மனுசங்க
‘சார் இருக்காரா’ வாயிலில் ஓர் கூப்பிடும்
குரல்.
அவன் மனைவி
எட்டிப்பார்’த்தாள். யாரோ ஒரு இளைஞன் யூனிகான் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான். வீட்டினுள்ளே
ஏதோ காரியமாக இருந்த அவன் வீதிப்பக்கமாக ‘யாரு’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான்.
‘யாரோ புதுசா
வந்திருக்காங்க பாருங்க’ மனைவி சொல்லிவிட்டு வீட்டினுள்ளே சென்றாள்.
‘வாங்க வாங்க
துளசிங்கமா’
வந்திருந்த இளைஞன் புன்னகையோடு நெருங்கி வந்தான்.
துளசிங்கம்
வளரும் கவிஞர். அனேக இலக்கிய பத்திரிகைகளில் அவரதுபுதுக் கவிதைகள் தொடர்ந்து வந்து
கொண்டிருந்தன. கவிஞனுக்கென்று ஒரு பிரத்யேக தலைமுடியும், ஜிப்பா மேல்சட்டையும் வெள்ளை
வெளேர் என்ற வேட்டியும் எப்படித்தான் அமைந்து விடுகிறதோ தெரியவில்லை.
‘எப்பிடி
இருக்கிங்க’
‘ நல்லா இருக்குறன்’
‘ போன வாரம்
இங்க முதுகுன்றத்து பெரிய கோவில்ல ஒரு புத்தக
விமரிசனம்னு கேள்விப்பட்டேன். கவிதை நூல். பூமலய் அய்யாவோடது. கடிதம் எனக்கும் வந்திருந்தது. என்னால வரமுடியல்ல. நீங்க போய் வந்தீங்களா
எப்பிடி இருந்தது’
‘ போய் வந்தேன்.’அவாள்
வாழ்ந்தது’ புத்தகத்துத் தலைப்பு’
‘கவிதைங்க
எப்பிடி இருந்தது’
‘ கவிதைங்க
எளிமையா மக்கள் மொழில இருந்திச்சி. அது பூமலய்
அய்யாவோட பாணின்னு சொல்லணும். இல்லாதவன் படுற கஷ்டங்களை இதவிட சிறப்பா யாராலயும் சொல்லமுடியாது’
‘உங்க விமரிசனம் என்னன்னு சொல்லுங்க’
’ சமுதாயத்துல மேலடுக்குல இருக்குற சமூகம் பண்ணுன அக்கிரமம்
பற்றி எழுதியிருக்காரு. அதெல்லாம் சரி. கவிதை
புத்தகத்தை முழுசா படிச்சி முடிச்சப்பறம் நமக்கு சேதியா கெடச்சது கவிஞரோட ஆழ் மனசுல இருக்குற
ஜாதிய முரண் மட்டுந்தான். கவிதைங்க சமுதாயத்துல ஒரு பகுதிய இன்னொரு பகுதிக்கு எதிரா நிறுத்துது.
அந்த முரண்பாட்டை இன்னும் கூர்மையாத்தான்
மாத்திடும். ஒருத்தரோட கவிதைங்க இப்படி பயன்படணுமான்னு கேள்வி வச்சன்’
‘என்ன ஆச்சு’
அவன் வீட்டுக்குள்
சென்று ஒரு கடிதம் எடுத்துவந்தான். அது அந்தக் கவிஞர் பூமலய் அவனுக்கு எழுதிய கடிதம்தான். அவன் படித்தான்.
‘ என் மனசுக்குச்சரி என்று பட்டதை கவிதைகளாய் எழுதினேன். அவை உங்களைப் புண்படுத்தியிருக்கலாம்.
நான் எழுத்தில் தடமிறங்கிப்போவதாய்க்குறிப்பிட்டு
இலக்கிய நிகழ்வில் விமரிசனம் படித்தீர்கள். இப்படியெல்லாம் படைப்பாளியை விமரிசனம் செய்து படைப்புணர்வைக் காயடித்துவிடலாம் என்று மட்டும் தப்புக்கணக்குப்போடவேண்டாம் இப்படிக்கு
பூமலய்.
