அம்மன் அருள்
என் வீட்டில்
தோட்டம் என்று இல்லை தோட்டம் மாதிரிக்கு ஏதோ சிறிது இடம் அவ்வளவே. அந்தச்சிறிய இடத்திலேயே இரண்டு மூன்று
வாழைமரங்கள்உண்டு. ஒரு கறிவேப்பிலை, அது மரமா
இல்லை செடியா. ஏதோ ரெண்டுங்கெட்டானாய் ஒன்று.
இவைகளுக்கு இடையே வட்டமாய்
மூடிபோட்ட மழை நீர் சேகரிப்புத்தொட்டி. ’யார் மாட்டுவான்’ என்று நகராட்சிக்காரன் தேடிக்கொண்டு
வந்தால் ’தோ பாரப்பா நீ கேட்டது’ என்று காட்டவேண்டுமே அதற்குத்தான் வட்டமான மூடி, நமக்குச் நேரம் சரியில்லை என்றால் நகராட்சிக்காரன்
என்ன யார்வேண்டுமானாலும் வரலாம்.
‘சதுர மூடி
போடச்சொன்னால் வட்டமூடியையா போடுவது’ என்று
நகராட்சிக்காரன் ஆரம்பிப்பான். மாமுல் அதனை வெட்டிவிட்டால் ஒன்றும் பிரச்சனையே இல்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம் உண்டு. தோஷம் என்று ஒன்று இருந்தால் அதற்குப்பரிகாரம்
இல்லாமலா.
அமாவாசை அன்று
விரதசாப்பாடு. அன்று காக்காயுக்கும் வாழையிலைக்கிழிசலில்தான்
அன்னம் வைக்க வேண்டும். பிதிர்கள் மரியாதைக்குரியவர்கள். விரதம் முடிக்கவும் ஒரு வாழை இலை வேண்டுமே அதற்குத்தான் இத்தனைப்பாடு.
விரதசாப்பாட்டை வாழை இலையில் சாப்பிட்டால்தான்
ஆயிற்றா என்று கேட்கலாம். ஆனாலும் சிலதுக்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது.
ஒரு நாள்
தோட்டத்தில் போய்ப்2பார்த்தேன். ரெண்டு வாழைமரத்தில் ஒன்று குலை தள்ளியிருந்தது. அந்த வாழைக்குலையும் அடுத்தவீட்டுக்காரன் தோட்டத்தில்
பூ மூக்கை நீட்டிக்கொண்டுதான் காட்சியானது. மரங்களுக்கு
அடுத்த வீட்டு பவுண்டரிகள் பற்றிய அச்சமில்லையே.
அடுத்த வீட்டுக்காரன் சாமானியப்பட்டவனில்லை.
என் வீட்டு கறிவேப்பிலைச்செடி அங்கு எட்டிப்பார்த்தால் டக் என்று கிள்ளி எறிந்து விட்டுத்தான் மறுவேலைபார்ப்பான்.
என் வீட்டு வாழைமரத்து வேர்கள் மண்ணுக்குள்ளே
புகுந்து அவன் தோட்டத்து மண்ணுக்குள் சென்றும்
இருக்கலாம். கண்ணுக்குத் தெரிகிற விஷயம்தான் எப்போதும் பிரச்சனை
ஆகிறது
. என் வீட்டு
வாழைக்குலை அடுத்த வீட்டுப்பக்கம் நீட்டிக்கொண்டு
தொங்குகிறது. ஆக என்னசெய்வது என்று அந்த அடுத்த வீட்டுக்காரன் யோசித்தான். அன்றைக்கே ரெண்டு மூன்று வாழைக்கன்றுகளை
வாங்கி வந்தான். அரைக்கோவண அளவு மண் பரப்புகொண்ட அவன் தோட்டத்தில்.
அவைகளை நட்டுதிருப்திப்பட்டுக்கொண்டான்.
என் வீட்டுக் கறிவேப்பிலை ச்செடியின் கிளைபோல்
என் வீட்டு வாழைக்குலையை அவன் எங்கே கிள்ளி
எறிவது.
