/ஜனநாயகம்
விருட்சம் கவியரங்கம்
13/10/23
வாசித்த கவிதை
இலங்கை தேசத்தில்
சகோதரத்தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள்
லட்சக்கணக்கில்.
ஆப்கனில் நடந்தேறிய
அடாவடித்தனம் உலகறியும்.
ரோஹிங்யா முசுலிம்கள்
ஆயிரம் ஆயிரமாய்
துரத்தப்பட்டார்கள் புத்த
பர்மாவிலிருந்து.
உக்ரைன் ரசியா ஓரினம்
முடிந்தபாடில்லை இன்னும்
போர்.
லட்சம் போர்வீரர்கள்
சாம்பலாயினர் மொத்தமாய்.
மணிப்பூரில் மனித உடல்கள் கேட்பாரற்றுக்கிடக்கின்றன
பிணக்கிடங்கில்.
சீன நீர்மூழ்கிக்கப்பலில்
வேவுபார்த்த அய்ம்பது விஞ்ஞானிகள் ஜலசமாதி ஆனார்கள் அண்மையில்.
ஆரம்பமாகிவிட்டது
இஸ்ரேல் ஹமஸ் சண்டை
யூதர்களும் இசுலாமியர்களும்
செத்துப்போகிறார்கள் அன்றாடம்
பிணங்களை எண்ணி எண்ணிக் கணக்குக் தருகின்றன மீடியாக்கள்.
துப்பாக்கிக் குண்டுகள்
விற்றால் போதுமென
பெருமுதலாளிகள் இருக்கிறார்கள்
அவர்கள் அள்ளிப்போடும்
பிச்சைக்காசில்
தேர்தல் மகோற்சவம் நடக்கிறது.
எந்த நாடானாலும் என்ன
வல்லவன் முன்னே
நல்லவன் மண்டியிட்டபடி
இது என்றைக்கும்தான்.
வல்லவனே நல்லவனாய்
இருப்பது
புராணங்களில் மட்டுமே
No comments:
Post a Comment