அம்மா ஒரு புதிர்
என் அம்மா தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தாள். தங்கை குடும்பம்
மன்னார்குடியில் இருந்தது. கும்பகோணத்திலிருந்து தேக்குமரங்கள் ஓங்கிய ஆற்றங்கரைமீது,
வளைந்து வளைந்து போனால் வருமே அதே மன்னார்குடி
தான். தனியாகத்தான் அம்மா பேருந்து பிடித்துச் சென்றாள். அம்மாவுக்கும் உடம்பு முடியவில்லை.
சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் எல்லாமும் அம்மாவைப்
படுத்திக்கொண்டுதான் இருந்தது.
ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தாள்.’ நான் மன்னார்குடி
போகவேண்டும்’ என்றாள்.
‘என்ன திடீரென்று’
‘என்னமோ தெரியவில்லை. போகவேண்டும் என்று தோன்றகிறது.’ எனக்குப்பதில்
சொன்னாள். அம்மாவுக்கு ஏதேனும் கெட்ட கனவு வந்து புறப்பட்டுச்செல்கிறாளோ என்று கூட
எனக்கு யோசனை. இப்படி எல்லாம் அம்மா இதற்கு முன் சொன்னதில்லை. ஆனால் இன்று சொல்கிறாளே,
‘சரி புறப்படு’ அனுப்பி வைத்தேன்.
தருமங்குடி எனது ஊர். உள்ளூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பஸ் பார்த்து அம்மாவை ஏற்றிவிட்டேன்.
அம்மா கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கி மன்னார்குடிக்கு பஸ் பிடித்து எப்படியோ தங்கை இருப்பிடம்
போய்ச் சேர்ந்தாள். மன்னார்குடி கீழரெண்டாம் தெருவில்தான் தங்கை குடியிருந்தாள். அம்மா ஊருக்குப் போய் ஒரு வாரம் கழிந்தது. மன்னார்குடியிலிருந்து எனக்கு
ஒரு போன் மெசேஜ் வந்தது. தங்கைதான் அனுப்பியிருக்கிறாள்.
‘அம்மா கீழே விழுந்து விட்டாள். காலில் நல்ல அடி. நடக்கமுடியவில்லை.
படுத்த படுக்கையாய் இருக்கிறாள். உடனே வந்து
அழைத்துப்போகவும்’
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தனது பெண்ணைப்பார்க்கவேண்டும் என்று போன அம்மா கீழே
விழுந்தாள்.படுத்தும்விட்டாள். இதுவே செய்தி.
தங்கைக்கு சுந்தரகோட்டை மகளிர் கல்லூரியில் எழுத்தர் வேலை.
சம்பளம் எல்லாம் ஆகூ ஊகு என்று இருக்காது. ஏதோ கஞ்சி குடித்துக் காலட்சேபம் செய்யலாம் அவ்வளவே.
தினம் தினம் மதுக்கூர் செல்லும் பேருந்து பிடித்து ஏறிப்போவாள். மாலையில் வீடு திரும்புவாள். கல்லூரியில்
விடுமுறை என்பதெல்லாம் சாதாரணமாகக் கிடைத்துவிடாது.
அப்படிக்கிடைத்தாலும் விடுமுறை எடுத்த நாட்களுக்குச் சம்பளம் தரமாட்டார்கள். இப்படித்
திண்டாடும் அவளால் அம்மாவுக்குத்தான் என்ன
செய்துவிட முடியும். ஆக எனக்குக்கிடைத்த அவசரத் தகவலை அனுசரித்து நான் மன்னார்குடிக்குப்புறப்பட்டேன்.
தங்கையின் கணவருக்கு
நிரந்தர உத்யோகம் எதுவுமில்லை. எந்த உத்யோகத்தில்
சேர்த்துவிட்டாலும் அவர் மூன்று மாதங்கள் கட்டாயம் பார்ப்பார். அதற்குப்பிறகு அவருக்கு அங்கு போகப் பிடிக்காது. நவக்கிரகங்கள்
உன்னை விட்டேனா பார் என்று தொடர்ந்து படுத்தினால்
ஒருவர் என்னதான் செய்ய முடியும். ஆக அவரிடமிருந்து எதையும் எப்போதும்
எதிர்ப்பார்க்கவே முடியாது.
என் புத்திக்கு எட்டிய ஒரு மாப்பிள்ளை. அவரைப்பற்றி ஆழமாய்
ஏதும் விசாரிக்கவில்லை. படுபாவியாகிய நான்தான்
வீட்டுக்கு கூட்டி வந்தேன். எனக்குத்தான் எல்லாம்
தெரியும் என்கிற அகம்பாவத்தின் விளைச்சலாய் இருக்கலாம். தங்கையோ ,அவளை விட
நான் என்னமோ நாலும் தெரிந்தவன் என்று என்னை முழுவதுமாய் நம்பினாள். பாசம். என் தங்கை
அவனுக்குக் கழுத்தை நீட்டினாள். நான் படித்த முட்டாள் என்பதைப் பின்னர்தான்
தெரிந்துகொண்டேன். கெட்ட பின் ஞானி. விடுங்கள் அதை.
நான் மன்னார்குடிக்குப் புறப்பட்டேன். அம்மாவை சென்று பார்த்தேன்.என்
தங்கை ஒரு வாடகை வீட்டில் தானே குடியிருந்தாள். ஒரே அறைதான் வீடு. வீட்டுக்குள் வீடு.
ஒண்டிக்குடித்தனம் அவளால் அங்கு தான் குடியிருக்கவும்
முடியும். வாடகை அதிகம் தரமுடியாதே. அது ஒரு புறம் இருக்க அவளுக்குப்பாதுகாப்புக்கும்
ஆள் வேண்டும். தங்கையின் கணவர் அடிக்கடி ஊரில் இருக்கவும் மாட்டார். என் தங்கைக்கு
ஒரு பெண் சமத்துக்குழந்தை. உள்ளூர் பள்ளியில்
எட்டாவது படித்துக்கொண்டிருந்தாள்.தங்கைக்கு எவ்வளவோ கஷ்டம் இருந்தும் குழந்தையை ஆங்கில
வழியில் பணம் கட்டிப்படிக்க வைத்தாள். அவள்
பெண்ணும் நன்றாகவே படித்து வந்தாள். கண்ணைக்கெடுத்த தெய்வம் கோலைக்கொடுத்தது.
தங்கை என்னைப்பார்த்ததும்’
இப்போதுதான் அண்ணா எனக்கு உயிரே வந்த மாதிரி
இருக்கிறது’ என்றாள். கண்கள் கலங்கியிருந்தன. என் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டாள்.
‘அம்மா எங்கே’
‘அடுத்த வீட்டில் இருக்கிறாள். அடுத்த வீடு டாக்டர் வீடு’
அவளும் நானும் அவசரமாய் அடுத்த வீட்டிற்குச் சென்றோம். அம்மா அடுத்த வீட்டின் திண்ணையில் படுத்துக்கிடந்தாள்.
‘என்னம்மா ஆச்சு’
‘ வாடா, வா பாருடா, என்ன ஆச்சின்னு என் காலப்பாரு’
அம்மாவின் வலது காலில் மாவு கட்டு போட்டிருந்தார்கள். அம்மாவின்
காலைத் தொட்டுப்பார்த்தேன்.
‘வலி எப்பிடி இருக்கு’
‘வலிச்சிகிட்டேதான் இருக்கு’
‘டாக்டர் மாத்திரை குடுத்துருக்காறாரா’
‘ஆமாம் மாத்திரை குடுத்துருக்கார்’
‘இது எப்பிடி ஆச்சு’
‘அடுப்புல பால் இருந்துது. அது கொதிச்சிப்பொங்கியது. அடுப்ப
அணைக்கணுமேன்னு கொஞ்சம் வேகமா போனேன். தடுக்கி
கீழே விழுந்துட்டேன். காலுக்கு கீழே எள நீர்
மட்டை. குடிச்சிட்டு போட்டுருக்கா. அத எடுத்து
ஓரமாபோடல. நட்ட நடுப்பற கெடந்துருக்கு. போற அவசரத்துல நா எளனி
மட்டை மேல கால வச்சிருக்கேன். அவ்வளவுதான்
சர்ர்ன்னு வழுக்கிடுச்சி. நா தடால்னு கீழே
விழுந்துட்டேன். அப்பிடியே அசையாம கெடந்தேன். அந்த மனுஷனும் ஆத்துல இல்ல. எப்பவும்
மாதிரி எங்கயோ சுத்த போயிட்டார்.’
தங்கை தொடர்ந்தாள்.
‘நா காலேஜ் விட்டு வீட்டுல வந்து பாக்கறேன். எம்பொண்ணு பக்கத்துல ஒக்காந்துண்டருக்கா.
பாட்டி கால தடவி தடவி விட்டுண்டு. நா எப்ப
வருவேன்னு என்னையே எதிர் பாத்துண்டு’
‘ஒன் புருஷன் எங்க போனார்’
‘அவர் வீட்டுல இல்ல. எங்க போனாரோ. பகவானுக்கே வெளிச்சம்.
ஆனா ராத்திரி பத்து மணிக்கு வந்தார். என்ன பண்றதுன்னு புரியில. ஆனா உனக்கு போன் மெசேஜ் குடுத்தோம். நீ காலம்பற வந்துடுவன்னு
உன்ன நம்பிதான் உக்காந்துண்டு இருக்கேன். நானும் அவரும் இன்னும் எம்பொண்ணும் சேந்து
இண்ணைக்கி காலம்பற இந்த டாக்டர்கிட்ட அம்மாவ
கூட்டிட்டிண்டு வந்தம். தூக்கிண்டு வந்தமா
இல்ல இழுத்துண்டு வந்தமா அது தெரியில ஆனா அம்மாவ
இங்க கொண்டு வந்துட்டம். டாக்டர் நல்ல மனுஷன். பக்கத்து வீடு. பரோபகாரி’
அம்மா என்னையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.
‘வா, டாக்டரைப்பாத்து பேசிட்டு வந்துடுவம்’
தங்கையும் நானும் வீட்டினுள்ளாகச்சென்று மிக நல்ல மனிதரான
அந்த டாக்டரைப்பார்த்தோம்.
‘வணக்கம் டாக்டர். எங்க அம்மாதான்’
‘பரவாயில்லை. ஒரு மாவு கட்டு போட்டிருக்கேன். இது ஒரு ஃபஸ்ட் எய்டு அவ்வளவுதான். உடனே ஒரு எலும்பு டாக்டரைப் பார்க்கணும். எக்ஸ்ரே
எடுத்துப் பாத்தாதான் எதுவும் சொல்லமுடியும்.
அம்மாவுக்கு ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிதான் ட்ரீட்மெண்ட் தரவேண்டியிருக்கும்’
‘உங்களுக்கு ஃபீஸ் தரணுமே’
‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவ ரொம்ப கஷ்படற பொண்ணு. அந்த மனுஷனுக்கு சமத்து
போறாது’
என் தங்கையின் கணவரைத்தான் டாக்டர் தெரிந்துகொண்டு சொல்கிறார்.
என் தங்கை என்னை ஒரு முறை ஆழமாய்ப் பார்த்தாள்.
‘ஆக வேண்டியதைப் பாருங்க அது ரொம்ப முக்கியம்’ டாக்டர்
முடித்துக்கொண்டார்.
அரசு டாக்டராக வேலையில் இருந்து ஓய்வு பெற்ற டாக்டர். மனிதாபிமானத்தில் ஏதோ
ஒரு உதவி செய்திருக்கிறார் அது பெரிது.
‘உன் வீட்டுக்காரர் எங்கே’
‘உன்னை பஸ்டேண்டுல பாத்து அழச்சிண்டு வரேன்னு போனவர்தான்’
‘நா பஸ்டேண்டுல
அவர பாக்கல’
‘அவர் எங்க நின்னு எத வேடிக்க பாத்துண்டு நிக்கறாரோ’
‘கொழந்த ‘ அவள் பெண்ணைத்தான் சொன்னேன்.
‘ஸ்கூல் போயிருக்கா. நா காலேஜுக்கு லீவு சொல்லிட்டு உக்காந்துண்டு இருக்கேன்’
‘ரொம்ப சரி. நா இப்ப பஸ்டேண்டு போறேன். அங்கதானே டாக்சி
ஸ்டேண்டும் இருக்கு. ஒரு டாக்சி பிடிச்சிண்டு அவரயும் கூட்டிண்டு வந்துடறேன்’
‘இப்பதான் எனக்கு கண்ணுல வெளிச்சமே தெரியறமாதிரி இருக்கு’
‘சரி விடு. நா பாத்துகறேன்.’ நான் மன்னார்குடி பேருந்து
நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இனி என்ன செய்வது. அம்மாவை கடலூர் அழைத்துச்சென்று எலும்பு டாக்டரைப்பார்த்து மேற்கொண்டு சிகிச்சை செய்யவேண்டும். தருமங்குடிக்கு
அருகேயிருக்கும் பேரூர் அது.
மன்னார்குடி பேருந்து நிலையம் வந்தேன். தங்கை கணவரைத்தேடினேன்.
கையில் சிகரெட்டோடு குமுதம் புத்தகத்தைப்படித்துக்கொண்டு ஒரு பெட்டிக்கடை வாயிலில்
நீட்டிப் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்.
‘அத்தான்’ என்ன
செய்ய, அப்படித்தான் சகோதரி கணவரை அழைப்பது வழக்கம்.
‘வாங்க மச்சான்’
‘நா வீட்டுக்கு போயிட்டு வர்ரேன். அம்மாவைப்பார்த்தேன்.
டாக்டர்கிட்ட பேசினேன். அம்மாவை கடலூர் அழச்சிண்டு போகணும். டாக்சி ஒண்ணு புடிக்கணும்’
‘ ரொம்ப சரி அதுக்குத்தான் உங்களுக்கு போன் மெசேஜ் போட்டேன்’
இருவரும் டாக்சி ஸ்டேண்ட் பூராவும் தேடினோம். ஒரு டாக்சியைப்பிடித்துக்கொண்டு
வீட்டுக்குப்போனோம். அம்மாவை டாக்சியின் பின் சீட்டில் படுக்கையாய் அமர்த்தி வைத்துக்கொண்டு நானும் உடன்
உட்கார்ந்து கொண்டேன்.
‘நானும் வரேன்,
இங்க இருந்து என்ன பண்ணப்போறேன். அங்க வந்தாலும்
ஒரு ஒத்தாசை’
தங்கையும் சரி என்றாள். மன்னார்குடியில் இருந்தால் என்ன கடலூரில் இருந்தால் என்ன தங்கையின் கணவரைப் பொருத்தமட்டில் எங்கிருந்தாலும் ஒன்றுதான். எந்த ஊரிலும் யாருக்கும்
ஒத்தாசையாக இருக்கத்தெரியாத மனிதர். தெரிந்தேதான் அப்படி இருக்கிறாரோ என்னவோ.
‘ஒம் பொண்ணதான் பாக்காம பொறப்படறேன். எனக்கு அவசரம். சந்தர்ப்பம் அப்பிடி. அவகிட்ட சொல்லு’
என்றேன்.
‘நா சொல்லிக்கறேன். நீங்க பொறப்படுங்க.’ அம்மாவின் புடவை மருந்து பொடி எண்ணெய் சீசாக்கள் சால்வை இத்யாதிகள்
அடைத்துக்கொண்ட ஒரு பழைய பேக்கை டாக்சியின்
டிக்கியில் வைத்தார்கள்.
அவளும் ஒரு பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு’ காலேஜுக்குப்போகணும்.
’ என்றாள்.
டாக்சியின் முன்
சீட்டில் இடுக்கி பிடுக்கி உட்கார்ந்துகொண்டு மன்னார்குடி பேருந்து நிலையம் வந்து இறங்கினாள்.
டாக்சி கடலூருக்குச் சீறிக்கொண்டு சென்றது. வண்டியில் ஒடும் சினிமா
பாட்டைக்கேட்டுக் கொண்டே தங்கை கணவர் அரைகுறையாகத் தூங்கினார். நான் தங்கையின் நினைவாகவே
இருந்தேன். ‘ ஒம் பொண்ணாயிருந்தா இப்பிடித்தான் ஒரு மாப்பிள்ள பாத்து குடுத்து இருப்பிய்யா’ அம்மா
என்னை என்றோ கேட்ட கேள்வி. அதனை நான் எப்படி
மறப்பது ?
கடலூர் வந்தாயிற்று.அம்மாவை மாவட்ட மருத்துவ மனையில்தான் சேர்த்தோம். காலில்
எலும்பு மூட்டு நகர்ந்து போனதாய்ச்சொல்லி மணல் மூட்டை ஒன்றைக்கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.
அம்மாவுக்கு ஒரு மாதம் இந்த பீஷ்மப் படுக்கை.
எப்படியோ திண்டாடினோம். அம்மாவுக்குக் கால்
சரியான பாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ’பிசியோதெரபி விடாமல் செய்யுங்கள்’ சொல்லி
ஓட்டை ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அம்மாவால் தருமங்குடி வீட்டில் நகர்ந்து நகர்ந்து செல்லத்தான்
முடிந்தது. எழுந்து நடக்க முடியாமல் திண்டாடினாள். மன்னார்குடிக்கே நான் போயிருக்க
வேண்டாம் என்றாள். ஏது ஏதோ புலம்பினாள். அழுதாள். யாரையோ எல்லாம் திட்டிக்கொண்டே இருந்தாள்.
ஒரு சமயம் என் அப்பா உடம்பு மிகவும் முடியாமல் இருந்தார். சிறு நீர் கழிக்க
அடிக்கடி வாயில் கதவைத்திறந்துகொண்டு வீதிக்கு வரவேண்டியதாயிற்று. அவரால் முடியவும்
இல்லை. இரவில் ஒரு பிளாஸ்டிக் குவளையை வைத்துக்கொண்டு வீட்டு முற்றத்திலேயே சிறு நீர்
கழித்தார். அம்மா அவரை ‘நீங்கள் முற்றத்தில் இப்படி ச்செய்யக்கூடாது வாசலுக்குத்தான்
சென்று வரவேண்டும் என கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அப்பா நொந்து போனார்.’ இப்படி இருக்கிறது
என் பிழைப்பு’ என்று எனக்கு ஒரு போஸ்கார்டில் காகித பென்சிலால் எழுதிப்போட்டிருந்தார். ஊருக்குப்
போயிருந்த சமயம் இது விஷயம் நான் அம்மாவைக்
கேட்டேன். அம்மா எனக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. அது என் நினைவுக்கு வந்தது. அது
வந்திருக்க வேண்டாம்.
‘என்னடா நான்
இப்ப கூடத்துல நகர்ரேன். என்னால நடக்க வக்கல.மித்தத்துலயே யூரின் போறேன். உங்க அப்பா ஒரு சமயம் உடம்பு முடியாம
இருந்தார். ’மித்தத்துல கூடவே கூடாது. யூரின்
போறதுன்னா வாசலுக்குத்தான் போகணும்னு’ அவர கட்டாயமா சொன்னேன். அதுக்குதான் இப்ப நான் படறேன்னு உனக்கு மனசுல ஓடறதா.’
‘இல்லை அம்மா’ பொய்தான் சொன்னேன்.
என் ஆழ்மனதில்
என்னவெல்லாம் காட்சியாகியது என்பதை அம்மா எப்படியோ கண்டுபிடித்து விட்டாள் என்று ஆச்சரியத்தோடு
அம்மாவைப்பார்த்தேன்.
‘நான் உன் அம்மா’ என்றாள்.
என் அம்மா அப்பாவிடம் ஏன் அப்படிக்கண்டித்துச்சொன்னாள். அதற்கு ஏதேனும் ஒரு
பொருள் இருக்கலாம். எனக்குத்தான் இன்னும் அது பிடிபட மறுக்கிறது.
===================================
No comments:
Post a Comment