ஜம்பம்
சலூன்கள் மூடிக்கிடக்கின்றன இது கொரானாக் காலம்.இரண்டாம்
கிளாஸ் படிக்கும் என் பையனுக்குத் தலை முடி காடாய் வளர்ந்து நிற்கிறது. முகமே தலை முடிக்குள் புதைந்து கிடப்பதுவாய்
ஒரு தோற்றம். காது மடல்கள் தேடினால் மட்டும்
தெரியலாம். கல்விக்கூடங்கள் மூடிப்பல மாதங்கள், இல்லை, வருடங்கள் சிலவும் ஓடி விட்டன.
ஆன் லைன் வகுப்புக்கள். ஏனோ தானோஎன்ற படிக்கு
ஒப்பேற்றும் சமாச்சாரம் மட்டும் தொடர்ந்து
கொண்டிருந்தது. ஆசிரியர்கள் கற்றது மறக்காமல் இருக்கக் கடவுள்தான் அருள்பாலிக்க வேண்டும் .கல்விக்கூடங்கள் நிர்வாகம் செய்வோர்க்குக் கல்லா
கட்டுவதில் கொஞ்சம் சிரமம் உண்டு. பெருந்தொற்றுக்காலத்தில்
அது கூடவா இல்லாமல் இருக்கும். தெய்வங்கள்
எல்லாம் துணை செய்ய எந்தக்குறையுமில்லாமல்
ஜிகு ஜிகு என்று பிய்த்துக்கொண்டு ஓடுவது சாராயக்கடை வியாபாரம் மட்டுமே.
யோசித்து யோசித்து ஆன்லைனில் அமேசான் வழி ஆர்டர் செய்தேன். ஹேர் கட்டர் ஒன்று பொட்டலத்துக்குள் சயனித்து வீடு வந்தது. பத்துபக்கத்திற்கு ஒரு லிட்ரேசர். அந்த மெஷினை பராமரிக்கும் முறையினை வீராப்பு ஆங்கிலத்தில் எழுதி மெஷினுடன் அனுப்பியிருந்தார்கள்.படித்துப்பார்த்தேன். பாதி
புரிந்தது. பாதி புரியாமல் இருக்க ஊகம்
செய்து முடித்தேன். காலம் காலமாய் இப்படித்தான்.
வீட்டு வாசலில் ஒரு மர ஸ்டூல் எடுத்துப்போட்டு என் பையனை அமர வைத்தேன்.
கழுத்தில் ஒரு துண்டு போர்த்திவிட்டேன். அவன்
உடம்பில் முடி படாமல் இருக்க எனது முன்னேற்பாடு. ஸ்டூலுக்குக் கீழாகப் பிளாஸ்டிக் பேப்பர்
விரித்து வெட்டப்பட்ட முடிகள் சேகரம் செய்ய உஷாராக ஒரு ஏற்பாடுசெய்தேன்..
ஹேர் கட்டரை சார்ஜில் போட்டு வைத்திருந்தேன். அதனுள்ளாய்
கட்டர் பிளேடை நுழைத்தாயிற்று. ஸ்டாட்டர் பட்டனை
ஆன் செய்து பையனின் தலைமுடிக்குள்ளாக ஹேர் கட்டர் மெஷினை நுழைத்துக்கொண்டு போனேன்.ஏதோ
புல் டோசரை கிரிக்கெட் மைதானத்தில் செலுத்துவதாகக்
கற்பனை செய்துகொண்டேன். நன்றாகத்தான் எல்லாம் நடப்பதுபோல் தோன்றியது. முன் மண்டையில்
கட்டர் மெஷின் முடியை ஒட்ட வெட்டி விட்டதைச்
சட்டென்று கவனித்தேன்.’ போச்சுடா மோசம்’ எப்படியாவது அதனைச்சரி செய்ய இயலுமா என முயற்சித்தேன்.
என் முயற்சி திருவினை ஆக்கவில்லை. பையன் தலைமுடியைப்பார்க்க எலி கத்தரித்து விட்ட மாதிரிக்கு இருந்தது. கையில் முகம் பார்க்கும் கண்ணாடி
வைத்திருந்த அவன் தன் தலைமுடியை அதனில் பார்த்துவிட்டான்.