’எப்பிடி
இருக்கு துளசிங்கம்.’
‘ ஜாஸ்திதான்
இது’
‘சரி விடுங்க,
நீங்க எப்பிடி இருக்கிங்க’
‘ நல்லா இருக்கன்
போன மாசம் கணையாழில எங்கவிதை வந்திருந்துது
வாசிச்சிங்களா’
‘ வாசிச்சேன்
’ கும்பிடுவான் கத்தியும் கும்பி நிறைய வாசிப்பும்’
‘ தலைப்பு
மட்டும் அப்பிடியே சொல்றீங்க வேற ஒண்ணும் சொல்லலியே’
’பாட்டையும்
சொல்லிடுவேன் ஒரு . கவித படிச்சா அதுவும் மனப்பாடம்தான்’.
‘ நாவிதன்
கையில் கூர்மைக் கத்தி
இருந்துமென்னெ
தெருவில்
போகும் நாயுக்கும்
கையெடுத்துக்
கும்பிடுவான்..
கூப்பிட்ட
வீட்டில்
வாசிப்பான்
பீப்பீ டும் டும்
ஓரமாய் குந்திக்
கும்பி நிறைப்பான்
மனம் மட்டுமுண்டு.
தன்மானந்தானறியான்’’
‘ரொம்ப சந்தோசம்
கவிதய
சரியாவே சொல்லிட்டிங்க, சார், ஒரு சின்ன ஒதவி வண்டிக்கி பெட்ரோல் தீந்துபோச்சி சுத்தமா காசு இல்லே. கைமாத்தா ஒரு நூறு ரூபா கொடுத்தீங்கன்னா அடுத்த வாரம் இங்க
வரென் கொடுத்துடுவன்’ என்றான் துளசிங்கம்.
தே நீர் இரண்டு
கிளாசில் கொண்டு வந்து அவன் மனைவி கொடுத்துவிட்டு அங்கே நின்றாள்.
‘டீ எடுத்துகுங்க’
அவன் டீ யை எடுத்துக்கொண்டான்.
‘ போயி ஒரு நூறு எடுத்துட்டு வா’ மனைவிக்குக் கட்டளையிட்டான்.
நூறு ரூபாயை
வாங்கிக்கொண்டார். துளசிங்கம் வண்டியை கிளப்பினார்.
’ அடுத்தவாரம்
நான் வரன் பாக்குலாம் அந்த கவிஞர் எழுதுன லெட்டர எல்லாம் வச்சிகிட்டு ஒண்ணும் யோசிச்சி குழப்பிக்காதிங்க. இது எல்லாம்
எழுத்து உலகத்துல புதுசா ? சகஜம்தான் உங்களுக்கு தெரியாததா நான் சொல்லணுமா’
அவன் வீட்டுக்குள்ளே
போனான்.
‘ உங்கள பாக்க
வந்தா டீ மட்டும்தான் செலவாவும். ஒருத்தரு காசுகுடுன்னு கடனா கேட்டது இப்பதான் மொத மொதல்ல. இதெல்லாம் சரியா வராது’ என்றாள்
மனைவி.
அவன் அவளை
முறைத்தான். பேச எதுவுமில்லை.
அடுத்த நாள்
காலை. இரண்டு எழுத்தாள நண்பர்கள் அவன் வீட்டிற்கு வந்தார்கள். வழக்கமாக அவன் செல்லும் இலக்கிய கூட்டங்களுக்குத்தவறாமல்
வருபவர்கள்தான்.
‘ சார் சார்’
‘ தமிழ்ல
எழுதுறவங்கன்னாலும் சார் சார்தான், அய்யா ன்னு கூப்பிட்டா அது சுருதிபேதமாயிடுது’
சொல்லிக்கொண்டே
அவன் வீதிக்கு வந்தான்.
‘ சேதி ஆப்டுதா துளசிங்கம் போயிட்டாரு. ரயில்ல உழுந்து செத்துட்டாரு.’
