Tuesday, December 5, 2023

வலி

 

 

 

 

 வலி                                                                            

 சென்னை கே கே நகரில் டிஸ்கவரி புத்தக அங்காடி அரங்கில் ஒரு இலக்கிய அமர்வு.  அந்த அமைப்புக்கு  ஐந்தாமாண்டு  விழா.  பதினைந்து ஆயிரம் ஆன் லைன் உறுப்பினர்களைக் கொண்டதொரு  இலக்கியச் சங்கமம். கேட்பதற்கே பிரமிப்பதாக இருக்கும்தான். நெட்  வர்க் அறிவியல்    உலகத்தையே  ஒரு மேடை ஆக்கி அழகு பார்க்கிறதே.

சமீபகாலமாய் ஜூம் மீட்  கூகிள் மீட் என்று பல ரகம் பார்த்தாயிற்று. இன்னும் எத்தனையோ வரலாம்.  கொரானா காலம் முடிந்து-  அப்படிச்சொல்லலாமா என்னவோ? - முதல் முதலாய்  நடக்கும் இலக்கியக் கூட்டம்.   நாற்காலிகள் வரிசையாய்ப் போட்டு அதனில்  அமர்ந்து மேடையை முறைத்துக்கொண்டு    இலக்கிய கூட்டம் கேட்பது  எல்லாம்  இனி நடக்குமா? அச்சம்   அடிவயிற்றில் புளியைக்கரைத்ததும் உண்டு. 

 இரா. முருகனின் சிறுகதைகள் ஜெய மோகனின்  விஷ்ணுபுரம் இவை  எனக்கே எனக்கு   வேண்டும்  அந்த டிஸ்கவரி புத்தக அங்காடி அலமாரிகளில் தேடினேன்.  கிடைக்கவில்லை.இது நாள் வரை  எத்தனையோ புத்தகக்கடைகளில் எத்தனையோ நகரங்களில்  தேடியாயிற்று. அவை அகப்பட வில்லைதான்.  ஒவ்வொன்றிர்க்கும் அதற்குச்சரியான நேரம் வரவேண்டும். அது வரவில்லை.

அந்த டிஸ்கவரி அரங்க இலக்கிய அமர்விற்குச்சென்றுவிட்டுத்தான் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்

கூட்டத்தில் முகம் தெரிந்த நண்பர்களுடன் பேசுவதற்குக்கிடைத்த வாய்ப்பு. பேசவும் பேசினேன்.  அலைபேசியில்  குரல் மட்டுமே கேட்டு அவர்களின் முகம் பார்த்துப்பழகாதவர்களை எப்படி அறிவது. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவரவர்கள் சுய விபரம் சொல்லியிருக்கலாம். அது  அங்கு  வந்திருந்த எல்லோருக்கும் எத்தனையோ  சவுகரியமாக இருந்திருக்கும்.  அப்படி ஒன்று அங்கு நடக்கவில்லையே.

கூட்டம் தாமதமாகத்தான் தொடங்கியது. எழுத்துலகில்  பிரபலங்கள் என நான்கு பேர் மேடையில் அமர்ந்திருந்தார்கள்.  ‘வணிக எழுத்தென்று ஒன்று உண்டா?’ இப்படி ஒருகேள்வி அதற்கு  அப்படியும்  ஒரு  எழுத்து உண்டென்று எல்லோரும் ஆமோதித்தார்கள். ‘ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சிக்னேசர் நோட் என்று உண்டா அது தேவையுமா?’ இப்படியாய் அடுத்து ஒரு  கேள்வி  வந்தது. அது தவிர்க்கவே முடியாதது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும்  அது  ஒட்டிக்கொண்டு இருக்கவே   செய்யும்.    மாபாரதக் கர்ணனின் கவச குண்டலம் மாதிரி அது . இப்படி   விடை தந்தார்கள்.

 பிரபல பத்திரிகைகளில் கதைகளை அச்சுக்குத்தேர்வு செய்யும் குயுக்தி எப்படி என்பது பற்றி ஒருவர் ரகசியங்கள்  சில சொன்னார். சிலதுகள்தான். ’முப்பது நாட்களில் கவிஞராகலாம் முயன்றுபாருங்கள்’ தொடர்ந்தது. இலக்கிய  நிகழ்வு  இப்படியாய் போய்க்கொண்டிருந்தது.

 நான் சற்று நெளியவே ஆரம்பித்தேன். வேறு வழி இல்லை கூட்டம் முடிவதற்கு முன்பாகவே கிளம்பினேன். என் வீடு போய்ச்சேர இரண்டு மணி நேரமாகலாம். வீடு தாம்பரத்திலிருந்து மேற்கே முடிச்சூர் சாலையில் ஐந்து கிலோமீட்டருக்குப்போயாகவேண்டும்.  போகவும் வரவும் ’ஓலா’’ உபர்’ எல்லாம் புக் செய்துகொண்டு இலக்கியக்கூட்டம் போய்வந்தால் வீட்டில் தாய்க்குலம் உள்ளேதான் விடுவார்களா? ஹோம் டிபார்ட்மெண்ட் சாதாரணமானதா என்ன?        

கூட்டத்திற்கு பத்து புத்தகங்கள் மஞ்சள்  துணிப்பையில் போட்டுக்கொண்டு போனேன். துணிப்பையுக்கு எல்லாம்  இப்போது மவுசு சார்.  பத்தும்   நான் எழுதியப் புத்தகங்கள். எழுத்தாளனாயிற்றே. நீங்கள் சற்று புன்னகைப்பது கூட  எனக்கும் தெரிகிறது.

 புத்தகங்கள் புதினம் கட்டுரை சிறுகதை என வேறு வேறு தினுசுகள். மூன்று நண்பர்களுக்கு அதனைப்பங்கிட்டுக்கொடுத்தேன். வேண்டாம் விடுங்கள் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டார்களே அதுவே என் மனதிற்குள்  பால் வார்த்தது.

சிலருக்கு புத்தகங்கள் கொடுத்துப்பார்த்து இருக்கிறேன். ‘சார் இது எல்லாம் நா படிக்கறது இல்லே’ எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா. அந்த இன்பத்தேன் வந்து காதில் பாயும் அனுபவமே அலாதிதான்.பலர்க்குக்கேட்க வாய்ப்பில்லை.

இரண்டாம் வரிசையில்  நண்பருக்கு நண்பர் ஒரு சிற்றிதழாளர். கடைசி வரிசையில் பதிப்பாளர் எழுத்தாளர் நண்பர்.  இருவருக்கும்  சாதாரணமாய் ஒரு வணக்கம் மட்டுமே சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்.

இலக்கியக்கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் பேருந்துகள் நிற்பதில்லை. எல்லா ஊர்களிலும் இப்படித்தானோ. ஏன்? சென்னை புக் ஃபேருக்கே   பேருந்துகள் காட்டுவது பெப்பேதான். வயதான வாசகர்கள் லோலாயி அடித்துக்கொண்டுதான் புத்தகக்காட்சிக்குச்சென்று திரும்பமுடிகிறது. இது விஷயம் யாருக்கும்  சொல்வதில்லை. சொன்னால் அடுத்த வருடம் புக் ஃபேருக்கு எப்படிப்போவது.

ஷேர் ஆட்டோக் காரன் ஒருவன் வண்டியை நிறுத்தினான். வண்டியில் காலி இடங்கள் இருந்தன. இல்லாவிட்டால் அவன் பார்வையே அலாதி. ஷேர் ஆட்டோ ஏறி அசோக் பில்லர் நிறுத்தம் வந்தேன். தாம்பரம் பேருந்து நிற்கும் இடம் பார்த்து நிற்கவேண்டும். பேருந்துக்காரர்கள் எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தலாம் அதனில் உங்களுக்கும் எனக்கும்   தாவா  ஒன்றும் இருக்க முடியாது. ஒரு தாம்பரம் வண்டி திமிறிக்கொண்டு வந்தது. எப்படியோ  பேருந்தில் ஏறி விட்டேன். கண்டக்டரிடம்  டிக்கட் வாங்குவதும் அதன்  மிச்சம் வாங்குவதும் கொஞ்சம் சிரமம்தான்.  அதனையும் வாங்கிவிட்டேன். சீட்டில் உட்காருவதுதான் சாத்தியமில்லை. பெண்கள்,  சீட்டெல்லாம் நிறைத்துவிட்டு ஆண்கள் சீட்டிலும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பேருந்தில் ஆண்கள் என்ற வாசகம் மட்டும் எழுதிக் கிடையாது. பெண்கள் உண்டு, வயதானவர் உடல் ஊனமுற்றோர் உண்டு.

நான் பேருந்தின் தூணைப்பிடித்துக்கொண்டு நின்றேன். சீட்டில் உட்காந்திருப்பவர்கள் கைகளில் ஆண்ட்ராய்டு  விளையாடிக்கொண்டிருந்தது. இருபது வயதுக்கு இருக்கும் பெண்கள் இருந்தார்கள். நான் நிற்பதெல்லாம் அவர்கள் சட்டை செய்தார்களா என்ன?  வண்டி அங்கங்கு நின்றது. இருக்கை ஒன்றும் காலியே ஆகவில்லை. ஆலந்தூர் நிறுத்தம் வந்தது. இறங்கியவர்கள் எண்ணிக்கையில் குறைவு. ஏறியவர்கள் அதிகம். அதிசயமாய் காலியான இருக்கையில் ஆலந்தூரில் ஏரியவர்கள் ஜம்மென்று உட்கார்ந்துகொண்டார்கள். நான் அசோக் பில்லரில் ஏறினேன். அவர்களிடம் போய் சீட் வேண்டுமென்று மல்லு கட்ட முடியுமா?. நின்றுகொண்டேதான் வந்தேன்.  கால் குடைச்சல். எனக்கு பிரஷரும் உண்டு சுகரும் உண்டு. யாருக்குத்தான் சென்னையில்  இதுகள் இல்லாமல் இருக்கிறதோ, அந்த ரகசியம்  தெரியவில்லை.

