Saturday, May 18, 2024

சிறுகதை- அம்மா ஒரு புதிர்

 

அம்மா ஒரு புதிர்                                        

 

என் அம்மா தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தாள். தங்கை குடும்பம் மன்னார்குடியில் இருந்தது. கும்பகோணத்திலிருந்து தேக்குமரங்கள் ஓங்கிய ஆற்றங்கரைமீது, வளைந்து  வளைந்து போனால் வருமே அதே மன்னார்குடி தான். தனியாகத்தான் அம்மா பேருந்து பிடித்துச் சென்றாள். அம்மாவுக்கும் உடம்பு முடியவில்லை. சர்க்கரை நோய் இரத்த அழுத்தம்  எல்லாமும் அம்மாவைப் படுத்திக்கொண்டுதான் இருந்தது.

ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தாள்.’ நான் மன்னார்குடி போகவேண்டும்’ என்றாள்.

‘என்ன திடீரென்று’

‘என்னமோ தெரியவில்லை. போகவேண்டும் என்று தோன்றகிறது.’ எனக்குப்பதில் சொன்னாள்.  அம்மாவுக்கு ஏதேனும்  கெட்ட கனவு வந்து புறப்பட்டுச்செல்கிறாளோ என்று கூட எனக்கு யோசனை. இப்படி எல்லாம் அம்மா இதற்கு முன் சொன்னதில்லை. ஆனால் இன்று சொல்கிறாளே,

‘சரி புறப்படு’ அனுப்பி வைத்தேன்.

தருமங்குடி எனது ஊர். உள்ளூர்  பேருந்து நிறுத்தத்திலிருந்து  கும்பகோணம் செல்லும் பஸ் பார்த்து அம்மாவை ஏற்றிவிட்டேன். அம்மா கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கி  மன்னார்குடிக்கு பஸ் பிடித்து எப்படியோ தங்கை இருப்பிடம் போய்ச் சேர்ந்தாள். மன்னார்குடி கீழரெண்டாம் தெருவில்தான்  தங்கை குடியிருந்தாள். அம்மா  ஊருக்குப் போய்  ஒரு வாரம் கழிந்தது. மன்னார்குடியிலிருந்து எனக்கு ஒரு  போன் மெசேஜ் வந்தது. தங்கைதான் அனுப்பியிருக்கிறாள்.

‘அம்மா கீழே விழுந்து விட்டாள். காலில் நல்ல அடி. நடக்கமுடியவில்லை.  படுத்த படுக்கையாய் இருக்கிறாள். உடனே வந்து அழைத்துப்போகவும்’

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  தனது பெண்ணைப்பார்க்கவேண்டும் என்று போன அம்மா கீழே விழுந்தாள்.படுத்தும்விட்டாள். இதுவே செய்தி.

தங்கைக்கு சுந்தரகோட்டை மகளிர் கல்லூரியில் எழுத்தர் வேலை. சம்பளம் எல்லாம் ஆகூ ஊகு என்று இருக்காது. ஏதோ  கஞ்சி குடித்துக் காலட்சேபம் செய்யலாம் அவ்வளவே.  தினம் தினம் மதுக்கூர் செல்லும் பேருந்து பிடித்து  ஏறிப்போவாள். மாலையில் வீடு திரும்புவாள். கல்லூரியில் விடுமுறை என்பதெல்லாம்  சாதாரணமாகக் கிடைத்துவிடாது. அப்படிக்கிடைத்தாலும் விடுமுறை எடுத்த நாட்களுக்குச் சம்பளம் தரமாட்டார்கள். இப்படித் திண்டாடும் அவளால் அம்மாவுக்குத்தான்  என்ன செய்துவிட முடியும். ஆக எனக்குக்கிடைத்த அவசரத் தகவலை அனுசரித்து  நான் மன்னார்குடிக்குப்புறப்பட்டேன்.  

  தங்கையின் கணவருக்கு நிரந்தர உத்யோகம் எதுவுமில்லை. எந்த உத்யோகத்தில்  சேர்த்துவிட்டாலும் அவர் மூன்று மாதங்கள் கட்டாயம் பார்ப்பார். அதற்குப்பிறகு   அவருக்கு அங்கு போகப் பிடிக்காது. நவக்கிரகங்கள் உன்னை விட்டேனா பார் என்று தொடர்ந்து  படுத்தினால் ஒருவர்  என்னதான்  செய்ய முடியும். ஆக அவரிடமிருந்து எதையும் எப்போதும் எதிர்ப்பார்க்கவே முடியாது.

என் புத்திக்கு எட்டிய ஒரு மாப்பிள்ளை. அவரைப்பற்றி ஆழமாய் ஏதும் விசாரிக்கவில்லை. படுபாவியாகிய   நான்தான் வீட்டுக்கு  கூட்டி வந்தேன். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற அகம்பாவத்தின் விளைச்சலாய் இருக்கலாம்.  தங்கையோ  ,அவளை விட  நான் என்னமோ நாலும் தெரிந்தவன் என்று என்னை முழுவதுமாய் நம்பினாள். பாசம்.  என் தங்கை  அவனுக்குக் கழுத்தை நீட்டினாள். நான் படித்த முட்டாள் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். கெட்ட பின் ஞானி. விடுங்கள் அதை.

நான் மன்னார்குடிக்குப் புறப்பட்டேன். அம்மாவை சென்று பார்த்தேன்.என் தங்கை ஒரு வாடகை வீட்டில் தானே குடியிருந்தாள். ஒரே அறைதான் வீடு. வீட்டுக்குள் வீடு. ஒண்டிக்குடித்தனம் அவளால் அங்கு தான்  குடியிருக்கவும் முடியும். வாடகை அதிகம் தரமுடியாதே. அது ஒரு புறம் இருக்க அவளுக்குப்பாதுகாப்புக்கும் ஆள் வேண்டும். தங்கையின் கணவர் அடிக்கடி ஊரில் இருக்கவும் மாட்டார். என் தங்கைக்கு ஒரு பெண்  சமத்துக்குழந்தை. உள்ளூர் பள்ளியில் எட்டாவது படித்துக்கொண்டிருந்தாள்.தங்கைக்கு எவ்வளவோ கஷ்டம் இருந்தும் குழந்தையை ஆங்கில வழியில்  பணம் கட்டிப்படிக்க வைத்தாள். அவள்  பெண்ணும் நன்றாகவே  படித்து வந்தாள். கண்ணைக்கெடுத்த தெய்வம் கோலைக்கொடுத்தது.

 தங்கை என்னைப்பார்த்ததும்’ இப்போதுதான் அண்ணா  எனக்கு உயிரே வந்த மாதிரி இருக்கிறது’ என்றாள். கண்கள் கலங்கியிருந்தன. என் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டாள்.

‘அம்மா எங்கே’

‘அடுத்த வீட்டில் இருக்கிறாள். அடுத்த வீடு டாக்டர் வீடு’

அவளும் நானும்  அவசரமாய் அடுத்த வீட்டிற்குச் சென்றோம். அம்மா  அடுத்த வீட்டின் திண்ணையில் படுத்துக்கிடந்தாள்.

‘என்னம்மா ஆச்சு’

‘ வாடா, வா பாருடா,  என்ன ஆச்சின்னு என்  காலப்பாரு’

அம்மாவின் வலது காலில் மாவு கட்டு போட்டிருந்தார்கள். அம்மாவின் காலைத் தொட்டுப்பார்த்தேன்.

‘வலி எப்பிடி இருக்கு’

‘வலிச்சிகிட்டேதான் இருக்கு’

‘டாக்டர் மாத்திரை குடுத்துருக்காறாரா’

‘ஆமாம் மாத்திரை குடுத்துருக்கார்’

‘இது எப்பிடி ஆச்சு’

‘அடுப்புல பால் இருந்துது. அது கொதிச்சிப்பொங்கியது. அடுப்ப அணைக்கணுமேன்னு  கொஞ்சம் வேகமா போனேன். தடுக்கி கீழே விழுந்துட்டேன்.  காலுக்கு கீழே எள நீர் மட்டை.  குடிச்சிட்டு போட்டுருக்கா. அத எடுத்து ஓரமாபோடல. நட்ட நடுப்பற கெடந்துருக்கு. போற அவசரத்துல  நா  எளனி மட்டை  மேல கால வச்சிருக்கேன். அவ்வளவுதான் சர்ர்ன்னு வழுக்கிடுச்சி. நா தடால்னு  கீழே விழுந்துட்டேன். அப்பிடியே அசையாம கெடந்தேன். அந்த மனுஷனும் ஆத்துல இல்ல. எப்பவும் மாதிரி எங்கயோ சுத்த போயிட்டார்.’

தங்கை தொடர்ந்தாள்.

‘நா காலேஜ் விட்டு வீட்டுல வந்து  பாக்கறேன். எம்பொண்ணு பக்கத்துல ஒக்காந்துண்டருக்கா. பாட்டி கால தடவி தடவி விட்டுண்டு.  நா எப்ப வருவேன்னு என்னையே எதிர் பாத்துண்டு’

‘ஒன் புருஷன் எங்க போனார்’                                                                                   

‘அவர் வீட்டுல இல்ல. எங்க போனாரோ. பகவானுக்கே வெளிச்சம். ஆனா ராத்திரி பத்து மணிக்கு வந்தார். என்ன பண்றதுன்னு புரியில.  ஆனா உனக்கு  போன் மெசேஜ் குடுத்தோம். நீ காலம்பற வந்துடுவன்னு உன்ன நம்பிதான் உக்காந்துண்டு இருக்கேன். நானும் அவரும் இன்னும் எம்பொண்ணும் சேந்து இண்ணைக்கி காலம்பற இந்த டாக்டர்கிட்ட  அம்மாவ கூட்டிட்டிண்டு வந்தம்.  தூக்கிண்டு வந்தமா இல்ல  இழுத்துண்டு வந்தமா அது தெரியில ஆனா அம்மாவ இங்க கொண்டு வந்துட்டம். டாக்டர் நல்ல மனுஷன். பக்கத்து வீடு. பரோபகாரி’

அம்மா என்னையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.

‘வா, டாக்டரைப்பாத்து பேசிட்டு வந்துடுவம்’

தங்கையும் நானும் வீட்டினுள்ளாகச்சென்று மிக நல்ல மனிதரான அந்த  டாக்டரைப்பார்த்தோம்.

‘வணக்கம் டாக்டர். எங்க அம்மாதான்’

‘பரவாயில்லை. ஒரு மாவு கட்டு போட்டிருக்கேன்.  இது ஒரு ஃபஸ்ட் எய்டு அவ்வளவுதான்.  உடனே ஒரு எலும்பு டாக்டரைப் பார்க்கணும். எக்ஸ்ரே எடுத்துப் பாத்தாதான் எதுவும் சொல்லமுடியும்.  அம்மாவுக்கு ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிதான் ட்ரீட்மெண்ட் தரவேண்டியிருக்கும்’

‘உங்களுக்கு ஃபீஸ் தரணுமே’

‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.  அவ ரொம்ப கஷ்படற பொண்ணு. அந்த மனுஷனுக்கு சமத்து போறாது’

என் தங்கையின் கணவரைத்தான் டாக்டர் தெரிந்துகொண்டு சொல்கிறார். என் தங்கை என்னை ஒரு முறை ஆழமாய்ப் பார்த்தாள்.

‘ஆக வேண்டியதைப் பாருங்க அது ரொம்ப முக்கியம்’ டாக்டர் முடித்துக்கொண்டார்.

அரசு டாக்டராக வேலையில்  இருந்து ஓய்வு பெற்ற டாக்டர். மனிதாபிமானத்தில் ஏதோ ஒரு உதவி செய்திருக்கிறார் அது பெரிது.

‘உன் வீட்டுக்காரர் எங்கே’

‘உன்னை பஸ்டேண்டுல பாத்து அழச்சிண்டு வரேன்னு போனவர்தான்’

‘நா பஸ்டேண்டுல  அவர பாக்கல’

‘அவர் எங்க நின்னு எத வேடிக்க பாத்துண்டு நிக்கறாரோ’

‘கொழந்த ‘ அவள் பெண்ணைத்தான் சொன்னேன்.

‘ஸ்கூல் போயிருக்கா. நா  காலேஜுக்கு லீவு சொல்லிட்டு உக்காந்துண்டு இருக்கேன்’

‘ரொம்ப சரி. நா இப்ப பஸ்டேண்டு போறேன். அங்கதானே டாக்சி ஸ்டேண்டும் இருக்கு. ஒரு டாக்சி பிடிச்சிண்டு அவரயும் கூட்டிண்டு வந்துடறேன்’

‘இப்பதான் எனக்கு கண்ணுல வெளிச்சமே தெரியறமாதிரி இருக்கு’

‘சரி விடு. நா பாத்துகறேன்.’ நான் மன்னார்குடி பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இனி என்ன செய்வது. அம்மாவை  கடலூர் அழைத்துச்சென்று எலும்பு டாக்டரைப்பார்த்து  மேற்கொண்டு சிகிச்சை செய்யவேண்டும். தருமங்குடிக்கு அருகேயிருக்கும் பேரூர் அது.

மன்னார்குடி பேருந்து நிலையம் வந்தேன். தங்கை கணவரைத்தேடினேன். கையில் சிகரெட்டோடு குமுதம் புத்தகத்தைப்படித்துக்கொண்டு ஒரு பெட்டிக்கடை வாயிலில் நீட்டிப் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

‘அத்தான்’  என்ன செய்ய, அப்படித்தான் சகோதரி கணவரை அழைப்பது வழக்கம்.

‘வாங்க   மச்சான்’

‘நா வீட்டுக்கு போயிட்டு வர்ரேன். அம்மாவைப்பார்த்தேன். டாக்டர்கிட்ட பேசினேன். அம்மாவை கடலூர் அழச்சிண்டு போகணும். டாக்சி ஒண்ணு புடிக்கணும்’

‘ ரொம்ப சரி அதுக்குத்தான் உங்களுக்கு போன் மெசேஜ் போட்டேன்’

இருவரும் டாக்சி ஸ்டேண்ட்  பூராவும் தேடினோம். ஒரு டாக்சியைப்பிடித்துக்கொண்டு வீட்டுக்குப்போனோம். அம்மாவை டாக்சியின் பின் சீட்டில்  படுக்கையாய் அமர்த்தி வைத்துக்கொண்டு நானும் உடன்  உட்கார்ந்து கொண்டேன்.

‘நானும்  வரேன்,  இங்க இருந்து என்ன பண்ணப்போறேன். அங்க வந்தாலும் ஒரு  ஒத்தாசை’

தங்கையும் சரி என்றாள். மன்னார்குடியில் இருந்தால் என்ன  கடலூரில் இருந்தால் என்ன தங்கையின் கணவரைப் பொருத்தமட்டில்  எங்கிருந்தாலும் ஒன்றுதான். எந்த ஊரிலும் யாருக்கும் ஒத்தாசையாக இருக்கத்தெரியாத மனிதர். தெரிந்தேதான்  அப்படி இருக்கிறாரோ என்னவோ.

‘ஒம் பொண்ணதான்  பாக்காம பொறப்படறேன்.  எனக்கு அவசரம். சந்தர்ப்பம் அப்பிடி. அவகிட்ட சொல்லு’ என்றேன்.

‘நா சொல்லிக்கறேன். நீங்க பொறப்படுங்க.’ அம்மாவின் புடவை  மருந்து பொடி எண்ணெய் சீசாக்கள் சால்வை இத்யாதிகள் அடைத்துக்கொண்ட ஒரு பழைய பேக்கை  டாக்சியின்  டிக்கியில் வைத்தார்கள்.

அவளும் ஒரு பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு’ காலேஜுக்குப்போகணும். ’  என்றாள்.

 டாக்சியின் முன் சீட்டில் இடுக்கி பிடுக்கி உட்கார்ந்துகொண்டு மன்னார்குடி பேருந்து நிலையம் வந்து இறங்கினாள்.

டாக்சி கடலூருக்குச் சீறிக்கொண்டு சென்றது. வண்டியில் ஒடும்    சினிமா பாட்டைக்கேட்டுக் கொண்டே  தங்கை கணவர்  அரைகுறையாகத் தூங்கினார். நான் தங்கையின் நினைவாகவே இருந்தேன்.    ஒம் பொண்ணாயிருந்தா இப்பிடித்தான்  ஒரு மாப்பிள்ள பாத்து குடுத்து இருப்பிய்யா’ அம்மா என்னை  என்றோ கேட்ட கேள்வி. அதனை நான்   எப்படி  மறப்பது ?

 கடலூர் வந்தாயிற்று.அம்மாவை  மாவட்ட மருத்துவ மனையில்தான் சேர்த்தோம். காலில் எலும்பு மூட்டு நகர்ந்து போனதாய்ச்சொல்லி மணல் மூட்டை ஒன்றைக்கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். அம்மாவுக்கு  ஒரு மாதம் இந்த பீஷ்மப் படுக்கை. எப்படியோ திண்டாடினோம்.  அம்மாவுக்குக் கால் சரியான பாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ’பிசியோதெரபி விடாமல் செய்யுங்கள்’ சொல்லி  ஓட்டை ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  அம்மாவால்  தருமங்குடி வீட்டில் நகர்ந்து நகர்ந்து செல்லத்தான் முடிந்தது. எழுந்து நடக்க முடியாமல் திண்டாடினாள். மன்னார்குடிக்கே நான் போயிருக்க வேண்டாம் என்றாள். ஏது ஏதோ புலம்பினாள். அழுதாள். யாரையோ எல்லாம் திட்டிக்கொண்டே இருந்தாள்.

ஒரு சமயம் என் அப்பா உடம்பு  மிகவும் முடியாமல் இருந்தார். சிறு நீர் கழிக்க அடிக்கடி வாயில் கதவைத்திறந்துகொண்டு வீதிக்கு வரவேண்டியதாயிற்று. அவரால் முடியவும் இல்லை. இரவில் ஒரு பிளாஸ்டிக் குவளையை வைத்துக்கொண்டு வீட்டு முற்றத்திலேயே சிறு நீர் கழித்தார். அம்மா அவரை ‘நீங்கள் முற்றத்தில் இப்படி ச்செய்யக்கூடாது வாசலுக்குத்தான் சென்று வரவேண்டும் என கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அப்பா நொந்து போனார்.’ இப்படி இருக்கிறது என் பிழைப்பு’ என்று எனக்கு ஒரு போஸ்கார்டில்  காகித பென்சிலால் எழுதிப்போட்டிருந்தார். ஊருக்குப் போயிருந்த சமயம் இது விஷயம்  நான் அம்மாவைக் கேட்டேன். அம்மா எனக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. அது என் நினைவுக்கு வந்தது. அது வந்திருக்க வேண்டாம்.

‘என்னடா   நான்   இப்ப  கூடத்துல நகர்ரேன். என்னால நடக்க வக்கல.மித்தத்துலயே  யூரின் போறேன். உங்க அப்பா ஒரு சமயம் உடம்பு முடியாம இருந்தார். ’மித்தத்துல கூடவே கூடாது.  யூரின் போறதுன்னா   வாசலுக்குத்தான் போகணும்னு’  அவர  கட்டாயமா  சொன்னேன். அதுக்குதான் இப்ப  நான் படறேன்னு உனக்கு  மனசுல ஓடறதா.’

‘இல்லை அம்மா’ பொய்தான் சொன்னேன்.

என்  ஆழ்மனதில் என்னவெல்லாம் காட்சியாகியது என்பதை அம்மா எப்படியோ கண்டுபிடித்து விட்டாள் என்று ஆச்சரியத்தோடு அம்மாவைப்பார்த்தேன்.

‘நான் உன் அம்மா’ என்றாள்.

என் அம்மா அப்பாவிடம் ஏன்  அப்படிக்கண்டித்துச்சொன்னாள். அதற்கு ஏதேனும் ஒரு பொருள் இருக்கலாம். எனக்குத்தான் இன்னும் அது பிடிபட மறுக்கிறது.

===================================

 

 

 

 

 

 

 

 

 

கவிதை- 17/5/2024 சொல்புதிது கவிதைவாசிப்புக்கூட்டம்

 

17/5/24 கவிதை வாசிப்பு 

கூட்டத்தில்

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள் 



அனுபவம் 1


கலிபோர்னியா மாநிலம்

ஆர்டிசியா நகரில்

உடுப்பி ஹோட்டலும்

நல்லி சில்க்ஸ் ம்

சென்று பார்க்கலாம்

காசு கனமாக வேண்டும் 

உடுப்பி ஹோட்டலில்

சைவம் மட்டுமே மாற்றமில்லை

வண்ணப் பாட்டிலில்

சாராயம்

வயது வந்தோர்க்கு மட்டுமே 

தின்பதில் மீதமா 

டப்பா தருவார்கள்

சின்னதும்  பெரிசுமாய்

எடுத்துப் போகலாம் வீட்டிற்கு.

அஞ்சப்பர் உண்டு 

அசைவம் உண்டு

அச்சம் வேண்டாம் 

கைரேகை சோசியர் 

யுவராஜ் ரூம் போட்டு விஜயம்

கூட்டம் அதிகம்தான்

சீனா அமெரிக்கா எதிரியாம்

தோற்ற மாயை

பிரதானமாய் அவர்களே

அனைத்திலும்

இரண்டாவதாய் இந்தியர்கள் 

தமிழர்கள் காவடி எடுப்பதும்

தேர் இழுப்பதும்

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் எல்லா முண்டு 

எழுத்தாணி கொண்டெழுதிய திருக்குறளைத் தூக்கிப்பிடித்து 

தமிழ் அமைப்புகள் 

தலை நிமிர்ந்து 

உலாவருகின்றன.


