Monday, January 15, 2024

இராமலிங்கம் அஞ்சலிக்கட்டுரை

 

ட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் விடைபெற்றுக்கொண்டார்.

இலக்கியச்சிறகு என்னும் இலக்கியச்சிற்றிதழின் ஆசிரியர். ஷைன் என்னும் ஆங்கில இலக்கியச்சிற்றிதழும் பட்டுக்கோட்டையிலிருந்து  என்னும் சிறுநகரத்திலிருந்துகொண்டு சிறப்பாக நடத்தியவர். தனது  84 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். எளிமையே உருவான மனிதர். தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் பணுயாற்றி ஓய்வு பெற்றவர்.தன்னுடைய ஓய்வூதியத்தை தமிழ் இலக்கியப்பணிக்காகச் செலவிடுகின்ற  பல பெரியவர்களுள் இராமலிங்கமும் ஒருவர். 13/1/2024 அன்று காலை அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் அமரரானார்.

இலக்கியச்சிறகு என்னும் எண் வழிச் சிற்றிதழ் 23 அண்மையில்தான் வெளிவந்தது. அதனில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

மழைக்கால முகில் திட்டு என்னும் கவிதை.

’மழைக்காலம்

கூந்தல் பனையோரம்

கரையெங்கும் செங்காந்தள் பூக்கள்!

பச்சைப்பயிர்களின் ஊடே

குனிந்து களையெடுத்தாள்

கருங்கூந்தல் கன்னியொருத்தி

இடுப்பு கடுத்ததால் இளைப்பாற நிமிர்ந்தாள்

வானம் பார்த்தாள்

நாவற்பழ முகத்தாளை

நகர்ந்த முகில் திட்டொன்று              

மோகங்கொண்டு

அசையாமல் மிதந்தது

கண நேரத்தில் கரம் நீட்டி

தளிர்க்கொடியாளை

இறுகத்தழுவியது

மேகலையாள் தேகம் எரிந்தது

மேகத்தின் மோகமும் தீர்ந்தது!

 ஒரு இருபது வயதுக்கார இளங்கவிஞன் எழுதும் கவிதையோ எனத்தோன்றும். வான் உலாவும்  திட்டு மேகம் ஒன்று     வயலில்  நாற்று நட்டு   நிமிரும்   ஒரு பெண்ணின் முகத்தைக் கண்டது.   அவள் மீது மோகம் கொண்டது. அம்மேகம்  மின்னலாகியது.   அம்மின்னல் நாற்று நடும்  அந்த அழகிய பெண்ணைத்தழுவியது. அதன் மோகம் தீர்ந்தது. நடவு செய்யும் மேகலையாளோ எரிந்துபோனாள். நாற்று நடும் பெண்ணொருத்தி மின்னல்தாக்கி இறந்துபோனதுவே செய்தி. இதனைத்தான் நண்பர் இராமலிங்கம் கவிதையாக்கித்தந்தார்.

அடுத்த இலக்கியச்சிறகு  இதழுக்கான திட்டத்தை  இராமலிங்கம் என்னோடு விவாதித்தார். படைப்புக்களை எழுத்தாளர்களிடமிருந்து பெற ஆலோசனை சில சொன்னார். தானும் ஒரு சிறுகதை எழுதி உடன் அனுப்பிவிடுவேன் என்றார். படைப்புக்கள் பெற ஜனவரி 31 வரை எழுத்தாளர்களுக்கு அவகாசம் தாருங்கள் என்றார்.  அடுத்த இதழுக்கான அச்சுப்பணியை அதே  கடலூர்  ரமேஷ் அச்சகத்தில் கொடுங்கள் அவர் பொறுப்போடு செய்கிறார் என்றார்.

பட்டுக்கோட்டை ராஜா தன்னுடைய சிறுகதையை அடுத்த இதழுக்காக அனுப்பிவைத்தார்.  நானும் என்னுடைய சிறுகதை ஒன்றை அனுப்பிவிட்டேன். அச்சகப்பணி  ஏற்பாடு  அனைத்தும் நண்பர்  கடலூர் வளவதுரையன். அவரே  இலக்கிச்சிறகுக்கு ஆலோசனைக்குழு உறுப்பினரும் ஆவார்.

