டர் பேரணி

 


 

டிராக்டர் பேரணி

 

விவசாயிகள் பேரணி

நமது தலை நகர் டில்லியில்

பிரதமர் மோடி கொணர்ந்ததே

வேளாண் சட்டங்கள்

வாபஸ் பெறுக மொத்தமாய்

கோரிக்கை போராட்டமாகி

மாதங்களிரண்டு

தாண்டியே போனது

குடியரசு  நாளின்று

டில்லி நகரமே விழாக்கோலம்

கொரோனா அச்சம் நீங்காததால்

அடக்கியே வாசித்தது அரசு

வெளி நாட்டு விருந்தினர்

யாருமே இல்லை

சுருங்கிபோனது பெருவிழா

ராம் நாத் கோவிந்த்

குடியரசுத்தலைவர் 

மூவர்ணக்கொடியேற்றி

அவர் பணி முடித்தார்

வேளாண் மக்களின்

டிராக்டர் பேரணி

கல்லெறிதலும் கண்ணீர் புகைக்குண்டும்

வன்முறை வன்முறை

யார் மீது தவறு தேடவே வேண்டாம்

போடும் சட்டங்கள்

ஆய்ந்தலசி  விவாதித்தே

ஜனித்திருக்கவேண்டும்

உச்ச நீதி மன்றங்கட்குண்டு

பொறுப்புக் கூடுதலாய்

லட்சக்கணக்கில்  உழவர் படை

டில்லித்தெருக்களில் கல்மாரி

போலிசாருடன்  மோதல்  மோதல்.

உழுவாரைத்தொழுது பின் செல்லத்தான்

பணித்திருக்கிறது  குறள்

அன்ன தாதாக்கள் அலறுகின்றனர்

மக்களரசோ உச்ச  மமதையில்

எல்லாவற்றிர்க்குமோர் விலையுண்டு

காலம் கொணரும் விடை..-

---------------------------------------------------------

 

 

 

 

 


Sunday, January 24, 2021

பாரதக்குணம்

 


 

 

பாரதக்குணம்      

 

கொரோனா பெருந்தொற்று

உலகை உலுக்கி

தடுப்பூசி க்குத்தவம் கிடக்கையில்

இந்திய விஞ்ஞானிகள்

இரவு பகலாய் உழைத்து

 தடுப்பூசிகளைக்கொண்டு தந்தனர்

கோவேக்சின் கோவிஷீல்ட். இன்னும்

சொந்த நாட்டில் தடுப்பூசி

போடுவது வெற்றியோடு தொடர்கையில்

பதினொறு நாடுகளுக்கு

தடுப்பூசி இலவசமாய்

அனுப்பி வைக்கிறது இந்தியா

உலக சுகாதார நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

பிரேசில் நாட்டுத்தலைவர்

எல்லோருமே  பாரதத்தைப்பாராட்ட

பிரேசில் தலைவர்

ஜெய்ர் பொல்சொனாரோ

காவிய  அனுமன் சஞ்சீவி பர்வதம்

தூக்கிப்பறக்கும் ஓவியத்தை

நன்றி பாராட்டி அனுப்பியிருக்கிறார்

இந்தியப் பிரதமர் மோடிக்கு.

நேபாளம் பூடான்

பங்களாதேஷ் ஸ்ரீலங்கா

ஆப்கன்  பிலிபைன்ஸ்  ஷெஷல்ஸ்

பிரேசில் மியான்மர்

மோரிஷஸ் மாலத்தீவு   கானடா 

இன்னும் எங்கெங்கோ

மனித உயிர்களைக்காக்கும்

பெரும் பொறுப்பை

மகிழ்வோடு ஏற்றிருக்கிறது பாரதம்

உலகில் வேறு எந்த

நாட்டுக்கும்  கிட்டா

இமாலயப்பெருமை இந்தியனுக்கு

ஓங்கிப்பறக்கிறது

உலக அரங்கில்

நம் தேசிய மணிக்கொடி.