அனுபவம் 2


இந்தியப் பொருட்கள் 

அமெரிக்க கடைகள்

புளி வாங்கப்போனால் 

கொட்டைகள் சகிதம் விற்பனை

உப்புக் கடலைக்கு ஆசைப்பட்டால் தொலும்பு 

முக்காலுக்கு இருக்கும் 

பலாப்பழம் விற்கிறார்கள்

ஆனை விலையில்

வாசனையே இல்லை 

கர்டு கிடையாது கடையில் யோகர்ட்தான் 

யோகர்ட் பிளெயின் 

சொல்லி வாங்கவேண்டும்

தவறவிட்டால் ஏதேனும் 

ஒரு நெடியொடு 

தயிர் போன்றது கிடைக்கும் 

பாலில் பலரகமுண்டு 

குழம்பித்தான் போகணும் 

புதிதாய்ப்போனவர்கள் 

எங்கேயும் மனிதர்கள்.


அனுபவம்   3


பூர்வீகமாய் 

இருந்த இந்தியரை 

ஒழித்தாயிற்று 

எல்லோரும் வந்தேறிகள் 

அமெரிக்காவில் 

ஐநூறு ஆண்டுகள் 

முன்னம் வந்தவர்கள் 

ஆட்சி செய்கிறார்கள் 

உலகத்தையும் சேர்த்து 

உழைத்துக்கொடுக்க 

ஆசிய இந்தியர்கள்

லட்சம் லட்சமாய் வரிசையில் நின்றுகொண்டு.

இந்தியத்திருநாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் 

ஏராளமுண்டு வரலாற்றில் 

இந்தியர்கள் வயிற்றுப்பசிக்கு வந்திறங்கி 

இருபத்து நாலு மணிநேரமும் 

உழைத்துத்தர உறுதியேற்கிறார்கள் நாளும்.


வேடம் கட்டிகள் 


தேர்தல் நேரத்தில் 

எத்தனைப்பொய்கள் 

மேடைதோறும் 

முழங்கப் படுகின்றன

யாருக்கும் வெட்கமில்லை.

ஆகிவிட்ட வயதும் 

கற்ற கல்வியும் 

பெற்ற அனுபவமும் 

சிறுத்துப்போய் நிற்க 

வோட்டுக்காய் வேடம்கட்டி 

எப்படி நடிக்கிறார்கள்

எம் தலைவர்கள்.

வாய்மையே வெல்லும் 

எழுதிவைத்துக்கொண்டு 

வாய்மையை வணிகப்பண்டமாய் 

மதிக்கிறார்கள் 

மக்கள் மதிமயங்கி 

கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.


Monday, May 6, 2024

கவிதை ரகசியம்

 இன்று நிகழ்ந்த இணையக்கவியரங்கில்

வாசித்த கவிதை. 16\2\24 ?




ரகசியம்



என் வீட்டருகே

வீடு கட்டாத மனையொன்றில்

மாமரம் ஒன்று

பருவம் தோறும்

கொள்ளையாய்க்

காய்க்கிறது

மாவடு பறிக்கும் மாமி

மாங்காய்க்குழம்பு

வைக்கும் பெண்டிர்

உப்பு கொண்டு நசிக்கித்தின்னும் சிறுவர்

மாவத்தல் போடும் ஆயாமார்

உச்சாணிக்காய்ப் பழுத்துச் சுவைக்கும்

அணில் குருவி

என எல்லோரும்

நன்றி சொன்னார்கள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு.

அவ்வப்போது வெள்ளநீர்

வருகையால்தான்

வீடு இன்னும்

எழாமல் கிடக்கிறது

வெறும் மனையாய்.



அனுபவம்



கவிதை எழுதுவதை

நிப்பாட்ட வேண்டும்

தொடர்ந்தால் துயரமே

கதை எழுதுவதும்

கட்டுரை புதினம்

புனைவதும் சித்திக்காமல்

மனம் சிக்கிக்கொள்கிறது

கவிதை வரிகளில்.

மொழிபெயர்ப்புக்குப்

போனால் அவ்வளவே

சொந்தக்கற்பனையின்

ஊற்றுக்கண்

அடைத்துக்கொள்கிறது

இறுக்கமாய்.

கவிதைக்காரன் கவிதையோடு மட்டுந்தான்

வாழணுமோ.


சொல்புதிது கவியரங்கு கவிதைகள்

 16/3/24  சொல் புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள்


அணிலைப் பார்த்தேன்

கலிபோர்னியாவில்

முதுகில் வரிக்கோடுகளில்லை

எங்கே என்றேன்

இலங்கைக்கு இராமன்

அணைகட்டுவதற்கு முன்பே

நாங்கள் குடிபெயர்ந்து

விட்டோம் குழுவாயிங்கு

ஆகத்தான் இல்லையது

பதில் சொன்னது.


எல்லோருமே காரில்

போகிறார்கள் அமெரிக்கர்கள்.

நடந்தால் சட்டை போட்டுக்கொண்ட

நாயோடு நடக்கிறார்கள்

ஹாய் என்கிறார்கள்

தேங்க்யூ என்கிறார்கள்

வேறு பேசுவது எல்லாம்

அவர் அவர்கட்கு 

மட்டுமே விளங்கும்

நமக்கில்லை எதுவும்.


இந்தியர்கள் இருபத்து

நாலுமணி நேரமும்

வேலை செய்யத்தயார்

என்பதால் உலகெங்கும்

வரவேற்பு

சொந்த மண்ணில்

எழுவதே இல்லை அது

காசு பார்ப்பார்கள்

கணக்குப் பார்ப்பார்கள்

சட்டம் பேசுவார்கள்.


லாஸ் ஏஞ்சலிஸ் 

சிவா விஷ்ணு கோவில்

உயரத்தில் பெருமாள்

ஏழுமலையான்

தாழ்ந்த நிலப்பரப்பில்

சிவன்

தமிழ்நாட்டு குருக்கள்

அர்ச்சகர்கள்

மடப்பள்ளி எல்லாமும்

லட்டு மட்டும் சுமாராய்

ஒன்றின் விலை ரூபாய் ஐநூறு.

கோவில் கோபுரத்தோடு

போட்டோ ஜோடி ஜோடியாய்

எடுத்துக்கொள்கிறார்கள்

எப்போதுமிருப்பவையோடு

இல்லாது போகிறவர்களின் ஆசை.


சாண்டியாகோ கடற்கரை

பசுபிக் பெருங்கடலின்

அனந்த சயனம்

கழுகுகள் கைக்கெட்டும் தூரத்தில்

அரை நிர்வாணத்தில்

வெள்ளையர்கள்

குறுக்கும் நெடுக்குமாய்

கருப்பர்கள்.

ஆங்காங்கே ஆசியாக்காரர்கள்.

அரேராம அரே கிருஷ்ண

பாடும் கீழ் பாய்ச்சி கட்டிய

வெள்ளையர்கள்.

அல்லேலுயா பாடி ஆடும்

ஆப்ரிக்க கிறித்துவர்கள்

பாருங்கள் பொடி மணலும்

பெருங்கடலும்

மந்தைமந்தையாய் மனிதர்களும்.


ஆரம்பிக்கிறது

பெங்களூரில் தண்ணீர்

பஞ்சம்

காவிரிதான் என் செய்வாள்

சென்னையிலோ வெள்ளம்

நவம்பரில் ஆண்டுக்காண்டு.

அடுத்த மகனோ

அமெரிக்காவில்.

கீலமாய் கிராமத்தில்

அப்பா விட்டுச்சென்ற வீடு.

சரிப்படவில்லை 

எதுவும்

என் செய்வேன் நான்.


கவிதை- அமெரிக்க வாழ்க்கை

 இணையக் கால கவியரங்கம் 24/3/24



அமெரிக்க வாழ்க்கை



சிகரெட் பிடிப்பதும்

சாராயம் அடிப்பதும்

சகஜமாகிய பெண்கள் நடப்பு

பளிச்சென்ற சாலையில்

வலதுபுறமாய்

வாகனங்கள் வரிசை

வாகனங்களில் இடது புறம்

ஓட்டுனர் அமர்ந்து மட்டுமே பயணம்

நாம் மறந்துபோன

மறந்துபோன பவுண்டும்

அவுன்சும் காலனும்

அடியும் இஞ்ச்சும்

அங்கங்கும் அளவைகளாய்

நாய்கள் முன்னே போக

பின் தொடரும் மனிதர்கள்

நாயுக்கும் பூனைக்கும்

டே கேர் உண்டு

எமர்ஜென்சி ஐசியு

எல்லாமும்

பள்ளிப் பிள்ளைகள்

தரம் பார்த்துப்பார்த்து

ஒரே வகுப்பில் 

பள்ளிப் பிரிவினைகளோ ஏராளமாய்

கேனில் பாலை வாங்கி

மாதமொன்றுக்கு

வைத்துக் கொள்கிறார்கள்

அவரவர் சமையல் கட்டில்

மாடுகள் கறந்த பாலில்லை நிச்சயமாய்

கனக்காசு வைத்துக்கொண்டு

கடவுளைப் நேரம் பேசும்

மக்கள் ஊர் முச்சூடும்.


கவிதை- அமெரிக்க அழகு

 இணையக் கால கவியரங்கம் 21

25/3/24



அமெரிக்க அழகு


லாஸ் ஏஞ்சலிசில்

இன்று கெட்டிஸ் பூங்காவும்

கெட்டிஸ் மியூசியமும்

பார்க்க வாய்த்தது

மலைச்சரிவில் 

டிராமில்

பயணித்துப் பார்க்க

இயற்கை அழகு

கொட்டிக் கிடக்கிறது

அபரிமிதமாய்.

மலையும் வனமும்

கொள்ளை கொள்கிறது

கண்களை

இத்தாலிய ஓவியங்களின்

அழகோ அழகு

எகிப்திய ஐரோப்பிய

சிலைகளின் மறு உருக்கள்

தத்ரூபமாய் நின்று நின்று

பேசுகின்றன பார்வையாளர்களோடு.

காலைமுதல் மாலைவரை

சுற்றி சுற்றிப் பார்த்தோம் குடும்பத்தோடு

எண்ணிக்கையில் ஆயிரம் இருக்கலாம் ஆனாலும்

தமிழ் நிலத்துக் கோவில் சிலைகளில் ஒன்றை நினைக்க

அத்தனையும்

நீர்த்துத் தான் போயின.


கவிதை- கலிபோர்னியாவில் கடைக்குப்போனேன்

 இணைய கால கவியரங்கம் 22


26/3/2024


கலிபோர்னியாவில் கடைக்குப்போனேன்


கலிபோர்னியாவில்

ஒரு கடைக்குப் போனேன்

கிரெடிட் கார்டின் ஆட்சி

அமெரிக்க கடைகள்

ராட்சசத் தனமாய்ப் பெரியவை

வால்மார்ட் அமேசான் என்றபடி

அசைவ உணவே பிரதானம் அதிலும் மாட்டுக்கறி

டப்பாக்களில் அடைத்து அடைத்து 

கறி காய்களை

நறுக்கி நறுக்கி விற்கிறார்கள்

இடுக்கில் இந்தியப் பொருள் விற்கும் கடைகள்

மளிகைக்கடை ஆனாலும்

சாராயம் விற்பனை

வண்ண வண்ண பாட்டில்கள் பெண்களின்

படங்களோடு.