அவன் கண்கள் குளமாகி அழ ஆரம்பித்துவிட்டான்.
செய்துவிட்ட பிழையைச்
சரி செய்ய, சரி செய்ய, இன்னும் கேவலமாகத்தான்
தலைமுடி காட்சி தந்தது. கட்டர் மெஷினை தூக்கி எரிந்துவிடலாமா என்றால் மனம் வரவில்லை.
ஈகோவும் ஆல்டர் ஈகோவும் மன்டைக்குள் முட்டி
க்கொண்டன.
இனி என்ன செய்ய, சலூன் ஒன்றிர்க்குச்சென்றால்தான் ஓரளவுக்கேனும்
பிரச்சனை சரியாகும். ஸ்டூலை எட்டி ஒரு உதைவிட்டு
ஓரங்கட்டினேன்.. பையனின் துண்டு போர்த்திய வேஷத்தைக்கலைத்தேன். ஒரு பனியனை அவனுக்கு மாட்டிவிட்டேன்.
வீட்டு வாசல் முச்சூடும் ஏக அமர்க்களமாக இருந்தது. கன்னா பின்னா என்று தலை முடி சிதறிக்கிடந்தது.
எல்லாவற்றையும் அப்படியும் இப்படியும் ஓரம் பண்ணி முடித்தேன்..
‘தம்பி சலூன் வரைக்கும் போயி வருவமா’
‘எதுக்கு’
‘உன் தல முடிய சரி பண்ணணுமே’
‘ சிசர் வச்சி நீயே சரிபண்ணிடு’
’இல்லப்பா இத சரி பண்ணறது நம்மால ஆவாது யாராவது சலூன் கடைக்காரரைத்தான் போய்ப்பார்க்கணும் சரிபண்ணிட்டுவரணும்’
என் பையனும் நானும் கடைத்தெருவுக்குக் கிளம்பினோம். கொரானாக்காலம்
கடைத்தெருவோ வெறிச்சோடிக்கிடந்தது. மெடிகல் ஷாப்கள் டீக்கடைகள் ஒன்றுவிட்டு ஒன்று திறந்திருந்தன.
சலூன்கடையைத்தேடினேன். எல்லாம் அடைத்துக்கிடந்தன. ஒரு டீக்கடைக்காரரை
விசாரித்தேன்..
‘சலூன்காரங்க ஒருத்தர் வேணும்’
‘ இப்ப எல்லாம் கடை ஏது சலூன்கடைங்க தொறக்குறது இல்லயே’
‘ சலூன்கடைகாரங்க வீடு எதாவது உங்களுக்கு தெரியுமா’
‘ தெரியாது. ஒரு சேதி. இங்கிருந்து இன்னும் நாலு கட தள்ளி போங்க ஒரு சலூன்கடை
வரும். கதவு மூடிதான் கெடக்கும். ஆனா அவுரு
போன் நெம்பரு சாக் பீசால கதவுமேல எழுதி வச்சிருக்காரு. பேசுங்க ஒரு அவசரம் அக்கரைக்குக்கு
பேசித்தானே ஆவுணும்’
‘ நா பாக்குறேன்’
நான்கு கடை தள்ளி டீக்கடக்காரர் சொன்னமாதிரியே ஒரு சலூன்
இருந்தது. அதன் கதவு சாத்தப்பட்டுக்கிடந்தது. சாக் பீசால் போன் நெம்பரை எழுதி இருந்தார்கள்.
என்னுடைய மொபைல் போனை எடுத்தேன். அந்த எண்னுக்குப்போன் போட்டேன்.
‘யாரு’
‘ஒங்க கடை வாசல்ல நிக்குறேன்.’