--------------------------------------------

 

 


Saturday, January 23, 2021

குறள் நமது ஆசான்

 

 

குறள் நமது ஆசான்

 

முகத்திலிருந்து தோன்றியவர்கள்

பிராம்ணர்கள்

தோளிருந்து தோன்றியவர்கள்

‌க்‌ஷத்ரியர்கள்

தொடையிலிருந்து தோன்றியவர்கள்

வைசியர்கள்

கால்களிருந்து தோன்றியவர்கள்

சூத்திரர்கள்

வேதம் இப்படிச்சொல்கிறது

கீதை தந்த கண்ணன்

நான்கு வர்ணத்தையும்  படைத்தேன் நான்

செய்தொழிலும்  செயல் சிறப்புமே 

ஆதாரங்கள் வர்ணப்பிறப்புக்கு

விளக்கம் சொல்கிறான்.

வேற்றுமை தெரிந்த

நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும்

அவன் கட்படுமே 

 பகரும் புறநாநூறு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வா செய்தொழில்

 வேற்றுமையான் போதிக்கும்

குறளே நமது ஆசான்

கலங்கரை விளக்கம் அதுவே.

வேதமும் கீதையும்

எந்தக்கதையோ 

சொல்லிப்போகட்டும்

---------------------------------------------

 

 


Friday, January 22, 2021

பெண்ணே நீ

 


 

 

பெண்ணே நீ

 

பிராம்ணன் பூணல்

போட்டுக்கொள்கிறான்

பூணல் போட்டுக்கொண்ட

எல்லோருமா பிராம்ணர்கள்

பிராம்ணப்பெண்

பூணல் அணிவதில்லை

பின் எப்படி அவள் பிராம்ணத்தி

பார்ப்பனப்பெண்

மணமகன் கைத்தலம் பற்ற

பிராம்ணத்தி ஆகிறாள்

அதுவரை அவள் யார்

பிராம்ணத்தி இல்லையோ .

கணவனை இழந்த

அத்தனைப்பெண்களும்

பட்ட இன்னல்கள்

சொல்லில் அடங்காது

உடன் கட்டை ஏற்றி

கணவன் சிதையில்

கொன்று விடுதல்

வழக்கமாய் இருந்தது

புண்ணிய பூமியில்

கைம்பெண்ணாய் இருந்தவள்

பட்ட துயரங்கள்

எழுதி  எழுதி எழுதி  மாளாது

எல்லாக் கொடுமைக்கும்

 பீடங்களின் ஆசீர்வாதமுண்டு

தலையில் முடியோடு

கைம்பெண்

பீடங்களைத் தரிசிக்க

பீடங்கள் தோஷப்பட்டுப்போகிறார்கள்

கைம்பெண் இறந்துபோனால்

அவள் பிறப்புறுப்பில்  சாணம் பூசி

சவத்தைச்

சுடுகாட்டுக்குத்தூக்கிப்போ

கணவனுக்கு முன்னே

அவள் சுமங்கலியாய்ப்போனால்

அவள்: பிறப்புறுப்பில்

மஞ்சள் பூசி

சுடுகாட்டுக்குத்தூக்கிப்போ.

இன்றைக்கும் நடைமுறை.

பெண் ஒருத்தி

 மதகுருமார் ஆகவே முடியாது

எந்த மதமானால் என்ன

அமெரிக்க த்துணை ஜனாதிபதியே

இன்றைக்குத்தான்

ஒரு பெண் கமலா ஹாரிஸ்

சின்ன சுவாரஸ்யம்

இந்தியர்களுக்கும்  அவர்

தூரத்து உறவாம்.

