Tuesday, December 5, 2023

அம்மா எனும் மனுஷி

 

 

 

அம்மா எனும் மனுஷி.                                                                                                                                                           

 

 

முதுகுன்றம் நகரத்தில் வைத்து  அப்பாவுக்கு சதாபிஷேகம்.  நடு நாட்டு  மணிமுத்தா நதிக்கரையில் முதுகுன்றம் நடுத்தரமாய் ஒரு நகரம்..  தருமங்குடியிலிருந்து அது  ஒரு பத்து  அல்லது  பன்னிரெண்டு மைல் இருக்கலாம். தருமங்குடிதான் எனக்குப் பூர்வீகம்.

தருமங்குடி அக்கிரகாரத்தில்  அரசமரத்திற்கு எதிராய்  நாட்டோடு போர்த்திக்கொண்ட  ஒரு பெரிய கல் வீடு. எத்தனை எத்தனையோ கல்யாணங்கள் அதே வீட்டில்  நடந்ததுதான்.  சொல்லவா வேண்டும்  சின்ன விசேஷங்கள் சீமந்தம் வளைகாப்பு புண்யகாவசனம் நல்லது கெட்டது எல்லாமும் நடந்ததே.

 நூற்றுக்கணக்கில் ஜனங்கள் தருமங்குடிக்கு வந்தார்கள் போனார்கள்.குளிப்பதற்குஎன ராட்டினக்கிணறு. கிணற்றைச்சுற்றிலும் செங்கல் பரப்பிய அழகு தரை. துணி துவைக்க எடுப்பாய்  நீளக்கருங்கல் குடிப்பதற்கும் சமையலுக்கும் இதேகிணற்றுத் தண்ணீர்தான். கிணற்றைச்சுற்றிலும் பத்து தென்னை மரங்கள். மரத்தில் கால்பந்து ஒக்கும் தேங்காய்கள். வா வா என்றழைத்துப்பேசும் செம்பருத்திச்செடிகள். பெளவுத்த மவுனம், அனுசரிக்கும் அடுக்கு நந்தியாவெட்டைப்புதர்கள். இடுக்கில் கருந்துளசி பச்சை துளசிச்செடிகள். தாழ்வாரத்தில் சந்தனம் அரைப்பதற்கு ஒரு வட்டக்கல். சாமி பிறையில் எந்த காலத்ததோ சில ஐம்பொன் விக்கிரகங்கள்.  தாமிர சம்புடத்தில் அபூர்வமாய் சிலச் சாளக்கிராமங்கள். மய்ய முற்றத்தில் உருளையாய் சிவப்புக் காவியும் சுண்ணாம்பும் பட்டை பட்டையாய் அடித்த துளசிமாடம். பீமனை நினைவூட்டும்  கருங்காலித்தூண்கள். அவை  எழுந்து நிற்கும் கூடம், தாழ்வாரம். ஒற்றைப்பலகையால் ஆன ஊஞ்சல். அது போடப்பட்ட உள் கூடம். வீட்டு  வாயிலில்சின்னதும் பெரியதுமாய் இரண்டு திண்ணைகள். திண்ணையில் படுப்போர் தலை சாய்த்துக்கொள்ள சுவரின் ஓரமாய் ஒரு தலையணை போன்ற நெடிய அமைப்பு. 

வீட்டிற்கு முன்பாய் முழுக்கல் பரப்பிய பெரிய ஆளோடி. அதனைத்தொட்டுக்கொண்டு இன்னும் நான்கு தென்னைமரங்கள். இடை இடையே பூத்துக்குலுங்கும் மஞ்சள் தங்கப்பட்டிச்செடிகள்.

  முக்கியமான சமாச்சாரம் பெரிய சமையல் கூடம் அம்மியும் ஆட்டுக்கல்லும் பக்கத்திற்கொன்றாய் இருக்க சமைப்போர் உயரத்திற்கு  தோதாய்  நீட்டாக போடப்பட்ட அடுப்படி.  என்றோ ஒரு நாள் தேவைக்கு ஆற்று மணலால் நிரப்பி உறங்கிக் கிடக்கும் கோட்டை அடுப்பு.

கதை சொல்கிறான் இவன்  எதற்கு இத்தனை  நீட்டமாய் என்றெண்ணவேண்டாம். மனச்சோகம் இறக்கை விரித்து எழுதிய மனக்குகை ஓவியம்தானே இது. விழுந்து விழுந்து புரண்டு உறங்கிப்புழங்கிய வீடாயிற்றே.

இத்தனை இருந்துமென்ன  சதாபிஷேகம் தருமங்குடியில் சரிப்பட்டு வராது. முதுகுன்றத்தில்தான் அது என  ஏற்பாடாகியது. என் அப்பாவுக்குத்தானே வருகிறது  சதாபிஷேகம். தெலுங்குப்படங்களே ஓடும் ராஜேஸ்வரி தியேட்டர்  இருக்கும்  முதுகுன்ற நகரத்து வடக்குக்கோட்டைவீதி. அதன் அருகில் ஓம்சக்தி திருமண மண்டபம்.  கோமுட்டி செட்டியார் ஒருவரே தான் இரண்டுக்கும் முதலாளி. அவருக்கும் எங்கு எங்கோ  எத்தனையோ சொத்துபத்துக்கள். பேருந்து வழித்தடங்கள் பெட்ரோல் பங்க்குகள். இந்த நகரில் செட்டியார்   வாடகைக்கு விட்டிருக்கும்  அடுக்கு அடுக்காய் காலனி வீடுகள் அவை தனி.

அவரின் ஓம் சக்தி திருமண மண்டபத்தில்தான் வைத்துத்தான்  சதாபிஷேக வைபவம். ஸ்ரீமுஷ்ணம் ஜம்பு கேசவ ராவ் கோஷ்டியார் சமையல். முதுகுன்றத்துப் பெரியகோவில் ஆஸ்தான வித்வானின் நாதஸ்வரம். ஸ்ரீமுஷ்ணம் வேதபாடசாலை  சாமாடு கனபாடிகள் வைதீக ஆச்சார்யம்.

தருமங்குடியிலிருந்து கிராமத்தார்  எல்லோரும் அனேகமாய் முதுகுன்றம்  வந்திருந்தார்கள். வெள்ளாளர் வீதியிலிருந்து பத்து பேர். வன்னியர் தெரு, கோனார் தெரு, ஊர் சேவுகத் தொழிலாளர்கள் மொத்தமும் என  ஓர் ஐம்பது பேருக்கு வந்திருந்தார்கள். உறவுமுறை உற்றார் உறவினர்  நட்பு  என அது ஒரு  ஐம்பது பேருக்கு இருக்கலாம். என் அலுவலக நண்பர்கள் பத்து பேருக்குக்குறையாமல் வந்திருந்தார்கள். எல்லாம் சரி.

எதிர்பார்க்கவில்லை நான் பவானியிலிருந்து ஞானம்பிள்ளை வந்திருந்தாரே.  அவருக்கு பத்திரிகை அனுப்பியதாக  எனக்கு ஞாபகம் இல்லை. ஞானம் பிள்ளைக்கும் வயது எழுபது இருக்கலாம். முதுகுன்றம் நகருக்கும்  அந்த பவானிக்கும் எவ்வளவு தொலைவு. இந்த நிகழ்ச்சிக்கு எப்படிச்சிரத்தையாய் வந்திருக்கிறார். பிள்ளையின் வருகை எனக்கு  ஒரு   வியப்பாய்க்கூட இருந்தது. அவரின் அக்கா தருமங்குடியில் இருக்கிறார். அவர் பெயர் நடனம். அவர் தன் தம்பிக்கு ஏதும் செய்தி சொல்லியுமிருக்கலாம். ஞானம் பிள்ளை சிறுவயதில் தருமங்குடியில் தன் அக்கா வீட்டில் வளர்ந்தவர்தான். என் அம்மாவுக்கு நன்றாகத்தெரியும். அம்மாவுக்கு  பிறந்த ஊர் தருங்குடிதான். அப்பாதான் கொள்ளிடக்கரையோரம் முத்துவாஞ்சேரியிலிருந்து தருமங்குடிக்கு மாப்பிள்ளையாய் வந்து தங்கிப்போனவர்.

சதாபிஷேகம் முடிந்தது.  எல்லோரும்  பித்தளைச்சல்லடை கைப்பிடிக்கப்புனித  நீராட்டல்  நிறைவானது. ஆசீர்வாத நிகழ்வு தொடங்கியது. அப்பாவை ஆசீர்வதிக்க யாருமில்லை. அவர்தான் திருநீறு அனைவர்க்கும் நெற்றியில் இட்டார். அம்மா குங்குமம் வைத்தார்கள். எல்லோரும் தரை வீழ்ந்து வணங்கி எழுந்தார்கள். பவானி ஞானம்பிள்ளையும்தான்.

மதிய உணவு. ஸ்ரீமுஷ்ணம் பரிசாரகர்கள் வெளுத்துவாங்கியிருந்தனர். எல்லோரும் தாம்பூலப்பை வாங்கி விடைபெற்றுச்சென்றார்கள். பவானி ஞானம்பிள்ளையும் தாம்பூலப்பை வாங்கிக்கொண்டார்.

‘ நானும் கூட வரேன்’

‘இல்ல விசேஷ வீட்டுல ஆயிரம் வேல இருக்கும்’

‘ நீங்க பவானி போகணும்.  உங்களை சேலம் பஸ்சில்  ஏற்றிவிட்டு விட்டு வந்துவிடுவேன்’

நானும் அவரோடு பேருந்து நிலையம் புறப்பட்டேன். அம்மா அப்பாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். ஆட்டோ ஒன்றைப்பிடித்து முதுகுன்றம் பேருந்து நிலையம் அடைந்தோம். சேலத்திற்குப்பேருந்து வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். அங்கிருந்தவர்கள் எங்களுக்குச் சேதி சொன்னார்கள்.

‘ஒரு காபி சாப்பிடுவோமா’

‘சரிங்க புள்ள’ நான் ஞானம்பிள்ளை சொன்னதை ஆமோதித்தேன். முதுகுன்றம் பேருந்து நிலையத்தில்  நடத்தப்பட்டு வரும் அர்ச்சனா உணவகம். இங்கு இருப்பவைகளில்  இது தேவலாம் என்பது எல்லோரது ஏகோபித்த அபிப்ராயம். அது சரித்தான். இருவரும் அர்ச்சனா உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பிள்ளை இயற்கை அழைப்புக்குச் சென்று வருவதாய்ப்போனார்.

‘முழுசா அஞ்சி ரூபா குடுன்றான் உள்ள கண்றாவியா இருக்கு. ஏண்.டா உள்ள போனம்னு இருக்கு. இது பத்தி  யாரும் கேக்கறது கொள்றது எதுவுமில்லே’

‘பணத்த  மொத்தமா கட்டி  கக்கூச  யூரினல  வருஷ ஏலம்  குத்தகைக்கு எடுத்துட்டா அவன் தான் சர்வ அதிகாரமும் படைத்தவன், அந்த அதிகாரம் அவனுக்கு அந்த கெடு தேதிவரைக்குமுண்டு. குறுக்க யாரும்  எதுவும் பேச முடியாது’

‘நீங்க சொல்றது சரிதான் அப்பிடித்தான் போகும் கதை’ என்றார் பிள்ளை.

‘வேற எங்கயாவது  அவசரத்துக்குப் போனா பிரச்சனை ஆயிடும். போறதும் சரியுமில்ல’

இருவரும் மீடியமாய் காபி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். சுகர் பிஷர் எதுவும் தொந்தரவு இல்லாதவராகத்தான் பிள்ளை இருக்கிறார்.

‘புள்ள உங்ககிட்ட ஒரு கேள்வி. தப்பா எடுத்துக மாட்டீங்களே’

‘’நல்லா கேளு எதுலயும் தப்பு இல்ல. நாம அப்பிடி பாக்குறதுதான் தப்பு’ நெருங்கி வந்தபடிக்குப்பேசினார் பிள்ளை.

‘ நீங்க பவானிலேந்து இவ்வளவு சிரத்தையா வந்து இருக்கிங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கு’

‘ உங்க அம்மாவோட அப்பா  அதான் உங்க தாத்தா எனக்கு பாடம் சொல்லிக்குடுத்தவரு. அப்ப எல்லாம் திண்ண பள்ளிக்கூடம்தான். இஸ்கூல் எல்லாம் ஏது. உங்க அம்மாவும் இதே தருமங்குடிதானே. நாங்க ஒண்ணாதான் படிச்சம்’

‘ சொல்லுங்க’

‘உங்க தாத்தாவ வெஷ பாம்பு கடிச்சிது.  அது அந்தக்காலம். ஒண்ணும் சரியான வைத்தியம் இல்ல.  விஷக்கடின்னா கழுத்துல ஒரு துணி கிழிச்சி மந்திரிச்சி மாலையா போடுவாங்க. இல்லன்னா ரவ பச்சல தருவாங்க.  என்னா கதையோ உங்க தாத்தா  அவுரு போய் சேந்தாரு. யார் யாரோ சொந்தம் பந்தம் எல்லாம் ஒதவுனாங்க. நாங்களும் ஊர்ல அந்த குடும்பத்த பாத்துகிட்டம். அப்புறமாதான்  உங்க அப்பாரு ஊருக்கு மாப்பிள்ளயா வந்தாரு. உங்க தாத்தாருக்கு ஆம்பள புள்ள இல்ல. உங்க அம்மாதான் எல்லாம். இங்கதான்  வேற ஒரு முக்கியமான சேதி சொல்றன். உங்க வூட்டுக்கு பக்கத்து வூடு குருக்களய்யா வூடு. அதுக்கு பக்கத்துல சீனுவாச அய்யங்கார் ஜாகை. அந்த அய்யங்காரு  ஒசந்த பண்ணை ரைஸ் மில்லுல கணக்கெழுதி பில்லு போடுறவரு.  அவுரு வூட்டுல ஒரு மாமி இருந்தாங்க. எனக்கு அப்ப செறுவயசு.  அந்த அம்மா மேல என்னுமோ ஒரு பிரியம்.]  சில நொடிகள் பிள்ளை அமைதியானார்.  ’அந்த அம்மா செப்பு செல கணக்கா அழகா இருந்தாங்க. அப்பிடி ஒரு ரட்சணம். என்ன துன்பமோ. அவுங்கள என்  கண்ணால  பாக்காம ஒரு நாள கழிக்க மாட்டேன். ரெம்பக் கொழம்பிப்போனேன். அந்த  அம்மா புருசன் சீனுவாச  அய்யங்காருக்கு இந்த சேதி தெரியாது’

‘அப்ப ஒங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா புள்ள’

‘ இல்ல. அந்த  கல்யாணக்கத  எல்லாம் ஆரம்பிக்கல. நானு ஒண்டிகட்டைதான். உங்க அம்மா  நா இப்பிடி அந்த மாமிய தப்பா  பாக்குறது கொள்றத எப்படியோ தெரிஞ்சிகிட்டாங்க’

‘ அந்த மாமி சொல்லி இருக்குமோ’

‘அது எல்லாம்  எனக்கு தெரியாத கத.  உங்க அம்மா என்ன கூப்பிட்டாங்க.’ ’ ‘நிறுத்திக்கணும் புள்ள.   தப்பு . அந்த அம்மா  புதுசா கல்யாணம் ஆனது. புருஷன் இருக்கான். செறுசு, நீங்க கல்யாணத்துக்கு இருக்குற புள்ள. இந்த ஜோலி உங்களுக்கு  வேணாம். அந்த அம்மாவ  இனி  நெனச்சிக்கூடம் பாக்காம வேற  வேல எதாவது இருந்தா  பாருங்க. மொதல்ல  ஒரு நல்ல  பொழப்ப தேடிகுங்க.  பொறுப்பா இருங்க. வாழ்க்கைய  சீரழிச்சிகாதிங்க. உங்க வாழ்க்கை உங்க குடும்பம் உங்களுக்கு முக்கியம். அந்த அய்யங்கார் மாமி. பச்சமண்ணு.  கல்யாணம் ஆகி இப்பதான் நம்மூருக்கு வந்துருக்காங்க.  இந்த மாதிரி வெஷயத்துல  யாருமே ரொம்ப  ஜாக்குறதயா இருக்கணும்.   அந்த  பைத்தியக்கார நெனப்ப எல்லாம்  ஒரு கெட்ட கனவு வந்துது. போச்சின்னு  நீங்க மறந்துடனும்.  நல்ல முனுஷன்னு பேரு எடுக்கணும்.  அழிஞ்சி போயிடாதீங்க.’ சொல்லி முடிச்சாங்க.

அந்த  வார்த்தைங்க பளீர் பளீர்னு என்னை  கன்னத்துல யாரோ அறஞ்ச மாதிரி இருந்துது. அண்ணிக்கித்தான் நான் ஒரு மனுஷனானேன். எங்க எங்கயோ போனேன்.  ஒரு  வேலய தேடிகிட்டேன். கல்யாணம் கட்டிகிட்டேன். ரெண்டு பசங்களாச்சி. கடைசியா பவானில மணியமா  வேல பாத்தேன். அங்கயே தங்கிட்டன். பசங்க தலை எடுத்து அது அது  பொழப்புன்னு போயிடுச்சி. உங்க அம்மா முட்டும் என்ன  நேராக்காம வுட்டுஇருந்தா நா எந்த கதில போயி இருப்பனோ. நெனச்சா பகீர்ங்குது  அச்சமா கூட  இருக்கு. அந்த ஒரே ஒரு சொல்லு. ’தப்பு’. உங்க அம்மா  என்ன பாத்து சொன்னது இண்ணைக்கும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. ஆகத்தான் இந்த விசேஷத்துக்கே நானு வந்தேன்.’ பிள்ளை மனப்பத்தாயத்தில் இன்னும் எத்தனையோ இருக்கலாம்.

‘ மணி ஆயிடிச்சின்னு நெனக்கிறேன். பஸ்  வந்துடும்’

‘சரி பொறப்படுவம்’ பிள்ளை சொன்னார். இருவரும் புறப்பட்டு சேலம் செல்லும் பஸ் வழக்கமாய்,   நிற்கும் இடத்துக்குச் சென்று  பார்த்தோம். சேலம் பஸ்  அப்போதுதான்  நிலையத்துக்குள் வந்தது. அதனில் அவரை பொறுப்பாய் ஏற்றிவிட்டேன்.  சேலம் பேருந்து காலியாகவே இருந்தது. சிதம்பரத்திலிருந்து ஆத்தூர் வழியே சேலம் செல்லும் பேருந்து அது.

‘ மொதல்ல  நல்ல புள்ளயா  நீங்க இருக்கணும். கெட்டிகார புள்ளயா இருங்க அதுல தப்பு இல்ல. நா வரேன்’  சேலம் பேருந்து நகர ஆரம்பித்தது.

நான்  ஓம்சக்தி கல்யாணமண்டபத்திற்குத்திரும்பினேன். மூட்டை முடிச்சுக்கள் கட்டப்பட்டுத் தயாராக இருந்தன. ஒரு  வாடகை வேனைப்பார்த்து அமர்த்திக்கொண்டு வந்து  ஜாடா சாமான்களையும் அதனில் ஏற்றினோம். வேனில் தருமங்குடிக்குப் புறப்பட்டோம்.

‘ ஞானம் புள்ளய பஸ் ஏத்திவிட போயிருந்தயா’

அம்மா என்னைக்கேட்டாள். ‘ஆமாம்’ என்றேன். அம்மா வேறு ஒன்றும் சொல்லவில்லையே. அம்மா பக்கத்தில்தான் நான் அமர்ந்திருந்தேன். வேன் தருமங்குடி நோக்கி வேக வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது.

  அம்மா  ஞானம் புள்ள அவர் எப்பிடி என்றேன்’

‘ உங்களுக்கு வெனவு தெரியர்துக்குள்ள அவர் வெளியூரு உத்யோகம்னு போயிட்டார். நல்ல மனுஷன். எங்க அப்பாகிட்ட படிப்பு சொல்லிண்டவர். அப்பா பாம்பு கடிச்சின்னா  திடும்னுகாலமாயிட்டார். ரொம்ப கஷ்டம்.  இந்த புள்ள எங்களுக்கு ஒத்தாசையா இருந்தார். உன் தாத்தா போஸ்டாபிசுல டெபாசிட்பண்ணி  கொஞ்சம் பணம் வச்சிருந்தார். காட்டு மன்னார்குடி சொசைட்டி பேங்குல ஒரு சொத்து பத்திரம்  நமது இருந்தது.  சொசைட்டி கடன் சுத்தமா முடிஞ்சிது.  ஆனா அந்த  அசல் பத்திரம் வீட்டுக்கு வரல. அதுகள்  எல்லாம்  திரும்பி நமக்கு வரணுமே. அதுக்கு ஒத்தாசையா  இந்த  ஞானம் புள்ளதான்   இருந்தார்.  ஒதவினார். நம்ம குடும்பத்துல விசேஷம் நல்லது கெட்டதுன்னா மொதல் மனுஷனா இண்ணைக்கும் இருப்பார்.’

‘அவ்வளவுதானா அம்மா’

‘அவ்வளவுதான்,வேற என்னப்பா வேணும் ஒரு  மனுஷன்னா’

  ஞானம் பிள்ளை   பேருந்து நிலையத்தில் வைத்து என்னிடம் சொன்ன  அந்தப்பலான  விஷயங்களை எல்லாம் சொல்பவளா என் அம்மா?

------------------------------------

 

 

 

.

 

 

 

No comments:

Post a Comment