Saturday, December 16, 2023

ஒளிவண்ணனின் சிறுகதைப்பாணி

 

 

 

 

ஒளிவண்ணனின் சிறுகதைப்பாணி.                                           

 

நேற்று 15/12/23 மாலை  6.30 க்கு  அழகிய சிங்கர்  நடத்தும் இணையவழி கதைஞர் கூட்டம் சிறப்பாக  நடந்தேறியது. அதனில்a ஐந்து இலக்கிய நண்பர்கள் பேசினார்கள். கோ. ஒளிவண்ணன் என்னும் கதைஞரின் சிறுகதைப்படைப்புக்கள் பற்றிப் பேசினோம்.அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். உற்சாகமாகப் படைப்புக்களை அளிப்பதில் அவருக்குள்ள ஆர்வம் வெளிப்பட்டது. இறுதியில் ஏற்புரை போல்  விமர்சகர்கள் பேசிய கருத்துக்களுக்கு பதில் அளித்தார்.  அன்னாரின் ஏற்புரை விரிவாக  அழகாக அமைந்தது.

அபர்ணா என்னும் சிறுகதை பற்றி என்னைப் பேசச்சொல்லியிருந்தார் அழகிய சிங்கர்.  இது வித்தியாசமான சிறுகதை. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒன்றாக வாழ்தல்.  இதனை ஆங்கிலத்தில்- living together-  என்று பெயரிட்டு அழைப்பார்கள். அபர்ணா என்னும் பெண் ராய் என்னும் ஆணோடு பத்தாண்டுகளாக ஒன்றாக வாழ்கிறார்.

அதே அடுக்ககத்தில் கதை சொல்லியும் தனியாகவே வாழ்கிறார். கதை சொல்லி ஒரு கணிதப்பேராசிரியர். அவரும் ஒண்டிக்கட்டை. அபர்ணா ஒரு நாள் அதிகாலை நான்கு மணிக்கு  கதை சொல்லியின் வீட்டுக்கதவைத்தட்டுகிறார். கதவு திறக்கப்படுகிறது. டிரவுசரும்டீ ஷர்ட்டும் அணிந்த அபர்ணா தன்னுடைய ‘பாவா’ வுக்கு உடல்நிலை சரியில்லை உடன் வீட்டுக்கு வாருங்கள், அவரைப்  பாருங்கள் என்று கெஞ்சுகிறாள். கதைசொல்லி  அபர்ணா வீட்டுக்குப்போகிறான். அதுவும்  அவள்  வீட்டுக்கு இப்போதுதான் முதல் முறையாகப்போகிறான்.

அபர்ணாவின் கணவர் ராய்.  அவர் படுக்கையில் மல்லாந்து கிடக்கிறார். கதை சொல்லி தயக்கத்தோடு தொட்டுப்பார்க்கிறார். உடல் ஜில்லென்று இருக்கிறது. ஆம்புலன்சுக்குப்போன் செய்யப்படுகிறது. ஆம்புலன்சு வருகைக்காக  செக்கூரிடியிடம் கதவைத் திறந்துவைக்கக் கதை சொல்லி கேட்டுக்கொள்கிறார். அவன் இந்தியிலே பேசுகிறான். எத்தனை ஆண்டுகள்  இங்கு வேலையில்  இருந்தாலும்  நான்கு வார்த்தை தமிழ் கற்றுக்கொள்ளாத இந்திக்காரனை  நொந்து  கொள்கிறார்  கதை சொல்லி.

ஆம்புலன்ஸ் வருகிறது. அதில் வந்தவர்கள் ராயைப்பார்த்துவிட்டு அவர் இறந்து வெகு நேரம் ஆயிற்று என்று சொல்லிப்போகிறார்கள். செயற்கை மூச்சு அளிக்கும் முயற்சி தோற்றுப்போகிறது. ராய் இறந்து விட்டார். ராயின் ஒரே சகோதரி கொல்கத்தாவில் இருக்கிறாள். அவள் வந்து சவ அடக்கம் முடிகிறது.