மூலைக்கு மூலை அலெக்சா வசதி

என்ன பொருள் தேவை

கிடைக்குமா அது ? கேட்டறியலாம்

நான்கு இணாக்கு கறிவேப்பிலை ரூபாய் நூறு விலைவாசி

கணக்குப் போடலாம்

கடைக்கு வரும்

குழந்தைகட்கு

ஆரஞ்சு ஆப்பிள் வாழை

இலவசமாய் தந்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.


கவிதை- அமெரிக்க வீடுகள்

 இணையக் கால கவியரங்கம்


அமெரிக்க வீடுகள்


எல்லார் வீடுகளிலும்

எந்தக் குழாயிலும்

தண்ணீரும் வெந்நீரும்

இப்படி அப்படித்

திருகினால் மாறி மாறி வரும்

கண்ணாடிச்சுவர்களோ

அனாயசமாய்

தரையோ மரப்பலகை

மின்சாரம் பொய்க்காது

இருபத்து நாலு மணிநேரமும்.

அனைத்து வீடுகளிலும்

ஹீட்டரும் உண்டு

ஏர்கண்டிஷனும்தான்.

ஆண்டுக்கு மூன்றுமுறை

கடிகாரத்தை திருத்தி வைக்கிறார்கள்

பள்ளிப் பிள்ளைகளுக்கு

புத்தகச் சுமையில்லை

எல்லாமே பள்ளியில்

வீட்டுப்பாடம் இல்லை

விடுப்பு மிகையாய்

மொழி  ஒன்று ஆங்கிலம் மட்டுமே

பஞ்சாங்கம் இல்லை

ராசிபலனும் இல்லை

வார சூலை இல்லை

 நிம்மதி.


கவிதை -மால் அனுபவம்

 இணையக் கால கவியரங்கம் 24


28/3/24





மால் அனுபவம்



லாஸ் ஏஞ்சல்ஸில்

வெஸ்டேர்ன் டோபங்கா

ஷாப்பிங் மாலுக்குப்போனேன்

நீளமும் அகலமும்

மைல் ஒன்றுக்கு இருக்கலாம்

பெருங்கட்டிடம் 

எத்தனையோ அடுக்குகள்

எல்லாமே கடைகள் கடைகள்

மாதர் அணிகலன்கள்

மணிகள் மாலைகள்

செருப்பொடு 

ஷூ க்கடைகள்

பை பையாய் சாக்லைட் விற்கும் கடைகள்

கைப்பைகள் விற்கும் கடையோடு கண்ணுக்குக்

கண்ணாடி விற்கும் கடைகள்

ஆயத்தத்துணிமணிகள்

இசையொடு கலை உருக்கள்

உணவுகள் அனைத்துமே

இத்தாலி நாட்டுப் பெருமிதம்

சொல்லிக்கொண்டு

உண்பது நாழி உடுப்பை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே

புறநானூற்று வரியை

கொட்டை எழுத்துக்களில்

மால் வாயிலில்

எழுதி வைத்தால் தேவலை

சாத்தியமா என்ன?


கவிதை -அமேசானில் தமிழ்

 இணையக் கால கவியரங்கம் 25


29/3/24




அமேசானில் தமிழ்



அமெரிக்காவில்

அமேசான் ஃப்ரெஷ்

கடைக்குப் போனேன்

மனைவி புடவையில்

நான் வேட்டிச் சட்டையோடு

தானாகத் திறந்துகொண்ட

வாயிலைத் தாண்டினோம்

'வாங்க வணக்கம் '

வெள்ளைக்காரி எங்களை

வரவேற்றாள்

' வணக்கம் இது என்ன அதிசயம் தமிழ் 'என்றேன்

வேண்டிய சாமான்கள்

சிலது கிடைத்தது

சிலது இல்லை

இந்தியன் ஸ்டோருக்குப்

போங்கள் என்றாள்

சென்னைப் போரூரில் ஏழு ஆண்டுகள் 

குடியிருந்தேன்

உஸ்மான் சாலையில்

திரிந்தவள் நான் என்றாள்

அசோஜ் என்று பெயர்

சட்டைப்பாட்சில் பார்த்தேன்

வாசல் வரை வந்து வழியனுப்பினாள்

சென்னை வாசம் கொள்ளை கொண்ட தாய்க்

கூறிப் போனாள் செந்தமிழில்.


கவிதை- அமெரிக்க தேர்தல்

 இணையக் கால கவியரங்கம் 26


30/3/24



அமெரிக்கத் தேர்தல் 2024



இந்தியாவில் மட்டுமா

அமெரிக்காவிலும் நாடாளுமன்றத் தேர்தல்

ஜோபைடனனா

டிரம்ப் பா

ஜனநாயகக்கட்சி

குடியரசுக் கட்சி

இரண்டுக்கும் இடையே போட்டி

ஜோபைடன் தலைவராய்ப்

பதவியேற்கும் சமயம்

பதவி விலகும்  டிரம்பால்

வன்முறை

துப்பாக்கிச்சூடு உயிர்ப்பலி எல்லாமும்.

மக்கள் தீர்ப்பை

மதிக்காத டிரம்ப் மீண்டும்

ஜனாதிபதிக்குப் போட்டியாம்

உக்ரைன் ருசியப் போரிலும்

பாலஸ்தீன இஸ்ரேல் போரிலும்

பொறுப்பற்று நடந்துகொண்டார் ஜோபைடன்

மக்கள் வருத்தத்தில் மொத்தமாய்.

ஜோபைடன் செய்தது தவறு

டிரம்ப் செய்ததும் தவறு

எது தேவலாம் என்பதே 

இன்றைக்கு தேர்தல் யுக்தி

மக்களுக்கு இலவசங்கள்

வழங்குவதில் போட்டியில்லை.


கவிதை -பெட்டை மண்

 இணையக் கால கவியரங்கம் 27


 



  பெட்டை மண்



லாஸ் ஏஞ்சல்ஸில்

பையன் வீட்டைச் சுற்றி

பெயர் தெரியாத மரங்கள்

வானம் தொட்டு

பச்சைப் பசேல் புல்வெளி

வரிசை வரிசையாய்

வாசமிலா அழகு மலர்கள்

வெகுளியாய் சிரித்துக்கொண்டு

வீட்டுக்கு வீடு

சட்டை  பட்டை போட்ட

குள்ள சாதிச் சடை நாய்.

ஆங்காங்கே

நீச்சல் குளங்கள்

ஜிம் கூடங்கள்

டென்னிஸ் கோர்ட்டு கள்

வாலிபால் மைதானம்.

தென்னை வாழை மல்லி முல்லை கறிவேப்பிலை கொய்யா ஒரு துளசி

தக்காளி வெண்டை

கத்திரி எச்செடியும் முளைக்காதாம்

நம்மூர் பெட்டை மண்ணை

நினைத்துக்கொண்டேன்

கொடுத்து வைத்தவர்கள் நாம்.


கவிதை-குழந்தையின் அழுகை

 இணைய கால கவியரங்கம் 28

1/


குழந்தையின் அழுகை


ஒரு வயது நிரம்பா

பேரக் குழந்தை

ஓயாது அழுகிறது

தாயும் முனைகிறாள்

தந்தையும் முனைகிறான்

அழுகை நின்றால் தானே

தாத்தா நானும்

பாட்டி அவளும்

எத்தனைச் சமாதானம் செய்தும்

அழுகை நின்றபாடில்லை

பால் குடித்தாயிற்று 

கிரைப் வாட்டர் ஊற்றியும் ஆனது

எப்படிச் சமாதானம் செய்வது

கூடை நிறை பொம்மைகள்

வைத்து ஆட்டம் காட்டியும்

அழுகை நின்றால் தானே

என்ன செய்வதென்று

விழித்த போது

போர்ட்டி கோவில்

பொத்தென்று குதித்தது

ஒரு பூனை

கருப்புப் வெள்ளையுமாய்

குழந்தையைப் பார்த்தது

அழுகையும் நின்றது

மொக்கை வாயில்

வந்தது புன்னகை.


கவிதை- கடல் கடந்து

இணையக் கால கவியரங்கம் 29

2/4/24



கடல் கடந்து


மதம் குறுக்கே நின்றது

கடல் கடந்து போகக்கூடாது

தாய் புத்லிபாய்

காந்திக்கும் சொன்னார்

இப்படி ஆயிரம் சேதிகள் உண்டு

மீறிப்போன காந்தி

மகாத்மாவாகித் திரும்ப வந்தார்

இந்தியக் கடவுளர்கள்

புவியெங்கும் பரவி

கோவில்கள் ஆங்காங்கு.

சிற்பக் கலைஞர்கள் ஆசாரிகள்

சிவ ஆச்சாரியார்கள்

பட்டாச்சாரியர்கள்

மொத்தமாய்க்கடல் கடந்து

எல்லாம் மாறும்

என்பதே மாறாதது

சொல்கிறது மார்க்சியம்.


கவிதை- காலம்

 இணைய கால கவியரங்கம் 30

6/4/24



காலம்



புதினம் ஒன்று

எழுதலாம்

மாதம் ஒன்றாய்

தீவிர யோசனை

தடம்  எதுவுமே சரியாக

அமையாமல் இழுத்தடிப்பு

யோசித்துத்தான் பார்க்கிறேன்

பொருத்தமாய் அமையவில்லை எதுவும்

பிடித்த மாதிரி

தடம் ஒன்று

அமையாமல்

நேரம்தான்

சலிப்பாய் கழிகிறது

காலத்தைவிட உயர்ந்தவொன்று

ஈங்கில்லை

காலம் பொன் போன்றது

சரியில்லை அதுவுமே

காலத்திற்கு ஈடேயில்லை

காலத்திற்கு இணையும் இல்லை

காலம்  காலம் மட்டுமேதான்.


கவிதை- எது எப்படி ஆயினும்

 இணையக் கால கவியரங்கம் 31


9/4 


எது எப்படி ஆயினும்



தைவானில் பூகம்பம்

வானுயர்  கட்டிடங்கள் 

நெளித்துக்கொண்டும்

நொறுங்கிப்போயும்

அச்சம் தருகிறது

தொலைக்காட்சியில். காட்டினார்கள்

நேர்ந்திட்ட

அவலத்தை.

மக்கள் அல்லாடினார்கள்

மனித இனம் எத்தனைக்கு

கையறு நிலையில்

காலம் தள்ளுகிறது

கண் எதிரே காட்சியானது

எது நிகழ்ந்தால் என்ன

புடின் சண்டையை

நிறுத்தப்போகிறாரா

காசாவில் தான்

அமைதி திரும்புமா

ஆப்கனில் ஏதேனும்

உருப்படியாய்

நகரப்போகிறதா

இருநூறு ஆண்டுகள்

வரலாற்றைப் பின்னுக்குத்தள்ளிக்கொண்ட

இலங்கைத் தமிழர்களுக்கு

நல்ல பொழுதுதான் விடியுமா?


கவிதை- கிரகண விசேஷம்

 இணைய கால கவியரங்கம் 32


10/4/24




கிரகண விசேஷம்


அமெரிக்காவில் சூரிய கிரகணம்

இங்குமே அது அமாவாசையன்று தான் 

தர்பைப்புல் இல்லா தர்ப்பணம் நடந்தது

எத்தனை மணிக்குப்பிடித்து

எத்தனைக்கு விடுகிறது

பெங்களூர் சின்ன மருமகள் நாசா அறிக்கையை

அனுப்பி வைத்தார்

வாட்ஸ்ஆப்பில்

கண்ணுக்குக் கிரகணக் கண்ணாடி

போட்டவர்கள்

அமெரிக்க சாலையில்

உலா வந்தார்கள்

சன்னலுக்குத் திரையிட்டு

அமெரிக்க வீட்டில்

கிரகண சவுகரியம்

செய்து கொண்டோம்

சேரன் மாதேவி சம்பந்தி

தன் மகள் நட்சத்திரத்திற்கு

ஆகாது 

நவக்கிரகப்ரீதி செய் சேதி சொல்ல

பையன் குடும்பம்

மல்லிபு  சிவன்கோவில் 

நவக்கிரகம் சுற்றிவர

இம்பாலா காரில் புறப்பட்டது.


கவிதை-சக்கர வாழ்க்கை

 இணைய கால கவியரங்கம் 33

11/4/24


 


சக்கர வாழ்க்கை


என் அப்பாவின் அப்பா

பெலாக்குறிச்சி

ராயம்பரம் வனங்களிடை

வாழ்ந்து முடித்தார்

அம்மாவை மணம் முடித்து 

தருமங்குடிச் சமவெளிக்கு 

வந்தார் அப்பா

நானோ தருமங்குடியைத் 

தொலைத்தேன்

முதுகுன்றம்

கடலூர்  சென்னை எனச் சுற்றி வந்தேன்

என் மகனோ கலிபோர்னியாவில் உத்யோகமென அமெரிக்கா போனான்

என் பேரனோ அமெரிக்கப் பிரஜையானான்

அமெரிக்க

பாஸ்போர்ட் டோடு.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்றேன்

வசு தெய்வகுடும்பகம் என்கிறானே பெற்ற பிள்ளை.


கவிதை- சின்ன விஷயம்

 இணைய கால கவியரங்கம் 34


12/4/24


சின்ன விஷயம் 


எனக்கு நானே

தலைமுடியை ஒழுங்கு 

செய்கிறேன்

கொரானா காலத்தில் 

தொடங்கிய பழக்கம் 

தொடர்கிறது இன்னும் 

எத்தனையோ பேர்வழிகள்

தம் தலைமுடியைத்

தாமே வெட்டிக்கொள்வதாய்

என்னிடம் சொன்ன போதெல்லாம்

எப்படிச்சாத்தியம் இது

எண்ணியவன் நான்

ஆண்டுகள் நான்கானது

என் தலைமுடி பார்த்து

'இது என்னய்யா இப்படி'

கேட்கவும் இல்லையே யாரும்.

இப்போதுதான்

தலைமுடி

அழகாய் இருக்கிறது 

என்கிறாளே

 அவளும்.


கவிதை- என்ன செய்ய ?

 இணைய கால கவியரங்கம் 34


13/4/24

 


என்ன செய்ய?


தாவரங்களின்

வண்ண வண்ண மலர்கள் 

அழகு காட்டி

மணம் வீசி

மது வழங்கி

எத்தனை கண்ணியமாய் 

தம்மினம் கூட்டுகின்றன

மிருகங்கள் மொத்தமும்

பெடையோடு எப்போது 

தேவையோ அப்போது

மட்டுமே கூடிக்களிக்கின்றன

அண்மையில் புதுச்சேரியில்

பத்து வயது பிஞ்சை 

நாசமாக்கிச் சாக்கடையில்

வீசி எறிந்த ஜன்மங்களை

எண்ணி எண்ணி 

மனிதகுலம்

வெட்கித் தலைகுனிகிறது

ஈராயிரம்  ஆண்டுகள் முன்னம்

திருக்குறள் ஈந்த மண்ணப்பா  இது.


கவிதை-அங்கங்கும்

 இணைய கால கவியரங்கம் 36


14/6/24



அங்கங்கும்



இந்தியப் பொருள்கள் 

கிடைக்குமென

கலிபோர்னியா மாநிலம்

ஆர்டிசியாவில்

பயோனியர் என்னும்

கிராசரிக்கடை ஒன்றிர்க்குப்

போனேன்

நம்மூர் உருண்டை

 பன்

 பத்தும் ஆறரை டாலர்

போட்டிருந்தார்கள்

இந்திய

மதிப்பில்  பத்து பன்னும் ரூபாய் ஐநூறு.

வாங்க மனம் யோசித்தது

கடையின் ரெஸ்ட் ரூம்

அருகே

டூ டாலர் டூ டாலர்  என

பிச்சை கேட்கும் வெள்ளைக்காரனின் குரல்

அதுவும் சரிதான் 

அவர் அமெரிக்க

பிச்சைக்காரர்.


கவிதை-உண்மை சுடும்

 இணைய கால கவியரங்கம் 37


1


உண்மை சுடும்


உண்மையைச் சொன்னால்

காது கொடுத்துக் கேட்பதில்லை யாரும்.

பொய்மைக்குக் கவர்ச்சி 

அதிகம்

ரசிகர்கள் அதிகம்

அசுர வேகமுடையதுவே

அபத்தம் எப்போதும்.

வரலாற்றில் ஆயிரம்

பொய்கள் ஏறியிருக்கலாம்

கல்வெட்டுக்கள் அவைகளைத்

தாங்கியும் நிற்கலாம்

எந்தக் கல்வெட்டை யும்

எப்படித்தான் அப்படியே

நம்புகிறார்களோ

ஒரு உண்மையை

ஏழு தினுசுகளாய்த்

திரித்தும் பேசுவோர்

வழிவந்தவர்கள் நாம்

அன்று மட்டுமென்ன

கிழித்து இருக்கப்போகிறோம்.


கவிதை- புதிர்

 இணைய கால கவியரங்கம் 38

16/4/24


 


புதிர்


வாசலில் ஒரு அழகுச்

செம்பருத்தி 

அழகாய்ப்பூத்து வந்தது

மலரை நான் கொள்வதில்லை

பாவம் விட்டுவிடுவேன்

நல்ல பதியனாய் வாங்கியதுதான்

வேரில் செம்மண் போட்டு

வளர்த்தேன்

நல்ல நீர் தினமும் 

வார்த்தேன்

அவ்வப்போது எருவுமி ட்டேன்

எந்தப் பூச்சியும் அரிக்கவுமில்லை

பின் எப்படித்தான் அது

காய்ந்து‌ போனது திடீரென்று 

மலரை நான் கொய்யாதது கோபமோ.


கவிதை- கவியுளம்

 இணைய கால கவியரங்கம் 39

17/4/24



கவியுளம்



மெல்லத் தமிழ் இனிச்சாகுமென்று

பாரதி உரைத்ததாய் 

எத்தனையோ மேடைகளில்

தவறாய்ச் சொல்வதைக்

கேட்டுத்தான் இருக்கிறேன்

அரைகுறை வாசிப்பா

வேண்டுமென்றே பேசுவதா 

பாரதி இன்னவன்

இவனை எப்படிச் சொன்னால்

என்ன வென்று இருக்கலாமோ

மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்று 

அந்தப் பேதை உரைத்தான் 

அந்த வசை எனக்கு

வரல் ஆகாது எனத்

தமிழைத்தான் உயர்த்துகிறார் பாரதி

கவியுளம் காணாக்கீழ்மையை 

எப்படிப் பொறுப்பது.


கவிதை- நாம் யார்

 இணைய கால கவியரங்கம் 40


18/4/24




நாம் யார்?


உலகமே ஒரு

கொலைக்களம்

ஒன்றைத் நின்று

ஒன்று வாழும்

என்ன கணக்கு இதுவோ

யாருடைய சூத்திரமோ

புல்லைத் தின்னும் ஆடு

ஆட்டைத் தின்னும் புலி

புழுவைத்தின்னும் எறும்பு

எறும்பைத்தின்னும் பல்லி

பல்லியைத்தின்னும் பூனை

பூனையைத் தின்னும்  குறவன்

மனித மாமிசம் தின்போரும் உளதாய்

படித்திருக்கிறோமே

என்றும் விடை தெரியாக்

காலக்கணக்கின்

புள்ளிகள் நாம்

விடை தெரியவரும் போது

நாமே

வினாவாகி நிற்போம்.


கவிதை- அனுபவம்

 இணைய கால கவியரங்கம் 41


19/4/24



அனுபவம்


பச்சைக் கொத்துமல்லி 

ரசம் வைக்க

வேண்டுமென்றாள் மனைவி

வுட்லேண்ட் ஹில்ஸில்

அமேசான் கடைக்குப் போனேன்

சிறு கத்தை 

 டாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்

பார்த்த மருமகள்

இது பார்ஸ்லே என்றாள்

வாயில் போட்டுப் பார்த்தேன்

சுவையில் ஏதோ ஓர் நெடி

திரும்பக் கொண்டு கொடு

கடையில் என்றாள் மனைவி 

உரிய பில்லோடு

கடைக்குப் போனேன்

அமேசானில் அதே உபசரிப்பு 

அதே மரியாதை

கொத்துமல்லிக் காசோடு

அதற்கு எத்தனை வரி

போட்டிருந்ததோ இரண்டையும் கூட்டி

திருப்பிக்கொடுத்தாள்

புன்னகைத்தாள் கடைக்காரி

நன்றி பல சொன்னாள் 

திரும்பக்கொடுத்த டாலருக்கும் பில் தந்தாள்

நம்மூரில் தங்கமே வாங்கினாலும் இதுவெல்லாம்

 இப்படிச் சாத்தியமேயில்லை.


Sunday, May 5, 2024

கவிதை-சோதிடம்

 சோதிடம் 



சோதிடம் பொய்யென்றாலும்

அது பார்ப்பது மட்டும் ஓயவில்லை

யோசித்துப் பார்க்கிறேன்

ஆயிரம் ஆண்டுகளாய்

தொடர்கதையாய்த் தான் இது

தூக்கி அதனை ஓரமாய்

வைத்துவிட்டு

வேறு வேலை பார்க்கவும்

முடியவில்லையே

பலதுகளில் சிலதுகள்

அச்சு அசலாய் சரியாகவே இருப்பதாய்த்

தோன்றுகின்றன

ஜோதிடம்  அதெல்லாம் சும்மா கதை பேசலாம்

யதார்த்தத்தில் முடியவில்லை

என்பதுவே நிதர்சனம்.