 இச்சூழலில் 13/1/24 அன்று  காலை நண்பர் பட்டுக்கோட்டை ராஜா தொலைபேசியில் என்னை அழைத்தார். எனக்கு இவ்வளவு காலையில் இவர் ஏன் அழைக்கிறார் என்கிற அய்யமும் எழுந்தது.’ இராமலிங்கம் அய்யா மறைந்துவிட்டார்’ என்கிற செய்தியைத் துயரத்தோடு சொன்னார்.  ஒரு நிமிடம் ஆடிப்போனேன். இத்தனை விரைவாக இந்த செய்தி வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை.

மறைந்த இராமலிங்கத்தோடு சில நினைவுத்துளிகள்.

தஞ்சையில் சுந்தர சுகன்  ஒரு இலக்கிய  விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு விருத்தாசலம் வே.சபாநாயகம் என்னையும் அழைத்துக்கொண்டு போனார்.தஞ்சைப்பிரகாஷ் எழுதிய நூல் ஒன்றிர்க்கான ஆய்வுக்கூட்டம். தஞ்சைப்பகுதி இலக்கிய ஆர்வலர்கள் அனேகர் வந்திருந்தனர். அங்கு வைத்துதான் எனக்கு பட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அறிமுகமானார். நானும்  எழுத்தாளர் சபாநாயகமும் சுந்தரசுகன் வீட்டில் இரவு சிற்றுண்டி முடித்துக்கொண்டு புறப்பட்டோம். சுந்தரசுகனின் அன்னையார் இலக்கிய நண்பர்களை அத்தனை அன்போடு கவனிப்பவர். அமரர் சுந்தர சுகனும் அப்படித்தான்.

தஞ்சைக்கூட்டத்தில்தான் இராமலிங்கம் தான் ஒரு சிற்றிதழ் தொடங்க இருப்பதாய்ச்சொன்னார். ஆங்கில சிற்றிதழும்  கூட அவரே தொடங்க இருப்பதையும்  எனக்குச்சொன்னார். தமிழ் சிற்றிதழுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற யோசனையில் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு முறை  விருத்தாசலம் வந்தார். நண்பர்கள் இலக்கிய விஷயங்கள் விவாதித்தோம். வே. சபாநாயகம் இல்லத்தில் நானும் இராமலிங்கமும் மதிய உணவு சாப்பிட்டோம். இதழுக்கு’ இலக்கியச்சிறகு’ என்று பெயர் வைப்பதாய் முடிவாகியது.

இலக்கியச்சிற்றிதழின் முதல் இதழை வடலூர் வள்ளல் இராமலிங்கர் சந்நிதியில் வைத்து வெளியிடவேண்டும் என்று விரும்பினார்.அப்படியே அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகியது. கவிஞர்கள் பா. சத்தியமோகன். கோவி. ஜெயராமன், சங்கு வளவதுரையன்  முனைவர் பாசுகரன்  ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். சிலகாலம் சிதம்பரம் தனியார் அச்சகம் ஒன்றில் இலக்கியச்சிறகு அச்சானது. பிறகு   இதழ் அச்சடிப்பதை தஞ்சைக்கு  மாற்றிக்கொண்டார்.

ஆங்கிலச்சிற்றிதழ் ‘ஷைன்’ தமிழ் சிற்றிதழ்’ இலக்கியச்சிறகு’ என வெளியிட்டுக்கொண்டிருந்தார். இலக்கியச்சிறகு இதழில் வெளிவந்த கவிதைகளைத் தொகுத்து’ வெயிலொழுகும் குடிசைகள்’ என்னும் தலைப்பில் ஒரு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்தத்தொகுப்பை தினமணி வெகுவாய்ப்பாராட்டி எழுதியிருந்தது.  தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பட்டுக்கோட்டை சென்றால் மு. இராமலிங்கத்தை நேரில் சந்திக்கவேண்டும் என்கிற தன் விருப்பத்தைக்குறிப்பிட்டிருந்தார்.

அந்த கவிதைத்தொகுப்பில் இராமலிங்கம் ஒரு கவிதையில் சொல்லுவார்,

கவிதையின் தலைப்பு ‘உதிரும் பூக்கள்’

‘வரும் வசந்தத்தில்

என் வாழ்க்கை முடிந்துவிடும்

அப்போது என் உடலை

ஒற்றையடிப்பாதையில்

கொண்டு செல்லுங்கள்

அப்போதுதான் பயணவழியெங்கும்

பறவைகளின் கீதம்

மிதந்து வரும்.