’ சாரு நா சலூன் கடைகாரன்’
’ நானும் சலூன்கடையை தான் தேடுறேன். எம் பையன் ரெண்டாவது படிக்குறபையன் அவுனுக்கு அவசரமா
கிராப் வெட்டுணும்’
‘ சலூன் கடை இப்ப தொறக்க வக்காதுல்ல’
‘அதான் போன் பண்னுறேன்’
‘ அப்படின்னா என்
வூட்டுக்குத்தான் நீங்க வருணும்’
‘வறேன். பையன் என்னோடத்தான் இங்க இருக்கான்’
‘ரொம்ப சரி. நீங்க நிக்கற கடைக்கு அடுத்தாப்புல ஒரு தெருவு.
அந்த தெரு மெலயே வந்தா பெரிய வாட்டர் டேங்க் வரும் . அப்பிடியே சோத்து கைபக்கம்
திரும்பினா ஒரு தெரு. தெருவுமாதிரியும் இல்ல ஒரு
சந்தாட்டம் இருக்கும். அது மேலயே வருணும். கடசீல ஒரு செல்லியாயி கொவிலு. அதுக்கு எதுத்தாப்புல
என் வீடு. வீட்டு வாசல்ல ஒரு ஆட்டோ நிக்கும். ஆட்டோ நிக்குற வூடு என் வூடு. எம்மொவன்
ஆட்டோ ஓட்டுறான்.என் தொழிலும் தெரிஞ்சி இருக்கான். ஆனா கூட மாட வருவான். ஒண்ணு மறந்துட்டன் ரூவா நூறு குடுத்துடணும்.
என்ன சில்லரை மாத்தி குடு கிடுன்னு சொல்றவேல மட்டும் வேணாம்’
‘சரி நா உங்க வூட்டுக்கு நேரா வரன்’
என் பையனைக்கையில் பிடித்துக்கொண்டு சலூன்காரர் சொன்னபடியே
நடந்தேன்.
வாட்டர் டேங்க் வந்தது. வலதுகை பக்கம் திரும்பினேன். நடந்தேன்.
சந்தில் கோலி விளைடிய இரண்டு சிறுவர்கள்.
‘ ஆலே அந்த தம்பிய பாருடா.’
‘ஆமாம் தல முடி எலி கரண்டிவுட்ட மாதிரிக்கு இருக்கு’
‘எலி ஒண்ணும் கரண்டுல’ என் பையன் வெடுக்கென்று பதில் சொன்னான்.
‘பசங்க எதாவது சொன்னா என்னா சொல்லுட்டுமே’
‘ தல முடி என்னுது. தப்பு பண்ணுனது நீ. என்னத்தானே எல்லாரும்
ஒரு மாதிரியா பாக்குறாங்க’ சட்டமாய்ப்பேசினான்.
செல்லியம்மன்கோவில் வந்தது. எதிர்சாரியில் ஆட்டோ ஒன்றும்
நிற்கவில்லை. கோவில் வாயிலில் நின்றுகொண்டிருந்தேன்.
‘சாரு சாரு’
யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தேன்.
‘இங்க வாங்க ஆட்டோவ எம்மொவன் கெளப்பிகினுபோயிட்டான் அதான்
முழிக்கிறீங்க’
அந்த சலூன்கடைக்காரரிடம் நேராகப்போய் நின்றேன்.
‘யாரு ஒன் மவனா’
‘தலமுடி என்னா அசிங்கிதமா கெடக்கு பாரு’
‘ஆமாம்’
என் பையன் தன் தலையை ஒருமுறைத்தடவிப்பார்த்துக்கொண்டான்.
‘புது கட்டரு வாங்கினிங்களா’
‘ வாங்கினேன்’
‘அத அந்த பயலுக்கு தெரியற மாதிரிக்கு வக்கிலாமா’
நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. என் பையனை மட்டும் பார்த்துக்கொண்டேன்.
அவன் முகம் கடு கடு வென்று இருந்தது.
‘’செறு பையன் அவன சொல்லி குத்தமில்ல. நாம்ம சாக்குறதயா இருக்குணும்’
’இப்ப என்ன செய்யுலாம்’
‘எங்கிட்ட கட்டர் இருக்கு. தம்பிக்கு தல முடி ஏடா கூடமா கட் பண்ணிக்கெடக்கு. இப்ப ஒரே ஒழுங்குக்கு தல முடிய நேர் பண்ணிடனும்.’