கவிதை- தேர்தல்

 தேர்தல் 


நாடாளுமன்றத்தேர்தல்

தமிழ் நிலத்தில்

முடிந்து போனது

தேர்தல் முடிவுகள் தெரியவரும்

நாட்கள் சிலவாகும்

காத்திருப்போம்

ஆனால் ஒரு கேள்வி

சாதி பார்த்துத்தான்

தேர்தலில் நிறுத்துவார்கள்

ஓட்டுப் போடுவார்கள்

ஐம்பத்து இரண்டில்

நெல்லையில் சோமயாஜுலு அய்யரும்

முதுகுன்றத்தில்

வேத மாணிக்கம்  அட்டவணை இனத்தார் பொதுத்தொகுதியிலும்

எம்எல்ஏ ஆனார்கள்

விடுதலைப் போராட்ட வீரர்கள்

இன்றைக்குச் சாத்தியமே இப்படி  எதுவும்

விடுதலை பெற்ற இந்தியத்

திருநாட்டில்

சாதி கெட்டிப்பட்டுக்

கிடக்கிறது

ராகுல் காந்தி

கேரள வயநாட்டில்

நிற்பது தனிரகம்.


கவிதை- மேதினம்

 இணைய கால கவியரங்கம் 41


20/4/24

மேதினம்



மே தினம் வரப்போகிறது

எட்டு மணிநேர வேலையும்

வாரம் ஒரு நாள்

ஓய்வும் வாங்கித்தந்த

சிக்காகோ தொழிலாளியின்

போராட்டம் அர்த்தமற்றுப்

போனது

எந்த உத்திரவாதமும் இல்லா

நொண்டி அடிக்கும்

பணி.

ஓய்வூதியம் விடைபெற்றுக் கொண்ட

பெருஞ்சோகம்

வயிற்றுப் பசிக்கு மட்டுமே வேலை.

அது என்று போய்விடுமோ

பெருங்கவலையோடு

வாழ்ந்து முடிக்கிறான்

தொழிலாளி

உலகமயமாக்கல்

தொழிலாளியின்

தன்மானத்தை

விழுங்கித்தான் நிற்கிறது.


கவிதை- மனக்கோலம்

 இணைய கால கவியரங்கம் 42


21/


மனக் கோலம்


மனக்கிடங்கில்

எத்தனையோ விஷயங்கள் 

அத்தனையும்

அடுத்தவரிடம்

சொல்லவும் முடியாது

எழுத்தில் வடித்துப்

படைப்பாக்கவும்

சாத்தியப்படாது

அவரவர்க்குத்தான் தெரியும்

அவை எதுவென

அவரவர்களோடு

மட்டுமே அவை

மரித்துப் போகும்

ஆகப்பெரிய மகானாய்

இருக்கலாம்

இருந்தாலென்ன

மனதில் உறங்கிக்கிடப்பதையும்

எண்ணத்தில் தோன்றுவதவத் தனையும்

முற்றாய்ப் பகிர்தல் சாத்தியமே இல்லை.


கவிதை- பிழைப்பு

 இணைய கால கவியரங்கம் 43


22/4/24


 



பிழைப்பு 


காற்றுக் கருப்பு இடுகாட்டு மண்டையோடு

தாயத்து முடிகயறு திருநீறு

என்று அடுக்கடுக்காய்

பொய்ச் சொல்லி 

எத்தனை மந்திர வாதிகள் 

சமூகத்தில் மக்களை

ஏமாற்றிப் பிழைத்திருக்கிறார்கள்

இன்றும் பிழைக்கிறார்கள்

அறிவியல் வளர்ந்து

அவை  சற்று 

முடங்கிப் போய்

காட்சியாகிறது

எந்த மந்திர வாதி யாவது

நாடுகளிடை நிகழும்

யுத்தகளத்தில்

மந்திரம் ஓதி  ஏவுகணையை

நிறுத்தியது உண்டா ?


கவிதை- பதிப்புலகம்

 இணைய கால 

கவியரங்கம் 48


பதிப்புலகம்



பதிப்பகம் ஒன்றில்

புத்தகம் ஒன்று போட

கட்டுரைகள்  பல கொடுத்து

வருடம் ஒன்றாகப் போகிறது

அதோ இதோ என்கிறார்

பதிப்பாளர்

எப்போது கேட்டாலும்

தயாரிப்பில் இருக்கிறது சொல்லுவார் ஒரே பதிலை

'இயலாது வேறு எங்கேனும்

முயற்சி செய்யுங்கள் 

சொல்லி விடுங்களேன்

எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை 

எதற்கும் ஓரு  அளவு வேண்டும் 

சொல்லி விடலாம் ' என்று

யோசனை

எனக்குத் தொண்டைவரை வரும் 

அதற்குமேல் எழுவதில்லை

அதுதான் நான்.


கவிதை- ரகசியம்

 


இணைய கால கவியரங்கம் 49

 


ரகசியம்


என்ன சொல்கிறோம் நாம்

என்பதே தெரியாமல்

இறைவன் முன்

மந்திரங்கள் என்று

அடுக்கிச் சொல்வதில்

பயன் என்ன இருக்க ஞமுடியும்

அறியாத மொழியில்

இறை வழிபாடு

அர்த்தமற்றது

வடமொழியோ இலத்தீனோ

அரபியோ

எதுவாக இருந்தாலும் 

மெய்யான வழிபாட்டை

அது கேலி பேசுவதே யாகும்

இந்த மொழியின் ஒலி மட்டுமே

இறைவனுக்குப் பிடிக்கும் என்பது

எத்தனைப் பேதமை

கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர் 

மெய் தானே.


கவிதை -நடப்பு

 இணைய கால கவியரங்கம் 50

29/4/24


எஸ்ஸார்சி 


நடப்பு 


யாரும் எதுவும்

உருப்படியாய் 

புத்தகம் எடுத்துப்

படிப்பது இல்லை

நல்லவை சொல்லக்

கேட்பது மில்லை

எல்லோரும்

கையில் ஒரு மொபைலோடு

எதனையோ  எந்நேரமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு.

நக்கல் ரகளை

விரசம் வன்மம்

வக்கிரம் சவடால்

அழுகை அவலம்

மாறி மாறி பீத்தல்களின்

அணிவரிசை

கற்றுக்கொள்ள

காட்சி பார்ப்பதில்லை

அதிசயமாய் காட்சி

ஆனாலும்

பார்க்க யாரும்

தயாரில்லை

மண்டை முழுவதும்

ஓசைமிகு சீரியல் வம்புகளே

மனித உறவுகள் முடமாகி

விசும்புகின்றன.


கதை சமத்துத்தான்

 

 

சமத்துத்தான்                                                   

நல்ல முகூர்த்த  நேரம் பார்த்து காலை ஆறு மணிக்கு யாத்ராதானம் செய்தாயிற்று.  எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும்  கம்மாபுரம் வெங்கட்ராம சாஸ்திரிதான் எங்கள் வீட்டு வாத்தியார். வாத்தியார் என்றால் புரோகிதர்  அவர்தான்  சம்ப்ரதாயப்படி  யாத்ராதானம் செய்விக்க  வந்திருந்தார்.

உங்களுக்குத்தெரியும், நான் தருமங்குடிக்காரன். சென்னை  மாநகரம் என் தருமங்குடி கிராமத்திலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரம்  இருக்கலாம். சென்னை மடிப்பாக்கம் ஏரி. ஏரியை வைத்துத்தான்  இப்போதெல்லாம் சென்னையில் இடம் சொல்கிறார்கள் அந்த ஏரியின் மேலண்டை கரையில் உள்ள  கணேஷ் திருமண மஹாலில் என் பையனுக்குத் திருமணம்.  நாங்கள் பிள்ளை வீட்டார். தருமங்குடி என் வீட்டிலிருந்து சாமான் செட்டுக்கள் ஜவுளிகள் எடுத்துப்போகவேண்டும்.   என் பையன் கல்யாணத்தை உத்தேசித்து என் இல்லம் வந்திருக்கிற என் சொந்த பந்தங்களையும் அழைத்துக்கொண்டு சென்னை போகவேண்டும்.  அதிகாலை கிளம்பினால் பன்னிரெண்டு மணிக்குள் கல்யாண மண்டபம்  போய்ச்சேரலாம்.

இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு.  நாளை காலை முகூர்த்தம். மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் அவசியம் வைத்துத்தான் ஆகவேண்டுமா என்று பெண்வீட்டில்  எங்களைக் கேட்டார்கள். நான் கட்டாயம் மாப்பிள்ளை அழைப்பு வேண்டும் என்றேன். பின் எப்போது நாதசுரம் முழங்க  மாலையும் கழுத்துமாய்  நமது பிள்ளையை  கோட்டும் சூட்டுமாய் ஊர்வலம் அழைத்துப்போவது சொல்லுங்கள். எனக்கு ஆசைதான்.

,என் தம்பி குடும்பம்,  என் சகலர் குடும்பங்கள் ,என் மகள்  மாப்பிள்ளை  மகள் வயிற்றுப்பேத்தி, என் மனையாளோடு நான் என்று  இத்தனைபேருக்கும் என்று ஒரு  வான் சொல்லியிருக்கிறேன்.அருகில் சிறு நகரம் சேத்தியாத்தோப்பு. அங்கு ஒரு ஆட்டோக்காரன் எனக்கு சினேகிதம். தருமங்குடியிலிருந்து  சேத்தியாத்தோப்பு போய்வர அந்த ஆட்டோக்காரன்தான் எப்பவும் ஒத்தாசை. அவன் வராவிட்டால் என் காலட்சேபம் எப்படி ஆகும். திருமுதுகுன்றத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தருமங்குடி என்று இறங்கினால் சட்டென்று  ஊர் வந்துவிடாது.  வெள்ளை பைண்ட்  அடித்துக்கொண்டு நிற்கும் கைகாட்டிதான் என் ஊரைக்காட்டிக்கொண்டு  சாலையில் அனாதையாய் நிற்கும். மண் சாலையில்  ஒரு கிலோமீட்டருக்குப்பொடி நடையாய் நடந்தால்தான் தருமங்குடி வரும் . ஆகத்தான் ஆட்டோ கீட்டோ என்று  வசதிகளைப் பார்க்க வேண்டி  இருக்கிறது.  

அந்த ஆட்டோக்காரன் மூலமாக  என் பையன் கல்யாணத்துக்கு சென்னைக்குபோக   ஒரு வாடகை  வானுக்கு சொல்லியிருந்தேன்.  ஆட்டோக்காரனும் நானும்  வான் டிரைவரோடு பேசினோம்.வானுக்கு  வாடகை ஏழாயிரம் ரூபாய் என்று முடித்து, அட்வான்ஸ் பணம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்திருந்தேன்.

கைபேசியை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தேன்.

‘என்னப்பா இன்னும்தான் வர்ரியா’

‘தோ வந்து கிட்டே இருக்கேன்’

‘இருக்கிறது எட்டு கிலோமீட்டரு. இந்த தூரத்த  எம்மாம் நாழியா வருவ. நாம தூரம் போவணும’

‘தோ வந்துட்டேன், இப்பதான் உங்க ஊரு மண்ரோட்டுல  வந்து சொழலறேன்’

‘அப்ப சரி’

நான் எடுத்துப்போகவேண்டிய  சாமான்கள் எல்லாவற்றையும் திண்ணை மீது எடுத்து வைத்தேன். உறவினர்கள் அங்கும் இங்கும் உலாத்திக்கொண்டு இருந்தார்கள். என் தம்பி அடிக்கொரு தரம் வந்து என்னை விஜாரித்துக்கொண்டே இருந்தான்.