‘குலை தள்ளின வாழையிண்ட ஒங்க கடுப்ப காமிச்சிடாதிங்க.
தோஷம் பட்டுடும். நம்ம புள்ளகுட்டிங்க நல்லா இருக்கோணும். அது மனசுல இருக்கட்டும்’
அடுத்த வீட்டுக்காரன் மனைவி தன் புருஷனிடம் சொல்லிக்கொண்டாள். எனக்கும் காதில் விழுந்தது.
தினம் தினம்
குலைதள்ளிய அந்த வாழைமரத்துக்கு ஒரு குடம்
தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் ஊற்றிவந்தேன். முன்பெல்லாம் ஏனோ தானோ என்று மட்டுமே வாழைக்குத் தண்ணீர் ஊற்றுவேன். இப்போது அப்படி இல்லை.
குலைதள்ளிய வாழைக்குத்தண்ணீர் ஊற்றவில்லை என்றால் அது பாவம் என்று அடி மனத்தில் ஏதோ
குறு குறுப்பு இருந்துகொண்டே இருந்தது. நாம் செய்யும் நல்லது கெட்டது எல்லாம் சித்திராபுத்தனிடம் ரிகார்ட்
ஆகிறது என்கிறார்களே. சிசி டி வி காமிரா கூட இருக்கலாம். எனக்கு நம்பிக்கையில்லைதான். ஆனால்
ஒரு பயம் ஓரமாய் இருக்கவே செய்கிறது.
மூன்று மாதத்திற்கு
தார் போட்ட வாழைக்குத் தண்ணீர் ஊற்றினேன். தினம் காலையில். சில நாள் மாலையிலும் ஒருமுறை
ஊற்றிவிட்டு வாழைக்குலையைப்பார்த்துக்கொள்வேன். நீட்டுக் கொம்பில் கொக்கி போல் குச்சிவைத்துக்கட்டி அந்த வாழைப்பூவைப் பறித்தேன். வாழைப்பு .வடை செய்து
சாப்பிட்டாயிற்று. வாழைப்பூ ஒன்றைச் சமையலுக்குத்தயாரிப்பது லேசுபட்டகாரியமா என்ன?
கை எல்லாம் பிசிபிசுப்பு கரு நீலக்கறை இத்யாதிகள்.
இன்னும் வாழைக்குலை பழுக்கவேண்டும். அதனைப்
பார்த்து பார்த்து வந்தேன். ஒரே ஒரு காய் பழுத்த
மாதிரிக்கு லேஸ் மஞ்சளாய்த்தெரிந்தது. வீட்டில்
ஒரு நொண்டிக் கத்தி இருந்தது. அந்தக்காலத்தில்
எனது அப்பா அதனை வைத்துக்கொண்டு முள் நறுக்குவார். பெற்றோரின் குக்கிராம வாழ்க்கை.
என் தருமங்குடி கிராம மக்களுக்குப் பேருந்தைக்கண்ணால்
பார்க்க ரெண்டு கிலோமீட்டர் நடந்தாகவேண்டும். அந்த வேலிகாத்தான் முள் காய்ந்து கட்டுக்
கட்டாக உரு மாறிவிடும். வீட்டில் எரிபொருள்
அது. வேலிக்காத்தானை பீக்கருவை என்றும் செல்லமாய்ச்சொல்வதுண்டு.
காரணம் மட்டும் என்னைக் கேட்காதீர்கள்.அம்மாவுக்கு எத்தனை நாளோ இந்த
முள் விரலில் குத்தியிருப்பது பார்த்துமிருக்கிறேன்.
அப்பாவுக்கு கேட்கவே வேண்டாம். அந்த குத்தல்கள் அவருக்குப் பழகிப்போன ஒன்று. ஆக என் அப்பா புழங்கிய கத்தி. அதனை மாற்றி வேறு ஒன்று
வாங்கக்கூடாது என்கிறபடிக்கு யோசனை.
குலைதள்ளிய
வாழைமரத்தை வெட்டி அதனிலிருந்து வாழைத்தாரையும்
வாழைத்தண்டையும் உருப்படியாய் வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்தேன். அது பெரிய வேலை.
வாழை இலைகள் ஒன்றிரெண்டு சாப்பாட்டிற்குத்தேறியது. ஒரு மணி நேரம் தோட்டத்தில் உழைத்தேன்.
குலைதள்ளிய வாழையிருந்த இடத்தைச்சுத்தம் செய்துவிட்டு வந்தேன். வாழைத்தண்டில் ஒரு துண்டம்
வீட்டிற்கு எடுத்துவைத்துவிட்டு ஏனைய நான்கைந்து துண்டங்களை அக்கம்பக்கத்தார்க்குக்கொடுத்தேன்.
ஒவ்வொருவீடாய்ப்போய் பார்த்துக்கொடுத்துவிட்டு வந்தேன். ’யாரும் ஆகா அற்புதம்’ என்று
சொல்லி வாங்கிக்கொள்ளவில்லை.கொண்டுவந்துவிட்டானே இவன் என்று அதனை வாங்கி வீட்டின் உள்ளே போட்டுக்கொண்டார்கள் என்பதே
சரி.
எனக்கும்
சுகர் என் மனையாளுக்கும் சுகர். வாழைத்தார் பழமாகி அதன் நிறமும் குணமும் தெரிய ஆரம்பித்து தெரிந்தும் தெரியாமலும் பழத்தைப்பிய்த்து பிய்த்து
சாப்பிட்டுவிட்டால் சர்க்கரை நிச்சயம் ஏறத்தான் செய்யும். அக்கம் பக்கத்தாருக்கு
வாழைப்பழத்தைக்கொடுத்துவிடலாம் என்று வீட்டில் தாரை வைத்துக்கொண்டு விட்டாலோ பாதி என்
வீட்டிலேயே காலி ஆகிவிடுகிறது. இது எப்படி என்று
நான் ஆரம்பித்தால் எனக்கும் அவளுக்கும் மனஸ்தாபம்தான் மிச்சம்.
ஆக இதனை வீட்டில்
பழுக்க விடக்கூடாது என முடிவு செய்து டூவீலரை எடுத்துக்கொண்டு நான்கைந்து பழக்கடைகளில்
ஏறி இறங்கி,
‘ வாழைத்தார்
இருக்குது வேணுமா ரஸ்தாளி. ஒரு நூற்றைம்பது பழம் வரும். நல்லப் பெருத்த வடி’
என்று ஆரம்பித்தேன்.
‘இங்க பழம்
இருக்கே இப்பக்கி வேணாம், வாழைப்பழம் எங்கங்க விக்கிது தாரு கொக்கில மாட்டுனது அப்பிடியே கெடக்கு. கருப்பாவுது
பசு மாட்டுக்குத்தான் போடுறேன்’
பதில்கள்
இப்படியாய் வந்தன. பசுமாடுகளும் நமக்கு எப்போது வாழைப்ழம் போடுவார்கள் என முறைத்துக்கொண்டு
பழக்கடைவாயிலில் நின்று ஆமோதித்தன..
நான் எப்போதும்
மளிகை சாமான் வாங்கும் கடைக்குப்போனேன்.
‘வாழைத்தார்
ஒண்ணு இருக்கு கொண்டாரட்டுமா’
‘என்ன பழம்’
‘ரஸ்தாளி’
‘சும்மா சொல்லாதிங்க
யாரக்கேளு ரஸ்தாளி ரஸ்தாளி. இந்த பக்கம் எல்லாம் ஏது ரஸ்தாளி’
‘ ஆமாம்சார்
ரஸ்தாளிதான் கொண்டாரன் நீங்க பாருங்க. அதுவும் பெருவடி காயுங்க எண்ணுனா ஒரு நூற்றம்பதுக்கு வரும்’
‘ கொண்டாங்க
பாக்கலாம்’
ஒரே மகிழ்ச்சி.
இதைவிட என்ன வேண்டும் தாரைக்கொண்டுவா என்று ஒரு கடைக்காரன் சொல்லியும் விட்டான். ஆக
டூ வீலரில் வீட்டுக்கு வந்தேன். வாழைத்தாரை
எடுத்து வண்டியில் வைத்தேன். இரண்டு கால்களுக்குமிடையில் இடுக்கிக்கொண்டேன். வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
இரண்டு முட்டி கால்களும் வலித்தன. தார் கீழே விழுந்துவிடக்கூடாது என ஜாக்கிரதையாய்
வண்டியை விட்டுக்கொண்டுபோய் மளிகைக்கடையை அடைந்து தாரை இறக்கப்போனேன்.
‘ நானு வர்ரேன்
அவசரப்பாடாதிங்க’ என்றார் கடைக்காரர்.
நான் வண்டியில்
இறங்காமல் இருந்தேன். அவர் தாரைக்கையில் எடுத்துக்கொண்டு
கடைக்குள் சென்றார்.
’ எம்மாம்
சொல்றீங்க’
‘எனக்கு விலை
தெரியாதே’
‘அப்ப கெளம்புங்க
நானே விசாரிச்சி சொல்லுறன்’
நான் டூவீலரை
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். ஆகா பெரிய வேலை ஒன்று முடிந்துவிட்டது. மகிழ்ச்சி
பாவித்தேன்.
இரண்டு மணி
நேரம் கழித்து மூன்றாவது நடையாக டூவீலரில் அதே மளிகைக்கடைக்குப்போனேன்.
‘என்ன வேணும்
சார்’
‘ சிவப்பு
அரிசி ஒரு கிலோ’
‘டயட்டுக்குத்தானே’
‘ஆமாம்’
என் வீட்டு
வாழைத்தார் கடைமுன்னால் தொங்கிகொண்டிருந்தது. இரண்டு சீப்புக்கள் போணியாகி இருந்தது.
சிவப்பு அரிசி
பாக்கெட்டோடு வீட்டுக்குக் கிளம்பினேன்.
‘இது ஐம்பது
ரூவா’
‘ கணக்குல
வச்சிகலாமா’
‘ஆவுட்டும்
சார், நீங்க போயி வாங்க’
அந்த சிவப்பரிசியோடு
வீடு வந்தேன்.மறு நாள் என் மனைவி சமையலுக்கு கல் உப்பு வேண்டுமென்றாள். அதே மளிகைக்கடைக்குப்போனேன்.
வாழைத்தாரில் இன்னும் இரண்டு சீப்பு கள் மட்டும் பாக்கியாய் இருந்தன.
‘ சரியா பழுக்கமாட்டேங்குது
காயிவ. ஒண்ணும் சொகமில்ல சார்’
‘கல் உப்பு
ஒரு பாக்கெட் வேணும்’
‘ரைட்டா எடுத்துகுங்க’
உப்பு மூட்டைகள்
மளிகைக்கடைகளில் வீதி அருகே ஒரு ஓரமாய் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். அதனில் ஒரு பொட்டலத்தை
எடுத்துக்கொண்டேன். அதனில் டாடா என்று எழுதியிருந்தது. ஏரோப்ளேன் கணிப்பொறி கருவாடு கல்பூரம் உப்பு எது ஆனால் என்ன? டாடா நிர்வாகத்தால்
எதனையும் விற்று கல்லா கட்ட முடிகிறது எண்ணிக்கொண்டேன்.
‘ அரிசி அம்பது
உப்பு முப்பது எண்பது ஆச்சி கணக்கு’
‘ சரி பாக்குலாம்’
டூ வீலரில் வீட்டுக்குத்திரும்பினேன். அடுத்த நாள் வீட்டில் சமையலுக்கு நல்ல எண்ணெய் இல்லை என்றாள் மனைவி. வண்டியை எடுத்துக்கொண்டு
அதே மளிகைக்கடைக்குப்போனேன்.
கடைக்காரரைக்காணவில்லை.
அவர் மனவி இருந்தாள்.
‘சாரு இல்லையா’
‘ஜாமாம் போட பெரிய பஜாருக்கு
போயிருக்காரு’
இது கெட்ட
வார்த்தை மாதிரிக்குத்தெரிந்தது. இல்லாமலும்
இருக்கலாம்.
‘ நல்லெண்ணெய்
ஒரு லிட்டர் வேணும்’
மஞ்சள் நிறத்தில்
சிவப்பு பூ போட்ட பாக்கெட் ஒன்றை எடுத்து நீட்டினாள்.
‘ முந்நூற்றி
அறுவது’
வாழைத்தாரைப்பார்த்தேன்
அதன் தண்டு மட்டும் கொக்கியில் கருப்பாகித்
தனியாக இருந்தது.
‘ பழம் வேணுமா’
‘ஆமாம்’
‘ செத்தமின்னதான்
தீந்துபோச்சி. ரஸ்தாளி இருந்திச்சி. நல்ல பழம் ஒண்ணு நாலு ரூவான்னு குடுத்தம்’
வாழைத்தார்
நான் கொண்டு வந்து கடையில் கொடுத்த அந்த சமாச்சாரம்
இந்தப்பெண்மணிக்குத்தெரியவாய்ப்பில்லை. ஆக
முந்நூற்றி அறுபதுக்கு கூகுள் பே செய்துவிட்டு வண்டியில் வீட்டுக்குத்திரும்பினேன்.
மாலையில்
மனைவி காபித்தூள் வேண்டுமென்றாள். எதுவும் தீர்ந்துபோனால்மட்டுமே அது வேண்டுமென்பாள். அவள் சுபாவம் அது.
வண்டியை கிளப்பிக்கொண்டு
அதே கடைக்குப்போனேன். இப்போது கடைக்காரர் இருந்தார்.
‘ கோதாஸ் காபி வேணுமே’
‘ பேஷா’
‘ எவ்வளவு’
‘அரை கிலோ’
மஞ்சள் உறை போட்ட காபி வழ வழா பொட்டலத்தை என்னிடம் நீட்டினார்.
‘ஐம்பது,
முப்பது, இரு நூற்றி ஐம்பது, ஆக மொத்தம் முந்நூற்றி
முப்பது. வாழைக்கு ஒரு நூற்றி ஐம்பது போவ பாக்கி நூற்றி எண்பது குடுங்க’
வாயே தீர்க்காமல்
நூற்றி எண்பதும் கூகுள் பே செய்தேன்.
‘ உங்க பழம்
சரியா ஓடுல . அதான் சார். இப்ப போயி நானு தேன் கதலி வாங்கியாந்து இருக்கன் அந்த
தாரை கொக்கியில மாட்டுணும்’
ஐந்து முறை
கடைக்குப்போய் வந்ததில் எனக்கு இரு நூறு ரூபாயுக்கு பெட்ரோல் செலவானது. நாயாய் அலைச்சல். எவ்வளவோ நேரம்
வீணாய்ப்போனது எல்லாமே இந்த வாழைமரத்தால்தான். எனக்குப் பத்து பைசா லாபமில்லை. நஷ்டம் நஷ்டம்தான்.இந்த வாழைமரமே இனி வேண்டாம் நமக்கு
என்ற முடிவோடு வீட்டுக்குத்திரும்பினேன்.
‘ இண்ணைக்கு
ஆடி மொத
வெள்ளி. இன்னொரு வாழை மரமும் குல தள்ளியிருக்கு
பாத்திங்களா’ என் மனைவி மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டாள்.
‘அப்படியா’
என்றேன்.
‘ இந்தத்
தார் பழுத்துதுன்னா அத அப்பிடியே நம்ம செல்லியாயி கோவில்ல கொண்டுபோய் மொத்தமா வச்சிடுங்க ’
அம்மன் அருளால் இந்த வாழைத்தாரைத்தூக்கிகொண்டு
நான் தெருத்தெருவாய் அலையவேண்டாம் போங்கள்.
-------------------------
.
No comments:
Post a Comment