Tuesday, January 16, 2024

கவிதைகள் 5

 

சட்டத்தின் அழகு


அரிஹாஷா

ஏழுமாத இந்தியக்குழந்தை

அடிபட்டது என ஆஸ்பத்திரி போனார்கள்

பெர்லின் நகர குழந்தைகள் நல அமைப்பு

ஜூகண்டாம்டின் கொண்டு சேர்த்தது ஃபாஸ்டர் ஹோமில்

தாயும் தந்தையும்

பெற்ற குழந்தையைக் கவனிக்கவில்லை குற்றச்சாட்டு

நீதிமன்றம் விடுவித்தது

குற்றம் இல்லை அவர்கள் மீதென

ஆண்டுகள் ரெண்டாகியும் குழந்தை

பெற்றோரைச்சேரவில்லை

ஜெர்மன் தேசத்தில் தவிக்கின்ற தாயும் தந்தையும்

பிரதம மந்திரி முதல் மந்திரி

தெரிந்த எம்பிக்கள் என் எல்லோருக்கும்

மனுப்போட்டு மன்றாடுகின்றனர்.


யாதுமாகி



என் வீட்டுத்தோட்டத்தில்

வாழைமரமுண்டு ரஸ்தாளி

கட்டாயம் இலை வேண்டும் அமாவாசைக்கு

மகிழ்ச்சி இல்லை வாழை தார் போட்டோலோ

அவளும் நானும்  வீட்டில்

இருவருக்கும் சர்க்கரை

வாழைத்தார் வெட்டி 

மரத்தை அசமடக்கி

அது பழுக்கக்காத்திருந்து

அக்கம் பக்கத்தார்க்குக்கொடுக்க

‘யார் கேட்டது’ என்பார்கள்

பின் வாங்கிக்கொள்வார்கள்

வீதியில் எப்போது பசுமாடு வரும்

பழம் போடக்காத்திருப்பதுவா வேலை.

அருகிருக்கும் செல்லித்தாய் கோவிலில்

கொண்டுபோய் வைக்கிறேன்

யாதுமாகியவளுக்கு அத்தனையும்.


நிராசை


உங்க அம்மாவையும் அப்பாவையும்

கண்கலங்காம சந்தோஷமா  வச்சிகணும்

இல்லைன்னா விவாகரத்துதான்னு

சொல்ற பொண்டாட்டிய

கண்ணால பாக்கணும்

எல்லா கணவன் மார்களுக்கும்

அடிமனத்தில் ஆசை

செவியுற்ற பிரமன் சொன்னார்

முயன்று முயன்று தோற்றுப்போனேன்

சாத்தியமில்லை விட்டு விடு

வேறேதேனும் ஆசைப்படு.


வந்தே பாரத் ரயில்


பள பளா வந்தே பாரத்

ரயில் பார்த்து சந்தோஷப்பட்டேன்

பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியும்

பெரிய பெரிய மனிதர்கள்

வைத்திருந்தார்கள்  கம்பீரமாக

வண்டிக்கு பிரேக் வாங்கி பொருத்தாமல்

சந்தனப்பொட்டோடு

குங்கும அலங்காரம் வண்டிக்கு செய்த கதை

ஓரிசாவில் அம்பலமானது

மூன்று ரயில்கள் முட்டி சோகம்.



தீராது நோய்


படேலுக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

ராமானுஜருக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

வள்ளுவருக்கு நூறு அடி சிலை

வேண்டாம்

விழுப்புரத்தில் சாதிச்சண்டையில்

மண்டை உடைந்தது

கொவிலுக்கு சீல் வைத்தார்கள்

அம்மனுக்கு சிறை

மனம் செம்மையாகாமல் மார்க்கம் ஏது?






No comments:

Post a Comment