வான் ஒருவழியாய் என் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது.

டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான்.

‘பட்டுனு  ஜாமான ஏத்துங்க’ சத்தமாய்ச்சொன்னான்

நானும் என் தம்பியும் சாமான்களை சட்டுபுட்டென்று வண்டியில் ஏற்றினோம். உறவினர்கள் வண்டியில் ஒவ்வொருவராக ஏறி அமர்ந்துகொண்டனர்.

‘ஒரு தேங்காவுல கல்பூரம் வச்சி அத  ஏத்தியாங்க, ,  வண்டிய ஒரு சுத்து சுத்துங்க அப்படியே தேங்காய் சூரகாயா வுடுங்க’ டிரைவர் சொல்லிக்கொண்டிருந்தான். நானே ஒரு தேங்காயை ரெடியாக வைத்திருந்தேன். அதன் மீது கல்பூரத்தை வைத்து ஏற்றி வானை ஒரு சுற்று சுற்றி வந்தேன். வாசலில் நின்றுகொண்டிருக்கும் வேப்ப மரத்தில் ஒரு  சின்ன கிளை ஒடித்து வண்டியில் சொறுகினேன்.

‘மாப்பிள தம்பி எங்க’  டிரைவர் கேட்டான்.

’வண்டிலதான் இருக்கேன்’ என் பையன் டிரைவருக்குச்சொன்னான். என் பையக்குச்  சென்னையில்தான் ஐ. ட்டி உத்யோகம். சொந்த ஊரிலிருந்து சாமி கும்பிட்டுவிட்டுக் கல்யாணத்துக்குப் புறப்படவேண்டுமே ஆக தருமங்குடி வந்திருந்தான்.

‘மாப்பிள்ளக்கி கழுத்துல மல்லிகப்பூ மாலையாவது இருக்கணும் எப்பிடி  மாப்பிளன்னு தெரியர்து யாரு எவுருன்னுதெரியணும்ல’ டிரைவர் சொன்னான்.

‘மாலைய போட்டதுதான் கழட்டி ஆணில  சட்டமா தொங்கப்போட்டுட்டு வராரு மாப்புள’ என் மனைவி டிரைவருக்குப்பதில் சொன்னாள்.

‘நெத்தில சந்தனம்’

‘அதெல்லாம் இருக்கு.  சந்தனம் குங்குமம் திருநீறு எல்லாம் ஏகத்துக்கு   நெத்தில வச்சி இருக்கு’

வண்டியை   தருமங்குடி மேலத்தெரு விநாயகர் கோவில்  வாயிலில் நிறுத்தசொன்னேன். நல்ல காரியத்திற்குப் போகிறவர்கள் இந்த நாகமணிந்த விநாயகரை வணங்கி சதுர்காய் உடைத்துவிட்டுத்தான் செல்வார்கள். என் தம்பி தேங்காய்  இன்னொன்றைக்கையில் வைத்துக்கொண்டு இருந்தான்.  தருமங்குடியில் மேற்கு பார்த்த விநாயகர் கோவில்.  இப்படிக்கோவில் அமைவது அரிதினும் அரிது.மேற்கு பார்த்தபடிக்கு விநாயகர் கோவிலை எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. சீர்காழி பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே  நான்  எப்போதோ பார்த்திருக்கிறேன். அதுவும்  செல்லி அம்மன்கோவில் ஒன்றினுள் ஒரு பக்கமாய் இருக்கும். தருமங்குடி விநாயகர் கோவில் அளவுக்குப்பெரிதுமில்லை அது.

‘எல்லாம் நவுந்து நின்னுகணும்’ தம்பி சொன்னான். சிதறு தேங்காய் உடைத்தான். எல்லோரும் விநாயகரை வணங்கி முடித்தோம். வண்டி புறப்பட்டது.

‘வண்டில டிவி செட்  இல்லயா’ என் பையன் டிரைவரைக்கேட்டான்.

‘அதெல்லாம் இப்ப யாருங்க பாக்குறா. அது அதும் கையில போன் வச்சிகிட்டு அது அது டேஸ்டுக்கு புரோகிராம் பாக்குது’

‘பாட்டு மட்டும் கேக்குறாப்புல வான்ல செட் பண்ணியிருக்கிங்களா’

‘அதெல்லாம் இல்ல தம்பி’ டிரைவர் பரிதாபமாகப்பதில் சொன்னான்.  வண்டியில்  கருப்பு ஸ்பீக்கர்கள் செத்துக்கிடந்தன

நான் என் பையனைப்பார்த்துக்கொண்டேன்.

வான் நகர ஆரம்பித்தது. ’கோவிந்தா நாராயணா’ என்று சொல்லிக்கொண்டேன்.

‘ரைட் ரைட்’ என்றேன். எனக்கு  ஜானுவாச டிபன் நேரத்துக்குள் சென்னை செல்லவேண்டுமே என்கிற கவலை மட்டுமே இருந்தது.

‘வண்டிய இப்பிடி அமத்துவாளா’ என் மனைவி ஆரம்பித்தாள்.

‘எனக்கு மட்டும் எப்பிடி தெரியும்’

‘சொல்லியிருக்கணும்.  நாங்க கல்யாணத்துக்கு போறம் டி வி செட் கண்டிப்பா  இருக்கணும்னு’

‘அதோடதான் வண்டி வரும்னு நா நெனச்சேன்’

‘ எல்லாத்தையும்  நாம்பளே நெனச்சிகறதா’’

‘சண்ட வேணாம் கல்யாணத்துக்குல்ல நாம போறம்’ என் தம்பி என்னிடம் சொல்லிக்கொண்டான்

வானில் உள்ள சீட் அமைப்பெல்லாம் கண்ணறாவியாக இருந்தது.  எதையும்சட்டை செய்யாமல் என் ஷட்டகர் இருவரும் ஏதோ சொந்தக் கதைகளைப்பேசிக்கொண்டே வந்தனர்.  என் பையனைப் பார்த்துக்கொண்டேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. அவன் முகம் சரியாக இல்லை.

‘நல்லா வான் அமத்தியிருக்கே’ மெதுவாகச்சொன்னான்.

டிரைவர் காதில் அது விழுந்திருக்கவும் வேண்டும்.

‘ அந்த ஆட்டோக்காரரு என் சினேகிதம்.  நானும் அவுரும்  சேத்தியாத்தோப்பு ஆண்டாள் பிரைமரி ஸ்கூல்ல எம்மா நாளா புள்ளிங்கள கொண்டு வுடறம் கூட்டியாறம். அவருதான  கூட இருந்து இது அமத்துனது.  படிக்குற பசங்களுக்கும் லீவு. ஸ்கூலு இல்ல’

‘ஸ்கூலுக்கு ஓடுற வண்டியா’ என் பையன் டிரைவடிடம் கேட்டான்

‘ஸ்கூலுக்கு பசங்கள ஏத்திம்போற வண்டிதான்’

‘பசங்க உங்கள என்ன கேக்கப்போறாங்க’

‘கேக்குட்டுமே’

‘ஸ்கூல பசங்க.  எல்லாரும் ஒரு அரை மணி நேரந்தான்,  ஏறிடுவாங்க  எறங்கிடுவாங்க’

‘அது சரி’

‘ஸ்கூல் பஸ் எடுத்துகிட்டு இப்படி  டூர் போவாங்களா’

டிரைவர் எதுவும் பதில் சொல்லாமல் வண்டியை ஓட்டினான். வண்டி மெதுவாகத்தான் சென்றது.வேகம் கூட்டினால் எஞ்சின் சப்தம்  செவிகளில் நாராசமாய் வர்ஷித்தது.

‘இதுக்கு மேல  வண்டி வேகம் போவாதா’ நான் தான் டிரைவரைக்கேட்டேன். இந்த வேகத்தில்  வான் போனால் எப்போது சென்னைக்குப்போவது என்கிற கவலை எனக்கு.

‘பதனமா போவுணும்ல’ டிரைவர் எனக்குப் பதில் சொன்னான்.

இதற்குமேல் டிரைவரிடம் பேசி ஒன்றும் ஆகாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். என் பையனைப் பார்த்துக்கொண்டேன். அவன் அரைத்தூக்கத்தில் இருந்தான். உறவினர்கள் அவரவர்க்குத் தோன்றியதைப்பேசிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் வந்தார்கள்.

‘ஜானுவாச டிபனுக்குப்  போகணுமே’ என் மனைவியும் சொல்லிக்கொண்டாள்.

 சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு வந்தது.  சென்னை கும்பகோணம் சாலையும், சேலம் சிதம்பரம் சாலையும் சந்திக்கும் இடம். வெள்ளாறு ராஜன் என்கிற கால்வாயில் தண்ணீர் நுரைத்துக்கொண்டு சென்றது. கரிகால் சோழன் கட்டிய வீராணம் ஏரியிலிருந்து வரும் காவேரித் தண்ணீர் வெள்ளாற்றைத்தாண்டிக்கொண்டு இந்தக்கால்வாயில் ஓடுகிறது.  வான் சென்னை சாலையில் திரும்பிக்கொண்டது. வண்டி சற்று வேகம் எடுத்தது. சாலை நன்றாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். வண்டியிலிருந்து  ஆனாலும் அந்தக் கடபுட ஒலி வந்துகொண்டேதான் இருந்தது.  பக்க வாட்டில் இருந்த பல்புகள் உடைந்து காணப்பட்டன.

‘கண்டம் பண்ணவேண்டிய வண்டி’ என்றான் பையன்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. வடலூர் தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது.

‘அருட்பிரகாசர் வள்ளலாரை மனதில் நினைத்துக்கொண்டேன்.

‘ அந்த காலத்துல சேஷசாயி இன்சுலேட்டர் ஆலை இங்கதான் இருந்துது’ என்றேன்.

‘அதெல்லாம் எந்தக்காலம்’ டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

பண்ருட்டி தாண்டினோம். பலாப்பழங்கள் சாலையில் முட்டு முட்டாய் குவித்து வைக்கப்பாட்டிருந்தன. சில கடைகளில் முந்திரிப்பருப்பு பாக்கெட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வெள்வரிக்காய்கள், பிஞ்சுகள் சிலர் வைத்துக்கொண்டு விற்றார்கள்.   செங்காயாகக் கொய்யாப்பழங்களும் விற்பனைக்கு இருந்தன.

‘எதாவது வங்குணுமா’

‘ஒண்ணும் வேணாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

’இல்ல வேணும்னா சொல்லுங்க’

‘நாம நேரத்தில் சென்னை போவுணும்’

‘அதான் போயிட்டு இருக்கம்ல’

கோலியனூர் கூட்டுரோடுதாண்டியது. வண்டி சென்னை நெடுஞ்சாலையில் ஏறிக்கொண்டது.

‘இப்புறம் நல்ல ரோடு  டாண் டாண்ணு போக வேண்டியதுதான்’ டிரைவர் சொல்லிக்கொண்டான். வண்டியில் இருந்தவர்களில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  அவர்களுக்கு என் மனைவி பட்சணங்கள் சிலதுகளை  விநியோகம் செய்தாள். குடிக்கத்தண்ணீர் கொடுத்தாள். வான் விக்கிரவாண்டி தாண்டிச்சென்றுகொண்டிருந்தது.

‘வண்டிய நிப்பாட்டலாமா’ என்றான் தம்பி.

‘எதுக்கு’

‘பாத் ரூம் போறவங்க போவாங்க’

‘ இங்க எதுவும் வேணாம் செத்த பொறுங்க. நானே நிப்பாட்டுறேன்’ டிரைவர் எங்களுக்குச்சொன்னான். திண்டிவனம் தாண்டி, வீடூர் அணை தாண்டி வான் சென்றுகொண்டிருந்தது.

கூட்டேரிப்பட்டு சாலை ஓரத்தில் ஒரு சுமாரான டீக்கடை. அதன் அருகே நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷெட் இருந்தது. வான்கள் அங்கே நான்கைந்துக்கு நின்றுகொண்டிருந்தன. வான் டிரைவர் வண்டியை நிறுத்தினான்.

‘எல்லாம் எறங்கிகுங்க. பாத்ரூம் போறவங்க போவுலாம்.’ என்று சப்தமாகச்சொன்னான். நாங்கள் எல்லோரும் இறங்கிக்கொண்டோம். வான்  டிரைவர்   ஷெட்டில்  இருந்த மெக்கானிக் ஒருவரிடம் கவனமாய்ச் சில விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். இருவரும் ஏதோ குசு குசு எனப் பேசிக்கொண்டனர். என்னையும் இடுக்கில் ஒருமுறை வான் டிரைவர் பார்த்துக்கொண்டான்.

எல்லோரும் வானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.  வண்டியின் டிரைவர்  எங்களிடம் வந்தான்.

‘வண்டி மாத்தியாச்சி . இப்புறம் நீங்க  அதுலதான்  போவுணும்.  நானு இதோட நின்னுகறன். வேற ஒரு வான் இதோ  தயாரா நிக்குது.. அந்த டிரைவர்கிட்ட பேசிட்டன். அதுல வீடியோ இருக்கு. டேப் இருக்குது. சீட்டெல்லாம் பள பளன்னு இருக்கு. புது வண்டி. நீங்களும் கல்யாணத்துக்கு போறீங்க. என்மனசு கேக்குல.   மேற்கொண்டு போவுறதுக்கு அத அமத்தி பேசிவுட்டன்.  குடுத்த  அட்வான்ஸ் போக எனக்கு பாக்கி தரவேண்டிய தொகைய  நீங்க இந்த  வண்டி டிரைவரிண்ட கொடுத்துடணும். அதுதான் சேதி. அது அது  சாமான கையில எடு. எடு. அந்த வான்ல ஏறிக்க ஏறிக்க.’ என்றார் டிரைவர்,

நாங்கள் அந்த  வேறு  வானுக்கு  வேக வேகமாய் மாறினோம். என் பையன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். அது புதிய வான். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’ ஒலியும் ஒளியும் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.   வண்டியில் அமரும் சீட்டு பளிச்சென்று  வழ வழப்பாய் இருந்தது. வண்டியின் சப்தமே கம்பீரமாய் இருந்தது.

‘இதுதான் கல்யாணத்துக்கு போற வண்டி’ என் தம்பி என்னிடம் சொல்லி திருப்தி பட்டுக்கொண்டான். எல்லோருக்கும் முகம் மலர்ச்சியாய் இருப்பதை  ஒருமுறை பார்த்துக்கொண்டேன். என் சகலர்கள் அவர்கள் குடும்பம் கூடுதல் மகிழ்ச்சியாக பயணத்தை அனுபவித்தார்கள்.

‘காசு செலவு செய்யறம் அத விதர்ணயா பண்ணணும்’ என்றான் தம்பி.

‘என்ன படம்வேணுமோ அத போட்டுகலாம்’

டிரைவர் எங்களுக்குச்சொல்லிகொண்டிருந்தான். என் பையன் டிரைவரிடம் ஏதோ சொன்னான். உடன் ஒரு இந்தி படம் ஓட ஆரம்பித்தது. என் தம்பி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான். தம்பியின் மனைவி ‘எதாவது தமிழ் படம் போடலாம்ல’ என்று முனகிக்கொண்டிருந்தாள்.சகலர்கள் குடும்பம் எதையும் கண்டு கொள்ளாமல் சென்னை எப்போது வரும் என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

’உங்களுக்கு,  நாங்க மொதல்ல வந்தமே அந்த டிரைவர பழக்கமா’ நான்  தான் டிரைவரிடம் ஆரம்பித்தேன்.

‘அப்பா ஏதோ ஆரம்பிக்கிறார்’ தன் அம்மாவிடம் சொன்னான் என் பிள்ளை.

டிரைவர் எனக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான். வண்டி செங்கல்பட்டு தொட்டுக்கொண்டிருந்தது.

‘நல்லா தெரியுமே அந்த டிரைவர. மீன்சுருட்டி காரரு. வண்டிய சேத்தியாத்தோப்பு ஸ்கூல்ல  ஓட்டுறாரு. வண்டிய  எஃப் சி க்கு அனுப்பணும். அதுக்குதான் கொண்டாந்து உட்ருக்காரு. வழக்கமா இங்கதான் வண்டி வேலய எல்லாம் பாப்பாரு.’

‘நாங்க அந்த வண்டிய அமத்திகிட்டு வந்தம்’

‘அதுல தப்பு  என்ன,  அந்த வண்டில லைட்டு சரியா இருக்காது, சிட்டிக்குள்ள  எல்லாம் போ முடியாது. இதுவரைக்கும் ஓட்டியாந்ததே அவுரு சாமர்த்தியம். இந்த பட்டரைக்கு சும்மா ஓட்டியாறம  உங்கள ஒரு   சவாரியா  இட்டாந்துட்டாரு.  இப்ப அவுருக்கும் காசு.  எனக்கும் காசு. ஒண்ணுக்குள்ள ஒண்ணு  எல்லாம் பொழப்புதான் வவுறு இருக்குது. குடும்பம் இருக்குது’

‘நாங்க கல்யாணத்துக்கு போறம்’

‘எத்தினி மணிக்கு அங்க இருக்கணுமோ அத சொல்லுங்க. நா கொண்டுபோய் விட்டுடுவேன்’

வண்டி நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தாம்பரம் சமீபித்தது.

‘இன்னிம் அரை மணி நேரம். மடிப்பாக்கம் வந்துடும்’ டிரைவர்  என்னிடம் சொன்னான். எல்லோரையும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன். அவரவர்கள் தலை வாரிக்கொண்டார்கள். முகம் துடைத்து பொட்டு வைத்துக்கொண்டார்கள். என் பையன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தி சினிமாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். வான் சேலையூர் தாண்டிக்கொண்டிருந்தது.

‘வண்டிய எங்கள எறக்கிவிட்டுட்டு என்னா பண்ணுவ’

‘நா சட்டு புட்டுன்னு கெளம்பிடுவன். வேல இருக்கு.  நீங்க வந்திங்களே   மொத  வண்டி. அத எஃப் சீக்கு  ரெடி பண்ணணும். பெயிண்டு, ப்ரசு, லைட்டுங்க ஆணிவ ஸ்குரூங்க, டயர் டியூபுங்க  எஞ்சின் சாமானுவன்னு ஒரு லிஸ்டே வச்சிருக்கேன். எல்லாத்தையும் எங்களுக்கு  வாடிக்கயா சப்ள பண்ற  ஸ்பேர் பாட்ஸ்   கட  ஒண்ணு இருக்கு.  கடப்பேரில. அதுலயே ஜாமானுவ  வாங்கிகுவம். ரவைக்கி எந்நேரம் ஆனாலும் கூட்டேரிபட்டு போய் சேந்துடணும்’

‘பேச்ச நிறுத்துங்க மடிப்பாக்கம் வந்தாச்சி.’ மனைவி எச்சரித்தாள்.

எல்லோரும் ரெடியானோம்.  நான் நெற்றிக்கு சந்தனம் மீண்டும்  வைத்துக்கொண்டேன். அங்கவஸ்திரத்தை சரியாய் போட்டுக்கொண்டேன். இந்தி படம் முடிந்து பையன் முகம் துடைத்துக்கொண்டான். கிச்சென்று டீ சர்ட் போட்டுக்கொண்டு ரெடியானான். சகலர் குடும்பங்கள் பளிச்சென்று மாறியிருந்தது. என் மனைவி முடிந்த அளவுக்கு தன் நெஞ்சை  நிமிர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

‘மண்டபம் வந்தாச்சு’

என் தம்பி அழகாகச்சொன்னான்.

ஆரத்தியோடு மண்டப வாசலில் எங்களை வரவேற்க சம்பந்திமார் குடும்பம் நின்றுகொண்டிருந்தது.’ரா ராமா இண்டி தாக’ வாசித்துக்கொண்டு நாதசுர செட் நின்றது.

டிரைவரிடம் வண்டிக்கு பாக்கி  தொகை மூவாயிரத்து ஐநூறை எண்ணி எண்ணிக் கொடுத்தேன். சம்பந்தி வண்டிக்குள் எட்ட்டிப்பார்த்துவிட்டுச்  சாமான்கள் கொண்டுவந்ததை இறக்கிக்கொண்டு இருந்தார்.

‘எல்லாம் சாமான்களும் விடுதி ஆத்துக்கு வந்துடும். நீங்க  கை வீசிண்டு பேஷா போலாம்’ என்றார்.

நாங்கள் கை வீசிக்கொண்டுதான் நடந்தோம்.

‘வான் சூப்பர், இந்த ஊர்ல இப்பிடி வண்டி கெடைக்குமான்னு சொல்லமுடியாது’ என்றார் சம்பந்தி.

‘எல்லாம் அப்பா ஏற்பாடு’ என்றான் என் பையன்.

டிரைவர் வண்டியை ரிவர்சில் திருப்பி ’வணக்கம்’ சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

‘ காபி  ஒரு வா சாப்டு போலாம்’ சம்பந்தி டிரைவரிடம் சொல்லிக்கொண்டார்.

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத வான் டிரைவர்  அவர் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.

‘சமத்துத்தான் போங்கோ’

என் மனைவி சொல்லிக்கொண்டாள். என்னைப்பார்த்துதான்.  ’சமத்து என்று அவள் சொல்வது இந்த அசடைப் பார்த்துத்தான்’ நான் என்னுள் சொல்லிக்கொண்டேன்.

------------------------

 

 

 

 

                                                                                                                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நல்ல நேரம் பார்த்து காலை ஆறு மணிக்கு யாத்ராதானம் செய்தாயிற்று. அருகில் கம்மாபுரம் வெங்கட்ராம சாஸ்திரிதான் எங்கள் வீட்டு வாத்தியார். வாத்தியார் என்றால் புரோகிதர்தான் பிறகு வேறென்ன.