Thursday, January 21, 2021

சாதியும் தேர்தலும்

 

 

 

சாதியும் தேர்தலும்

 

நம்மில் ஒரு பகுதியை

ஊரிலிருந்து  புறந்தள்ளி

ஒதுங்கியே நீ வாழென்று

சபித்துத்துக் கொடுமை

செய்திட்ட சமூகத்தைப்

பாதகம் செய்தனை  நீ  எனச்

சுட்டிய  முதல்முதல்

எழுத்துக்காரன் யார்

சாதி இரண்டொழிய வேறில்லை

என்றாள் அவ்வை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்றார் வள்ளுவர்

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும்

அவன் கட் படுமெனச்

சுட்டியது புறம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஓங்கிச்சொன்னார் திருமூலர்

சாதிகுலம் பிறப்பென்னும்

சுழி பட்டுத்தடுமாறும்

ஆதமிலி நாயேன்  தானென்றார்

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர்

பிறந்த பல்லுயிரின்

 மனத்தளவு உறையும் இறை

என்றார் உமறுப்புலவர்

எத்துணையும் பேதமுறாது

எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி

உள்ளே ஒத்து

  உரிமை உடையவராய்

உவக்கின்றார் யாவர்

அவர் உளம் தான்  

இறை நடம் புரியும்  கனகசபை

 வள்ளல் ராமலிங்கர் சொன்னபடி

சாதிகள் இல்லையடி பாப்பா

 பாப்பவுக்கே சொல்லிப்போனார் பாரதி

கேட்பதற்குத்தான் ஆளைக்காணோம்

தமிழனுக்கு ச்சாதி

தொண்டைவரை அடைத்துப்

பாடாய்ப்படுத்துகிறது

தேர்தல் வந்து வந்து

சாதி விஷச்செடிக்கு

நீர் வார்த்து  விட்டுப்போகிறது

தேர்தலும்   தொலைந்தால்

காரிருள் தானே விஞ்சும்..

---------------------------------------------------------------------------

./

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment