Tuesday, December 5, 2023

நாயினும் தாழ

 

 

 

 

 

’நாயினும் தாழ’                                                

 

’கீதா  என்னா இது  புது விசயமா இருக்கு,  குட்டியா  நீட்டமா  பிஸ்கட் கலர்ல ஒரு  நாய வச்சிகினு  தெருவயே சுத்தி சுத்தி வர,   உனக்கு  இந்த சாதி நாயி ஏது. பளிச்சின்னு  வாரு பில்ட் எல்லாம் போட்டுகிட்டு இது நிக்குதுங்கறன்..  ஒருத்தங்க  அதுதான் ஒரு   பெயிண்டு கடை மொதலாளி.  அவுங்க  வூட்டு  வேலய நீ  செஞ்சிகிட்டு  இருந்தில்ல. அந்த வேல இப்ப என்னா ஆச்சி’  

 கேள்வி கேட்டது  வீதியில்  எல்லோரும்தான்., நாயை இங்கும் அங்கும் கூட்டி அலைந்து திரிந்துகொண்டிருந்த கீதா  பதில் சொல்லத்தான் அங்கே  வந்தாள்.  அவள் மீது  மேலும் கீழும் இறங்கிய நாய்  அவளைப் பிடிங்கித்தான் தின்றது. அதற்கு அந்த கீதா  என்னதான் செய்யவேண்டுமோ? தெரியவில்லை..

கீதாவின் அம்மா முத்துலட்சுமி. அந்த தாயுக்கு எழுபது வயதிருக்கலாம். அந்தக்கிழவியும் ஒரு வீட்டில் வேலைதான் செய்கிறாள்.  ஆளுக்கு இரண்டாயிரம் என மாதம்  ரூபாய் நாலாயிரம் சம்பளமாய் வருகிறது.

  நவம்பர் டிசம்பரில் வெள்ளமாய்ப்போகும் அடையாற்றுக்குப்பக்கமாய் குறைந்தவிலைக்கு என்று ஒரு ஐநூறு சதுர அடி மண் வாங்கி முத்துலட்சுமியின் கணவர்தான் ஒரு வீடும் கட்டி முடித்தார்.  கொல்கத்தா துறைமுகத்தில்  லிஃப்ட் மென் வேலை செய்துவிட்டு வந்தவர். ஏதோ நோய் என்றார்  படுத்தார். நிரந்தரமாய்ப்படுத்தார்.  அவர் வாழ்க்கையே முடிந்து போனது.

இப்போது தாயும் மகளும்  தனியாகத்தான் இருக்கிறார்கள்.

 சொல்வது  நடந்து  ஒரு பதினைந்து ஆண்டுகள்  கட கட என  ஓடித்தான் விட்டன. ஒருகோடைகாலம். எலுமிச்சம் பிழிந்து விட்ட  ஒரு அய்ஸ் சர்பத் கடை வைக்கலாம் பிழைக்கலாம். முடிவு செய்தார்கள். ஆக  தாயும் மகளும்  படப்பை முடிச்சூர் செல்லும்    தார் ரோட்டின் ஓரமாய் ஒரு புளியமரத்தடி நிழல் பார்த்தார்கள்.  நாலு சவுக்கைக்கால் நட்டு மேலே  கீற்றுக்கொட்டகை போட்டார்கள். காட்டுமரத்தில் செய்யப்பட்ட  ஒரு  நீட்டு பெஞ்சும்,  வட்ட  மேசையும் நாலு பிளாஸ்டிக்  ஸ்டூல்களும்   சர்பத் கடைக்குள்ளாய் விஜயம் செய்தன.

 அம்மாவும் மகளும் மாறி மாறிக் கடையில் அமர்ந்தனர்.  சர்பத் வியாபாரம் கன ஜோராக நடந்தது.  கீதா  மட்டுமே கடையில் இருந்தால்  சர்பத் குடிக்க வருவோர் கூட்டம் சற்றுக் கூடித்தான் இருந்தது. அது  இயற்கைதான். அப்படிப்பட்டதுதானே  இந்த மானுடப்பிறப்பு.

 சர்பத்  சாப்பிட வந்த வாடிக்கையாளர்களில் ஒருவன்  சர்பத் கிளாஸ் எடுத்துக் கொடுத்த   கீதாவின்  கையை லேசாகத்தொட்டான்.

 ’ என்னா ஒரு  அக்குறும்பு ‘தாட் பூட் ஆச்சா போச்சா’  என்று கீதா கத்தினாள். கடையில்  கூட்டமும் அதிகம் இல்லை. அதுவும் ஒரு நல்லகாலம் சர்பத் கடையில் அம்மா முத்துலட்சுமியும் இல்லை. அவள் தான் ஒத்துக்கொண்டிருக்கும்  தன் எஜமானர் வீட்டு வேலைக்குச்சென்றிருந்தாள்.

மறுநாளும் முதல் நாள் கீதாவின்  கையைத்தொட்ட அதே மகராசன் வந்தான். சர்பத் வேண்டுமென்றான். கீதாவுக்கு அவன்  இனி வரமாட்டான் என்று ஒரு நினைப்பு. ஆனால் வந்தான். அவன் வந்தால் தேவலை என்று  கீதாவின் மன ஓரத்தில் திருட்டு நினைப்பு சன்னமாய் முளைத்துவிட்டு இருந்தது.  கீதாவைப்பார்த்தான் ஓரமாய்ச்சிரித்தான். இந்தமுறை அவனோடு நான்கைந்து நண்பர்கள் வந்தார்கள். சர்பத் வியாபாரம் நன்றாய்த்தான் நடந்தது. அடுத்த நாள் அவனே முதலில்  வந்தான். நண்பர்களும் வந்தார்கள். சர்பத் குடித்தார்கள். அவன் தன் சூட் கேஸ் திறந்து ஐம்பது எலுமிச்சம்பழங்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை எடுத்து கீதாவிடம் கொடுத்தான்.

அந்த நேரம் பார்த்து கீதாவின் தாயார் முத்துலட்சுமி சர்பத் கடைக்குள் நுழைந்தாள். கடையில் கூட்டம் இருப்பது முத்துலட்சுமிக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

‘ இது ஏது எலுமிச்சம் பழம்   சைசும்  ரொம்ப நல்லா இருக்கு’

  தெனம்  நம்ம கடைக்கு சர்பத் குடிக்க வர்ரவருதான் கொண்டாந்தாரு’

எலுமிச்சம்பழம் கொண்டுவந்தவன். தானே அந்த சாதனையாளன் என்று அவர்கள் முன்னே’ என்னைப்பார் என் அழகைப்பார் ’ என்று அறிவித்துக்கொண்டு நின்றான்.

‘தம்பி இது எவ்வளவுன்னு சொல்லு’

‘ சரியா போச்சியக்கா இது வூட்டுல காச்ச பழம்ல, சும்மாதான் நா கொண்டாந்தேன். காசு கீசு  எனக்கு வேணாம்’

முத்துலட்சுமி புன்னகைத்தாள். இப்படிக்கூட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.

கீதா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘கடய பாரு  நீ வெயாபாரத்த பாரு’ முத்து லட்சுமி கீதாவை எச்சரிக்கை செய்யும் பாணியில் ஓங்கிச்சொன்னாள். எலுமிச்சம்பழம் கொடுத்தவன் இருவரையும் பார்த்துக்கொண்டே சர்பத்  கடையை விட்டு நழுவினான்.  வேகமாக நடந்து போனான்.

‘ இந்த பசங்க எல்லாம் யாரு எங்க வேல பாக்குறானுவ’

‘ நா என்னாத்த கண்டன்’

‘சரி அத   நா வெசாரிக்கிறேன் நீ விடு’

முத்து லட்சுமிக்குத்தான்  இதுகள்  எல்லாம்  விசாரிக்க நேரம் ஏது.

இப்படியே  விஷயம் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் ஐந்து கிலோ எடை  இருக்கும் ஜீனியைப் பொட்டலமாய்க்கட்டி எடுத்துவந்தான்  அந்த அவனேதான்.

‘ ரேஷன் கடையில செனேகிதன் வேல பாக்குறான்’ ஜீனியை கீதாவிடம் கொடுத்தான். அவள் வாங்கிக்கொண்டாள்.

அன்று முத்துலட்சுமியும் கடையில் இருந்தாள்.

‘’ கொஞ்சம் கெனமா ஜீனி கெடைக்குமா, வெல என்னா வரும்’ முத்துலட்சுமி  அவனைக் கேட்டாள்.

‘ வெலய பத்தி என்னா இருக்கு நா வாங்கியாறன்’

முத்துலட்சுமிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. கீதா மனம் மட்டும் குழம்பிப்போய்தான் கிடந்தது. அவன் பார்வையே சரியில்லாமல்தானே இருந்தது.

அவளுக்கும்   அந்த சேதி தெரியாமல் என்ன.  சமாச்சரங்கள் இப்படியே போனது.     கீதாவுக்கும் அவனுக்கும் தொடர்பு கூடிக்கொண்டே போயிற்று.. ஒரு நாள் எதனில் முடியவேண்டுமோ அதனில் அது முடிந்தது..   உயிர் அறிவியல்  வலையில் வசமாய் அகப்பட்டாள் கீதா.   நாள்   நடசத்திரம் பார்த்து  கிருஷ்ணா நகர் சப்தமாதா கோவிலில்  தாய் முத்துலட்சுமியே கீதாவுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.  அவனோடு கடைக்கு  சர்பத் குடிக்கவரும் சில நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தார்கள்.

கீதா புருசன்  வந்தான் போனான்.  போனான் வந்தான். காசு கொடுத்தான்  இல்லை கொடுக்கவில்லை  சரியும் தப்புமாய்  அந்த இருவரின் வாழ்க்கை ஆகிப்போனது. முத்துலட்சுமிக்கும் வேறு வழி தெரிந்தால்தானே.

 அவன் ஒரு நாள் வீட்டை விட்டு தொலைந்தே போனான். வீடு திரும்பவே இல்லை.   விதிதான் என்றுமே வலியது   கீதா ஒரு ஆண்குழந்தைக்குத்தாயானாள்.

பாட்டியும்  தாயும் குழந்தையை வளர்த்து ஆளாக்கினர்.  புளிமரத்து அடி சர்பத் கடையெல்லாம் முடிந்துபோன கதை. கீதாவின்  குழந்தை சிறு  பையனான்.  காலம் உருண்டது.  அந்தப்பையனை காட்டங்குளத்தூர்  அனாதை ஆஸ்ரமம் ஒன்றில் சேர்த்து விட்டார்கள். அவன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான்   வீதியில் எல்லோரும்  இதையே சொல்லிக்கொள்வார்கள். கையில் கிடைக்கும் தின்பண்டங்களோடு மாதம் ஒரு நாள் இருவரும்  போய்  ஹாஸ்டலில் இருக்கும்  பையனைப்பார்த்துப்பேசிவிட்டுத்தான் வருவார்கள்.  அவனுக்குச் சட்டைத்துணி மணி வாங்கிக்கொடுப்பார்கள். அவ்வளவே.

தாயும் மகளும் யார் யார் வீட்டிலோ வேலை செய்து பிழைக்கிறார்கள். அது தொடர்கதையானது. கீதாவைக்கட்டியவன்  வீட்டுக்கு எங்கே திரும்பி வந்தான்.  இல்லவே இல்லை. கீதா பூவோடும் பொட்டோடும்தான் இருந்தாள்.

 ‘அந்த நாயி எங்கன கெடந்தா என்ன’ என்பாள் கீதா..

‘ரெண்டு கமுனாட்டிவ  ஒரு வீட்டுல எதுக்கு. நா இருக்குறன்  அது  ஒண்ணு போதும்’

என்பாள் முத்துலட்சுமி.

‘அந்த பேமானிப்பய திரும்ப வந்தா வெளக்கமாத்தால இருக்கிடமாட்டன்’ என்பாள் ‘போனது போச்சி, இனிமேதான் வரப்போவுதா’  தொடர்வாள் கீதா.

‘பையன்  ஆஸ்டல்ல நல்லா படிக்குறான் சோப்பு  துணிக்கி உடம்புக்கு  ரெண்டுமே தர்ராங்க,  சீப்பு தர்ராங்க  தலைக்கு எண்ணெ தர்ராங்க மூணு வேளக்கு சோறு, துணிமணி எல்லாம்தான்.  நோட்டு பொஸ்தகம்னு தர்ராங்க  கொறங்கறது ஒண்ணுமில்ல. நாம இருந்து செய்ய முடியல. என்  வவுத்து பொழப்பு வேலக்கி போறன். எனக்கு  புள்ளய குடுத்த நாயி ஒரு தருதலன்னு புரியாம நா முட்டாளு ஆயிட்டன் . என்  வயிசு என்னைய  அந்த பீய துன்னுன்னு சொல்லிச்சு.  பாவி நா   தின்னுட்டன்  ஏமாந்துதான் போனேன். என்  மூஞ்சில பேண்டுட்டான்.  நம்ம தலையில லெபி அதான்  அந்த எழுத்து அப்பிடியிருக்கு. அழிச்சிட்டு எழுதிகறதுன்னா  அது நம்மால ஆவுமா’

என்பாள் கீதா.

‘ எங்க மொதலாளியம்மா  இப்ப தூத்துகுடிபோயிருக்காங்க. அவுங்க பொறந்த வூடு.  ஒரு துக்க சேதின்னு சொல்லிகிட்டாங்க  அது யாரு எவுரு நாம கேக்குலாமா. அவுங்க சொன்னா கேட்டுகலாம்.

 ‘ கீதா  நாயிய பாத்துக்க வேற ஆளு இல்ல. நா அன்னாடம்  ரோசாவுக்கு  சோறு  தீனி வப்பன் என்கிட்ட அழவா  பழகிடிச்சி.  நீனும் கூட இருக்குற ஒன்னயும் என்னுமா அது  புரிஞ்சி வச்சிருக்கு   நாயின்னா சும்மாவா கீதா  அதுவும் நம்ப மனுஷாளு மாதிரியேதான்  ஒரு மூணே நாளு நீ  நாய பத்திரமா பாத்துக்க.  உனக்கு  என் வூட்டுல வேலயும் இல்லதான.   நாயிக்குன்னு  சோப்பு மருந்து பிஸ்கட்டு  தக்கன  தக்கன கொவளைங்க  தட்டு, கோழி கறி வறத்த மாவு ஆட்டுக்காலுவ  வறுத்தது முட்ட  தூளு, நாயி பாலு, குடிக்கிற தண்ணி கேனு,  வாக்கிங் இட்டுகினு போறதுக்கு  பில்ட்,  சங்கிலி, படுக்க நாயி மெத்தை எல்லாம் கரெக்டா எடுத்து வச்சிருக்கன்’ 

இவை அத்தனையும் கீதா வீட்டுக்கு ஆடி காரில் வந்து இறங்கியதுதான்.  ரோசா நாயும் ஆடி காரில்தான் எப்போதும்  வரும்.  வந்தது.

‘ரோசா ரோசா ‘ கொஞ்சிக்கொண்டிருந்தாள் கீதா. அது அவளுக்கு சலாம் வைத்து பற்களைக்காட்டியது.

‘ மூணு நாளு ஆயிடுச்சி இத கொண்டு போயி மொதலாளி வூட்டுல வுட்டுறவன் அந்த அம்மா வந்துடும்.  அது வரைக்கும்  ரோசா என்கிட்ட  கொழந்தயாட்டம் இருக்குது’

கீதா அந்த ரோசாவுக்குத் தடவிக்கொடுத்தாள்.

‘ நாளைக்கி என்னா ஞாயித்துகெழமதான’ முத்துலட்சுமி கேட்டாள்.

‘ ஆமாம் மறந்து போனேன். காட்டங்கொளத்தூரு ஆஸ்டலுக்கு போவுணும்.  மொதலாளி அம்மா கிட்டயும்  சொல்லி இருக்குறன். ’ பதில் சொன்னாள் சொல்லி  சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கலாம்.

 ஆடி கார் மீண்டும்  கீதா வீட்டு வாயிலில் சர்ரக் என்று வந்து நின்றது.  கதவுகள் டப்க்கென்று  திறந்துகொண்டன. நாயுக்கு  தன் ஆடி கார்  வந்தது தெரிந்து போயிற்று. வாலை ஆட்டி ஆட்டி மகிழ்ச்சியை அறிவித்தது. முத்துலட்சுமிக்கும் கீதாவுக்கும் ஷேக் ஹேண்ட் கொடுத்துவிட்டு ’ரோசா’ ஆடி காரில் பின் சீட்டில் தாவி அமர்ந்து கொண்டது.

’அம்மா  ஊருக்கு வந்தாச்சி. தூத்துகுடிக்கும்  நாந்தான இந்த வண்டில  போயி வந்தன். வூட்டுல வேல இருக்கு  அம்மா உடனே உங்கள வரசொன்னாங்க’

முத்துலட்சுமி சிரித்துக்கொண்டாள்.

‘ தூத்துகுடிலேந்து  பலகாரம் கனமா வந்துருக்கும். போய் வாங்கீட்டு வந்தம்னானா நாளைக்கு காட்டங்கொளத்துரு போறம்  நம்ம  பயலுக்கும் குடுக்க வைக்கும்ல’

கீதா சொல்லிக்கொண்டாள்.

‘ வண்டிலயே நாங்க வந்துடறம். வரக்குள்ள நடந்து வருவம்’

முத்துலட்சுமி சொல்லிப்பார்த்தாள். காலில் அப்படியொரு குடைச்சல்..

டிரைவர் சிரித்தான். ‘இது  ரோசா நாய  இட்டுகினு போற வண்டி.  ரோசாவுக்கு  சாப்பாடு சாமான் செட்டு லொட்டு லொசுக்குன்னு இருந்தா  அத டிக்கில வையுங்க. டிக்கி  காரு கதவ  நானே மூடிக்குவன். ‘

ரோசா சீட்டின் நடுவில் அமர்ந்து கீதாவைப்பார்த்துச் சிரித்தது.

‘ ரோசா என் ராசா’

கீதாவுக்கு  ஒரு காலைத்தூக்கி வணக்கம் சொல்லியது ரோசா.

நாய் சாமான்கள் ஒன்றுவிடாமல்   முத்துலட்சுமி அடுக்கி  வைத்தாள்.  அந்தக்கார் டிக்கி மூடிக்கொண்டது.

இருவரும்  தங்கள் வீட்டைப்பூட்டிவிட்டு  நாய் வண்டி போன திசையில் தொடர்ந்தார்கள்.

‘பண்டம்னா  அது பெரிய மனுசங்க  குடுப்பாங்க,  தூக்கு சட்டி   நாம எடுத்துகினுதான் போவுணும்’

 முத்துலட்சுமியிடம் கீதா சொல்லிக்கொண்டே நடந்தாள்.

----------------------------------------------------------------------------------------------

 

 

 

.

         

 

 

No comments:

Post a Comment