‘ தெ இப்பிடி குந்து தம்பி’ தரையை மேல் துண்டால் தட்டி
விட்டான்.
பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் எடுத்து என் பையன் தலைமுடியை
ஈரப் படுத்தினான். ஹேர் கட்டரைக் கையில் எடுத்துக்கொண்டு
அவன் தலைமுடியை அறுவடை செய்து முடித்தான். அனேகமாக மொட்டை அடித்த மாதிரிக்கு இருந்தது.
சந்தனம் தடவத்தான் வாய்ப்பில்லை. பையன் தலைமுடியைத்தடவித்தடவிப்பார்த்துக்கொண்டான்.
முகம் சுருங்கிப்போய் இருந்தது.
‘ஒரு பத்து நாளு பொறு. முடி ஜோரா வந்துடும்’ என் பையனுக்கு
ஆறுதல் சொன்னார் சலூன்கடைக்காரர்.
நூறு ரூபாயை எடுத்து
நீட்டினேன். கட்டிங்க் செய்தவர் ’முருகா’ என்று உரக்கச்சொல்லி புன்னகையோடு வாங்கி. தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்.
’மெஷினு என்ன ஆச்சிங்க’
‘ஏன் வூட்டுலதான் இருக்கு’
‘அது இன்னும் வேணுங்களா
உங்களுக்கு,’
‘ ஏன் அப்பிடி கேக்குறிங்க’
‘இல்ல எனக்கு மெஷினு தேவயா இருக்கு. நானே வாங்குணும்னு
பாத்தன். அது உங்க கிட்ட சொம்மா கெடந்தா வாங்கிகலாம்னு ரோசனை’
‘ஆயிரத்து எட்டு நூறு போட்டு வாங்குனது’
‘ நானு உங்க வூட்டுக்கு வர்ரன் அத வாங்கிகிறேன். ஒங்களுக்கு ரெண்டு தம்பிக்கு ஒண்ணு.
மாசம் மூணு நூறு ஆவும்.. ஆறு மாசம் வறேன். நீங்க எங்கயும் வெளில முடிவெட்டிக போவேணாம்
சாரு. உங்க போனு நெம்பருதான் எங்கிட்ட இருக்கு. நா அப்பப்ப பேசுறேன் வறேன்’
‘சரி நானு வறேன்’
‘ சாரு நானும்
கூட வறேன் உங்க வூட்ட பாத்துட்டு அந்த ஹேர்
கட்டரு மெஷின கையோட எடுத்தாந்துடறன். இனிமேலுக்கு நானே வூட்டுக்கு
வறென் ரெண்டு பேருக்கும் முடிவெட்டுறன்.. கூலின்னு
சல்லிக்காசு வேணாம். நீங்க அக்காடான்னு இருக்கலாம்ல சாரு’
நான் என் பையனோடு நடக்க ஆரம்பித்தேன். நான் இன்று கூலியாய்க்கொடுத்த நூறு ரூபாயை திரும்பக்கேட்டு வாங்கிக்கொண்டு
விடலாமா என்று ஒரு சின்ன யோசனை வந்தது. அது வார்த்தையாக மட்டும் வெளிவரவில்லை.
‘சாரு கொரானா காலத்துல நாங்க செத்து செத்து பொழக்கிறம்.
கடத்தெரு சலூனுக்கு வாடவ தரணும். கரண்டு பில்லு
இருக்கு. வூட்டு வாடவ, குடும்ப செலவு மளிக பாலு இன்னும் காயலா கருப்புன்னு எம்மானோ இருக்கு. நாங்க சின்னபட்டமாதிரிக்கு
யாரும் சின்ன பட்டு இருக்க மாட்டாங்க’
நான் நடந்துகொண்டே இருந்தேன்.
தெருச்சந்தில் கோலி விளையாடிய சிறுவர்கள் மீண்டும் என்
பையனைப்பார்த்தார்கள்.
‘தேவுலாம்டா தல முடி இப்ப சூப்பர்டா’ என்றார்கள்.
பையன் இப்பொழுது
என் கையைவிட்டுவிட்டுத்தானே ஜோராய் நடக்கிறான்..
----------------------------