------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 


Thursday, January 21, 2021

சாதியும் தேர்தலும்

 

 

 

சாதியும் தேர்தலும்

 

நம்மில் ஒரு பகுதியை

ஊரிலிருந்து  புறந்தள்ளி

ஒதுங்கியே நீ வாழென்று

சபித்துத்துக் கொடுமை

செய்திட்ட சமூகத்தைப்

பாதகம் செய்தனை  நீ  எனச்

சுட்டிய  முதல்முதல்

எழுத்துக்காரன் யார்

சாதி இரண்டொழிய வேறில்லை

என்றாள் அவ்வை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்றார் வள்ளுவர்

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும்

அவன் கட் படுமெனச்

சுட்டியது புறம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஓங்கிச்சொன்னார் திருமூலர்

சாதிகுலம் பிறப்பென்னும்

சுழி பட்டுத்தடுமாறும்

ஆதமிலி நாயேன்  தானென்றார்

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர்

பிறந்த பல்லுயிரின்

 மனத்தளவு உறையும் இறை

என்றார் உமறுப்புலவர்

எத்துணையும் பேதமுறாது

எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி

உள்ளே ஒத்து

  உரிமை உடையவராய்

உவக்கின்றார் யாவர்

அவர் உளம் தான்  

இறை நடம் புரியும்  கனகசபை

 வள்ளல் ராமலிங்கர் சொன்னபடி

சாதிகள் இல்லையடி பாப்பா

 பாப்பவுக்கே சொல்லிப்போனார் பாரதி

கேட்பதற்குத்தான் ஆளைக்காணோம்

தமிழனுக்கு ச்சாதி

தொண்டைவரை அடைத்துப்

பாடாய்ப்படுத்துகிறது

தேர்தல் வந்து வந்து

சாதி விஷச்செடிக்கு

நீர் வார்த்து  விட்டுப்போகிறது

தேர்தலும்   தொலைந்தால்

காரிருள் தானே விஞ்சும்..

---------------------------------------------------------------------------

./

 

 

 

 

 

 

 

 


கோவில்

 


கோவில்           

 

இறைவன் சந்நிதியில்

சாத்தியமா சாதிப்பிரிவினை

மொழிகளிடை  உயர்வென்றும் தாழ்வென்றும்

வேற்றுமை பிறக்குமா

பதவிதான்  பொருட்டாகுமா

                                           வசதிக்காரன் ஏழை

 வித்தியாசம்   எடுபடுமா

                                            ஆண் என்றும் பெண் என்றும்

                                            பாலின வேறுபாடு         

                                            ஒன்றைப்போட்டு

                                                            ஒன்று  மிதிக்குமா

 நிற பேதங்கள் பொருட்டா  

இனங்கள் இடை

 எழு பேதங்கள் விளங்குமா

அவரவர் நம்பிக்கையில்

அடுத்தவர்க்கு வினா  முளைக்குமா

என்னைப்போலத்தான் என் அடுத்தவன்

 நினைப்பு க்கனியாதவரை

அங்கே  வானைத்தொட்டு நிற்பது

வெற்றுக்கல்கட்டிடம்தான்

 இருப்பிடம் இல்லை இறைவற்கு.

--------------------------------------------------------------------------------------------------

 

 

 


Wednesday, January 20, 2021

விவசாயி

 


 

 

விவசாயி

 

மூன்று மாதங்கள் முன்பு

விதையாயிருந்தவைதாம்

விவசாயி வஞ்சனையின்றி

மாடாய் உழைத்தால்

பயிர்கள் பூத்தன

நெல்மணிச்சுமை தாங்கிய அவை

மழை நீரில் மொத்தமாய் மூழ்கி

முளைவிடுகின்றனவே இப்போது

நாம் கற்ற வானியலுக்கு

மூன்றுமாத காலம்

மழை  வெள்ளமெப்படி

கணிக்கத்தான்  வாராது

நாட்கள் சில முன்பாக

மழை  கொஞ்சம்

வரும் விஷயம் அறிவித்தால்

அதுதானே பெரிய காரியம்

பெய்யாமல் கெடுப்பதுண்டு

பெய்தும் கெடுப்பதுண்டு

அளவோடு கொடுத்திட

வானுமேதும் கற்பதில்லை

வெள்ளம் வெள்ளம்

வெள்ளம் வெள்ளம்

தாமிரபரணித் தமிழகம்

திணறி விழித்தது

மொத்தமாய் தொலைத்தது

விளைவை மகசூலை.