மீனம்பாக்கம் வந்தது யாரும் இறங்கவில்லை.  ஆனால் ஏறினார்கள். ‘பல்லாவரம்’ என்றார் கண்டக்டர். தொப தொப என்று இறங்க ஆரம்பித்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் காலியான  இருக்கைகள் எல்லாம் நிறைந்து விட்டிருந்தது. அந்த மாயாஜாலம்தான் எனக்குக் கைவரவில்லை. நான் நிற்கும் இடத்திற்கு அருகே சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் நடுத்தர வயதிருக்கலாம். வாய் திறந்தார்.

’ நம்மால வண்டில  சீட்டு புடிக்க வைக்காது. சின்ன பாப்பா ஆம்பள ச்சீட்டுல  ஜம்பமா உக்காந்து மொபைலு பாத்துகினு வருது.  அத எந்திரின்னு சொல்லு. சும்மா இருந்தா எப்பிடி. கேக்குணும்  அப்பிடியே உட்டா எப்பிடி கத ஆவும்’

நான் அவரைப்பார்த்தேன்.

அந்தப்பெண்ணுக்குக்காதில் எதுவும் விழவே செய்யாது. காதுகள் இரண்டிலும் இயர் போன் வைத்துக்கொண்டுதானே  அங்கே ஆண்ட்ராய்டு விளையாட்டு நடக்கிறது.

குரோம்பேட்டை வந்தது. யாரோ இறங்கினார்கள் யாரோ சீட்டில் அமர்ந்துகொண்டார்கள். கண்டக்டர் இந்த நிகழ்வுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ட்ரிப் ஷீட்டில் எழுதிக்கொண்டே இருந்தார்.

சீட் பிடித்து கொடுப்பது  அது  இது எல்லாம் அவர் வேலையா என்ன?

நடுத்தர வயதுக்காரர் ஆரம்பித்தார். ‘ உனக்கு  வண்டில வெடமே கிடைக்காது. கடைசிவரைக்கும் நிக்கணும்தான். வாய வச்சிகிட்டு  நீ என்னா செய்ற. கேக்குணும்’ நான் மீண்டும்  அவரைப்பார்த்துக்கொண்டேன்.

சானிடோரியம் நிறுத்தம் வந்தது. என்னைப்போல வயதானவர் ஏறினார். அவரோடு அந்த வயதானவரின் இணையும் ஏறினாள். இருவரும் தட்டுத்தடுமாறி ஏறினர். நிற்கவே முடியவில்லை அந்த அம்மாவால்.

நாங்கள் முடியாதவர்கள்  இப்போது வண்டியில்  மூவரானோம். சீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள் யாரும் அசையவே இல்லை. என் கால்கள் என்னிடம்  கெஞ்சிக்கொண்டிருந்தன.

தாம்பரம் நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் இறங்கத்தயார் ஆனார்கள். வண்டியே முழுவதுமாய் காலியாகிவிடும்.

‘ நாளைக்கி வினாயகர் சதுர்த்தி.  வண்டில போற வர்ர கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாதான் இருக்கும்’ கண்டக்டர் என்னைப்பார்த்துத்தான் இது சொல்லியிருக்கவேண்டும்.

பட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது. ’ஆகா தாம்பரத்தில் இறங்கியதும் ஒரு பிள்ளையார் மண் பொம்மை  வாங்க வேண்டும். இதனையும் சொல்லித்தானே என் மனைவி என்னை இலக்கியக்கூட்டத்திற்கு போய் வா’ என்றாள்.

தாம்பரத்தில் இறங்கினேன். அந்த நடுத்தர வயதுக்காரர் எங்கே என்று பார்த்தேன்.  அவரை எல்லாம்  இனி  எங்கே காண்பது.

 தாம்பரம் சண்முகம் பஜாரில் வினாயகர் மண் சிலை மட்டுமா அவருக்கு  ஒரு  கலர் ஜிகினா பேப்பர் குடையும் வாங்கினேன். ஷேர் ஆட்டோவில் ஒரு இடம் பிடித்து  என் முடிச்சூருக்கு வந்தேன்.  ஒரு கிலோ மீட்டர்  இருக்கலாம் வீட்டுக்கு நடந்தேன்.  முட்டிக் கால் விண் விண்  என வலித்துக்கொண்டிருந்தது. இரவு பத்து மணி.

‘ நாவ பழம் வாங்குலயா பொட்டணமா  கட்டி கட்டி விப்பானே என் மனைவி  வினாயகர் நிவேதனத்திற்கு அது  வேண்டுமே’ எனக்கேட்டாள்.

‘ நாளைக்கு  நானு அத ஃப்ரஷா  பறிச்சாறன். நம்ம தெரு புள்ளயா கோவில்லயே பெரிய  நாவ மரம் இருக்கு’

நெஞ்சாரப்பொய்தான் சொன்னேன்.

‘என் கால்வலி  இன்னமும் குறையவே   இல்லை.  இது  உங்களோடு இருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.’

--------------------------------------------

 

 

 

 

 

 

No comments:

Post a Comment