ராயின் சகோதரி ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அபர்ணாவிடம்  தனது சகோதரனின் வீட்டைக்காலி செய்யச்சொல்லி கட்டளையிடுகிறாள். ஒரு வாரம் அவகாசம் தருகிறாள். அபர்ணா  கணிதைப் பேராசியரை அதாவது கதை சொல்லியை அணுகித் தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள். அபர்ணாவுக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லை.

கதை சொல்லி மனம் இறங்கி, அடுக்ககம் வாழ்வோர் சங்கத்தைக்கூட்டி அதனில் ஒரு முடிவு எடுத்து அபர்ணாவுக்கு உதவி செய்வது என்று நினைக்கிறார்.  ராயின் சகோதரியிடம் பேசி  அபர்ணாவுக்கு  உதவுமாறு  கேட்டுக்கொ:ள்வது என்று முடிவாகிறது.

சங்க செயலாளர் ரிங்கு. அவர் ஒரு வக்கீல். குடியிருப்போர்  சங்கம் கூட்டப்படுகிறது. ஏது ஏதோ பேசுகிறார்கள். கதை சொல்லி அபர்ணாவுக்கு உதவுவது    பற்றி கூட்டத்தில்  பேசுவார்கள் என ஆவலோடு காத்திருக்கிறான். எதுவும் நடக்கவில்லை. செயலாளர் ரிங்கு  ’அதற்கென்ன பார்க்கலாம்’ என்று அலட்சியமாகச் சொல்லி சென்று விடுகிறார்.

குழம்பிப்போன கதை சொல்லி ரிங்கு இல்லம் சென்று அவரிடம் அபர்ணாவுக்கு உதவவேண்டும் என்கிறான். அதற்கென்ன  என்று மீண்டும்  ஆரம்பித்த ரிங்கு’   ராய் ஒரு மாதம் முன்பே அவரிடம் வந்து யோசனை கேட்டார். தனக்கு உடல் நிலை மோசம். ஆகத்  தான் வாழும்  வீட்டை தன்னோடு இருக்கும் அபர்ணாவுக்குத் தந்து விடுவதாக உயில் எழுதி விடுவதாய்ச்சொல்கிறார்.

ரிங்கு அவரிடம்  அபர்ணாவை மணந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.  ராய் தான் இறந்துவிட்டால் அபர்ணா வாழ்க்கை இன்னும் மோசமாகிவிடும் ஆக மணக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.  ஆக உயில் மட்டுமே எழுதப்பட்டது. ராயின் வீடும் இன்னும் சில வைப்பு நிதிக்கணக்கும் அபர்ணாவுக்கு ராயின் இறப்புக்குப்பின் கிடைக்கும்.   ராயும் இறந்து விட்டார்.  இனி  உயிலை கோர்ட் மூலம் ப்ரொபேட்  செய்து  அமுலுக்குக்கொண்டு வரவேண்டியதுதான்’ என்கிறார்.

 இவ்வளவும்   செயலாளர் ரிங்கு  கதை சொல்லியிடம் சொன்ன விஷயங்கள்.

கதை சொல்லி நிம்மதியாகிறார். இனி அபர்ணாவுக்குப்பிரச்சனை இல்லை.   இனி அந்த வீட்டைக்  காலி செய்யவும் வேண்டாம்.

ஓளி வண்ணன் இவ்விடத்தில் ஒரு விஷயம் சொல்கிறார். அது  கணித ஆசிரியர் கதை சொல்லி சொல்வதாகவே வருகிறது. ‘’ எவ்வளவோ கணக்குகளை எளிதாகப்புரிந்துகொண்ட எனக்கு இந்தப்பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’

பெண்கள் எளிதானவர்களாய்த்தோற்றமளிக்கலாம். ஆனால் புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமானவர்கள் என்பதை வாசனும் அங்கீகரிக்கிறான்.

ஒளிவண்ணன் தற்கால நடப்புக்கு ச்சான்றாய் இக்கதையைத்தந்துள்ளார்.  இப்படித்தான் இன்று எங்கும் நடக்கிறது என்று தனது ஏற்புரையிலும் வழிமொழிந்தார்.

 அறம் வலியுறுத்தும் என்போன்றோர் இலக்கிய உலகில் சிறுபான்மையரே.

.

 

 

 

 

No comments:

Post a Comment