Tuesday, December 5, 2023

நாயினும் தாழ

 

 

பாழும் மனம்                                              

 

என்ன வாங்கிவரவேண்டும் வினா வைத்தேன்.’ ஜீனி பாமாயில் துவரம்பருப்பு’ என்றாள் மனைவி.

ஒரு நாள் என் தங்கை என் வீட்டிற்கு வந்திருந்தாள்.

‘அண்ணா  பாமாயில் எல்லாம்  யூஸ் பண்ணாதே. கொலஸ்ட்ரால் கூடிவிடும்’ என்றாள்.

என் மனைவியோ ’ பாமாயில  நாம சாமி விளக்குக்கு  யூஸ் பண்ணிக்கலாம்.’என்றாள். நாத்தனாருக்கு நறுக்கென்று பதில் தர எல்லோருக்கும் தெரியுமா என்ன.

இப்போது என் வீட்டில்  சாமி விளக்கு  சமாச்சாரம் பாமாயிலில் ஓடுகிறது. சாமி கள்  கோபித்துக்கொண்டால்  என்ன செய்வது என்கிற அச்சம்  ஒன்று எனக்குள் முளைத்தும் விட்டது.

 ரேஷன் பொருட்களுக்கான சில பைகளோடும்  என் ரேஷன் கார்டு  அதுதான் அந்த ஸ்மார்ட் அட்டையுடனும் கடையை நோக்கிப் பயணமானேன். ஸ்மார்ட் என்பதற்குத் தமிழ் என்னவோ.

  வயது இருபதைத் தொடும் ஒரு டூ வீலர் என்னிடமுண்டு.  அந்த டூவீலர்தான் எனக்குக் கைகொடுக்கும் வாகனம். ரேஷன் கார்டில் மனைவி சொல்படி எப்போதேனும் பச்சரிசி மட்டும் வாங்குவேன். மாவரைக்க  அது வேண்டுமென்பாள்.  மற்றபடி சாப்பாட்டிற்கு ஆந்திரா நெல்லூர்  ஜில்லா அன்னமேடு கிராமத்து  அரிசிதான். காவேரி பாய்ந்தால் என்ன கல்லணை நிரம்பினாலென்ன நம்மூர் விளச்சலை வேற்றூர் காரர்கள் யாரேனும்  சாப்பிடட்டும் என்கிற பண்பாடு நமது. சென்னையில் எங்கும்  ஆந்திரா அரிசிதான் உபயோகம். இது ஏன் எப்படி என்றெல்லாம் நமக்குத்தெரிந்தால் நாம் ஏன் ரேஷன் கடைக்குப்போகிறோம். நம் அப்பாதான் ஏன் வீடு வீடாக தர்பைக்கட்டோடு நின்றிருக்கபோகிறார்.

ரேஷன் கடையில் கோதுமை வாங்கி புடைத்து அலசி க்காயவைத்து அரைத்த ஒரு காலம் இருந்தது. அது இப்போது இல்லை. ஏன் இல்லை என்பதை உங்களுக்குச்சொல்லாமல்  பின் யாருக்குச்சொல்வது. ஆறுமாதம் ஆகியிருக்கலாம். இல்லை கூடவே இருக்கும். ரேஷன் கோதுமையை வாங்கி பணிக்கை எல்லாம் செய்து அரைக்கப்புறப்பட்டேன். டூ வீலர் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அடம் பிடித்தது. உதைத்து உதைத்து கால் வலித்தது. பட்டனை அமுக்கினால் ஸ்டார்ட் ஆகும் வண்டிகள் ஆயிரம் உண்டு. நமக்கு வாய்த்தது பற்றித்தானே நாம் பேச முடியும். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. வண்டியைப்பூட்டி விட்டு  மாவு மெஷினுக்கு நடக்க ஆரம்பித்தேன். வண்டியை பூட்டாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை. ஒருவேளை  வண்டியை லவுட்டிக்கொண்டு போகலாம் என்று வரும் அவனுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில்  அதுவும் வலுவாய் இருந்து தொட்டது துலங்கி விட்டால் என்ன ஆவது. ஆகத்தான் வண்டியைப் பூட்டினேன்.

மெஷினுக்குப்போனேன்.  கோதுமை அரைத்து வந்து வீட்டில் வைத்துவிட்டு நின்றேன்.

‘ எங்கே செல் போன்’ மனைவி கேட்டாள்.

‘ எடுத்துப்போனேனா நான்’

‘ நல்லக்கதை உங்களைக்கூப்பிட போன் போட்டேன். சுவுட்சுடு ஆஃப் என்று வந்தது. அப்போதே எனக்கு திக்  என்றது. முடிந்ததா கதை ரூவா பதினைந்தாயிரம் போச்சு ‘

அவள் போனை நானும் வாங்கி  என் நம்பருக்குப் போன்அடித்துப்பார்த்தேன். அதே ஸ்விட்சுடு ஆஃப் எனக்கும் சேதி. மெஷினுக்கு தெண்டமே என்று நடந்தேன். தெருவில் போவோர் வருவோர் எல்லாரையும் கேட்டேன். ஒரு கதையும் ஆகவில்லை. போனது போனதுதான். ஆக இனி  ரேஷன் கடையில் கோதுமை வாங்கவே கூடாது முடிவு செய்தேன்.

கோதுமை மாவாக மளிகைக்கடையில் வாங்க ஆரம்பித்தேன். கோதுமை  ரேஷன் கடையில்  நான்  வாங்காமல் விட்டதற்கு இந்தக்கதை.  ஜீனி வாங்கியாகிறது. சுகர் வியாதி எனக்கும் அவளுக்கும் பிறகு ஜீனி  எதற்கு? பெங்களூரிலிருக்கும் மருமகளுக்கு  ஜீனியும் துவரம் பருப்பும் அனுப்பி வைப்போம். அந்த அனுப்பலுக்கும் ஆகா ஓகோ என்று யாரும் சொல்லவில்லை. அது எல்லாம் பேசி எதற்கு?