‘ என்னா சார்
நேத்து வந்தாரு பேசுனாரு, நூறு ரூவா கை மாத்தா
கேட்டாரு குடுத்தன் இப்ப போயிட்டாருன்னு சொல்றீங்க செரு வயசு இது என்ன கொடுமை என்ன சார் ஆச்சு’
‘ நேத்து
எங்கிட்டயும் வந்தாரு ரொம்ப மொடசல்னு நூறு
ரூவா கேட்டாரு குடுத்தன் பெட்ரோலுக்குதான்னாரு’
ஒருவர் சொன்னார்.
அடுத்த வரும்
தொடர்ந்தார்.’ நானும் தான் ரூவா நூறு கடனா குடுத்தன் டூ வீலர்
மக்கார் பண்னுதுன்னாரு. என்னையும் பாத்து பேசிட்டுத்தான் போனாரு துளசிங்கம்’
‘சரி அத வுடுங்க,
இப்ப எப்பிடி செத்தார் தற்கொலைன்றீங்களா’
‘ ஆமாம் சார்
நல்ல கவிஞன் நல்லா கவித எழுதுவாரு. நாம நெறைய படிச்சிருக்கம். கவிதங்கள கூட
ஒரு தொகுப்பா போடுணும்னாரு’ வந்ததில் ஒருவர்.
இன்னொருவர்
ஆரம்பித்தார்,
‘ சார் அவன்
குடிப்பானாம் நமக்குதான் அந்த விஷயம் சுத்தமா தெரியல. தெனம் அவனுக்கு குடிக்கணுமாம். நிரந்தரமா ஒரு வருமானம் இல்ல. வீட்டுல அவன் அண்ணன் அண்ணி இருக்காங்க. இவனுக்குத்தான்
கல்யாணம் ஆகுல. கொஞ்சம் நெலம் இருக்கு. அது எதுக்கு காணும் வெலவாசி
முண்டிகிட்டு நிக்குற இந்த காலமான
காலத்துல. அண்ணன் தம்பி ரெண்டு பேரு. பாகமும்
ஒண்ணும் ஆவுல.
குடிக்கணுமே காசு வேணும் . வெறி. குடிச்சே ஆவுணும்னு அந்த வெறி. நேத்து ராத்திரி துளசிங்கம் அண்ணி வீட்டுல தூங்கிகிட்டு இருந்தப்ப அவுங்க கையில இருந்த பவுனு வளையல கொறடா
வச்சி கட் பண்ணி இருக்கான்.. டபுக்குன்னு அண்ணி
முழிச்சிகிட்டாங்க . சொந்த மச்சினந்தான் எதிரில
நிக்கிறாரு அவர கண்ணால பாத்துட்டாங்க. ‘ நீங்களா அய்யோ
நீங்களா அய்யோ, குடிச்சி குடிச்சி இப்பிடி நாசமா போனீங்களே’
குய்யோ முறையோன்னு கத்தியிருக்காங்க. அழுது
இருக்காங்க புலம்பியிருக்காங்க.
அண்னன் எழுந்திரிச்சி
எல்லா கூத்தையும் தன் கண்ணால பாத்து இருக்காரு. அவனா பாதகம்
செய்யுறான் அந்தப்பெசாசில்ல அவன செய்யசொல்லுது.
தலையில் அடித்துக்கொண்டு ‘விதிப்பா விதி’ன்னு
சொல்லிகிட்டாராம்.
.அவுமானம்
தாங்கமுடியாம துளசிங்கம் வாசக்கதவ தொறந்துகிட்டு ஓடுனவருதான். வீட்டுக்கு
எதுத்தாப்புல ரயிலு தண்டாவாளம் . அந்த நேரம்
பாத்து ஒரு ரயிலுவண்டி எமனா வந்துருக்கு. அவ்வளவுதான்
முடிஞ்சி போச்சி கவிஞர் துளசிங்கம் கத’
விபரமாய்ச்சொன்னவர்
வாயையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவனுடைய மனைவியும் வீதிக்கு வந்து அவர்கள் பேசிக்கொள்வதைக்
கவனித்தாள். ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டுவந்து மீண்டும் அவனிடம் நீட்டினாள். அவளை அவன் கேட்கவில்லைதான்.
மற்ற இருவரும்
தலா நூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தார்கள்
மூவருமாய்
சவத்திற்கு பூக்கடை
ஒன்றைதேடிப்பிடித்து மாலை ஓன்று நீட்டமாய் வாங்கிக்கொண்டு
துளசிங்கம் வீடு நோக்கிப்புறப்பட்டனர்.
‘போஸ்ட்மார்டம்
ஆயிதான பாடி வூட்டுக்கு வரும். இந்நேரம் வந்துருக்குமான்னு தெரியல’ என்றார் ஒருவர்.
‘போனதான்
வெவரம் தெரியும்’ என்றார் மற்றொருவர்.
துளசிங்கம்
வீட்டு வாயிலில் கீத்துப்பந்தல் போட்டிருந்தார்கள்.
பார்டர் கட்டாத மொட்டைப்பந்தல். எழவு வீட்டுக்குப்போடும் தட்டைப்பந்தல்தான்.
வீட்டு வாயிலில்
துளசிங்கத்தின் அண்ணிக் குந்தி உட்கார்ந்திருந்தாள். இலக்கிய விரும்பிகள் மூவரும் மாலையும் கையுமாய்
தயங்கித் தயங்கி நின்றார்கள்.
‘அய்யாமார்வுளே,
குடிக்காதடா நீ கெட்டு நாசமா பூடுவன்னு ஒரு வார்த்த சொன்னிங்களா.
ஒங்க மனசாட்சிய நீங்க கேட்டுகுங்க. அப்பிடி எண்னிக்காவது சொல்லியிருந்தீங்கன்னா நீங்க மனுசங்க. இல்லாகாட்டி வாங்கியாந்த
மாலய தெரு மூலையில வுட்டு கெடாசிட்டு போயிட்டே இருக்கலாம்’
‘ துளசிங்கம்
குடிப்பாருன்னுட்டு எல்லாம் எங்களுக்கு
தெரியாதுங்க’ என்றான் அவன்.
மற்ற இருவரும்
ஆமோதித்துக்கொண்டு அவனோடு நின்றனர்.
’ நீங்க எல்லாம் என்னாதான் மனுசங்களோ . அவுரு என்ன என்னுமோ எழுதறாருன்னுட்டு உசுப்பி உசுப்பி வுட்டிங்க..
அந்த மொதலு நல்லா இருக்கணும்னு ரோசனை பண்ணுல. புத்திகெட்ட அவுரும் ஆடுனாரு. பாடுனாரு தே ஆளு பூட்டாரு.
இப்ப என்ன செய்யுவ. ரயிலுல அடிபட்டு அந்த மொகம் நொறுங்குன பாடி கடலூர் பெரிய ஆசுபத்திரி பொணக்கொட்டாயில சனி மூலைல
கெடக்கு. பாத்துட்டு வரன். கூறு கூறு போட்டு
வைக்கல்ல ஒரு பொட்டணமா சுத்தி, அது இங்கதான் வருதோ இல்ல கெடில நதி
மணல்ல அப்பிடி இல்லன்னா அந்த தெம்பெண்ணாத்து மடுவுல பொதச்சி
பூடுறாங்களோ ஆரு கண்டா. போனவரு எம்புருசன்
அவுரு திரும்பி வந்தாதான் அந்த விவரம் எனக்கு புரியும்’
அந்தப்பெண்
கூறிமுடித்தாள். அவள் கைகளில் ஒரு கை வளையல் இல்லாமல் முண்டமாகத்தான் இருந்தது.
அவன் வாங்கி
வந்த மாலையை சாவுப் பந்தலின் ஒரு காலில் கட்டி
முடிச்சுப்போட்டு விட்டு நகர்ந்தான். மூவரும் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசவே
இல்லை. அவரவர்கள் தம் வீட்டுக்கு மவுனமாய் நடந்தார்கள்.
-------------------------------------
-------------------------------------
.
No comments:
Post a Comment