விவசாயி மனமுடைந்து

நிற்கதியாய் நிற்கிறான்.

அரசியல் வாதிகள்

மூன்று மாதத்தில் வரவிருக்கும்

வோட்டு அறுவடைக்குத்தான்

வியூகம் அமைக்கிறார்கள்

 

 

 

 

 

 


Tuesday, January 19, 2021

உலகப்போக்கு

 


 

 

உலகப்போக்கு

 

 அன்புதனில் செழிக்குமாம் வையம்

போதும் நிறுத்து

மருத்துவ மனை

வெண்டிலேட்டர் வேலை செய்தாலென்ன

நொண்டிதான் அடித்தாலென்ன

டாங்கர்கள்  போர்முனையில்

சரியாக ப்பணியாற்றி

எதிரியை வீழ்த்தினால் போதும்

 

உலகப்போர் எதனிலும்

நேராகப்பங்கேற்றதாய் வரலாரில்லா

அந்த அமெரிக்காதான்

பாதுகாப்புக்கு இருபது லட்சம்

கோடி ரூபாயை

ஆண்டொன்றுக்கு

கொட்டி அழுகிறது

பார்க்கெலாம் திலகம் பாரதம்

ஐந்து லட்சம் கோடியை

ஆண்டுக்கு ஆண்டு

யுத்தத் தயாரிப்புக்குத்

தாரை வார்க்கிறது

போரிடும்  இப்பூவுலகம்

யுத்தம்  யுத்தமென

கொட்டி கொட்டித்தீர்க்கிறது

 செல்வ ஆதாரத்தை.

சீனா ரஷ்யா வட கொரியா

எனத்தொடரும்  அணிவரிசை

ஆயுதங்கள் மலையாய்த் தயாரிக்கும்

மனசாட்சியில்லா விலங்குகள்

சோதரக் குழந்தைகள் உணவின்றி

மருந்தின்றி செத்தாலென்ன

மக்கள்தாம் கெட்டாலென்ன

அவர் அவர் அகந்தை

கொடிகட்டிவானத்தில்

பறக்க மட்டுமே

எப்போதும் எல்லோரும்

பிரார்த்திக்கிறர்கள்.

-----------------------------

 

 

 

 

 


Monday, January 18, 2021

வடு

 


 

 

வடு              

 

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி

இரண்டாவது முறை

தேர்தலில் தோற்றுப்போனார்

ஜோ பைடன் பெற்றிட்ட

வெற்றியை ஏற்க மறுத்தார்

நீதி மன்றங்கள்

கைகழுவின அவரை

அடியாட்களோடு அமெரிக்கப்

பாராளுமன்றத்தைக்

குலுக்கித்தான் பார்த்தார்

கலவரம் வன்முறை துப்பாக்கிச்சூடு

பலியாயினர் ஐந்து பேர்

ஒருவர் அதனில் தாய்க்குலமாம்

வாட்டர் கேட் ஊழல் புகழ் நிக்சன்

நிலவில்  பொறிக்கப்பட்ட

ஓர் பூவுலக மனிதப்பெயர்

பதவி தொலைத்த 

நிக்ச னுக்குப்பின்னே

அசிங்கப்பட்ட அமெரிக்க  முதல்குடிமகன்

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க டிரம்ப்பின் வருகைப்

பெருநிகழ்வு குசராத்தில்

குடிசைகள் தெரியக்கூடாது

 மறைத்து விடு..  

நெடுஞ்சுவரெழுப்பிக்

கோடி பேர் கூடிச்

சொன்னோம் பெருவந்தனம்

நீங்குமா வடு வரலாற்றில்.

--------------------------------------------------------------------

 

 

 

 

 

 


Sunday, January 17, 2021

வினாவும் விடையும்

 


 

வினாவும் விடையும்

 

புருட சூத்திரம்

சொல்லும் செய்தி

முகத்தினின்று உதித்தவர்கள்

பிராம்ணர்கள்

தோளிருந்து தோன்றியவர்கள்

க்‌ஷத்ரியர்கள்

தொடை தந்தது

வைசியர்களை

கால்களிருந்து வரப்பெற்றோர்

சூத்திரர்கள்

வேதம் சொல்லட்டும் வெட்டிக்கதை

நீ என்ன சொல்கிறாய்

வினாவுக்கு விடை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

வள்ளுவம் சொல்கிறதே  

இன்னும் என்னதான் 

யோசனை உனக்கு.

------------------------------------------------------------------------- .

 

 


Saturday, January 16, 2021

எங்கே குகன்?

 

எங்கே குகன்?
.


விடுதலை சமீபிக்கிறது
'பாரதம் இரு கூறாகும் 

விஷயம்கருவுற்ற அன்றே

கொன்று போட்டனர் தேச பிதாவை.

நாதூராம் கோட்சேவா

காந்தியைக்கொன்றான்.
சதைப்பிண்டத்தை ச்சுட்டது அவனே.
.யார்தான் இல்லை என்றார்கள்.

.
ராவணனைக்கொன்ற
ராமனை நோக்க
குகனைத்தோள் சேர்த்த   

ராமன் உயரமானவன்

தேசத்தை மூன்றுமுறைசுற்றி வந்து.
ராமர் கோவில்களில்

 தேடிப்பாருங்கள்
குகனுக்கு எங்கேனும் ஒரு சின்ன அடையாளம் தானுண்டா


அனுமன் நெஞ்சுக்குள் ராமன் இருக்கலாம்..
கரியவன் நெஞ்சுக்குள்

 அன்புக் குகனே வாழ்கிறான்
ஊனக்கண்களுக்கு எப்படி ப் பிடிபடும்


தான் வரிந்து கொண்டபடி
மூத்தோனுக்காய்

 வாழ்க்கையைத்தொலைத்தான்
அந்த அயோத்தி இளவல்..
ஊர்மிளையின் சோகம்தான் ஊருக்கு த்தெரிந்ததா


ஆரியரல்லாதோரைப்பகைத்த
ஆரியர் வசம்  வீரம் மட்டும்

 மிச்சமிருந்தது.
அது வேதக்காலம்.


மனு சம்கிதை வந்து சூத்திரனை

மொத்தமாய் விழுங்கியபோது

பிராம்ணர்கள் 

அறிவுக் குருடானார்கள்.

------------------------------------------------------------------

?

அச்சம் தவிர்.

 

அச்சம் தவிர்.                    

 

சேமமுற வேண்டுமெனில்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சொன்னது மறந்து

மெல்ல த்தமிழ் இனிச்சாகும்

பாரதியின் வரியாய் மேடையில் முழக்குகிறார்.

பேதையொருவனே அப்படி உரைத்ததாய்

மாகவி சொன்னதை மறைத்திட்டார் அறங்கொன்றார்..

 

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்

காக்கைக் குருவி  எங்கள் சாதி பாடிய மாகவி

ஈனப்பறையர்களேனும் சீனத்தவராய்விடுவாரோ

எப்படிப்பாடலாம் எழுகிறது கேள்வி

கவியுளம் காண்கிலார் சித்தரிப்பே இது.

புதுவைக்கனகலிங்கம் கண்ணெதிரில் நிற்க

இப்படி வாராதொரு அய்யம்.