அவரின் இலக்கியச்சிறகு மேலட்டையில் தரும் அடையாள வாசகம் இப்படி.’ இலக்கியச்சோலை அமைப்போம் விரியும் சிறகோசை கேட்போம்’ . பறவைகளின் கீச்சு கீச்சு ஒலி கேட்க அவாவியவர்  பட்டுக்கோட்டை இராமலிங்கம். இலக்கியச்சோலை அமைத்து எத்தனையோ கவிதை பாடும்  கவிப் பறவைகளின் கீதம் கேட்கவைத்தவர். அந்த எத்தனையோ பறவைகளில் யானும் ஒருவனாய் இருக்கக்கூடும்.

பட்டுக்கோட்டை அரசு நூலகத்தில் நூலக வார விழா ஒன்றில் என்னை அழைத்துப்பேசச்சொன்னார். அது போழ்து  நான் இராமலிங்கம் அய்யாவீட்டில் ஓர் இரவு தங்கியிருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பினேன். இராமலிங்கத்தின் துணைவியார்  அத்தனை மிகப்பிரியத்தோடு என்னை வரவேற்று உபசரித்தார்.

யான் இலக்கிய விரும்பிகள்  தமிழ்ப் படைபாளர்கள்   வாழ்  விருத்தாசலம் நகரில்  பல காலம்,  கடலூரில் சில காலம் தொலைபேசித்துறையில் பணியாற்றினேன். கடலூர் மஞ்சகுப்பம் என் வீட்டிற்கு ஒரு முறை இராமலிங்கம் வருகை புரிந்தார்.  வியத்தகு பாசத்தோடு பழகும்  நண்பர் இராமலிங்கம்  என்னுடைய குடும்ப உறுப்பினர்களோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்தார்.

அவருடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்னைக்கு வந்தார். திருப்போரூர் அருகே ரொம்பதூரம் போனால் வரும்  அவரின் மகள்   வீடு.  இராமலிங்கம்  அவரின் மனைவி  இருவரையும் பார்த்துப் நீண்ட நேரம் பேசிவிட்டு வந்தேன். மிகவும் திருப்திபட்டுக்கொண்டார். அது உவப்பத்தலைகூடுதல் அல்லவா.

விருத்தாசலம் நண்பர் வே.சபாநாயகம் மறைந்தபோது மிகவும் வருந்தினார். அவர் எண்பதாம் ஆண்டு பிறந்தநாளுக்கு இலக்கியச்சிறகு சிறப்பு மலர் வெளியிட்டார். அதனில் வே.சபாநாயகம் அய்யா பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வெளியாகியது. வே.சபாநாயகம் அய்யாவுக்கு கொள்ளை சந்தோஷம். இலக்கியச்செல்வர்  தி.க.சி அவர்கள் நெல்லையிலிருந்து அந்தக் கட்டுரையைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார். ‘வே.சபாநாயகம் எனும் தமிழ் விருட்சம்’ எஸ்ஸார்சியின் கட்டுரை இவ்விதழின் மகுடம்’ இப்படி.

இராமலிங்கம்  இறப்புச்செய்தி கேட்டு நான்  பட்டுக்கோட்டை  சென்று அவர் உடலத்தைக்கடைசியாய்க் கண்டு வணங்கி வந்திருக்கவேண்டும்.  சென்னையிலுள்ள  என்னால், என் வசதிக்கும் உடல் நிலைக்கும்  இயைந்து அங்கு வரமுடியாமல் அழுதுகொண்டிருந்தேன். இராமலிங்கம் அய்யாவின் கவிதைகளை, கட்டுரைகளைப்படித்து மனத்தைத் தேற்றிகொள்கிறேன். முடியவில்லைதான்..

இராமலிங்கத்தின் கவிதையிலிருந்து சில வரிகள் நான்  எண்ணுவது போலவே,

கவிதையின் தலைப்பு ,    ‘காலப்போக்கில்’,

‘மாலை ஒன்று கொண்டுவந்து

உனக்கு மரியாதை செய்திருக்கலாம்

வெறுங்கையோடு வந்தாவது

உன் வெற்றுடலைத் தொழுதிருக்கலாம்

ஒன்றுமே செய்யவில்லை நான்….

இராமலிங்கம் தனது நண்பர் ஒருவர் மறைவுக்கு வருந்தி எழுதிய கவிதை. இந்த வரிகளை  நானே   சொன்னது போல் உணர்கிறேன்.

மாசிலா மனம் ஒன்று மறைந்து விட்டது. அன்னாருக்கு என்  இதய பூர்வ அஞ்சலி.

--------------------------------------------

 

 

 

 

 

No comments:

Post a Comment