இணையக்கால கவியரங்கம்
- 27/11/23
புத்தகக்கண்காட்சி
வரவிருக்கிறது சென்னையில்.
ஆயிரம் அரங்குகளில்
புத்தகம் விற்பார்கள்
ஒவ்வொருவரும் தமக்கென்று
நான்கு அரங்குகளைத்
தேர்வு செய்யுங்கள்
போதும் அதற்கே நேரம்
சரியாக இருக்கும்.
நான்கு நண்பர்களைச்
சந்தியுங்கள் அதுவே போதும்
மீறினால் நட்பு நீர்த்துப்போகும்
சில அரங்குகளைக்
கண்களை மூடிக்கடக்கலாம்
சில அரங்குகளை விட்டு
வெளிவர மனசே வராது
ஆனால் வருவோம்.
திருவேறு தெள்ளியராதலும் வேறு.
பணம் செலவாக செலவாகக்
கையில் வாங்கிய புத்தகங்கள்
எடை கூடும்
அட்டை மட்டுமே அழகாக இருக்கும் புத்தகம்
தலைப்பு மட்டுமே அழகாக
இருக்கும் புத்தகம்
முதல் அத்யாயம் மட்டுமே
நமக்குப்பிடிக்கும்
புத்தகம்
இப்படி இப்படி
முழுவதும் சிறப்பாய்
இனிதான் எழுதுவார்கள்.
வாங்கிய புத்தகங்களை
வீட்டுக்கு வந்து பார்த்தால்
ஏற்கனவே அதனை இருமுறை வாங்கி ஓரமாய்க்கிடக்கும்.
நுழைவு டோக்கனை
விலாசம் எழுதி பெட்டியில்
போட்டு ஆனந்தப்படாதீர்கள்
எனக்குத்தெரிந்து பரிசு
பெற்றவர்களை நான்
கண்டதே இல்லை.
யாரேனும் பதிப்பகத்தார்
ஃப்ரீ டோக்கன் இதோ சாப்பாட்டுக்குப் போங்கள்
என்றால் போகலாம்
சந்திராஷ்டமம் உங்களுக்கு.
நூலரங்கிற்குச் செல்லுமுன் பழைய புத்தகக்கடையில் எப்போதேனும்
அரிய புத்தகங்கள் முன்னோர் விட்டுச்சென்றது நம்மை ஈர்க்கலாம்.
ஆயிரம் கொனஷ்டைகள் சொல்லலாம்
ஆனாலும்
புத்தகக்கண்காட்சி
அழகுதான் போங்கள்.
No comments:
Post a Comment