Wednesday, January 6, 2021

செம்பரம்பாக்கம்

 

செம்பரம்பாக்கம்          

 

தாயைப்பழித்தாலும்

தண்ணீரைப்பழிக்காதே

சொல்லியிருக்கிறார்கள் எனக்கும்

செம்பரம்பாக்கம் என்னும் அரக்கன்

சென்னை வாசிகளுக்கு எமனாய்

இந்த ஆண்டிலே இது நான்காவது முறை

நிறைந்து போனதாம் ஏரி

ஆகத்திறந்து விடுகிறார்கள்

என்று திறந்தாலும் துக்கமே எனக்கு

புளி கரைக்கிறது அடி வயிற்றில்

விவரம் தெரியாமல் இடம் வாங்கி

வீடென்று  ஒன்று கட்டினேன்

கையில் வைத்திருந்த காசெல்லாம்

விழுங்கியது அது

அடையாறு அருகே

 மனை சயனித்திருப்பது 

 எங்கே தெரிந்தது

மனை ஒன்று வாங்கி வீடுகட்டி

குடியும் வந்தாயிற்று

கோபூசை லட்சுமி பூசை முடித்துத்தான்

ஆண்டுக்காண்டு அக்டோபர் நவம்பரில்

செம்பரம்பாக்கம்  வாய்த்திறக்க

சட்டியும் புட்டியும்

தூக்கிக்கொண்டு உறவுக்காரர்

வீடென்று போய் அவர்களுக்கும்

என் வருகை கசந்து போனதே

ஆக மழையொடு வெள்ளம் என்றால்

தாம்பரம்  மய்யமாய்

 வாடகை விடுதி

தங்கலும் பழகிப்போயிற்று.

கொரோனாவின்  பெருவருகை

அந்தத்தங்கலுக்கும்

வந்தது பார் ஆபத்து

ஆக என் மனையாளும் நானும்

கட்டிய வீட்டுக்குள்

முட்டிக்கொள்கிறோம்

தெருவெல்லாம்  முழங்கால்த்தொட்டு

அடையாற்று நீர்  நீட்சி

உலகத்துக்குப்பயை ச்சுமந்தபடி

வீட்டுக்குள் வரட்டுமா என்ன

கேட்கிறது அடையாற்று ஆகிருதி

குல தெய்வம் ராயம்பரம் செல்லியம்மனை

வேண்டித் துதிக்கிறேன்

நாத்திகன் நான் பொதுவுடமைக்காரன்

வேறு வழியேதும் தெரியவில்லை எனக்கு.

---------------------------------------------

 

 

 

 

 

 

No comments:

Post a Comment