 

வேல்ஸ் இளவரசர்  பாரதவிஜயத்தை

கவி வரவேற்றதுதான் எப்படி

தொடர்கிறது வினா

சிங்கம் நாய்தரக்கொள்ளுமோ

கர்ச்சித்த மாவீரன் பாரதியை நோக்கித்தான்.

 

பிரஞ்சு ப்புதுவைக்கு த்தன் உயிர்

பெரிதென்று எடுத்தார் ஓட்டம் வருகிறது வசை..

ரெளத்திரம் பழகு ஆத்திச்சூடி படித்தும் இக்கேள்வி.

 

பாடுபடல் வேண்டா

ஊனுடலை வருத்தாதீர்

உணவியற்கை கொடுக்கும்

வினா வெடிக்கிறது புதிராய்.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செயக்

கூவியழைத்திட்ட மாகவியை

எப்படிக் காண்பாய் நீ ?.

 

முப்பெருங்கடன் தமிழர்க்கு

சாதி ஒழித்திடல் நல்ல தமிழ் வளர்த்தல்

பாரதி போற்றுதல்

சொல்லிப்போனார் புரட்சிக்கவிஞர். .

செவி நுகர்ந்த பாரதி அன்பர்கள் யாம்

வாளா விருக்கவா தக நிற்கவா?

 

பாரத நாடு

 


 

பாரத நாடு   

     `

கொரோனாவுக்குத்தடுப்பூசி

இன்று தொடங்குகிறது

அந்தத்திருப்பணி

இந்திய விஞ்ஞானிகளைப்

பாராட்டுவோம் மனதார

எத்தனை உழைப்பு எத்தனை அர்ப்பணிப்பு

மோடிப் பிரதமர் டில்லியில்

எடப்பாடியார் மதுரையில்

பெருந்தொற்றுக்கு எதிரான

தொடக்கப்போரில் பங்கேற்கிறார்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்வதில்

படிநிலைகள் பல

மருத்துவக்களப்பணியாளர்கள் முதன்முதலாய்

காவலர்கள் போர்ப்படையினர் பிறகு

முதியோர் பிறபிணியால் அவதியுறுவோர்

தொடர்வர் இப்படி

தடுப்பூசி பிரயோகித்தலில்

 ஏன் இப்படி அவசரம் அரசுக்கு

விமர்சனம் செய்வோருமுண்டு

எல்லோருமாய்ச் சேர்ந்தே சமுதாயம்

தடுப்பூசி தயாரிப்பில்

கொரோனாவை க்கையாள்வதில்

எமது நாடு

பேசப்படுகிறது பெருமையாய்

நூற்று நாற்பது கோடி மக்கள்தொகை

ஆயிரம் சமூகப்பிரச்சனைகள்

இயற்கை இடர்கள் அடுக்கடுக்காய்

பாகிஸ்தானும் சீனாவும்

மேற்கிலும் வடக்கிலும்

மாறி மாறித்தருவர் பெருவலி

ஆயிரம் இருந்தும்

பீடு நடை போடுகிறது பாரதம்

பெருமைகொள்  மிகச்சரியே.

-------------------------------------

 

 

 

 


Thursday, January 14, 2021

ஜெய் கிசான்

 


 

ஜெய் கிசான்             

 

விவசாயிகள் போராட்டம்

டில்லித்தலை நகரில்

உறையும் குளிரோடு கொரோனா அச்சம்

ஐம்பது நாட்கள் ஓடிப்போயீற்று

அறுபது மனித உயிர்கள் பலி

பேச்சுவார்த்தைகள் புஸ்வாணமாயின

உச்ச நீதி மன்றம்

தலையிட்டும் கதையொன்றும்

ஆகவில்லை இக்கணமும்

உச்ச நீதிமன்றம் சொல்லும் குழுவில்

விவசாயிகளுக்குப்பேச ஏது ஆள்

என்கிறார்கள் போராளிகள்

சட்டம் இயற்றும் போது

நாடாளுமன்றத்து ஆரோக்கிய

விவாதங்கள் செத்துக்

காலம் எத்தனையோ ஆனது

எண்ணிக்கை ஆணவம் தலைக்கேறி

ஆடத்தான் வைக்கிறது ஆட்சியாளர்களை

குரல் வோட்டெனும்

அந்த ஏமாற்று வித்தை தான்

இன்றைய நடைமுறை

ஜனாதிபதிகள் வாய் திறக்கமாட்டார்கள்

நடந்த சிக்கல்களை

மனசாட்சியுள்ள பிரகஸ்பதிகள் மட்டும்

புத்தகமாய் எழுதி விட்டுப்

போய்ச்சேர்வார்கள் அவ்வளவே

மக்களாட்சிக்கு இலக்கணம்

சொல்லும் பள்ளிக்குத்தான்

விலாசம் தெரியவில்லை.

--------------------------------------------------------------------------.

-----------------------------------------

 

 


Saturday, January 9, 2021

அடக்கி வாசிக்கலாம்

 


 

அடக்கி வாசிக்கலாம்

 

 எல்லாம் தெரிந்த ஏகாம்பரமா

 இல்லைவே இல்லை 

 ஆயினும் யான் கற்றுத்தெரிந்த

அறங்கள்  சிலவுண்டு

முற்றும் தோற்றுத்தான்

போயின  அவை இக்கணம்

கொரோனா காலம் என்னை

திருப்பி போட்டு

உலர்த்திப்பார்க்கிறது

தீதும் நன்றும் பிறர் தர வாரா

பொய்யாகிப்போனதே

பிறர்தர வருவன நிறையவே

ஆகத் திணறிப்போகிறதே மக்களினம்

விருந்தோம்பல் அதனை

உச்சிமேல் வைத்துப்

பேசியது  திருக்குறள்

எதுவுமே  சாத்தியமில்லை

கொரோனா சுருக்கிப்போட்டிருக்கிறது

மனித உறவுகளை

சுற்றமும் நட்பும் வேளிறிபோயின.

அன்பே சிவமென்றார்

பேரிடர் வருங்காலை

அறத்தை நிலை  நாட்ட

நானே வருவேன் நிச்சயமாய்

சொன்ன கீதையின் ஆசானை

எங்கே போய்த்தேடுவாய் நீ

கொரோனா காலம் பொல்லாதது

மனையாளை த்தனியறையில்

தள்ளி க்கதவு அடைத்த வைத்த  சோகம்

இன்பத்திலும் துன்பத்திலும்

சரிபாதி தெய்வங்கள் முன்பாய்ச்

செய்த சத்தியம்

ஏளனமாய்ப்பார்க்கிறது. என்னை

திருநீறும் குங்குமம்  கொடுக்க ஆளில்லை

வாங்குபவரும் இல்லை

தில்லைக் கூத்தன் சந்நிதியில்

கோவிலுக்குள் அச்சம் மென்னிபிடித்தது

போய்தான் வந்தேன்

சுவரிடமாவது சொல்லி அழவேண்டுமே

தெய்வமிருப்பதை இல்லாததை

தெளிந்துகொண்டு விடுவோமா நாம்

அத்தனை எளிதா அது

யார்க்கும் பிடிபடா பெருவிஷயம் பலவுண்டு.

எல்லாவற்றிர்க்கும் நம் கையிருப்பு

அறிவாலே விடைகாண பேரவாதான்

ஆட்டுக்குமே வால் உண்டு அளவுமுண்டு.