ரேஷன் கடை க்யூவில் போய் கடைசி ஆளாய் நின்றேன்.  ஒரு பெண்மணி என்னிடம்  நேராக வந்தாள்.

‘ சார் பச்சரிசி நீங்க வாங்கலன்னா எனக்கு வாங்கி குடுங்களேன்’

‘சரி’ என்றேன். மனதில்  ஒருகணம் கர்ணமகாப்பிரபு ஆகிவிட்டதாய் போதை கூட வந்து போனது.

‘ நா அரிசி வாங்கலேன்னு  உங்களுக்கு எப்பிடி தெரியும்’ நான் கேட்டேன்.

‘அரிசி வாங்கறாப்புல பையிங்க  கொண்டாருலயே. தேங்கா பழம் போடுற மஞ்ச பையி ரெண்டு வச்சிரிக்கிங்க அவ்வளவுதானே’

நமக்கு சாமர்த்தியம் அவ்வளவுதான்.  என் அம்மா சொல்லிக்கொள்வாள். ஒரு பேமாலத்த கட்டிண்டு ஏழு பேமாலத்த பெத்து இருக்கேன் என்று. என் அப்பாவுக்கும் சேர்த்துத்தானே அந்தத் திட்டு. ஆக  நாமும் ஒரு பேமாலம். நினைத்துக்கொண்டேன்.

ரேஷன் கடை குமாஸ்தா முன்  இருக்கும் விரல் ரேகை அழுத்தியில் விரல் வைத்தேன். அது சரி என்றது அந்தக் கணினி .’ நீங்களே நீங்கள் ’  என்று  சத்தியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டல் ஓரமாய் நில்லுங்கள் பிறகு  பார்ப்போம் என்று சொல்லிவிடுவார்கள். அப்புறம் உங்களுக்கு பகவான் மனது வைத்தால்தான் பொருள்கள் கிடைக்கும்.

 விரல் ரேகை பரீட்சையில் நான் பாசாகி விட்டேன்.  அந்தப்பெண்மணி மீண்டும் என்னிடம் வந்தாள். பச்சரிசிக்கு ஒரு கனமான பை தந்தாள். ரேஷன் கடைக்காரர் என்னைக்கடைக்கண்ணால் ஒருமுறை பார்த்துக்கொண்டார். வழக்கமாய் என்  பங்கு ரேஷன் அரிசி பச்சையோ புழுங்கலோ அவர்தானே எடுத்துக்கொள்வார். இம்முறை அவருக்குப் பச்சரிசி  இல்லை.

எனக்கு அரிசி கார்டே வந்திருக்காது.   சிவில் சப்ளை அலுவலகத்தில்  மாத வருமானம் என்ன என்பதற்கு   என் சம்பள பில் கொடுத்துத்தான் இருக்கிறேன்.  இருந்தாலும் சிவப்பாய் ஒரு ரேஷன் அட்டை கொடுத்தார்கள்.

‘ இது என்ன சிவப்பு அட்டை  அரிசி எல்லாம்  எனக்குக்கூட குடுப்பீங்களா’

‘ சார் நீங்க வாங்கறது வாங்கீங்க,   உங்க அரிசிய  நாங்க எடுத்துகறம் இதெல்லாம்   கண்டு காதிங்க சார்’ ரேஷன் கடைக்காரர் எனக்குப்பதில் சொன்னார்.

‘ என்னை கேக்காம என் கார்டை அரிசி கார்டா  மாற்றி இருக்கிங்க’

‘ மூஞ்ச பாத்தா எங்களுக்கு தெரியும் சார், நாங்க எத்தினி  வருஷமா  உங்கள பாக்குறம்’

ரேஷன் கடைக்காரர் சொன்னார். சரிதான் என்றது உள்மனம்.

பொருட்கள் அளந்து போடும் ஆளிடம் என் பையில் ஜீனி துவரம்பருப்பு வாங்கி பாமாயிலும் ஒரு பாக்கெட் வாங்கினேன். அந்தப்பெண்மணிக்குப் பச்சரிசி பத்து கிலோ அவர் கொடுத்த பையில் வாங்கினேன்.

சாதித்துவிட்டதாய் அந்த அரிசிப்பையை அந்தப்பெண்மணியிடம் கொண்டுபோய் கொடுத்தேன். அவர் ஒரு’ தேங்க்ஸ்’ எனக்குச்சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. அவரோடு இருந்த வாண்டு பெண் சொன்னது’ எதுத்து வூட்டு ஆயாவுக்குத்தான் இந்த அரிசி’

நான் விழித்தேன்.

‘ ரேஷன் கடைக்கு கிளம்பகுள்ள எதிர்வீட்டு பாட்டி  இந்த பைய குடுத்துது,’ பச்சரிசி ஒரு பத்து கிலோ கேட்டு பாரு. யாராவது அரிசி வாங்காத சனம் மாட்டுனா  எனக்கும் அரிசி கெடைக்கும்’னு.  அதான் உங்கள கேட்டேன் நீங்க  பட்டுன்னு சரின்னுட்டீங்க. பைய குடுத்தேன் .இப்ப இந்த பாட்டி அரிசியும் செமந்து கிட்டு யாரு நடக்கறது. எனக்குதான் லோலு. என் புள்ளயையும் தூக்க வைக்காது.’

அவள் காலைக்கெட்டியாகப்பிடித்து  கொண்டிருந்த  பெண் குழந்தை என்னைப்பார்த்துச் சிரித்தது..

------------------------------------------------------------

 

No comments:

Post a Comment