-----------------------------------------------------

 

 

 

 

 

 

 


 

 

 


Thursday, January 7, 2021

கரையோர வாழ்க்கை -

 

 

கரையோர வாழ்க்கை

 

ஏரி நிரம்பியதும்

மதகுகள் திறக்கப்படும்

ஆற்றின் கரையோரம்

வசிப்போர்க்கு அரசு  எச்சரிக்கை

நீங்கள் மொத்தாய்ச்

சென்றிடுவீர் பாதுகாப்பான இடம் நோக்கி

எத்தனை அழகு

அறிவிப்படா இது

எப்படிப்போவது எங்கே போவது

எதுவெல்லாம் சாத்தியம்

யாருக்குத்தெரியும் யாரைக்கேட்பாய்

போனவன் போனான்

இருந்தவன் இருந்தான்

மூன்று வேளைக்கு

உட்கார்ந்து உண்பவன்

எவனேனும்  ஆற்றின் கரையோரம் வாழ்கிறானா

அன்றாடம் உழைத்து

அயர்ந்து போவோன் மட்டுமே

எப்போதும் மாட்டிக்கொள்கிறான் வசமாய்

வதை மட்டுமே படுகிறான்

இன்று நேற்றல்ல

காலம் காலமாய் இப்படி

விதிப்படி எல்லாம்

நடக்கிறது நம்பு

சொல்லிச்செல்லலாம்

மனசாட்சி மரணித்துப்போனவர்கள்

ஆற்றின் கரையோரம் வாழ்ந்து

வெள்ள அறிவிப்பு வரும்கால்

அல்லோல கல்லோலப்ப்டுவோரைக்

கவனியுங்கள் என்றேனும்

அவர்களின் கண்ணீர் ஆயிரம்

சேதி சொல்லும்

----------------------------------------------------

 

 

 

 

 

Wednesday, January 6, 2021

செம்பரம்பாக்கம்

 

செம்பரம்பாக்கம்          

 

தாயைப்பழித்தாலும்

தண்ணீரைப்பழிக்காதே

சொல்லியிருக்கிறார்கள் எனக்கும்

செம்பரம்பாக்கம் என்னும் அரக்கன்

சென்னை வாசிகளுக்கு எமனாய்

இந்த ஆண்டிலே இது நான்காவது முறை

நிறைந்து போனதாம் ஏரி

ஆகத்திறந்து விடுகிறார்கள்

என்று திறந்தாலும் துக்கமே எனக்கு

புளி கரைக்கிறது அடி வயிற்றில்

விவரம் தெரியாமல் இடம் வாங்கி

வீடென்று  ஒன்று கட்டினேன்

கையில் வைத்திருந்த காசெல்லாம்

விழுங்கியது அது

அடையாறு அருகே

 மனை சயனித்திருப்பது 

 எங்கே தெரிந்தது

மனை ஒன்று வாங்கி வீடுகட்டி

குடியும் வந்தாயிற்று

கோபூசை லட்சுமி பூசை முடித்துத்தான்

ஆண்டுக்காண்டு அக்டோபர் நவம்பரில்

செம்பரம்பாக்கம்  வாய்த்திறக்க

சட்டியும் புட்டியும்

தூக்கிக்கொண்டு உறவுக்காரர்

வீடென்று போய் அவர்களுக்கும்

என் வருகை கசந்து போனதே

ஆக மழையொடு வெள்ளம் என்றால்

தாம்பரம்  மய்யமாய்

 வாடகை விடுதி

தங்கலும் பழகிப்போயிற்று.

கொரோனாவின்  பெருவருகை

அந்தத்தங்கலுக்கும்

வந்தது பார் ஆபத்து

ஆக என் மனையாளும் நானும்

கட்டிய வீட்டுக்குள்

முட்டிக்கொள்கிறோம்

தெருவெல்லாம்  முழங்கால்த்தொட்டு

அடையாற்று நீர்  நீட்சி

உலகத்துக்குப்பயை ச்சுமந்தபடி

வீட்டுக்குள் வரட்டுமா என்ன

கேட்கிறது அடையாற்று ஆகிருதி

குல தெய்வம் ராயம்பரம் செல்லியம்மனை

வேண்டித் துதிக்கிறேன்

நாத்திகன் நான் பொதுவுடமைக்காரன்

வேறு வழியேதும் தெரியவில்லை எனக்கு.

---------------------------------------------